|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: எஸ்.ஐ.ஆர்
விவகாரம் பற்றிக் கருத்து தெரிவித்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, "திமுக-வினரின்
மேற்பார்வையில், அவர்கள்
விரும்பியபடி, 97 லட்சம்
வாக்காளர்கள் நீக்கப் பட்டனர். அதற்கு திமுக-தான் முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும்.
அப்போது நாங்கள் அவர்களுடன் கூட்டணியில் இருந்ததால், கூட்டணி தர்மத்தைக்
காப்பதற்காக, இதுபற்றிப்
பொதுவெளியில் பேசவில்லை" என்று சொல்கிறாரே? பதில்: 97 லட்சம் நபர்கள் வாக்காளர் பட்டியலில்
இருந்து நீக்கப்பட்டது ஒரு திட்டமிட்ட முறைகேடா, அந்த
குற்றச்சாட்டிற்கான ஆதாரம் என்ன, என்ற
அடிப்படைக் கேள்விகள் இருக்கட்டும். இன்னொரு கட்சி தலைமை தாங்கும் கூட்டணியில் மதிமுக அங்கம் வகித்தால், அந்த இன்னொரு கட்சி ஆட்சியில் இருந்தால், தலைமைக் கட்சி என்னவெல்லாம் செய்தால் வைகோ அனைத்தையும்
அறிந்து, வாய் மூடி,
கூட்டணிக்கு ஆதரவு தருவார்? அநியாயம், அக்கிரமம், கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன், கஜானாவைக்
காலி செய்தல், சிறுபான்மையினரிடம் பல்லிளித்துத் தாஜா, ஹிந்துக்கள் உணர்வுகளைத் புறக்கணித்தல், என்று எது செய்தாலுமா? அதர்மத்தைக்
கட்டிக்கொண்டு நிற்பது ஒரு தர்மமா? நன்றாக மைக் பிடித்தால் முழுதாக வெட்கத்தை விடலாம் என்று நினைக்கிறார்
வைகோ. |
|
2. கேள்வி: "நடிகர் தனுஷுக்கு ஆதரவாக ரஜினிகாந்தே பிரசாரம்
செய்தாலும், தனுஷின் அரசியல்
வருகை மக்களிடையே எடுபடாது" என்று தவெக அமைச்சர் மரிய வில்சன் கூறி
இருக்கிறார். எந்த அடிப்படையில் அவர் இதைச் சொல்கிறார்? பதில்: ரஜினிகாந்த் இனி அரசியலுக்கு வர நினைக்கவே
மாட்டார், தனுஷுக்கு ஆதரவாகப் பிரசாரமும் செய்யமாட்டார், என்பது மரிய வில்சனின் நம்பிக்கை. அதோடு, ஒரு அமைச்சராகத் திறமையுடன் செயல்பட்டு
முதல்வர் விஜய்யிடம் பேர் வாங்குவதை விட, விஜய்யின் காது குளிரப் பேசி அவரை
மகிழ்விப்பது தன்னால் முடிந்த காரியம் என்று மரிய வில்சன் நினைக்கிறார்.
முடிந்ததைச் செய்கிறார். |
|
3. கேள்வி: "2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் எஸ்.ஐ.ஆர் நடக்காமல்
இருந்தால், தமிழக வெற்றிக்
கழகம் 160 சீட்டுகளில்
ஜெயித்திருக்கும்" என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறுகிறாரே? பதில்: பாஜக-வை
எதிர்க்கும் எல்லாக் கட்சிகளும், எஸ்.ஐ.ஆர்
இல்லாது போயிருந்தால் அக் கட்சிகள் அதிக எம்.எல்.ஏ தொகுதிகளை வென்றிருப்பார்கள், ஆட்சியையே பிடித்திருப்பார்கள், என்றெல்லாம் சொல்கிறார்கள். எல்லாமாக என்ன அர்த்தம்? எஸ்.ஐ.ஆர் மூலம் ஒரு நபர் வாக்காளர் பட்டியலில்
இருந்து நீக்கப்படவில்லை என்றால், அந்த
ஒரே ஆள் பாஜக-வைத் தவிர பல எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்திருப்பாரா? இன்னொன்று. நிர்மல் குமார் சொல்வது போல், எஸ்.ஐ.ஆர்
நடத்தப் படாமல் தமிழக சட்டசபைத் தேர்தல் நடந்திருந்தால் விஜய் கட்சி 108-க்குப் பதில் 160 சீட்டுகள் வென்றிருக்கும் என்றால் அர்த்தம் இப்படிப் போகிறது: தேர்தலின்
போது திமுக அணியில் இருந்து தவெக-வை எதிர்த்துப் போட்டியிட்டு, தேர்தலுக்குப் பின் அணி மாறி தவெக-வுடன் கைகோர்த்து
அமைச்சர் பதவிகளைப் பெற்றிருக்கும் காங்கிரஸ், விசிக
மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் எஸ்.ஐ.ஆரின் துணையுடன் அநியாயமாகச் சில
எம்.எல்.ஏ தொகுதிகளில் வென்று அங்கெல்லாம் தவெக-வின் வெற்றியைத் திருடி
இருக்கிறார்கள். நிர்மல் குமார் விடும் உள்குத்துகள் கூட்டணிக் கட்சிகளுக்குப்
புரிந்தால் சரி. |
|
4. கேள்வி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் போராட்டம்
தொடர்பாகக் கைதாகிச் சிறை சென்று விடுதலையான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ்
ரங்காவைக் குறிப்பிட்டு, "அவர்கள் என்னை விடச் சிறந்தவர்கள் மட்டுமல்ல, என்னை விட
மிகமிகப் பெரிய தலைவர்கள்" என்று அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே
கூறி இருக்கிறாரே? பதில்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்
போராட்டங்கள் மக்களிடம் பெரிதாக எடுபடவில்லை. முன்புபோல் போலீசும் போராட்டங்கள்
நடக்கையில் பூச்சிகளிடமிருந்து தள்ளி நின்று கிடைக்கிற அடியை வாங்கிப் போகத்
தயாரில்லை. தடையை மீறிப் போராட்டம் நடத்துபவர்களைப் போலீஸ் கைது செய்கிறது. இந்த
நிலையில், அவ்வாறு போராட்டம் நடத்த முயன்று கைதாகி ஜெயிலுக்குப் போகிற நபர்களை
போற்றிப் புகழ்ந்தால்தான், பூச்சி கட்சி உயிர்ப்புடன் இருக்கும், இளைஞர்களை ஈர்ப்பதில் தொய்விருக்காது, பிழைப்பும் நடக்கும், என்று அபிஜித் திப்கே நினைத்திருப்பார். |
|
5. கேள்வி: காங்கிரசைச் சேர்ந்த தமிழக அமைச்சர் ராஜேஷ் குமார், "தமிழகத்தில்
இரண்டு அமைச்சர்கள் கிடைத்து விட்டதற்காக நாங்கள் திருப்தியடையவில்லை. காங்கிரஸ்
கட்சியை வலுப்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்பதே எங்கள்
கனவு" என்று கூறி இருக்கிறாரே? பதில்: காமராஜர்
மாதிரி ஒரு எளிமையான, நேர்மையான, உறுதியான தலைவர் ஆட்சிக்குத் தலைமை தாங்காமல், அல்லது பக்கபலமாக இல்லாமல், காமராஜர் ஆட்சி அமைக்க முடியாது. இன்றைய காங்கிரஸ்
கட்சியில் இன்னொரு காமராஜர் உருவாக முடியாது, உருவாகவும்
விடமாட்டார் ராகுல் காந்தி. விஷயம் க்ளோஸ். |
|
பகுதி 146 // 25.10.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com |
No comments:
Post a Comment