Friday, 9 October 2026

கேள்வி-பதில் (04.10.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "மகிழ்வுடன் கதராடைகளை அணிந்து, நெசவாளர்களின் வாழ்க்கையை வெற்றிபெறச் செய்வோம்" என்று முதல்வர் விஜய் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அவரது அழைப்பு பயன் தருமா?

 

பதில்: முதல்வர் விஜய்யை ஆர்ப்பரித்து ஆதரிக்கும் சாதாரண மக்களுக்கு, திரை நாயகன் விஜய் மீதான மயக்கம் கலந்த ஈர்ப்பு இருக்கிறது - அவர் நியாயவான், நமக்கும் நம் தேசத்திற்கும் நன்மை செய்ய வந்தவர் எனும் இதயபூர்வ உணர்வு அவர்களுக்கு இல்லை. ஆகையால் கதர் பற்றி - அல்லது மக்கள் நாட்டுக்காக சற்று விட்டுக் கொடுப்பது பற்றி, சிறு தியாகங்கள் செய்வது பற்றி - விஜய் பேசினால் அந்த மக்களிடம் எடுபடாது.

 

 

2. கேள்வி: "அண்ணன் வைகோ, அண்ணன் திருமாவளவன் போன்ற தலைவர்கள் ஒரு கூட்டணியை உருவாக்கவேண்டும் என்றால், அவர்களுக்கு அதிகாரமும் பணபலமும் முக்கியம் அல்ல. உண்மை எங்கிருக்கிறதோ அங்குதான் அவர்கள் இருப்பார்கள். எங்கள் தலைவர் விஜய்யிடம் உண்மை இருக்கிறது. அதனால்தான் அண்ணன் வைகோவும் அண்ணன் திருமாவளவனும் தவெக கூட்டணியில் இருக்கிறார்கள்.  எவனாலயும் அண்ணன் திருமாவளவனையும் அண்ணன் வைகோவையும் பணம் கொடுத்து வாங்க முடியாது -  எவனாலயும்" என்று அந்த இருவரையும் மேடையில் வைத்துக் கொண்டு தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மதுராந்தகத்தில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: ஆதவ் அர்ஜுனா துடிப்பாகப் பேசுகிறவர், ஆனால் சமயத்தில் அவரிடம் முதிர்ச்சி இருக்காது. அவர் பேசியதின் அர்த்தம் இதுதான்:

 

2026 சட்டசபைத் தேர்தலில், வைகோ கட்சியும் திருமாவளவன் கட்சியும் திமுக அணியில் இருந்தவாறு தவெக-வை எதிர்த்தன. அப்போது ஆதவ் அர்ஜுனா தவெக-வில் இருந்து திமுக கூட்டணியை எதிர்த்தார். அந்தச் சமயத்தில 'உண்மை' என்பது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பக்கம் இல்லை, அது தவெக தலைவர் விஜய்யிடம் இருந்தது என்று ஆதவ் அர்ஜுனா புரிந்து வைத்திருந்தார். ஆனால் பல பத்தாண்டுகள் அரசியல் அனுபவம் உள்ள வைகோவும் திருமாவளவனும் 'உண்மை' யார் பக்கம் இருக்கிறது என்று தெரியாமல் அந்தத் தேர்தலில் விஜய்யை எதிர்த்தார்கள்; விஜய்யிடம் திமுக கூட்டணி படுதோல்வி அடைந்தவுடன் வைகோவும் திருமாவளவனும் டக்கென்று உண்மையின் உண்மையான இடத்தை அறிந்துகொண்டு தவெக கூட்டணிக்குத் தாவினார்கள்.

 

வைகோவையும் திருமாவளவனையும் ஒரு விநாடி உரத்துப் பேசி உயர்த்திப் பிடித்த ஆதவ் அர்ஜுனா, மறு விநாடி அந்த இருவரையும் சைலண்டாகத் தொப்பென்று கீழே போட்டுவிட்டார். விழுந்த அடி அந்த இருவருக்கும் தெரியும்.

 

 

 3. கேள்வி: சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கின் போது, அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகள், "தமிழகத்தில் சில விஷயங்கள் இன்னும் சீரடைய வேண்டி இருந்தாலும், தற்போதைக்கு மாநில முதல்வர் விஜய் சிறப்பாகச் செயல்படுகிறார். அவரைப் பற்றி எங்களுக்கு நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில், தமிழகத்திற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று தெரிவித்ததாகப் பத்திரிகைச் செய்திகள் சொல்கின்றனவே?

 

பதில்: ஒரு வழக்கு நடக்கும்போது, நீதிபதிகள் வாய்மொழியாகக் கேள்வி கேட்பதும் கருத்து சொல்வதும் வழக்கிற்குத் தொடர்புடையதாக, அவசியமானதாக, மட்டும் இருப்பது நல்லது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்து, வழக்கைத் தீர்த்துவைக்க அவசியம் இல்லாதவை.

 

ஒரு முதலமைச்சரைப் பற்றி, அல்லது பிரதமரைப் பற்றி - அதுவும் அவர் பதவியிலிருக்கும் போது - அவர் "சிறப்பாகச் செயல்படுவதாக" அல்லது அவரைப் பற்றி "நல்ல தகவல்கள் கிடைத்திருப்பதாக" நீதிபதிகள் கருத்து தெரிவிக்காமல் இருப்பது, சிறப்பான நீதி பரிபாலனத்திற்கு நல்லது.  இதற்குமேல் நாமும் கருத்து தெரிவிக்காமல் இருப்பது நல்லது.

 

 

4. கேள்வி: "நாம் செய்தது ஒரே தவறுதான். 2026 தேர்தலுக்கு முன்பு தவெக-வை  நாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருந்தோம். கொள்கை எதிரிகளோடு  மோதினோம். கோமாளிக் கூட்டத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்" என்று அதுவே திமுக-வின் தேர்தல் தோல்விக்கான ஒரு முக்கிய காரணம் என்பதாக, மதுராந்தகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

 

பதில்: எல்லாக் கட்சிகளும் தீவிரமாகத் தேர்தல் பிரசாரம் செய்தபோது, மக்கள் மத்தியில் விஜய் கட்சிக்கு ஆதரவு பெருகுகிறது, தனது கட்சிக்கு ஆதரவு மிகவும் குறைகிறது என்று துளியும் கணிக்க முடியாமல் - அதாவது, மக்கள் மனதைச் சற்றும் அறிய முடியாமல் -  தவெக என்று ஒரு கட்சியே தேர்தல் களத்தில் இல்லை என்கிற மாதிரி, திமுக தேர்தல் பிரசாரம் செய்ததா? அப்படியானால் கோமாளிக் கூட்டம் எது?

 

இரண்டில் எது கோமாளிக் கூட்டமாக இருந்தாலும், இரண்டிற்கும் ஏமாளி ஒன்றுதான் - அப்பாவி மக்கள்.

 


5. கேள்வி: 'இண்டி' கூட்டணியில் இருந்து திமுக வெளியேறிய பின் தவெக இணைந்திருக்கிறதே?

 

பதில்: திமுக-வின் இடத்திற்குத் தவெக வந்துவிட்டது.  வித்தியாசங்கள் குறைகின்றன.


பகுதி 139 // 04.10.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

No comments:

Post a Comment