Monday, 19 October 2026

கேள்வி-பதில் (18.10.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: டெல்லியில் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை செய்யப்பட்ட இடத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் திப்கேயின் இரு சகாக்கள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்ததால் அவர்கள் இருவரும் கைதானார்கள்.  அது குறித்து கருத்து சொன்ன அபிஜித் திப்கே, "உங்கள் தேசியக் கொடியைப் பற்றி அசைத்ததற்காக உங்கள் நாட்டிலேயே நீங்கள் ஜெயிலில் தள்ளப்படுவதை நினைத்துப் பாருங்கள்" என்று தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: நீங்கள் எதை ஆதரிக்க அல்லது எதிர்க்க, என்ன நோக்கத்துடன், என்ன காரியம் செய்கிறீர்கள் என்பதை வைத்து உங்கள் செயல் அதற்கான மதிப்பைப் பெறும்.

 

பிள்ளை பிடிப்பவன் குழந்தைகளைக் கவர அவர்களுக்குச் சாக்லெட் கொடுக்கலாம், அதற்காகப் போலீஸ் அவனைக் கைது செய்யலாம். அப்போது ஒருவர், "சின்னக் குழந்தைக்கு அன்புடன் சாக்லெட் கொடுப்பது குற்றமா?" என்று கேட்டால் என்ன அர்த்தம்?

 

 

2. கேள்வி:  லோக் சபா எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேடையிலிருந்து பேசுகையில், "காங்கிரஸ் கட்சியை விட்டு முன்பு விலகிச் சென்றவர்கள் துரோகிகள்,  கோழைகள்" என்று சாடியிருக்கிறார். அப்போது அருகிலிருந்த கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "கட்சியை விட்டுச் சென்ற தலைவர்கள் உங்கள் நண்பர்களாக இருந்தவர்கள்" என்று சொல்ல, "என் நண்பர்களைத் தேர்வு செய்ததில் நான் தவறு செய்துவிட்டேன்" என்று பதில் சொல்லியிருக்கிறாரே ராகுல் காந்தி?

 

பதில்: மல்லிகார்ஜுன கார்கே கெட்டிக்காரர். ராகுல் காந்தி தேசத்தைப் பெரிதாக நினைக்காமல் போனாலும்,  காங்கிரஸ் கட்சியைச் சீரழித்தாலும், கட்சியின் தலைவரான கார்கேயைக் கிள்ளுக் கீரையாக நினைத்தாலும் பரவாயில்லை. அதற்காக, 'ரோஷம் மானம் உள்ள  சில ராகுல் காந்தியின் காங்கிரஸ் நண்பர்கள் மாதிரி நான் கட்சியை விட்டு விலக மாட்டேன்' என்று கார்கே சூசகமாகப் பொதுவெளியிலேயே தெரிவிக்க, கார்கேயின் தியாகத்தை ராகுல் காந்தியும் சூசகமாக உடனே அங்கீகரித்துப் பதில் சொல்லிவிட்டார். இது அவர்களுக்குள்ளான பரிபாஷை. மற்றவர்களுக்கு எளிதில் புரியாது.

 

 

3. கேள்வி: எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளுக்காகத் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இண்டி கூட்டணிக் கட்சிகள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தின. அப்போது பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா, மு .க . ஸ்டாலின், பினராயி விஜயன் ஆகியோர் சட்டசபைத் தேர்தல்களில் தோற்றவர்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் குறி வைக்கப்பட்டு எஸ்.ஐ.ஆரைப் பயன்படுத்தி தோற்கடிக்கப் பட்டிருக்கிறார்கள். மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது. அந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று நான் ஸ்டாலினிடம் முன்பே சொன்னேன்" என்று கூறி இருக்கிறார். அவர் பேச்சுக்கு என்ன அர்த்தம்?

 

பதில்: மு.க. ஸ்டாலின் பற்றி: கொளத்தூர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையால் நீக்கப் படாமல் இருந்தால் அவர்கள் வாக்குச் சாவடிக்கு வந்து ஸ்டாலினுக்கு வாக்களித்திருப்பார்கள், அவரும் ஜெயித்திருப்பார் என்று சொல்ல வருகிறார் திருமாவளவன்.

 

சென்னைக்கு வெகு அருகில் இருக்கிறது கொளத்தூர் தொகுதி. அந்தத் தொகுதியில் வாக்குரிமை பறிக்கப் பட்டதாகத் சொல்லப்படும்  ஒரு லட்சம் பேரில் ஒரு சதவிகிதம் நபர்களை, அதாவது ஆயிரம் வாக்காளர்களை, சென்னையிலோ அல்லது கொளத்தூரிலோ திமுக ஒரு பொது இடத்திற்கு அழைத்து வந்து காண்பித்திருக்க முடியாதா? முடியும், திருமாவளவன் சொல்லும் 'ஒரு லட்சம் கதை' உண்மையாக இருந்தால்.

 

அவர்களில் ஆயிரம் பேர் வேண்டாம், ஐம்பது நபர்களைக் கூட திமுக செய்தியாளர்கள் முன் காண்பிக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? இறந்துபோன, அல்லது கொளத்தூரில் வழக்கமாக வசிக்காத, ஒரு லட்சம் மாய நபர்கள் அந்தத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருந்தால், அவர்களின் வாக்குகள் ஏதோ வழியில் ஸ்டாலினுக்குக் கிடைத்து அவர் ஜெயித்திருப்பார் என்று திருமாவளவன் சொல்வது மாதிரி ஆகிறதே? திருமாவளவனின் பேச்சு விபரீத அர்த்தம் கொண்டது.

 

 

4. கேள்வி: தேர்தல் கமிஷன் நடத்தி முடித்த எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துவரும் காங்கிரஸ் கட்சி, அதன் ஒரு பகுதியாக மத்தியில் ஆளும் அரசை மாற்றிவிடும் நோக்கில் செயல்படுகிறது, அந்த ரீதியில் குரல் எழுப்புகிறது, என்ற குற்றச்சாட்டிற்குக் காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் எக்ஸ் தளத்தில் பதில் அளித்திருக்கிறார். "எதிர்க்கட்சிகளின் கடமை அரசாங்கத்தை எதிர்ப்பது, அம்பலப் படுத்துவது மற்றும் கவிழ்ப்பது (The duty of the Opposition is to oppose, expose and depose the government) - அதாவது அரசியலில் எதிர்ப்பது, நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்துவது, தேர்தல்கள் மூலம் கவிழ்ப்பது" என்று கூறுகிறார் சிதம்பரம். இது சரியா?

 

பதில்: அடுத்த லோக் சபா தேர்தல் வருவதற்கு இரண்டரை வருடத்திற்கு முன்பே எதிர்க்கட்சிகள் தற்போதைய மத்திய அரசாங்கத்தைத் 'தேர்தல்கள் மூலம்' கவிழ்ப்பதற்கான முயற்சியில் இறங்குமா? அதுவும் கவிழ்ப்பில் மும்முரம் காண்பிக்கும் காங்கிரஸைப் பொறுத்தவரை, இந்த இந்த லோக் சபா தொகுதிக்கு இவர் இவர் வேட்பாளர் என்ற அறிவிப்பே இல்லாமல்? பிறகென்ன 'தேர்தல்கள் மூலம்'  கவிழ்ப்பது என்ற விளக்கம்?

 

சிதம்பரம் என்னதான் கெட்டிக்கார வக்கீலாக இருந்தாலும், ராகுல் காந்தியின் அரசியல் நிலைப்பாட்டை அவர் ஆதரித்துப் பேசினால் பிதற்றித்தான் ஆகவேண்டும். சரி, வேண்டாம் என்று வாயை மூடிக்கொண்டிருந்தால், ராகுல் காந்தியின் கீழ் காலம் தள்ளவும் முடியாது. காங்கிரஸில் இருந்துகொண்டு ராகுல் காந்தியின் கரிசனப் பார்வை வேண்டும் என்றால் வெட்கத்தை விட்டுத்தான் ஆகவேண்டும்.  சிதம்பரம் அதற்கு ரெடி.

 

 

5. கேள்வி: மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி-க்கள் கூட்டத்தின் முடிவில், மின்னணு வாக்கு இயந்திரங்களுக்குப் பதிலாக பழையபடி வாக்குச் சீட்டு முறையில் தேர்தல்கள் நடத்தப் படவேண்டும் என்று வலியுறுத்தப் பட்டிருக்கிறது. வாக்குச் சீட்டு முறையில் ஏதாவது பயன் உண்டா? 

 

பதில்: சில கட்சிகளில் பல்லாயிரக் கணக்கான பேர்களுக்கு ஒருநாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலையும் வருமானமும் கிடைக்கலாம்.

 

பகுதி 144 // 18.10.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

 

No comments:

Post a Comment