Wednesday, 14 October 2026

கேள்வி-பதில் (14.10.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "லஞ்சம் இல்லாத தமிழகம் உருவாக, ரியல் எஸ்டேட் துறையினரின் பங்களிப்பு மிக அவசியம்" என்று தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் பேசியிருக்கிறாரே?

 

பதில்: அமைச்சர் என்ன சொல்கிறார்? திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதி கேட்டு ரியல் எஸ்டேட் துறையினர் அரசாங்கத்திடம் விண்ணப்பித்துவிட்டு, "இதோ பிடியுங்கள் பத்தாயிரம், லட்சம், பத்து லட்சம். இதை நீங்கள் வாங்காமல் அனுமதி வழங்கினால், அந்த அனுமதி எங்களுக்கு வேண்டவே வேண்டாம்" என்று சொல்லி அதிகாரிகளின் கைகளை இழுத்துப் பிடித்து ரியல் எஸ்டேட் துறையினர் கரன்சி நோட்டுகளைத் திணிக்கிறார்களா?

 

 

2. கேள்வி: "தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மீது எதிர்க் கட்சியினருக்கு நம்பிக்கை இல்லாத நிலையில், தார்மீக அடிப்படையில் அவர் பதவி விலக வேண்டும்" என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: சசி தரூர் நன்றாகத்தானே பேசிக் கொண்டிருந்தார்?

 

அசட்டுத்தனமாக அவர் தற்போதைய காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், இதுவரை பிதற்றாமல் இருந்தார். ஒருவேளை, மத்திய பாஜக அரசிடமிருந்து அவர் எதிர்பார்த்த அங்கீகாரம்  கிடைக்கவில்லையா?

 

 

3. கேள்வி: எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை வழியாகத் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மோசடி செய்தார், அதனால் பாஜக பயன் பெற்றது, என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இருக்காதா?

 

பதில்: அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளின் சாரம் இது:

 

1) எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் இந்தியாவின் பல மாநிலங்களில் மொத்தமாக 13 கோடி வாக்காளர்களின் பெயர்களை அநியாயமாக, மோசடியாக, வாக்காளர் பட்டியலில் இருந்து தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் நீக்கச் செய்தார்;

 

2) அந்த 13 கோடி நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீடித்திருந்தால், நடந்து முடிந்த சில மாநில சட்டசபைத் தேர்தல்களில் அவர்கள் பாஜக அல்லாத மற்ற கட்சிகளின் பல வேட்பாளர்களுக்கு வாக்களித்திருப்பார்கள். மற்ற கட்சிகளுக்கு அந்த வாக்குகள் கிடைக்காமல் போனதால், அது வாக்குத் திருட்டாகும். அதன் விளைவாக, தேர்தலில் நிஜமாகத் தோற்றிருக்க வேண்டிய சில பாஜக வேட்பாளர்கள் ஜெயித்தார்கள்; நிஜமாக ஜெயித்திருக்க வேண்டிய மற்ற கட்சி வேட்பாளர்கள் சிலர் தோற்றார்கள்.

 

இந்தக் குற்றச்சாட்டுகளில் உள்ள சில முரண்பாடுகளைத் தவிர்த்துப் பார்த்தாலும், இவை குறித்து சில கேள்விகளுக்காவது கரப்பான்பூச்சியோ காங்கிரஸ் பூச்சியோ பதில் சொல்லுமா?

 

இந்த மோசடியை யார் துணையும் இல்லாமல் ஞானேஷ் குமார் மந்திரக்கோல் மூலம் நிகழ்த்தினாரா, அல்லது எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையைக் களத்தில் அமல்படுத்திய மாநில அரசு ஊழியர்கள் மூலம் நிகழ்த்தினாரா?

 

மாநில அரசு ஊழியர்கள் சிலருடன் கூட்டாகச் சேர்ந்துதான் ஞானேஷ் குமார் எஸ்.ஐ.ஆர் மோசடிகளை நிகழ்த்தினார் என்றால், அந்த ஊழியர்கள் அவருக்கு ஏன் உடந்தை ஆனார்கள்?  அவர்கள் மோடி பக்தர்கள் என்பதால் அதைச் செய்தார்களா, அல்லது ஞானேஷ் குமார் அவர்களுக்கு வேறு ஆதாயம் கிடைக்கச் செய்தாரா?

 

ஏதோ காரணத்தால் சில மாநில அரசு ஊழியர்கள் எஸ்.ஐ.ஆர் மோசடியை நிகழ்த்த உடந்தையாக இருந்தால், சம்பந்தப்பட்ட மாநில போலீசிடம் ஒரு பாச்சையோ பூச்சியோ புகார் கொடுத்ததா? ஆம் என்றால் அதன் பேரில் வழக்கு பதியப்பட்டதா, அதற்கும் ஆம் என்றால் அதன் பேரில் நடந்த விசாரணையின் முடிவு என்ன? புகார் தரவில்லை என்றால், ஒரு பெரிய குற்றம் நடந்தது அவர்களுக்குத் தெரிந்தும் ஏன் புகார் தரவில்லை?

 

இந்தக் கேள்விகளுக்கு, குற்றம் சாட்டுபவர்களிடம் இருந்து கெக்கே பிக்கே என்றில்லாமல் நேரான பதில்கள் வராது. பிறகு அவர்களின் குற்றச்சாட்டுகளில் துளியாவது உண்மை இருக்க முடியுமா?  இருக்கிறது என்கிறார்களா? சரி, சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் தாக்கல் செய்த வழக்கில் அதற்கான ஆதாரத்தை முன்வைக்கட்டும். பிறகு பார்க்கலாம்.

 

முடிந்தவரை கோர்ட்டுக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து அதன் மூலம் மத்திய அரசைச் சங்கடப் படுத்தும் ஒரு உத்தரவைப் பெறலாம் என்பது போராட்டக்காரர்களின் நோக்கமாக இருக்கும். 'வந்தால் மலை - போனால் பூச்சியின் மீசை' என்பது அவர்கள் கணக்காக இருக்கும்.

 

 

4. கேள்வி: "நரேந்திர மோடிக்குச் சொல்கிறேன். நீங்கள் நெருக்கடி நிலையை அமல்படுத்த நினைத்தால் அதிகாரபூர்வமாகச் செய்துவிடுங்கள். அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை ஏன் கோழைத்தனமாக அமல் செய்கிறீர்கள்?" என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் திப்கே கேட்டிருக்கிறாரே?

 

பதில்: அபிஜித் திப்கே நினைத்தபடி, அவருக்குப் பின்புலமாக இருப்பவர்கள் விரும்பியபடி, அவர் நமது நாட்டில் குழப்பத்தையும் களேபரத்தையும் விளைவிக்க முடியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தியாவின் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து ஏதோ பேசவேண்டும் என்று கோரினால் அது முறையற்றது என்று அவர் சந்திக்க மறுக்கிறார். தலைமைத் தேர்தல் கமிஷனருக்கு எதிராக, மோடிக்கு எதிராக, ராகுல் காந்தி தெருவில் இறங்கினாலும் அவருக்கு விளம்பரத்தைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை. பாவம், அபிஜித் திப்கே. அவருக்கு நேர்ந்த நெருக்கடி, சாதாரண நெருக்கடியா? அந்த நெருக்கடி நிலையில், மனிதர் தாங்கமுடியாமல் கொஞ்சம் புலம்பக் கூடாதா?

 

 

5. கேள்வி: அமெரிக்க இண்டர்நெட் கம்பெனியான 'ஸ்டாலிங்க்'கின் நிறுவனர் எலான் மஸ்க், முகேஷ் அம்பானிக்கு எக்ஸ் தளத்தில் எழுதியுள்ள கடிதத்தில் "அன்புள்ள பிரதம மந்திரி அம்பானி, நீங்கள்தான் இந்தியாவின் உண்மையான 'பாஸ்' என்று நான் முன்பு அறியவில்லை என்பதால் என்னை மன்னியுங்கள்" என்று ஆரம்பித்து, 'ஸ்டார்லிங்'கை இந்தியாவில் அம்பானி கம்பெனியுடன் போட்டியிட அவர் அனுமதிப்பாரா என்று குத்தலாகக் கேட்டிருக்கிறாரே?

 

பதில்: தேசப் பாதுகாப்பு காரணங்களுக்காக நம் நாடு விதிக்கும் சில நிபந்தனைகளை ஏற்றவாறு ஸ்டார்லிங்க் இந்தியாவில் இயங்க சம்மதிக்கவில்லை, என்று செய்திகள் வருகின்றன. எதுவானாலும், உலகம் போற்றும் தலைவரான நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக இருக்கையில், ஒரு இந்திய கார்ப்பரேட் முதலாளியான அம்பானியை, "பிரதம மந்திரி அம்பானி" என்று எலான் மஸ்க் பொதுவெளியில் அழைத்தால், அது நகைச்சுவை அல்ல. நிபந்தனைகள் இன்றி இப்போதைக்கு ஸ்டார்லிங்க் இந்தியாவில் கால் வைக்கச் சாத்தியமிலை என்பதை எலான் மஸ்க் உணர்ந்து, விரக்தியோடு அவருக்குத் தெரிந்த வார்த்தைகளில் 'போனால் போகட்டும் போடா' பாடி இருப்பார்.

 

பகுதி 143 // 14.10.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

No comments:

Post a Comment