|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "என் மீது 45 எப்.ஐ.ஆர்-கள் உள்ளன. 100 எப்.ஐ.ஆர்-களை எட்டுவது என் இலக்கு. என்
மீதான ஒவ்வொரு எப்.ஐ.ஆரும் எனக்கு ஒரு பதக்கம்" என்று ராகுல் காந்தி சொல்லி
இருக்கிறாரே? பதில்: இளைஞர்கள்
மத்தியில் தன்னைவிடக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர்களுக்கு ஈர்ப்பு அதிகம்
என்று சந்தேகிக்கும் ராகுல் காந்தி, அந்தத்
தலைவர்களை மிஞ்சும் வழி அவர்களை விடக் கேவலமாகப் பேசுவது என்று
நினைத்திருப்பார். |
|
2. கேள்வி: "நம் நாட்டு மக்களின் ஓட்டுரிமையைப் பறித்து, அவர்களை
இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றும் எந்தச் செயல்முறையும் அரசியலமைப்பின்
அடிப்படையைத் தாக்குவதாக அமையும்" என்று உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல்
புயான் ஒரு பொதுநிகழ்ச்சியில் பேசி இருக்கிறாரே? பதில்: ஒரு பக்கத்தில் இது சரி - 'ஓட்டுரிமையைப் பறிப்பது', 'இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றுவது' என்பன நிஜமாக நடந்தால். ஆனாலும் ஒரு உச்ச
நீதிமன்ற நீதிபதி, அரசியல் களத்தில் சூடு பிடித்திருக்கும் ஒரு விஷயம் பற்றிப் பொதுவெளியில்
பேசாதிருப்பது நல்லது. அவர் அவ்வாறு பேசினால் அதற்கான அர்த்தம் மற்றும் இலக்கு
வேறு என்று உணரப்படும். இன்னொரு பக்கத்தில்: அதிகமான மக்களை
வருமானம் குறைந்தவர்களாக, படு சுமாரான கல்வி பெறுபவர்களாக, நிறைவான மின்சாரம், குடிநீர் மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கு
ஏங்குபவர்களாக, போலீஸ்காரரைப் பார்த்து அச்சம் அடைபவர்களாக வைத்திருந்து ஓட்டுரிமையை
மட்டும் அவர்களுக்குப் பக்காவாகக் கொடுத்தால், ஒருவனின் பார்வையைப் பாதி பாழாக்கி
அவனுக்கு ஜம்மென்று கூலிங் கிளாஸ் மாட்டிவிட்ட மாதிரி இருக்கும். |
|
3. கேள்வி:
"இந்தியாவில் 13 கோடி பேர்
வாக்காளர் பட்டியலில் இருந்து எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம்
நீக்கப்பட்டிருக்கிறார்கள். இது ஜனநாயகப் படுகொலை. இதற்குக் காரணம் பிரதமர், உள்துறை
அமைச்சர் மற்றும் தலைமைத் தேர்தல் கமிஷனர். இதைப் பற்றி முதல்வர் விஜய்
வாய்திறக்கவேண்டும் என்று பலமுறை சொல்லிவிட்டோம்" என்று இந்திய கம்யூனிஸ்டு
கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறி
இருக்கிறாரே? பதில்: அந்த
13 கோடி பேர் உயிருடன் இருக்கிறார்கள், வாக்காளர் பட்டியலில் அவர்களுக்காகக்
குறிப்பிட்டிருக்கும் இருப்பிடங்களில் இன்னும் வசிக்கிறார்கள், இருந்தாலும் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில்
இருந்து நீக்கப்பட்டன என்று வீரபாண்டியன் சொன்னால், தமிழகத்தின் 234 தொகுதிகள் ஒவ்வொன்றின் வாக்காளர் பட்டியலில் இருந்து அநியாயமாக
நீக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பத்து பத்து நபர்களை அடையாளம் காட்டி (234 x 10 = 2,340 நபர்களை முன்னிறுத்தி) வீரபாண்டியன்
ஏன் அந்த ஜனநாயகப் படுகொலையின் சில தடயங்களை அம்பலப் படுத்தவில்லை? மோடியும் அமித் ஷாவும் விரும்பிய தேர்தல் முடிவுகள் கிடைப்பதற்கு
ஏதுவாகத் தலைமைத் தேர்தல் கமிஷனர் எஸ்.ஐ.ஆரை நடத்தினார் என்றால், தமிழகத்தில் பாஜக-வுக்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ கிடைக்கும்
படியா அவர்கள் கூட்டாக வேலை செய்திருப்பார்கள்? தமிழகத்தில்
பா.ஜ.க-வின் எம்.எல்.ஏ கணக்கு பூஜ்யம் என்றிருந்தால்தான் இந்த மாநிலத்தில்
எஸ்.ஐ.ஆர் ஒழுங்காக நடந்தது என்று பாஜக-வை எதிர்க்கும் கட்சிகள் ஏற்றுக்
கொள்ளுமா? |
|
4. கேள்வி: "நீதித்துறை மேல மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
போலீஸ் மேல மக்களுக்கு நம்பிக்கை இல்லை. நிறுவனங்கள் - அதாவது அமைப்புகள் - மேல
மக்களுக்கு நம்பிக்கை இல்லை. மீடியா மேல நம்பிக்கை இல்லை. நம்பிக்கையே இல்லாத
ஒரு நாட்டுல எப்படிய்யா வாழறது?" என்று நடிகர் பிரகாஷ் ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பின்
போது கேட்டிருக்கிறாரே? பதில்: பிரகாஷ் ராஜின் சினிமா பாணி அரசியல்
பேச்சின் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் நம் நாட்டில் அவர்கள்
வாழ முடிகிறது. |
|
5. கேள்வி: "முதல்வர் விஜய் பழுத்த அரசியல்வாதியாக
மாறியுள்ளார்" என்று காங்கிரஸ் தலைவர் கார்த்தி சிதம்பரம் ஒரு பேட்டியில்
சொல்லி இருக்கிறாரே? பதில்: பேட்டி
அரசியலைத் தாண்டி வர முடிந்தால், கார்த்தி
சிதம்பரமும் பழுக்க ஆரம்பிக்கலாம். |
|
பகுதி 140 // 08.10.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com |
No comments:
Post a Comment