Sunday, 11 October 2026

கேள்வி-பதில் (11.10.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: ஒரு சமீபத்திய வீடியோ பேச்சில் ராகுல் காந்தி இவ்வாறு நிதானமாகக் கூறி இருக்கிறார்: "நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை நான் புரிந்துவைத்திருக்கிறேன். உள்ளே அவர்கள் கோழைகள். மோடி, அமித் ஷா, மோகன் பகவத், கியானேஷ் குமார், அஜித் தோவல் ஆகிய வில்லன்களைச் சுற்றி உள்ள இடம் மூடி  வருகிறது. நாங்கள் அதை மூடி வருகிறோம். இந்தியாவிற்கு நியாயம் கிடைக்கப் போகிறது. நாங்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. நமது அரசியலமைப்புச் சட்டத்தை நாங்கள் காப்போம். இந்திய மக்களின் குரலை நாங்கள் காப்போம். இந்த அரசு தோற்கடிக்கப் பட நாங்கள் ஆவன செய்வோம்." அவர் நீளமாகப் பேசிய வார்த்தைகளின் அர்த்தம் என்ன?

 

பதில்: சில வெற்று வார்த்தைகளை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தமிழில் நீட்டி முழக்கிக் கத்திப் பேசுவார். சில வெற்று வார்த்தைகளைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆங்கிலத்தில் நீள நீளமாகக் கத்தாமல் சொல்லுவார். இருவரையும் கேட்டு சிரித்துவிட்டுப் போகவேண்டும். அர்த்தம் தேடக் கூடாது.

 

 

2. கேள்வி: "இந்தியாவுக்கு வாருங்கள், எலான் மஸ்க் அவர்களே!" என்று அமெரிக்காவின் இண்டர்நெட் கம்பெனி 'ஸ்டார்லிங்'கின் அதிபரை ராகுல் காந்தி வரவேற்கிறார் - இந்திய அரசு அந்தக் கம்பெனிக்கு அனுமதி வழங்காத நிலையில். ஏன் இப்படிச் செய்கிறார் ராகுல்?

 

பதில்: மோடி அரசு கியானேஷ் குமாரைத் தலைமைத் தேர்தல் கமிஷனராக நியமித்தால், அந்த அதிகாரியை ராகுல் காந்தி எதிர்க்கிறார். ஸ்டார்லிங்க் கம்பெனி இந்தியாவில் வணிகம் செய்ய மோடி அரசு அனுமதி தராவிட்டால், அந்தக் கம்பெனியின் உரிமையாளரை ராகுல் காந்தி வரவேற்கிறார்.

 

மோடி செய்கின்ற செயலை ராகுல் காந்தி எதிர்க்கவேண்டும்; மோடி செய்ய விரும்பாத செயலை ராகுல் வரவேற்க வேண்டும். எத்தைத் தின்னாலும் ராகுலுக்குப் பித்தம் தெளியாது.

 

 

3. கேள்வி: "சட்டசபைத் தேர்தலின் போது, திமுக கட்டுப்பாட்டில் இருந்த அரசு ஊழியர்கள் தான் பெயர்களைச் சேர்த்தனர், நீக்கினர். எஸ்.ஐ.ஆரால் திமுக தோற்றது என்று சொல்வது முட்டாள்தனம். எஸ்.ஐ.ஆர் இல்லாமல் போயிருந்தால், 160 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருக்கும்" என்று தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறி இருக்கிறாரே?

 

பதில்: என்ன சொல்கிறார் ஆதவ் அர்ஜுனா? எஸ்.ஐ.ஆரினால் தவெக சில தொகுதிகளில் ஜெயிக்கமுடியாமல் போனதாக அவர் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும் - அதை அடுத்ததாகப் பார்க்கலாம். முதலாவதாக:  தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அரசு ஊழியர்களை உபயோகித்துத் திமுக-வே எஸ்.ஐ.ஆர் வழியாகத் தன்னை தவெக-விடம் கேவலமாகத் தோற்கச் செய்ததா?

 

அடுத்ததாக: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நடைமுறைப்படுத்தப் பட்டதால், தவெக 160க்குப் பதிலாக 108 சட்டசபைத் தொகுதிகளில் மட்டும் வென்றது - அதாவது 52 தொகுதிகளில் தவெக ஜெயித்திருந்தாலும் தோற்றதாகக் காண்பிக்கப் பட்டது என்கிறார் ஆதவ் அர்ஜுனா. அந்த இழப்பிற்குக் காரணம், மாநில அரசு ஊழியர்களை அப்போது தனது கட்டுப்பாட்டில் வைத்து அவர்கள் மூலமாக எஸ்.ஐ.ஆரை நடத்திய திமுக-வாகத்தான் இருக்க முடியும் என்கிறார் அவர். அப்படியானால், எந்த மாநில அரசு ஊழியரையும் தனது நிரந்தரக் கட்டுப்பாட்டில் வைத்திராத  தலைமைத் தேர்தல் கமிஷனரின் ராஜினாமாவைக் கோரும் ராகுல் காந்தியின் தலையில் ஓங்கி ஒரு போடு போடுகிறாரே ஆதவ் அர்ஜுனா? ராகுல் காந்திக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் அந்த மண்டையடியாவது புரிகிறதா?

 

 

4. கேள்வி: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தல்களில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில், கூட்டணி அரசில் இடம் பெற்ற விசிக-வின் தலைவர் திருமாவளவன், "விசிக இடம் பெறும் அணியே வெற்றி பெறும்" என்பது உறுதிப்படுவதாக அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: "தேர்தலில் வெற்றி பெறுவதாகத் தோன்றும் அணியில்தான் விசிக இடம் பெறும். எதிர் அணி வெற்றி பெற்றால் அந்த அணிக்குத் தாவவும் அவர்களின் அமைச்சரவையில் பங்கு பெறவும் விசிக தயங்காது" என்று திருமாவளவன் எப்படிப் பேசமுடியும்?

 

 

5. கேள்வி: "நான் தீர்த்துவைத்த ஒவ்வொரு போருக்கும் அமைதிக்கான நோபல் பரிசை 8 முறை பெற்றிருக்க வேண்டும். ஆனால் எனக்கு அந்தப் பரிசு வழங்கப் படவில்லை" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக ஆதங்கப் பட்டிருக்கிறாரே?

 

பதில்: ஒன்று உங்களுக்கு உரித்தாகாமல் அதை நீங்கள் வேண்டும் வேண்டும் என்று கேட்டால், உங்களைக் குறிக்க ஒரு சொல் தமிழில் இருக்கிறது. பக்கி.

 

பகுதி 142 // 11.10.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

No comments:

Post a Comment