தமிழர்களுக்கு
அவ்வப்போது தமிழ் ஜுரம் ஏறவைத்து, அதில் பயன் அடையும் திராவிட
அரசியல் தலைவர்கள் உண்டு. இந்த முயற்சியில் இப்போதைய ஆட்டத்தில் வெற்றி கண்டவர்
தி.மு.க தலைவர் ஸ்டாலின். தோல்வி யாருக்கு என்று கேட்கிறீர்களா? வழக்கப்படி தமிழனுக்குத்தான்.
ஸ்டாலின் நம்மை நம்பவைப்பது
போல், உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் இப்படி நினைக்கிறார்களா?: ’நான் பின் தங்கினாலும்
தமிழ் வாழட்டும். ஹிந்தி வேண்டவே வேண்டாம். தமிழ் நாட்டில் ஹிந்தி எப்படி நுழைந்தாலும்
அது ஹிந்தி திணிப்புதான். வேண்டுமானால், அரசியல்வாதிகளின் குடும்பங்கள் நடத்தும் உயர் கட்டண பள்ளிக்கூடங்களில் கட்டாயமாகக் கூட ஹிந்தி
கற்றுக் கொடுக்கட்டும். ஆனால் இலவசமாக, கட்டாயப் பாடமாக அரசுப் பள்ளிகளில் ஹிந்தி
சொல்லித் தரக் கூடாது.’ தொலைக்காட்சியை பரவலாகப் பார்க்கும் தமிழக மக்கள் இப்படி அடிமுட்டாள்தனமாக
நினைக்க மாட்டார்கள். அப்படியானால் தமிழ் நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு ஏன் அரசியல் ரீதியாக எடுபடுகிறது, அதுபோல் ஏன் தோற்றம்
தெரிகிறது? சற்று உன்னிப்பாக பார்க்கலாம்.
மக்கள் நலம்
விரும்பும் அரசியல் தலைவர்கள், அரசு மூலமாக என்ன செய்வார்கள்? வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் எனப்படும்
சுகாதாரமான இருப்பிடம், கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ
சேவை, சுத்தமான குடிநீர், தரமான சாலைகள், போக்குவரத்து வசதி, திடமான சட்டம்
ஒழுங்கு ஆகியவை மக்களுக்கு எளிதாக கிடைக்கச் செய்வார்கள். இவற்றில் ஒன்றாவது, 50-ஆண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ் நாட்டில் பாராட்டும்படி நிறைவேற்றப் பட்டிருக்கிறதா? இல்லை. இந்தத் தேவைகளுக்காக
அனேக மக்கள் இன்றும் அரசாங்கத்திடம் கைகூப்பி நிற்கிறார்கள், அல்லல்
படுகிறார்கள். அரசாங்கத்தை வழிநடத்தும் அரசியல் தலைவர்களின் பிடியில் தாங்கள் சிக்கி இருப்பது அவர்களுக்குத் தெரியும். அந்தப் பிடியிலிருந்து தாங்கள் சுலபமாக விடுபட முடியாது, அதற்கான சக்தி தங்களுக்கு இல்லை, அரசியல் தலைவர்கள் அராஜகமும்
செய்து நம்மை அடக்குவார்கள், அவர்கள் பெரிய
மனது வைத்தால் மட்டுமே தங்களின் கஷ்டங்கள் குறையலாம் என்பதும் ஜனங்களுக்குப் புரியும்.
இப்படியான நிலையில்,
"தமிழர்களே, மத்திய அரசு உங்கள் மீது ஹிந்தியை திணிக்கப்
பார்க்கிறது! நமது உயிர் மூச்சான தமிழுக்கு ஆபத்து! நீங்கள் போராட்டத்திற்குத்
தயாராகும் நாள் வருகிறது!" என்று பலம் மிக்க ஒரு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்
குரல் கொடுத்தால், அவலத்தில் இருக்கும் மக்கள் இப்படி நினைக்கிறார்கள்: 'ஹிந்தி படித்த
தமிழன் தமிழ்நாட்டை விட்டு வெளியே வேலைக்குப் போய்விட்டான். அவன் இந்த மாநிலத்தைப்
பற்றி கவலைப்பட மாட்டான். ஹிந்தி படிக்காத நமக்கு தமிழ்நாடுதான் கதி, நாம் அண்ணாந்து
பார்க்கும் தலைவர்தான் நமக்கு விமோசனம். இவர் தயவு நமக்கு வேண்டும். இவர் விருப்பப்படி, தமிழுக்கு ஆபத்து ஏற்படுகிறது
என்று நாமும் காட்டிக் கொண்டால் நம்மை ஆட்டுவிக்கும் தலைவர் மனம் மகிழ்ந்து, அவர்
நமது வாழ்க்கைத்தரம் உயர ஏதாவது செய்யலாம். ஆகையால், நமது வாழ்க்கை
வசதி எப்படி சீரழிந்து இருந்தாலும், அதைவிட தமிழ் மொழிதான் இப்போது நமது
எண்ணம், அதன் பெருமைதான் நமது குறிக்கோள் என்று நாமும் தோற்றம் தருவோம்.
காசா பணமா? நாம் படிக்காத ஹிந்திக்கு, நமக்கு தமிழ்நாட்டில் தேவைப்படாத மொழிக்கு எதிர்ப்பு, அவ்வளவுதானே?
போடச் சொன்ன கோஷத்தை நாமும் போட்டு வைப்போம்! எப்படியோ தலைவரின் உள்ளம் கனிந்து நமக்கு
நல்லது கிடைக்கட்டும்!’
ஸ்டாலினின் அரசியல்
சக்தியைப் பார்த்து மற்ற பெரிய சிறிய கட்சித் தலைவர்கள் 'தாங்களும் தமிழ் உணர்வில்
சளைத்தவர்கள் இல்லை' என்று அவரவர் வழியில் ஹிந்தி எதிர்ப்பு அறிக்கைகள் விட,
ஏதோ தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தெளிவாக தீர்மானமாக "ஹிந்தி படிக்க
மாட்டோம்" என்று நினைப்பதாக ஒரு பிரமை தோன்றி இருக்கிறது. இப்படியாக, ‘தமிழ்ப்
பற்று’ என்ற களத்தில் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்ற, அனேக மக்களும் அதை ஏற்பது மாதிரி
நடிக்க, ‘ஹிந்தி எதிர்ப்பு’ நாடகம் அவ்வப்போது தமிழ் நாட்டில் அமோகமாக நடக்கிறது.
இது ஒரு நாடகம்தானா என்பதை பரிசோதிக்க ஒரு கற்பனை செய்து பாருங்கள்.
ஸ்டாலினே இப்போது
ஒன்று செய்வதாக நினைத்துப் பாருங்கள். அதற்கு அ.தி.மு.க-வும் மற்ற பல திராவிட அரசியல்
கட்சிகளும் ஆதரவு தருகிறார்கள் என்றும் நினைத்துக் கொண்டால் இன்னும் நல்லது. அதாவது,
ஸ்டாலினும் மற்ற அரசியல் கட்சி தலைவர்களும், “தமிழ் நாட்டு மக்கள் இந்தி கற்பது அவர்களின் எதிர்காலத்துக்கு நன்மை செய்யும். தமிழைத் தாயென தொழுவோம்! இந்தியை சித்தியாக நேசிப்போம்!
நம் சித்தியிடம் நேசம் காட்டுவதால், நம் தாயுடனான பாசப் பிணைப்பு மங்கிப் போகுமா
என்ன? தமிழைக் காப்போம்!
இந்தியை கற்போம்! தமிழ் உனர்வில் வாழ்வோம்! வடக்கிலும் வளர்வோம்!” என்று அறிக்கை விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தமிழ்நாட்டு மக்கள் கொதித்தெழுந்து, “எங்களுக்கு
ஹிந்தி வேண்டாம். வேண்டவே வேண்டாம்!” என்று சாராயக் கடைகளுக்கு பெண்கள் எதிர்ப்பு
காட்டியது போல் வீதிக்கு வந்து போராடுவார்களா, அல்லது சிரித்துவிட்டுப் போய் தங்கள்
வேலையைப் பார்ப்பார்களா? இதில் சிரிப்பு விஷயம்தான் நடக்கும் என்பது உங்களின் ஊகமாக
இருக்கும். இந்த சரியான ஊகம், ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தையும் உணர்த்துகிறதா? நமது போலி ஜனநாயகத்தையும் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறதா?
இன்னொரு
விஷயமும் பாருங்கள். அறியாமல் தெரியாமல் அந்தக் காலத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களில்
கலந்து கொண்டு, அந்த மொழி கற்காமல் வாழ்க்கையில் வாய்ப்புகளை இழந்த தமிழ்நாட்டு பெரியவர்கள்
இன்று மௌனமாக வருந்துகிறார்கள். தாங்கள் செய்த தவற்றை தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு
அவர்கள் சொல்லி எச்சரிப்பார்கள். இந்த நாளின் தமிழ்நாட்டு இளைஞர்களும் ஹிந்தி படிப்பதின்
அவசியத்தை தாங்களாகவே பல வழிகளில் உணர முடியும். இன்றைய ஸ்டாலின் நேற்றைய கருணாநிதி அல்ல. இன்றைய
தமிழ்நாட்டு மாணவர்களும் அவர்களின் அப்பா தாத்தா
மாதிரி கண்கட்டப்பட்ட நிலையில் இல்லை. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன்பு பூதமாக
இருந்த தி.மு.க, வெறும் பூச்சாண்டியாக மாறிப் போகுமோ?
* * * * *
Copyright © R. Veera Raghavan 2019
மிகவும் சிறப்பாக புதிய பார்வையோடு எழுதி இருப்பது நன்று. ஸ்டாலின் ஒரு பக்கம் இருக்கட்டும், பல முறை டெபாசிட் இழந்த அன்புமணி, வை.கோ., திருமாவளவன் போன்றோருக்கு மக்கள் நலப் பிரச்சினை குறித்து பேச தகுதி இல்லை. அது தான் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் உண்மை. அதை அவர்களும் உணர்ந்தால் தமிழன் தலை தானாகவே நிமிர்ந்து விடும்.
ReplyDeletea good one. I liked it
ReplyDelete