Tuesday, 4 August 2026

கேள்வி-பதில் (02.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, பிரதமர் மோடியின் ஒரு வீடியோ அறிவிப்பு பற்றிக் கருத்து தெரிவிக்கிறார். அதில், "நம் தேசத்தின் எதிர்காலத்தை விட உங்கள் தோல் நிறம் பளபளப்பாக இருக்கிறது" என்று அபிஜீத் கூறுகிறாரே?

 

பதில்: அபிஜீத்தின் சிந்தனை தேசத்தின் எதிர்காலம் பற்றி இல்லை. அதை மனதில் வைத்து அவர் பேசவில்லை.

 

இந்தியாவின் எதிர்காலம் வளமாக மேலோங்கி இருக்கும். அபிஜீத்தின் சிந்தனை போல் கீழ்நிலைக்குப் போகாது.

 

 

2. கேள்வி: "தாய் மொழியைக் கற்ற பிறகு, மற்ற மொழிகளைக் கற்க வேண்டும். இந்தியையும் கற்க வேண்டும் என்றால் கற்றுக் கொள்ளுங்கள். காலத்தின் தேவை கருதி இந்தி மொழியையும் கற்கலாம்" என்று பள்ளி மாணவர்களுக்கு அறிவுரையாக மதுரையில் கவிஞர் வைரமுத்து பேசி இருக்கிறாரே?

 

பதில்: "தமிழைக் கற்காமல் ஹிந்தியைக் கற்றுக் கொள்ளுங்கள்" என்று யாரும் தமிழ்க் குழந்தைகளுக்கு அறிவுரை சொன்னதில்லை. தமிழக மாணவர்களின் எதிர்கால நலனுக்காக அவர்கள் ஹிந்தியையும் கற்பது நல்லது என்று நடுநிலையாளர்கள் எப்போதும் சொல்லிவருவதை இப்போது வைரமுத்து எதிரொலிக்கிறார்.

 

எது சரி என்பதைக் காலம் ஒருவருக்குச் சொல்லிக் கொடுக்க முனையும். முதலில் மெதுவாகச் சொல்லும், பின்னர் இடித்துச் சொல்லும். காலம் வைரமுத்துவுக்கும் சொல்லிக் கொடுக்கிறது.

 

 

3. கேள்வி: "ஜாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெற விரும்புவோர்க்கு அரசு உடனே சான்றிதழ் வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்" என்று நடிகர் பார்த்திபன் கோரிக்கை வைத்திருக்கிறாரே?

 

பதில்: விரும்புவோர்க்கு அந்தச் சான்றிதழ் கிடைக்கப் பார்த்திபனின் முயற்சி வெற்றி பெற்றால், அப்படி முன்னூறு பேர் சான்றிதழ் பெற்றால், பார்த்திபனை நிறுவனராகக் கொண்டு 'ஜாதி வேண்டார்' என்ற புதிய ஜாதி உருவாகலாம்.

 

 

4. கேள்வி: தமிழகத்திற்கு வந்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "தமிழர்கள் யாரும் தொகுதி மறுவரையறையை ஆதரிக்கக் கூடாது. அதை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்” என்று பேசி இருக்கிறாரே?

 

பதில்: முன்பு திமுக-வுடன் பல வருடங்கள் நெருக்கமாக இருந்ததால், திராவிட மொழியில் பேச ஆரம்பித்துவிட்டார் ராகுல் காந்தி. அது மட்டுமல்ல. "அகில இந்தியக் கட்சிகளுக்குத் தமிழக மக்களிடம் பேசத் தெரியவில்லை" என்று அண்ணாமலை சொன்ன குற்றச்சாட்டைச் சுக்குநூறாக உடைத்திருக்கிறார் ராகுல் காந்தி.

 

இனி ராகுல் காந்தி "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே ...  " என்று ஆரம்பித்து, "முப்பாட்டன் முருகன்" என்றும் பேசி, தமிழ் மக்களைக் கவர முனையலாம்.

 


5. கேள்வி: மு. க. அழகிரியின் மகளும் கலைஞர் கருணாநிதியின் பேத்தியுமானவர், சென்னையிலுள்ள ஒரு எஸ்.பி.ஐ வங்கியின் மேலாளர் அறைக்குச் சென்று அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று எழுந்து கைநீட்டி அந்த மேலாளரின் கன்னத்தில் பளாரென்று அறைந்திருக்கிறார். எப்படி இவ்வாறு நடந்துகொள்கிறார் அந்தப் பெண்?

 

பதில்: பள்ளிக் காலத்தில் ஒரு பாப்பா பாட்டின் முதல் வரியை மட்டும் படித்து, அதன் அர்த்தத்தையும் அவர் தவறாகப் புரிந்து வைத்திருப்பார். 'கைவீசம்மா கைவீசு.'


பகுதி 118 // 02.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

Sunday, 2 August 2026

கேள்வி-பதில் (01.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "தமிழகத்துக்கு ராகுல் காந்தி வரும்போது, மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டக் கூடாது என்று சொல்வதற்கு அவருக்குத் தைரியம் இருக்கிறதா?" என்று பாமக தலைவர் அன்புமணி கேட்கிறாரே?

 

பதில்: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டவேண்டும் அல்லது கட்டக் கூடாது என்று ராகுல் காந்தி பேசுவதற்குத் தேவை தைரியம் அல்ல - வாய் திறக்கக் கூடாத விஷயத்தில் வாய் திறக்கும் அசட்டுத்தனம். அன்புமணி தூண்டிவிடும் அசட்டுத்தனத்தை ராகுல் காந்தி அநேகமாக வெளிப்படுத்த மாட்டார்.

 

தேசநலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் காந்தி அசடாக இருந்தாலும், தனது சுயநலம் சம்பந்தமான விஷயத்தில் அநேகமாக உஷாராக இருப்பார்.

 

 

2. கேள்வி: "பிரதமர் மோடி மற்றும்.அமித் ஷா - நீங்கள் ஜென் சீ தலைமுறையினரை அச்சுறுத்தி அமைதியாக வைக்க முடியாது" என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: ஜென் சீ இளைஞர்களை - அதுவும் படித்த, ஓரளவு வசதி படைத்த, இளைஞர்களை - ராகுல் காந்தி உட்பட யாரும் அச்சுறுத்தி அமைதியாக வைக்க முடியாது. அதை யாரும் முயலவும் மாட்டார்கள்.

 

ராகுல் காந்தியிடம் நிதானமாக, அறிவுபூர்வமாக, தேசநலனில் அக்கறை கொண்டு யார் பேசினாலும் அவரை அமைதியாக வைக்க முடியாது. தேசநலன் என்ற களத்தில் கண்மண் தெரியாமல் தாறுமாறாக ஓடும் கன்றுக்குட்டி, ராகுல் காந்தி.

 

ஒரு விலங்கான கன்றுக்குட்டிக்கு, இலக்கில்லாமல் துள்ளித் திரிவது மகிழ்ச்சி. ஆனால் விலங்கு வளர்ந்து முதிர்ச்சி பெற்று நிதானம் கொள்கிறது.

 

 

3. கேள்வி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சரின் ராஜினாமாவைக் கோரி 36 நாட்கள் போராட்டம் நடத்தி அகில இந்தியாவின் கவனத்தை ஈர்த்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, மக்கள் விரும்பும் ஒரு அரசியல் கட்சியாக மாற முடியுமா?

 

பதில்: டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சி நிகழ்த்தியது ஒரு சர்க்கஸ். அதில் நன்றாக வித்தை காட்டினார்கள். கோஷம் போடும் வித்தை, கண்டதையும் பேசும் வித்தை, பதாகை காண்பிக்கும் வித்தை, ஆபாசச் செய்கை வித்தை, தடுப்புகள் தாண்டும் வித்தை, கல்லெறி வித்தை, வாகனங்களைப் புரட்டும் வித்தை என்று பலவாறான வித்தைகள் தெரிந்தவர்கள் அங்கு கூடித் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். மீடியாக்காரர்கள் எல்லா வித்தைகளையும் படம் பிடித்துக் காட்டினார்கள்.

 

வித்தை காட்டிக் கூட்டம் சேர்க்கிறவர்கள், மக்கள் பிரச்சனை தொடர்பாக மக்களின் மனதை ஈர்த்திருந்தால் தவிர - மக்களைத் திசை திருப்பியாவது அவர்கள் மனதை ஈர்த்திருந்தால் தவிர - அரசியல்வாதிகளாக எடுபடமாட்டார்கள். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர்கள் அரசியல் தலைவர்களாக எடுபடுவதற்கான அறிகுறி இதுவரை இல்லை. ஆனால் பின்னர் தந்திரங்கள் கற்று அவர்களும் அரசியல்வாதிகள் ஆகலாம். இது இந்தியா.

 

 

4. கேள்வி: ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது பிரதமரை இழிவாகப் பேசி,  மற்ற வகையிலும் தரம் தாழ்ந்து பேசிய இளைஞர்கள் பலர் மன்னிப்புக் கோரி வீடியோ வெளியிடுகிறார்கள். அவர்களை மன்னிக்கலாமா?

 

பதில்: அவர்கள் வளர்ந்த இளைஞர்கள். இருந்தாலும் சில பொறுப்புகளை உணர வேண்டியவர்கள். அவர்களுக்கு ஜென் சீ என்ற மகுடத்தை அணிவித்த பின் - அதுவும் அவர்கள் ஒரு பெருங்கூட்டமாக இணையும் போது - மனதிற்குள் அவர்களுக்குத் தானாக ஒரு ஆட்டம் வருகிறது. கரப்பான்பூச்சித் தலைவர்கள், மற்ற தலைவர்கள், சில பிரபலங்கள் ஆகியோர் ஜந்தர் மந்தரில் அந்த ஆட்டத்தைக் கொட்டடித்து ஆக்ரோஷப் படுத்தினர்.

 

ஜந்தர் மந்தரில் வன்முறையில் ஈடுபடாமல், கேமரா முன் கன்னாபின்னா பேச்சுப் பேசிய இளைஞர்களைப் பெருந்தன்மையுடன் மன்னிப்பது நல்லது. பிரதமர் மோடியே அவ்வாறு கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

 


5. கேள்வி: பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரையும் நோக்கி, "நீங்கள் இந்தியாவின் கடந்த காலம்" என்று ராகுல் காந்தி சொல்கிறார். ராகுல் காந்தி இந்தியாவின் எந்த காலம்?

 

பதில்: கெட்ட காலம்.


பகுதி 117 // 01.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

Wednesday, 29 July 2026

கேள்வி-பதில் (29.07.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "விசிக நினைத்திருந்தால், 2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணி சிதறியிருக்கும்" என்றெல்லாம் விசிக தலைவர் திருமாவளவன் பேசி இருக்கிறாரே?

 

பதில்: இன்றைய நிலையில் இதுபற்றிக் கவலைப்பட வேண்டியவர் திமுக தலைவர் ஸ்டாலின் அல்ல. இதுபற்றிச் சிந்திக்க வேண்டியவர், தவெக தலைவரும் கூட்டணி அரசின் முதல்வருமான விஜய். "விசிக நினைத்தால் ....." என்று விஜய்யிடம் திருமாவளவன் பெரிதாக என்ன சொல்ல நினைக்கிறாரோ?

 

 

2. கேள்வி: "இன்றில்லாவிட்டால் நாளை, நாளை இல்லாவிட்டால் மறுநாள், அல்லது என்றாவது ஒரு நாள் நாங்கள் வெற்றி பெறுவோம்" என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசி இருக்கிறாரே?

 

பதில்: இன்று, நாளை, மறுநாள், எந்நாளும் சீமான் இதே வார்த்தைகளைச் சொல்லுவார்.

 

 

3. கேள்வி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் சோனம் வாங்சுக் முன்நின்று டெல்லியில் நடத்திய போராட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்த நடிகை ஜோதிகா, சோனம் வாங்சுக், அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ் ஆகியோரைச் சுட்டிக்காட்டி, "உங்களைப் போன்றவர்களைப் பிள்ளைகளாக வளர்க்கக்கூடிய தாய்களாக இருக்க நாங்கள் விரும்புகிறோம்" என்று சொல்லியிருக்கிறாரே?

 

பதில்: எதிர்க்கட்சித் தலைவர்களாகிய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, மு. க. ஸ்டாலின் போன்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராகச் செயல்படுவதற்கு லாயக்கற்றவர்கள், அவர்கள் சுத்த வேஸ்ட், என்பது ஜோதிகாவின் கருத்து. அதை எப்படியோ சுற்றி வளைத்துச் சொல்லப் பார்க்கிறார்.

 

 

4. கேள்வி: 'கம்பளிப்பூச்சி ஜனதா கட்சி' என்று ஒரு கட்சி ஆரம்பிக்க நினைக்கிறேன். எடுபடுமா?

 

பதில்: இன்றைய நிலையில் அது பெயரளவில் எடுபடும்.

 


5. கேள்வி: புல், பூண்டு, பூச்சி - விளக்கவும்.

 

பதில்: புல், ஆடு மாடுகளுக்கு உணவு. பூண்டு, மனிதர்களுக்கு உணவு.

 

சில பூச்சிகள் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தானவை - ஆபத்திலிருந்து விலகி இருப்பது நல்லது.


பகுதி 116 // 29.07.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com