Friday, 16 August 2019

ப. சிதம்பரம் - சட்டத்தில் மேதாவி, தேசத்தில் மாபாவி


காங்கிரஸின் ப.சிதம்பரம் சட்டத்தை நன்கு படித்த மேதாவிதான், சந்தேகம் இல்லை. ஆனால் தனது அரசியல் ஆதாயத்துக்காக நாட்டைக் கேவலப் படுத்திய மாபாவி அவர். இதிலும் சந்தேகம் இல்லை.

ஜம்மு-காஷ்மீருக்குப் பொருந்திய நமது அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370-ன் பல்லை லாவகமாகப் பிடுங்கிவிட்டது மத்திய அரசு. இப்போது அந்த மாநிலமும் மற்ற மாநிலங்களைப் போல் இந்தியாவின் ஒரு முழு அங்கம். இந்த நடவடிக்கை பற்றி பரூக் அப்துல்லாவும், மெஹபூபா முப்தியும் சொல்லாததை, ஸ்டாலினும் பேசாததை - ஏன், பாகிஸ்தானும் கூறாததை - உளறி இருக்கிறார் ப.சிதம்பரம். "ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முஸ்லிம்கள் மிகுந்த மாநிலமாக இருபதால்தான், 370-வது பிரிவில் பி.ஜே.பி அரசு மாற்றம் செய்தது. அந்தப் பிரதேசம் ஹிந்துக்கள் நிறைந்ததாக இருந்தால் அரசு இதை செய்யாது" என்று பித்துக்குளியாகவும் தேச நலன் விரோதியாகவும் பேசி இருக்கிறார் அவர். 

சுதந்திரம் கிடைத்த நாளிலேயே ஜம்மு-காஷ்மீர் ஹிந்துக்கள் நிறைந்த பகுதியாக இருந்தால் என்ன நடந்திருக்கும்? அப்படியான சூழ்நிலையில் ஷேக் அப்துல்லா அங்கு மக்களின் அபிமான தலைவராக ஆகி இருக்க மாட்டார்.  அப்போது ஹிந்துவான எவரும் ஜம்மு-காஷ்மீரில்  மக்களின் தலைவராக தோன்றி இருந்தால், தனது மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று அந்தத் தலைவர் கேட்டிருக்க மாட்டார். 370-வது பிரிவும் அரசியல் சட்டத்தில் சேர்ந்திருக்காது. இது கற்பனையான வாதமல்ல.

ஹிந்துக்கள் நிறைந்த நூற்றுக் கணக்கான சமஸ்தானங்கள் இந்தியாவுடன் சேர்ந்தன. அவை அனைத்தும், ஜம்மு-காஷ்மீர் போல ஒரே மாதிரியான இணைப்புப் பத்திரங்களின் கீழ்தான் இந்தியாவுடன் இணைந்தன. ஆனால் அந்த ஹிந்து மெஜாரிடி சமஸ்தானங்கள் தங்களுக்கு ஜம்மு-காஷ்மீர் மாதிரியான சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று இந்தியாவை நிபந்திக்கவில்லை. ஆகையால், சுதந்திரம் பெற்ற காலத்தில் ஜம்மு-காஷ்மீரிலும் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக நிறைந்திருந்தால், 370-வது பிரிவு அரசியல் அமைப்புச் சட்டத்தில் நிச்சயமாக நுழைந்திருக்காது.  பிறகு அந்த சட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்காக இந்த நாளில் எந்த மாற்றத்தையும் பி.ஜே.பி-யின் மத்திய அரசு நினைக்க அவசியம் இருக்காது. ப.சிதம்பரமும் "அது அப்படி இருந்தால் இது இப்படி நடக்காது" என்று இப்போது உளறிக் கொட்டும் சந்தர்ப்பம் வந்திருக்காது.

தற்போது குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஜுனகாத், சுதந்திரத்திற்கு முன்னால் ஒரு சமஸ்தானமாக இருந்தது. 80 சதவிகிதத்திற்கும் மேலாக அங்கு ஹிந்துக்கள் வசித்தனர். அதன் மன்னர் ஒரு முஸ்லிம். அவர் தனது சமஸ்தானத்தை பாகிஸ்தான் நாட்டுடன் இணைக்கிறேன் என்று அதற்கான இணைப்புப் பாத்திரத்தில் கையெழுத்து போட்டு அந்த நாடும் அதை ஏற்றுக் கொண்டது. ஆனால் ஜுனகாத்தின் மக்கள் அந்த இணைப்பை எதிர்த்தார்கள், இந்தியாவுடனான இணைப்பை விரும்பினார்கள்.

மேற்குப் பகுதியில் கடல், மற்ற மூன்று புறத்திலும் இந்தியாவின் நிலப்பரப்பு சூழ்ந்தது ஜுனகாத் சுமஸ்தானம். அது பாகிஸ்தானின் ஒரு பகுதியாகி இந்தியாவிற்குள்ளே கான்சர் கட்டி மாதிரி அமைந்துவிட்டால் நமது நாட்டிற்குப் பெரிய தலைவலி உண்டாகும். இந்த சூழ்நிலையில் ஜுனகாத் பிரதேசத்தை இந்தியா முற்றுகையும் இட்டதாக குறிப்புகள் உண்டு.

மக்களின் எதிர்ப்பையும், இந்தியாவின் அழுத்தத்தையும் சமாளிக்க முடியாமல் ஜுனகாத்தின் மன்னர் பாகிஸ்தானின் கராச்சிக்கு கடல் வழியாக தப்பித்தார். இந்தியா அந்த சமஸ்தானத்தின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டது. ஜுனகாத் மக்களிடம் இந்தியா ஒரு கருத்துக் கணிப்பும் நடத்தியது. அதில் ஓட்டளித்த மக்களில் 90 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் ஜுனகாத் இந்தியாவின் அங்கமாவதை ஆதரித்தார்கள். முடிவாக இந்தியாவும் அந்த சமஸ்தானத்தைத் தன்னுடன் இணைத்துவிட்டது.

ஜுனகாத் சமஸ்தானம் அதன் மன்னரின் போக்கின்படி பாகிஸ்தானின் ஒரு பகுதியாகி இருந்தால் இன்று என்ன நடந்திருக்கும்? இந்தியா மாதிரி  வேற்று மத குடிமக்களை மதித்து அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நாடு அல்ல பாகிஸ்தான்.  அந்த நாட்டு ஆட்சியாளர்களின் ஹிந்து விரோதப் போக்கினால், ஜுனகாத் பிரதேசத்தில் ஹிந்துக்களின் சதவிகிதம் குறையும். பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த தினத்தில் மேற்கு பாகிஸ்தானில் (இப்போது அது மட்டும்தான் பாகிஸ்தான் நிலப்பரப்பு) ஹிந்துக்கள் 15 சதவிகிதம் இருந்தனர். தற்போது அது சுமார் 2 சதவிகிதம். அதுபோல்தான் ஜுனகாத் பகுதியிலும் ஹிந்துக்கள் குறைவார்கள். பிரதான பாகிஸ்தான் பகுதியில் இருந்து சுலபமாக கடல் மார்க்கமாகவே எவரும் ஜுனகாத்திற்கு வந்து போகலாம், எதையும் கொண்டுவரலாம் என்று ஆகும்.  பிறகு, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஜுனகாத் ஒரு பாதுகாப்பான புகலிடமாக அமைந்திருக்கும்.

இப்போதைய பஸ்கிஸ்தான் நாட்டிலேயே சுமார் நாற்பதாயிரம் பயங்கரவாதிகள் நடமாடுகிறார்கள் என்று அதன் பிரதமர் இம்ரான் கான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ஜுனகாத்தை அந்த நாட்டுடன் இணைய விட்டிருந்தால், இன்றைக்கு பல்லாயிரக் கணக்கான பயங்கரவாதிகள் ஜுனகாத் பகுதியிலும் வளர்க்கப்பட்டு இந்தியாவில் குண்டு வைத்து நாச வேலைகள் செய்ய முனைவார்களா இல்லையா?

காங்கிரஸ் கட்சியின் உள்துறை மந்திரியாக இருந்த சர்தார் வல்லபாய் படேல்தான் ஜுனகாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க முன்நின்று நடவடிக்கை எடுத்தார். இதை சிதம்பரம் எப்படிப் பார்ப்பார்? ஜுனகாத் மன்னர் தனது சமஸ்தானத்தை முறையாக பாகிஸ்தான் நாட்டுடன் இணைத்துவிட்ட பிறகு, அவர் ஒரு முஸ்லிம் என்பதால்தான் படேல் ஜுனகாத்தை எடுத்துக் கொண்டார் என்று சொல்லுவாரா மேதாவி சிதம்பரம்?

அடுத்தது ஹைதராபாத் சமஸ்தானம். இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்த அந்த சமஸ்தானத்தின் மன்னராக இருந்தவர் ஒரு முஸ்லிம். அதன் மக்கள் தொகையில் சுமார் 85 சதவிகிதம் ஹிந்துக்கள். அந்த மன்னர் தனது சமஸ்தானம் இந்தியாவுடன் இணையாமல் ஒரு தனி நாடாகவே இருக்க ஆசைப்பட்டார். அப்படி இருப்பது ஒரு விதத்தில் அதன் உரிமையும் ஆகும். இந்தியா சுதந்திரம் அடைந்து ஒரு வருடம் ஆகியும் அது இந்தியாவுடன் இணையாமல் இருக்குமாறு அந்த மன்னர் பார்த்துக் கொண்டார். ஆனால் ஹைதராபாத்தின் பெருவாரியான ஹிந்துக்கள் இந்தியாவுடன் இணைவதை விரும்பினார்கள்.

ஹைதரபாத் சமஸ்தானம் ஒரு தனி நாடாகவே தொடர்ந்தால் இந்தியாவுக்கு சிக்கல்களும் ஆபத்தும் நேரலாம் என்று இந்தியா கருதியது. அப்போதைய உள்துறை மந்திரி படேல், செப்டம்பர் 1948-ல் ஹைதராபாத் சமஸ்தானத்திற்குள் இந்திய ராணுவத்தை அனுப்பி  ஐந்தே நாட்களில் அந்த சமஸ்தானத்தை  சரண் அடைய வைத்தார். இப்படித்தான் ஹைதராபாத் சமஸ்தானத்தின் பிடரியில் கைவைத்து இழுத்து இந்தியாவுடன் இணைத்து நமக்கு வரவிருந்த ஒரு பெரிய அபாயத்தைத் தடுத்தார் படேல்.  ஹைதராபாத் சமஸ்தானத்தின் மன்னர் முஸ்லிமாக இருந்தார் என்ற காரணத்தால் இந்தியா அதன் உரிமைகளை  மிதித்து தன்னுடன் வலுக்காட்டாயமாக இணைத்தது என்றும் பேசுவாரா மேதாவி சிதம்பரம்?

சுதந்திரம் கிடைத்த நாளில் சோனியா காந்தியோ ராகுல் காந்தியோ மாதிரியான ஒருவர் இந்தியாவின் பிரதமர், சிதம்பரம்  மாதிரியானவர் உள்துறை அமைச்சர் என்று நினைத்துக் கொள்ளுங்கள் - அப்படியானால் ஜுனகாத்தும் ஹைதராபாத்தும் இன்று நமது நாட்டின் பகுதிகளாக இருக்குமா என்பது சந்தேகம்தானே?  இந்தியாவின் நல்ல நேரம், வேறு மாதிரியானவர்கள் அந்தப் பதவிகளில் இருந்தார்கள். தேச நலனை, தேச பாதுகாப்பை மனதில் வைத்து எப்படி சர்தார் படேல் அந்தக் காலத்தில் அந்த இரு சமஸ்தானங்களில் நடவடிக்கை எடுத்தாரோ, அதே காரணத்திற்காக அதைவிட தீவிரம் குறைந்த நடவடிக்கையை பிரதமர் மோடியின் அரசு இப்போது ஜம்மு-காஷ்மீர் விஷயத்தில் எடுத்திருக்கிறது.

சர்தார் படேலுக்கு பிரதமர் மோடி இந்தியாவில் ஒரு பிரம்மாண்டமான சிலை அமைத்தார்.  அதைப் போல் ப.சிதம்பரத்துக்கும் தனது நாட்டில் சிலை எழுப்பலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நினைப்பாரோ?

ஜவஹர்லால் நேரு மாதிரி சுய சிந்தனையும் சுய கௌரதையும் நாட்டுப் பற்றும் மிகுந்த ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தால் சிதம்பரம் இப்படி சிறுப்பிள்ளைத்தனமாக, தான்தோன்றித்தனமாக, தேச விரோத தொனியில் பேசி இருக்க முடியுமா?  இல்லை, இதே நேரத்தில் காங்கிரஸின் மணி சங்கர் ஐயர்தான் ”மோடியும் அமித் ஷாவும் நமது வடக்கு எல்லையில் ஒரு பாலஸ்தீனத்தை ஏற்படுத்திவிட்டார்கள்" என்று பேசி காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு ஊக்கம் தரும் சமிக்ஞைகள் அனுப்ப முடியுமா?   இந்த இருவரின் அற்பமான அபாண்டமான  பிதற்றல்களுக்கும் இன்றைய காங்கிரஸ் தலைமை மறுப்பு சொல்லவில்லை, அவர்களை கண்டிக்கவும் இல்லை.

அறியாமையும் பலவீனமும் பலவித பேராசைகளும் கொண்ட தலைமைதான் சென்ற பல வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருக்கிறது.  இதைப் பயன்படுத்தி தமது சுய வளங்களை பெருக்கிக் கொண்ட சில புத்திசாலித் தலைவர்களில் ஒருவர் ப.சிதம்பரம். கட்சித் தலைமைக்குத் தான் ஒரு அரணாக இருக்கும் போர்வையில், தலைமையைக் கிளுக்கிளுப்பூட்டி மகிழ்விப்பதற்காக எந்த அபத்தத்தையும் அழகான மொழியில் சொல்கிறார். அப்படியே காங்கிரஸ் கட்சியில் தனது முக்கியத்துவத்தை காப்பாற்றிக் கொள்வதில் குறியாக இருக்கிறார்.  நல்ல அரசியல் பண்புகள் அற்ற காங்கிரஸ் தலைமை சிதம்பரம் போன்ற விவரமானவர்களை நம்பி இருக்கவேண்டும். அதன் மறு பக்கமாக, சிதம்பரத்தைப் போல் அரசியல் மூலமாக சுயலாபம் தேடுபவர்கள் காங்கிரஸ் தலைமையைச் சார்ந்து இருக்க வேண்டும். இரண்டு தரப்புக்கும் அவரவர் தேவைகளும் நெருக்கடிகளும் என்ன என்று அவர்களுக்குத் தானே தெரியும்?

நேர்மையும் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் மிகுந்த தலைவர்கள் பங்கேற்று சுதந்திரப் போராட்டம் நடத்திய கட்சி காங்கிரஸ். அது இன்று கிடக்கும் பரிதாப நிலையைத்தான் சிதம்பரத்தின் சுயநலமான தேச விரோதக் கருத்து வெளிப்படுத்துகிறது. மாபாவிகள்தானே இதை நிகழ்த்த முடியும்?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019

Tuesday, 13 August 2019

370-வது பிரிவு பற்றி ஒரு யு.கே.ஜி பாடம் – எப்படி நுழைந்தது, ஏன் கல்தா கொடுக்கப் பட்டது?


அரசியல் அமைப்புச் சட்டம் 370-வது பிரிவால் இந்தியாவின் மீது படிந்த அவமானக் கறை துடைக்கப் பட்டது, தேசாபிமானம், மனோ தைரியம், அரசியல் சாதுரியம் மிகுந்த பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில்தான் இந்த சாதனை சாத்தியமானது.

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் சேருவதற்காக அந்த சமஸ்தானத்தின் மன்னர் 1947-ம் வருடம் இந்தியாவுக்கு  ஒரு இணைப்புப் பத்திரம் எழுதிக்கொடுத்தார், அதை இந்திய அரசாங்கமும் கையெழுத்திட்டு ஒப்புக் கொண்டது. அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை, மிகச் சில விஷயங்களில் மட்டும்தான் இந்தியாவின் பாராளுமன்றம் சட்டம் இயற்றுவதற்கு அதிகாரம் உண்டு என்று அந்த இணைப்புப் பத்திரம் சொன்னது. அவை சுருக்கமாக: பாதுகாப்பு, ஆயுதப் படைகள், அயல் நாட்டு உறவு, தகவல் தொடர்பு, விமானம், கப்பல், ரயில்வே போக்குவரத்து, விமான நிலையங்கள், துறைமுகங்கள், தபால் தந்தி, ஒலிபரப்பு மற்றும் டெலிபோன் சேவைகள்.

 அந்த இணைப்புப் பத்திரத்தில் ஜம்மு-காஷ்மீரின் மன்னர் நமது நாட்டிற்கு வேறு சில நிபந்தனைகளையும் விதித்தார் – நாமும் அவற்றை ஒப்புக் கொண்டோம்.  அவற்றில் இரண்டு இவை:

”இந்தியாவின் எதிர்கால அரசியல் அமைப்பு சட்டத்தை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்கிற நிர்பந்தம் கிடையாது.”

”இந்த இணைப்புப் பத்திரத்தில் உள்ள ஷரத்துகள் மட்டுமே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை கட்டுப்படுத்தும். மற்றபடி, இந்த மாநிலத்தில் எனது தன்னாட்சியும் உரிமைகளும் அதிகாரங்களும் இந்த மாநில சட்டங்களும் பாதிப்பில்லாமல் தொடரும்.”

இந்த நிபந்தனைகளைக் கருத்தில் வைத்து, நமது அரசியல் அமைப்புச் சட்டம் உருவாகும் சமயத்தில் ஷேக் அப்துல்லா நேருவிடமும் நமது அரசியல் நிர்ணய சபை அங்கத்தினர்களிடமும் இப்படிப் பேசி இருக்க முடியும்: ”இணைப்புப் பத்திரத்தில் உள்ள இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் உட்பட்டுதான் இந்தியா ஜம்மு-காஷ்மீர் மாநில இணைப்பை ஏற்றது. ஆகையால் இந்த நிபந்தனைகளையும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்க வேண்டும். 370-வது பிரிவு அம்சங்களின் வழியாக அந்த இரண்டு நிபந்தனைகள் இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெறட்டும். அது நடக்காவிட்டால் இணைப்புப் பத்திரத்தில் இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்ட அந்த இரண்டு நிபந்தனைகளும் வலு இழந்து செல்லாமலே போகும்”

ஷேக் அப்துல்லாவின் இந்த வாதத்தை இந்தியா நிராகரித்திருக்க முடியாது. ”ஏதோ இணைப்பு பத்திரத்தில் உங்களுக்குப் பிடித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு உங்கள் மாநிலத்தை வளைத்துப் போட்டோம். எங்கள் வார்த்தையை நம்பி நீங்களும் இந்த நாட்டோடு சேர்ந்து விட்டீர்கள்.  அந்த நிபந்தனைகளை எல்லாம் எங்கள் நாடு இப்போது செயல்படுத்தாது. மரியாதையாக அமைதியாக இருங்கள். இல்லாவிட்டால் எங்கள் நாட்டு ராணுவம் உங்களை கவனிக்கும்” என்று இந்தியா சொல்லவில்லை. அன்று இந்தியா அப்படி அடாவடியாகச் சொல்வதை யாரும் நினைத்துப் பார்க்கவும் முடியாது.  இதுதான் 370-வது பிரிவு பிறந்த கதை.

ஜம்மு-காஷ்மீர் மாநில மன்னரோடு எந்த இணைப்புப் பத்திரத்தில் இந்தியா கையெழுத்திட்டதோ, அச்சு அசல் அதே மாதிரியான இணைப்பு பத்திரத்தில்தான் இந்தியா மற்ற 550-க்கும் மேலான சமஸ்தான மன்னர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.  ஆனால் அந்த மன்னர்கள் தங்களுடைய இணைப்புப் பத்திரத்தில் கண்ட நிபந்தனைகளை இந்தியா தனது அரசியல் சட்டத்திலும் அங்கீகரிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவில்லை. அந்த நிபந்தனைகளை எல்லாம் தாமாக தளர்த்திக்கொண்டு அவர்களின் சமஸ்தானங்களை இந்தியாவோடு முழுமையாக ஐக்கியம் செய்தார்கள்.

ஒரு கேள்வி நியாயமாக வரலாம். இப்படி அவமானமான நிபந்தனைகள் கொண்ட ஒரு இணைப்புப் பத்திரத்தை இந்தியா ஏன் ஏற்றது?  இதே இணைப்புப் பத்திரத்தின் வடிவில்தான் பாகிஸ்தான் நாடும் அதனுடன் இணைந்த சில 13 சமஸ்தானங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.  ஒரு நாடு கையெழுத்திட்ட இணைப்புப் பத்திரத்தை இன்னொரு நாடும் காப்பி அடித்து தனது நாட்டிற்கு பயன் படுத்தி இருக்க முடியாது. அனேகமாக, இரண்டு நாடுகள் பயன் படுத்திய இணைப்புப் பத்திரத்தையும் ஒரே மாதிரியாக தயாரித்தவர்கள் பிரிடிஷ் அரசாங்கமாக இருக்கும்.  அவர்கள் ஆட்சியின் கீழ் இந்திய சமஸ்தானங்கள் இருந்த காலத்திலும் பல தனி அதிகாரங்கள் அந்த சமஸ்தானங்களுக்கு உண்டு. அவற்றின் தொடர்ச்சியாக அது போன்ற தனி அதிகாரங்கள் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணையும் சமஸ்தானங்களுக்கும் தக்க வைக்கப்பட்டிருக்கும்.  சரி, இந்தக் காலத்திற்கு வரலாம்.

ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் பழைய ஏற்பாடுகளை, பிற்கால சந்ததிகளும் அரசாங்கங்களும் அப்படியே பின்பற்றுவது என்பது சரித்திரத்தில் பெரும்பாலும் நடப்பதில்லை. மக்களும் அரசாங்கங்களும் அந்த ஏற்பாடுகளை மாற்றுகின்றன.  அந்நிய நாட்டு நிலப்பரப்பை மற்றோரு நாடு அடாவடியாக ஆக்கிரமிக்காமல் இருக்கவேண்டும் என்பதுதான் பொதுவான விதி.

தீவிரவாதிகளை உருவாக்கி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் அனுப்பி நாசவேலைகளை வன்மத்துடன் நிகழ்த்திவருகிறது அண்டை நாடான பாகிஸ்தான். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய பகுதியான காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரிவினை கேட்கும் அரசியல் கட்சிகள், தீவிரவாதிகளுக்கு வால் பிடிக்கும் அரசியல் கட்சிகள், இந்தியாவை தாய் நாடாகவே மதிக்காத அரசியல் கட்சிகள்தான் பிரதானமாக இருக்கின்றன. காலம் எல்லாம் இந்த அவல நிலையைத் தாங்கிக் கொண்டே ஜம்மு-காஷ்மீரை ஒரு மாநிலமாக வைத்துக் கொள்ளவா அந்தப் பிரதேசத்தை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது?  அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சைனா, போன்ற எந்த நாடும் இந்தியாவின் நிலையில் இருந்தால் இந்தப் பரிதாபமான சூழ்நிலையை நீடிக்க விடாது. 

இப்போது இந்தியா தனது நாட்டை தீவிரமாகப் பாதுகாக்கவும் ஜம்மு-காஷ்மீர் மக்களின் முன்னேற்றத்துக்காகவும் 370-வது பிரிவின் பிடியில் இருந்து மீள்வது காலம் ஏற்படுத்தும் நிகழ்ச்சி. இதை இந்தியா இந்த மாத முதல் வாரத்தில் நிறைவேற்றி விட்டது. இந்த மாற்றத்தை எதிர்ப்பவர்கள் யார்? தாங்கள்தான் அப்பாவி ஜம்மு-காஷ்மீர் மக்களின் பாதுகாவலர்கள் என்று நடித்து அந்த மக்களை ஏமாற்றி அமோக அரசியல் பலன்களை அனுபவித்தவர்கள் அவர்கள், அல்லது 370-வது பிரிவின் மீது கை வைத்தால், கொத்தாகக் கிடைத்து வந்த முஸ்லிம் ஓட்டுக்கள் பறிபோகலாம் என்று கணக்குப் போடும் அரசியல்வாதிகள் அவர்கள், அல்லது பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் எழுச்சியை எதிர்ப்பவர்கள் அவர்கள். உதாரணம்: பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி, குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி, ஸ்டாலின், ப.சிதம்பரம் மற்றும் சில பத்திரிகைகள், தொலைக்காட்சி சானல்கள்

370-வது பிரிவின் கட்டுப்பாடுகள் நீங்கியதை எதிர்க்கும் அரசியல் கட்சிகளையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தேர்தலின் போதும் அந்த அரசியல் கட்சிகள் பழைய கூட்டணிகளை மறந்துவிட்டு, அந்த நேரத்துக்கு ஏற்ற புதிய கூட்டணிகளை அமைக்கிறார்களே? அதில் நேற்றைய நண்பர்களும் எதிரிகளும் இன்று இடம் மாறுகிறார்களே? இன்று தனது கட்சிக்கு பலன் தருவது யாருடைய நட்பு, யாருடைய பகை என்று பார்த்துத்தானே அரசியல் கட்சிகள் மாறி மாறி கூட்டணி அமைக்கின்றன?  அது போலத்தானே ஒரு நாடும் தற்போதைய சூழ்நிலையில் தனது நலனுக்கும் கௌரவத்துக்கும் உகந்தது எது என்று எண்ணி சட்ட நடவடிக்கைகளையும், அரசியல் நிலைகளையும் எடுக்கும்?

இன்னமும் பாருங்கள். தனது நாட்டின் ஒரு பகுதி மக்களையே உதாசீனம் செய்த பாகிஸ்தான் நாட்டிலிருந்து, அந்தப் பகுதியின் நிலப்பரப்பு 1971-ம் வருடம் துண்டாகி பங்களா தேஷ் என்ற புதிய பெயரோடு தனி நாடாகவே ஆகிவிட்டது.  இது சாதாரண ஒப்பந்த மீறல் இல்லை.  பாகிஸ்தானின் அரசியல் சட்டமே பாழ் செய்யப்பட்டு அதன் விளைவாக தோன்றியது பங்களா தேஷ். இந்தியாவின் பெரும் ராணுவ உதவி இல்லாமல் பங்களா தேஷ் அந்த நாளில் உருவாகி இருக்காது. பிறகு அது ஐக்கிய நாடுகளின் உறுப்பினரும் ஆகி விட்டது. இதற்கு என்ன அர்த்தம்? எந்த நாடும் எப்படியும் துண்டாடப்படுவதை உலக நாடுகள் அனைத்தும் ஆட்சேபம் இல்லாமல் வரவேற்கும் என்பதா? இல்லை. விசேஷமான, விதிவிலக்கான நிலப்பரப்பு அல்லது அரசியல் மாற்றங்களை உலகம் அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் ஜம்மு-காஷ்மீர் விஷயம் இன்னும் சாதாரணமானது, எளிமையானது. அதற்குப் பொருந்திய 370-வது பிரிவின் மாற்றம் இந்தியாவின் உள்நாட்டு விஷயம். அதுவும் சட்டத்தின் வழிதான் நடந்திருக்கிது.  அது எப்படி என்றும் பார்க்கலாம்.

370-வது பிரிவின் படி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவையும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒப்புதலோடு அங்கு அமல் படுத்தலாம் என்று இருக்கிறது. நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் இன்ன இன்ன பிரிவுகள் எங்கள் மாநிலத்துக்கும் பொருந்த சம்மதிக்கிறோம், அவைகளை நாங்களும் முழுமையாக அல்லது சில மாற்றங்களுடன் ஏற்றுக் கொள்கிறோம் என்று அந்த மாநிலமே  தனது கண்ணில் விளக்கெண்ணை வைத்துக்கொண்டு ஒவ்வொரு பிரிவாக அலசி ஆராய்ந்து சில தவணைகளில் ஒப்புதல் கொடுத்திருக்கிறது. அப்படியான ஒப்புதல்களின் விளைவாக ஒரு சட்ட நிலை தோன்றி இருக்கிறது. அது என்னவென்றால், தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சட்டசபை முறையாக கலைக்கப்பட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சி நடப்பதால், இந்த நேரத்தில் 370-வது பிரிவை ஜனாதிபதி உத்தரவு மற்றும் பாராளுமன்ற ஒப்புதல் மூலமாகவே முடக்கிப் போடும் சட்ட  வழி கிடைத்தது. அதை சாதுரியமாக உடனே செயல்படுத்தியது இந்திய அரசாங்கம். இப்படியாகத்தான் 370-வது பிரிவுக்கு கல்தா கொடுக்கப்பட்டது. அது போட்ட குட்டியான 35-A பிரிவும் நமது அரசியல் அமைப்புச் சட்டத்திலிருந்து வெளியேறியது.

370-வது பிரிவு மாதிரி, இந்தியாவோடு இணைந்த எல்லா சமஸ்தானங்களுக்கும் அவரவர் இணைப்புப் பத்திரங்களின் படி ஒரு சிறப்பு அந்தஸ்தை நமது அரசியல் சட்டம் வழங்கி இருந்தால், பிறகு புதுக்கோட்டை சமஸ்தானத்திடமும் மத்திய அரசு பணிந்து சம்மதம் வாங்கினால்தான் அந்த ஊர் மக்களுக்கும் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் கிடைத்திருக்கும். இல்லை, தமிழ்நாடே ஜம்மு-காஷ்மீரைப் போல் ஒரு சமஸ்தானமாக இருந்து அதற்கும் சிறப்பு அந்தஸ்து கிட்டி இருந்தால், கலைஞர் கருணாநிதி தன்னை முன்னிலைப்படுத்தி பல அதிகாரங்களை விட்டுக் கொடுக்காமல் என்றோ மாநில சுயாட்சி பெற்றிருக்கலாம், மத்திய அரசு சர்க்காரியா கமிஷனையும் அமைத்திருக்க முடியாது. மத்திய அரசின் ஊழல் தடுப்பு சட்டத்தை இந்த மாநிலத்தில் அமல் படுத்த முடியாமல் சசிகலாவும் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றிருக்க மாட்டார். எல்லாவற்றையும் பார்த்தால், ’போனது போகட்டும் போடா!’ என்று இந்தியர்கள் ஆனந்த ராகத்தில் பாட வேண்டிய நேரம் இது.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019

Thursday, 1 August 2019

ஒரு இந்தியக் குடும்பம், இந்தோனீஷிய ஹோட்டல், இன்னும் ஒரு விஷயம்.



வெளிநாட்டு சுற்றுலா சென்ற ஒரு இந்தியக் குடும்பத்திற்கு இந்தோனீஷியாவில் மானம் போனது வீடியோவில் பரவுகிறது.  அந்தக் குடும்பத்தினர்  ஹோட்டல் அறைகளைக் காலி செய்து தங்கள் உடைமைகளுடன் ஒரு 'வேனி'ல் புறப்படத் தயாராக இருக்கிறார்கள். அப்போது ஹோட்டல் அதிகாரிகள் இருவர் அந்தக் குடும்பத்தினரின் பெட்டி பைகளை வாகனத்திலிருந்து இறக்கி சோதனை செய்கிற காட்சிகள் வீடியோவில் தெரிகின்றன. 

அந்தக் காட்சிகள் இவை:  அந்தக் குடும்பத்தினர் தங்கிய அறைகளில் விருந்தினர் உபயோகத்திற்காக வைக்கப்பட்ட ஹோட்டல் சாமான்கள் - கண்ணாடி, 'ஹாங்கர்', 'ஹேர் டிரையர்',  'சோப் டிஸ்பென்சர்', சில கலைப் பொருட்கள் போன்றவை - அவர்களின் பெட்டி பைகளில் இருந்து வெளியே எடுக்கப்படுகின்றன. தங்கள் குற்றம் வெளிவருவதைப் பார்க்கும் அந்தக் குடும்பத்தின் நடுத்தர வயது ஆணும் பெண்ணும், ஹோட்டல் அதிகாரிகளிடம் "சாரி, சாரி, அதற்கான பணத்தை நாங்கள் கட்டுகிறோம்" என்று தப்பிக்கும் தீர்வு சொல்கிறார்கள். எடுபடவில்லை. குடும்பத்தில் இருக்கும் சற்று மூத்தவர் ஒரு ஹோட்டல் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டு கும்பிடுகிறார், பயனில்லை.  வாகனச் சோதனை நீடிக்கிறது. குடும்பத்தின் மூன்று பெண் குழந்தைகள்  - வயது 12ல் இருந்து 16 இருக்கும் - வருத்தமான பார்வையில் நிற்கின்றன.  அயல் நாட்டில் ஒரு  இந்தியக் குடும்பத்தின் மானம் மரியாதை திமிறிக்கொண்டு போகிறது.

ஹோட்டல் பொருட்களை பதுக்கிய இந்தியர்கள் மீது நீங்கள் கோபம் கொள்வதும், 'வெளி நாட்டில் இந்தியாவின் பெயரைக் கெடுக்கிறார்களே' என்று நீங்கள் ஆத்திரப் படுவதும் நல்ல பண்பு. மற்ற விஷயமும் உண்டு.

நிச்சயமாக, அந்தக் குடும்பத்தின்  குழந்தைகள் மட்டும் யாரும் அறியாமல் ஹோட்டல் சாமான்களை பெட்டி பைகளில்  கடத்த மாட்டார்கள். இது பெரியவர்கள் செய்த காரியம்தான். வசதியாகவும் டீசன்டாகவும் தோன்றுகிறார்கள்.  பின் ஏன் அந்தக் குடும்பம் இந்தத் தப்பை செய்தது? இதற்கான விடையை, இந்தியப் பொது வாழ்க்கை நெறியின் லட்சணம் பெருமளவு சொல்லும்.

எனக்குத் தெரிந்து, ஒரு காலத்தில் ஒரே வீட்டில் பிறந்து ஒரு குடும்பமாக வளர்ந்த மிகப் பலர் இன்று பெரியவர்களாகி தனித் தனி குடும்பங்களாக நேர்மையாக வாழ்கிறார்கள். அவர்கள் யாரும் இது போன்ற இந்தோனீஷிய ஹோட்டல் தப்பை செய்ய மாட்டார்கள். இதற்கு முக்கிய காரணம், அவர்களுடன் 85 வயதுக்கும் மேலாக எளிமையாக, நேர்மையாக, ஆளுமையுடன் வாழ்ந்து மறைந்த அவர்களின் தாத்தா பாட்டியின் உதாரணம் – அதே வழியில் வந்த தாய் தந்தைகளின் உதாரணம். 

திருச்சியில் நான் படித்த ஈ.ஆர். உயர் நிலைப் பள்ளியின் ஆசிரியர்களை மறக்க முடியாது. அவர்களின் எளிமை, நேர்மை, ஞானம் மற்றும் அர்ப்பணிப்பு மாணவர்களை வசப்படுத்தின, வளப்படுத்தின. ஐம்பது வருடம் ஆனாலும், அந்த ஆசிரியர்கள் ஏற்படுத்திய தாக்கம் இன்றும் எனது வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிணைப்பாக இருக்கிறது. 

குடும்பத் தலைவர்களும் பள்ளி ஆசிரியர்களும் நம்மிடம் நல்லது-கெட்டது பற்றி பாதிப்பை ஏற்படுத்தும் 'ரோல் மாடல்'கள் அல்லது 'இன்ஃப்ளுவென்சர்'கள்.  அவர்களைத் தவிர வேறு யார் நமக்கு இன்ஃப்ளுவென்சர்களாக, வழிகாட்டிகளாக அமைகிறார்கள்? அதுவும் பொதுவெளி நடத்தையில், பொது வாழ்க்கையில்? அது அரசியல்வாதிகள்தான், அரசாங்கம் செய்து நம்மை ஆள்பவர்கள்தான். நல்லதோ கெட்டதோ, அவர்களின் பிரதான குணங்கள் – அதுவும்  பல வருடங்களாக தொடர்ந்து ஆட்சி செய்கிறவர்களின் நல்லதனமும் வில்லத்தனமும் – மக்களின் நோக்கில்,  நடத்தையில் சத்தமில்லாமல் தாக்கத்தை உண்டாக்கும். இது சம்பந்தமாக இந்திய அரசியல் தலைவர்களின் குண லட்சணத்தை பார்ப்பதற்கு முன்னர் இன்னொரு விஷயத்தை கவனிக்கலாம்.

இந்தோனீஷிய ஹோட்டல் சம்பவத்தை வீடியோவில் பார்த்த பல இந்தியர்களின் உள் மனது, 'பண்புள்ள மனிதர்கள் இதை செய்ய மாட்டார்கள், அதுவும் வெளிநாட்டுக்குப் போய் சொந்த நாட்டுக்கு கெட்ட பேர் வரக்கூடிய செயலை நினைக்க மாட்டார்கள்' என்று வருத்தமுடன் சொல்வது புரிகிறது. சரி, அப்படி அக்கறைப்படும் இந்தியர்களிடமே ஒரு கேள்வியை எழுப்புங்கள்: "வெளி இடங்களிலும், வெளி நாடுகளிலும் பண்பானவர்கள், நேர் நடத்தை உடையவர்கள் எந்த நாட்டுக்காரர்கள்?"  இதற்கான பதிலில் இந்தியா வராது. அறிந்தவர்கள், டென்மார்க்,  நியுஜிலாண்ட், சுவிட்சர்லாண்ட்,  ஜெர்மெனி, இங்கிலாண்ட் போன்ற நாடுகளை சுட்டிக் காட்டுவார்கள்.

மேலே சொன்ன மற்ற நாடுகளில் பொதுத்துறை முறைகேடுகளும் அரசியல்வாதிகளின் ஊழலும் மிகக் குறைவான அளவில்தான் உண்டு - அதாவது இந்த நாடுகளின் அரசியல் தலைவர்கள் அனேகம் பேர் நேர்மையான நடத்தை கொண்டவர்கள். ஆட்சிக்கு வந்த பின்பும் அதே நல்ல நடத்தை அவர்களிடம் தொடர்கிறது. பொதுப் பணத்தில் அவர்கள் கை வைப்பதில்லை, உறவினர்கள் மற்றும் வேண்டியவர்கள் பெயரில் தீடிரென்று கோடிகள் சேரும் எளிதான வழிகளை  ஏற்படுத்துதில்லை.

'டிரான்ஸ்பாரன்சி இண்டெர்நேஷனல்' என்ற சர்வதேச அமைப்பு, உலக நாடுகளின் பொதுத்துறைகளில் நிலவும் தூய்மையைக் கணித்து ஒவ்வொரு நாட்டுக்கும் ’ஊழலை உணர்த்தும் குறியீடு’ வழங்கி வருடா வருடம் ஒரு தரவரிசைப் பட்டியல் வெளியிடுகிறது. 2018-ஆம் வருடத்திற்கான அந்தப் பட்டியல் பதிமூன்று சர்வேகள் நடத்தி தயாரிக்கப் பட்டது. அந்தப் பட்டியலில் பொதுத்துறை ஊழல் குறைந்த நாடுகளாக டென்மார்க், நியுஜிலாண்ட், சுவிட்சர்லாண்ட், ஜெர்மெனி, இங்கிலாண்ட் ஆகிய நாடுகளை முதல் சில ராங்குகளில் சேர்த்திருக்கிறது. ஊழல் மிக அதிகமான நாடு என்று சோமாலியாவை குறிக்கிறது.  அதாவது, பொதுத்துறைகளுக்கான தூய்மை அளவுகோலில் டென்மார்க் நாட்டிற்கு முதல் ராங்க் கிடைக்கிறது. இந்தியாவுக்கு 78-வது ராங்க் – அது இத்தாலியை விட 25 ராங்குகள் மோசம் என்றால் நமது அரசாங்கம் மற்றும் பொதுத்துறை ஊழல் எவ்வளவு உலகப் பிரசித்தம் என்பது புரியும். கடைசிக்கு முந்தின ராங்க் சிரியாவுக்கு. சோமாலியாவிற்கு கடைசி 180-வது இடம்.  

'டிரான்ஸ்பாரன்சி இண்டெர்நேஷனல்' பட்டியல் மூலம் நாம் ஒன்று உணரலாம். அந்த அந்த நாட்டுத் தலைவர்கள் எந்த அளவு நேர்மையாக, தூய்மையாக இருக்கிறார்களோ, அதற்கு ஈடாக அதே பாணியில் அந்த நாட்டு மக்களும் அமைகிறார்கள். டென்மார்க் நாட்டு மக்களின் நன் நடத்தையை இந்தியர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இந்தியர்கள் அளவுக்கான நல்ல குணத்தை சோமாலிய காவாலிகளிடம் எதிர்பார்க்கக் கூடாது – அவர்கள் தோளில் துப்பாக்கியை தொங்கவிட்டு ஹோட்டல் அறைக் கதவையே கழட்டி, வெளியேறும் போது ரிசப்ஷன் பக்கம் டாட்டா காட்டியவாறு நகரலாம் – அது போன்ற வீரச் செயல்களை மானசீகமாக ஊக்கப் படுத்தும் அரசியல் தலைவர்களும் அவர்களுக்கு உண்டு.

எல்லா நாடுகளிலும் விதிவிலக்கான தலைவர்கள் இருக்கிறார்கள், மக்களும் உண்டு – அவர்கள் வெறும் விதி விலக்குதான். ஆனால் ’அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி’ என்பதுதான் பொதுவான விதி. ’மக்கள் எவ்வழி அரசன் அவ்வழி’ என்று ஆவதில்லை. ஆகையால் விதி விலக்கான தலைவர்களையும் மக்களையும் நாம் விட்டு விடலாம்.

பொதுப்பணத்தை கையாள்வதிலும், பொதுச் சொத்துக்களை காப்பதிலும், இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் நமது மக்களிடம் என்ன மதிப்பு பெறுகிறார்களோ அதைத்தான் டிரான்ஸ்பாரன்சி இண்டெர்நேஷனல் பட்டியல் போட்டு  அறிவிக்கிறது.  நாம் இத்தாலியை விடவும் படு மோசம் என்றால், நம்மை ஆளும் அரசியல்வாதிகளின், நமது நாட்டு அதிகாரிகளின் பேராசை தெளிவாகிறது.  

’பதவியில் அமர்ந்து, அதிகாரத்தை வைத்து யார் யாரோ எப்படி எல்லாமோ சாப்பிடும்போது, சாப்பிட்டு ஏப்பம் விடும்போது, நாம் ஒரு ஹோட்டலில் ரகசியமாக சில துளிகள் நக்கிச் சாப்பிடுவது தப்பில்லை’ என்று ஒரு சாதாரண இந்தியனுக்கு இயல்பாகத் தோன்றலாமா இல்லையா? விதி விலக்கான இந்தியனை விடுங்கள் - ஒரு சாதாரண இந்தியனுக்கு இப்படி மிக அனேகமாகத் தோன்றும். அவனது செயலை நாம் பாராட்ட வேண்டாம், நியாயப் படுத்த வேண்டாம். ’பாவம், அவன் ஒரு அடிப்படை வியாதியின் பிடியில் இருக்கிறான், அந்த வியாதி வீடியோக்களில் தெரியாது, அவனைப் பிடித்த வியாதியை நாட்டிலிருந்து ஒழித்தால் நாட்டிற்கும் நல்லது, அவனுக்கும் நல்லது. அதற்கான தலைவர்கள் நாட்டில் பெருகட்டும், அவர்கள் நிலைக்கட்டும்’ என்று நினைத்து நாம் பிரார்தனை செய்யலாம். நமது நாட்டின் அடிப்படை வியாதி தீர உங்களுக்கும் எனக்கும் வேறு சிறந்த வழி இருக்கிறதா என்ன?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019