Wednesday, 15 January 2025

பெரியாரைத் துணைக் கொள்! அரசியலில் புது அர்த்தங்கள்!

           

         -- ஆர். வி. ஆர்

           

திராவிட அரசியல் கட்சிகளால் – முக்கியமாக, திமுக-வால் – ‘பெரியார்‘ என்று புகழப் படுகிறவர், திராவிடர் கழகத்தின் நிறுவனர் ஈ.வெ. ராமசாமி.   எப்படியானவராக இருந்தார் ஈ.வெ.ரா?


பேச்சிலும் எழுத்திலும் தமிழ் மொழியை, அதைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை, இகழ்ந்தவர் ஈ.வெ.ரா. தமிழை ‘சனியன்‘ என்றும் வைதவர். தமிழர்களை ஆங்கிலத்தில் பேசச் சொன்னவர். கடவுளை நம்புகிறவர்களை, வணங்குபவர்களை, முட்டாள், அயோக்கியன், காட்டுமிராண்டி, என்று வசை பாடியவர் ஈ.வெ.ரா.

 

ஆண்-பெண் திருமண உறவை நகைத்தவர் ஈ.வெ.ரா. அவர் பெண்மையின் விசேஷத்தை, பெருமையை, உணராமல் பெண்களைச் சிறுமைப் படுத்திப் பேசியவர். அவர் பேசிய, எழுதிய, கீழான எண்ணங்கள் பலவற்றை அப்படியே பொதுவில் சொல்வதற்குப் பலரும் நாகரிகம் கருதித் தயங்குவார்கள்.   

 

இவை அனைத்தும் திமுக, அதிமுக மற்றும் பெரியாரை மதிக்கும் சில சிறு கட்சிகளுக்குத் தெரியும். இருந்தாலும் அக் கட்சிகள், குறிப்பாக திமுக, ஏன் ஈ.வெ.ரா-வை உயர்த்திப் பிடிக்கின்றன?

 

எல்லாம் தெரிந்தும் முன்பு அவரைப் போற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், இப்போது ஏன் திடீரென்று ஈ.வெ.ரா-வைக் கடுமையாக விமரிசனம் செய்து இகழ்கிறார்?

 

கருணாநிதியின் திமுக ஆட்சியில் அவர் ஈ.வெ.ரா-வைக் கொண்டாட ஆரம்பித்தார். ஈ.வெ.ரா-வை உயர்த்திப் பிடித்தால், அரசியலில் தான் இயங்குவது தனது லாபத்திற்காக அல்ல, ஒரு சமூக சீர்திருத்தவாதியின் கொள்கைகளைப் பின்பற்ற, நடைமுறைப்படுத்த, நான் இருக்கிறேன் என்று சிறிது காட்டிக் கொள்வதற்காக ஈ.வெ.ரா அவருக்குப் பயன்பட்டார். அந்தப் போற்றுதல் திமுக-வில் இன்றும் தொடர்கிறது. ஏதோ ‘காட்டிக் கொள்ள’ப் பயன்படும் வெளிவேஷம் இது. மலிவு அரசியலில் ‘ஷோ’ வேண்டுமே!

 

ஈ.வெ.ரா இகழ்ந்த திருக்குறளின் ஆசிரியர் திருவள்ளுவர். கடவுள் வாழ்த்து, கள்ளுண்ணாமை, ஒழுக்கமுடைமை, செங்கோன்மை போன்ற அதிகாரங்களில் குறள் எழுதியவர். அந்தத் திருவள்ளுவருக்குக் கன்னியாகுமரியில் கடல்பாறை மீது பெரிய சிலை வைத்துப் பெருமை கண்டது கருணாநிதியின் திமுக ஆட்சி. திருக்குறளை இகழ்ந்த ஈ.வெ.ரா-வுக்கும் தமிழகத்தில் ஊர் ஊராகச் சிலைகள் வைத்துப் புளகாங்கிதம் அடைந்தது அவருடைய திமுக ஆட்சி.

 

ஈ.வெ.ரா-வைப் போற்றி மகிழ்ந்த கருணாநிதி, திருக்குறளுக்கு உரையும் எழுதியவர்.

 

கருணாநிதியின் இந்தப் பெரிய முரண்பாடுகள், பெருவாரியான தமிழக மக்களைப் பாதிக்கவில்லை. ஒரு வளர்ந்த ஜனநாயகத்தில் இந்த முரண்கள் எளிதில் சாத்தியமில்லை. இந்தியாவில் இவை சர்வ சாதாரணம்.

 

சீமான் விஷயத்தில், அவர் இப்போது பெரியாரைக் கடுமையாக விமரிசனம் செய்வதும் அவரது சுய அரசியல் லாபத்திற்காக மட்டும்தான். நேரான காரணத்திற்காக அல்ல. இதைக் காட்டும் சில உண்மைகள் இவை.

 

இலங்கையில் அந்த நாட்டு அரசை எதிர்த்து, தனி நாடு கேட்டு, ஆயுதமேந்திப் போர் புரிந்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) தலைவர் பிரபாகரன். அந்த இயக்கம் அந்த நாட்டில் தீவிரவாதச் செயல்கள் புரிந்தது. இறுதியில் அந்த நாட்டு ராணுவ நடவடிக்கையால் அந்த இயக்கம் வீழ்ந்தது, பிரபாகரனும் மடிந்தார்.

 

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை இந்திய மண்ணில், அதுவும் தமிழகத்தில், குரூரமாகக் கொன்றதில் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு முக்கியப் பங்குண்டு. இப்படியான பிரபாகரனை முன்னிறுத்தி – அதுவும் தமிழ்நாட்டில் சிறந்த முன்னுதாரணமான அரசியல்  தலைவர்களை விட்டுவிட்டு – “பிரபாகரன்தான் என் தலைவன்” என்று முழக்கமிடுகிறார் சீமான். சீமானின் இந்தச் செயலும், இந்த அப்பட்டமான தேச விரோதப் போக்கும், அவரது ஆதரவாளர்களைப் பாதிக்கவில்லை.

 

ஈ.வெ.ரா-வைப் போற்றும் அறிவீனத்துக்கு நிகரானது சீமான் வெளிப்படுத்தும் பிரபாகர பக்தி. இதனால் வெளிநாடுகளில் வாழும் அப்பாவி இலங்கைத் தமிழர்களிடம் சீமானுக்கு என்ன பயனோ?

 

அரசியல் மேடைகளில் சீமான் பேசுவது வசீகரமானது. கைகளைப் பலவாறு வீசி, இரண்டு உள்ளங் கைகளையும் அடிக்கடி தட்டி, முகத்தைப் பல கோணங்களில் திருப்பி, தன் தெளிவான உரத்த குரலை ஏற்றி இறக்கி, மக்களின் உணர்ச்சிகளைக் கவர்ந்து தடையில்லாமல் ஆக்ரோஷமாகப் பேசுபவர் அவர். சாதாரண மக்களை, அதுவும் மிக இள வயதினரை, தனது உணர்ச்சி மிகுந்த பேச்சுக்களால் அவரைப் போல திசை திருப்பி ஈர்க்கும் ஒரு அரசியல் தலைவர் இப்போது தமிழகத்தில் இல்லை.

 

பெரிய கட்சி திமுக-வை எதிர்த்து அரசியல் செய்து வளர்ந்தால் தான் பெரிதாகலாம் என்று பொறுமையாகத் திட்டமிட்டு அரசியல் செய்கிறார் சீமான். அதன் ஒரு பகுதியாக, திமுக போற்றும் ஈ.வெ.ரா-வை இப்போது எதிர்க்கிறார். சீமானிடம் பெரிய எண்ணங்களோ விசாலமான பார்வையோ உயர்ந்த தேச சிந்தனையோ காணப்படவில்லை.  திமுக-வை மிஞ்சி அவர் திமுக பாணி அரசியல் செய்ய விரும்புகிறார். அதுதான் சீமான்.

 

பொதுவாக நமது நாட்டில் விவரம் அறியாத மக்கள், எளிதில் ஏமாறக் கூடிய சாதாரண மக்கள், எண்ணிக்கையில் அதிகம். குறைந்த வருமானத்தில், பொருளாதார ஏக்கத்தில், எப்போதும் வைக்கப் பட்டிருக்கும் அந்த மக்கள், ஏதோ அரிசி பருப்பு வங்க முடிகிறதா, அரசிடமிருந்து ஆயிரம் ரண்டாயிரம் பணம் கிடைக்குமா, அரசு இலவசங்கள் வேறென்ன கிடைக்கும், என்ற எதிர்பார்ப்பு நிலையில் வைக்கப்பட்டவர்கள். மற்றபடி யார் ஈ.வெ.ரா-வைப் போற்றினால் என்ன, தூற்றினால் என்ன  என்றுதான் அவர்களால் இருக்க முடியும்.


அரசியல் விஷயங்களில் முதிர்ச்சி குறைந்து வாழ்க்கையில் அல்லாடும் அப்பாவி மக்கள், குயுக்தி நிரம்பிய குரூர அரசியல் தலைவர்கள். இது இந்தியா!

 

ஈ.வெ.ரா-வைத் திமுக ஆதரித்தால் என்ன, சீமான் கட்சி எதிர்த்தால் என்ன? இரண்டு கட்சிகளும் கோணலான அர்த்தங்களில் ஔவையாரின் ஆத்திசூடி சொற்களை ஏற்கின்றன: பெரியாரைத் துணைக் கொள்!


* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 


Friday, 10 January 2025

கண் ஜாடை காட்டி அக்கிரமம் நிகழ்த்துபவரா மு. க. ஸ்டாலின்?  என்ன சொல்கிறார் சத்தியமூர்த்தி?

         

         -- ஆர். வி. ஆர்

 

கவர்னர் ஆர். என். ரவி தமிழக சட்டசபையில் இருந்து  சமீபத்தில் வெளிநடப்பு செய்தார். காரணம்: மத்திய அரசு உத்தரவை ஏற்று கவர்னரின் வருகையை ஒட்டி சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கப் படவில்லை, அவையில் அவர் கேட்டுக்கொண்ட பின்னும் அது நடக்கவில்லை. தேசிய கீதத்திற்கு அவமதிப்பு நேர்கிறது என்று கவர்னர் உடனே சபையை விட்டு வெளியேறினார். 


"முதல்வர் ஸ்டாலின் மட்டும் கண் ஜாடை காட்டி இருந்தால் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த கவர்னர் ரவியின் கோட்டு சூட்டைக் கிழித்து, டிராயருடன் அனுப்பி இருப்போம்" என்று ஒரு திமுக தலைவர் பின்னர் ராமநாதபுரத்தில் பேசினார். அவர் பெயர் சத்தியமூர்த்தி. முன்பு இவர் அதிமுக-வில் இருந்து அப்போது மாநில அமைச்சராகப் பதவி வகித்தவர்.  

 

முதல்வர் கண் ஜாடையின் அர்த்தத்தை, அற்புத சக்தியை, இப்படி ஒரு தலைவர் விளக்குவதைக் கேட்கப் புல்லரிக்கிறது! இருந்தாலும், இதில் பலருக்கும் பிடிபடாத சில விஷயங்கள் உண்டு.  முதல்வரின் கண் ஜாடை மகிமையை விவரித்த மனிதர்தான் இவை பற்றித் தெளிவுபடுத்த வேண்டும்.  அவருக்கான கேள்விகள் இவை.

 

கவர்னர் ரவி சட்டசபையில் பேசும்போதோ, அல்லது அங்கிருந்து வெளிநடப்பு செய்ய முயலும்போதோ, அவையிலுள்ள திமுக எம்.எல்.ஏ-க்கள் கவர்னரைப் பார்க்கக் கூடாது, அவர் பேச்சையும் கவனிக்கக் கூடாது, ஆனால் முதல்வரின் கண் ஜாடையை அறிவதற்காக முதல்வரின் கண்களைப் பார்த்தபடி இருக்க வேண்டும் என்று முன்பே அறிவுறுத்தப் பட்டார்களா?

 

கவர்னர் ரவி தொடர்பாக, முதல்வர் எத்தனை வகையான கண் ஜாடைகளை வெளிப்படுத்தக் கூடியவர், அவை ஒவ்வொன்றும் திமுக-வினருக்கு நன்றாகப் புரியுமா?

 

‘கவர்னரை ஒன்றும் செய்யவேண்டாம், அவர் பாட்டுக்கு வெளிநடப்பு செய்யட்டும்’ என்று முதல்வர் கருணை கூர்ந்து தெரிவிக்கும் கண் ஜாடை ஒன்று உண்டா? உதாரணமாக: முதல்வர் வெறுமனே கண்களை மூடியபடி அமர்ந்திருப்பது, அல்லது மோட்டு வளையைப் பார்த்தபடி இருப்பது, என்பதாக?

 

கவர்னர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்யும்போது அவருடைய கோட்டு சூட்டைக் கிழிக்காமல், அவர் கையை மட்டும் இழுத்து விடுவது, காலை மட்டும் இடறி விடுவது, என்பதற்கும் முதல்வர் சில கண் ஜடைகளை வைத்திருக்கிறாரா?

 

கிழிக்க வேண்டும் என்றால், கவர்னரின் கோட்டை மட்டும் கிழித்துவிட்டு, அல்லது பேண்டை மட்டும் கிழித்து விட்டு, அவருடைய மற்ற உடைகளுக்கு சேதாரம் ஆகாமல் அவரை அனுப்பிவிட முதல்வரிடம் விசேஷ கண் ஜாடை உண்டா?

 

முதல்வரின் கண் ஜாடை உத்தரவுகளைத் தவறாகப் புரிந்துகொண்டு ஒன்றுக்குப் பதில் மற்றதைச் செய்துவிடக் கூடாது, ஒன்றுக்குப் பதில் மற்றதைக் கிழிக்காமல் இருக்கவேண்டும், என்பதற்காக சம்பத்தப்பட திமுக-வினருக்கு 'முதல்வரின் கண் ஜாடைப் பயிற்சி வகுப்புகள்' நடந்திருக்குமா?

  

சத்தியமூர்த்தி பேசியதைப் போல், 'லோக் சபையில் மோடி கண் ஜாடை காட்டினால் ராகுல் காந்தியின் – அல்லது ஒரு திமுக உறுப்பினரின் – ஆடைகளைக் கிழிப்போம்' என்று எந்த பாஜக தலைவரும் பேசியதில்லை, அப்படி அவருக்குப் பேசவும் தோன்றாது, அதற்கான தைரியமும் வராது.

 

ஒரு அரசியல் கட்சியின் பிரதான தலைவருடைய பண்புகள் எத்தகையவை, நாட்டைப் பற்றிய அவருடைய சிந்தனை என்ன, அரசியலில் அவர் நீடிப்பதின் நோக்கம் எது, அந்த நோக்கத்திற்கான அவரது வழிமுறைகள் யாவை – இவற்றைப் பொறுத்துதான் அந்தக் கட்சிக்கு இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் வந்து சேருவார்கள். அதற்கு ஏற்பதான் அந்தக் கட்சிக்கு லோக்கல் பிரமுகர்களும் அமைவார்கள். 

 

நமது நாட்டின் அப்பாவி மக்களுக்கு – ஏழ்மையில் அல்லது குறைவான வருமானத்தில் வைக்கப் பட்டிருக்கும் பெருவாரியான மக்களுக்கு – பொது வாழ்வில் அப்பட்டமாக நிகழும் அவலங்களே சரியாக, முழுவதுமாக, பிடிபடுவதில்லை. ஆனால் சட்டசபையில் ஒரு முதல்வரின் கண் ஜாடையைக் கவனித்தே அவர் கட்சி உறுப்பினர்கள் அந்த சபையில் ஒரு அடாவடியை, அக்கிரமத்தை, நிறைவேற்றுவார்கள் என்று திமுக-வின் இரண்டாம் கட்டத் தலைவர் சத்தியமூர்த்தி பேசுகிறார். திமுக தலைமை அவர் பேசியதை நிராகரிக்கவில்லை, அவரைக் கண்டிக்கவில்லை. இது இன்னும் கவலைக்குரியது.


நாம் இப்போதைக்கு என்ன செய்யலாம்?

 

இறைவனின் கண் பார்வை தமிழகத்தின் மீது பரவட்டும், அரசியல் உலகில் தீய கண் ஜாடைகள், கெட்ட நோக்கங்கள், செயலிழக்கட்டும் என்று தானே நாம் பிரார்த்திக்க முடியும்

 

* * * * *

 Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

Monday, 30 December 2024

அண்ணாமலையின் சாட்டையடி மந்திரம்

  

-- ஆர். வி. ஆர்

 

தமிழகத்தில் நிகழ்ந்த ஒரு கேடான சம்பவத்தில் ஒரு எதிர்க் கட்சித் தலைவராகத் தன் வேதனையை, தன் இயலாமையை, வெளிப்படுத்த பாஜக-வின் அண்ணாமலை ஒரு காரியம் செய்தார். அதாவது, மேல்சட்டை அணியாத உடம்பும் நெற்றியில் திருநீறுமாய்த் தனது வீட்டின் முன் நின்று, பலர் முன்னிலையில் தனது மேல் உடம்பை எட்டு முறை தானே சாட்டையால் சுழட்டி அடித்துக் கொண்டார்.

 

காரணம் இது. சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு மாணவி தன் ஆண் நண்பருடன் தனியாக இருந்த சமயம், ஒரு 37-வயது அயோக்கியன் வந்து அந்த ஆண் நண்பரை விரட்டி அனுப்பி அந்தப் பெண்ணுக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்தான். பின்னர் போலீஸில் அந்தப் பெண் செய்த புகாரைத் தொடர்ந்து, போலீஸ் எப். ஐ. ஆர் எழுதியது.

 

எப். ஐ. ஆரில் அந்தப் பெண்ணின் போன் நம்பர், அப்பா பெயர், ஊர் எல்லாம் குறிக்கப்பட்டு, தவறாக நடந்தது அந்தப் பெண்தான் என்பது போல் விவரங்கள் குயுக்தியாக  எழுதப் பட்டு – அந்த வில்லத்தன எப். ஐ. ஆர் வெளி உலகுக்குத் தெரியத் திட்டமிட்ட மாதிரி  – சட்டத்திற்குப் புறம்பாக அந்த எப். ஐ. ஆர் சமூக வலைத்தளங்களில் கசிந்தது.

 

ஒரு அயோக்கியனின் குற்றத்தைச் சுட்டிக் காட்டுவதை விடவும், பாதிக்கப்பட்ட பெண்ணை இன்னும் மானம் கெடவைத்து அதை ஊர் அறியச் செய்ய முனைந்தது அந்த எப். ஐ. ஆர் – இம்மாதிரி பாதிக்கப்படும் எந்தப் பெண்ணும் இனி அடங்கி ஒதுங்கிப் போகவேண்டும் என்று எச்சரிக்கும் விதமாக. 

 

பின்னர் பத்திரிகையாளர்களைச்  சந்தித்த அண்ணாமலை, ஒரு அயோக்கியனும் போலீஸ் துறையும் அவரவர் வழியில் அந்தப் பெண்ணுக்கு இழைத்த அக்கிரமத்தையும் அநீதியையும் கடுமையாகச் சாடினார். தான்  இதில் ஒன்றுமே செய்ய இயலாத தமிழக அரசியல் சூழலில் தனது மன வேதனையை ஊருக்கு உணர்த்த, மறுநாள் தன்னைத் தானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார். அதோடு, திமுக ஆட்சியிலிருந்து இறக்கப்படும் வரை இனி காலணி அணிய மாட்டேன் என்றும் அறிவித்தார்.

 

சொன்னபடி அண்ணாமலை சாட்டையடி நடத்திக் கொண்டார், இரண்டு முறை கூடுதலாக.

 

அண்ணாமலையின் சாட்டையடி மந்திரம் பல மக்களின் தலையைப் பிடித்து பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலத்தைப் பார்க்க வைக்கிறது. தமிழக அரசின் மேல், அதை நடத்தும் திமுக-வின் மேல், அர்த்தமுள்ள கோபம் கொள்ள வைக்கிறது.

 

அண்ணாமலையின் நீண்ட வார்த்தைக் கண்டனங்களை விட, அவரது ஒரு நிமிடச் சாட்டையடி வைபவம் மூன்று பலன்களைத் தரும். ஒன்று: அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த அவலத்தை ஒரு செய்தியாக மட்டும் கவனித்துப் போகும் பொதுமக்கள் பலரையும் உலுக்கி, ‘ஏய் திமுக அரசே! உனது நிர்வாகத்தில் ஏன் இதுபோன்ற பாதகங்கள் அடிக்கடி நிகழ்கின்றன?’ என்று உள்ளூறச் சீற வைக்கும். இரண்டு: அதிகமான பாஜக-வினரை அண்ணாமலையின் அர்ப்பணிப்பையும் மதிப்பையும் உணரச் செய்து அவர் மீதான மானசீக மரியாதையைக் கூட்டும். மூன்று: முதல் இரண்டும் சேர்ந்து பாஜக-வின் அரசியல் சக்தியைத் தமிழகத்தில் இன்னும் வலுப்படுத்தும், அக்கட்சிக்கான  மக்கள் ஆதரவை அதிகப் படுத்தும். 

 

தனது சாட்டையடி மந்திரத்தால் அண்ணாமலை ஏற்படுத்திய முதல் பலனை, அதாவது மக்கள் பலரையும் தட்டி எழுப்பியதை, பா.ஜ.க–விலேயே அனைவரும் உடனே உணர்வார்கள். அதன் விளைவுதான் இரண்டாவது பலனும், அதாவது கட்சிக்குள் அண்ணாமலை மீதான  அபிமானம் மற்றும் மரியாதை உயர்வது.  

 

தன் பங்கிற்கு இப்போது சென்னை உயர்நீதி மன்றமும் பாதிக்கப்பட்ட பெண் விஷயத்தில் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரித்து, மூன்று பெண் ஐ. பி. எஸ் அதிகாரிகள் கொண்ட ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து அதனிடம் குற்ற விசாரணையை ஒப்படைத்திருக்கிறது. தவிர, எப். ஐ. ஆர் கசிந்ததால் பாதிப்படைந்த பெண்ணுக்கு இடைக்கால இழப்பீடாகத் தமிழக அரசு இருபத்து ஐந்து லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டிருக்கிறது.

 

சரி, அண்ணாமலையின் சாட்டையடி மந்திரத்திற்கு ஏன் அந்த மூன்று பலன்கள் கிடைக்கின்றன – குறிப்பாக, மக்கள் பலரின் மனதை உலுக்கி எழுப்பிய பலன்?

 

பாரத மக்கள், அதுவும் தமிழக மக்கள், சிந்தனையை விட உணர்ச்சிகளால் அதிகம் வழி நடத்தப் படுகிறவர்கள்.  இதைச்  சில அரசியல் தலைவர்கள் முன்பே உணர்ந்தார்கள். அவர்கள் தமது கட்சிக் காரர்களை “உடன் பிறப்பே”, “ரத்தத்தின் ரத்தமே” என்று அழைத்த உடனேயே கட்சித் தொண்டர்கள் பலரும் அந்த உணர்ச்சிமிக்க வார்த்தைகளில் கட்டுண்டு அப்படி அழைத்த தலைவரிடம் மாறாத அபிமானம் வைத்தார்கள்.  

 

உணர்ச்சி மிகுந்த நம் மக்கள் தமக்குத் தெரிந்த ஒருவர், அதுவும் தாம் பாசம் வைத்திருக்கும் அல்லது மதிக்கும் ஒருவர், தன்னை வருத்திக் கொண்டால், தாங்களும் வருந்துவர், அந்த மற்றவருக்காகக் கவலைப் படுவர். பல வீடுகளில் “நான் சாப்பிடமாட்டேன் போ” என்று ஒருவர் சொன்னால், மற்றவர் முன்னவருக்காகச் சற்று இறங்கி வரலாம். சுதந்திரப் போராட்ட காலத்தில் மஹாத்மா காந்தியின் உண்ணா விரதங்கள் இவ்வாறு மக்களை அவர் கண்ணோட்டத்தின் பால், அவர் போராட்டத்தின் பால், ஈர்த்து அவருக்கு வலு சேர்த்தன.   

 

ஆனால் ஒன்று. எல்லாத் தலைவர்களும் தம்மை வருத்திக் கொள்வதால், மக்களும் கவலை கொண்டு அந்தத் தலைவர்கள் மீது இரக்கம் காட்ட மாட்டார்கள், அந்தத் தலைவர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள்.  அந்தத் தாக்கத்தை மக்களிடம் ஒரு தலைவன் ஏற்படுத்த விரும்பினால், முதலில் அதற்கான தார்மீக சக்தி அந்தத் தலைவனிடம் இருக்க வேண்டும். அந்தத் தலைவனும் ஒரு முக்கியமான, தன்னலமற்ற, பொதுநலன் கொண்ட ஒரு பிரச்சனைக்காக மட்டும் தன்னை வருத்தி மக்களை ஈர்க்க முனைவான். அதனால்தான் மக்களும் ஈர்க்கப் படுவார்கள்.

 

அண்ணாமலை அப்படியான தலைவர். மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு என்பதாக அவர் கையில் எடுத்த பொதுப் பிரச்சனையும் முக்கியமானது. ஆகையால் அவரது சாட்டையடி மந்திரம் ஒரு ஆரம்ப நிலை வெற்றியை உடனே  கொடுத்திருக்கிறது.

 

நினைத்துப் பாருங்கள்.  திமுக எதிர்க் கட்சியாக இருந்து, எந்தக் காரணத்திற்காகவும் அப்போதைய அரசை எதிர்த்துத் திமுக-வின் இளவரசர் உதயநிதி ஸ்டாலின் தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டால், அவர்மீது பரிதாபம் கொண்டு யார் வருந்துவார்கள்? அப்போது அவர் யாரைத் தன்பக்கம் புதிதாக அல்லது வலுவாக ஈர்ப்பார்? அவருடைய கூத்தைப் பார்த்து அவரது கட்சிக்காரர்களே சிரிப்பார்களே!

 

அண்ணாமலையின் சாட்டையடி மந்திரம் இனி எக்காலமும் வேலை செய்யாமல் போவதற்கு, ஆளும் திமுக ஏதாவது செய்ய வழி உண்டா? உண்டு. என்னவென்றால்:

 

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக நிலவச் செய்ய வேண்டும், பொதுவெளியில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும், குவாரிகளில் கல் மணல் திருடு போகக் கூடாது, போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டும்,  ஹோட்டல்களில் பிரியாணி சாப்பிட்ட பலவான்களுக்கு, பில் பணத்தைக் கேட்டால் முஷ்டியைத் தூக்கும் தைரியம் வரக் கூடாது, செந்தில் பாலாஜிகளை அரசு போற்றக் கூடாது, ..........  சரி, போதும். நடக்கவே முடியாத விஷயங்கள் பற்றி எதற்கு வெட்டிக் கற்பனை?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Friday, 27 December 2024

லுங்கியில் டி. எம் . கிருஷ்ணா மியூசிக் அகாடமி கச்சேரி!

 

-- ஆர். வி. ஆர்

 

லுங்கி மற்றும் பெரிய பூப்போட்ட மஞ்சள் அரைக்கை சட்டையில், டி. எம். கிருஷ்ணா டிசம்பர் 25-ம் தேதி பாட்டுக் கச்சேரி செய்திருக்கிறார். அதுவும் மியூசிக் அகாடமி மேடையில். கச்சேரி முடிந்தபின் பார்வையாளர்கள் அவருக்கு நீண்ட கரகோஷம் செய்தனர்.

 

கர்நாடக சங்கீதத்தில் டி. எம். கிருஷ்ணா மிகச் சிறந்தவராகக் கருதப் படுகிறவர். அப்படியானவர் பொதுவெளியில் தனது தோற்றம், உடை, பேச்சு மற்றும் செயல்பாட்டில் கவனமாக இருப்பது அவசியம். “ஆள் அரைக்கிறுக்கு மாதிரித் தோன்றுகிறாரே, பேசுகிறாரே!” என்று பொதுமக்கள் நினைக்கும்படி அவர் நடந்துகொள்ளக் கூடாது.

 

ஒரு கர்நாடக சங்கீத வித்வான் கச்சேரியின் போது நாகரிகமான உடை அணிந்திருப்பது அடிப்படைப் பண்பு. டி. எம். கிருஷ்ணா இதை உணர்கிறாரா? இல்லை.

 

டி. எம். கிருஷ்ணாவோ அவர்  ஆதரவாளைரோ கேட்கலாம். “லுங்கி அநாகரிக உடையா, என்ன? எளியவர்கள்  லுங்கியுடன் தெருவில் நடமாடுகிறார்கள். ஒரு காலத்தில் மஹாத்மா காந்தி இடுப்புக்கு மேல் எதுவும் அணியாமல் வெறும் உடம்போடு பவனி வந்தாரே? ஒருவரின் உடைக்குத் தான் மதிப்பா, அவர்  காரியத்துக்கு இல்லையா?”    

 

மஹாத்மா காந்தி பாரத மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடினார். அவர்களில் அநேக ஆண்கள் இடுப்புக்கு மேல் ஒன்றும் அணியாமல் வெறும் உடம்புடன் இருப்பதைக் கவனித்த மஹாத்மா, அந்த மனிதர்களுடன் ஒன்றுபட்டு அவர்களை மேலும் சுதந்திரப் போராட்டத்தில் ஈர்க்க நினைத்தார். ஆகையால் அவர்களைப் போல் தானும் தன் இடுப்புக்கு மேல் ஆடை அணிவதைக் கைவிட்டார்.  

 

டி. எம். கிருஷ்ணா மஹாத்மா காந்தியை உதாரணம் கொண்டிருந்தால், தனது கச்சேரி அரங்குகளுக்கு வரும் ரசிகர்களைப் போல அவரும் மேடையில் லுங்கியை விட்டொழிக்க  வேண்டும்.

 

எளிய மக்களைப் பொறுத்தவரை, ஆண்கள் லுங்கியோடு தெருவில் வருவது, போவது, சுமை தூக்குவது,  ரிக்ஷா இழுப்பது, அல்லது பிச்சை எடுப்பது, அவர்களுக்குப் பொருந்தும். ஆடையில் அழுக்குப் படிந்தால் லுங்கி சட்டென்று காண்பிக்காது, வெள்ளை வேட்டி காண்பிக்கும், என்பதும் ஒரு காரணம்.  அந்த மக்கள் டி. எம் . கிருஷ்ணாவுக்கு உடை விஷயத்தில், அதுவும் கச்சேரி மேடைகளில், உதாரணம் அல்ல. இது புரியாத ஒருவர் அரைக்கிறுக்கு.

 

வசதி படைத்த பல ஆண்கள் வீட்டில் லுங்கி அல்லது அரை டிராயர் அணிகிறார்கள். அவர்கள் வீட்டில் அணியும் லுங்கி அநாகரிகமான உடையா? இல்லை.  வீட்டில் இருக்கும்போது லுங்கி சற்றுத் தளர்வாக இருக்க ஏதுவானது என்பதால் வீட்டில் லுங்கி உபயோகிப்பார்கள். வளர்ந்த  பெண்கள் ஒரு   சவுகரியத்துக்காக வீட்டில் நைட்டி உடையோடு இயங்கலாம்.  

 

லுங்கியும் நைட்டியும் அலுவலகங்களுக்குப்    பொருந்தாது. திருமண நிகழ்ச்சிகளுக்கு ஏற்றதல்ல.  கர்நாடக சங்கீதக் கச்சேரிகளுக்கும் ரசிகர்கள் லுங்கியோ நைட்டியோ அணிந்து போவதில்லை – டி. எம். கிருஷ்ணா கச்சேரி உள்பட.

 

 டி. எம். கிருஷ்ணாவின் மியூசிக் அகாடமி கச்சேரியின் போது அரங்கம் நிரம்பியது, அரங்கத்தின் வாராண்டாவிலும் ரசிகர்கள் திரண்டனர், என்று ஹிந்து பத்திரிகையின் என். ராம் X தளத்தில் குறிப்பிட்டு, அந்த நிகழ்ச்சிக்குக் கூடிய ரசிகர்கள் கூட்டத்தை நான்கு போட்டோக்களில் வெளிப்படுத்தினார்.

 

என்.  ராம் வெளியிட்ட போட்டோக்களில் கச்சேரி மேடையும் தெரிந்தது. டி. எம். கிருஷ்ணாவைத்  தவிர, மேடையிலோ அரங்கத்திலோ வராண்டாவிலோ எந்த ஆணும் லுங்கியில் தெரியவில்லை – சந்தேகமாக, ஒருவரைத் தவிர.  ஆனாலும் அரங்கம் நிறைந்தது உண்மை. டி. எம். கிருஷ்ணாவுக்குக் கச்சேரி முடிவில் நீண்ட பலத்த கரகோஷம் கிடைத்ததும் உண்மை. இதிலிருந்து என்ன தெரிகிறது?

 

X தளத்தில் போட்டோக்கள் போட்டு, பெயர் தெரியாத ஒரு ரசிகரை மேற்கோள் காட்டி என். ராம் ஆங்கிலத்தில எழுதியது போல் “டி. எம். கிருஷ்ணா என்ற இசைக் கலைஞருக்கும் மனிதருக்கும் பொதுமக்களின் ஏற்பு” கிடைத்துவிட்டது (“mass vindication of the musician and the man”) என்று அன்றைய அகாடமி கூட்டமும் கைதட்டல்களும் காண்பிக்குமா? இல்லை, அந்தக் காட்சிகள் சொல்லும் சேதி வேறு.

 

டி. எம். கிருஷ்ணா இசையில் சிறந்திருப்பதால், அதை ரசிக்க ரசிகர்கள் கூடுகிறார்கள். மியூசிக் அகாடமியில் அன்றைக்கு அனைவருக்கும் அனுமதி இலவசம் என்று இருந்ததால், அதிகமான கூட்டம் வந்ததும்  இயல்பு. அனைவரும் ரசித்துக் கை தட்டினார்கள்.

 

ரசிகர்கள் கை தட்டியது டி. எம். கிருஷ்ணாவின் அசட்டு லுங்கி உடைக்கு அல்ல. கச்சேரி மேடையில் அது அசட்டு  உடை என்பது ரசிகர்களுக்குத் தெரியும். அன்று கிருஷ்ணாவின் பக்கத்தில் அமர்ந்து பக்க வாத்தியம் இசைத்த கலைஞர்களுக்கும் அது தெரியும். இருந்தாலும் அவரது பாட்டுத் திறமையை அவர்கள் அனைவரும் மதித்து, அவருடைய அசட்டு உடையைப் பொருட்படுத்தவில்லை. பக்கவாத்தியக் காரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இருந்த பண்பு, லுங்கி கிருஷ்ணாவுக்கு அவர் பக்கம் இல்லை. இதுதான் விஷயம்.

 

ஒரு சிறந்த கலைஞர் பொது வெளியில் தோன்றுகிற விதமும் பேசுகிற விஷயமும் பொது மக்களுக்கு – குறிப்பாக தமிழக மக்களுக்கு – அரைக்கிறுக்குத் தனமாகத் தோன்றலாம். ஆனாலும் அவரது கலைச் சிறப்பை அவர்கள் அங்கீகரிக்கிறார்கள், அதற்குக் கரகோஷம் அளிக்கிறார்கள்.

 

ஒரு கலைஞனின் கலைச் சிறப்பு வேறு, அவனது அரைக்கிறுக்குத் தனம் வேறு என்பதைத் தமிழக மக்கள் பிரித்துப் புரிந்து கொள்கிறார்கள். இதில் டி. எம். கிருஷ்ணாவுக்கு சந்தேகம் என்றால் அவர் ஒன்றை நினைத்துப் பார்க்கலாம்.

 

கமல் ஹாசனின் அபாரமான நடிப்புத் திறமையைப் போற்றினாலும் அவர் மக்களுக்காக என்று பேசும் அரசியல் பேச்சை ரசிப்பாரில்லை. இது டி. எம். கிருஷ்ணாவுக்குப் புரிந்தால், அவர் தன் நிலை உணரலாம். ஆனால் கமல் ஹாசன் ரீதியில் என்னமோ கற்பனை செய்து, எதையோ நினைத்து “சுதந்திரம் வேண்டும், எதையும் பேச, எதையும் எழுத, எதையும் பாட, எதையும் படிக்க, எதையும் கேட்க .......” என்ற பாடல் வரிகளை  அன்று மியூசிக் அகாடமியில் பாடிய டி. எம். கிருஷ்ணாவுக்கு யாரைப் பார்த்து என்ன புரியும்?

 

எல்லோருக்கும் அளிக்கும் சுதந்திரத்தை அரசியல் சட்டம் டி. எம். கிருஷ்ணாவுக்கும் தருகிறது, அதை அவர்  அனுபவித்தும்  வருகிறார். ஆனால் ஏதோ அவருக்கு இல்லாத சுதந்திரத்தை ஏங்கிக் கேட்பது போல அவர் அன்று பாடிய பாடலில் கூட, “சுதந்திரம் வேண்டும், லுங்கி அணிந்து கச்சேரி செய்ய” என்ற வார்த்தைகள் இல்லை. இதுதானே அவரைப் பற்றி நமக்கு ஆறுதல்?  

 

* * * * *

 Author: R. Veera Raghavan, Advocate, Chennai


Sunday, 22 December 2024

அம்பேத்கர் மேல் பாசமா? அரசியலில் வேஷமா?

 

-- ஆர். வி. ஆர்

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்ய சபாவில் எதிர்க் கட்சியினரைப் பரிகசித்துப் பேசியது இது:

 

“அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்  என்று சொல்லிக்கொண்டே இருப்பது ஒரு பேஷனாகி விட்டது. இத்தனை முறை அவர்கள் இறைவன் நாமாவை உச்சரித்திருந்தால் ஏழு பிறவியிலும் அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்!”

 

இந்தப் பேச்சால் அமித் ஷா அம்பேத்கரை அவமதித்து விட்டார் என்று சொல்லி, காங்கிரஸும் பிற எதிர்க் கட்சிகளும் அவரது ராஜினாமாவைக் கோருகின்றன, போராட்டங்களை அறிவிக்கின்றன. 


எதிர்க் கட்சிகள் அம்பேத்கர் மீது  காண்பிக்கும் பாச மழை, பக்திப் பிரவாகம் உண்மையானதா? இல்லை, அது போலியானது. வேறு விஷயம் இருக்கிறதா? இருக்கிறது.

 

சட்டம் குறிப்பிடும் ‘பட்டியல்  ஜாதிகள்’ ஒன்றில் பிறந்தவர் அம்பேத்கர். பட்டியல் ஜாதிகளின் எண்ணிக்கை தற்போது  ஆயிரத்துக்கும் மேல்.  

 

இன்று எல்லா பட்டியல் ஜாதிகளின் மக்களையும் நாம் தலித்துகள் என்று சொல்கிறோம். முன் காலத்தில் இந்த ஜாதி மக்களைப் பொதுவாகத் தீண்டத் தகாதவர்களாக சமூகம் வைத்திருந்தது. அந்த மக்களின், அதாவது தலித்துகளின், பிரதிநிதியாகக் கருதப்படுகிறவர் அம்பேத்கர்.

 

சரி, காங்கிரஸ் கட்சிக்கும் அம்பேத்கருக்கும் உறவு எப்படி இருந்தது?

 

அம்பேத்கர் 65 வயது வரை வாழ்ந்தார். 1956-ம் ஆண்டு மறைந்தார். அரசியலில் ஓரளவு பங்கு பெற்றாலும், அவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை. தனிக் கட்சிதான் தொடங்கினார்.  

 

காங்கிரஸ் கட்சி மற்றும் அம்பேத்கர் இடையே பரஸ்பரப் போற்றுதல் இருந்ததில்லை.  1952-ம் வருடம் நடந்த முதல் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அம்பேத்கரை, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தோற்கடித்தார். இரண்டு வருடங்கள்  கழித்து வந்த ஒரு லோக் சபா இடைத் தேர்தலில் அம்பேத்கர் போட்டியிட்டார். அப்போதும் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் மூலம் அம்பேத்கரைத் தோற்கச் செய்தது.   

 

காங்கிரஸின் காந்தி-நேரு காலத்து மக்கள் செல்வாக்கு இப்போது காலியாகிவிட்டது. மக்களை வசீகரிக்கும் தலைமை இல்லாமல், மஹா ஊழல்களுக்கும் வழிவகுத்து, கட்சி இன்று பரிதாப நிலையில் கிடக்கிறது. ஆனால் அம்பேத்கர் விஷயம் வேறு. அம்பேத்கர் வாழும் காலத்தில் இந்திய மக்களிடையே அவருக்கு இருந்த அரசியல் செல்வாக்கு மற்றும் ஓட்டு-ஈர்க்கும் சக்தி,   இக்காலத்தில் அதிகம் பரவியுள்ளது.  என்ன காரணம்?

 

1950-ம் வருடம் இந்தியாவில் பட்டியில் ஜாதிகளின் எண்ணிக்கை சுமார் 600. இன்று அதிகமான ஜாதிகள் அந்தப் பட்டியலில் அவ்வப்போது சேர்க்கப்பட்டு, நாட்டில் தலித் ஜாதிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி இருக்கிறது. இந்தியாவில் அந்த மக்கள் சுமார் 17 சதவிகிதம் என்கிறது, சென்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.

   

ஆயிரத்துக்கும் அதிகமான வெவ்வேறு ஜாதிகளுக்கு, சமூகத்தில் ‘பட்டியல் ஜாதிகள்’ அல்லது தலித்துகள் என்ற பொதுவான ஒற்றைப் பெயர் வந்துவிட்டது. இதனால், அந்த ஒரு பெயரை வைத்து ஆயிரம் ஜாதிகளின் மக்கள் அனைவரையும் ஒரே கொத்தாகத் தங்கள் பால் இழுக்கத் துடிக்கின்றன காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க் கட்சிகளும். ஒரே இழுப்பில் 17 சதவிகித ஓட்டுக்களில் பங்கு பெறலாம் என்றால் அந்தக் கட்சிகள் விடுமா?

 

இன்று அம்பேத்கர் பெயருக்கு நாடு தழுவிய ஓட்டு-ஈர்க்கும் சக்தி உள்ளதற்கான பிரதான காரணம், காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க் கட்சிகளும் சென்ற பல வருடங்களாக நடத்தி வரும் மலிவு அரசியல் மற்றும் அவலமான ஆட்சி நிர்வாகம்.

 

அம்பேத்கர் உள்நாட்டிலும் அமெரிக்கா இங்கிலாந்து நாடுகளிலும் பெற்ற கல்வி, அவருடைய ஏற்றத்துக்குப் பெரிதும் உதவியது  – அவரது இயற்கையான புத்தி கூர்மையுடன் சேர்ந்து. அவர் இங்கிலாந்தில் சட்டப் படிப்பும் படித்தவர். மும்பை சட்டக் கல்லூரியின் முதல்வராக இருந்தவர். ஆங்கிலேய ஆட்சியின் வைஸ்ராய் எக்ஸிகியுடிவ் கவுன்சிலில் உறுப்பினராக இருந்தவர்.

 

அம்பேத்கரைத் தொடர்பவர்களுக்கு அவர் விடுத்த அறைகூவல் இது: ‘கல்வி பெறு, போராடு, ஒன்று சேர்’ (“Educate, Agitate, Organise”). கல்வியின் முக்கியத்துவத்தைத் தம் மக்களுக்குப் பிரதானமாக எடுத்துச் சொன்னவர் அவர். ஆனால் சுதந்திரம் அடைந்து 77 வருடங்கள் ஆகியும், தலித் மக்களுக்கு நல்ல தரமான அடிப்படைக் கல்வி மற்றும் உயர் கல்வி கிடைக்க நமது மாநில அரசுகள் வழி செய்திருக்கின்றனவா, பெரிய பலன் கிடைத்திருக்கிறதா? இல்லை.

 

அம்பேத்கர் மீது மதிப்பும் தலித்துகள் மீது பரிவும் காங்கிரஸ் மற்றும் பல எதிர்க் கட்சிகளுக்கு உண்டானால், சிறு பிராயத்திலிருந்து தலித் மாணவ மாணவிகளுக்குத் தரமான கல்வி கிடைக்க வழி செய்திருக்க வேண்டும். பொதுவாக எல்லா தரப்பு மக்களுக்குமே அது கிடைக்க அவர்கள் இன்றுவரை பெரிதாக வகை செய்யவில்லை.

 

பெருவாரியான மக்களை சற்று சுமாரான படிப்பில், குறைந்த வருமானத்தில், வைத்திருந்தால் என்ன ஆகும்? அரசியல்வாதிகள் செய்யும் மோசடிகளையும் முறைகேடுகளையும் பற்றி அந்த மக்கள் கவலைப்பட முடியாமல் தமது ரேஷன் அரசி, தமது அன்றாட பணப் பிரச்சனை பற்றிய கவலையில் மூழ்கி இருப்பார்கள். இந்த நிலையைத்தான் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் விரும்புகிறார்கள். இதையும் மீறியே எதிர்க் கட்சிகளின் ஆட்சியில் காலம் தானாகத் தரும் முன்னேற்றம் நம் மக்களுக்குக் கிடைத்தது.

 

தொடரும் தலித் மக்களின் பின்தங்கிய நிலை, நமது பொறுப்பற்ற எதிர்க் கட்சிகளுக்கு ஒரு உபாயத்தைக் காண்பித்தது. அதன்படி, “நாங்கள் அம்பேத்கர் அபிமானிகள், தலித் மக்களாகிய உங்களை நாங்கள் பாதுகாப்போம், முன்னேற்றுவோம்”  என்று அந்த அப்பாவி மக்களுக்குச் சேதி சொல்லி, அவர்களின் 17 சதவிகித ஓட்டுக்களில் நல்ல பகுதியை அறுவடை செய்து கொழிக்கின்றன எதிர்க் கட்சிகள். அந்த அறுவடையைத் தக்க வைக்க, இன்னும் அதிகரிக்க, எதிர்க் கட்சிகள் எப்போதும் அம்பேத்கர் பாட்டுப் பாடும், அம்பேத்கர் நாடகம் ஆடும்.

 

அம்பேத்கரின் பெயரை வைத்துக் குயுக்தியாக அரசியல் செய்யும் காங்கிரஸையும் மற்ற எதிர்க் கட்சிகளையும் அமித் ஷா சூசகமாக சுருக்கென்று அம்பலப் படுத்தினால் அவைகளுக்கு ஆத்திரம் வருமா வராதா? இதுதானே விஷயம்?


சிலர் கேட்கலாம். “மல்லிகார்ஜுன கார்கே ஒரு தலித்.  காங்கிரஸ் கட்சி அவரைக் கட்சியின் தலைவராகவே இப்போது அமர்த்தி இருக்கிறது. ஆகையால் இன்றைய காங்கிரஸ் கட்சி உண்மையான அம்பேத்கர் விசுவாசி, அம்பேத்கரைப் போற்றும் கட்சி, என்பதற்கு வேறு என்ன சாட்சி வேண்டும்?” இதற்கான விடையை ஒரு காட்சி சொல்லும். 


ஒரு பொம்மலாட்டக்காரன் தனது பொம்மையை ஆட்டுவிப்பான். தாம் தூமென்று பொம்மை ஆடினாலும், அது பொம்மைதானே? பொம்மலாட்டக்காரன் அசைத்தபடிதானே பொம்மை ஆடும், அவனது வருவாய்க்காக அல்லவா பொம்மை ஆடும்? இதில் பொம்மைக்கு என்ன மதிப்பு, என்ன கீர்த்தி?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai