Friday, 9 October 2026

கேள்வி-பதில் (04.10.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "மகிழ்வுடன் கதராடைகளை அணிந்து, நெசவாளர்களின் வாழ்க்கையை வெற்றிபெறச் செய்வோம்" என்று முதல்வர் விஜய் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அவரது அழைப்பு பயன் தருமா?

 

பதில்: முதல்வர் விஜய்யை ஆர்ப்பரித்து ஆதரிக்கும் சாதாரண மக்களுக்கு, திரை நாயகன் விஜய் மீதான மயக்கம் கலந்த ஈர்ப்பு இருக்கிறது - அவர் நியாயவான், நமக்கும் நம் தேசத்திற்கும் நன்மை செய்ய வந்தவர் எனும் இதயபூர்வ உணர்வு அவர்களுக்கு இல்லை. ஆகையால் கதர் பற்றி - அல்லது மக்கள் நாட்டுக்காக சற்று விட்டுக் கொடுப்பது பற்றி, சிறு தியாகங்கள் செய்வது பற்றி - விஜய் பேசினால் அந்த மக்களிடம் எடுபடாது.

 

 

2. கேள்வி: "அண்ணன் வைகோ, அண்ணன் திருமாவளவன் போன்ற தலைவர்கள் ஒரு கூட்டணியை உருவாக்கவேண்டும் என்றால், அவர்களுக்கு அதிகாரமும் பணபலமும் முக்கியம் அல்ல. உண்மை எங்கிருக்கிறதோ அங்குதான் அவர்கள் இருப்பார்கள். எங்கள் தலைவர் விஜய்யிடம் உண்மை இருக்கிறது. அதனால்தான் அண்ணன் வைகோவும் அண்ணன் திருமாவளவனும் தவெக கூட்டணியில் இருக்கிறார்கள்.  எவனாலயும் அண்ணன் திருமாவளவனையும் அண்ணன் வைகோவையும் பணம் கொடுத்து வாங்க முடியாது -  எவனாலயும்" என்று அந்த இருவரையும் மேடையில் வைத்துக் கொண்டு தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மதுராந்தகத்தில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: ஆதவ் அர்ஜுனா துடிப்பாகப் பேசுகிறவர், ஆனால் சமயத்தில் அவரிடம் முதிர்ச்சி இருக்காது. அவர் பேசியதின் அர்த்தம் இதுதான்:

 

2026 சட்டசபைத் தேர்தலில், வைகோ கட்சியும் திருமாவளவன் கட்சியும் திமுக அணியில் இருந்தவாறு தவெக-வை எதிர்த்தன. அப்போது ஆதவ் அர்ஜுனா தவெக-வில் இருந்து திமுக கூட்டணியை எதிர்த்தார். அந்தச் சமயத்தில 'உண்மை' என்பது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பக்கம் இல்லை, அது தவெக தலைவர் விஜய்யிடம் இருந்தது என்று ஆதவ் அர்ஜுனா புரிந்து வைத்திருந்தார். ஆனால் பல பத்தாண்டுகள் அரசியல் அனுபவம் உள்ள வைகோவும் திருமாவளவனும் 'உண்மை' யார் பக்கம் இருக்கிறது என்று தெரியாமல் அந்தத் தேர்தலில் விஜய்யை எதிர்த்தார்கள்; விஜய்யிடம் திமுக கூட்டணி படுதோல்வி அடைந்தவுடன் வைகோவும் திருமாவளவனும் டக்கென்று உண்மையின் உண்மையான இடத்தை அறிந்துகொண்டு தவெக கூட்டணிக்குத் தாவினார்கள்.

 

வைகோவையும் திருமாவளவனையும் ஒரு விநாடி உரத்துப் பேசி உயர்த்திப் பிடித்த ஆதவ் அர்ஜுனா, மறு விநாடி அந்த இருவரையும் சைலண்டாகத் தொப்பென்று கீழே போட்டுவிட்டார். விழுந்த அடி அந்த இருவருக்கும் தெரியும்.

 

 

 3. கேள்வி: சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கின் போது, அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகள், "தமிழகத்தில் சில விஷயங்கள் இன்னும் சீரடைய வேண்டி இருந்தாலும், தற்போதைக்கு மாநில முதல்வர் விஜய் சிறப்பாகச் செயல்படுகிறார். அவரைப் பற்றி எங்களுக்கு நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில், தமிழகத்திற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று தெரிவித்ததாகப் பத்திரிகைச் செய்திகள் சொல்கின்றனவே?

 

பதில்: ஒரு வழக்கு நடக்கும்போது, நீதிபதிகள் வாய்மொழியாகக் கேள்வி கேட்பதும் கருத்து சொல்வதும் வழக்கிற்குத் தொடர்புடையதாக, அவசியமானதாக, மட்டும் இருப்பது நல்லது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்து, வழக்கைத் தீர்த்துவைக்க அவசியம் இல்லாதவை.

 

ஒரு முதலமைச்சரைப் பற்றி, அல்லது பிரதமரைப் பற்றி - அதுவும் அவர் பதவியிலிருக்கும் போது - அவர் "சிறப்பாகச் செயல்படுவதாக" அல்லது அவரைப் பற்றி "நல்ல தகவல்கள் கிடைத்திருப்பதாக" நீதிபதிகள் கருத்து தெரிவிக்காமல் இருப்பது, சிறப்பான நீதி பரிபாலனத்திற்கு நல்லது.  இதற்குமேல் நாமும் கருத்து தெரிவிக்காமல் இருப்பது நல்லது.

 

 

4. கேள்வி: "நாம் செய்தது ஒரே தவறுதான். 2026 தேர்தலுக்கு முன்பு தவெக-வை  நாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருந்தோம். கொள்கை எதிரிகளோடு  மோதினோம். கோமாளிக் கூட்டத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்" என்று அதுவே திமுக-வின் தேர்தல் தோல்விக்கான ஒரு முக்கிய காரணம் என்பதாக, மதுராந்தகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

 

பதில்: எல்லாக் கட்சிகளும் தீவிரமாகத் தேர்தல் பிரசாரம் செய்தபோது, மக்கள் மத்தியில் விஜய் கட்சிக்கு ஆதரவு பெருகுகிறது, தனது கட்சிக்கு ஆதரவு மிகவும் குறைகிறது என்று துளியும் கணிக்க முடியாமல் - அதாவது, மக்கள் மனதைச் சற்றும் அறிய முடியாமல் -  தவெக என்று ஒரு கட்சியே தேர்தல் களத்தில் இல்லை என்கிற மாதிரி, திமுக தேர்தல் பிரசாரம் செய்ததா? அப்படியானால் கோமாளிக் கூட்டம் எது?

 

இரண்டில் எது கோமாளிக் கூட்டமாக இருந்தாலும், இரண்டிற்கும் ஏமாளி ஒன்றுதான் - அப்பாவி மக்கள்.

 


5. கேள்வி: 'இண்டி' கூட்டணியில் இருந்து திமுக வெளியேறிய பின் தவெக இணைந்திருக்கிறதே?

 

பதில்: திமுக-வின் இடத்திற்குத் தவெக வந்துவிட்டது.  வித்தியாசங்கள் குறைகின்றன.


பகுதி 139 // 04.10.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

Wednesday, 30 September 2026

கேள்வி-பதில் (30.09.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "திமுக வேற, பாஜக வேற, அப்பிடின்னு இல்லை. டெல்லில இருக்கற திமுக-தான், பாஜக. தமிழ்நாட்டுல இருக்கற பாஜக-தான், திமுக" என்று தமிழக முதல்வர் விஜய் பேசி இருக்கிறார். என்ன அர்த்தம்?

 

பதில்: மக்களுக்குச் சொல்லவேண்டிய விஷயத்தை எளிமையாக நேரடியாகச் சொல்லிவிட்டு, அதற்கு அழுத்தம் கொடுக்கப் பொருத்தமான ஒரு பன்ச் டயலாக்கை விஜய் பேசலாம். அதில்லாமல், பன்ச் டயலாக்கை விஜய் சகட்டுமேனிக்கு அள்ளிவிட்டுக் கொண்டிருந்தால் பிதற்றல் பேச்சுதான் வரும்.

 

 

2. கேள்வி: "அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பதால், ஒரு லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 685 கோடி ரூபாய் மிச்சமாகும்" என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்திருக்கிறார். இந்தப் பேச்சு பொதுமக்களிடம் எடுபடுமா?

 

பதில்: தமிழக அமைச்சர்கள் மற்றும் தவெக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துப் பெண்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கச் செய்து, அதை ஒரு தகவலாக அரசு விளம்பரப்படுத்தினால் - அதாவது, அந்த அளவுக்குச் சிறந்த கட்டமைப்பும் சேவைகளும் அரசு மருத்துவமனைகளில் காணப்பட்டால் - அதிகமான பொதுமக்கள் தாமாக அங்கு பிரசவம் பார்த்துக் கொள்வார்கள்.

 

அரசு மருத்துவமனைகளில் சிறந்த மருத்துவச் சேவை கிடைத்தால், தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை அரசுக்குப் பதிலாக தனியார் ஆஸ்பத்திரிகள் தங்கள் ஆஸ்பத்திரிகளில் பார்க்கப்படும் பிரசவங்களுக்குச் செயல்படுத்த முன்வரலாம் - தமிழக அரசும் ஆண்டுக்கு 755 கோடி ரூபாய் தங்கம் வாங்காமல் மிச்சம் பிடிக்கலாம்.

 

 

 3. கேள்வி: முதலமைச்சர் விஜய்க்குச் சென்ற இடமெல்லாம் பொதுமக்களிடம் பெரிய வரவேற்பு இருக்கிறதே?

 

பதில்: உண்மை. சாதாரண மக்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் பிரபல்யம் ஒரு அதிசயம். அதை வைத்து மாநிலத்திற்கும் மக்களுக்கும் அற்புதங்கள் செய்துகாட்டுவதற்கான தலைமைப் பண்பும், தொலைநோக்குப் பார்வையும் செயல்திறனும் அற்றவராக அவர் இருப்பது வருத்தமானது. அவரது பிரபல்யம்,  இரண்டு பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக-வைத் தள்ளி வைப்பதற்கும், காங்கிரஸ் கட்சியை இழுத்துக் கட்டுக்குள் வைத்திருக்கவும், வைகோ, திருமாவளவன், அன்புமணி ஆகியோரது வாய்களைப் பெருமளவு கட்டி வைப்பதற்கும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிப்பில் வைத்திருக்க மட்டும்தான் பயன் படுகிறது. இன்றைய நிலையில் தமிழக பாஜக அவருக்குப் பொருட்டில்லை.

 

 

4. கேள்வி: போஸ்டர், பிளக்ஸ் பேனர் எதுவும் இல்லாமல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை, முதல்வர் விஜய் மதுரையில் துவங்கி வைத்ததாக, அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: நாளிதழ்களில் பெரிதாக விளம்பரம் செய்துவிட்டு, விஜய்யே மதுரை வீதிகளில் கையசைத்து உலா வந்ததை விடப் போஸ்டரும் பேனரும் என்ன பெரிய விளம்பரத்தை அவருக்குத் தரப் போகிறது?

 

இன்னொன்று: தமிழகத்தின் அந்த்யோதயா குடும்பங்களுக்கு 35 கிலோ வரை ரேஷன் கடைகள் மூலம் மாதாமாதம் இலவச அரசியை வழங்குகிறதே மத்திய அரசு, அதற்கு மத்திய அரசு மாதாமாதம் போஸ்டர், பேனர் வைக்கிறதா?

 


5. கேள்வி: "எங்களைப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்தவர் முதலமைச்சர் விஜய்" என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறி இருக்கிறாரே?

 

பதில்: சமீபத்தில் அதிமுக-விலிருந்து விலகி தவெக-வில் சேர்ந்த 15 நபர்களுக்கு - அவர்களில் 11 பேர் முன்னாள் அமைச்சர்கள் - அவர்கள் வந்து சேர்ந்த ஒரு மணி நேரத்தில் தவெக-வில் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப் பட்டதே, அவர்களையும் விஜய் பார்த்துப் பார்த்துதான் தேர்வு செய்தாரா?

 

உண்மை என்னவென்றால்: தவெக-வில் சேர்ந்து அரசு பதவி அல்லது கட்சிப் பதவி கிடைத்தவர்கள், தங்கள் நலனுக்காகப் பார்த்துப் பார்த்து விஜய் கட்சியைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.


பகுதி 138 // 30.09.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

 

Friday, 25 September 2026

ஜெம் வீரமணி வழக்கு. அவலத்தின் நடுவே ஒரு ஆறுதல்

 

-- ஆர். வி. ஆர்

  

பிரபல கிரானைட் தொழிலதிபர் வீரமணி, அவருடைய கம்பெனியின் பெயரைச் சேர்த்து 'ஜெம்' வீரமணி’ என்று அறியப்பட்டவர். 84-85 வயதுக்காரர்.  பெயர், செல்வம், செல்வாக்கு மிக்கவர்.

 

ஜெம் வீரமணி மாபாதகம் செய்ததாகத் தற்போது  ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன – வீடியோ ஆதாரம் உட்பட. பல வருடங்களாக, எழைச் சிறுமிகளைஅவர் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு இருப்பிடத்துக்கு அழைத்துவரச் செய்து – அவர்கள் பெரும்பாலும் குழந்தைகள் என்று சொல்லத்தக்க, பாதுகாப்பற்ற 12, 13, 14 வயதுச் சிறுமிகள் என்பது செய்தி – அக்குழந்தைகளிடம் பாலியல் வன்முறைகள் நிகழ்த்தியுள்ளார் வீரமணி என்பதற்கான வலுவான ஆதாரங்கள் அவை.  நடந்தது மகா கொடூரம்.

 

தற்போது வீரமணியும், அவருடைய பாதகச் செயலுக்கு உதவிய இருவரும் கைதாகிச் சிறையில் இருக்கின்றனர். வழக்கு நடக்கவேண்டும், குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும்.

 

சாதாரணமாக, ஒருவர் மீது கிரிமினல் வழக்கு நடக்க இருக்கையில் அவர் ஒரு அக்யூஸ்டு – குற்றம் சாட்டப்பட்டவர் – மட்டுமே.  அந்த வழக்கை அவர் எதிர்கொண்டு, இறுதியில் கோர்ட் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால் தான் அவரைக் குற்றவாளி என்று சட்டம் சொல்லும். மற்றவர்களும் இந்த விதியை மதிக்க வேண்டும். ஆனால் சமூகத்தை உலுக்கும் ஒருவரின் மாபாதகச் செயல்கள் பல ஆதாரங்களுடன் வெளிவரும்போது, சமூகம் இந்த விதியைப் பின்பற்றாது. மக்கள் அவர் மீதும், சம்பந்தப்பட்ட பலர் மீதும், தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். இதுபோக, தன்மீதான குற்றச்சாட்டுகள் பற்றி வீரமணி காத்துவரும் மௌனம் அந்தக் குற்றச்சாட்டுகளை வலுப்படுத்துகிறது.

 

'என்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அவற்றைச் சட்டப்படி எதிர்கொண்டு நான் நிரபராதியாக வெளிவருவேன்' என்று வீரமணியிடமிருந்தோ, அவர் சார்பாக மற்ற எவரிடமிருந்தோ, ஒரு அறிக்கையும் வரவில்லை. அவருடைய நிலையில், தான் நிரபராதி என்று நம்பும் எந்த மனிதரும் இந்நேரம் ஒரு மறுப்பு அறிக்கை அளித்திருப்பார், அவர் சார்பாக இரண்டு மூன்று வக்கீல்களும் அந்த மறுப்பைப்  பொதுவெளியில் கூறி இருப்பார்கள்.

 

'நான் நிரபராதி என்று கோர்ட்டில்தான் சொல்வேன், அங்குதான் எனக்காக வாதாடுவேன். அதுவரை என் பேர் படு ரிப்பேர் ஆனாலும் கப்சிப் என்று இருப்பேன்' என்று குற்றமற்ற ஒரு தொழிலதிபர் நினைக்க மாட்டார். ஆகையால், 'நான் குற்றவாளிதான்' என்று கிட்டத்தட்ட வீரமணியே பொதுமக்களிடம் ஒப்புக்கொண்ட மாதிரி இருக்கிறது.

 

வீரமணி ஏன் தனது பாதகச் செயல்களை ஒப்புக் கொள்கிற மாதிரித் தோற்றம் தருகிறார்? ‘நாம் செய்த தவறை இனி மறைக்க வேண்டாம்’ என்ற புதிய தூய எண்ணமா? இருக்காது. தன்மீதான குற்றச்சாட்டை அவர் இப்போதே பொதுவெளியில் மறுத்தால், முன்பு அவர் சீரழித்த சிறுமிகள் – தற்போது வளர்ந்தவர்களாக, பெரியவர்களாக இருக்கிறவர்கள் – இன்னும் அதிகமானோர் அவருக்கெதிராக சாட்சியம் சொல்வார்கள்; அவர் மேலும் மேலும் கேவலப் படலாம்; ஆகையால் வாயை மூடிக்கொண்டு வந்ததை ஏற்போம் என்று வேறு வழியில்லாத நிலையில் அவர் இருப்பதாகத் தெரிகிறது.  

 

வீரமணி மீதான குற்றச்சாட்டை முதலில் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் எந்த லட்சணத்தில் வேலை செய்தார்கள்? அவர்களுக்குக் கிடைத்த குற்றச் சம்பவ வீடியோவில், அதிலுள்ள பெரியவர் வீரமணி மாதிரித் தோன்றினாலும் அது அவர்தான் என்று அவர்களால் உறுதிசெய்ய முடியவில்லையாம். அதிலுள்ள சிறுமியையும் அடையாளம் காண முடியவில்லையாம். காரணம், வீடியோ மங்கலாக இருந்ததாம். ஆகையால் ‘மேல் நடவடிக்கையைக் கைவிடுகிறோம்’ என்று, போஸ்கோ நீதிமன்றத்தில் அறிக்கை செய்தது காவல்துறை. அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றிருந்தால் வழக்கின் கதை அதோடு முடிந்திருக்கும்.

 

போஸ்கோ நீதிமன்றத்தின் நீதிபதி, காவல்துறையின் கைகழுவும் அறிக்கையை ஏற்க மறுத்து மறுவிசாரணைக்கு உத்தரவிட, பிறகு திமுக ஆட்சி போய் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியும் வந்துவிட்டது. இந்த நிலையில் காவல்துறை தீவிரமாக வழக்கை மறுவிசாரணை செய்கிறது. அதில் புதிய அதிகாரிகள் இணைகிறார்கள், மேற்பார்வை செய்கிறார்கள். அதன் விளைவாக, அதிர்ச்சி அளிக்கும் விவரங்கள் வெளிவருகின்றன. முன்பு கொடுமை இழைக்கப்பட்ட பல சிறுமிகள் இப்போது முன்வந்து தங்களுக்கு நேர்ந்த அவலத்தைக் காவல்துறையிடம் சொல்கிறார்கள் என்பது செய்தி. மேலும் கைது நடந்திருக்கிது. சிலர் தேடப்படுகின்றனர். முன்பு இவ்வழக்கில் கடமை தவறிய சில உயர் போலீஸ் அதிகாரிகள் தூக்கியடிக்கப் படுகிறார்கள். 

 

வீரமணி மீதான குற்றச்சாட்டு, அண்ணன் தம்பி தகராறில் நடந்த வெட்டுக் குத்து, அல்லது ஒரு ஆணவக் கொலை, என்பது மாதிரி அல்ல. அத்தகைய குற்றங்கள் செய்வோர் திரும்பத் திரும்ப அதே குற்றங்களைத் தொடர்ந்து செய்யும் சூழ்நிலை இருக்காது. ஆனால் ஒரு ஆண் ஒரு சிறுமியிடம் பாலியல் வன்முறை செய்கிறான், அதுவும் ஒரு வீட்டில் வைத்துச் செய்கிறான், அதற்கான வீடியோ ஆதாரம் கிடைத்திருக்கிறது என்றால் அவன் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் அந்தக் குற்றத்தைச் செய்திருக்க, இனி செய்ய, வாய்ப்பிருக்கிறது என்பது உறுதி. அவனால் சில சிறுமிகள் ஏற்கனவே பாதிக்கப் பட்டிருக்கலாம், இனிமேலும் சிலர் பாதிக்கப் படலாம். இவற்றையெல்லாம் தொடக்கத்திலேயே ஊகிக்க ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் தேவையா, அல்லது காக்கி உடை அணிந்த ஒரு சாதாரணக் காவலருக்கே இது தெரியுமா?

 

‘வீரமணி மீதான விசாரணை ஒரு கொடுங்குற்றம் தொடர்பானது; ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட  சிறுமிகளின் எதிர்காலத்தை நாசம் செய்கிற குற்றம் அது என்று தெரிந்தும், அந்தக் குற்றம் நிரூபணம் ஆகாமல் போய் அவர் தண்டனையிலிருந்து தப்பிவிட காவல்துறை அதிகாரிகள் ஆரம்பத்தில் அவருக்கு உதவி இருப்பார்கள்; அதற்காக அந்த அதிகாரிகள் பிரதிபலன் அடைந்திருப்பார்கள்’ – இவ்வாறு பொதுமக்கள் நினைக்கலாம் அல்லவா?

 

வீரமணி விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் சிலர் வேண்டுமென்றே மெத்தனமாக, அலட்சியமாக நடந்துகொண்டார்கள் என்றால், ஆளும் அரசியல்வாதிகள் அந்த அதிகாரிகளை அப்படிச் செயல்பட அனுமதித்திருந்தால் ஒழிய, அந்த அதிகாரிகள் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை. தங்களுக்கு ஆதாயமில்லாமல் ஆளும் அரசியல்வாதிகளும் அதை அனுமதிக்க மாட்டார்கள்.

 

ஆக மொத்தம்: ஆளும் – அதாவது, ஆண்ட – அரசியல்வாதிகள் சிலரின் கேவலமான கீழ்த்தரமான எண்ணமும் நடவடிக்கையும் தான் ஒரு மனிதன் பல வருடங்களாகப் பல அப்பாவிச் சிறுமிகளுக்குப் பாதகம் நிகழ்த்த  ஏதுவாக இருந்திருக்கும். தமது சுயநலப் பலன்களுக்காக, தேசத்திற்கும் மக்களுக்கும் எதிரான எந்த அட்டூழியத்தையும் இத்தகைய அரசியல் தலைவர்கள் செய்யத் துணிவார்கள்.

 

இருந்தாலும் நமது தேசத்திற்கு நன்மைகள் நிகழும், நாம் நம்பிக்கையோடு காத்திருக்கலாம், என்பதற்கும் இந்த விஷயத்தில் ஒரு அறிகுறி இருக்கிறது. அந்த அறிகுறி, ஒரு பெண். அவர்தான், வீரமணி வழக்கை விசாரிக்கும் போஸ்கோ நீதிமன்றத்தின் நீதிபதி. அநியாயத்திற்குத் துணை போகாத, அக்கிரமத்திற்கு வளைந்து கொடுக்காத,  ஒரு நேர்மையான நீதிபதியாக அவர் இருக்கிறார் என்பது தெரிகிறது. அவர் நமக்குப் பெரிய ஆறுதல். அவரது உத்தரவால்தான், காவல்துறை முயன்ற மாதிரி இந்த வழக்கு இழுத்து மூடப்படாமல் மறுவிசாரணை நடந்து, வேறு வழியே இல்லாமல் பல ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன.

 

நல்லவர்கள் பொறுமை காக்கவேண்டிய நேரமிது. இப்போதைக்கு இதை மட்டும் சொல்லலாம். 

 

* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai