Friday, 9 October 2026

கேள்வி-பதில் (09.10.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அனுமதியின்றிப் பொது இடத்தில் தர்ணா செய்து கைதான ராகுல் காந்தி, "என்மீது நூறு எப்.ஐ.ஆர் பதிவாகட்டும். ஒவ்வொன்றும் எனக்கு மெடல்" என்கிறார். அவரது வழியில் தங்கள் மேல் நூறு எப்.ஐ.ஆர்-கள் பதிவாகும்படிச் செயல்படும் அரசியல்வாதிகளுக்கும் அவரவர் மீதான எப்.ஐ.ஆர்கள்

மெடல்களா?

 

பதில்: ராகுல் காந்தி வழியைப் பின்பற்றும் அந்த அரசியல்வாதிகளுக்கு தனிச்சிறப்பு சேரவேண்டும். அவர்களுக்கு, 'ராகுல் காந்தி எப்.ஐ.ஆர் விருது' என்ற ஒரு புதிய விருதைக் காங்கிரஸ் கட்சி வழங்கலாம். அவர்களில் அதிக பட்சம் கன்னா பின்னாவென்று பேசுகிறவர்களுக்கு, 'ராகுல் காந்தி எஸ்.ஐ.ஆர் விருது' எனும் மேலும் உயரிய விருதை அக்கட்சி அளிக்கலாம்.

 

 

2. கேள்வி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே பெங்களூருவில் இப்படிப் பேசி இருக்கிறார்: "ஓரே நாடு ஒரே தேர்தல் என்ற கோஷம், 'ஒரே நாடு ஒரே கட்சி'  என்பதற்கானது. ஹிட்லரின் நோக்கமும் அதுவே. ஹிட்லருக்கு என்ன ஆனது என்பதைப் பார்க்குமாறு நான் மோடியைக் கேட்டுக் கொள்கிறேன். ஹிட்லர் தன்னைத் தானே சுட்டுக்கொள்ள வேண்டி இருந்தது". இதுபோக, "வாக்குகளை நீக்கியும் திருடியும் தான் நரேந்திர மோடி பிரதமர் ஆனார் " என்றும் அபிஜித் திப்கே பேசியிருக்கிறார். இதைப் பற்றி மோடி என்ன நினைப்பார்?

 

பதில்: மோடி அலட்டிக் கொள்ள மாட்டார். ஆனால் ராகுல் காந்தி அச்சம் கொள்வார். இப்படி ஒரே அபத்தமாக, படு கிறுக்குத்தனமாக, அபிஜித் தொடர்ந்து பேசினால் தேசிய அளவில் ராகுலின் மதிப்பு குறைந்து அபிஜித்தின் மதிப்பு விர்ரென்று உயரலாமே! மீடியாவும் ராகுலுக்குப் பதில் அபிஜித்தை அதிகம் கொண்டாடலாமே!

 

 

3. கேள்வி: "வாக்குகளை நீக்கியும் திருடியும் தான் நரேந்திர மோடி பிரதமர் ஆனார் " என்று கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் அபிஜித் திப்கே பேசியிருக்கிறார். அப்படியானால் அவர் 'பிரதமர் மோடி பதவி விலகவேண்டும்' என்று போராடாமல், மோடிக்கு உதவினார் என்று சொல்லி தலைமைத் தேர்தல் கமிஷனரின் ராஜினாமாவை மட்டும் என் கோருகிறார்? தலையைச் சுற்றி மூக்கையும் தொடாமல் காதை மட்டும் ஏன் தொடுகிறார்?

 

பதில்: மோடி ராஜினாமா செய்யவேண்டும் என்று அபிஜித் கோரினால், அவர் பிரதமர் பதவியிலிருந்து மட்டும் விலகவேண்டுமா அல்லது அவரது எம்.பி. பதவியையே ராஜினாமா செய்யவேண்டுமா என்பதை அபிஜித் விளக்க வேண்டி இருக்கும். தலைமைத் தேர்தல் கமிஷனர் விஷயத்தில் இந்தச் சிக்கல் இல்லை.

 

இரண்டாவது: மோடி பதவி விலகவேண்டும் என்று அபிஜித் என்ன அர்த்தத்தில் கோரினாலும், அது அரசியல் ஆகிவிடும். அப்படியென்றால், மோடி பதவி விலகக் கூடாது என்று கேட்டு லட்சக் கணக்கான பாஜக-வினரும் அக்கட்சியின் வாக்காளர்களும் வீதிக்கு வரலாம். அதன் விளைவுகளைச் சந்திக்கும் தெம்பும் திராணியும் அபிஜித்திடம் இல்லை. மாறாக, தலைமைத் தேர்தல் கமிஷனரின் ராஜினாமாவை மட்டும்  கோரிப் போராடினால், தூய்மையான தேர்தலுக்காக, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக, அபிஜித் போராடுகிறார் என்ற தோற்றம் தனக்குக் கிடைக்கலாம் என்று அபிஜித் குயுக்தியாக நினைக்கிறார்.

 

அபிஜித் ஏமாற்றுக்காரர். பித்தலாட்டம் செய்கிறவர். அவர் பின்னால் மறைவாகச் சதிகாரர்கள் இருக்கலாம்.

 

 

4. கேள்வி: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் விடுத்துள்ள அறிக்கையில், "தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பான நடவடிக்கையில், மக்களுக்கு நம்பிக்கை குறைந்து, சந்தேகம் வலுத்துள்ளது. எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறைகளை மாற்ற வேண்டும்" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: ஜி.கே. வாசனின் அரசியலுக்கு அவரே 'சிறப்பு தீவிர திருத்தம்' செய்துகொண்டு விட்டார். திருத்தம் மேற்கொண்ட அவரை மத்தியில் ராகுல் காந்தியும் மாநிலத்தில் முதல்வர் விஜய்யும் கவனித்து, தயை கூர்ந்து அவரைத் தூக்கிப் பிடிப்பார்கள் என்று நம்புகிறார். பாவம்.

 


5. கேள்வி: "முதல்வர் விஜய்யின் கவனம் மொத்தமும், தன் நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே இருக்கிறது" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: மு.க. ஸ்டாலினின் கவனம் மொத்தமும், அவர் காப்பாற்றமுடியாத நாற்காலியின் மீதே இருக்கிறது. இருவரின் முழுக் கவனமும் இருப்பது ஒரே நாற்காலியின் மீது.


பகுதி 141 // 09.10.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

கேள்வி-பதில் (08.10.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "என் மீது 45 எப்.ஐ.ஆர்-கள் உள்ளன. 100  எப்.ஐ.ஆர்-களை எட்டுவது என் இலக்கு. என் மீதான ஒவ்வொரு எப்.ஐ.ஆரும் எனக்கு ஒரு பதக்கம்" என்று ராகுல் காந்தி சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: இளைஞர்கள் மத்தியில் தன்னைவிடக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர்களுக்கு ஈர்ப்பு அதிகம் என்று சந்தேகிக்கும் ராகுல் காந்தி, அந்தத் தலைவர்களை மிஞ்சும் வழி அவர்களை விடக் கேவலமாகப் பேசுவது என்று நினைத்திருப்பார்.

 

 

2. கேள்வி: "நம் நாட்டு மக்களின் ஓட்டுரிமையைப் பறித்து, அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றும் எந்தச் செயல்முறையும் அரசியலமைப்பின் அடிப்படையைத் தாக்குவதாக அமையும்" என்று உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் ஒரு பொதுநிகழ்ச்சியில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: ஒரு பக்கத்தில் இது சரி - 'ஓட்டுரிமையைப் பறிப்பது', 'இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றுவது' என்பன நிஜமாக நடந்தால். ஆனாலும் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி, அரசியல் களத்தில் சூடு பிடித்திருக்கும் ஒரு விஷயம் பற்றிப் பொதுவெளியில் பேசாதிருப்பது நல்லது. அவர் அவ்வாறு பேசினால் அதற்கான அர்த்தம் மற்றும் இலக்கு வேறு என்று உணரப்படும்.

 

இன்னொரு பக்கத்தில்: அதிகமான மக்களை வருமானம் குறைந்தவர்களாக, படு சுமாரான  கல்வி பெறுபவர்களாக, நிறைவான மின்சாரம், குடிநீர் மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கு ஏங்குபவர்களாக, போலீஸ்காரரைப் பார்த்து அச்சம் அடைபவர்களாக வைத்திருந்து ஓட்டுரிமையை மட்டும் அவர்களுக்குப் பக்காவாகக் கொடுத்தால், ஒருவனின் பார்வையைப் பாதி பாழாக்கி அவனுக்கு ஜம்மென்று கூலிங் கிளாஸ் மாட்டிவிட்ட மாதிரி இருக்கும்.

 

 

 3. கேள்வி: "இந்தியாவில் 13 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இது ஜனநாயகப் படுகொலை. இதற்குக் காரணம் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் தலைமைத் தேர்தல் கமிஷனர். இதைப் பற்றி முதல்வர் விஜய் வாய்திறக்கவேண்டும் என்று பலமுறை சொல்லிவிட்டோம்" என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறி இருக்கிறாரே?

 

பதில்: அந்த 13 கோடி பேர் உயிருடன் இருக்கிறார்கள், வாக்காளர் பட்டியலில் அவர்களுக்காகக் குறிப்பிட்டிருக்கும் இருப்பிடங்களில் இன்னும் வசிக்கிறார்கள், இருந்தாலும் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன என்று வீரபாண்டியன் சொன்னால், தமிழகத்தின் 234 தொகுதிகள் ஒவ்வொன்றின் வாக்காளர் பட்டியலில் இருந்து அநியாயமாக நீக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பத்து பத்து நபர்களை அடையாளம் காட்டி (234 x 10 = 2,340 நபர்களை முன்னிறுத்தி) வீரபாண்டியன் ஏன் அந்த ஜனநாயகப் படுகொலையின் சில தடயங்களை அம்பலப் படுத்தவில்லை?

 

மோடியும் அமித் ஷாவும் விரும்பிய தேர்தல் முடிவுகள் கிடைப்பதற்கு ஏதுவாகத் தலைமைத் தேர்தல் கமிஷனர் எஸ்.ஐ.ஆரை நடத்தினார் என்றால், தமிழகத்தில் பாஜக-வுக்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ கிடைக்கும் படியா அவர்கள் கூட்டாக வேலை செய்திருப்பார்கள்? தமிழகத்தில் பா.ஜ.க-வின் எம்.எல்.ஏ கணக்கு பூஜ்யம் என்றிருந்தால்தான் இந்த மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் ஒழுங்காக நடந்தது என்று பாஜக-வை எதிர்க்கும் கட்சிகள் ஏற்றுக் கொள்ளுமா?

 

 

4. கேள்வி: "நீதித்துறை மேல மக்களுக்கு நம்பிக்கை இல்லை. போலீஸ் மேல மக்களுக்கு நம்பிக்கை இல்லை. நிறுவனங்கள் - அதாவது அமைப்புகள் - மேல மக்களுக்கு நம்பிக்கை இல்லை. மீடியா மேல நம்பிக்கை இல்லை. நம்பிக்கையே இல்லாத ஒரு நாட்டுல எப்படிய்யா வாழறது?" என்று நடிகர் பிரகாஷ் ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கேட்டிருக்கிறாரே?

 

பதில்: பிரகாஷ் ராஜின் சினிமா பாணி அரசியல் பேச்சின் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் நம் நாட்டில் அவர்கள் வாழ முடிகிறது.

 


5. கேள்வி: "முதல்வர் விஜய் பழுத்த அரசியல்வாதியாக மாறியுள்ளார்" என்று காங்கிரஸ் தலைவர் கார்த்தி சிதம்பரம் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: பேட்டி அரசியலைத் தாண்டி வர முடிந்தால், கார்த்தி சிதம்பரமும் பழுக்க ஆரம்பிக்கலாம்.


பகுதி 140 // 08.10.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

கேள்வி-பதில் (04.10.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "மகிழ்வுடன் கதராடைகளை அணிந்து, நெசவாளர்களின் வாழ்க்கையை வெற்றிபெறச் செய்வோம்" என்று முதல்வர் விஜய் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அவரது அழைப்பு பயன் தருமா?

 

பதில்: முதல்வர் விஜய்யை ஆர்ப்பரித்து ஆதரிக்கும் சாதாரண மக்களுக்கு, திரை நாயகன் விஜய் மீதான மயக்கம் கலந்த ஈர்ப்பு இருக்கிறது - அவர் நியாயவான், நமக்கும் நம் தேசத்திற்கும் நன்மை செய்ய வந்தவர் எனும் இதயபூர்வ உணர்வு அவர்களுக்கு இல்லை. ஆகையால் கதர் பற்றி - அல்லது மக்கள் நாட்டுக்காக சற்று விட்டுக் கொடுப்பது பற்றி, சிறு தியாகங்கள் செய்வது பற்றி - விஜய் பேசினால் அந்த மக்களிடம் எடுபடாது.

 

 

2. கேள்வி: "அண்ணன் வைகோ, அண்ணன் திருமாவளவன் போன்ற தலைவர்கள் ஒரு கூட்டணியை உருவாக்கவேண்டும் என்றால், அவர்களுக்கு அதிகாரமும் பணபலமும் முக்கியம் அல்ல. உண்மை எங்கிருக்கிறதோ அங்குதான் அவர்கள் இருப்பார்கள். எங்கள் தலைவர் விஜய்யிடம் உண்மை இருக்கிறது. அதனால்தான் அண்ணன் வைகோவும் அண்ணன் திருமாவளவனும் தவெக கூட்டணியில் இருக்கிறார்கள்.  எவனாலயும் அண்ணன் திருமாவளவனையும் அண்ணன் வைகோவையும் பணம் கொடுத்து வாங்க முடியாது -  எவனாலயும்" என்று அந்த இருவரையும் மேடையில் வைத்துக் கொண்டு தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மதுராந்தகத்தில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: ஆதவ் அர்ஜுனா துடிப்பாகப் பேசுகிறவர், ஆனால் சமயத்தில் அவரிடம் முதிர்ச்சி இருக்காது. அவர் பேசியதின் அர்த்தம் இதுதான்:

 

2026 சட்டசபைத் தேர்தலில், வைகோ கட்சியும் திருமாவளவன் கட்சியும் திமுக அணியில் இருந்தவாறு தவெக-வை எதிர்த்தன. அப்போது ஆதவ் அர்ஜுனா தவெக-வில் இருந்து திமுக கூட்டணியை எதிர்த்தார். அந்தச் சமயத்தில 'உண்மை' என்பது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பக்கம் இல்லை, அது தவெக தலைவர் விஜய்யிடம் இருந்தது என்று ஆதவ் அர்ஜுனா புரிந்து வைத்திருந்தார். ஆனால் பல பத்தாண்டுகள் அரசியல் அனுபவம் உள்ள வைகோவும் திருமாவளவனும் 'உண்மை' யார் பக்கம் இருக்கிறது என்று தெரியாமல் அந்தத் தேர்தலில் விஜய்யை எதிர்த்தார்கள்; விஜய்யிடம் திமுக கூட்டணி படுதோல்வி அடைந்தவுடன் வைகோவும் திருமாவளவனும் டக்கென்று உண்மையின் உண்மையான இடத்தை அறிந்துகொண்டு தவெக கூட்டணிக்குத் தாவினார்கள்.

 

வைகோவையும் திருமாவளவனையும் ஒரு விநாடி உரத்துப் பேசி உயர்த்திப் பிடித்த ஆதவ் அர்ஜுனா, மறு விநாடி அந்த இருவரையும் சைலண்டாகத் தொப்பென்று கீழே போட்டுவிட்டார். விழுந்த அடி அந்த இருவருக்கும் தெரியும்.

 

 

 3. கேள்வி: சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கின் போது, அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகள், "தமிழகத்தில் சில விஷயங்கள் இன்னும் சீரடைய வேண்டி இருந்தாலும், தற்போதைக்கு மாநில முதல்வர் விஜய் சிறப்பாகச் செயல்படுகிறார். அவரைப் பற்றி எங்களுக்கு நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில், தமிழகத்திற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று தெரிவித்ததாகப் பத்திரிகைச் செய்திகள் சொல்கின்றனவே?

 

பதில்: ஒரு வழக்கு நடக்கும்போது, நீதிபதிகள் வாய்மொழியாகக் கேள்வி கேட்பதும் கருத்து சொல்வதும் வழக்கிற்குத் தொடர்புடையதாக, அவசியமானதாக, மட்டும் இருப்பது நல்லது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்து, வழக்கைத் தீர்த்துவைக்க அவசியம் இல்லாதவை.

 

ஒரு முதலமைச்சரைப் பற்றி, அல்லது பிரதமரைப் பற்றி - அதுவும் அவர் பதவியிலிருக்கும் போது - அவர் "சிறப்பாகச் செயல்படுவதாக" அல்லது அவரைப் பற்றி "நல்ல தகவல்கள் கிடைத்திருப்பதாக" நீதிபதிகள் கருத்து தெரிவிக்காமல் இருப்பது, சிறப்பான நீதி பரிபாலனத்திற்கு நல்லது.  இதற்குமேல் நாமும் கருத்து தெரிவிக்காமல் இருப்பது நல்லது.

 

 

4. கேள்வி: "நாம் செய்தது ஒரே தவறுதான். 2026 தேர்தலுக்கு முன்பு தவெக-வை  நாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருந்தோம். கொள்கை எதிரிகளோடு  மோதினோம். கோமாளிக் கூட்டத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்" என்று அதுவே திமுக-வின் தேர்தல் தோல்விக்கான ஒரு முக்கிய காரணம் என்பதாக, மதுராந்தகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

 

பதில்: எல்லாக் கட்சிகளும் தீவிரமாகத் தேர்தல் பிரசாரம் செய்தபோது, மக்கள் மத்தியில் விஜய் கட்சிக்கு ஆதரவு பெருகுகிறது, தனது கட்சிக்கு ஆதரவு மிகவும் குறைகிறது என்று துளியும் கணிக்க முடியாமல் - அதாவது, மக்கள் மனதைச் சற்றும் அறிய முடியாமல் -  தவெக என்று ஒரு கட்சியே தேர்தல் களத்தில் இல்லை என்கிற மாதிரி, திமுக தேர்தல் பிரசாரம் செய்ததா? அப்படியானால் கோமாளிக் கூட்டம் எது?

 

இரண்டில் எது கோமாளிக் கூட்டமாக இருந்தாலும், இரண்டிற்கும் ஏமாளி ஒன்றுதான் - அப்பாவி மக்கள்.

 


5. கேள்வி: 'இண்டி' கூட்டணியில் இருந்து திமுக வெளியேறிய பின் தவெக இணைந்திருக்கிறதே?

 

பதில்: திமுக-வின் இடத்திற்குத் தவெக வந்துவிட்டது.  வித்தியாசங்கள் குறைகின்றன.


பகுதி 139 // 04.10.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com