|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "அரசியல் காரணங்களால்தான் நான் தற்போது சிறையில்
இருக்கிறேன்" என்று 100 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான முன்னாள் திமுக
அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி இருக்கிறாரே? பதில்: அவர்
மீதான குற்றச்சாட்டுகள், அவரைக் கட்டுப்படுத்தும் அரசியல்
சக்திகளுக்குச் சம்பந்தம் கொண்டதாக இருக்கலாம் - அவற்றின் பங்கு என்ன ஏது என்று
அவருக்குத் தெரியும், நமக்குத் தெரியாது. ஆகையால் அவர் கைதும்
சிறை வாசமும் அரசியல் காரணங்களால் ஏற்பட்டது என்று - சில அரசியல் தலைவர்களின்
நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்டது என்ற ஒரு அர்த்தத்தில் - அவர் பேசி இருக்கலாம்.
அவர் யாரை நினைத்து என்ன அர்த்தத்தில் பேசினார் என்பது அவருக்குத்தான் தெரியும், நமக்குத் தெரியாது. |
|
2. கேள்வி: லோக் சபா
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன
கார்கே ஆகிய இருவரும் பிரதானமாக முன்னிலை வகிக்க, இண்டி கூட்டணிக் கட்சிகள்
தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை 'பொதுவெளிப் பதவி நீக்கம்' (public
impeachment) செய்திருக்கிறார்களே? பதில்: கழைக் கூத்தாடிகள், பலரும் சேர்ந்து பார்க்கக் கூடிய பொதுவெளியில் தான் அந்தர் பல்டி அடித்து
வித்தை காட்டிக் கூடி இருப்பவர்களை மகிழ்விப்பார்கள். பொதுவெளி வித்தையில்
அவர்களுக்குப் பிழைப்பு நடக்கும். பார்வையாளர்களுக்கும் பொழுது போகும். |
|
3. கேள்வி: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா
மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏன் கடும் வெறுப்பைக் காண்பிக்கிறார்? பதில்: ராகுல்
காந்திக்கு 56 வயது. அவரது நெடுநாள் குறி இந்தியாவின்
பிரதமர் ஆவது. 2029-ல் அடுத்த லோக் சபா தேர்தல்
நடக்கும்போது அவர் வயது 59 ஆகும். அந்த வருடமும் அவர் பிரதமராகும்
வாய்பில்லை என்று அவரது உள் மனம் சொல்லும். அவருக்கான அடுத்த சான்ஸ் 2034-ல், அவருடைய 64-வது வயதில். அப்போது கிடைத்தாலும் அந்தப் பதவியை ஏற்க
அவர் தயார் தான். ஆனால் 2034 வரை ராகுல் காந்தியே கதி என்று
காங்கிரஸ் கட்சி கிடக்குமா என்பது நிச்சயமல்ல. நாள் ஆக ஆக, சகோதரி பிரியங்கா காந்தியும் அவருடைய மகனும் கூட தன்னை
ஓரம்கட்டிவிட்டு கட்சிக்குள் தலையெடுப்பார்களோ என்ற பயமும் ராகுல் காந்திக்குள்
ஒளிந்திருக்கும். இதையெல்லாம் தாண்டி 2039 வரை, அதாவது ராகுல் காந்தியின் 69-வது வயது வரை, பிரதமராகத்
காத்திருக்கும் நினைப்பே அவரைக் கிறுகிறுக்க வைக்கும். இவ்வாறு காங்கிரசுக்கு வெளியில் தனது மதிப்பைப் பூஜ்யம் ஆக்கி, மத்தியில் கூட்டணி அரசிலாவது காங்கிரஸ் பங்கு பெறும்
வாய்ப்பைத் தொடர்ந்து நொறுக்கி, இந்திரா
காந்தியின் பேரனான தன்னுடைய பிரதமர் கனவைச் சிதைத்து வரும் மோடி மற்றும் அமித்
ஷா மீது ராகுலுக்கு வெறுப்பு ஏற்படத்தானே செய்யும்? |
|
4. கேள்வி: "தமிழ்நாட்டுக்காக, தமிழை முதன்மைப்படுத்தி ஒரு
கொடியை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு தனிக் கொடி தேவை" என்று தமிழக
வெற்றிக் கழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறாரே? பதில்: கொடியின் நடுவில் 'வெற்றித் தமிழ்' என்ற வாசகமும் தோன்ற வேண்டுமா? ஆதவ் அர்ஜுனாவின் அசட்டுப் பேச்சை முதல்வர்
விஜய் கண்டிக்காவிட்டால், அர்த்தம் இதுவாக இருக்கலாம்: கட்சியின் அடுத்த கட்டத் தலைவர் மூலமாக
விஜய் ஒரு வில்லங்கமான யோசனையை நழுவ விட்டுப் பார்க்கிறாரோ? ஒன்றும் சொல்வதற்கில்லை. |
|
5. கேள்வி: "மீண்டும் உலகத் தமிழ் மாநாடு இந்தத் தமிழ்
மண்ணில் தொடங்கி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக நடத்தப்படும்" என்று தமிழக
அமைச்சர் ராஜ்மோகன் கூறி இருக்கிறாரே? பதில்: திராவிட
அரசியல் கட்சித் தலைவர்களுக்கு உலகத் தமிழ் மாநாடு நடத்துவது, பட்டாசு வெடிப்பது மாதிரி. அவர்களின் நோக்கம்
பட்டாசைப் போற்றுவது அல்ல; வெடிச் சத்தம் கேட்டு மகிழ்வது. முன்பு
அடுத்த வீட்டுக்காரன் வைத்த பட்டாசை விட, தற்போது
தன்னுடைய பட்டாசு பெரிதாக வெடிக்க வேண்டும் என்பது அவர்களின் ஆசை. |
|
பகுதி 149 // 01.11.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com |
No comments:
Post a Comment