Saturday, 21 November 2026

கேள்வி-பதில் (21.11.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: சோனியா காந்தியின் சுயசரிதைப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, "உணவு வேளைகளின் போது, என் அம்மா என் அப்பாவின் மடியில் அமர்ந்திருப்பார்" என்று தெரிவித்தார். எதற்காக ராகுல் இதைச் சொன்னார்?

 

பதில்: இங்கிதமில்லாமல் எதையோ பேசி பார்வையாளர்களின் கவனத்தைத் திசைதிருப்பி, காங்கிரஸ் தொடர்பான ஒரு முக்கிய விஷயத்தை அனைவரும் மறக்கட்டும் என்பதற்காக இருக்கும். அந்த முக்கிய விஷயம்: கணவர் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பின், உணவு வேளை மட்டுமல்ல, எல்லா வேளைகளிலும் சோனியா காந்தி மெள்ள மெள்ள நிரந்தரமாகக் காங்கிரஸ் கட்சியின் தலையில் ஏறி உட்கார்ந்து விட்டார்.

 

 

2. கேள்வி: "விரைவில் திமுக ஆட்சி அமையும். அதற்கு நாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும்" என்று மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

 

பதில்: சவால் அரசியல், சவடால் அரசியல், உதார் அரசியல், திராவிட அரசியல் கட்சிகளின் வாடிக்கை. அது அரங்கேறும் போது அரசியல் நோக்கர்கள் கொட்டாவி விட்டுக் கொள்ளலாம்.

 

 

3. கேள்வி: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில், வரும் திருக்கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதுபற்றி உடனே கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு கடுமையாகப் போராடி தமிழக அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது. தவெக அரசு அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார். முதலமைச்சர் விஜய், ஸ்டாலினுக்கு எவ்வாறு விளக்க முடியும்?

 

பதில்: விஜய் தனது செயல் மூலம் ஸ்டாலினுக்கு விளக்கலாம். அதாவது, உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து, குறிப்பிட்ட நாளில் அந்த தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட தேவையான அரசு ஏற்பாடுகளைச் செய்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, ஸ்டாலின் முகத்தில் கரியைப் பூசி, ஒரு அரசு திறமையாகச் செயல்பட்டு சட்டத்தை மதித்து நடப்பது, அத்துடன் ஹிந்துக்களின் நியாயமான எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது, சிறந்த சட்ட நடவடிக்கை என்று ஸ்டாலினுக்கு விளக்கலாம். ஆனால், முதலில் விஜய்க்கு இது விளங்க வேண்டும்.

 

 

4. கேள்வி: சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ பேட்டியில், ஒரு மொபைல் போனைக் கையில் வைத்துக் காண்பித்தபடி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இவ்வாறு பேசி இருக்கிறார்: "இந்த போனுக்கும் வானில் பறக்கும் ட்ரோனுக்கும் என்ன வேறுபாடு? எலக்ட்ரிக் மோட்டார்தான் வேறுபாடு. ட்ரோனில் கேமரா, பேட்டரி இருக்கிறது. இதிலும் கேமரா, பேட்டரி உண்டு. இந்த போனில் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் வைத்தால், இதுவும் ட்ரோன் ஆகும்".

 

ராகுல் காந்தியால் எப்படி இவ்வாறு எக்குத்தப்பாகச் சிந்திக்க முடிகிறது?

 

பதில்: காங்கிரஸ் கட்சி அனைவருக்கும் உணர்த்தும் நிதர்சனம், ராகுல் காந்தியை எங்கோ அழைத்துச் சென்று அவ்வாறு பேச வைக்கிறது. அந்த நிதர்சனம்: காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனாகவும், கர்நாடக மாநிலத்தில் அமைச்சராகவும் இருக்கும் பிரியங்க் கார்கேவுக்கும், காங்கிரஸை ஒரு கைதியாகத் தனது கையில் வைத்திருக்கும் ராகுல் காந்திக்கும் என்ன வேறுபாடு? வம்சாவழி மட்டும்தான் வேறுபாடு. ராகுல் காந்திக்கு அமைந்தது போன்ற ஒரு சக்தி மிக்க வம்சாவழியை பிரியங்க் கார்கேவுக்குப் பொருத்திப் பார்த்தால், பிரியங்க் கார்கே இன்று காங்கிரஸ் கட்சியில் கொடிகட்டிப் பறப்பார்.

 


5. கேள்வி: வைகோ, சீமான், திருமாவளவன் ஆகிய அரசியல் தலைவர்களின் தூக்கலான பாசிடிவ் மற்றும் நெகடிவ் குணங்கள் எவை?

 

பதில்: வைகோ - பேச்சாற்றல், ஜால்ராற்றல்; சீமான் -  விடாமுயற்சி, வெட்டி முயற்சி; திருமாவளவன் - நண்பனுக்கு நண்பன், நண்பனின் எதிரிக்கும் நண்பன்.


பகுதி 157 // 21.11.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

 

No comments:

Post a Comment