-- ஆர். வி. ஆர்
'கறுப்பர் கூட்டம்' என்று அதிகம் பெயர்
தெரியாத ஒரு அமைப்பு திடீரென்று பெரிய செய்தியாகி விட்டது. பெரிதாக எதுவும் சாதித்தோ
சேவை செய்தோ அல்ல. பிக்பாக்கெட் ஆசாமி வங்கிக் கொள்ளையில் பிடிபட்டு பேர் பரவிய
வகையில் அந்த அமைப்பு பிரபலம் அடைந்திருக்கிறது.
மிக அதிகமான ஹிந்துத் தமிழர்கள் இறைவனைத் துதிக்கும்
பாடல், கந்த சஷ்டி கவசம். தங்களின் எல்லாவித நலங்களுக்காக
முருகப்பெருமானின் அருள் கிடைக்க அவர்கள் உச்சரிக்கும் பிரார்த்தனை அது.
கந்த சஷ்டி கவசத்தின் சில வரிகளை மிக வக்கிரமாக விமரிசித்து ஆபாசமாகக்
கிண்டல் செய்து யூ-டியூபில் ஒரு வீடியோ வெளியிட்டது
கறுப்பர் கூட்டம். அந்த பாதகச் செயலுக்கு ஹிந்து மக்களிடைய பலமான எதிர்ப்புகள்
இப்போது கிளம்பி இருக்கின்றன. அந்த அமைப்பின்
மேல் வழக்கு பதியப்பட்டு ஒருவர் கைதாகி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஹிந்துக்களையும் ஹிந்து தெய்வங்களையும் பகிரங்கமாக இழித்துக்
கேவலம் செய்வதைத் தொடங்கியவர் 'தந்தை பெரியார்' என்று அழைக்கப்படும் ஈ.வே.ராமசாமி. அவர் தொடங்கியது திரரவிடர் கழகம். அவரது சீடர்கள் ஆரம்பித்த
அரசியல் கட்சி தி.மு.க. இந்த அமைப்புகளின் தலைவர்கள் தங்களைப் 'பகுத்தறிவுவாதிகள்' என்று பெருமையாகச் சொல்வதுண்டு.
அவர்களது பகுத்தறிவு, ஹிந்துக்களையும் ஹிந்துக்
கடவுள்களையும், ஹிந்து பழக்க வழக்கங்களையும் வெறுப்புடன்
இகழ்வது, கேலி செய்வது, மற்ற
மதத்தவர்களின் ஒன்றுசேர்ந்த ஓட்டையும் தோள் வலிமையையும்
மதித்து அவர்களுக்கு வணக்கம் சொல்வது.
ஒருவர் கற்றவராக இருக்கலாம், கெட்டிக்காரராக
இருக்கலாம், திறமைசாலியாக இருக்கலாம் - அதே சமயம் நல்ல
நோக்கமும் தூய சிந்தனையும் அற்றவராக இருக்கலாம், பாசாங்கு
வாதங்கள் செய்யலாம். ஈ.வே.ரா-வும் தி.மு.க-வின் கலைஞர் கருணாநிதியும்
அப்படியானவர்கள். அவர்கள் மறைந்தாலும் அவர்களின் போக்கும் நோக்கமும் இன்றும் தொடர்வதால்
அவர்களைக் குறிப்பிடும் அவசியம் இருக்கிறது.
ஹிந்துக்களின் ஓட்டுக்களை வாங்கி, ஆட்சியைப் பலமுறை பிடித்து அதன் பலவாறான
பலன்களைக் கண்டவர் கருணாநிதி. அந்தப் பலன்கள் இன்று அவர்
பேரன் வரை வளர்ந்து கொள்ளுப்பேரனையும் தொடுகின்றன. அவர் ஹிந்துக்களை இகழ்ந்தவாறே
தலைமுறைகளுக்கும் அப்படிப் பயன் அடைந்தவர். இருந்தாலும், தனது 78-வது வயதில் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு சென்று
அந்த மதத்தினர் முன்னிலையில் ஹிந்துக்களை பழித்துப் பேசினார். அதாவது, "இந்து என்றால் திருடன்" என்று ஏதோ ஒரு அகராதியில் இருப்பதாக நாக்கு கூசாமல் பேசியவர்,
வழக்கு வந்தவுடன் “உள்ளம் கவர்ந்த கள்வன்” என்ற விதத்தில் பேசியதாக தப்பிக்கும் விளக்கத்தை
கொடுத்தார். பின்னர் அவரது மகன் ஸ்டாலின், ஒரு திருமணத்திற்குச் சென்று, ஹிந்து திருமண
மந்திரங்களை இழிவு செய்து அவற்றைக் ‘கேவலம்’
என்று மைக்கில் வர்ணித்தார். ஹிந்துக்களின் அமோக ஆதரவுடன்
அடுத்த முதல் அமைச்சர் ஆக ஆசைப்படும் தற்போதைய தி.மு.க தலைவர் இவர்.
கறுப்பர் கூட்டத்திற்கு தி.க-வின் ஆதரவு உண்டு. தி.க-விற்கு தி.மு.க-வின்
நேசமும் பாசமும் உண்டு. மூன்று அமைப்புகளுக்கும் ஹிந்து மதத்தின் பால் உதாசீனம் அல்லது
இகழ்ச்சி உண்டு. அப்படியானால் கறுப்பர்
கூட்டத்தின் இழிச் செயலுக்கு ஆதரவும் பாதுகாப்பும் எதுவரை நீளும் என்று ஊகிக்கலாம்.
எல்லா மதங்களிலும் கடவுள் நம்பிக்கைகள்,
புராணக் கதைகள், ஸ்தோத்திரங்கள், பழக்க வழக்கங்கள் என்று உண்டு. அவைகள் நமது
தர்க்க வாதங்களுக்கும் கேள்விகளுக்கும் தர்க்க ரீதியான பதில்கள் தராது. ஒரு மதத்தில்
நம்பிக்கை வைத்திருப்பவர்கள், மற்றவர்களைப் புண்படுத்தாமல் தங்கள் மார்க்கத்தில் தங்கள் வாழ்க்கையில் கவலைகளையும் துயரங்களையும்
எதிர் கொள்கிறார்கள், அமைதி தேடிக் கொள்கிறார்கள் என்றால் மற்ற
யாரும் அதில் குறுக்கீடு செய்யக் கூடாது. இது போக, போலீஸ்காரர்கள்
இல்லாமல் மக்களிடையே ஓரளவிற்கு இணக்கத்தையும்
கட்டுப்பாட்டையும் கூட கடவுள் நம்பிக்கை ஏற்படுத்துகிறது.
பல மொழிகள் பேசும் பரந்து விரிந்த இந்தியா ஒரே தேசமாக மக்கள் மனதில்
நிலைத்து நிற்பதற்கான காரணம், அதன் அரசியல் சட்டம்
அல்ல - மிகப் பெருவாரியான ஹிந்துக்கள், நாட்டின் பல
பகுதிகளில் நிறைந்திருக்கும் புண்ணிய ஸ்தலங்கள், புண்ணிய
நதிகள் மற்றும் புண்ணிய கடல்பகுதிகளில் நாட்டம் கொண்டு ‘அந்தப் பிரதேசங்களை உள்ளடக்கிய
நாடு எம் நாடு’ என்று மனதில் போற்றுகிறார்கள். அதனால்தான் இந்தியா எளிதாக
ஒன்றுபட்டு நிற்கிறது.
மதத்தின் துணை இல்லாமல், வழிபாடுகள் செய்யாமல், ஒருவர் தன் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை
சந்திக்க முடியும் என்றால் அவர் அப்படி இருக்கலாம். அப்படிப்பட்ட எவரையும் ‘கோவிலுக்கு
வா, தெய்வ நம்பிக்கை வை, பிரார்தனை செய்’
என்று ஹிந்து மதம் சொல்வதில்லை, ஹிந்துக்களுக்கும் அப்படி விலகி இருக்கும் மனிதரை சட்டை
செய்வதில்லை. இவ்வளவு பெருந்தன்மையான மதத்தினரின் ஓட்டுக்களை வாங்கி ஆட்சியில் அமர்ந்து
வேண்டியதை அனுபவித்து அந்த மக்களின் மதத்தையும் மத நம்பிக்கைகளையும் இழித்துப்
பேசுவது அற்பமானது, அநாகரிகமானது, அயோக்கியத்தனமானது.
சமீப காலம் வரை இதை சுருக்கென்று உணராத
பெருந்தன்மை கொண்டவர்களாக ஹிந்துக்கள் இருந்தார்கள்.
ஹிந்துக்களின் மத நம்பிக்கையை தி.க-வும், தி.மு.க-வும்
அவர்கள் தாங்கிப் பிடிக்கும் எந்தக் கூட்டமும் குலைக்காது. தமிழக ஹிந்துக்களும்,
தங்களின் நம்பிக்கைகளை ஏளனம் செய்பவர்களை எதிர்க்கும் உணர்வை இப்போது பரவலாகப் பெற்றுவிட்டார்கள்.
இது வாக்குச் சாவடியிலும் காட்டப் பட்டால்தான் ஹிந்து மத எதிர்ப்பின் அரசியல்
பின்புலம் உடையும்.
தீவிரமான எதிர்ப்புகளைப் பார்த்து, கறுப்பர்
கூட்டம் தனது ஆபாச விமரிசன விடியோவிற்காக மன்னிப்பு கேட்டுவிட்டது, தனது வீடியோவை யூ-டியூபிலிருந்து
அகற்றிவிட்டது என்ற செய்தி வருகிறது. ஆனால் தமிழகத்தின் ஹிந்து மத எதிர்ப்பாளர்கள் சீன தேசம் மாதிரி.
இவர்களின் பின்வாங்கல் எதுவும் நிரந்தரம் அல்ல. இவர்களின் அரசியல் ஆதரவாளர்களுக்கு,
ஹிந்து மத வெறுப்பினால் பதவிகளும் கிடைக்காது, அதன் பலன்களும் கிட்டாது என்று உறுதியாகத் தெரிய வைத்தால்தான், அவர்களின்
பகுத்தறிவு வாலைச் சுருட்டும்.
ஹிந்துக்கள் நிரம்பிய இந்தியா, சட்டத்தினால் மட்டும் ஒன்றாக நிலைப்பதில்லை.
அது போல, ஹிந்து மதத்தை எதிர்ப்பவர்களையும் வெறும் சட்ட நடவடிக்கையால் மட்டும்
வீழ்த்த முடியாது. ஒன்று பட்ட அதே ஹிந்து மத உணர்வால்தான் முடியும். அதற்கான வேளை
விரைந்து வருகிறது.
ஹிந்து மத எதிர்ப்பை ஒரு அரசியல் கட்சி வெளிப்படையாகக் காட்டிய மாதிரி, ஹிந்து
மத ஆதரவையும் ஒரு அரசியல் கட்சி பகிரங்கமாக வெளிப்படுத்தி அதற்காகப் பாடுபட்டால் சமாதானத்தை எப்போதும் விரும்பும் ஹிந்துக்களுக்கு
நல்லது. இதுவும் நடக்கிறது. இன்னமும் நல்லது
நடக்கட்டும்.
* * * * *
Copyright © R.
Veera Raghavan 2020