|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் இந்த ஆண்டு
திருக்கார்த்திகை அன்று தீபம் ஏற்றப்பட சில நிபந்தனைகளுடன் இடைக்கால அனுமதி
வழங்கி உத்தரவிட்டு, மெயின் அப்பீல்
வழக்கைப் பின்னர் விரிவாக விசாரிக்க இருக்கிறது சுப்ரீம் கோர்ட். இது பற்றி
அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர், "உச்ச நீதிமன்றம்
அளித்த தீர்ப்பு சரியா தவறா என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்? உச்ச நீதிமன்றம்
இந்த ஆண்டுக்கு குடுத்திருக்காங்க. மீண்டும் இந்த அரசு முழுமையாக வலியுறுத்த
வேண்டும். அதோட, இரண்டு தரப்பு
வாதங்களையும் கேட்டுத்தான நீதிமன்றம் தீர்ப்பு குடுத்திருக்காங்க? இறுதித்
தீர்ப்பு வந்த பின்புதான் முழுமையான கருத்து சொல்ல முடியும்" என்று
குழப்பமான பதிலைச் சொல்லி இருக்கிறாரே? பதில்: எந்த
சைடு கோல் போட்டால் அதிக வாக்காளர்களை ஈர்க்கலாம், அதிக ஓட்டு வாங்கலாம், என்று
பழனிசாமிக்குப் புரியவில்லை. இந்த சைடு ஒரு கோல், எதிர்
சைடு ஒரு கோல், என்று போட்டுவிட்டார். இனி ஹிந்து
பக்தர்கள் சைடு, சிறுபான்மை மதத் தலைவர்கள் சைடு ஆகிய
இரு தரப்பினரிடமும் "உங்களுக்காக விளையாடித்தான் கோல் அடித்தேன்"
என்று சொல்லி இறுதித் தீர்ப்பு வரும்வரை தப்பிப்பார். |
|
2. கேள்வி: திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் உச்ச
நீதிமன்றம் வழங்கி இருக்கும் இடைக்கால உத்தரவு 'வியப்பும் அதிர்ச்சியும்
அளிக்கிறது' என்று விசிக
தலைவர் திருமாவளவன் கூறி இருக்கிறாரே? பதில்: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு எத்தனை
பேருக்கு வியப்பும் அதிர்ச்சியும் அளித்தது என்று யாருக்கும் தெரியாது.
திருமாவளவனின் கருத்து ஒருவருக்குக் கூட வியப்போ அதிர்ச்சியோ அளித்திருக்காது. |
|
3. கேள்வி: "திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும்
விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றத்தின் இந்த
உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்" என்று விசிக-வைச்
சார்ந்த மாநில அமைச்சர் வன்னியரசு கருத்து சொல்லியிருக்கிறாரே? பதில்: மறு
ஆய்வு மனுவைப் பரிசீலித்து அந்த மனுவை சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ் செய்தால், அந்த உத்தரவை அமைச்சர் ஏற்றுக் கொள்வாரா? உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பிடித்தால் ஏற்றுக் கொள்ளலாம், பிடிக்காவிட்டால் 'ஏற்றுக்
கொள்ளமுடியாது' என்று சொல்வதற்கு இது உள்கட்சி
விவகாரமல்ல. பழைய கூட்டணியின் தலைமைக் கட்சியான திமுக தேர்தலில் தோற்றதால் அந்தக்
கூட்டணியை விட்டுவிட்டு, புதிய ஆட்சி அமைத்த தவெக கூட்டணிக்குத்
தாவி விசிக பயன் கண்டிருக்கலாம். அந்த வழியில், சுப்ரீம்
கோர்ட்டின் உத்தரவை ஏற்க முடியாது என்று ஒரு அமைச்சர் அறிவித்து வேறு போக்கிடம்
தேடமுடியாது. |
|
4. கேள்வி: "உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி, திருப்பரங்குன்றம்
தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்" என்று 'வீ த லீடர்ஸ்' தலைவர் அண்ணாமலை
சொல்லி இருக்கிறாரே? பதில்: பழைய அண்ணாமலை தெரிகிறார். சுற்றுச் சூழல், சுத்தம், சுகாதாரம் போன்ற விஷயங்கள் பொதுநலன்
சம்பத்தப் பட்டவை என்றாலும், மாநில அரசின் தவறுகளைக் கூர்மையாக விமர்சித்து அரசியல் பேசும் அண்ணாமலை
அதிக கவனம் ஈர்ப்பார். ஒரு அரசியல் தலைவராக, அண்ணாமலைக்கு அது பெரிய பலம். |
|
5. கேள்வி: உடனடியாகச் சொல்வதற்கு, விஜய் ஆட்சியின் தலையாய
சிறப்பு என்று எதைக் குறிப்பிடலாம்? பதில்: விஜய்யின் சிகை அலங்காரம். |
|
பகுதி 158 // 23.11.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com |
No comments:
Post a Comment