Sunday, 9 February 2025

இந்தியர்களைச் சங்கிலியில் அனுப்புகிறது அமெரிக்கா. குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

 

          -- ஆர். வி. ஆர்

  

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள், அல்லது விசா காலம் முடிந்தும் அந்நாட்டில் தங்கியவர்கள். அவர்களில் நூற்றி நான்கு நபர்களை நாடு கடத்தி அண்மையில் இந்தியாவிற்குத்  திருப்பி அனுப்பியது அமெரிக்கா.


அந்த நூற்றி நான்கு இந்தியர்களின் கைகால்களில் விலங்கு பூட்டி ஒரு அமெரிக்க ராணுவ விமானத்தில் ஏற்றி இந்தியாவின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அவர்களை இறக்கியது அமெரிக்கா. அவர்களை விலங்கிட்டு அழைத்து வந்தது மனிதாபிமானம் அற்றது, அவர்களை அவமானம் செய்வது, என்று சில எதிர்க் கட்சித் தலைவர்கள் கண்டனம் செய்தார்கள் – ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உட்பட.  வேறு சில எதிர்க் கட்சிகளின் எம்.பி-க்களும் அவ்வாறு ஆட்சேபித்தார்கள்.   

 

அமெரிக்கா திருப்பி அனுப்பிய இந்தியர்கள் தங்களின் கனவுலகம் கைவிட்டுப் போனது பற்றி அமெரிக்க அரசாங்கத்தின் மீது கோபம் வைத்திருப்பார்கள். நாடு கடத்தலாகி வரும்போது அவர்களுக்கு மனப் பதட்டமும் இருந்திருக்கும். அது இயற்கை.

  

நாடு கடத்தலான இந்தியர்களின் கைகளும் கால்களும் விமானத்தில் சுதந்திரமாக இருந்தால், அவர்களில் சிலர் நிதானம் இழந்து உடன் வரும் அமெரிக்கப் பாதுகாப்பு வீரர்களை வான் பயணத்தில் தாக்க மாட்டார்கள் என்பது நிச்சயமா? விரக்தியின் உச்சத்தில் அவர்கள் எதையாவது பிடுங்கி விமானத் தளத்திலோ கூரையிலோ எறியலாம். வான் களேபரம் பெரிதாகலாம். ஒன்றும் சொல்வதற்கில்லை. எச்சரிக்கை அவசியம்.


பறக்கும் விமானத்திற்குள் கலகமும் தாக்குதலும் செய்பவர்களைக் கட்டுப்படுத்த, உடன் வரும் அமெரிக்கப் பாதுகாப்பு வீரர்கள் வீதியில் இருப்பது போல் மெலிதான துப்பாக்கிப் பிரயோகமும் செய்ய முடியாது. அதற்காக, நாடு கடத்தலாகும் ஒவ்வொரு இந்தியப் பயணிக்கும் தடியுடன் நாலைந்து பாதுகாப்பு வீரர்கள் விகிதம் ஒரு பெரும் பாதுகாப்புக் கூட்டத்தை அமெரிக்கா விமானத்தில் அனுப்ப முடியாது. விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்கு உகந்த வழி, நாடு கடத்தல் ஆகிறவர்களின் கை கால்களில் சங்கிலி போடுவது என்பது புரிந்துகொள்ளத் தக்கது, தவிர்க்க முடியாதது.

 

அமெரிக்கா செய்தது அமெரிக்காவுக்கு சரி.  ஆனால் கைகால்களில் சங்கிலியோடு திருப்பி அனுப்பப் பட்ட இந்தியர்கள் நம் மனதுக்கு வருத்தமான காட்சி. அது  இந்திய நாட்டின் கண்ணியம் வாங்கிய அடி. சக இந்தியக் குடிமக்களாக நாம் இப்படி நினைக்க, நாட்டின் கதி குறித்து வருத்தப்பட, நமக்கு அருகதை இருக்கிறது. ஆனால் நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பெரிதும் சிறிதுமாக – சிலருக்கு மிகப் பெரிதாக, சிலருக்கு மிகச் சிறிதாக – அந்த அருகதை இல்லை.

 

நமக்குச் சுதந்திரம் கிடைத்து 77 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அது மூன்று தலைமுறைக் காலம். மத்தியிலும் மாநிலங்களிலும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் ஆட்சி செய்த லட்சணமும் நிர்வாகம் செய்த அழகும் எங்கெல்லாம் தெரிகிறது? நமக்குக் கிடைத்திருக்கும் குடிநீர் மற்றும் சாலை வசதிகளில் தொடங்கி, கல்வித் தரம், வேலை வாய்ப்பு, வாழ்க்கை வசதி என்று போய், சட்டம் ஒழுங்கு மற்றும் அரசுத் துறைகளின் அவலத்தில் அவை சிரிப்பாய்ச் சிரிக்கின்றன. இருக்கிற நிலைமையை அனுசரித்து இந்தியாவில் பிழைப்பவர்கள் பலர், சௌகரியம் காண்பவர்கள் சிலர், என்ற குடிமக்கள் உண்டு. ஆனால் வேறு சில குடிமக்களும் உண்டு.  யார் அந்த வேறு சிலர்?

 

மற்ற பல நாடுகளில் கிடைக்கக் கூடிய நல்ல வேலை வாய்ப்புகளையும் வருமானத்தையும் விரும்பி அங்கு செல்ல எத்தனிக்கும் இந்தியர்கள் உண்டு, அவர்களில் சிலர் வளைகுடா நாடுகளில் பிளம்பர், கார் டிரைவராகப் போகிறார்கள். இன்னும் சிலர் அமெரிக்கா சென்று படித்து அங்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் சி.இ.ஓ-வாகவும் உயர்கிறார்கள். அதுவும் முடியாமல் இதுவும் முடியாமல் இருப்பவர்களில் பலர் முப்பது நாப்பது லட்சம் கடன் வாங்கிச் செலவழித்து, கடல் காடு வழியாகத் துன்பத்தில் பயணித்து, அமெரிக்காவுக்குள் ரகசியமாக நுழைக்கிறார்கள். அங்கு பிடிபட்டால் சங்கிலி அணிவிக்கப் பட்டு இந்தியாவுக்குத் திருப்பப் படுகிறார்கள்.   

 

அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூர், ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மெனி நாட்டு மனிதர்கள் இப்படி நாடு கடத்தப்டுவதை நாம் கேள்விப் படுகிறோமா? அப்படி நடப்பதில்லை. என்ன காரணம்?

 

அந்த நாட்டுக் குடிமக்களுக்குத் தேவையான கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், பிற வாழ்க்கை வசதிகள், சிறந்த அரசு நிர்வாகம் ஆகியவை அவர்கள் நாட்டிலேயே கிடைக்கின்றன. அதனால் பிழைக்கவும் பெரிய சம்பாத்தியத்தில் வாழவும் அவர்கள் அமெரிக்கா அல்லது வேறு வெளிநாடு போக வேண்டாம். அதுவும் ரகசியமாக அமெரிக்காவுக்குள் நுழைய அவர்களுக்கு அவசியமோ தூண்டுதல் காரணமோ கிடையாது.  

 

இந்தியா எப்படி? நம் மக்கள் அனைவருக்கும் உள் நாட்டில் நல்ல வேலை வாய்ப்பும் சிறந்த வாழ்க்கை வசதிகளும் போதிய அளவில் இன்றும்  கிடைக்கவில்லை.  அதற்குக் காரணம் நமது நாடுதானே? நமது நாடு என்றால், நமது நாட்டை 1947-க்குப் பிறகு மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சி செய்த அரசியல்வாதிகள் தானே காரணம் – பெரிதும் சிறிதுமாக? முதல் ஒன்றிரண்டு, அல்லது மூன்று, பத்தாண்டுகளுக்குப் பின்னர் நமது மக்கள் நல்ல முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக் கண்டிருக்க வேண்டும், இன்று அவை மேலும் பரந்து பெரிதாகி நம் மக்கள் அனைவரையும் வளப்படுத்தும் பெரிய உயரத்தில் நமது பொருளாதாரம் இருக்க வேண்டும்.  ஆனால் இல்லை.

 

ஆட்சியில் இருந்தாலும் எதிர்க் கட்சியில் இருந்தாலும் நமது அரசியல் கட்சித் தலைவர்களின் நேர்மைக் குறைவு, தன்னல மோகம் மற்றும் சுய-குடும்ப அக்கறை பிரசித்தமானது. இந்தியர்களின் நல்வாழ்க்கை ஆர்வத்தின் மீது, அதற்கான பிரயத்தனத்தின் மீது, கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளைப் போட்டு அவர்களை இடர்ப்படுத்தி முடக்கி வைத்திருப்பது இந்த அரசியல்வாதிகள் தான். அரசியல்வாதிகளில் முக்கால் வாசிப்பேர் இப்படியானவர்கள் என்பதால், நல்லது செய்ய நினைக்கும் மற்ற அரசியல்வாதிகளும் செயல்டுவதற்குத் திணறுகிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மெனி, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்தப் பரிதாப நிலை இல்லை.

 

பெருவாரியான மக்களைப் பல சங்கிலிகளில் பிணைத்து வைத்து, எதற்கும் ஏக்கத்துடன் அரசாங்கத்தை எதிர்பார்க்கும் நிலையில் அவர்களை வைத்து, சில வகுப்பு மக்களை எப்போதும் தாஜா செய்து, எல்லா மக்களிடமும் அரசாங்கப் பணத்தில் சில இலவசங்களை எறிந்து, அவர்களின் நன்றி கலந்த ஓட்டை வாங்குவது நமது அநேக அரசியல் தலைவர்களுக்கு எளிதாக இருக்கிறது. ஒரு கட்சியிலாவது மாறுதல் தெரிவது ஆறுதல்.

 

இந்தியர்களுக்குச் சொந்த நாட்டிலேயே பல இடர்ச் சங்கிலிகள் அணிவித்து – அதுவும் தடிமனான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் சங்கிலிகளில் மக்களைப் பிணைத்து – அவர்களை நசுக்கி வைத்திருக்கிறார்கள் நமது அநேக அரசியல் தலைவர்கள். இந்த அவலச் சங்கிலிகள் எப்போது உடைபடும் என்ற ஏக்கம்தானே நாட்டில் விவரம் அறிந்த நல்லோர்க்கு இருக்கும்?


* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

3 comments:

  1. Correct and realistic explanation Sir

    ReplyDelete
  2. Well said, sir. Population, too, plays an important role, next to poverty. The most educated prefer to move out as the lifestyle here is not lavish. Entrepreneurial efforts are weighed down with restrictive financial aid. Not that India is a poor country; we chose to be inadequate by letting officials loot, corrupt politics, corrupt officials, and voting to the wrong parties accepting money. We are good in resources, so we are not much dependent on other countries and can be self-sufficient. The only switch we need to make is for every individual to work with one goal: to make India great. Until then, with the population bursting at the seams, we will always exist the way we are now.

    ReplyDelete
  3. Well said. That's what will happen when you do anything out of the way

    ReplyDelete