Sunday, 26 January 2025

வேங்கைவயல் குற்றப் பத்திரிகை. அபத்தமாக ஆட்சேபிக்கும் கட்சிகள்

 

          -- ஆர். வி. ஆர் 


புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஒரு மேல்நிலை குடிநீர்த் தொட்டி இருந்தது. அங்கு வசிக்கும் பட்டியலின மக்களின் நீர்த் தேவைகளுக்காக அது  பயன்படுத்தப் பட்டது.


2022-ம் வருடம் யாரோ குரூரமாக அந்தத் தொட்டி நீரில் மனிதக் கழிவைக் கலந்ததால் அந்த மக்கள் பாதிப்படைந்து, அவர்களுக்கு நேர்ந்த அக்கிரமம் பொதுவெளியில் வந்தது. பின்னர் வழக்கு பதியப் பட்டு தமிழக சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை செய்தனர். அது முடிந்து தற்போது போலீசார் தமது குற்றப் பத்திரிகையைக்  கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கின்றனர்

 

வேங்கைவயல் வழக்கின் குற்றப் பத்திரிகை சொல்கிறது: அதே ஊரைச் சேர்ந்த மூன்று நபர்கள் அந்தக் குற்றத்தைச் செய்தனர். குற்றத்திற்கான காரணம், சிலரது முன் விரோதம். குற்றப் பத்திரிகை குறிப்பிடாத ஒரு விவரம்: அந்த மூவரும் பட்டியலின சமூகத்தவர்.

 

          விசிக, மார்க்சிஸ்ட்-கம்யூனிஸ்ட், அதிமுக, தமிழக பாஜக என்று ஆட்சியில் இல்லாத பிற கட்சிகள் சிபிசிஐடி சமர்ப்பித்த குற்றப் பத்திரிகைக்கு ஆட்சேபம் செய்கின்றன. வழக்கு மத்திய அரசின் சிபிஐ வசம் மாற்றப் பட வேண்டும், சிபிஐ புதிதாகப் புலன்விசாரணை செய்யவேண்டும், என்றும் கோருகின்றன. இந்தக் கட்சிகளின் பிரதான ஆட்சேபம் ஒன்று. அது விசிக-வின் தலைவர் திருமாவளவனின் அறிக்கையில் இப்படி வருகிறது.

 

"பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை"

 

   இந்த ஆட்சேபமும், வழக்கைப் புதிதாக நடத்த சிபிஐ வரவேண்டும் என்ற கோரிக்கையும், அபத்தமானது, சமூகத்திற்குக் கேடு செய்வதும் கூட.


   கீழான நோக்கத்தில் ஒருவர் தனியாகவோ கூட்டாகவோ செய்திருக்கக் கூடிய குற்றச்செயல் இது. எதுவாக இருந்தாலும், வழக்கிற்காக குடிநீர்த் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட சில மாதிரிகள் ஆய்வு செய்யப் பட்டிருக்கின்றன. குற்றம் சாட்டப் பட்ட மூன்று நபர்களின் டி.என்.ஏ-வும் சேகரிக்கப் பட்டிருக்கிறது.  அந்த மூவர் உபயோகித்த செல் போன்கள் கைப்பற்றப் பட்டு, அவற்றிலிருந்து முன்பு அழிக்கப்பட்ட சில படங்கள் மற்றும் உரையாடல்கள் மீட்டு எடுக்கப் பட்டிருக்கின்றன. சிலரின் குரல் மாதிரிகளும் சேகரிக்கப் பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் கோர்ட்டின் வசம் இருக்கின்றன. வழக்கை விசாரித்து, சாட்சியங்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, கோர்ட் தீர்ப்பு சொல்லப் போகிறது.

 

      இந்த வழக்கில் கீழ்க் கோர்ட்டின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகிறது? இறுதியாக இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்றால் சுப்ரீம் கோர்ட் என்ன தீர்ப்பு சொல்லும்? இந்தக் கேள்விகளுக்கு இந்த நேரத்தில் யாருக்கும் விடை தெரியாது – எல்லா புது வழக்குகளையும் போல. எல்லோரும் பொறுத்திருந்து தான் இந்த வழக்கின் முடிவை, அதற்கான காரணங்களை, தீர்ப்பின் மூலம் அறிய முடியும். 


   இந்த நிலையில் பிற கட்சிகள் சிபிசிஐடி-யின் குற்றப் பத்திரிகையை ஆட்சேபம் செய்வதிலும் ‘சிபிஐ வேண்டும்’ என்று கேட்பதிலும் என்ன அர்த்தம் இருக்கிறது?

 

சிபிஐ உள்ளே வந்தாலும், சிபிஐ செய்யும் புலன் விசாரணையின் முடிவில் அதே மூன்று  நபர்கள் தான் குற்றவாளிகள் என்று தெரிய வந்தால் அதை அந்த மற்ற கட்சிகள் ஏற்குமா ஏற்காதா? ஏற்காதென்றால், “வேறு சமூகத்தைச் சார்ந்த சிலரைக் குற்றவாளிகள் என்று சொல்லும் மாறுதலான குற்றப் பத்திரிகையைத் தான் நாங்கள் ஏற்போம்” என்ற ஒரு நிபந்தனையோடு அந்தக் கட்சிகள் இந்த வழக்கில் சிபிஐ-யை எதிர் நோக்குகிறார்களா? அப்படியான ஒரு உத்தரவாதத்தை சிபிஐ முன்கூட்டியே தர முடியாதே? பிறகு எதற்கு சிபிஐ?

                                                               

ஒவ்வொரு குற்றத்திற்கும் தனித்தனிக் காரணம் உண்டு, தனித்தனிப் பின்னணி உண்டு. குற்றம் செய்யும் ஒரு நபர் தன் ஊர்க்காரருக்கு, தன் ஜாதிக்காரருக்கு, தன் மதத்தவருக்கு  குற்றம் இழைக்கலாம். தன் சொந்தக்காரரிடமே ஒருவர் குற்றம் புரியலாம்.

 

பணம் சொத்து விஷயங்களில் அண்ணன் தம்பிகள் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது, வெட்டுவது, கொலை செய்வது நடக்கின்றன. திருமண உறவு தடம் புரள்வதால் சிலர் தங்கள் வாழ்க்கைத் துணையின் கதையை முடித்து வைக்கிறார்கள். சில பெண் குழந்தைகளிடம் அவற்றின் நெருங்கிய உறவினர்களே அட்டூழியம் செய்த செய்திகளும் வருகின்றன. இந்தக் குற்றங்களில் ஒருவர் தன் மனிதருக்கே, சக ஜாதி மனிதருக்கே, கேடு செய்வது நிகழ்கிறதே? 

 

வேங்கைவயல் வழக்கைப் பொறுத்தவரை குற்றம் சாட்டப் பட்ட மூவர்தான் குற்றத்தைச் செய்தனர் என்பதை நிரூபிக்க, கோர்ட் ஏற்கத்தக்க சாட்சியங்கள் உள்ளனவா என்பதுதான் முக்கியம். அவர்கள் என்ன சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பது சட்டத்திற்கும் கோர்ட்டுக்கும் முக்கியம் அல்ல. ஆனால் சில அரசியல் கட்சிகளுக்கு அதுதான் முக்கியம் என்றாகிறது. இது ஏன்?

 

சுதந்திரம் அடைந்து 77 வருடங்களுக்கு மேல் ஆகிறது. பட்டியல் சமூகத்து மக்களின் கல்வி நிலையை, பொருளாதார நிலையை, நமது அரசை நடத்திய கட்சிகள் கணிசமாக மேம்படுத்தவில்லை – மற்ற சாதாரண மக்களின் நிலையும் அதுதான். அதனால் அரசியல்வாதிகளைப் பற்றி சரியான புரிதல் அம்மக்களுக்குக் கிட்டுவது சிரமம்.

 

பல ஜாதி எளிய மக்கள் “பட்டியலின மக்கள்” என்று ஒரு கொத்தில் வருவதால் அவர்களை ஒரே கூட்டமாக அரசியல் ரீதியில் ஏமாற்றுவது, அதன் வழியாக அரசியலில் கொழிப்பது, பலப்பல அரசியல்வாதிகளுக்கு சௌகரியம். யார் நம்மை ஏமாற்றி ஓட்டு வாங்கிக் கொழிக்கிறார்கள் என்று  புரியாத அப்பாவிப் பட்டியலின மக்கள், அந்த மக்களின் நலனுக்காக என்று சொல்லி நடத்தப் படும் போராட்டங்களும் எழுப்பப்படும் கோரிக்கைகளும் அவர்களின் நலனுக்காகவே என்று எண்ணிப் பல நேரங்களில் ஏமாறுகிறார்கள்.   

 

இந்த விவகாரத்தில் சில கட்சிகள் அறிவித்த ஆட்சேபத்தால், பட்டியலின மக்கள் வேறு சமூகத்தினரிடம் இருந்து மனதளவில் இன்னும் சற்றுத் தள்ளி இருப்பார்கள். அந்த வேறு சமூகத்தினருக்கும் இதே உள்ளுணர்வு ஏற்படும். முடிவில் இது அனைத்து சமூகத்திற்கும் நல்லதல்ல.  சிபிசிஐடி-யின் குற்றப் பத்திரிகையை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுக்கு இது புரியவில்லையா?


மாநிலத்தை ஆளும் திமுக-வைப் பொறுத்தவரை, வேங்கைவயல் மக்களுக்கு ஏற்பட்ட அக்கிரமம் கோர்ட் வழக்காக மாறி, இந்த வழக்கை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் பின்னர் உற்றுக் கவனிக்கும் என்றாகி விட்டது. ஆகையால், புலன் விசாரணையில் கிடைத்த சாட்சியங்கள் காட்டும் நபர்களை குற்றப் பத்திரிகையில் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டால்தான் கட்சியின் பேர் ரிப்பேர் ஆகாமல் இருக்கும், அதுதான் பாதுகாப்பான அரசியல், என்ற நிர்பந்தமும் இதில் சேர்ந்துவிட்டது – அதுவும் சமீபத்தில் அண்ணா பல்கலைக் கழக பாலியல் துன்புறுத்தல் எப்.ஐ.ஆர் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் மாநில போலீசுக்கு வைத்த குட்டின் வலி இன்னும் ஆறாத நிலையில்.


கடைசியாக ஒன்று. அரசியல் கட்சிகள் எதையாவது சரியாகச் செய்தாலும் தவறாகச் செய்தாலும், அதன் நோக்கம் தாங்கள் தப்பிக்க, தாங்கள் பிழைக்க, தாங்கள் சுயலாபம் பார்க்க என்றுதான் இருக்குமோ?


* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

No comments:

Post a Comment