Wednesday, 15 January 2025

பெரியாரைத் துணைக் கொள்! அரசியலில் புது அர்த்தங்கள்!

           

         -- ஆர். வி. ஆர்

           

திராவிட அரசியல் கட்சிகளால் – முக்கியமாக, திமுக-வால் – ‘பெரியார்‘ என்று புகழப் படுகிறவர், திராவிடர் கழகத்தின் நிறுவனர் ஈ.வெ. ராமசாமி.   எப்படியானவராக இருந்தார் ஈ.வெ.ரா?


பேச்சிலும் எழுத்திலும் தமிழ் மொழியை, அதைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை, இகழ்ந்தவர் ஈ.வெ.ரா. தமிழை ‘சனியன்‘ என்றும் வைதவர். தமிழர்களை ஆங்கிலத்தில் பேசச் சொன்னவர். கடவுளை நம்புகிறவர்களை, வணங்குபவர்களை, முட்டாள், அயோக்கியன், காட்டுமிராண்டி, என்று வசை பாடியவர் ஈ.வெ.ரா.

 

ஆண்-பெண் திருமண உறவை நகைத்தவர் ஈ.வெ.ரா. அவர் பெண்மையின் விசேஷத்தை, பெருமையை, உணராமல் பெண்களைச் சிறுமைப் படுத்திப் பேசியவர். அவர் பேசிய, எழுதிய, கீழான எண்ணங்கள் பலவற்றை அப்படியே பொதுவில் சொல்வதற்குப் பலரும் நாகரிகம் கருதித் தயங்குவார்கள்.   

 

இவை அனைத்தும் திமுக, அதிமுக மற்றும் பெரியாரை மதிக்கும் சில சிறு கட்சிகளுக்குத் தெரியும். இருந்தாலும் அக் கட்சிகள், குறிப்பாக திமுக, ஏன் ஈ.வெ.ரா-வை உயர்த்திப் பிடிக்கின்றன?

 

எல்லாம் தெரிந்தும் முன்பு அவரைப் போற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், இப்போது ஏன் திடீரென்று ஈ.வெ.ரா-வைக் கடுமையாக விமரிசனம் செய்து இகழ்கிறார்?

 

கருணாநிதியின் திமுக ஆட்சியில் அவர் ஈ.வெ.ரா-வைக் கொண்டாட ஆரம்பித்தார். ஈ.வெ.ரா-வை உயர்த்திப் பிடித்தால், அரசியலில் தான் இயங்குவது தனது லாபத்திற்காக அல்ல, ஒரு சமூக சீர்திருத்தவாதியின் கொள்கைகளைப் பின்பற்ற, நடைமுறைப்படுத்த, நான் இருக்கிறேன் என்று சிறிது காட்டிக் கொள்வதற்காக ஈ.வெ.ரா அவருக்குப் பயன்பட்டார். அந்தப் போற்றுதல் திமுக-வில் இன்றும் தொடர்கிறது. ஏதோ ‘காட்டிக் கொள்ள’ப் பயன்படும் வெளிவேஷம் இது. மலிவு அரசியலில் ‘ஷோ’ வேண்டுமே!

 

ஈ.வெ.ரா இகழ்ந்த திருக்குறளின் ஆசிரியர் திருவள்ளுவர். கடவுள் வாழ்த்து, கள்ளுண்ணாமை, ஒழுக்கமுடைமை, செங்கோன்மை போன்ற அதிகாரங்களில் குறள் எழுதியவர். அந்தத் திருவள்ளுவருக்குக் கன்னியாகுமரியில் கடல்பாறை மீது பெரிய சிலை வைத்துப் பெருமை கண்டது கருணாநிதியின் திமுக ஆட்சி. திருக்குறளை இகழ்ந்த ஈ.வெ.ரா-வுக்கும் தமிழகத்தில் ஊர் ஊராகச் சிலைகள் வைத்துப் புளகாங்கிதம் அடைந்தது அவருடைய திமுக ஆட்சி.

 

ஈ.வெ.ரா-வைப் போற்றி மகிழ்ந்த கருணாநிதி, திருக்குறளுக்கு உரையும் எழுதியவர்.

 

கருணாநிதியின் இந்தப் பெரிய முரண்பாடுகள், பெருவாரியான தமிழக மக்களைப் பாதிக்கவில்லை. ஒரு வளர்ந்த ஜனநாயகத்தில் இந்த முரண்கள் எளிதில் சாத்தியமில்லை. இந்தியாவில் இவை சர்வ சாதாரணம்.

 

சீமான் விஷயத்தில், அவர் இப்போது பெரியாரைக் கடுமையாக விமரிசனம் செய்வதும் அவரது சுய அரசியல் லாபத்திற்காக மட்டும்தான். நேரான காரணத்திற்காக அல்ல. இதைக் காட்டும் சில உண்மைகள் இவை.

 

இலங்கையில் அந்த நாட்டு அரசை எதிர்த்து, தனி நாடு கேட்டு, ஆயுதமேந்திப் போர் புரிந்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) தலைவர் பிரபாகரன். அந்த இயக்கம் அந்த நாட்டில் தீவிரவாதச் செயல்கள் புரிந்தது. இறுதியில் அந்த நாட்டு ராணுவ நடவடிக்கையால் அந்த இயக்கம் வீழ்ந்தது, பிரபாகரனும் மடிந்தார்.

 

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை இந்திய மண்ணில், அதுவும் தமிழகத்தில், குரூரமாகக் கொன்றதில் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு முக்கியப் பங்குண்டு. இப்படியான பிரபாகரனை முன்னிறுத்தி – அதுவும் தமிழ்நாட்டில் சிறந்த முன்னுதாரணமான அரசியல்  தலைவர்களை விட்டுவிட்டு – “பிரபாகரன்தான் என் தலைவன்” என்று முழக்கமிடுகிறார் சீமான். சீமானின் இந்தச் செயலும், இந்த அப்பட்டமான தேச விரோதப் போக்கும், அவரது ஆதரவாளர்களைப் பாதிக்கவில்லை.

 

ஈ.வெ.ரா-வைப் போற்றும் அறிவீனத்துக்கு நிகரானது சீமான் வெளிப்படுத்தும் பிரபாகர பக்தி. இதனால் வெளிநாடுகளில் வாழும் அப்பாவி இலங்கைத் தமிழர்களிடம் சீமானுக்கு என்ன பயனோ?

 

அரசியல் மேடைகளில் சீமான் பேசுவது வசீகரமானது. கைகளைப் பலவாறு வீசி, இரண்டு உள்ளங் கைகளையும் அடிக்கடி தட்டி, முகத்தைப் பல கோணங்களில் திருப்பி, தன் தெளிவான உரத்த குரலை ஏற்றி இறக்கி, மக்களின் உணர்ச்சிகளைக் கவர்ந்து தடையில்லாமல் ஆக்ரோஷமாகப் பேசுபவர் அவர். சாதாரண மக்களை, அதுவும் மிக இள வயதினரை, தனது உணர்ச்சி மிகுந்த பேச்சுக்களால் அவரைப் போல திசை திருப்பி ஈர்க்கும் ஒரு அரசியல் தலைவர் இப்போது தமிழகத்தில் இல்லை.

 

பெரிய கட்சி திமுக-வை எதிர்த்து அரசியல் செய்து வளர்ந்தால் தான் பெரிதாகலாம் என்று பொறுமையாகத் திட்டமிட்டு அரசியல் செய்கிறார் சீமான். அதன் ஒரு பகுதியாக, திமுக போற்றும் ஈ.வெ.ரா-வை இப்போது எதிர்க்கிறார். சீமானிடம் பெரிய எண்ணங்களோ விசாலமான பார்வையோ உயர்ந்த தேச சிந்தனையோ காணப்படவில்லை.  திமுக-வை மிஞ்சி அவர் திமுக பாணி அரசியல் செய்ய விரும்புகிறார். அதுதான் சீமான்.

 

பொதுவாக நமது நாட்டில் விவரம் அறியாத மக்கள், எளிதில் ஏமாறக் கூடிய சாதாரண மக்கள், எண்ணிக்கையில் அதிகம். குறைந்த வருமானத்தில், பொருளாதார ஏக்கத்தில், எப்போதும் வைக்கப் பட்டிருக்கும் அந்த மக்கள், ஏதோ அரிசி பருப்பு வங்க முடிகிறதா, அரசிடமிருந்து ஆயிரம் ரண்டாயிரம் பணம் கிடைக்குமா, அரசு இலவசங்கள் வேறென்ன கிடைக்கும், என்ற எதிர்பார்ப்பு நிலையில் வைக்கப்பட்டவர்கள். மற்றபடி யார் ஈ.வெ.ரா-வைப் போற்றினால் என்ன, தூற்றினால் என்ன  என்றுதான் அவர்களால் இருக்க முடியும்.


அரசியல் விஷயங்களில் முதிர்ச்சி குறைந்து வாழ்க்கையில் அல்லாடும் அப்பாவி மக்கள், குயுக்தி நிரம்பிய குரூர அரசியல் தலைவர்கள். இது இந்தியா!

 

ஈ.வெ.ரா-வைத் திமுக ஆதரித்தால் என்ன, சீமான் கட்சி எதிர்த்தால் என்ன? இரண்டு கட்சிகளும் கோணலான அர்த்தங்களில் ஔவையாரின் ஆத்திசூடி சொற்களை ஏற்கின்றன: பெரியாரைத் துணைக் கொள்!


* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 


1 comment: