Tuesday, 18 February 2025

பிரதமர் மோடியை இகழ்ந்து விகடன் பிளஸ் வெளியிட்ட கார்ட்டூன். கார்ட்டூனா அது?

 

          -- ஆர். வி. ஆர்

  

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கேலி செய்து விகடன் பிளஸ் என்ற இணைய இதழ் பிப்ரவரி 10-ம் தேதி ஒரு கார்ட்டூன் வெளியிட்டது - 'அட்டைப்படம்' என்று பிரதானமாக. அந்த இதழைப் பிரசுரிப்பது ஆனந்த விகடன் பத்திரிகை குரூப். 


அந்தக் கார்ட்டூன் கடும் கண்டனங்களை ஈர்த்தது – குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் அபிமானிகளிடமிருந்து. அந்தக் கார்ட்டூன் பாரதப் பிரதமரை அவதூறு செய்கிறது, தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மத்திய அரசுக்குக் கோரிக்கை அனுப்பி இருக்கிறார்.


அந்தக் கார்ட்டூன் வெளிப்படுத்தும் காட்சி இது:  மோடியின் கைகால்கள் சங்கிலியால் பிணைக்கப் பட்டுத் துவண்டு தோற்ற முகத்துடன் அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அருகில் இன்னொரு நாற்காலியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமர்ந்து, மோடியை நோக்கி ஒரு கையைக் காட்டி எக்காளமாகச் சிரிக்கிறார்.  அதாவது, அமெரிக்க அதிபர் டிரம்ப், பாரதப் பிரதமர் மோடியை அடக்கி வைத்திருக்கிறார், அமெரிக்க அதிபருக்கு முன் பாரதப் பிரதமர் செயலிழந்து கட்டுண்டு கிடக்கிறார் என்பது அந்தக் கார்ட்டூன் சொல்ல வந்த கருத்து.  

 

இந்தக் கார்ட்டூனுக்கு ஒரு பின்னணி உண்டு. கார்ட்டூன் வெளிவந்த ஐந்து நாட்கள் முன்பாக, பாரதத்தின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ஒரு அமெரிக்க ராணுவ விமானம் வந்திறங்கியது. அமெரிக்காவால் நாடுகடத்தப் பட்ட 104 இந்தியர்கள், கைகளும் கால்களும் சங்கிலியால் பிணைக்கப் பட்டு அந்த விமானத்தில் திருப்பி அனுப்பப் பட்டிருந்தனர்.  அந்த நாட்டிற்குள் அவர்கள் சட்ட விரோதமாக நுழைந்த/தங்கிய அந்நியர்கள் என்பதால் பிடிபட்டு அவ்வாறு நாடுகடத்தப் பட்டனர்.

 

அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த மற்ற சில நாட்டினரையும் கைகால்களைச் சங்கிலியால்  பிணைத்து வைத்து விமானத்தில் அவரவர் நாட்டுக்குத் திருப்பி அனுப்புகிறது அமெரிக்கா. இப்போது மீண்டும் அமெரிக்க அதிபராகி இருக்கும் டிரம்ப், அமெரிக்காவில் பிடிபடும் சட்டவிரோத ஊடுருவல்காரர்களை நாடு கடத்துவதில் முனைப்பாக இருக்கிறார்.

 

விகடன் பிளஸ் தனது கார்ட்டூன் மூலம் என்ன சொல்கிறது என்றால்: விமானத்தில் நாடு கடத்தப் படும் இந்தியர்களின் கைகால்களைச் சங்கிலியால் காட்டாமல் அனுப்ப வேண்டும் என்று பாரதம் அமெரிக்காவிடம் கேட்டு அவ்வாறு நிகழச் செய்ய முடியவில்லை. அதற்கான தெம்பும் திராணியும் பிரதமர் மோடியிடம் இல்லை. அப்படியாகப் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பின் முன் செயலற்ற சோப்ளாங்கியாக இருக்கிறார்.  உறுதியான டிரம்ப், தனக்கு முன்பாக அடங்கிக் கிடக்கும் மோடியைப் பார்த்து இளக்காரமாகச் சிரிக்கிறார். இதுதான் விகடன் பிளஸ் கார்ட்டூனின் கருத்து.

 

இந்தக் கார்ட்டூன் கருத்தின் மதிப்பு என்ன? மெகா சைஸ் பூஜ்யம்.


நாடு கடத்தப் பட்ட இந்தியர்களில் பலர், அறியாமையால்  ஏஜெண்டுகளிடம் பணத்தை இழந்து துன்ப வழியில் உருண்டு புரண்டு அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள். நாடு கடத்தலாகும் போது அவர்கள் விரக்தியிலும் ஆவேசத்திலும் விமானத்திற்குள் அசம்பாவிதம் செய்ய முனையக் கூடாது. ஆகையால் அவர்களின் பாதுகாப்பிற்கும் விமானத்தின் பாதுகாப்பிற்கும் அவர்களின் கைகால்களில் அமெரிக்கா சங்கிலி போட்டு அவர்களைப் பயணிக்க வைப்பது தவிர்க்க முடியாதது. இது, அமெரிக்காவின் எச்சரிக்கை சம்பந்தப் பட்டது. இதில் பாரதத்தின் இயலாமையோ பலவீனமோ துளியும் இல்லை.

 

தத்துப் பித்தான கருத்தில் கார்ட்டூன் வெளியிட்டிருக்கிறது விகடன் பிளஸ். மற்றபடி, டிரம்ப உட்பட அகில உலகத் தலைவர்கள் பிரதமர் மோடியைப் பெரிதும் மதிக்கிறார்கள், போற்றுகிறார்கள் என்பது வெளிப்படை. கார்ட்டூன் வெளியான மூன்றாம் நாள் அமெரிக்காவில் நிகழ்ந்த மோடி-டிரம்ப் சந்திப்பின் போதும் இது தெரிந்தது.

 

அடுத்த விஷயம், இந்தக் கார்ட்டூன் நேர்மையற்றது, கீழ்த்தரமானது. விமானத்தில் நாடு கடத்தலாகும் இந்தியர்கள், உடன் வரும் அமெரிக்க பாதுகாப்பு வீரர்கள், விமான பைலட்டுகள் ஆகியோருக்கும், பறக்கும் விமானத்திற்கே கூட, நூறு சதவிகிதப் பாதுகாப்பு அவசியம் என்பதால்தான் அந்த இந்தியர்களின் கைகால்களில் சங்கிலி போடப் பட்டது என்பது, நூற்றாண்டு காணவிருக்கும் ஆனந்த விகடன் பத்திரிகைக்குப் புரியாதா? இருந்தாலும் பிரதமர் மோடியை எப்படியோ இகழ இது ஒரு வாய்ப்பு என்று தன் மனம் இனிக்க மலிவாக ஒரு கார்ட்டூன் பிரசுரித்திருக்கிறது விகடன் பிளஸ். 

 

தற்போது மத்தியில் ‘இண்டி’ கூட்டணி ஆட்சி நடைபெற்று ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நிலைமையிலும், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தலாகும் இந்தியர்கள் கைகால்களில் விலங்கு போட்டுத்தான் இந்தியாவுக்கு அனுப்பப் படுவார்கள்.  அப்போதும் அதுதான் நடக்கும். ஆனால் அப்போது – அதாவது ராகுல் காந்தி பிரதமராக இருந்தால் – நடக்கவே முடியாதது இது: எக்காளமாய்ச் சிரிக்கும் அதிபர் டிரம்பும் கைகால்களில் சங்கிலியிட்ட ‘பிரதமர்’ ராகுல் காந்தியும் விகடன் பிளஸ் கார்ட்டூனில் தோன்ற மாட்டார்கள்.   

 

அர்த்தமற்ற, நேர்மையற்ற இந்தக் கார்ட்டூன் கீழ்த்தரமானதும் கூட. பாரதப் பிரதமரை அமெரிக்க அதிபரின் முன்னால் தோல்வியுற்ற முகத்துடன் கைகால்களில் விலங்குடன் அமர்ந்திருக்குமாறு ஒரு பாரதப் பத்திரிகை கார்ட்டூன் போடலாமா? அதுவும் மனமறிந்த ஒரு பொய்க் கருத்தை வெளிப்படுத்த? கீழான நோக்கம் கொண்ட ஒரு பத்திரிகைதான் இப்படியான கார்ட்டூனை வெளியிடும். அதே நோக்கம் கொண்ட மற்றொருவர்தான் இந்தக் கார்ட்டூனைப்  பாராட்ட முடியும். அப்படியான மற்றொருவர், “அது சிறந்த கார்ட்டூன். அதில் அர்த்தமும் இருந்தது” என்று விகடன் பேட்டியில் சிலாகித்தார். அவர் யாரென்றால், நூற்றி ஐம்பதாவது வயதை நெருங்கும் ‘ஹிண்டு’ ஆங்கிலப் பத்திரிகையின் டைரக்டர், என். ராம்.

 

இந்தக் கார்ட்டூன் மத்திய அரசால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தக்கதா இல்லையா என்பது வேறு விஷயம்.  இந்த விஷயத்தில் விகடன் பிளஸ்ஸை சட்டம் ஒழுங்குபடுத்த முடியாமல் போனால், அதன் காரணமாக அந்தப் பத்திரிகையின் செயல் சரியாகாது, பாராட்டுக்கு உரித்தாகாது.  

 

ஒரு மனிதன் அல்லது ஒரு பத்திரிகை தனக்கு உண்மையாக, பிறருக்கு நேர்மையாக, தேசத்தை உயர்த்திப் பிடிப்பதாக இருத்தல் அவசியம் என்பது சட்டத்தின் கட்டளையல்ல. குடிமக்கள்  இந்தப் பண்புகளைத் தாமாக ஏற்பது சமூகத்தை, தேசத்தை, உயர்த்தி வைக்கும். அந்த வகையில் விகடன் பிளஸ்ஸுக்கு நாம் எத்தனை மார்க் தரலாம்? மைனஸ் தான்.


* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

7 comments:

  1. I only hope this article reached the editorial team of Viktan . They may not agree to the logical way in which this article is written, but atleast they should know that the carton is not correct because it is based on wrong assumptions. In the 2nd lot of illegal immigrants, 2 crimsl accused persons have reached India and promptly arrested on arrival snd and sent to prison. For these v2 persons, what vikatan would say ? That India shoul welcome such accused persons with red carpet welcome?
    Both vikatan and Hindu have stopped thinking logically.

    ReplyDelete
  2. I fully agree to your views. I have a feeling that VIKATAN & HINDU (after N.RAM took over) have stooped down to such a low level by hating MODI & BJP.

    ReplyDelete
  3. Absolutely unreasonable irrational act on the part of the tamil and english journos.

    ReplyDelete
  4. I fully agree with you sir

    ReplyDelete
  5. We are not sure if PM had not spoken about this with the President. However the president might not have accepted it. Presently we are sarounded by very hostile countries and we cannot afford to

    ReplyDelete
  6. Cartoon was only a cheap way for Modi Haters . No Criminality can be welcomed with open arms.

    ReplyDelete