-- ஆர். வி. ஆர்
சமீபத்தில் பிரதமர் மோடியைக் கண்டித்துப் பேசிய தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “பிரதமர் இனி தமிழகத்துக்கு வந்தால் மக்கள் அவரை ‘கெட் அவுட் மோடி’ என்று சொல்லித் துரத்துவார்கள்” என்று எச்சரித்தார்.
உதயநிதிக்குத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்தார். மோடியை உதயநிதி அவ்வாறு அவமதிப்பு செய்ததால், தமிழகத்தை சரியாக நிர்வாகம் செய்யாத முதல்வர் மு. க. ஸ்டாலினைத் தானும் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்று சொல்வதாகக் கூறினார். இரு தரப்பின் கெட் அவுட் கோஷங்களும் X தளத்தில் ஒரு நாளுக்கு மேல் பிரதானமாக வந்தன. இந்த இரண்டு கோஷங்களின் தொடக்கக் காரணம், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, 2020.
மத்திய அரசு தனது புதிய தேசிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல் செய்யவிருக்கிறது. அதன் மூலமாக பள்ளிக் கல்வி முறைகளில், பாடத் திட்டங்களில், சில முக்கிய மாறுதல்கள் வரும். ஆனால் தமிழகத்தை ஆளும் திமுக அரசு இதை எதிர்க்கிறது.
தேசிய கல்விக் கொள்கையின் எந்த அம்சத்தைத் திமுக எதிர்க்கிறது? ஏன் எதிர்க்கிறது?
தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சம்: 5-ம் வகுப்பு வரை, முடிந்தால் 8-ம் வகுப்பு வரை, பள்ளி மாணவர்களுக்குப் பயிற்று மொழி அவரவர்களின் பிரதேச மொழியாக இருக்கும். தமிழ்நாடு என்றால், அது தமிழ்வழிக் கல்வியாக இருக்கும். இது அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். 5 அல்லது 8 வகுப்புகள் வரை இங்கிலீஷ் மீடியம் கல்வி இருக்காது என்றாகிறது. இந்த 'தாய் மொழிக் கல்வி' அம்சத்தைப் பற்றி திமுக குறிப்பாக ஒன்றும் சொல்லவில்லை.
தேசிய கல்விக் கொள்கையின் இன்னொரு அம்சம்: பிரதேச மொழி மற்றும் ஆங்கிலம் தவிர, மாணவர்கள் தாங்கள் விரும்பும் வேறொரு இந்திய மொழியைக் கற்க வேண்டும். தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, மராத்தி, ஹிந்தி என்று ஏதாவது ஒரு பிற இந்திய மொழியை மாணவர்கள் தேர்வு செய்து பள்ளியில் பயில வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சத்தை மட்டும் வலியுறுத்திக் குறிப்பிட்டு, அதை ஒரு சாக்காகச் சொல்லி, தேசிய கல்விக் கொள்கையை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பது போல் திமுக நிலை எடுக்கிறது. அதாவது, ‘தேசிய கல்விக் கொள்கை பள்ளிகளில் மும்மொழி கற்பிக்க வைக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தவிர இன்னொரு இந்திய மொழியை மாணவர்கள் கட்டாயம் கற்கவேண்டும். இதன் மூலம் மத்திய அரசு பள்ளி மாணவர்களை ஹிந்தி கற்க கட்டாயப் படுத்துகிறது. இது ஹிந்தித் திணிப்பு’.
தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு அமல் செய்யத் தவறுவதால், அந்த வகையில் மத்திய அரசு தமிழகத்திற்காக ஏற்கவிருந்த ஆண்டுச் செலவு சுமார் 2,100 கோடி ரூபாயை மாநிலத்திற்கு விடுவிக்காமல் இருக்கிறது. இது தமிழக அரசுக்கு நெருக்கடி. இருந்தாலும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது திமுக - கூடுதலாக சில அபத்தக் காரணங்கள் சொல்லி.
“தேசிய
கல்விக் கொள்கை சமூகநீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழுக்கு வேட்டு வைக்கும் கொள்கை.
தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கு, வேட்டு வைக்கும் கொள்கை. தமிழகம் அந்தக் கல்விக் கொள்கையை
ஏற்றால் 2000 ஆண்டுகள் பின்னோக்கித் தமிழ்ச் சமுதாயம் போய்விடும்” என்று ஜன்னி கண்டவர்
போல் கடலூர்க் கூட்டத்தில் இப்போது பேசியிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். சிரிக்காமல்
அவர் அப்படிப் பேச முடிந்தது அதிசயம்.
திமுக-வின் எதிர்ப்பு வாதம் போலியானது, பித்தலாட்டமானது, சுயநலம் நிறைந்தது.
முதல் விஷயம்: தேசிய கல்விக் கொள்கையின் படி, தமிழகத்தின் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயில விரும்பும் மூன்றாவது மொழியாக ஹிந்தியைத் தேர்வு செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மற்ற எந்த இந்திய மொழியையும் அவர்களே தேர்வு செய்து படிக்கலாம். இது வெட்ட வெளிச்சம். இதை யாரும் எடுத்துச் சொல்லவேண்டியது இல்லை.
ஹிந்தி
படித்தால் அகில இந்தியாவில் எங்கு சென்றும் சமாளிக்கலாம், நாட்டில் தமக்கு வேலை
வாய்ப்புகளும் கூடும் என்று நினைத்து, தேசிய கல்விக் கொள்கையின் கீழ் அதிகமான தமிழக
மாணவர்கள் எல்லாப் பள்ளிகளிலும் தாங்களாகவே ஹிந்தியைத் தேர்வு செய்து படிக்க
ஆரம்பிக்கலாம். இந்த நடைமுறை உண்மைதான் திமுக-விற்கு கிலியைக் கொடுக்கிறது. ஏன்
அந்த கிலி?
‘தமிழர்களின்
தாய்மொழி உணர்வைக் கட்டிக் காப்பது திமுக மட்டுமே. ஹிந்தி தமிழகத்தில் பரவலாக
நுழைந்தால் அது தமிழை நசித்துவிடும், தமிழர்களை அந்த அபாயத்திலிருந்து காத்து,
அதற்காக உயிரையும் விடத் தயாரானவர்கள் திமுக-வினர்’ என்ற அடிப்படையில் ‘தமிழ்ப்
பாதுகாவலர்கள்’ என்ற ஒரு பிம்பத்தை அப்பாவித் தமிழர்கள் மத்தியில் தனக்கு
ஏற்படுத்தி இருக்கிறது திமுக.
பெருவாரியான தமிழக இளைஞர்கள் பள்ளிகளில் ஹிந்தி படிக்க ஆரம்பித்து, அதன் பின்னும் தமிழ் தழைத்தால் திமுக-வின் ‘தமிழ்ப் பாதுகாவலர்’ பிம்பம் உடையும், மொழி அடிப்படையில் திமுக தனக்கு வளர்த்து வைத்திருக்கும் வாக்கு வங்கி சேதப்படும். காலத்துக்கு ஏற்ப மாறி நின்று மக்கள் செல்வாக்கைப் பெறும் சிந்தை திமுக-விடம் இல்லை. இதனால் தேசிய கல்விக் கொள்கையிடம் திமுக அஞ்சுகிறது.
இன்னொன்று. தேசிய கல்விக் கொள்கையின் கீழ் அரசுப் பள்ளிகளின் தரம் தாமாக உயரும். அதனால் அரசியல்வாதிகள் குடும்பம் நடத்தும் தனியார் பள்ளிகளின் வியாபாரம் அடி வாங்கும். அந்தக் கவலை திமுக-வுக்கும் இருக்குமே?
தேசிய
கல்விக் கொள்கையை அமல் செய்யும் மத்திய அரசின் சட்டத்திற்கும் உத்தரவுகளுக்கும் மாறாகத்
தமிழக அரசு செயல்பட முடியாது. அதுதான் அரசியல் சட்டம். இருந்தாலும், மத்திய அரசு
இதில் பொறுமை காக்கும், விட்டுப் பிடிக்கும்.
இந்தச்
சூழலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ‘கெட் அவுட் மோடி’ என்ற திமிர்
வார்த்தையைப் பேசினார். உதயநிதியின் அடாவடிப் பேச்சுக்கு, யாரும் எதிர்பாராத ஒரு
பதிலைச் சொன்னார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதுதான் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ கோஷம். அந்தக்
கோஷம் X தளத்தில் பத்து லட்சம் பதிவுகளைத் தாண்டி திமுக தலைமையை உலுக்கி இருக்கிறது.
அதன் விளைவு, அடுத்த நாள் மு. க ஸ்டாலின் கடலூரில்
பிதற்றிய அபத்தக் கருத்துக்கள்.
திமுக
தலைவர்களின் பொதுவான அடாவடிப் பேச்சால், அவர்கள் தைரியசாலிகள், கெத்தனவர்கள், உறுதி
மிக்கவர்கள், அவர்கள் பின் நிற்பது தமக்குப் பாதுகாப்பு என்று சாதாரண மக்கள்
பலரும் அப்பாவியாக நினைக்கிறார்கள். அதே தைரியம், கெத்து, உறுதி ஆகிய குணங்களை ஒரு
பாஜக தலைவரும் ஒரு யுக்தியாகத் திமுக-வுக்கு எதிராகத் தனது பேச்சில் அவ்வப்போது அளவாகக் காண்பித்தால்தான் அநேக சாதாரண மக்களைத் தங்கள் பால் பாஜக வேகமாக ஈர்க்க முடியும்.
அதைத் தனது ‘கெட் அவுட் ஸ்டாலின்’ எதிர்ப் பேச்சு மூலம் அண்ணாமலை முயன்றிருக்கிறார்.
பாஜக-வில் அவர்தான் இதற்குச் சரியானவர். நடைமுறை அரசியலில் இது பாஜக-வுக்கு நன்மை செய்யும்.
அண்ணாமலையின்
சூடான எதிர்ப் பேச்சால், கணிசமான சாதாரணத் தமிழக மக்கள் – அதுவும் அண்ணாமலையின் பக்கம்
மெள்ள மெள்ள அடி எடுத்து வைக்கிற தமிழர்கள் – அந்தத் தலைவரைத் தமது மனதிற்குள் “கெட்
இன் அண்ணாமலை” என்று சட்டென்று சொல்வார்கள். நல்ல காரியம் நடப்பது சரிதானே?
* * * * *
Author: R. Veera Raghavan, Advocate, Chennai
Kudos to your article sir.
ReplyDeleteGet in get out gets neutralised or and balanced with annamalai announcement . I endorse R V Sir statement that only Annamalai is the most suitable person to take the cudgel.
உங்கள் வாக்கு பலிக்கட்டும்
ReplyDelete