-- ஆர். வி. ஆர்
பிரயாக்ராஜில் ஒரு மாதமாக மஹா கும்பமேளா மிகப் பிரும்மாண்டமாக நடந்து வருகிறது. இந்த பிப்ரவரி 26-ம் தேதி விழா நிறைவடையும்.
மஹா
கும்ப மேளா நாட்களில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில்
புனித நீராடுவது புண்ணியம் என்பது ஹிந்துக்களின் ஆழ்ந்த நம்பிக்கை. இந்த தினங்களில்
புனித நீராட மொத்தம் 45 கோடி மக்கள் பிரயாக்ராஜ் நகரில் நுழைவார்கள், 15 லட்சம் பேர்கள்
வெளிநாட்டிலிருந்தும் வருவார்கள் என்கிறது மத்திய அரசின் செய்திக் குறிப்பு.
மஹா
கும்பமேளா பற்றிப் பேசும்போது காங்கிரஸ் கட்சியைப் பற்றியும் சொல்லவேண்டி இருக்கிறது.
என்ன செய்வது, வேறு வழி இல்லை!
இன்றைய
பரிதாப காங்கிரஸ் கட்சியின் அசட்டுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. அவருக்கும் மேலே
கட்சிக்குள் முடிசூடா மன்னராக இருப்பவர் அச்சுப்பிச்சு ராகுல் காந்தி.
அண்மையில்
மத்தியப் பிரதேம் மௌவ் நகரில் சமூக நீதிக்கான ஒரு பேரணிக் கூட்டத்தில் மேடை ஏறினார்
கார்கே. ராகுல் காந்தியும் அருகில் அமர்ந்திருந்தார். அன்றைய தினம் மத்திய உள்துறை
அமைச்சர் அமித் ஷா மஹா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்தார்.
மேடையில்
பேசிய கார்கே, பாஜக தலைவர் அமித் ஷாவை மனதில் வைத்து ஏதோ குத்தலாகக் கேட்க நினைத்தார்.
தான் நினைத்தது அசல் பைத்தியக்காரத் தனம் என்று அவருக்கே உறைத்திருக்கும். இருந்தாலும் அப்போது நேராக எதையும் தனக்குப் பேச வரவில்லை என்றும் நினைத்தாரோ
என்னவோ, “நான் யாரையாவது வருத்தப் படுத்தினால் மன்னித்து விடுங்கள்” என்று தற்காப்பாகச்
சொல்லிவிட்டுத் தொடர்ந்தார். அவரது வார்த்தைகள்:
“குழந்தைகள்
பசியால் இறக்கின்றன. அவை பள்ளிக்குப் போக முடியவில்லை. தொழிலாளிகளுக்கு உண்டானது கிடைப்பதில்லை.
இந்த நிலைமையில் ஆயிரக் கணக்கில் செலவழித்து இந்த மனிதர்கள் டிவி-யில் தெளிவாகத் தெரிய
போட்டி போட்டுக் கங்கையில் மூழ்கி எழுகிறார்கள். கங்கையில் குளித்தால் வறுமை நீங்கிடுமா?
பசித்த வயிறுகள் நிரம்புமா?”
நாட்டின் பல கோடி ஹிந்துக்களில் அமித் ஷாவும் ஒருவர். அவர்களைப் போல, தான் ஒரு ஹிந்து என்ற உணர்வில் அவரும் மஹா கும்பமேளா சமயத்தில் திரிவேணி சங்கமத்தில் நீராடினார். இதுவரை ராகுல் காந்தியும் கார்கேயும் இந்த விழாவின் போது திரிவேணி சங்கமத்திற்கு நீராட வரவில்லை. அதனால் யாரும் அந்த இருவரைக் குறை சொல்லவில்லை. ஆனால் தனது நம்பிக்கையின் பேரில் அங்கு மூழ்கி எழுந்த ஒரு பாஜக தலைவரை நோக்கி காங்கிரஸ் தலைவர் கார்கே இப்படியா பைத்தியக்காரத் தனமாகப் பேசுவார்?
கார்கேயின்
பைத்தியக்காரப் பேச்சுக்குப் பின்னர் ஒரு நாள் பிரதமர் மோடியும் திரிவேணி சங்கமத்தில்
புனித நீராடினார்.
“கங்கையில்
குளித்தால் வறுமை நீங்கிடுமா?” என்று கார்கே
கேட்டது, ஒவ்வொரு ஹிந்துவையும் அப்படிக் கேட்டது போலாகும். மக்களின் ஓட்டைப் பெறவேண்டிய
ஒரு கட்சியின் தலைவர், கும்பமேளாவுக்கு வரும் கோடானுகோடி மக்களின் மத நம்பிக்கையை இப்படி
ஒரே கேள்வியில் இகழ்கிற தோரணையில் பேசுவது, தனி ரக பைத்தியக்காரத் தனம்.
“அமித்
ஷா உள்துறை அமைச்சர் என்பதால் அப்படிக் கேட்டேன், அவர் ஒரு ஹிந்து என்பதால் அல்ல” என்று
கார்கே மேலும் பிதற்றக் கூடும். அப்படியானால் கார்கேவுக்கு சில கேள்விகள்.
2014-ல்
நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு பத்தாண்டுகள் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைமையிலான
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தது, காங்கிரஸ் கட்சியின் மன்மோகன்
சிங் பிரதமராக இருந்தார். கங்கையில் குளித்தோ குளிக்காமலோ அந்தக் கூட்டணித் தலைவர்கள் நாட்டில் வறுமையை ஒழித்து விட்டார்களா? அதன் பின்னர் 2014-ல் மோடி பிரதமர் ஆனவுடன் வறுமை டக்கென்று
மக்கள் இல்லத்தில் வம்படியாக நுழைந்து கொண்டு, ‘மீண்டும் காங்கிரஸ் தலைமையில் மத்திய
ஆட்சி அமைந்தால்தான் நாட்டை விட்டு வெளியேறுவேன்’ என்று முரண்டு பிடிக்கிறதா?
1971-ம் வருடம் காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி திரிவேணி சங்கமத்தில் முழுக்குப்
போடாமல், ‘கரிபி ஹடாவோ’ என்ற தேர்தல் முழக்கத்தை எழுப்பி வறுமையுடன் நேருக்கு நேர்
மல்லுக் கட்டினாரே, அப்போது ஏன் வறுமை நாட்டை விட்டுப் போகவில்லை?
சரி,
கங்கையில் குளிப்பதால் வறுமையை விரட்ட முடியாது என்ற பேருண்மை உங்களுக்குத் தெரிந்திருக்கிறது.
நீங்களும் அதை ஊரறியச் சொல்லிவிட்டீர்கள். ஆனால் உங்கள் மாநிலம் கர்நாடகத்தின் காங்கிரஸ்
தலைவர், கர்நாடகத் துணை முதல் மந்திரி, டி. கே. சிவகுமார் நீங்கள் பேசிய சில நாட்கள் கழித்து என்ன செய்தார்?
மஹா கும்பமேளாவை முன்னிட்டு அவர் திரிவேணி சங்கமத்தில் சிரத்தையாக மூழ்கி எழுந்தார். அது ஏன்? ஹிந்துவான தனக்குப் புண்ணியம் சேரும் என்ற நம்பிக்கையிலா, அல்லது கர்நாடக மண்ணிலிருந்து
காங்கிரஸ் வறுமையை ஓட ஓட விரட்டி விட்டது, இனி பொழுதைப் போக்க கங்கையில் குளித்தால்
தப்பில்லை என்ற காரணத்தாலா?
“நான்
அமித் ஷாவை மனதில் வைத்து அப்படிக் கேட்க வில்லை. பொதுவாகக் கும்பமேளா நாட்களில் கங்கையில் குளிப்பவர்களை எண்ணிப் பேசினேன்” என்று
மேலும் பைத்தியக்காரத் தனமாக கார்கே விளக்கம் தர மாட்டார் என்று நாம் நம்பலாம்.
எப்படி
இருந்தாலும் கார்கேயைப் பற்றி நாம் அனுதாபத்தோடு ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.
கார்கே காங்கிரஸ் கட்சியில் இல்லாமல், பாஜக-வை எதிர்க்கும் வேறு ஒரு அரசியல் கட்சியில் ஒரு முன்னணித் தலைவராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் – திரிணாமுல் காங்கிரஸ், லாலு கட்சி அல்லது ஒரு கம்யூனிஸ்ட் கட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கட்சிகளில் கார்கே இருந்தால் கும்பமேளாவில் குளிப்பதற்கும் வறுமை ஒழிவதற்கும் முடிச்சுப் போட்டு, பாஜக-வை எதிர்க்க அவர் இவ்வளவு பிதற்றலாகப் பேசி இருப்பாரா? மாட்டார்.
காங்கிரஸ்
கட்சியில் இருப்பதால் மட்டும் ஏன் கார்கே இப்படிப் பிதற்றினார்? ஏனென்றால், பேய்க்கு
வாக்கப் பட்டால் புளிய மரத்தில் ஏறத்தான் வேண்டும். அச்சுப் பிச்சு ராகுல் காந்தியைத் தலைவராக ஏற்றால்,
அதுவும் அந்த அச்சுப் பிச்சு அருகிலேயே அமர்ந்திருக்கும் போது, இப்படிப் பேசினால்தான்
ராகுல் காந்திக்கு இனிக்கும், கட்சிக்குள் அது தன்னை, தன் இடத்தை, பாதுகாக்கும் என்று
கார்கேக்குத் தெரியாதா என்ன?
ராகுல் காந்தி அரசியலில் ஒரு வில்லன் மட்டுமல்ல, ஒரு அச்சுப் பிச்சுவும் கூட. ராகுல் காந்தியின்
எந்த உருவத்தை மகிழ்விக்கத் தன்னால் ஆடிக் காட்ட முடியுமோ, அதைக் கார்கே செய்து விட்டார்.
அதுதானே விஷயம்?
* * * * *
Author: R.
Veera Raghavan, Advocate, Chennai
கார்கே ஒரு கோமாளி. இவ்வளவு நீண்ட காலம் அரசியலில் இருந்தும் எப்படிப் பேசுவது என்பதைக் கற்கவில்லை கார்கே. சோனியா குடும்பத்திற்கு இப்படிப்பட்ட அறிவிலிகள் தாம் தேவை.
ReplyDeleteசித்தானந்தம்