-- ஆர். வி. ஆர்
இந்த மஹா பிரும்மாண்ட ஜனத் திரள் நம் நாட்டிற்குத் தெரிவிக்கும் ஒரு பக்கவாட்டுச் செய்தி இது: பாரதத்தில் ஹிந்து மதம், ஹிந்துத் திருவிழாக்கள், போற்றப் படாவிட்டால், தழைக்காவிட்டால், பாரதம் ஒரு நாடாக இணைந்திருக்க முடியாது.
நினைத்துப்
பாருங்கள். ஐரோப்பிய
யூனியன்,
27 ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு. அந்த நாடுகளின் ஓட்டுமொத்த ஜனத்தொகை,
சுமார் 45 கோடி – இந்திய ஜனத்தொகையின் மூன்றில் ஒரு பங்கையும்
விடக் குறைவு.
ஐரோப்பிய
யூனியனின் ஒரு நாட்டில் வசிப்போர் அந்தக் கூட்டமைப்பின் வேறு எந்த நாட்டிற்கும் தடையில்லாமல்
சென்று வரலாம், அந்த மற்ற நாட்டில் வேலை பார்க்கலாம், வசிக்கலாம். அவர்கள் கூடுதல்
கட்டணமின்றி ஐரோப்பிய யூனியனின் மற்ற நாடுகளில் தங்கள் மொபைல் போனையும் டெபிட் கார்டையும் உபயோகிக்கலாம். ஒற்றை யூரோ நாணயப்
புழக்கம் அவர்களுக்கு உண்டு. அப்படி இருந்தும், அந்த 27 நாடுகளும் ஏன் ஒரே நாடாக இணையவில்லை?
குறைந்த பட்சம், அவற்றில் மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த இரண்டு அண்டைக் கிறிஸ்தவ நாடுகள்
கூட (உம்: பிரான்ஸ், ஸ்பெயின்) ஒரு நாடாக இணையவில்லையே? என்ன காரணம்?
காரணம்
இது: ஐரோப்பிய யூனியனின் அநேக நாடுகளுக்கு வேறு வேறு பிரதான மொழிகள் உண்டு, சில கலாச்சார
வேறுபாடுகள் உண்டு. சில சரித்திரக் காரணங்களும் உண்டு. இவற்றை மீறி மதம் அவர்களை இணைக்கும்
சக்தியல்ல. பாரதத்தின் கதை வேறு.
பாரதத்தின்
பல பிரதேசங்களிலும் பல மொழிகள் பேசப்படுகின்றன. சிற்சில பிரதேச கலாச்சார வேறுபாடுகளும்
அவைகளுக்குள் உண்டு. பாரதத்தின் வெவ்வேறு பகுதிகளைப் பழைய நூற்றாண்டுகளில் வெவ்வேறு
மன்னர்கள் ஆண்டார்கள். வம்சாவழியாக அப்படி வந்திருக்கும் இந்தியர்கள், தற்காலத்தில்
ஏன் மொழிகள் அடிப்படையில் தனித்தனி நாடுகளாகப் போக விரும்புவதில்லை? எது அவர்களை பாரதத்தில்
ஒன்றாக இணைந்திருக்க வைக்கிறது? இதற்கான விடை: பாரதத்தில் தொன்று தொட்டுப் பரவியிருக்கும்
ஹிந்து மதம்.
பாரத
ஜனத்தொகையில் ஹிந்துக்கள் சுமார் 80 சதவிகிதம். அவர்கள் பாரத மண்ணை நேசிப்பதற்குக்
காரணம், பாரதத்தின் பிரதான ஹிந்து மதம் மற்றும் அதன் புராண இதிகாசங்கள் தொடர்புடைய
நிலங்கள், மலைகள், நதிகள், சமுத்திரக் கரைகள் – அந்த இடங்கள் பாரதத்தின் இன்னொரு மொழிப்
பிரதேசத்தில் இருந்தாலும், அங்கு சிற்சில மாறான சமூகக் கலாசாரம் தென்பட்டாலும். ஹிந்து
பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களும் பாரத மக்களை ஒன்றுபடுத்துகின்றன.
ஹிந்து மக்களின் மன ஒற்றுமையும் தேசாபிமானமும் சட்டத்தின் எதிர்பார்ப்பால் ஏற்பட்டதல்ல. அவை
அவர்களுக்குள் கலந்த ஒரு ஆழமான மத உணர்வு.
இன்று பாரதம் ஒரு தேசமாக இல்லாவிட்டால், தமது மதம்
நசியும் என்ற உள்ளுணர்வு ஹிந்துக்களுக்கு இருக்கும். அந்த உள்ளுணர்வு பாரதத்தின் மீதான
நேசிப்பை அவர்களுக்கு அதிகப் படுத்தும், உறுதிப் படுத்தும் – அது பற்றி அவர்கள் வெளிப்படையாகப் பேசாவிட்டாலும்.
வெளிநாட்டு மதங்களைச் சேர்ந்த இந்தியர்களுக்கு – குறிப்பாக இந்திய இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு – அவர்களின் மத உணர்வின் நீட்சியாக பாரதத்தின் மீது கூடுதல் அபிமானம் இருக்க முடியாது. இது அவர்களிடம் உள்ள குறை என்பதல்ல. அவர்களின் பின்னணியில் இது மனித இயற்கை.
பாரதத்தின்
மிகப் பெருவாரியான ஹிந்துக்களின் மத உணர்வை, பாரத நிலப் பரப்பின் மீது அவர்களுக்கு
இருக்கும் மத உணர்வு கலந்த அபிமானத்தை, பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உணரவில்லை. அதை உணராத, உணர்ந்து போற்றாத, அரசியல் தலைவர்கள் தேசத்திற்கு நல்லது செய்யவில்லை,
இன்று தேசம் ஒன்றுபட்டிருக்கும் முக்கிய காரணத்தை உதாசீனம் செய்கிறார்கள்.
காங்கிரஸ்
கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மஹா கும்பமேளா நடக்கும் போது “கங்கையில் மூழ்கி
எழுந்தால் நாட்டில் வறுமை நீங்குமா?” என்று பொது மேடையிலிருந்து, யாரையோ இடிப்பதாக
நினைத்துக் கொண்டு, பித்துக்குளித் தனமாகக் கேட்டார். அதற்கும் முன்பு, திமுக-வின்
உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா போல் சனாதனத்தை ஒழிக்கவேண்டும்” என்று பிதற்றினார்.
பாஜக-வை
எதிர்க்கும் பிற முக்கிய எதிர்க் கட்சிகளும் ஹிந்து மதம் பற்றி அசிரத்தையாக இருக்கிறார்கள்
– அப்படிக் காட்டிக் கொண்டால் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களுக்குப் பிடிக்கும்,
அதன் மூலம் சாதாரண இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஓட்டுக்களைக் கொத்தாகப்
பெறலாம் என்ற நப்பாசையில்.
எதிர்க்
கட்சிகள் ஹிந்துக்களை இகழ்வதையும் உதாசீனம் செய்வதையும் தொடர்ந்து, நாட்டில் போகப்
போக ஹிந்துக்களின் எண்ணிக்கை பெரிதும் குறைகிறது, அவர்களின் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களின்
பிரபல்யம் தேய்கிறது, என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அனைத்து இந்திய மக்களையும்
எது இணைக்கும், எது நாட்டின் மீதான அபிமானத்தை அவர்களிடம் தக்க வைக்கும்? அந்த வேலையை
அரசியல் சட்டம் சுளுவாகச் செய்யும் என்று யாரும் அப்பாவியாக நினைக்க வேண்டாம். அப்போது மாநிலங்களில்
என்ன நடைபெறலாம்?
அந்த
நிலையில் ஸ்டாலின் மாதிரி வேறொருவர் தமிழக முதல்வராக இருந்தால், திராவிட மாடலைக் குப்பையில்
தள்ளிவிட்டு, ‘தமிழ்நாடு மாடல்’ அரசு நடத்தித் தனிநாடு பற்றி யோசிப்பார் – அது நடந்தேறும்
சாத்தியமும் உண்டு. மம்தா பானர்ஜி மாதிரியான
மற்றொரு மேற்கு வங்க முதல்வர், அந்த மாநிலத்தைத் தனி நாடாக்க முயல்வார் - சி. பி. ஐ
தொல்லை போகட்டும் என்பதற்காகவே – அவரும் வெற்றி
பெறலாம். ஹிந்துக்களின் எண்ணிக்கை நாட்டில் வெகுவாகக் குறைந்தால், அல்லது ஹிந்து மத உணர்வுகளுக்கு வடிகால் தடைப்பட்டு
அவை மங்கினால், இவை நிகழும் வாய்ப்புகள் அதிகம். அப்போது சட்டம் ஒதுங்கி நிற்கும் அபாயம் உண்டு.
இந்த
சாத்தியங்கள் பாஜக-வை எதிர்க்கும் பல கட்சித் தலைவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்?
தெரிந்திருக்கும். சிறுபான்மை மதத் தலைவர்களைப் பிரீதி செய்தால் மட்டும் போதாது, மாநில
ஆட்சிகளில் கட்டற்ற சுதந்திரம் கிடைக்க மற்ற வகையிலும் பார்க்க வேண்டும், அது எப்படியும்
நடக்கட்டும், என்று ஓரக் கண்ணில் சிலர் கனவு கண்டால் என்ன செய்வது?
66
கோடி ஜனங்கள் மஹா கும்பமேளாவில் செய்த பிரார்தனை பாரதத்தையும் வளப்படுத்தும், ஒன்றாக
வைத்திருக்கும், என்று நாம் நம்பிக்கை கொள்ளலாம். அது வீண் நம்பிக்கை ஆகாது என்று நம்மை
ஆறுதல் படுத்த, வீறு கொண்ட ஒரு கட்சி பளிச்சென்று தெரிகிறதே?
* * * * *
Author: R. Veera Raghavan, Advocate, Chennai