-- ஆர். வி. ஆர்
மத்திய
உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்ய சபாவில் எதிர்க் கட்சியினரைப் பரிகசித்துப் பேசியது
இது:
“அம்பேத்கர்,
அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று
சொல்லிக்கொண்டே இருப்பது ஒரு பேஷனாகி விட்டது. இத்தனை முறை அவர்கள் இறைவன் நாமாவை உச்சரித்திருந்தால் ஏழு பிறவியிலும் அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்!”
இந்தப் பேச்சால் அமித் ஷா அம்பேத்கரை அவமதித்து விட்டார் என்று சொல்லி, காங்கிரஸும் பிற எதிர்க் கட்சிகளும் அவரது ராஜினாமாவைக் கோருகின்றன, போராட்டங்களை அறிவிக்கின்றன.
எதிர்க் கட்சிகள் அம்பேத்கர் மீது காண்பிக்கும் பாச மழை, பக்திப் பிரவாகம் உண்மையானதா? இல்லை, அது போலியானது. வேறு விஷயம் இருக்கிறதா? இருக்கிறது.
சட்டம்
குறிப்பிடும் ‘பட்டியல் ஜாதிகள்’ ஒன்றில் பிறந்தவர்
அம்பேத்கர். பட்டியல் ஜாதிகளின் எண்ணிக்கை தற்போது ஆயிரத்துக்கும்
மேல்.
இன்று
எல்லா பட்டியல் ஜாதிகளின் மக்களையும் நாம் தலித்துகள் என்று சொல்கிறோம். முன் காலத்தில்
இந்த ஜாதி மக்களைப் பொதுவாகத் தீண்டத் தகாதவர்களாக சமூகம் வைத்திருந்தது. அந்த மக்களின், அதாவது தலித்துகளின், பிரதிநிதியாகக்
கருதப்படுகிறவர் அம்பேத்கர்.
சரி,
காங்கிரஸ் கட்சிக்கும் அம்பேத்கருக்கும் உறவு எப்படி இருந்தது?
அம்பேத்கர்
65 வயது வரை வாழ்ந்தார். 1956-ம் ஆண்டு மறைந்தார். அரசியலில் ஓரளவு பங்கு பெற்றாலும்,
அவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை. தனிக் கட்சிதான்
தொடங்கினார்.
காங்கிரஸ்
கட்சி மற்றும் அம்பேத்கர் இடையே பரஸ்பரப் போற்றுதல் இருந்ததில்லை. 1952-ம் வருடம் நடந்த முதல் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட
அம்பேத்கரை, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தோற்கடித்தார். இரண்டு வருடங்கள் கழித்து வந்த ஒரு லோக் சபா இடைத் தேர்தலில் அம்பேத்கர்
போட்டியிட்டார். அப்போதும் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் மூலம் அம்பேத்கரைத் தோற்கச் செய்தது.
காங்கிரஸின்
காந்தி-நேரு காலத்து மக்கள் செல்வாக்கு இப்போது காலியாகிவிட்டது. மக்களை வசீகரிக்கும் தலைமை இல்லாமல், மஹா ஊழல்களுக்கும் வழிவகுத்து, கட்சி இன்று பரிதாப நிலையில் கிடக்கிறது. ஆனால் அம்பேத்கர் விஷயம்
வேறு. அம்பேத்கர் வாழும் காலத்தில் இந்திய மக்களிடையே அவருக்கு இருந்த அரசியல் செல்வாக்கு
மற்றும் ஓட்டு-ஈர்க்கும் சக்தி, இக்காலத்தில் அதிகம் பரவியுள்ளது. என்ன காரணம்?
1950-ம்
வருடம் இந்தியாவில் பட்டியில் ஜாதிகளின் எண்ணிக்கை சுமார் 600. இன்று அதிகமான ஜாதிகள்
அந்தப் பட்டியலில் அவ்வப்போது சேர்க்கப்பட்டு, நாட்டில் தலித் ஜாதிகளின் எண்ணிக்கை
இரண்டு மடங்காகி இருக்கிறது. இந்தியாவில் அந்த மக்கள் சுமார் 17 சதவிகிதம் என்கிறது,
சென்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.
ஆயிரத்துக்கும் அதிகமான வெவ்வேறு ஜாதிகளுக்கு, சமூகத்தில் ‘பட்டியல் ஜாதிகள்’ அல்லது தலித்துகள் என்ற பொதுவான ஒற்றைப் பெயர் வந்துவிட்டது. இதனால், அந்த ஒரு பெயரை வைத்து ஆயிரம் ஜாதிகளின் மக்கள் அனைவரையும் ஒரே கொத்தாகத் தங்கள் பால் இழுக்கத் துடிக்கின்றன காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க் கட்சிகளும். ஒரே இழுப்பில் 17 சதவிகித ஓட்டுக்களில் பங்கு பெறலாம் என்றால் அந்தக் கட்சிகள் விடுமா?
இன்று
அம்பேத்கர் பெயருக்கு நாடு தழுவிய ஓட்டு-ஈர்க்கும் சக்தி உள்ளதற்கான பிரதான காரணம்,
காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க் கட்சிகளும் சென்ற பல வருடங்களாக நடத்தி வரும் மலிவு
அரசியல் மற்றும் அவலமான ஆட்சி நிர்வாகம்.
அம்பேத்கர்
உள்நாட்டிலும் அமெரிக்கா இங்கிலாந்து நாடுகளிலும் பெற்ற கல்வி, அவருடைய ஏற்றத்துக்குப்
பெரிதும் உதவியது – அவரது இயற்கையான புத்தி
கூர்மையுடன் சேர்ந்து. அவர் இங்கிலாந்தில் சட்டப் படிப்பும் படித்தவர். மும்பை
சட்டக் கல்லூரியின் முதல்வராக இருந்தவர். ஆங்கிலேய ஆட்சியின் வைஸ்ராய் எக்ஸிகியுடிவ்
கவுன்சிலில் உறுப்பினராக இருந்தவர்.
அம்பேத்கரைத்
தொடர்பவர்களுக்கு அவர் விடுத்த அறைகூவல் இது: ‘கல்வி பெறு, போராடு, ஒன்று சேர்’ (“Educate,
Agitate, Organise”). கல்வியின் முக்கியத்துவத்தைத் தம் மக்களுக்குப்
பிரதானமாக எடுத்துச் சொன்னவர் அவர். ஆனால் சுதந்திரம் அடைந்து 77 வருடங்கள் ஆகியும்,
தலித் மக்களுக்கு நல்ல தரமான அடிப்படைக் கல்வி மற்றும் உயர் கல்வி கிடைக்க நமது மாநில
அரசுகள் வழி செய்திருக்கின்றனவா, பெரிய பலன் கிடைத்திருக்கிறதா? இல்லை.
அம்பேத்கர் மீது மதிப்பும் தலித்துகள் மீது பரிவும் காங்கிரஸ் மற்றும் பல எதிர்க் கட்சிகளுக்கு
உண்டானால், சிறு பிராயத்திலிருந்து தலித் மாணவ மாணவிகளுக்குத் தரமான கல்வி கிடைக்க வழி
செய்திருக்க வேண்டும். பொதுவாக எல்லா தரப்பு மக்களுக்குமே அது கிடைக்க அவர்கள் இன்றுவரை
பெரிதாக வகை செய்யவில்லை.
பெருவாரியான மக்களை சற்று சுமாரான படிப்பில், குறைந்த வருமானத்தில், வைத்திருந்தால் என்ன ஆகும்? அரசியல்வாதிகள்
செய்யும் மோசடிகளையும் முறைகேடுகளையும் பற்றி அந்த மக்கள் கவலைப்பட
முடியாமல் தமது ரேஷன் அரசி, தமது அன்றாட பணப் பிரச்சனை பற்றிய கவலையில் மூழ்கி இருப்பார்கள். இந்த நிலையைத்தான் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் விரும்புகிறார்கள். இதையும் மீறியே எதிர்க்
கட்சிகளின் ஆட்சியில் காலம் தானாகத் தரும் முன்னேற்றம் நம் மக்களுக்குக் கிடைத்தது.
தொடரும்
தலித் மக்களின் பின்தங்கிய நிலை, நமது பொறுப்பற்ற எதிர்க் கட்சிகளுக்கு ஒரு உபாயத்தைக்
காண்பித்தது. அதன்படி, “நாங்கள் அம்பேத்கர்
அபிமானிகள், தலித் மக்களாகிய உங்களை நாங்கள் பாதுகாப்போம், முன்னேற்றுவோம்” என்று அந்த அப்பாவி மக்களுக்குச் சேதி சொல்லி, அவர்களின்
17 சதவிகித ஓட்டுக்களில் நல்ல பகுதியை அறுவடை செய்து கொழிக்கின்றன எதிர்க் கட்சிகள்.
அந்த அறுவடையைத் தக்க வைக்க, இன்னும் அதிகரிக்க, எதிர்க் கட்சிகள் எப்போதும் அம்பேத்கர்
பாட்டுப் பாடும், அம்பேத்கர் நாடகம் ஆடும்.
அம்பேத்கரின்
பெயரை வைத்துக் குயுக்தியாக அரசியல் செய்யும் காங்கிரஸையும் மற்ற எதிர்க் கட்சிகளையும்
அமித் ஷா சூசகமாக சுருக்கென்று அம்பலப் படுத்தினால் அவைகளுக்கு ஆத்திரம் வருமா வராதா?
இதுதானே விஷயம்?
சிலர் கேட்கலாம். “மல்லிகார்ஜுன கார்கே ஒரு தலித். காங்கிரஸ் கட்சி அவரைக் கட்சியின் தலைவராகவே இப்போது அமர்த்தி இருக்கிறது. ஆகையால் இன்றைய காங்கிரஸ் கட்சி உண்மையான அம்பேத்கர் விசுவாசி, அம்பேத்கரைப் போற்றும் கட்சி, என்பதற்கு வேறு என்ன சாட்சி வேண்டும்?” இதற்கான விடையை ஒரு காட்சி சொல்லும்.
ஒரு பொம்மலாட்டக்காரன் தனது பொம்மையை ஆட்டுவிப்பான். தாம் தூமென்று பொம்மை ஆடினாலும், அது பொம்மைதானே? பொம்மலாட்டக்காரன் அசைத்தபடிதானே பொம்மை ஆடும், அவனது வருவாய்க்காக அல்லவா பொம்மை ஆடும்? இதில் பொம்மைக்கு என்ன மதிப்பு, என்ன கீர்த்தி?
* * * * *
Author: R.
Veera Raghavan, Advocate, Chennai
Already younger generation arr brainwashed against BJP. Minorities will never vote for them
ReplyDeleteஇத்தனை முறை அம்பேத்கர் பெயரை உச்சரித்த விதம் போல அவரின் நல் கருத்தினை பின்பற்றி இருந்தால் நாட்டிற்கு நல்லது இப்படி பொதுவாக சொல்லி இருக்கலாம்.
ReplyDeleteDr Ambedkhar really god man and good ministers. His disciples spoil his name and reputation. This now obviouly true.
ReplyDelete