-- ஆர். வி. ஆர்
தமிழக
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் ஒரு அரைகுறை. தனது பித்துக்குளித்தனத்தை
அவரே அடிக்கடி அவரது பேச்சின் மூலம் வெளிப்படுத்துவது வழக்கம். இப்போது அந்த
உண்மையை அவர் மீண்டும் நிரூபிக்கிறார்.
சமீபத்தில்
கோவையில் இரண்டு கிறிஸ்துவ அமைப்புகள் நடத்திய கிறிஸ்து பிறப்பு விழாவில், கிறிஸ்தவ
மக்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதில் முக்கிய பகுதிகள் இவை:
திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும், முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் சார்பாகவும் உங்கள்
அனைவருக்கும் என் இனிமையான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
இங்க
ஆயிரக்கணக்கானவங்க கூடி இருக்கீங்க. கிறிஸ்துமஸ் மகிழ்ச்சில இருக்கீங்க. ஒட்டுமொத்த உலகையே மகிழ்ச்சியாக்கக் கூடிய விழா, நம்முடைய கிறிஸ்துமஸ் விழா மட்டும்தான் (பலத்த ஆரவாரம்). கிறிஸ்துமஸ்
விழான்னா எனக்கு கூடுதல் மகிழ்ச்சி (ஆரவாரம்).
நான் படிச்சது
டான் பாஸ்கோ ஸ்கூல்ல. மேல் படிப்பு படிச்சது, லயோலா காலேஜ்ல. சென்ற ஆண்டு ஒரு
கிறிஸ்துமஸ் விழால கலந்துகொண்டு, ‘நானும் ஒரு கிறிஸ்டியன்தான்’ அப்படின்னு
பெருமையா சொன்னேன். (பலத்த ஆரவாரம்). உடனே பல சங்கிகளுக்கு பயங்கர வயித்தெரிச்சலா
இருந்தது (பலத்த ஆரவாரம்).
நான்
இன்னிக்கு மீண்டும் உங்க முன்னாடி சொல்றேன். இதை சொல்றதுக்கு நான் ரொம்ப பெருமைப்
படறேன். நான் ஒரு கிறிஸ்டியன்தான் (பலத்த
ஆரவாரம்).
(சற்றுப் பொறுத்து)
நீங்க என்னை கிறிஸ்டியன்னு நினைச்சா நான் கிறிஸ்டியன். நீங்க என்னை முஸ்லிம்னு
நினைச்சா நான் முஸ்லிம். நீங்க என்னை ஹிந்துன்னு நினைச்சாலும் நான்
ஹிந்துதான். ஏன்னா நான் எல்லாருக்குமே
பொதுவானவன். எப்போதுமே அப்படித்தான் இருப்போம் (இந்த வார்த்தைகளுக்கு ஆரவாரம் இல்லை).
[உதயநிதி
பேச்சை இணையத்தில் இந்த லிங்கில் பார்க்கலாம்: https://www.youtube.com/shorts/EmAFwiPQVjc ]
உதயநிதி தன்னை ஒரு கிறிஸ்துவராக நினைப்பதில், அவர்
அந்த மதத்தவராக இருப்பதில், அப்படி அவர் அறிவிப்பதில் தவறில்லை. அவர் ஒரு அரைகுறை,
ஒரு பித்துக்குளி என்பது அவர் அதுபற்றி எங்கு பேசினார், எப்படிப் பேசினார், ஏன் பேசினார்
என்ற சமாச்சாரத்தில் இருக்கிறது.
நீங்கள்
ஒரு ஹிந்துவாக அல்லது முஸ்லிமாக இருந்து, உங்கள் மதச் சார்பை நன்கு உணர்ந்த உங்கள்
மதத்தவர் மத்தியில் நீங்கள் இருக்கும்போது – அதுவும் உங்கள் மதத் திருவிழாவிற்காக நீங்கள்
அனைவரும் கூடி இருக்கும்போது – “நான் ஒரு ஹிந்து”
என்றோ அல்லது “நான் ஒரு முஸ்லிம்” என்றோ சொல்லிக் கொள்வீர்களா? மாட்டீர்கள். அதற்கு
அவசியம் இல்லை.
இருந்தாலும்
உதயநிதி, கிறிஸ்து பிறப்பு விழாவுக்குச் சென்று, கிறிஸ்தவர்கள் மத்தியில் நின்று கொண்டு,
“நான் ஒரு கிறிஸ்தவன் என்று போன வருடம் பெருமையாகச் சொன்னேன். இப்போது உங்கள் முன்பாகவும்
நான் கிறிஸ்தவன் என்று பெருமையுடன் சொல்வேன்” என்று ஏன் பேசினார்? யாருக்காக அப்படிப்
பேசினார்?
உதயநிதி தன்னை ஒரு ஹிந்து என்றே சொல்லி இருந்தாலும், சிறுபான்மை மக்களின் ஓட்டிற்காக அந்த மக்களை அவர் எப்போதும் தாஜா செய்ய விரும்புகிறவர், ஹிந்துக்களை உதாசீனம் செய்வதும் இளக்காரம் செய்வதும் சிறுபான்மையினரைத் தாஜா செய்வதற்கான வழி என்று உதயநிதி நினைப்பவர், என்று சிறுபான்மை மதத் தலைவர்களுக்குத் தெரியும். ஆகையால் உதயநிதி பேசியது, குறிப்பாக அந்த மக்களுக்காக அல்ல – அவர்கள் முன் பேசியதில் அவர் அற்ப திருப்தி அடைந்தாலும்.
உதயநிதி
அப்படிப் பேசியது பாஜக தலைவர்கள் தனது பேச்சைக் கேட்க வேண்டும், கேட்டு எரிச்சல் படவேண்டும்
என்ற எதிர்பார்ப்பிலும் நப்பாசையிலும் தான். ஆனால் நடந்தது என்னவென்றால், உண்மையில்
உதயநிதி ஹிந்துக்கள் மத்தியில் இன்னும் சிறுமைப்பட்டு நிற்கிறார்.
பாஜக
தலைவர்கள் மட்டுமல்ல. எந்த சாதாரண ஹிந்து மனிதரும் கூட, மற்ற ஒருவர் இன்னொரு மதத்தவராக
இருப்பதால், மற்றவர் தன்னை இன்னொரு மதத்தவர் என்று சொல்லிக் கொள்வதால், வருத்தமோ வயிற்றெரிச்சலோ
அடைவதில்லை.
உதயநிதி கிறிஸ்தவர் என்றால், அதை அவர் வருடா வருடம் அறிவிப்பதால், எந்த ஹிந்துவும் கவலைப்பட, வருத்தம் கொள்ள அவசியம் இல்லை. ஆனால் ஒரு அரசியல் தலைவராக, அதுவும் ஒரு மந்திரியாக, உதயநிதி – அவர் ஹிந்துவோ, இன்னொரு மதத்தவரோ அல்லது நாஸ்திகரோ – ஹிந்துக்களை இழிப்பதும் பழிப்பதும் உதாசீனம் செய்வதுமாக இருந்தால், அதை பாஜக தலைவர்கள் நிச்சயம் ரசிக்க மாட்டார்கள், கண்டனம் செய்வார்கள்.
உதயநிதியின்
தாயார் துர்கா ஸ்டாலின் ஹிந்துவாக இருக்கிறார், பல ஹிந்து கோவில்களுக்குச் செல்கிறார்.
அது அவரது நம்பிக்கை. அதை அனைவரும் மதிக்க வேண்டும். மு. க. ஸ்டாலின் மற்றும் உதயநிதியின்
போக்குகளை மனதில் வைத்து நாம் துர்கா ஸ்டாலினின் மத நம்பிக்கையை, அவர் கோவில்களுக்குச்
செல்வதை, விமரிசிப்பது தவறு. இது ஒரு பக்கம்
இருக்கட்டும்.
வெறும்
ஆழ்ந்த மத நம்பிக்கையினால் மட்டும் உதயநிதி கிறிஸ்தவராக இருக்கிறார் என்றால், அதைப்
பற்றி அவர் மேடை ஏறி தம்பட்டம் அடிக்க வேண்டியதில்லை. அவர் பாட்டுக்கு அமைதியாக ஒரு
கிறிஸ்தவராக இருக்கலாம். கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்
சென்று வரலாம்.
பாரதத்தில்
தொன்றுதொட்டுப் பெருவாரியாக இருக்கும் ஹிந்துக்களின் நலன்களும் மத உணர்வுகளும் புறக்கணிக்கப்
படக் கூடாது என்று செயல்படும் பாஜக-வை, அரசியல் ரீதியாக திராவிட மாடலில் எப்படி எதிர்ப்பது
என்று புரியாமல் தவிக்கிறார் உதயநிதி. ஆகையால், தான் ஒரு கிறிஸ்தவர் என்று சொல்வதில்
பெருமைப் படுகிறேன் என்று அவர் சிறுபிள்ளைத்
தனமாக பிரகடனம் செய்து வருகிறார்.
தன்னுடைய தாய்
மனதை நினைத்தாவது உதயநிதி அடக்கி வாசிக்கலாமே? ஒரு பித்துக்குளிக்கு சில
விஷயங்கள் புரியாது.
கோவைக்
கூட்டத்தில், தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று பெருமையாக அறிவிப்பதாக உதயநிதி இரண்டு முறை
அழுத்தமாகச் சொன்னார். அவருக்கு ஏகப்பட்ட ஆரவாரம் கிடைத்தது. உடனே, ‘நம் பேச்சைக் கேட்டு
கூட்டம் இப்படி ஆர்ப்பரிக்கிறதே! ஒரு துணை முதல்வராக, நாம் ஏதோ ஓவராகப் பேசி இருக்க
வேண்டும்!’ என்று உதயநிதி நினைத்தாரோ என்னமோ! சில வினாடிகளில் சுதாரித்து, “நீங்க
என்னை கிறிஸ்டியன்னு நினைச்சா நான் கிறிஸ்டியன். முஸ்லிம்னு நினைச்சா நான்
முஸ்லிம். ஹிந்துன்னு நினைச்சாலும் நான் ஹிந்து. நான் எல்லாருக்கும் பொதுவானவன்” என்று
ஏதோ பேசிச் சமாளித்தார்.
ஒரு கூட்டத்தின் நடுவே ஒருவன் நின்று வாழைப் பழம் சாப்பிட்டபடி, “நான் வாழைப்பழ ரசிகன். நான் இந்தப் பழத்தைப் ருசிச்சு சாப்பிடுவேன். போன வருஷமும் ஒரு கூட்டத்துக்கு முன்னாடி அப்படித்தான் சாப்பிட்டேன். வாழைப் பழம் எனக்குப் பிடிக்கும்னு எப்பவும் பெருமையோட சொல்வேன். ஆனா ஒண்ணு. நான் சாப்பிடறது வாழைப் பழம்னு நீங்க நினைச்சா அது வாழைப் பழம்! கொய்யாப் பழம்னு நீங்க நினைச்சா அது கொய்யாப் பழம்! மாம்பழம்னு நீங்க நினைச்சாலும் அது மாம்பழம்!” என்று பேசினால் என்ன அர்த்தம்? உதயநிதி என்று அர்த்தமோ?
* * * * *
Excellent sir
ReplyDeleteகோவைக் கூட்டத்தில், தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று பெருமையாக அறிவிப்பதாக உதயநிதி இரண்டு முறை அழுத்தமாகச் சொன்னார். அவருக்கு ஏகப்பட்ட ஆரவாரம் கிடைத்தது. உடனே, ‘நம் பேச்சைக் கேட்டு கூட்டம் இப்படி ஆர்ப்பரிக்கிறதே! ஒரு துணை முதல்வராக, நாம் ஏதோ ஓவராகப் பேசி இருக்க வேண்டும்!’ என்று உதயநிதி நினைத்தாரோ என்னமோ! சில வினாடிகளில் சுதாரித்து, “நீங்க என்னை கிறிஸ்டியன்னு நினைச்சா நான் கிறிஸ்டியன். முஸ்லிம்னு நினைச்சா நான் முஸ்லிம். ஹிந்துன்னு நினைச்சாலும் நான் ஹிந்து. நான் எல்லாருக்கும் பொதுவானவன்” என்று ஏதோ பேசிச் சமாளித்தார்.
ReplyDeleteஒரு கூட்டத்தின் நடுவே ஒருவன் நின்று வாழைப் பழம் சாப்பிட்டபடி, “நான் வாழைப்பழ ரசிகன். நான் இந்தப் பழத்தைப் ருசிச்சு சாப்பிடுவேன். போன வருஷமும் ஒரு கூட்டத்துக்கு முன்னாடி அப்படித்தான் சாப்பிட்டேன். வாழைப் பழம் எனக்குப் பிடிக்கும்னு எப்பவும் பெருமையோட சொல்வேன். ஆனா ஒண்ணு. நான் சாப்பிடறது வாழைப் பழம்னு நீங்க நினைச்சா அது வாழைப் பழம்! கொய்யாப் பழம்னு நீங்க நினைச்சா அது கொய்யாப் பழம்! மாம்பழம்னு நீங்க நினைச்சாலும் அது மாம்பழம்!” என்று பேசினால் என்ன அர்த்தம்? உதயநிதி என்று அர்த்தமோ?
shall i copy this and post in my FB page pl confirm thanks.
ReplyDeleteYes, you can post this on Facebook.
Delete