Friday, 20 December 2024

'நான் கிறிஸ்தவன்' என்று உதயநிதி பிரகடனம். அவர் ஏன் அரசியலில் அரைகுறை?

 

-- ஆர். வி. ஆர்

 

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் ஒரு அரைகுறை. தனது பித்துக்குளித்தனத்தை அவரே அடிக்கடி அவரது பேச்சின் மூலம் வெளிப்படுத்துவது வழக்கம். இப்போது அந்த உண்மையை அவர் மீண்டும் நிரூபிக்கிறார்.

 

சமீபத்தில் கோவையில் இரண்டு கிறிஸ்துவ அமைப்புகள் நடத்திய கிறிஸ்து பிறப்பு விழாவில், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதில் முக்கிய பகுதிகள் இவை:

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும், முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் சார்பாகவும் உங்கள் அனைவருக்கும் என் இனிமையான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

 

இங்க ஆயிரக்கணக்கானவங்க கூடி இருக்கீங்க. கிறிஸ்துமஸ் மகிழ்ச்சில இருக்கீங்க.  ஒட்டுமொத்த உலகையே மகிழ்ச்சியாக்கக் கூடிய விழா, நம்முடைய கிறிஸ்துமஸ் விழா மட்டும்தான் (பலத்த ஆரவாரம்). கிறிஸ்துமஸ் விழான்னா எனக்கு கூடுதல் மகிழ்ச்சி (ஆரவாரம்).

 

நான் படிச்சது டான் பாஸ்கோ ஸ்கூல்ல. மேல் படிப்பு படிச்சது, லயோலா காலேஜ்ல. சென்ற ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் விழால கலந்துகொண்டு, ‘நானும் ஒரு கிறிஸ்டியன்தான்’ அப்படின்னு பெருமையா சொன்னேன். (பலத்த ஆரவாரம்). உடனே பல சங்கிகளுக்கு பயங்கர வயித்தெரிச்சலா இருந்தது (பலத்த ஆரவாரம்).

 

நான் இன்னிக்கு மீண்டும் உங்க முன்னாடி சொல்றேன். இதை சொல்றதுக்கு நான் ரொம்ப பெருமைப் படறேன்.  நான் ஒரு கிறிஸ்டியன்தான் (பலத்த ஆரவாரம்).

 

(சற்றுப் பொறுத்து) நீங்க என்னை கிறிஸ்டியன்னு நினைச்சா நான் கிறிஸ்டியன். நீங்க என்னை முஸ்லிம்னு நினைச்சா நான் முஸ்லிம். நீங்க என்னை ஹிந்துன்னு நினைச்சாலும் நான் ஹிந்துதான்.  ஏன்னா நான் எல்லாருக்குமே பொதுவானவன். எப்போதுமே அப்படித்தான் இருப்போம் (இந்த வார்த்தைகளுக்கு ஆரவாரம் இல்லை).

 

[உதயநிதி பேச்சை இணையத்தில் இந்த லிங்கில் பார்க்கலாம்: https://www.youtube.com/shorts/EmAFwiPQVjc ]

 

 உதயநிதி தன்னை ஒரு கிறிஸ்துவராக நினைப்பதில், அவர் அந்த மதத்தவராக இருப்பதில், அப்படி அவர் அறிவிப்பதில் தவறில்லை. அவர் ஒரு அரைகுறை, ஒரு பித்துக்குளி என்பது அவர் அதுபற்றி எங்கு பேசினார், எப்படிப் பேசினார், ஏன் பேசினார் என்ற சமாச்சாரத்தில் இருக்கிறது.

 

நீங்கள் ஒரு ஹிந்துவாக அல்லது முஸ்லிமாக இருந்து, உங்கள் மதச் சார்பை நன்கு உணர்ந்த உங்கள் மதத்தவர் மத்தியில் நீங்கள் இருக்கும்போது – அதுவும் உங்கள் மதத் திருவிழாவிற்காக நீங்கள் அனைவரும் கூடி இருக்கும்போது – “நான்  ஒரு ஹிந்து” என்றோ அல்லது “நான் ஒரு முஸ்லிம்” என்றோ சொல்லிக் கொள்வீர்களா? மாட்டீர்கள். அதற்கு அவசியம் இல்லை.

 

இருந்தாலும் உதயநிதி, கிறிஸ்து பிறப்பு விழாவுக்குச் சென்று, கிறிஸ்தவர்கள் மத்தியில் நின்று கொண்டு, “நான் ஒரு கிறிஸ்தவன் என்று போன வருடம் பெருமையாகச் சொன்னேன். இப்போது உங்கள் முன்பாகவும் நான் கிறிஸ்தவன் என்று பெருமையுடன் சொல்வேன்” என்று ஏன் பேசினார்? யாருக்காக அப்படிப் பேசினார்?

 

உதயநிதி தன்னை ஒரு ஹிந்து என்றே சொல்லி இருந்தாலும், சிறுபான்மை மக்களின் ஓட்டிற்காக அந்த மக்களை அவர் எப்போதும் தாஜா செய்ய விரும்புகிறவர், ஹிந்துக்களை உதாசீனம் செய்வதும் இளக்காரம் செய்வதும் சிறுபான்மையினரைத் தாஜா செய்வதற்கான வழி என்று உதயநிதி நினைப்பவர், என்று சிறுபான்மை மதத் தலைவர்களுக்குத் தெரியும்.   ஆகையால் உதயநிதி பேசியது, குறிப்பாக அந்த மக்களுக்காக அல்ல  அவர்கள் முன் பேசியதில் அவர் அற்ப திருப்தி அடைந்தாலும்.

 

உதயநிதி அப்படிப் பேசியது பாஜக தலைவர்கள் தனது பேச்சைக் கேட்க வேண்டும், கேட்டு எரிச்சல் படவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் நப்பாசையிலும் தான். ஆனால் நடந்தது என்னவென்றால், உண்மையில் உதயநிதி ஹிந்துக்கள் மத்தியில் இன்னும் சிறுமைப்பட்டு நிற்கிறார்.

 

பாஜக தலைவர்கள் மட்டுமல்ல. எந்த சாதாரண ஹிந்து மனிதரும் கூட, மற்ற ஒருவர் இன்னொரு மதத்தவராக இருப்பதால், மற்றவர் தன்னை இன்னொரு மதத்தவர் என்று சொல்லிக் கொள்வதால், வருத்தமோ வயிற்றெரிச்சலோ அடைவதில்லை.

 

உதயநிதி கிறிஸ்தவர் என்றால், அதை அவர் வருடா வருடம் அறிவிப்பதால், எந்த ஹிந்துவும் கவலைப்பட, வருத்தம் கொள்ள அவசியம் இல்லை. ஆனால் ஒரு அரசியல் தலைவராக, அதுவும் ஒரு மந்திரியாக, உதயநிதி – அவர் ஹிந்துவோ, இன்னொரு மதத்தவரோ அல்லது நாஸ்திகரோ – ஹிந்துக்களை இழிப்பதும் பழிப்பதும் உதாசீனம் செய்வதுமாக இருந்தால், அதை பாஜக தலைவர்கள் நிச்சயம் ரசிக்க மாட்டார்கள், கண்டனம் செய்வார்கள். 

 

உதயநிதியின் தாயார் துர்கா ஸ்டாலின் ஹிந்துவாக இருக்கிறார், பல ஹிந்து கோவில்களுக்குச் செல்கிறார். அது அவரது நம்பிக்கை. அதை அனைவரும் மதிக்க வேண்டும். மு. க. ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் போக்குகளை மனதில் வைத்து நாம் துர்கா ஸ்டாலினின் மத நம்பிக்கையை, அவர் கோவில்களுக்குச் செல்வதை, விமரிசிப்பது தவறு.  இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

 

வெறும் ஆழ்ந்த மத நம்பிக்கையினால் மட்டும் உதயநிதி கிறிஸ்தவராக இருக்கிறார் என்றால், அதைப் பற்றி அவர் மேடை ஏறி தம்பட்டம் அடிக்க வேண்டியதில்லை. அவர் பாட்டுக்கு அமைதியாக ஒரு கிறிஸ்தவராக இருக்கலாம்.  கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் சென்று வரலாம். 

 

பாரதத்தில் தொன்றுதொட்டுப் பெருவாரியாக இருக்கும் ஹிந்துக்களின் நலன்களும் மத உணர்வுகளும் புறக்கணிக்கப் படக் கூடாது என்று செயல்படும் பாஜக-வை, அரசியல் ரீதியாக திராவிட மாடலில் எப்படி எதிர்ப்பது என்று புரியாமல் தவிக்கிறார் உதயநிதி. ஆகையால், தான் ஒரு கிறிஸ்தவர் என்று சொல்வதில் பெருமைப் படுகிறேன் என்று அவர்  சிறுபிள்ளைத் தனமாக பிரகடனம் செய்து வருகிறார்.

 

தன்னுடைய தாய் மனதை நினைத்தாவது உதயநிதி அடக்கி வாசிக்கலாமே? ஒரு பித்துக்குளிக்கு சில விஷயங்கள் புரியாது.

 

கோவைக் கூட்டத்தில், தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று பெருமையாக அறிவிப்பதாக உதயநிதி இரண்டு முறை அழுத்தமாகச் சொன்னார். அவருக்கு ஏகப்பட்ட ஆரவாரம் கிடைத்தது. உடனே, ‘நம் பேச்சைக் கேட்டு கூட்டம் இப்படி ஆர்ப்பரிக்கிறதே! ஒரு துணை முதல்வராக, நாம் ஏதோ ஓவராகப் பேசி இருக்க வேண்டும்!’ என்று உதயநிதி நினைத்தாரோ என்னமோ! சில வினாடிகளில் சுதாரித்து, “நீங்க என்னை கிறிஸ்டியன்னு நினைச்சா நான் கிறிஸ்டியன். முஸ்லிம்னு நினைச்சா நான் முஸ்லிம். ஹிந்துன்னு நினைச்சாலும் நான் ஹிந்து. நான் எல்லாருக்கும் பொதுவானவன்” என்று ஏதோ பேசிச் சமாளித்தார்.  

 

ஒரு கூட்டத்தின் நடுவே ஒருவன் நின்று வாழைப் பழம் சாப்பிட்டபடி,  “நான் வாழைப்பழ ரசிகன்.  நான் இந்தப் பழத்தைப் ருசிச்சு சாப்பிடுவேன். போன வருஷமும் ஒரு கூட்டத்துக்கு முன்னாடி அப்படித்தான் சாப்பிட்டேன். வாழைப் பழம் எனக்குப் பிடிக்கும்னு எப்பவும் பெருமையோட சொல்வேன்.  ஆனா ஒண்ணு. நான் சாப்பிடறது வாழைப் பழம்னு நீங்க நினைச்சா அது வாழைப் பழம்! கொய்யாப் பழம்னு நீங்க நினைச்சா அது கொய்யாப் பழம்! மாம்பழம்னு நீங்க நினைச்சாலும் அது மாம்பழம்!” என்று பேசினால்  என்ன அர்த்தம்? உதயநிதி என்று அர்த்தமோ?

 

* * * * *

 Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Wednesday, 4 December 2024

ஈ.வெ.ரா சிலை, ஹெச். ராஜா மீது கோர்ட் தீர்ப்பு, புரியாத சில விஷயங்கள்!

 

-- ஆர். வி. ஆர்

 

ஹெச். ராஜா, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஒரு சீனியர் தலைவர். ஹிந்து மதத்தின் மீது பற்றுள்ள தமிழர்களிடையே அவருக்கு விசேஷ மரியாதை உண்டு.


சென்னையிலுள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம் ஹெச். ராஜாவைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை வழங்கி இருக்கிறது - அது ஈ. வெ. ரா சிலைகள் சம்பந்தமாக ஹெச். ராஜா ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் போட்ட ஒரு பதிவுக்காக. அவர் அப்பீல் செய்ய முப்பது நாட்கள் அவகாசம் கொடுத்து அதுவரை தண்டனையை நிறுத்தி வைத்திருக்கிறது நீதிமன்றம்.

 

அதே சிறப்பு நீதிமன்றம், திமுக-வின் கனிமொழியின் பெயர் சம்பந்தப் பட்ட வேறு ஒரு வழக்கிலும் ஹெச். ராஜா குற்றவாளி என்று தீர்ப்பு சொல்லி இருக்கிறது. இந்த இன்னொரு வழக்கு முக்கியத்துவம் குறைந்தது என்பதால் அதுபற்றி நான் இப்போது பேச வரவில்லை.

 

ஈ. வெ. ரா சிலைகள் பற்றி ஹெச். ராஜா ட்விட்டரில் தெரிவித்த கருத்தை நீதிமன்றமே தீர்ப்பில் எடுத்துச் சொல்லி இருக்கிறது. அது கீழே:

 

லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப் பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ. வெ. ரா.”

 

 

இந்தப் பதிவினால், இ. பி. கோ சட்டத்தின் இரண்டு பிரிவுகளின் கீழ் ஹெச். ராஜா குற்றவாளி என்கிறது தீர்ப்பு.  நீட்டி முழக்காமல், அந்த இரண்டு பிரிவுகள் என்ன சொல்கின்றன?

 

பிரிவு 153: ஒருவர் சட்டத்திற்கு மாறாக ஒன்றைச் செய்தவாறு, வேண்டும் என்றே மற்ற மனிதரைக் கலகம் செய்யத் தூண்டினால், அதனால் கலகம் ஏற்பட்டால், அவ்வாறு தூண்டுபவருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை வழங்கலாம்; கலகம் ஏற்படாமல்  போனால், அவருக்கு ஆறு மதம் வரை சிறைத் தண்டனை வழங்கலாம். அபராதமும் விதிக்கலாம்.

 

பிரிவு 504: ஒருவர் வேண்டும் என்றே மற்ற மனிதரை அவமதித்து ஆத்திரமூட்டுவதால் அந்த மற்றவர் பொது அமைதியைக் குலைக்கலாம் என்றால், .......... அப்படி அவமதித்து ஆத்திரமூட்டும் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கலாம். அபராதமும் விதிக்கலாம்.

 

இதன்படி, ஹெச். ராஜா குற்றவாளி என்பதற்கு நீதிமன்றம் சில முக்கிய காரணங்களைச் சொல்கிறது. அவை எனக்குச் சரியாகப் புரியவில்லை. எது எது எனக்குப் புரியவில்லை, ஏன் புரியவில்லை, என்று சொல்கிறேன்.


முதலாவதாகத் தீர்ப்பில் சொல்லப் படுவது இது:

 

“தந்தை பெரியாரின் சித்தாந்தம் இந்த நாட்டிற்கும் இதன் மக்களுக்கும் பலப்பல நல்லவற்றைச் செய்திருக்கிறது என்பதைச் சொல்லத் தேவை இல்லை. இருந்தாலும் அவரது சித்தாந்தத்தின் ஒரு பகுதி சமூகத்தின் ஒரு பிரிவினரால் ஏற்றுக் கொள்ளமுடியாதவாறு இருக்கலாம். அது இயற்கை. ஆனால் ஒரு சித்தாந்தம் எப்பொழுதும் மற்றொரு சித்தாந்தத்தால் மட்டும்தான் எதிர்க்கப் படவேண்டும் பலத்தினால், தூண்டுதலால், உசுப்பிவிடுதலால் அல்ல.”

 

 

பெரியாரின் சித்தாந்தம் “இந்த நாட்டிற்கும் இதன் மக்களுக்கும் பலப்பல நல்லவற்றைச்” செய்திருக்கிறதா? தீர்ப்பு புரியவில்லையே!

 

1944-ம் வருஷம் நடந்த சேலம் மாநாட்டில், மகாத்மா காந்தி நாட்டிற்கு சுதந்திரம் கேட்டதைக் கண்டித்து, சென்னை ராஜதானியை மட்டுமாவது இங்கிலாந்து அரசு லண்டனிலிருந்து ஆளவேண்டும் என்று கேட்டாரே ஈ. வெ. ரா, அதுவும் அவர் நாட்டுக்குச் செய்த நல்லதா? தீர்ப்பு புரியவில்லையே!

 

1971-ம் வருடம், ஈ. வெ. ரா சேலத்தில் ராமர் சீதை படங்களை ஊர்வலமாக  எடுத்துச் சென்றபோது, அந்த சுவாமி படங்களை அவர் சீடர்கள் செருப்பால் அடித்தார்களே, அதை அவர் கண்டிக்கவும் இல்லையே, அதுகூட அவர் நாட்டுக்கும் மக்களுக்கும் செய்த நல்லதா? தீர்ப்பு புரியவில்லையே!

 

ஈ. வெ. ரா ஒரு நாத்திகராக இருந்தார். அதில் ஒரு தவறும் இல்லை. ஹிந்து மதம் நாத்திகர்களை தண்டிக்கச் சொல்லவில்லை, அவர்களை வெறுப்பதில்லை, திட்டுவதும் இல்லை. இது மேலான கண்ணோட்டம், உயர்ந்த பண்பு. ஆனால் ஈ. வெ. ரா, கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் மீது அநாகரிகமாக வசவுகள் பொழிந்தார்.   

 

“கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன். கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி” என்பது ஈ. வெ. ரா-வின் பிரசித்தி பெற்ற வசவு வார்த்தைகள்.  அவரது சிலைகளைத் தமிழ்நாட்டில் பல இடங்களில் நிறுவி – ஹிந்துக் கோவில்கள் முன்பாகவும் நிறுவி -  அந்த வசவு வார்த்தைகளைச் சிலைகளின் பீடத்தில் பொறித்து வைத்து அழகு பார்த்தது தி. மு.க. அப்படி நிறுவப்பட்ட ஒரு சிலையை ஈ.வெ.ரா-வே மெச்சினார்.

 

நம் நாட்டில் மிகப் பெருவாரியான மக்கள் கடவுளை நம்புகிறார்கள், கடவுளிடம் பிரார்த்திக்கிறார்கள். அவர்களை ஒட்டுமொத்தமாக “முட்டாள், அயோக்கியன், காட்டுமிராண்டி” என்று ஈ.வெ.ரா திட்டி வர்ணித்தது, அவர் நாட்டுக்கும் மக்களுக்கும் செய்த நல்லதா? தீர்ப்பு புரியவில்லையே!

 

ஈ. வெ. ரா-வின் சித்தாந்தம் “இன்னொரு சித்தாந்தத்தால் மட்டும்தான் எதிர்க்கப்பட வேண்டும்”  என்றும்  தீர்ப்பு சொல்கிறது. என்ன அர்த்தம்?

 

ஈ. வெ. ரா-வின் கடவுள்-நம்பிக்கை துவேஷப் போக்கை எதிர்க்க நினைப்பவர்கள், அந்த மனிதருக்குப் போட்டியாக ராமர் கிருஷ்ணர் சிலைகளை ஊரெங்கும் வைத்து, அவற்றின் பீடத்தில் “கடவுளைக் கற்பித்தவன் புத்திசாலி. கடவுளைப் பரப்பியவன் ஒழுக்கசீலன், கடவுளை வணங்குகிறவன் நவநாகரிக மனிதன்”  என்ற மாற்று வாசகங்களைப் பொறித்து வைக்க வேண்டுமா? ஈ.வெ.ரா அவமதித்துக் காயப்படுத்திய ஹிந்துக்களின் மனங்கள் இப்படிச் செய்தால் சாந்தி அடையுமா?

 

அல்லது, அதிகமானோர் அலகு குத்தி, காவடி எடுத்து, பஜனை பாடி, அதுபோன்ற வழியில்தான் ஈ. வெ. ரா-வுக்கு எதிரான சித்தாந்தத்தை முன்வைத்து அவர் சிலைகளுக்கு எதிர்ப்புக் காட்ட முடியுமா? தீர்ப்பு புரியவில்லையே!

 

நாட்டுக்கு சுதந்திரம் வருவதை எதிர்த்த ஒருவர், மதநம்பிக்கை உள்ள ஹிந்துக்கள் போற்றி வணங்கும் ராமரை  இழிவு செய்த ஒருவர், “இந்த நாட்டுக்கும் இதன் மக்களுக்கும் கெடுதல் நினைத்தவர்” என்று ஆகாதா? மாறாக, “பலப்பல நல்லவற்றைச்” செய்யும் சித்தாந்தம் கொண்டவர் என்றா ஆகும்? தீர்ப்பில் ஈ. வெ. ரா-வைப் பெரிதாகப் பேசும் வாசகங்கள் புரியவில்லையே!

 

தீர்ப்பு மேலும் சொல்வது: "இந்த வழக்கு தேசிய முக்கியத்துவம், சமூக முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களுக்கு மானநஷ்டம் ஏற்படுத்துவதைப் பற்றியது. அவர்களைக் காட்டமாகத் தாக்கிப் பேசுவது எண்ணிப்பார்க்க முடியாத விளைவுகளை உண்டாக்கும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப் படுவார்கள்.” 


பல்லாயிர வருடங்களாக பாரதத்தில் கோடானுகோடி மக்களின் இதயங்களில் தழைக்கும் இறை நம்பிக்கையை மிக மோசமான வார்த்தைகளால் இழிவு செய்த ஈ. வெ. ரா, இந்த நாட்டில் தேசிய முக்கியத்துவம் பெற்ற தலைவரா?

 

பாரத சமூகத்தின் ஆணிவேரான கடவுள் நம்பிக்கையையும் வழிபாட்டையும்  எள்ளி நகையாடிய ஈ.வெ.ரா இந்த நாட்டில் சமூக முக்கியத்துவம் பெற்ற தலைவரா? தீர்ப்பு புரியவில்லையே!

 

இன்னொன்று. மேலே சொன்ன சட்டப் பிரிவுகளை எடுத்துக் கொண்டால், ஹெச். ராஜாவின் வலைத்தளப் பதிவின் விளைவாக யாரிடையே பதட்டம் அல்லது கலகம் உருவாகலாம்? அதைப் பார்த்து யார் பொது அமைதியைக் குலைக்கலாம்?

 

 இறை நம்பிக்கையை இழிவு செய்த ஈ. வெ. ரா- வினால், அவரது வசவு வார்த்தைகளைத் தாங்கிய அவரது சிலைகளால், நாட்டு மக்கள் மனதால் காயப்பட்டு பதட்டம் கொள்ள மாட்டார்களா, கலகம் செய்ய மாட்டார்களா? பொது அமைதியைக் குலைக்க மாட்டார்களா? அந்தச் சிலைகளே இ. பி. கோ-வுக்கு எதிரானவையா இல்லையா?

 

பல்லாயிரம் வருடங்கள் ஆழ்ந்த இறை நம்பிக்கை தொடரும் நம் நாட்டில் அப்பாவிப் பொதுமக்கள் அவ்வாறு பதட்டம் கொள்ள மாட்டார்கள், கலகம் செய்ய மாட்டார்கள், பொது அமைதியைக் குலைக்க மாட்டார்கள், அப்படி நடக்கவும் இலை, என்னும் போது 145 வருடங்கள் முன்பு பிறந்த ஈ.வெ.ரா-வின் சிலைகளை அப்புறப் படுத்த வேண்டும் என்று ஒருவர் சொன்னால் பதட்டம், கலகம், பொது அமைதிக்கு பங்கம் எல்லாம் வந்துவிடுமா? திருமால், சிவன், லக்ஷ்மி, பார்வதி, பிள்ளையார், முருகன் போன்ற கடவுள்களை விட, பாரத மக்களைத் தனது நாத்திகத்தால், இறை துவேஷத்தால், ஆகர்ஷித்த பெருமானா ஈ.வெ.ரா?  தீர்ப்பு புரியவில்லையே!

 

புரிந்தவர்கள் தீர்ப்பை விளக்கினால் பணிந்து புரிந்து கொள்கிறேன்.   

 

எல்லார்க்கும் புரிந்தால் சரி!


* * * * *

 Author: R. Veera Raghavan, Advocate, Chennai


Sunday, 1 December 2024

ஐயப்ப பக்தர்களின் 'ஐ அம் சாரி’ எதிர்ப் பாட்டு ஏன் பிரபலம் ஆகிறது?

 

-- ஆர். வி. ஆர்

 

‘ஐ அம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா’ என்று தொடங்குகிறது ஒரு வம்புப் பாடல். அது சில வருடங்களுக்கு முன் கிளம்பியது.

 

அந்த வம்புப் பாடலுக்கும், தமிழகத்தில் ஒரு கூட்டம் வெளிப்படுத்தும் குரூரமான ஹிந்து மத துவேஷத்திற்கும் பதிலடியாக, ஒரு புதிய வீடியோ பாடல் யூ டியூப்பில் தற்போது வந்திருக்கிறது. ‘ஐ அம் சாரி’ என்ற அதே மூன்று சொற்களுடன் தொடங்கும் இந்தப் புதிய பாடல் ஆச்சரியமாகப் படு வேகமாகப் பிரபலம் ஆகிறது. என்ன காரணம்?

 

ஹிந்துக்களின் மத நம்பிக்கைகளை இழிப்பது,  பழிப்பது, ஏளனம் செய்வது தமிழ்நாட்டில் ஒரு கூட்டத்தினரின் விஷம வழக்கம். இதற்குப் பிதாமகராக இருந்தவர் திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்த  ஈ. வெ. ராமசாமி.  ‘பெரியார்’, ‘தந்தை பெரியார்’,  ‘பகுத்தறிவுப் பகலவன்’ என்றும் அவரது அபிமானிகளால் அவர் போற்றப் படுகிறார்.

 

ஈ.வெ.ரா-வுக்கு மதம், கடவுள் என்ற நம்பிக்கைகள் கிடையாது. ஹிந்துத் தாய்-தந்தையருக்குப் பிறந்தாலும், அவர் தன்னை ஒரு ஹிந்துவாக அடையாளம் செய்து கொண்டதில்லை. அதாவது அவர் ஒரு மதமற்ற மனிதன் என்றிருந்தார்.  ஆனால் அவரும் அவரது அபிமானிகளும் ஹிந்து மதத்தை,  ஹிந்துக் கடவுள்களை, ஹிந்துப் பழக்க வழக்கங்களை மட்டும் இழித்தும் பழித்தும் நிராகரித்தும் இருந்தனர், இருக்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்கும் திமுக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், ஹிந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை. அந்தக் கூட்டத்தினரின் வெறுப்பும் சிறுமையும் அவர்களின் கொஞ்ச நஞ்சப் பகுத்தறிவையும் குப்புறத் தள்ளுகிறது.

 

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை ஹிந்துக்கள் வெறுப்பதில்லை, அவர்களுக்குக் குறுக்கே நிற்பதுமில்லை. நம்பிக்கை இல்லாதவர்களை அவர்கள் வழியில் போகவிட்டு, ஹிந்துக்கள் தம் வழிபாட்டை, தம் மதப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள்.  இது உயர்ந்த பண்பு.

 

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடமும் இது போன்ற சிறந்த பண்பு இருக்க முடியும்.  அதாவது, கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் ஹிந்துக்களையோ மற்ற மதத்தினரையோ இழிக்காமல் பழிக்காமல் அவர்களையும் சக மனிதர்களாகப் பாவித்து, தாங்கள் பாட்டுக்கு எந்தக் கடவுளையும் வணங்காமல், வழிபாடுத் தலங்களுக்குச் செல்லாமல், அமைதியாக பண்பாக இருக்க முடியும். அப்படி மிகப் பலர் உலகில் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பண்பு திராவிட-பிராண்ட் பகுத்தறிவுவாதிகளிடம் இல்லை.

 

தமிழகத்தின் துரதிர்ஷ்டம், இந்தப் பண்பற்ற ஈ.வெ.ரா அபிமானிகளின் எண்ணிக்கை மிகச் சொற்பமாக இருந்தாலும், திராவிட அரசியல் சக்தியால் அவர்கள் குரல் பொதுவெளியில் ஓங்கி ஒலிக்கிறது. கடவுள் நம்பிக்கையுள்ள ஹிந்துக்களின் எதிர்ப்புக் குரல் மிக மெலிதாகத் தான் எழ முடிகிறது, விரைவில் அடங்கியும் விடுகிறது. ஹிந்துக்கள் தங்களின் வேதனையை ஓட்டுக்களிலும் காண்பிப்பதில்லை. அவர்களின் இயற்கையான சாந்தமே இன்றைய உலகில் அவர்களின் பலவீனமும் கூட.

 

தமிழகத்தில் உள்ள ஹிந்து நம்பிக்கையாளர்கள் பலருக்கு ஒரு பெரிய வருத்தமும், வெளியில் சொல்ல முடியாத மனச் சங்கடமும் உண்டு. என்னவென்றால்: ஹிந்து மத நம்பிக்கைகளை ஏளனம் செய்பவர்களுக்கு எதிராக, என்ன காரணத்தாலோ தாம் குரல் எழுப்ப முடியவில்லை. அந்த வருத்தத்தையும் மனச் சங்கடத்தையும் தடாலடியாகக் குறைக்க வந்திருக்கிறது, இந்தப் புதிய  ‘ஐ அம் சாரி’ பதிலடிப் பாடல்.  அப்படி என்ன இருக்கிறது இந்த பதிலடிப் பாடலில்?

 

ஹிந்து மதத்தில், சபரிமலை ஐயப்பன் ஒரு பிரிம்மச்சாரிக் கடவுளாக இருக்கிறார். இனப் பெருக்க வயதுடைய பெண்கள் சபரி மலைக்குச் செல்வதில்லை என்ற வழக்கம் ஹிந்து மக்களிடையே இருக்கிறது. ஆண், பெண் இரு பாலருமே இந்தக் கோட்பாட்டை காலம் காலமாக  மதிக்கிறார்கள்.

 

இந்த நிலையில், ‘ஐ அம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா’ என்ற பாட்டை நம்பிக்கையற்றவர்கள் எழுதி, இசையமைத்து, ஒரு இளம் பெண் மேடைகளில் பாடி அதை வீடியோவாகவும் வெளியிட்டது, அவர்களின் அடாவடித் திமிரைக் காண்பிக்கிறது.

 

இந்தத் திமிர்ப் பாட்டு, நம்பிக்கையுள்ள ஹிந்துக்களுக்கு, குறிப்பாக ஐயப்ப பக்தர்களுக்கு, மன வேதனை ஏற்படுத்தும்.  ஆனால் இதற்கு ஹிந்துக்களின் எதிர்ப்புக் குரலை தைரியமாக ஒருமுகப்படுத்தி அழுத்தமாக வெளிப்படுத்தும் ஒரு ஆற்றல் – அதுவும் திராவிட அரசியல் சூழ்நிலையில் அப்படியான ஆற்றல் – இதுவரை ஹிந்துக்களுக்கு வழக்கம் போல் கிடைக்காமல் இருந்தது. இப்போது ஒரு வகையில் அது அவர்களுக்குக் கிடைத்துவிட்டது, இந்தப் புதிய பதிலடிப் பாடல் மூலமாக. 


இந்தப் புதிய பாடலில் ஐயப்ப சாமியைப் போற்றி வணங்கும் வரிகள் இருக்கின்றன. அதே சமயம், இந்தப் பாடலின் சில வரிகள் கடவுள் நம்பிக்கை இல்லாத திராவிட மைந்தர்களின் போலிப் பகுத்தறிவுக்கு, பண்பற்ற நடத்தைக்கு, நிர்தாட்சண்யமாக சுரீரென்று சூடு கொடுக்கிறது. ஹிந்து நம்பிக்கையாளர்களுக்கு இது புளகாங்கிதம் தருகிறது. இந்த நிமிடம் வரை, நான்கே நாட்களில் யூ டியூப்பில் இந்தப் பாடல் பத்து லட்சம் பார்வைகளை நெருங்குகிறது, நாற்பத்தி இரண்டாயிரம் வரவேற்பு சமிக்ஞைகளைப் பெறுகிறது.  

 

இந்த பதிலடிப் பாடல் எண்ணற்ற ஹிந்துக்களின் மன வலிக்கு ஒரு சந்தோஷ நிவாரணம் அளிக்கிறது. அதுதான் இந்தப் பாடலின் உடனடி வெற்றிக்குப் பெரும் காரணம். இதன் மெட்டும், இசையும், அற்புதக் குரலும், வீடியோ சிறப்பும் மற்ற முக்கிய காரணங்கள்.

 

இந்தப் பதிலடிப் பாடல், ஹிந்துக்கள் வாங்கிய அடியை விடப் பெரிய அடியாகவும் திருப்பித் தருகிறது. அவ்வாறு திருப்பித் தரும் பாடலில் சில வரிகள், சில காதுகளுக்கு அதீதமாகப் பட்டாலும், சற்று எங்கோ போவது போல் இருந்தாலும், சில பயங்கரவாதிகளைப் போடு போடென்று திருப்பி அடித்தால்தான் – ஒன்றிரண்டு குண்டுகள் விலகிப் போனாலும் – அந்த பயங்கரவாதக் கும்பல் அடங்க வழி உண்டு என்பது மாதிரியானவை.    

 

இந்தப் பதிலடிப் பாடலுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் – இந்தப் பாடல் சட்ட மீறலாகத் தெரியவில்லை. இதுபற்றி அப்போது கோர்ட் என்ன சொல்லும் என்பது ஒருபுறம் இருக்கட்டும் – அது தமிழக ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் பார்க்கப் படும்.  ஏனென்றால், சபரிமலை ஐயப்ப சாமி வழிபாட்டு நடைமுறையை இளக்காரம் செய்து தொடங்கும் பாட்டுக்குப் பதிலடியாக இந்தப் புதிய பாடல் வந்திருக்கிறது.  ஐயப்ப பக்தர்களின் ஓட்டுக்கள் முக்கியமானவை என்பது எல்லா ஆட்சியாளர்களுக்கும் தெரியும். 

 

பல வருடங்கள் முன்பு காஞ்சி மஹா பெரியவர் பேசியது இது: “கேரளத்தில் சபரிமலையில் இருக்கிற ஐயப்பன் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ்நாடு, மற்ற ராஜ்யங்கள், மீதெல்லாம் கூடத் தன் ராஜதானியை விஸ்தரித்துக்கொண்டே வருகிறார்! இது மிகவும் உற்சாகமளிக்கிற விஷயம். நாஸ்திகப் பிரச்சார விஷயத்தைத் தடுக்கிற அருமருந்தாக வந்திருக்கிறது ஐயப்ப பக்தி.” (பார்க்க; oruthuliaanmeegam.in)

 

சாமியே சரணம் ஐயப்பா! திராவிடமே போகணும் ஐயப்பா!


* * * * *

 Author: R. Veera Raghavan, Advocate, Chennai