-- ஆர். வி. ஆர்
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி விட்டார், ‘தமிழக வெற்றி கழகம்’
என்ற பெயரோடு. புதுக் கட்சிக்கான கப்ஸா காரணங்களை முன்வைத்து, அவரது எக்ஸ் பக்கத்தில்
ஒரு அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார்.
மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்களுக்குக் கேடானவை என்று சொல்லி,
அவரைப் பொறுத்தவரை எந்த வகையில் அவையெல்லாம் தீயவை என்றும் விளக்கி, தனது அறிக்கையில்
பேசுகிறார் விஜய். அவரது வார்த்தைகள் இதோ:
“தற்போதைய அரசியல் சூழலில் நிர்வாக சீர்கேடுகள்,
ஊழல் மலிந்த கலாச்சாரம் ஒருபுறம் என்றால், நம்
மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் பிளவுவாத அரசியல்
கலாச்சாரம் மறுபுறம். இவ்வாறு இருபுறமும் நமது ஒற்றுமை, முன்னேற்றத்துக்கான
முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.”
இன்னும் தெளிவாகப் புரியவேண்டுமா?
விஜய் சொல்வது இதுதான்.
‘இரண்டு விதமான அரசியல் கட்சிகள் நமது ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும்
கெடுதல் செய்கின்றன. ஊழல் செய்வது மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளுக்குக் காரணமாக இருப்பது,
ஒரு வகைக் கட்சி. மக்களிடையே சாதி மத பேதங்கள் செய்து அவர்களைப் பிளவு படுத்துவது,
இன்னொரு வகைக் கட்சி.’
சரி, எந்தக் கட்சிகளை மனதில் வைத்து விஜய் இப்படிப் பேசியிருக்க முடியும்?
1967-ல் இருந்து இன்றுவரை மாறி மாறித் தமிழகத்தில் ஆட்சி செய்வது திமுக மற்றும் அதிமுக கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளைத்தான் தமிழகத்தில் நிலவும் ஊழலுக்கும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் பொறுப்பு என்று விஜய் நினைக்க முடியும். அதோடு, பத்து வருடங்கள் முன்பு மத்திய அரசாங்கத்தில் வியாபித்த ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளை நினைவு படுத்தும் காங்கிரஸ் கட்சியையும் மனதில் வைக்காமலா விஜய் பேசியிருப்பார்? ஆக, இந்த மூன்று பெரிய கட்சிகளை மறைமுகமாகத் தீயவை என்ற ஒரு வகைக்குள் சேர்க்கிறார் விஜய்.
சென்ற பத்து வருடங்களாக மத்தியில் செயல்படும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி, ஊழல் செய்தது அல்லது நிர்வாகச் சீர்கேடுகளுக்கு வித்திட்டது என்று யாரும் பேசமுடியாது. அது விஜய்க்கும் தெரியும். ஆனாலும் பாஜக மத்தியில் ஆட்சி செய்வதை, தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருவதை, விஜய் எதிர்க்கிறார். பாஜக-வை எப்படிக் குறிப்பிடுவது என்று யோசித்த அவர், ‘மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் அரசியல் கலாச்சாரம்’ என்ற வார்த்தைகளால் பாஜக-வையும் தீதானது என்று திமுக பேசுவது போல் வர்ணித்து விட்டார் – அதுதான் விஜய் எதிர்க்கும் இன்னொரு வகைக் கட்சி என்பதாக.
‘மத்தியிலும் தமிழ்நாட்டிலும் பல சமீப ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் மக்களுக்குப் பெரும் தீங்கு செய்து கொண்டிருக்கிறார்கள். நான் கட்சி ஆரம்பித்து, தேர்தலில் ஓட்டு வாங்கி, மக்களுக்குக் கேடான அந்த எல்லாக் கட்சிகளையும் தோற்கடித்துப் பதவிக்கு வந்து – குறிப்பாகத் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி – மக்களை ஒற்றுமைப்படுத்தி முன்னேற்ற வேண்டும்’ என்று சொல்ல வருகிறார் விஜய். இது அவருடைய முழு அறிக்கையில் தெரிகிறது. இப்படி அரசியல் உலகில் ஆசை, அப்பாவித்தனம், அசட்டுத்தனம் ஆகியவற்றின் மொத்த உருவமாக விளங்குகிறார் விஜய்.
தன் சட்டை கசங்காமல், டிசைனாக முடிவெட்டிய தலை கலையாமல், சாதாரண மக்கள் மத்தியில் ஒரு மணி நேரம் விஜய் தெருவில் நடந்து அவர்களோடு இயல்பாகப் பேச முடியுமா? அது முடியாவிட்டால் தனது ரசிகர்களைத் தாண்டி விஜய் பெரிதாக ஓட்டுகள் வாங்க முடியாது – அதுவும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகள், அவற்றின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும் அவர் தேர்தலில் எதிர்த்து வெல்ல நினைத்தால். முதலில் அப்படி அவர் வீதியில் நடக்கட்டும். பிறகு அவர் மற்றதைக் கவனிக்கலாம். அந்த மற்றதில் ஒன்று: தன் கட்சிப் பெயரில், தன் அறிக்கை வாசகங்களில், தோன்றவேண்டிய க், ச், த் போன்ற மெய்யெழுத்துக்களை உதற வேண்டாம்.
எம்.ஜி.ஆர் எப்படி அரசியலில் வென்றார் என்று கேட்டால்,
அவர் விஷயம் வேறு. ஒரு தனிமனிதராக, தான் நடித்த திரைப்படங்கள் மூலமாக, அவர் சாதாரண
மக்களின் மனதை வென்றவர். அதை ஆதாரமாக வைத்தே அவர் தேர்தல்களில் எளிதாக ஓட்டுகள் வாங்கி
ஜெயித்தார். அவரே அவரது அரசியல் வாரிசு மாதிரி
முன்நிறுத்தியதால், பின்னர் ஜெயலலிதா அரசியலில் தலை எடுப்பது எளிதாயிற்று. விஜய் விஷயம்
வேறு. அவர் தனது படங்கள் மூலம் இளைஞர்களின் உணர்ச்சிப் பெருக்கை ஈர்த்தவர், பலதரப்பட்ட
மக்களின் மனதை வென்றவர் அல்ல. ஜெயலலிதா போன்ற இரும்பு மனிதரும் அல்ல விஜய். அதோடு,
இன்றைய ஓட்டுக் கணக்குகள் மாறானவை. அவை விஜய் கையாளக் கூடியவை அல்ல.
இன்னொரு விஷயம். மேடைகளில் விஜய் பேசுவதை வீடியோவில் பார்த்தால், அவருக்கும் தலைமைப் பண்புகளுக்கும் வெகு தூரம், அவற்றுக்கான முதிர்ச்சியை அவர் 49 வயதிலும் எட்டவில்லை என்பது அவர் முகத்திலும் சொற்களிலும் தெரியும். அவரது உடல் மொழியும் சொல்லும்.
விஜயகாந்திடம், ரஜினிகாந்திடம் காணப்பட்ட சராசரிக்கு
மேலான தலைமைப் பண்புகள் விஜய்யிடம் இல்லை. அந்த மேலான பண்புகள் அபரிதமாக இருந்தால்தான்,
பல துறைகளிலும் வல்லுனர்களாக இருப்பவர்களை ஒரு தலைவர் தன்னருகே ஈர்க்க முடியும். வல்லுனர்களின் நம்பிக்கையும் துணையும் சேர்ந்தால்தான்,
ஒரு பிரதமரோ அல்லது முதல் அமைச்சரோ பெரும் சாதனைகள் செய்ய முடியும் – அதுவும் விஜய்
மாதிரித் தமிழ்நாட்டின் அரசியல் களத்தைப் புரட்டிப் போடும் கனவில் இருக்கும் ஒரு கட்சித்
தலைவரால். நரேந்திர மோடி அதைப் பெரிய அளவில்
நாடெங்கும் நிரூபித்து வருகிறாரே?
ஒரு அரசியல் கட்சியின் ஸ்தாபகராக, தலைவராக, விஜய்யால் என்னதான் செய்ய முடியும்? பத்தோடு பதினொன்றாக அவரும் அவர் கட்சியும் வண்டி ஓட்டலாம். ஊழல் கட்சி என்று அவர் மறைமுகமாகத் கண்டனம் செய்த ஒரு கட்சியுடன் ‘மக்கள் நன்மைக்காக’ என்று சொல்லிக் கூட்டணி வைக்க ஆசைப்படலாம், கமல் ஹாசன் மாதிரி.
ஒன்றும் ஆகாவிட்டால், அரசியலுக்காக விஜய் விடப் போகிறேன் என்று சொன்ன திரையுலகம் அவருக்கு இருக்கும். ‘மக்கள் விரும்புகிறார்கள். மறுபடி நடிக்க வருகிறேன்’ என்று அப்போது அவர் அறிவித்தால் போயிற்று. சொன்ன வார்த்தைகளை ஒவ்வொன்றாகக் காற்றில் பறக்க விட்டால் என்ன? அதுவே ஒரு சராசரி அரசியல் தலைவருக்கு அழகு என்றாகுமே?
* * * * *
Author: R.
Veera Raghavan, Advocate, Chennai
நீங்கள் சொல்வது போல நடக்கும் என அறிவு சொல்கிறது. மனசு கொஞ்சம் ஆசைப் படுகிறது, இந்த நடிகராவது சொன்ன மாதிரியே செய்து கட்ட மாட்டாரா என.
ReplyDeleteமிகவும் சரியாகக் கணித்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஶ்ரீதரன்
நல்ல கணிப்பு.
ReplyDelete!ஈட்டிய பொருளை வளர்க்க -- தக்க வைக்க -- அதிகார ஆசையை தணித்து கொள்ள -- புகழ் மோகத்தை வளர்த்தெடுக்க தான் ஈட்டிய நடிப்பின் வழியான செல்வாக்கை வாக்குகளாக்கும் முயற்சியில் பல முன்னணி திரை நட்சத்திரங்கள் போல இவரது முயற்சியும் ....
ReplyDeleteஅரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். மக்கள் மனதை அறியக்கூட பக்குவம் விஜய் புரிந்துகொண்டால் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரலாம்
ReplyDelete