ஆர். வி. ஆர்
உத்தரப் பிரதேசம் அயோத்தியில் எழும் ராமர் கோவில், அதற்கான அடிக்கல்
நாட்டும் முன்னரே ஒரு அற்புதத்தைக் காண்பித்து விட்டது. இன்னொரு அற்புதத்தையும் அது
காண்பிக்கலாம்.
வருகிற
ஜனவரி 22-ம் தேதி, புதிய அழகிய ராமர் கோவிலுக்கு அயோத்தியில் கும்பாபிஷேகம் நடக்கப்
போகிறது. பிரதமர் மோடி அதில் முன்னிலை வகிப்பார். அவரை வைத்துத்தான் அந்த ராமர் கோவில் ஏற்கனவே ஒரு
அற்புதத்தை வெளிக்காட்டியது.
ராம
ஜென்மபூமி ஹிந்துக்களின் கைகளுக்குத் திரும்ப வேண்டும், அங்கு புதிய ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்,
என்று கோரி ஒரு இயக்கம் பல வருடங்கள் நடந்தது. பல போராட்டங்கள் நடந்தன. ரத்தம் சிந்தியது. உயிரிழப்புக்கள் ஏற்பட்டன.
ராம
ஜென்மபூமி விஷயத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சில வழக்குகள் தொடர்ந்தனர். இறுதியாக
ஐந்து நீதிபதிகள் கொண்ட ஒரு சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், நவம்பர் 2019-ல் ராம ஜென்மபூமி
இயக்கத்தின் நோக்கத்திற்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. அதற்கு முன்னர் அதே வருடத்தில் நரேந்திர மோடி இரண்டாம் முறையாக இந்தியாவின்
பிரதமரானார்.
சுப்ரீம் கோர்ட்டின் அந்தத் தீர்ப்பு வரும் சமயத்தில்
மோடி பிரதமராக இல்லாவிட்டால், நீதிபதிகளே அப்படி ஒரு நியாயமான நல்ல தீர்ப்பை வழங்க
முடிவது சந்தேகம் என்று பலரும் நினைப்பார்கள். அதற்குக் காரணங்கள் உண்டு.
ராம ஜென்மபூமி முழுமையாக ஹிந்துக்கள் வசம் வரவேண்டும்,
அந்த இடத்தில் புதிய ராமர் கோவில் வரட்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொன்னால்,
அதைச் சாக்காக வைத்து அரசியல் விஷமிகளும் சமூக விரோதிகளும் கைகோர்த்து நாட்டில் பெரிய
மதக் கலவரத்தைத் தூண்டிவிடுவார்களா, அது நடந்தால் கலவரம் கட்டுக்கடங்காமல் பூதாகாரம்
ஆகுமா என்ற கேள்விகள் யதார்த்தமானவை, ஆனால் அவற்றுக்கான பதிலை முன்கூட்டி ஊகிப்பது
எளிதல்ல. அப்படி ஒரு மகா பாதகத்தை முயன்று
பார்க்க நமது நாட்டில் சில அரசியல் சக்திகள், சில விஷம சக்திகள், தயங்காது. சில வெளிநாட்டு சக்திகளும் சேரலாம்.
அத்தகைய
விபரீதம் திட்டமிட்டு நாட்டில் அங்கும் இங்குமாக நடத்தப்பட்டு மக்களும் பலவாறாகப் பாதிக்கப்பட்டால்,
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புதான் அதற்குக் காரணம் என்று நமது நீதித் துறையின் மீது
பெரும் பழி சேர்கிற மாதிரி பேச்சுக்களும் சம்பவங்களும் அரங்கேறும்.
ராம
ஜென்மபூமிக்குச் சாதகமான தீர்ப்பு வந்து அப்படியான கலவரம் நடந்தால், அதை உறுதியாக அடக்கி
முறிக்கும் யோக்கியதையும் மன வலிமையும் கொண்ட ஒரு தலைவர் அப்போது பிரதமராக இருந்த மோடி
மற்றும் அதிகாரத்தில் அவருக்குத் துணையாக இருந்த பலர் –
அதில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உண்டு. இது அனைவருக்கும்
தெரியும்.
அந்த
சமயத்தில் மோடிக்குப் பதில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒருவர் (மன்மோகன் சிங்கோ, ராகுல்
காந்தியோ, மல்லிகார்ஜுன கார்கேயோ) அல்லது காங்கிரஸ் கூட்டணிக் கட்சியிலிருந்து ஒருவர்
(தேவ கவுடா மாதிரி) நாட்டின் பிரதமராக இருந்தார் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இல்லை, மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் என்று
யாரோ ஒருவர் பிரதமராக இருந்தார் என்றும் கவலையோடு நினைத்துப் பாருங்கள். அப்போது யார்
என்ன காரணத்திற்காக என்ன திட்டமிடுவார், என்ன அசம்பாவிதம் எங்கு நடக்கும், அதைக் கட்டுப்படுத்தும்
தெம்பும் திராணியும் அத்தகைய பிரதமருக்கு இருக்குமா என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகள்.
இந்தச் சூழ்நிலையில், கோர்ட் சரியான நியாயத்தை
வழங்கினாலும், பின்னர் வர வாய்ப்புள்ள கலவரத்தால் நீதித்துறைக்குப் பழியும் பொல்லாப்பும்
வருமே என்ற கவலை நீதிபதிகளை வாட்டும். அந்தக் கவலை அவர்களின் தீர்ப்பில் எப்படி எதிரொலிக்கும்
என்பதைக் கணிக்க முடியாது.
சுப்ரீம்
கோர்ட்டின் தீர்ப்பு வரப் போகும் நாளில் மோடி
பிரதமராக இருந்தார். ஆறு மாதங்கள் முன்பாக, அதற்கு ஐந்து வருடங்கள் முன்பாகவும், லோக்
சபா தேர்தலில் நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தார். மக்கள் சக்தி, தேசப் பற்று,
நேர்மைப் பண்பு, அசாத்தியத் தலைமை, நிர்வாகத் திறமை, சர்வதேச நற்பெயர், அனைத்தையும்
கொண்டவர் அவர். தீர்ப்புக்கு மூன்று மாதம் முன்புதான், காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து
கொடுத்த அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ஒரு தோட்டா சுடாமல், துளி ரத்தம் சொட்டாமல், சட்டரீதியாக
முடக்கிக் காட்டினார். அதை உலகம் பார்த்தது.
ராம
ஜென்மபூமி வழக்குகளில் சரியான இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டால் நாட்டில் அப்போது அமைதி
காக்கப்படும் என்ற சூழ்நிலையைத் தனது பல குணாதிசயங்கள் மூலம் பிரதமர் மோடி உருவாக்கி
இருந்தார். அதனால் அந்தத் தீர்ப்பு எளிதாக வரமுடிந்தது. தீர்ப்பு நாளில் மோடி பிரதமராக
இல்லை என்றால், ராம ஜென்மபூமிக்குச் சாதகமான சரியான தீர்ப்பு வருவது மிகச் சந்தேகம்
என்று நாம் நினைத்தால் தவறில்லை – நிச்சயம் வந்திருக்காது என்று ஒருவர் நினைத்தாலும்
புரிந்து கொள்ளலாம்.
ராம
ஜென்மபூமிப் பிரச்சனை சுமூகமாக முடிந்ததற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒரு பக்கம் உதவியது.
மறு பக்கத்தில் அதற்கான நீண்ட இயக்கம் உதவியது.
அந்த மறு பக்கத்தின் முக்கியக் கடைசி அத்தியாயத்தை – அதாவது தீர்ப்பு சமயத்தில் சட்டம்
ஒழுங்கு பராமரிப்புக்கு மத்திய அரசு நிச்சய உத்தரவாதமாக இருந்ததை – மோடி அமைதியாக எழுதினார். அந்த
வகையில் மோடி ஒரு அற்புதம். அயோத்தியின் புதிய ராமர் கோவில் அந்த அற்புதத்தைக் காண்பிக்கிறது அல்லவா?
இன்னோரு
அற்புதத்தையும் அயோத்தி ராமர் நமக்குக் காண்பிக்க வல்லவர். அதற்கான அடித்தளத்தை அவர்
இட்டுவிட்டார். அதன்மேல் உறுதியாக, ஒரு அற்புதமாக, நிலைத்திருப்பது ஹிந்துக்களின் பொறுப்பு. அந்த
அற்புதம் என்பது, ஹிந்துக்களின் மதம் சார்ந்த
நியாயமான பெருமிதம்.
ராமரைப்
போல அனைத்து மக்கள் மனதை வசீகரிக்கும் ஒருவர் இல்லை. பட்டாபிஷேகத்துக்கு அவர் தயாராகும்
நேரத்தில் ‘காட்டுக்குப் போ’ என்று அப்பா அழுதவாறு சொன்னாலும், ‘சரி, போகிறேன்’ என்று
சிரித்தவாறு கிளம்பியவர் ராமர். பெற்றவர் பேச்சை
இப்படிக் கேட்கும் மகனான ராமரை, எல்லா அம்மா அப்பாக்களுக்கும் வெல்லமாகப் பிடிக்குமே?
தனக்கு வந்த ராஜ்ஜியத்தைப் பதினாலு ஆண்டுகள் தம்பியிடம் கொடுத்த ராமரை இன்றைய தினம்
எந்தச் சகோதரனுக்குப் பிடிக்காது? ஏக பத்தினி விரதனாக இருந்த ராமர் எல்லாப் பெண்களுக்கும்
ஹீரோவாக இருப்பாரே? பாலம் அமைத்து இலங்கை சென்று ராவணனைப் போரிட்டு அழித்து சீதையை
மீட்ட மாவீரன் ராமரின் பாராக்கிரமமும் எல்லாரையும் பரவசப்படுத்துமே?
ஆண் பெண் என்று எல்லா ஹிந்துக்களையும் கவர்கிறவர் ராமர். அவருக்காக மீண்டும் அயோத்தியில் எழும் பிரும்மாண்டமான கலைநயம் மிகுந்த கோவில், ஹிந்துக்கள் அனைவரையும் அயோத்திக்கு ஈர்க்கிறது. அதோடு, அவர்கள் அனேகரிடம் தற்போது இல்லாத ஒன்று வளரவும் உறுதிப்படவும் வழி வகுக்கிறது அப்படி ஹிந்துக்களிடம் வளர்ந்து உறுதிப்பட வேண்டியது, “இது என் மதம். இது எனக்குப் பெருமிதம்” என்கிற உணர்வு. அந்த உணர்வே ஹிந்துக்களை இணைத்துக் காக்கும் அற்புதம். ராமரின் உதவிக் கரத்தைப் பற்றி ஒன்றுபட்டு உயர்வது இனி ஹிந்துக்கள் கையில்.
* * * * *
மூன்றாம் பராசரர் நினைவு கொண்டு பாராட்டப்பட வேண்டியவர் என்றுஒரு குட்டி-சுட்டி-உபன்யாசகர் சிறுவன் பேசியதைக்கேட்டு வியந்தேன்.
ReplyDelete