Friday, 5 January 2024

வியக்க வைக்கும் விஜயகாந்த்

 

-- ஆர். வி. ஆர்

 

மறைந்த நடிகர் விஜயகாந்த் ஒரு அரசியல்வாதியாகத் தமிழகத்தில் நிகழ்த்திய சாதனை பெரியது. சிலருக்கு அது  பிடிபடாமல் இருக்கலாம்.

 

சுயலாபம் தேடும் அரசியல் தலைவர்கள், ஊழல் மிகுந்த அரசு நிர்வாகம், இவை இரண்டும் இன்று இந்தியாவின் பல மாநிலங்களின் சாபக்கேடுகள். ஐம்பதாண்டுகள் மேலாக இவை தமிழகத்தின் தனி அடையாளம்.  இதற்கான பாதிக் காரணம், சாதாரண வாழ்க்கை நிலையில் வைக்கப் பட்டிருக்கும் பெருவாரியான நமது மக்கள்.

 

நமது நாட்டின் பாமர மக்கள், சாதாரண மக்கள், பொதுவாக நல்லவர்கள். ஆனால் குறைவான படிப்பறிவு, ஏழ்மை மற்றும் இயலாமை காரணமாக அவர்கள் அரசியலில் விவரம் அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நிலையில், அவர்களது அரசியல் அப்பாவித்தனத்தில், அவர்களைக் கட்டிவைத்து, அவர்களை ஏமாற்றித் தேர்தலில் மாறி மாறி ஜெயித்துக் கொழிக்கிறார்கள் அநேக அரசியல் தலைவர்கள்.

 

விஜயகாந்தைப் பொறுத்தவரை அவர் நேர்மையானவர், நியாயவாதி, பிறருக்கு உதவுபவர் என்று அவரது தனிமனிதப் பண்புகளுக்காக லட்சக் கணக்கான சாதாரணத் தமிழர்கள் மனதில் இடம் பிடித்தவர்.  அந்த மக்களின் அபிமானத்தையும் ஆதரவையும் ஒரு நல்ல அரசியல் சக்தியாக, தமிழகத்திற்குப் பயன்தரும் விதமாக, அவர் மாற்ற நினைத்துச் செயல்பட்டார்.

 

2005-ம் வருடம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை விஜயகாந்த் தொடங்கினார். திமுக தலைவர் கருணாநிதியும் அதிமுக தலைவர் ஜெயலலிதாவும் உச்சத்தில் இருந்த நேரம் அது. அந்த இரு தலைவர்கள் வழிநடத்தும் கட்சிகளையும் எதிர்க்கவேண்டும், அது நாட்டுக்கு நல்லது, என்ற நோக்கத்தில் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார். அதுவே நினைத்துப் பார்க்க முடியாத தைரியச் செயல்.

 

2006-ம் வருடம் – விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த எட்டு மாதங்களில் – தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வந்தது.  அப்போது திமுக, அதிமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளையும் எதிர்த்து, வேறு எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்காமல், தனியாகவே எல்லாத் தொகுதிகளிலும்  வேட்பாளர்களை நிறுத்தினார் விஜயகாந்த். முடிவில் அவர் ஒருவர் மட்டுமே தேமுதிக-வின் எம்.எல்.ஏ ஆனார்.  இருந்தாலும் அவர் கட்சி 8.4 சதவிகித ஓட்டுக்களைப் பெற்றது ஒரு சாதனை. பிறகு 2009-ம் வருடம் நடந்த லோக் சபா தேர்தலிலும் கூட்டணி இல்லாமல் தனியாகவே தமிழகத்தின் எல்லாத் தொகுதிகளிலும் நின்ற அவர் கட்சிக்கு 10.1 சதவிகித ஓட்டுக்கள் கிடைத்தன – ஒரு சீட்டும் கிடைக்காமால் போனாலும்.  இந்த அளவு ஓட்டு சதவிகிதங்கள், மற்ற சிறு கட்சிகள் எண்ணிப் பார்க்க முடியாத வெற்றி – அதுவும் கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில்.

 

மேலும் மேலும் விஜயகாந்த் அரசியலில் ஜெயிக்கமுடியாமல் போனதற்கான காரணங்கள் தனி.  மோசமாகி வந்த உடல்நிலையும் அவரை முடக்கியது.

 

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் “ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று சுருக்கமாக விளக்கினார் பெருந்தலைவர் காமராஜர். அதற்கான காரணங்கள் இன்றும் உண்டு. அந்த இரு கட்சிகளையும் ஆரம்பத்திலேயே எதிர்த்து நின்றது விஜயகாந்தின் அசாத்தியத் துணிவு மற்றும் தேசிய உணர்வுக்கான சான்று.

 

விஜயகாந்தின் கட்சிப் பெயரில் உள்ள “தேசிய” என்ற முதல் சொல்லே, அவர் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் எதிர்த்தார் என்று காட்டியது. ஹிந்தி எதிர்ப்பு என்ற பித்தலாட்டத்தை அவர் செய்யவில்லை. மும்பை தாரவில இருக்கற தமிழன் ஹிந்தி பேசுறான். தமிழ்நாட்டுல இருக்கற தமிழனும் ஹிந்தி படிக்கறது நல்லது” என்று பேசியவர் அவர். “அன்னைத் தமிழ்மொழி காப்போம். அனைத்து மொழியும் கற்போம்” என்பது அவர் கட்சியின் ஒரு குறிக்கோள்.

 

கருணாநிதி ஜெயலலிதா காலத்திலேயே திமுக மற்றும் அதிமுக-வை எதிர்த்து 8 சதவிகிதம் 10 சதவிகிதம் என்று விஜயகாந்த் வாக்குகள் பெற்றது ஒரு தெளிவான அறிகுறி. அதாவது,  அந்த நல்ல காரியம் தமிழகத்தில் மேலும் வலுப் பெறுவது சாத்தியம், அதற்கான சரியான தலைவர்களைத் தமிழகம் எதிர்நோக்கி இருக்கிறது என்பதை விஜயகாந்த் நிரூபித்தார்.  

 

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே தேசிய சிந்தனை இல்லாத சுயலாபக் கட்சிகள்.  ஒன்று  பெரிய மட்டை, மற்றது சிறிய மட்டை.  முதலில் சிறிய மட்டை உதவியுடன் பெரிய மட்டையை ஓரம் தள்ளித் தூக்கிப் போட முடிந்தால் அதை ஒருவர் செய்துபார்க்க வேண்டியதுதான். அவர் அளவில் அப்படியும் முயன்றவர் விஜயகாந்த். தமிழக அரசியலில் அவர் வெளிப்படுத்திய முனைப்பும் முயற்சியும், அடைந்த ஆரம்பகால வெற்றியும், போற்றத் தக்கவை.

 

சிவாஜி கணேசன் தனியாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்தும் அவர் ஈர்க்க முடியாத மக்கள் ஆதரவு விஜயகாந்துக்கு நிறையக் கிடைத்தது. சரத் குமார், பாக்கியராஜ், டி. ராஜேந்தர் ஆகிய திரைக் கலைஞர்கள் முயன்று கைவிட்ட அரசியல் களத்தில் நின்று, விஜயகாந்த் பெரிய அளவில் வாக்குகள் சேகரித்தார். அதுவும் நல்ல எண்ணத்தோடு. 

 

2014 மற்றும் 2019-ம் வருட லோக் சபா தேர்தல் சமயங்களில், நரேந்திர மோடி பிரதமராக வருவதை விஜயகாந்த் ஆதரித்தார். அது விஜயகாந்தின் தேசிய உணர்வை, நல்லாட்சிக்கான விருப்பத்தை, காண்பித்தது.   

 

தனிக் கட்சி ஆரம்பிப்பதாக நீண்ட காலம் சொல்லிக் கொண்டிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் கருணாநிதி  மற்றும் ஜெயலலிதா இல்லாத தமிழ்நாட்டிலும் அதைச் செய்யாமல், கொரோனா வைரஸைத் துணைக்கு அழைத்து அவர் நிரந்தரமாகப் பின்வாங்கினார்.  


கமல் ஹாசன் என்ன செய்தார்? ஜெயலலிதா காலத்திற்குப் பின்,  கருணாநிதியும் ஆரோக்கியம் குறைந்து செயல்படாமல் இருந்த போது, கமல் ஹாசன் தனிக் கட்சி ஆரம்பித்தார் – ஏதோ நடத்தி வருகிறார். ஒரு சில தேர்தல் தொகுதிகளுக்காக கமல் ஹாசன் இப்போது திமுக-வின் வாசலில் காத்திருக்கிறார். அதிமுக-வைப் பற்றியும் கமல் அதிகம் பேசுவதில்லை. திமுக கைவிட்டால் அவர் அதிமுக-விடம் அந்த சில தொகுதிகளைக் கேட்க வேண்டி இருக்குமோ என்னவோ?  

 

அரசியல் ஆசைகள் கொண்டிருந்த, இன்னும் வைத்திருக்கும், இத்தகைய திரைக் கலைஞர்கள் மத்தியில் விஜயகாந்தின் அரசியல் பணி மகத்தானது, தேசநலன் மிக்கது. தமிழ்நாட்டுக்கான அவரது நல்ல அரசியல் நோக்கம் இனி வேறொரு உத்வேகமான அரசியல் தலைவரால் பூர்த்தியாக வேண்டும். அது நிகழ்வதற்கான ஆரம்ப அறிகுறியும் ஒரு முன்னேற்றமும் ஏற்கனவே தரையில் தெரிகிறது. தமிழகம்  நம்பிக்கையோடு காத்திருக்கலாமோ?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

No comments:

Post a Comment