Friday 12 January 2024

விஜய் சேதுபதி: ஹிந்தி பத்தி பேசமாட்டேன் போடா!

 

          ஆர். வி. ஆர்

 

விஜய் சேதுபதி சிறந்த தமிழ் நடிகர். ஹிந்திப் படங்களிலும் நடிக்கிறார். ஹிந்தி, தமிழ் இரண்டு மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட அவரது புதிய படம் இப்போது வந்திருக்கிறது. அது சம்பந்தமான செய்தியாளர் சந்திப்பில், அவர் ரசிக்காத ஒரு கேள்வி அவரை நோக்கி வந்தது.

 

“தமிழ்நாட்டுல 75 வருஷமா ஹிந்தி எதிர்ப்பு இருக்கு.  இங்க ஹிந்தி தெரியாது போடான்னு சொல்றாங்க. நம்ம மாநிலத்துல ஹிந்தி படிக்கணுமா வேண்டாமா” என்று ஒரு நிருபர் கேட்க, “இந்தக் கேள்வியை என்னை மாதிரி ஆள் கிட்ட கேட்டு உங்களுக்கு என்ன ஆகப்போகுது? இப்ப எதுக்கு இந்தக் கேள்வி? இது தேவை இல்லாத கேள்வி. நாம ஹிந்தி படிக்க வேணாம்னு சொல்லலை. திணிக்க வேணாம்னுதான் சொல்றோம்” என்று அந்த விஷயத்தை அவசரமாகத் தவிர்க்க நினைத்தார் விஜய் சேதுபதி.  அதற்குக் காரணம் இருக்கிறது.

 

பல ஆண்டுகள் முன்பு, ஹிந்தி எதிர்ப்பு என்பது திமுக-வின் அரசியல் பாதையில் ஒரு மைல்கல்லாக இருந்தது. அப்போது ஹிந்தி எதிர்ப்பாளர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக, 1967-ம் ஆண்டு பாராளுமன்றம் ஒரு சட்டதிருத்தம் செய்தது. அதன் பின்னர், “ஐயோ, ஹிந்தித் திணிப்பு பண்றாங்களே!” என்று ஹிந்தி பேசாத மாநிலத்தில் ஒருவர் பாசாங்கு செய்யவும் முடியாமல் போனது.

 

சுருக்கமாக, என்ன சொல்கிறது அந்த சட்ட திருத்தம்? ஹிந்தி பேசாத மாநிலங்கள் ஒன்று விடாமல், ஹிந்தி மட்டும் மத்திய அரசின் அலுவல் மொழியாக இருக்கட்டும் என்று ஏற்றுக் கொண்டால் ஒழிய, அதன் பின்னர் பாராளுமன்றமும் அதற்கு இசைந்தால் தவிர, ஆங்கிலமும் முன்பு போல மத்திய அரசின் அலுவல் மொழியாகத் தொடரும். இதுதான் அதன் உறுதியான சாராம்சம்.  இதற்குப் பிறகு ஹிந்தித் திணிப்பு என்ற பேச்சுக்கே இடம் நஹி. இந்நாளில் ஹிந்தித் திணிப்பு, ஹிந்தி எதிர்ப்பு என்பது செத்த பாம்பு – இன்றைக்கு வெள்ளையனே வெளியேறு கோஷம் மாதிரி.  

 

பல மொழிகள் பேசப்படும் இந்தியாவில், அதுவும் கல்வியறிவு குறைந்த நமது நாட்டில், அந்நிய மொழி ஆங்கிலம் எல்லா மக்களுக்கான தொடர்பு மொழியாக இருக்க முடியாது. நம் நாட்டில் அதிகப் பிராந்தியங்களில் பேசப்படும் ஹிந்தி அத்தகைய தொடர்பு மொழியாக அமைவது இயற்கை. அனைத்து மக்கள் தொடர்பு மொழியாக அதைக் கற்கும் அவசியத்தை, அதன் பொருளாதார அனுகூலத்தை, அதிகமான தமிழர்கள் இப்போது உணர்கிறார்கள். இந்தக் கால மாற்றமும் சேர்ந்து திமுக-வையும் அதன் அனுதாபிகளையும் மனதுக்குள் பின்வாங்க வைக்கிறது.


மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, கற்பனையான ஒரு பிசாசை உருவாக்கி அதனிடம் இருந்து மக்களைக் காப்பது தாங்கள்தான் என்று பேசித் தங்களை வளர்த்துக் கொள்பவர்கள் திமுக தலைவர்கள். அப்படித்தான் அவர்கள் சிருஷ்டித்த ஹிந்திப் பிசாசுக்கு அவர்களே இன்னும் செயற்கை சுவாசம் கொடுத்துப் பராமரிக்கிறார்கள். அந்தப் பிசாசு நம்மிடையே இல்லை என்று தெரிகிற மாதிரி யார் கேள்வி கேட்டாலும்  திமுக தலைவர்களுக்குப் பிடிக்காது. திமுக-வோடு ஒன்றியிருக்கும் பிரபலங்களுக்கும் அந்த மாதிரிக் கேள்விகள் தலைவலி. விஜய் சேதுபதிக்கு அப்படித்தான் இருந்திருக்கும்.

 

விஜய் சேதுபதி நடிக்கும் ஹிந்திப் படங்களில் அவருக்காக டப்பிங் கலைஞர்களின் குரல் ஒலிக்கிறது. அதனால் அவர் ஹிந்தி சினிமாவிலும் பிழைக்கிறார். ஆனால்  மற்ற பல துறைகளில் வேலை தெரிந்த தமிழ்நாட்டு இளைஞர்கள் ஹிந்தி படித்தால்தானே மற்ற மாநிலங்களில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியும்?  அவர்களுக்கு ஹிந்தி மொழியறிவும் ஒரு திறன் என்றாகிறதே?  அதை எளிதாக்கித் தருவது தமிழக அரசின் கடமை ஆகிறதே?

 

தாய் மொழியைக் கொஞ்சமாவது விட்டுத்தான் வேற்று மொழியான ஆங்கிலமோ ஹிந்தியோ படிக்க முடியும் என்பதில்லை.  ஆனால் திமுக-வானது தமிழை அழிக்கவந்த மொழி ஹிந்தி, அதைத் தமிழர்கள் முற்றிலும் விலக்கி வைப்பது தமிழைக் காக்கும், தமிழை வளர்க்கும் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கியது. படித்தவர்களும் அதில் சிக்கினார்கள், இப்போது வயதானபோது வருந்துகிறார்கள்.

 

ஒன்றைக் கவனியுங்கள். ‘ஹிந்தி அரக்கி’ நடமாடியபோது தனது தமிழைக் காத்துக் கொண்டவர், தாய் மொழியில் வல்லவராக விளங்கியவர், திமுக தலைவராக இருந்த கருணாநிதி. அவர் ‘போரிட்டு அந்த அரக்கியை அடக்கித் தமிழைக் காத்த பின்’ பிறந்தவர் அவர் பேரன் உதயநிதி.  ஆனாலும் உதயநிதி பேசும் தமிழ் சுமார் ரகம்தான். கடமை, கண்ணியம், கட்டுப்பாடும் அதில் கிடையாது. இன்று திமுக இளைஞர்கள் காட்டும் ஹிந்தி எதிர்ப்பு – அல்லது ‘ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு’ – அக் கட்சித் தலைவர்களுக்கு மட்டும்தான் லாபம் சேர்க்கும். அவர்கள் காட்டிக் கொள்ளும் தமிழ்ப் பற்றும் போலியானது.  

 

ஹிந்தி எதிர்ப்பை மகுடமாக அணிகிறது திமுக. ஆனால்  அந்தக் கட்சி சில மாதங்கள் முன்பு (16.9.2023) அதிகார பூர்வமாகத் தனது பெயரில்  ஹிந்தி மொழியில் ட்வீட் செய்தது.  “மகளிர்க்கு மாத உரிமைத் தொகை கிடைத்துவரும் போது, ஸ்டாலின்தான் இம் மண்ணை ஆள்வார்” என்ற அர்த்தத்தில் ஸ்டாலின் படம் போட்டு ஹிந்தியில் மார் தட்டியது திமுக. வடமாநில மக்களிடம் திமுக ஹிந்தியில் பேச விரும்புகிறது. ஆனால் தமிழக இளைஞர்கள் ஹிந்தி படிக்க வசதிகள் செய்து அவர்கள் மற்ற மாநிலங்களில் எளிதாக வேலை தேடிக் கொள்ள திமுக உதவாது. நம் இளைஞர்களை இங்கேயே வைத்து அவர்களின் ஓட்டுக்களை அள்ள வேண்டுமே?

 

திமுக-வின் முக்கியத் தலைவர்களுக்கு ஒன்று தெரியும். அவர்களது தொழில் பிரதானமாகத் தமிழகத்தில் நடக்கிறது. திமுக அகில இந்திய அளவில் வளர்ந்து அந்த சக்தியில் அவர்கள் யாரும் இந்தியாவின் பிரதம மந்திரி ஆக முடியாது. அதனால் ஹிந்தி படிக்காமல் இருப்பது, கட்சியினரைப் போடா-வாடா கோஷங்கள் போடவைப்பது, என்பது அவர்களுக்கு நஷ்டத்தைத் தராது. அவர்களின் லாபக் கணக்கு வேறு. கணிசமான தமிழ்நாட்டு எம்.பி-க்களை வைத்து மத்திய ஆட்சியில் பங்கு பெறவேண்டும்.  வேண்டிய பங்கு கிடைத்து விட்டால் போதும். யார் எக்கேடு கெட்டாலும் என்னடா!

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

1 comment:

  1. விஜய் சேதுபதி தமிழ் படத்தில் முத்தையா முரளீதரனாக நடிக்க எழுந்த எதிர்ப்பிற்கு பயந்து பின் வாங்கியவர். வேறு கருத்தினை வெளியிடுவாரா? அதே முரளீதரன்தான் மாறன் சகோதரர்களின் IPL கிரிக்கெட் டீம் பயிற்சியாளர் என்பது கவனிக்கத் தக்கது. கடைசியில் ஒரு வட இந்திய நடிகர்தான் முரளீதரனாக நடித்தார் என்பது உபரி செய்தி.

    ReplyDelete