-- ஆர். வி. ஆர்
மத்திய பாஜக அரசு 2018-ல் கொண்டுவந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம், அது தொடர்பான சட்டம், இரண்டையும் ரத்து செய்திருக்கிறது சுப்ரீம் கோர்ட். அவை அரசியல் சட்டத்திற்கும் நிர்வாகச் சட்டத்திற்கும் முரண், ஆகையால் செல்லாதவை என்று தீர்ப்பளித்திருக்கிறது.
‘தேர்தல் பத்திரங்கள்
திட்டம்’ என்னவென்றால்:
ஒரு
நன்கொடையாளர் – தனி மனிதரோ கம்பெனியோ – ஒரு அரசியல் கட்சிக்கு நன்கொடையாகப்
பணம் தர விரும்பினால், அவர் ஒரு விண்ணப்பத்தை நிரப்பி பணத்தைத் தனது வங்கி வழியாக பாரத ஸ்டேட் வங்கியில்
செலுத்தலாம். ஸ்டேட் வங்கி அதே மதிப்பிற்கான ‘தேர்தல் பத்திரங்களை’ அவரிடம் வழங்கும்.
ஒருவர்
ஸ்டேட் வங்கியில் நன்கொடைப் பணம் செலுத்திய தொகை மற்றும் தேதி, அவர் வாங்கும் தேர்தல்
பத்திரத்தில் சொல்லப் பட்டிருக்கும். பத்திரம் வாங்குபவர் பெயரோ, நன்கொடை பெறப்போகும்
கட்சியின் பெயரோ, அந்தப் பத்திரத்தில் இருக்காது.
ஒரு வகையில் அது ஸ்டேட் வங்கி எழுதிக் கொடுத்த புரோநோட்டு மாதிரி. அதன் ஆயுட்காலம் பதினைந்து நாட்கள் மட்டும்.
நன்கொடையாளர்,
அவர் விரும்பும் ஒரு கட்சியிடம் அந்தப் பத்திரத்தைக் கொடுக்கவேண்டும். அந்தக் கட்சி அதை ஸ்டேட் வங்கியிடம்
கொடுத்து அதற்கான பணத்தைத் தனது வங்கிக் கணக்கில் போட்டுக் கொள்ளும். உச்சவரம்பு இல்லாமல்
எவரும் இப்படி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் தரலாம். ஸ்டேட் வங்கி விற்று வழங்கிய மற்றும் காசாக்கிய தேர்தல் பத்திரங்கள்
பற்றி அந்த வங்கி ரகசியம் காக்க வேண்டும்.
தேர்தல்
பத்திரங்களை நன்கொடையாகப் பெற்ற ஒரு அரசியல் கட்சி, நன்கொடையாளர்களின் பெயர்களை, அவர்கள்
ஒவ்வொருவரும் அளித்த தொகையை, விவரமாகப் பிரித்து அரசாங்கத்துக்கோ மற்றவருக்கோ தெரிவிக்க
வேண்டாம். பத்திரங்களை நன்கொடையாகக் கொடுத்தவரும்
எந்தக் கட்சிக்கு எவ்வளவு கொடுத்தார் என்று விவரமாகப் பிரித்து எவருக்கும் தெரிவிக்கக்
கட்டாயம் இல்லை. இதுதான் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் முக்கிய சாராம்சம். உபரி நிபந்தனைகளும் உண்டு.
இந்தத்
திட்டத்தின் கீழ் ஒரு அரசியல் கட்சி பெறும் நன்கொடைகள் ரொக்கமாக இல்லாமல் கட்சியின்
வங்கிக் கணக்கு மூலம் வருகின்றன. அந்த அளவுக்குக் கறுப்புப் பணம் தவிர்க்கப் படுகிறது.
இது ஒரு பக்கம். இன்னொரு பக்கத்தில், ஒரு அரசியல் கட்சிக்கு யார் எவ்வளவு நன்கொடை அளித்தார் என்ற விவரம் பணம் கொடுத்தவருக்கும்
அதை வாங்கிய அரசியல் கட்சிக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும். மற்ற எவருக்கும் தெரியாமல்
இருக்கும். இது இந்தத் திட்டத்தின் பெரிய பிரச்சனை என்கிறது சுப்ரீம் கோர்ட்.
ஒரு
கார்ப்பரேட் நிறுவனம் ஒரு அரசியல் கட்சிக்குப் பத்து கோடி, நூறு கோடி, அதற்கு மேலும் நன்கொடைகள் தரலாம்,
மூன்றாம் மனிதர் அதை அறியமுடியாது, என்றாகிவிட்டால் – பணம் வங்கி வழியாகச் செல்கிறது என்றாலும் – ஒரு அரசியல்
கட்சியும், அதுவும் பதவியில் இருக்கும் அரசியல் கட்சியும், அதன் நன்கொடையாளரும் என்ன
செய்ய வாய்ப்பிருக்கிறது? இருவரும் தங்களுக்குள் தவறான பிரதிபலன்களை (quid
pro quo) ஏற்படுத்திக் கொள்ளலாம். இதனால் ஆட்சி நிர்வாகம் பாதிக்கப்படும். இந்த ஆபத்துக்கான வாய்ப்பை சுப்ரீம் கோர்ட் கருத்தில் வைத்தது.
இரண்டாவதாக
ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டியது சுப்ரீம் கோர்ட். நமது தேர்தல்களில் வேட்பாளர்களை
விட அரசியல் கட்சிகளின் பங்கு மிக முக்கியம்.
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் கீழ் ஒரு அரசியல் கட்சி யார் யாரிடமிருந்து எவ்வளவு
பணம் நன்கொடையாகப் பெறுகிறது என்ற முக்கியமான விவரத்தை நாட்டின் வாக்காளர்கள் அறியமுடியாது. அதனால் குடிமக்களின் அடிப்படை உரிமையான 'தகவல் அறியும் உரிமை' பறிபோகிறது,
ஆகவே தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது, அது தொடர்பான சட்ட திருத்தங்களும் செல்லாது,
என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது சுப்ரீம் கோர்ட். இது சரியான தீர்ப்பு.
அரசியல் சட்டப்படி ஒரு திட்டம், அது தொடர்பான சட்டம், ஆகியவை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்திருக்கிறது, அவ்வளவுதான். மத்திய அரசும் அதை மதிப்பதாகச் சொல்லிவிட்டது. ஆனால் தீர்ப்பு வந்த உடன், எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் இந்தத் தீர்ப்பு ஏதோ பாஜக-விற்கு, அந்தக் கட்சியின் நன்நடத்தைக்கு, எதிரானது மாதிரியும், தாங்கள் நேரானவர்கள், சுத்தமானவர்கள் என்கிற தொனியிலும் இந்தத் தீர்ப்பை அமோகமாக வரவேற்று பாஜக-வை இடித்துப் பேசி இருக்கிறார்கள். இது போலித்தனம்.
பாஜக-வைப் பழித்தபடி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைக் கொண்டாடும் எதிர்க் கட்சித் தலைவர்கள் எப்படியானவர்கள்? இதைக் கவனிப்பது முக்கியம்.
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் கீழ், ஆறு ஆண்டுகளில்
எல்லா அரசியல் கட்சிகளும் வங்கி மூலமாகப் பெற்ற நன்கொடைத் தொகை மொத்தம் சுமார் 16,500
கோடி ரூபாய். ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைமையில்
UPA
கூட்டணி முதன்முறை மத்தியில் ஆட்சி செய்தபோது ஒரே வருடத்தில், அதாவது 2008-ம் வருடம் நடந்த 2-ஜி லைசென்ஸ் ஊழலில், அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் 1.76 லட்சம்
கோடி ரூபாய் வரை இருக்கும் என்பது சி.ஏ.ஜி-யின் குறிப்பு. சரியான தொகை எவ்வளவு என்று
ஒரு திராவிட மாடல் அரசியல்வாதிக்குத் தெரியும்.
இன்னொரு சாம்பிள். 2004 முதல் 2014
வரை UPA கூட்டணி மத்தியில் இரண்டு முறை ஆட்சி செய்தபோது அரங்கேறிய
நிலக்கரி ஊழல்களில் அரசுக்கு நஷ்டம் 1.86 லட்சம் கோடி ரூபாய் என்றது சி.ஏ.ஜி அறிக்கை. தேர்தல்
பத்திரங்கள் திட்டம் இல்லாமலே இது போன்ற சாதனைகளைச் செய்த அரசியல் கட்சிகள் இப்போது
வந்திருக்கும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைக் காரண காரியமாக வரவேற்கின்றன – மத்திய பாஜக அரசின் பத்தாண்டு ஆட்சியின்
மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் சொல்ல முடியாமல், அதனால் தங்களுக்கு ஏற்பட்ட விரக்தியைத்
தாங்க முடியாமல்.
மறுபடியும் எதிர்க்கட்சிகள் எப்போதாவது மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகத் தேர்தல் பத்திரங்கள் திட்டம் இப்போதே ரத்தானது ஒருவிதத்தில் நல்லது. தேர்தல் பத்திரங்கள் இல்லாத போதும் அவற்றைத் தவிர்த்தும் நன்றாக விளையாட்டுக் காட்டும் எதிர்க்கட்சித் தலைவர்கள், அந்தத் திட்டத்தை முனைப்புடன் கையிலெடுத்தால் யாருடன் என்ன பேசி என்ன முடிப்பார்களோ? கண்டுபிடிக்கவும் முடியாதே!
வாக்காளர் நலனுக்காக, ஜனநாயக வெற்றிக்காக என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்கும் எதிர்க் கட்சித் தலைவர்களில் பலர்,
சாதாரண வாக்காளர்களின் தலையில் நடப்பவர்கள். ஆட்சியில் அமர்ந்து கொள்ளை அடிப்பது, அதற்குத்
துணை போவது, அரசு செலவில் இமாலய இலவசங்கள் விநியோகிப்பது, தாங்கள் குவித்த செல்வத்திலிருந்து
ஓட்டுக்குப் பணம் தருவது, ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் சீராக முன்னேற ஒன்றும் செய்யாமல்
இருப்பது, என்பதாக அப்பாவி வாக்காளர்களை வஞ்சிப்பவர்கள் அந்தத் தலைவர்கள்.
விஞ்ஞான ரீதியாகப் பல்லாயிரம் கோடிகளில்
பணம் சேர்த்துவிட்டு, அவற்றை வெளிநாடுகளில் மறைத்து வைக்கும் அரசியல் தலைவர்களை நாம் ஊகிக்கலாம். அவர்கள் வெறும் தேர்தல்
பத்திரங்கள் திட்டத்தை உபயோகித்துச் சொத்து சேர்க்கவில்லை. ஆகையால் இந்தத் திட்டம் ரத்தானதற்காக
இப்போது அவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்குக் கை தட்டுவார்கள். ஆனால் தங்கள் வழியில் ரகசிய
சம்பாத்தியத்தைத் தொடர்வார்கள்.
ஓட்டுப் போடுகின்ற மக்களின் தகவல் அறியும் உரிமை பறிபோனதால், வாக்காளர்களின் அந்த உரிமையை சுப்ரீம் கோர்ட் சட்ட அளவில் மட்டும் தனது தீர்ப்பினால் காப்பாற்றி இருக்கிறது – இதைத்தான் கோர்ட் செய்யமுடியும். ஆனால் நிஜத்தில் எண்ணற்ற அந்த அப்பாவி மக்களை நமது எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கசக்கிப் பிழிந்து ஏமாற்றிக் கொழிக்கிறார்கள் – இதில் கோர்ட் ஒன்றும் செய்வதற்கில்லை.
நமது மக்கள் நிஜத்தில் காப்பாற்றப்பட நாம் என்ன செய்யலாம்? பிரார்த்திக்கலாம். அதுபோக, மத்தியில் பாஜக-வின் நல்லாட்சி தொடர அதிகமானோர் அக்கட்சிக்கு வாக்களிக்கலாம். கோர்ட் உத்தரவுகளைத் தாண்டி, நடைமுறையில் அதுதானே அப்பாவி இந்தியர்களுக்கு நிஜப் பலன்கள் தரும்?
* * * * *
Author: R.
Veera Raghavan, Advocate, Chennai
it is an important judgement by the supreme court, SC has given the march13th deadline to SBI to provide the details of who bought how much electoral bonds and the details are to be uploaded by Election commission in their website. Already , the fund received by the political parties through bonds details are in public domain. Now , public will also come to know who bought the bonds for how much amount .The crucial link who has given the bond to which political party cannot be made and no one will know this link and SC has not said anything about this link not known. we need to wait for this data to be uploaded .After that all kind of guesses would be made from the name of the buyer of the bonds and to which political party , such person could have given the bond. let us wait as usual .
ReplyDelete