Wednesday, 31 May 2023

கட் அண்ட் ரைட்டு கோவிந்து: எதுக்கு செங்கோலு? இந்தா பதிலு!

        -- ஆர். வி. ஆர்

 

காங்கிரஸ் கட்சில ஜெயிராம் ரமேஸ்னு இருக்கார்ல? ஊடகம், மக்கள் தொடர்புக்கு எல்லாம் அவருதான் கட்சில பொறுப்பு. அவரு ட்வீட்டு போட்டு இந்த மாதிரி சொல்லிக்கினாரு. 

“தமிள் நாட்டுல இருக்கற ஒரு மத அமைப்பு, கம்பீரமான ராஜ தண்டம் ஒண்ணு செய்யச் சொல்லி, அதை நேரு கைல 1947-ம் வருசம் குடுத்துச்சு. அது உண்மைதான்.  ஆனா அந்த ராஜ தண்டம்றது, வெள்ளக்காரனோட ஆட்சி அதிகாரம் கைமாறி இந்தியாவுக்கு வந்ததுக்கு  அடையாளமா நேரு கிட்ட குடுக்கப் போவலை. அவுங்க குட்தாங்க, நேரு வாங்கிக்கினாரு. அதான் நடந்திச்சு.”   

“சரிப்பா, பாராளுமன்றத்துல செங்கோல் இருக்கட்டும். அது நல்லதுதான்”னு ரமேஸ் சொல்லவே இல்ல. கடசீல அவரு இதத்தான் கேக்க வராரு: “இப்ப எதுக்கு பளைய செங்கோலு? அந்த செங்கோல பிரதமர் எதுக்கு புதுஸா கட்டுன பாராளுமன்றத்துக்கு உள்ளார வெக்கணும்? தேவை இல்லயே?” 

அல்லாத்துக்கும் பதில் இருக்கு.   

புது பாராளுமன்ற பில்டிங்கை பிரதமர் டில்லில தெறந்து வெக்கறப்ப,  அந்த செங்கோல டிவி-ல பாத்தீல்ல? வெள்ளில செஞ்சு தங்க முலாம் பூசுனது. அஞ்சடிக்கு லாங்கு. அதோட தலைப் பக்கம் உச்சில, நந்தி சாமி உருவம் அமைதியா கால் மடிச்சு உக்காந்துக்கிது. பிரதமர் மோடி அந்த செங்கோல கையால கும்புட்டாரு. கீள வுளுந்தும் கும்புட்டாரு. அப்பறம் உள்ளங்கை ரண்டையும் சேத்து கும்புடற மாதிரி வச்சிக்கினு, கைக்கு நடுவுல அந்த செங்கோல நேரா புட்சிகினு பவ்யமா நடந்தாரு. புது பாராளுமன்றத்துல லோக்கு சபா உள்ளார போயி, கொஞ்சம் படி ஏறி, சபாநாயக்கரு பக்கத்துல ஒரு கண்ணாடிப் பொட்டிக்குள்ள நிக்க வச்சாரு மோடி.  அந்த செங்கோலுக்கு ஒரு வர்லாறு இருக்குது.

 

சொதந்திரம் கெடச்ச நேரத்துல, திருவாடுதுறை ஆதீனம் அனுப்பி வச்ச ரண்டு பிரதிநிதிங்க டில்லிக்குப் போனாங்க. அங்க போயி, 1947-ம் வருசம், ஆகஸ்டு மாசம், 14 ம் தேதி அன்னிக்கு சாயங்காலம், ஒரு பளைய போர்டு காரை எடுத்துக்கினு மொள்ளமா நேரு வூட்டுக்கு ஊர்கோலம் போனாங்க. காரு முன்னால நடந்த ராஜரத்தினம் பிள்ளை, அங்கங்க நின்னு ஜோரா நாகஸ்ரம் வாசிச்சாரு. அப்பறம் அல்லாரும் நேரு வூட்டுக்குள்ள போனாங்க. ஆதீனப் பிரதிநிதிங்க ரண்டு பேரும் நேரு கிட்ட போயி, அவரு மேல சாமி தீர்த்தம் தெளிச்சு, அவரு நெத்தில விபூதிய இட்டு, அவருக்கு பீதாம்பரம்னு  ஒரு சால்வய போத்தி மருவாத பண்ணாங்க. அடுத்ததா, தமிள் நாட்டுலேந்து அவுங்க கொணாந்த ராஜ தண்டம்  இருக்கே – அதான்பா செங்கோலு -  அத எட்து நேரு கைல குட்தாங்க. நேருவும் வாங்கிக்கினாரு. வெள்ளக்காரன் கைலேந்து ஆட்சி அதிகாரத்த இந்தியாவுக்கு மாத்திவுடுற அடையாளமா அத நேரு கிட்ட குட்தாங்க.  

 

இந்தக் கதைலாம் எனக்கு எப்பிடித் தெரியும்னு சொல்றேன். அமெரிக்காவுல இருந்து “டைம்”னு ஒரு பத்திரிகை வருதில்ல? ஆகஸ்டு 1947-ம் வருசத்துல, 14-ம் தேதி டில்லில இப்பிடிலாம் நடந்துச்சுன்னு அந்தப் பத்திரிகைல வெலாவாரியா எளுதிருக்கு. அப்பிடின்னு ஒரு படிச்ச மன்சன் எங்கிட்ட சொன்னாரு. இப்ப நீ கூட அத பாக்கலாம். அதென்னா, சைக்கிளா கூக்கிளா? கப்பூட்டரு வச்சி அதுல தேடு. உனக்கே தெரியும்.  (https://content.time.com/time/subscriber/article/0,33009,798062,00.html)     

 

அந்த செங்கோலப் பத்திதான் ஜெயிராம் ரமேஸ் ட்வீட்டு விட்டாரு.  சரி, நேரு கைல எதுக்கு அத குடுத்தாங்க, அவரு எதுக்கு வாங்கினாருன்னு ரமேஸ் ஒளுங்கா வெளக்கம் சொல்ல வேணாம்? உயர்ந்த மனிதன் சிவாஜி கணக்கா, ஸ்டைலா செங்கோல புடிச்சு சுத்திக்கினு நடக்கவா நேருட்ட குட்தாங்க? அறிவாளியான நேரு, எதுக்கு தராங்கன்னு தெரியாம ஏதோ பாப்பா கிப்ட் வாங்கறா மாதிரி அத வாங்கிக்கினாரா? ராஜாங்க அதிகாரம் புதுசா கைக்கு வரப் போவுது, நம்ம நாட்டு கலாசாரப்படி, அதுக்கான அடையாளம் அந்த செங்கோலு, ஒரு ராஜகுருதான் அதைக் குடுக்கற வளக்கம்னு தெரிஞ்சுதான், அந்த ஐடியாலதான், திருவாடுதுறை ஆதீனம் அதை நேருக்கு தடபுடலா மேள தாளத்தோட அனுப்பிச்சு, அவரும் அப்பிடித்தான் அத வாங்கிக்கினாரு. நாயனம் கூட  கேட்டாரு.

 

இன்னொரு விசயம் பாரு. நேரு கிட்ட ஆதீனம் குடுத்தது ‘செப்டர்’ (sceptre) அப்பிடின்னு இங்கிலீஸ்ல சொல்றாரு ரமேஸ். செங்கோல்னு சொல்லலை. ஆனா அவரு சொன்ன வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு அகராதிலயே இப்பிடித்தான்  அர்த்தம் போட்டிருக்காமே?    

 

Sceptre: அது அளகு செய்யப்பட்ட கோல். ராஜாவா இருக்கப் பட்டவரு, அதை விளா, சடங்கு மாதிரியான சமயத்துல எடுத்திட்டுப் போவாரு. அந்தக் கோல், ஒரு ராஜாவோட அதிகாரத்துக்கான அடையாளம் (a decorated rod carried by a king or queen at ceremonies as a symbol of their power).  

 

வெள்ளக்கார மவுன்ட்பேட்டன் கிட்டேர்ந்து ஆட்சி அதிகாரம் கை மாறி, நம்ம நேருட்ட பிரதமர்னு வந்துச்சு. அப்பிடி வந்த அதிகாரத்துக்கு ஒரு அடையாளம்தான், நேரு கிட்ட திருவாடுதுறை ஆதீனம் குடுத்த செங்கோல்.  நாட்டுல பெரிய எதிர்க் கட்சி காங்கிரஸ்ல இருந்துக்கினு, இன்னுமா உனக்கு கொளப்பம் ரமேசு?

 

இந்த விசயத்துல தமிள் நாட்டு முதல் அமைச்சர் ஸ்டாலின் என்ன சொன்னாரு, தெரிமா? பாராளுமன்றத்துல  செங்கோல் இருக்கணும்னு அவரு சொல்லலை, இருக்க வேணாம்னும் சொல்லலை. அந்த விசயம் பத்தி அவரு வாயத் தெறக்கல. மோடி அரசு எது நல்லது பண்ணாலும், தமிளனுக்கே பெருமை செஞ்சாலும், அதை வாள்த்தக் கூடாதுன்னு வச்சிருக்க. அதே நேரம், செங்கோல் வாணாம்னு சொல்றதுக்கும் உனக்கு கூச்சமா இருக்குது. ஏன்னா அது தமிள் நாட்டுப் பெருமைய வெளிப்படையா உதாசீனம் பண்ற மாதிரி ஆவுது. அதுனால வேற  எங்கயோ பிராக்கு பாத்துக்கினு இருப்பியாக்கும்?   

 

இப்ப,  சோனியா, ராகுல், ஸ்டாலின் மூணு பேத்துக்கும்  நான் சில விசயம் சொல்டா?


வள்ளுவரு செங்கோல் பத்தி ஒரு அதிகாரம் எளுதிக்கிறாரு. அதாவது பத்து நம்பர்ல குறளு, செங்கோன்மை அப்பிடின்னு. செங்கோன்மைன்னா நல்லாட்சின்னு ஆவும். அதுக்கு அடையாளம்தான் செங்கோல். ஒரு ராஜாவுக்கு செங்கோல் எவ்ளோ முக்கியம், செங்கோல் எதக் குறிக்கிது, அத்தோட மகிமை என்னான்னு அந்த அதிகாரத்துல வள்ளுவரு புட்டு புட்டு வச்சிக்கிறாரு. வள்ளுவரை சும்மா நூத்தி நுப்பது அடி செலையா நிப்பாட்டினா போறுமா? அவரு ஓகோன்னு சொன்ன செங்கோலயும் வாங்கி வச்சுக்கினு ஆட்சி பண்ணா என்னா தப்பு? 

 

மன்னாராட்சி போயி இப்ப மக்களாட்சி.  நமக்கு லோக்கு சபா, ராஜ சபா, மாநில சட்டசபைன்னு இருக்குதே, அங்க சபநாயக்கரு உக்கார்ற நாக்காலியைப் பாத்துக்கிறயா? மன்னர் மாதிரியே, கம்பீரமா சோக்கான நாக்காலிலயப் போட்டுத்தான் அவரும் உக்கார்றாரு. நாக்காலில அவரு சாயுற  முதுகுப் பக்கம் இருக்குதே, அதுவே ஒரு கட்டிலை செங்குத்தா நிக்க வச்ச உசரம் இருக்கும். ராஜா மாதிரி நாக்காலி மட்டும் மக்களாட்சில வேணும், ஆனா ராஜா கவுரவமா பக்கத்துல வச்சிருந்த செங்கோல் மட்டும் எதிர்க் கட்சிங்களுக்கு கசக்குதா?

 

அந்தக் காலத்துல நம்ம ராஜாவுங்க எதுக்கு செங்கோல்னு வச்சிக்கினாங்க? தருமம் நெலைக்க, மக்களுக்கு நீதி நாயம் கெடைக்க, ராஜாதான் வளி பண்ணணும். அந்தப் பொறுப்புக்கு ஒரு அடையாளமா, அந்தப் பொறுப்பை அவருக்கு சதா நாபகப் படுத்த, அவரு செங்கோல் வச்சிருந்தாரு. 

 

புதுசா ஒருத்தரு ராஜா பொறுப்பை எட்துக்க  சொல்ல, ராஜகுரு கைலேந்து அந்த ராஜா செங்கோல வாங்கிப்பாரு. அதான் இதுல முக்கியம். பளைய ராஜாவோ, சண்டைல தோத்த எதிரி ராஜாவோ, அந்த செங்கோல மொதல்ல தொட்டுத் தரணும்னு இல்ல. அந்த ஆளு செத்தே போயிருக்கலாம். அதுனால, நேரு செங்கோல் வாங்கினதுக்கு முன்னால வெள்ளக்கார மவுன்ட்பேட்டனு அதை தொட்டுக் குடுத்தாரா இல்லியான்றது நமக்கு அவசியம் இல்ல.    

 

நம்ம நாட்டுல நம்ம ஜனங்ககிட்ட உருவான  பண்பாடு, கலாசாரம், அல்லாத்தயும் காங்கிரசு, திமுக, இன்னும் பல கட்சிங்க பெருசா மதிக்கிறதே இல்லை. அப்பத்தான் மைனாரிட்டி ஓட்டு வரும்னு அவுங்க கணக்கு பண்ணிக்கினாங்க.  அதுவும் திமுக ஸ்டாலின கவனி. தமிள் மன்னருங்க தரும நாயம் ஆட்சில இருக்கணும்னு ஒரு அடையாளமா வச்சிருந்த செங்கோல, பாராளுமன்றத்துல வச்சா அது வேணும், அது நல்லதுன்னு பேச மாட்டாரு. ஆனா கருணாநிதி ஏதோ எளுதின பேனாக்கு அடையாளமா எம்பது கோடில சிலை வெக்கணும்னு மொனப்பா இருக்காரு. இதா பகுத்தறிவுன்ற?

 

புது பாராளுமன்றம் களையா அம்சமா கீது. இனிமே பாராளுமன்ற கூட்டம் அந்த பில்டிங்லதான் நடக்கப் போவுது. அப்பறம் ஏன் காங்கிரசு, திமுக-ன்னு இருவது கட்சிக்காரங்க பாராளுமன்ற தெறப்பு விளாக்கு போவலை? அவுங்க என்ன சொன்னாலும்  உண்மை இதான். மத்தில இருக்கற மோடி அரசு எல்லா மாநிலத்துலயும் மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணிக்கினே இருக்குது. ‘மத்திய அரசு ஊளல் பண்ணுது’ன்னு எதிர்க் கட்சிங்க பேச முடில. இதுனால, வெளில உதார் வுட்டாலும் எதிர்க் கட்சிங்க உள்ளுக்குள்ள சேமா இருக்குதுங்க. வெக்கத்துல தெறப்பு விளால மூஞ்சியக் காட்ட முடியாட்டியும், பேச்சுல  வீரத்த காட்டிக்கணும். அதான அரசியலு?  

* * * * *


Author: R. Veera Raghavan

 

Thursday, 25 May 2023

கட் அண்ட் ரைட்டு கோவிந்து: திராவிட மாடல்னா என்னா?

 

          -- ஆர். வி. ஆர்

 

        நம்ம சி.எம் ஸ்டாலின் அடிக்கடி சொல்றாரு. அவரு ஆட்சி திராவிட மாடல் ஆட்சின்னு. ஆட்சிக்கு பெர்சா இப்பிடி பேர் வச்சா, அதுக்கு என்னா அர்த்தம்னு புரியிற மாதிரி வெளக்கி சொல்லணுமில்ல சும்மா “எல்லாருக்கும் எல்லாம் கெடைக்கணும். சாதி பேதம் கூடாது. பொண்ணுங்களுக்கு ஆம்பிள்ளையோட சமத்துவம் இருக்கணும். அப்பிடி இப்பிடி”ன்னா போறுமா? அதைத்தான அரசியல் சட்டம் சொல்லுது? அதெல்லாம் வேணாம்னு எந்தக் கட்சியாவுது சொல்லிச்சா? அப்பறம் என்னா திராவிட மாடலு?


      ஸ்டாலின் என்ன சொல்ல வராருன்னு சரியா புரில. விட்ர முடியுமா? நம்மளே  யோசிச்சு புரிஞ்சுக்குவோம்.

 

மொதல்ல இத சொல்லிக்கிறேன். பேரைக் கேட்டா லைட்டா சிரிப்பு வருது. மாடல் கீடல்னு பேர் வெக்க இதென்னபா, காரா பைக்கா?


பாரு, சேர ராஜா, பாண்டி ராஜா, சோள ராஜான்னு முந்தி இருந்தாங்க. அவுங்க தமிள் ராஜாங்கன்னு பெருமையா சொல்லிக்கிறோம். அதுல ஒருத்தரு ராஜ ராஜ சோளன். ஸ்கூல்ல படிச்சிருப்ப – அவருதான் தஞ்சாவூரு பெரிய கோயில கட்டினாரு. இன்ன வரைக்கும் ஆயிரம் வருசமா அது நிக்குது. ஜனங்களுக்கு அவரு பண்ண வேலைங்க, அவரு கட்டுன கோயிலு, அதான் இன்னிக்கும் அவரு பேரை நிறுத்துது.  அவரு ஆட்சிக்கு அவரே பட்டப் பேர் குடுத்துக்கினாரா? "கோயிலு மாடல் அரசாட்சி" அப்பிடின்னு கூட அவரு பேர் வச்சிக்கல.


ஆட்சில நீ ஒளுங்கா சூப்பரா வேலை பண்ணா, உன் வேலையப் பாராட்டி பெசல் பேர்லாம் மத்தவன் குடுப்பான். அப்பறம்  என்னாத்துக்கு திராவிட மாடல்?

 

        இது வரைக்கும்  திமுக-வுல  யார்  யார் சி.எம்-ஆ இருந்தாங்கன்னு பாரு. மொதல் சி. எம் அண்ணாத்துரை. ரண்டு வருசம் வரை இருந்தாரு. அவர் போனப்பறம்  நெடுஞ்செளியன் ஒரு வாரம் உக்காந்தாரு. அப்பறம் கருணாநிதின்ற கலைஞரு,  மாத்தி மாத்தி பத்தம்போது வருசம் ஆட்சி பண்ணாரு. இப்ப ஸ்டாலின் ரண்டு வருசமா தடவுறாரு.

 

 காங்கிரஸ்காரனை எடுத்துக்க. தமிள் நாட்டுல காமராஜ் ஆட்சியக் கொண்டு வரணும்னு காங்கிரஸ்காரன் நெனைக்கிறான். பேருக்காவது அப்பிடி நெனைக்கிறான். காமராஜ் ஆட்சின்னா என்னா அர்த்தம்? “காமராஜ் முதல்வரா இருந்தப்ப, ஆட்சில நேர்மை, தூய்மை, மக்கள் நலத் திட்டம், எல்லாம் இருந்துச்சு. அதெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு அப்பால ஓடிப் போச்சு. அந்த நல்ல ஆட்சிய தமிள் நாட்டுக்கு திரும்பக் கொண்டாரணும்” அப்பிடின்னு அர்த்தம். இது புரியுது.

 

இப்ப, “சமத்துவம், சகோதரத்துவம், பொண்ணுங்களுக்கு சம உரிமை, எல்லாருக்கும் வளர்ச்சி, அப்பறம் தமிளன், தமிள்ப் பெருமை, அது இது”ன்னு ஸ்டாலின் சொன்னா, அதெல்லாம் கலைஞர் நடத்தின ஆட்சில இருந்துச்சா இல்லியா? இருந்துச்சுன்னா, “எங்க ஆட்சி கலைஞர் ஆட்சி”ன்னு ஸ்டாலின் சொல்லிட்டுப் போலாமே?” போன திமுக தலைவருக்கு குடுத்த மருவாதைன்னு அத எட்துக்கலாம்.

 

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இதான் கட்சியோட கொள்கைன்னு அண்ணாத்துரை சொன்னாரு. திமுக இத ஒளுங்கா கடைப்பிடிச்சா போறுமே? அத வச்சே கோளாறு இல்லாம ஸ்டாலின் ஆட்சி   பண்லாம்.  பேரும் ரிப்பேர் ஆவாது. இப்ப என்ன ஆச்சு? ஸ்டாலின் ஆட்சில உக்காந்து இப்ப வரைக்கும் அவருக்கு கட்சிக்காரங்க பிரச்சனை ஓயலை. அதப்பத்தி போன வருசம் பொதுக்குளு மீட்டிங்லயே ஸ்டாலின்  பேசிட்டாரு. “திமுக நிர்வாகிங்க, மூத்தவங்க, அமைச்சருங்க, இவுங்களே என்னைத் துன்பப் படுத்தறா மாதிரி நடந்துக்கினா நான் யார்ட்ட போய் சொல்றது?  தெனம் காலைல நம்மவுங்க புதுப் பிரச்சனை எதுவும் பண்ணிறக் கூடாதுன்னு நெனச்சிதான் நான் கண்ணு முளிக்கிறேன். சில நாளு தூங்கவே முடியலை”ன்னு மைக்குல அளுதாருல்ல? அப்பவே அவரோட ஆட்சி ஒண்ணரை வருசம் ஓடிருச்சு.   அப்பறம் என்னா திராவிட மாடலு?

 

ஆட்சின்னா என்னாப்பா? மொதல்ல சில விசயம் நடக்காம பாத்துக்கணும். அதான் முக்கியம். உதாரணம் சொல்லட்டா?

 

ஆட்சி கைல வரதுக்கு முந்தியே, ஒரு கட்சித் தலைவரு “பத்து மணிக்கு நாங்க ஆட்சிப் பொறுப்பு  ஏத்துக்கிட்டா, பத்து அஞ்சுக்கு அல்லாரும் ஆத்துல எறங்கி ப்ரீயா மணல் அள்ளிக்கலாம். அதிகாரி எவனும் கேக்க மாட்டான்” அப்படின்னு பேசக்கூடாது. அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தப்பறம், மணல் திருட்டைத் தடுக்கற வி.ஏ.ஒ-வை அவரு ஆபீஸ்லயே வச்சு ரவுடிங்க போட்டுத் தள்ளக் கூடாது. கோயிலு வாசல்ல குண்டு வெடிக்கக் கூடாது.  ஒரு அமைச்சரே தொளிலாளிய நோக்கி கல்லு கட்டையெல்லாம் வீசக் கூடாது, கட்சிக் கவுன்சிலர் பின் மண்டைல அறையக் கூடாது. மக்கள் ஏதாவது பிரச்சனை சொல்ல வந்தா, “நீ எனக்கு ஓட்டுப் போட்டுக் கிளிச்சியா?”ன்னு ஒரு அமைச்சர் கேக்கக் கூடாது. இன்னும் கூட இருக்கு.

 

சாராய பாட்டிலு டாஸ்மாக்ல பத்து ரூவா கூட்டி விக்கக் கூடாது. முதல்வர் பையன், மாப்ளைன்னு கட்சிக் காரங்க தேடிப் புடிச்சு பல்லைக் காட்டி காக்கா பிடிக்கறதை, கட்சியே வளத்துவிடக் கூடாது. முதல்வர் குடும்பத்தை நைஸ் பண்ணித்தான் கட்சில எவனும் நெலைச்சு நிக்கலாம்னு, ஒரு பெரிய அமைச்சரே, “நான் செத்தப்பறம், ‘கோபாலபுரத்து விசுவாசி இங்க தூங்கிக்கினு இருக்கான்’னு என் கல்லறைல எளுதி வச்சிருங்க” அப்பிடின்னு மானம் ரோசம் கெட்டு சட்டசபைல ஆக்ட் குடுக்கக் கூடாது, அதக் கேட்டு ஸ்டாலினும் உருகக் கூடாது.


இந்த மாதிரி அடாவ்டி அட்டூளிய அல்ப வேலையத்தான் திமுக ஆட்சில கட்சிக்காரன் பெர்சா பண்றான். அடிதடி வெட்டுக் குத்து ஆளுங்க தெனாவெட்டா இருக்கான், அர்சாங்கம் கண்டுக்காம இருக்கு. இத விட்டா, மூக்குல விரல் வெக்கிற மாதிரி ஸ்டாலின் ஆட்சில ஒண்ணும் நடக்கலை. அப்பறம் என்னா திராவிட மாடலு?


கலைஞர் விசயம் வேற. தன்னம்பிக்கை, தெகிரியம், கட்சித் தலைவருங்களை கையாள்ற மொறை, ஆட்சி லகானை கைல புடிக்கிற திறமை, அரசியல் வெளையாட்டு,  இதுலெல்லாம் அவரு கில்லாடி. ஸ்டாலின் பாவம்பா. தன் ஆட்சிய ‘கலைஞர் ஆட்சி’ன்னு சொல்லிட்டா, அப்பா பேரு கெட்டுரும்னு நெனச்சி தன்னோடது திராவிட மாடல் ஆட்சின்னு வேற பேரு வச்சிக்கினாரா, தெரில.      


கடசீல இதயும் சொல்லிக்கிறேன். கலைஞரு, ஸ்டாலின் ரெண்டு பேர் செயல்பாட்டையும் பாத்தா ஒரு விசயத்துல இப்பிடி டவுட் வருது. அவரு  விஞான ரீதியா போய்க்கினாரு. இவரு பூகோள ரீதியா போயிட்டிருக்காரோ?


* * * * *


Author: R. Veera Raghavan


Monday, 22 May 2023

கட் அண்ட் ரைட்டு கோவிந்து: மதுவிலக்கைக் கொண்டாந்துரு

  

-- ஆர். வி. ஆர்

 

பாவம்பா, தமிள் நாட்டுல 22 ஆளு கள்ளச் சாராயம் குடிச்சு கண்ணை மூடிட்டான். அவன் குடும்பத்துக்கு அரசாங்கம் பத்து லட்சம் குடுத்திருக்கு. போவட்டும். நான் பேசற மேட்டர் வேற.

 

கள்ளச் சாராயம்னா என்ன தெரிமா?  நீ சாராயம் தயாரிக்கணும்னா, மொதல்ல கவர்மென்டோட லைசென்ஸ் கைல வச்சிருக்கணும்.  அது இல்லாம எவன் சாராயம் தயாரிச்சாலும், அது கள்ளச் சாராயம்தான். இந்த லைசென்ஸ்லாம் தமிள் நாட்டுல எவனுக்கும் சுளுவா கிடைக்காது. 

 

உனக்கு அந்த சாராய லைசென்ஸ் வேணும்னா, அதுக்கு நீ கவர்மென்டை அப்பிடி இப்பிடி அட்ஜஸ்ட் பண்ணி வச்சிருக்கணும். ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கணும். இதுக்கு மேல நான் சொல்லத் தேவையில்ல.  


தமிள் நாட்டுல சாராய லைசென்ஸ் அஞ்சாறு பேர்ட்ட தான் இருக்கு. அவனுங்க எல்லாம் கவர்மென்ட்டுக்கு தோஸ்த். அதுல கெட்டியான தோஸ்த்துக்கு நெறைய ஆர்டரு,  மத்த தோஸ்த்துக்கு கம்மி ஆர்டருன்னு குடுத்து கவர்மென்டு சாராயத்தை வாங்குது. வாங்கி, டாஸ்மாக் கடைன்னு முக்குக்கு முக்கு அரசாங்க நிறுவனம் நடத்துதே, அது மூலமா எல்லா ஊர்லயும் சாராயத்தை அரசாங்கம்  விக்குது.  இதுல என்ன பிரச்சனைன்னா கேக்குற? சொல்றேன்.

 

மனுசன் வாள்க்கை நடத்த எதுப்பா முக்கியம்?  சாப்புட சோறு, உடுக்கறதுக்கு டிரஸ்ஸு, தங்குறதுக்கு வீடு, சம்பாரிக்க எதுனாச்சும் வேலை.  இதான?  

 

எல்லாரும் என்ன பண்றான்? அவன் அவன் வருமானத்துக்கு ஏத்த மாதிரி சாப்புடறான். அது கூளோ, கஞ்சியோ, சுடு சோறோ, எதுவோ. அப்பறம், வருமானத்துக்கு ஏத்த மாதிரி டிரஸ் போடறான். புதுசோ, பளசோ, கிளிசலோ, ஒட்டுப் போட்டதோ. அவனுக்கு ஏத்த வீட்லதான் அவன் இருக்கான் – கெட்டி மச்சு,  ஓட்டு வீடு, சீட் வீடு, ஓலைக் குடிசைன்னு. ஒண்ணும்  இல்லைன்னா பிளாட்பாரம். இப்பிடித்தான் ஊர் இருக்குது.

 

ஊர் பாட்டுக்கு இப்பிடி இருக்குன்னா, கவர்மென்ட் ஜனங்க கிட்ட "நீ இந்த மாதிரியான உணவு சாப்பிடணும், இந்த ரகத் துணில டிரஸ் போடணும், இந்த தரத்துல உன் வீடு இருக்கணும், அப்பிடின்னு ரூல் பேசுதா?  இல்லைல்ல? அந்த மாதிரி ரூல் போட முடியாதில்ல?

 

இதெல்லாம் போக, ஒவ்வொரு மனுசனுக்கும் உடம்புக்கு, மனசுக்குன்னு ஒரு தேவை இருக்கு.  காப்பி டீ குடிக்கறதையே எடுத்துக்கயேன். அதுக்கு பளக்கப் பட்டா அதை நிறுத்த முடியாது. ஜனங்க என்ன பண்ணும்? முடிஞ்ச விலைக்கு, கெடைக்கிற தரத்துல, காப்பித் தூள் டீத்தூள்னு வாங்கி வச்சிக்கும். ரேட்டுக்கு ஏத்தபடி  பாலும் கெடைக்குது. தண்ணிப் பால்லேர்ந்து கெட்டிப் பால் வரைக்கும், ஆவின்லயே குடுக்கறான். நீலக்  கலரு ஜிங்கிச்சா, மஞ்சக் கலரு ஜிங்கிச்சான்னு,  வேற வேற கலர் பாக்கெட்ல, கம்மி விலை அதிக விலைன்னு ஆவின்ல பால் கெடைக்குது. உனக்குத் தோதான பால் வாங்கி காப்பி டீ போட்டுக்க.  அவ்ளதான்.

 

வீட்டுக்கு வெளிய இருக்கியா? அப்ப உன் வசதிக்கு ஏத்தபடி ஸ்டார் ஓட்டல்ல போய் காப்பி டீ குடிக்கலாம். இல்லை, ஊர்ல அங்க இங்க பேமஸ் ஓட்டலுங்க இருக்கே, அங்க போய் காப்பி டீ குடிச்சுக்க. இல்லை, சாதா ஓட்டல் இருக்கு, அங்க போய்க்க. அதுவும் இல்லை, டீக்கடைக்கு போய் கிளாஸ்ல குடி.  இதுலயும் பாரு, “நீங்க அல்லாரும் கவர்மென்ட் ஓட்டலுக்கு வந்து இன்ன விலை குடுத்து கவர்மென்ட் குடுக்கற காப்பி டீயைத்தான் குடிக்கணும்”னு ரூல் வெக்க முடியுமா? அப்பிடி ரூல் போட்டாலும் அதை எவன் ஏத்துப்பான்? அதெல்லாம் நடக்காதுல்ல? 


இப்ப வரேன் சாராய மேட்டருக்கு.  ஊருக்கு ஓரமா ஒருத்தன் சாராயம் காச்சி விக்கறது இருக்கட்டும்.  பப்ளிக்கா அங்க இங்கன்னு தெருவுலயே டாஸ்மாக் கடை வச்சி, குடியைப் பாக்காத நெறைய மனுசனுக்கும் புதுசா குடிக்கற ஆசைய கெளப்பி விட்டது அரசாங்கம்தான். குடிப் பளக்கம் இப்ப பரவிப் போச்சு. ஏளையோ பணக்காரனோ, இருவது வயசுக் காரனோ எம்பது வயசு ஆளோ, இப்ப நெறையப் பேர் குடிக்கிறான்.   

 

“எல்லா மனுசனோட போதைய நான்தான் தீர்ப்பேன். என் கடைல மட்டும்தான் அல்லாரும் சாராயம் வாங்கணும்”னு கவர்மென்டு சொன்னா யார் கேப்பான்? கள்ளச் சாராயம் வித்து சம்பாரிக்க வளி இருக்குன்னா, காச்சுறவன் காச்சுவான், விக்கறவன் விப்பான். பெரிய அளவுல முதல் போடறவன்,  அரசாங்கத்துல லைசென்ஸ் வாங்க முடியிறவன், அதுக்கு அட்ஜஸ்ட் பண்றவன் மட்டும்தான் சாராய உற்பத்தி பண்ணுவான், டாஸ்மாக் மட்டும்தான் அதை விக்க முடியும்னா அது எப்பிடி நடக்கும்?  

 

நீ காப்பிக் கடை நடத்தணுமா? வேணும்னா பெருசா செலவு பண்ணி “காப்பி டே”ன்னு சோக்கா கடை  வையி.  முடியலைன்னா சின்ன ஓட்டல் நடத்து. அதுக்கும் காசு இல்லைன்னா டீக்கடை நடத்திக்க.  மூணு வித கடைக்கும் மூணு வித கஸ்டமருங்க வந்து, ஒவ்வொண்ணுலயும் ஒவ்வொரு விலைல காப்பி டீ குடிப்பான். அது மாதிரித்தான சாராயமும்?  

 

யாரும் மது குடிக்கலாம்னு சட்டம் இருந்தா, வசதிக்கு ஏத்தபடி எங்கயும் குடிக்கலாம்னுதான் மனுசன் போவான்.  அந்த சூள்நிலைல கள்ளச் சராயமும் விக்கும். அப்ப போலீசுக்கு வருமானம் வரதைத் தடுக்க முடியாது.

 

டாஸ்மாக் வியாபாரத்துல, ரெகார்டுல வராத வருமானம் எங்க எங்க போகுதுன்னு  போலீஸ்காரனுக்கு நல்லாத் தெரியும். கணக்குல வராத வருமானத்தை எல்லாரையும் சம்பாரிக்க விட்டு, கடமையா அந்த சம்பாத்தியத்துக்கு பாதுகாப்பு குடுக்கற மனுசனா மட்டும் எப்பிடி போலீஸ்காரனோ மத்த அதிகாரியோ இருப்பான்? அவனும் மனுசன் தான? இதுல போலீசை, மத்த அதிகாரிய, கெடுத்தது யாருன்ற? “என்னை மாதிரி தப்பா சம்பாரிக்க உனக்கும் வளி இருக்கு”ன்னு  தன்னோட நடத்தைலயே தெனாவெட்டா  காமிக்குதே ஒரு கூட்டம் - அதான், வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையோட கும்பிடு போடுதே ஒரு கூட்டம் - அந்தக் கூட்டம்தான்.  சர்தான?

 

நான் என்ன சொல்றேன்னா, மது விலக்கை முளுசா கொண்டு வா. சரியா அமல்படுத்து. அப்பத்தான் புதுசாக் குடிக்கறவன் குறைவான். ஜனங்க நிறைய பேர்ட்ட, மெள்ள மெள்ள குடி ஆசையும் குறையும். 


அப்பன் குடிக்கிறது குறைஞ்சா, பிள்ளைங்க ஒளுங்கா இருக்கும், படிக்கும். அவுங்க படிச்சு நல்ல வேலைக்குப் போய் சம்பாரிக்கணும். அதுக்கு இடைஞ்சலா, அப்பன்காரன் எப்ப வேணா டாஸ்மாக், சராயக் கடைன்னு போய் குடிச்சிட்டு வந்து வீட்டு நிம்மதிய கெடுக்கக் கூடாது. தமிள் நாடு இப்பிடியே கெட்டுப் போய், சாதாரண ஏளை வீடுகள்ள பொண்ணுங்களும் குடிக்க ஆரம்பிச்சா, பிள்ளையாரே நம்ம பிள்ளைங்களை காப்பாத்த முடியாது.

 

மதுவிலக்கு வந்து, குடிப் பளக்கம் குறைஞ்சா கள்ளச் சாராய விற்பனையும் குறையும், ஆனா அப்பவும் கொஞ்சம் இருக்கும். கள்ளச் சாராயத்தை கண்ணுலயே காணாம முளுசா எப்பவும் தடுக்க முடியாது.  


டாஸ்மாக் பின்புலத்துல பரவுற கூடிப் பளக்கம் இருக்கே, அதான் பெரிய தீ. மொதல்ல பெரிய தீயை அடக்கு. இல்லாட்டி  அது பக்கத்துல பத்திப் பத்தி இன்னும் பெருசா பரவும். மது விலக்கு மூலமா பெரிய தீயை அடக்கிட்டா, கள்ளச் சராயம்னு  இங்க அங்க சின்னத் தீ மட்டும் இருந்தா பரவால்ல. அதை அந்த அளவுல கட்டுப்படுத்தி வச்சுக்கலாம்.

 

என்ன நான் சொல்றது?

 

* * * * *


Author: R. Veera Raghavan

Thursday, 18 May 2023

கள்ளச் சாராய மரணத்தில் திராவிட மாடல் சிந்தனை: செத்தா பத்து!

  

-- ஆர். வி. ஆர்

 

அண்மையில் கள்ளச் சாராயம் குடித்து இதுவரை 22 நபர்கள், சிகிச்சை பலன் இல்லாமல்  மரணம் அடைந்திருக்கிறார்கள். இது நடந்தது விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில்.

 

ஏழ்மையும் அறியாமையும் சேர்ந்து அவல வாழ்க்கை அமைந்ததால், பாதிக்கபட்ட மக்களுக்கு நேர்ந்த ஒரு கேடு இது. அதோடு, இப்போதைய திராவிட மாடல் அரசு கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களை, விற்பவர்களை, தோழமையோடும் பாசத்தோடும் நடத்துவதால், தமிழக அரசே இந்தக் கேட்டை வெற்றிலை பாக்கு வைத்து  அழைத்தது என்றாகும். 

 

கள்ளச் சாராயம் அருந்தி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பத்து லட்சம் ரூபாயும், ஆஸ்பத்திரி சிகிச்சை எடுத்து உயிர் பிழைத்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணமாக மாநில அரசு வழங்கும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார். இதில் பத்து லட்ச ரூபாய் நிவாரணத்தை சமூக வலைத்தளங்களில் பரவலாகக் கண்டனம் செய்கிறார்கள். இதைக் கேலி, கிண்டல், பரிகாசம், இளக்காரம், லந்து என்று பல அடுப்புகளில் வறுத்தெடுக்கும் மீம்களும் ஏராளம்.   

 

புயல், பெரு மழை, வெள்ளம், பூகம்பம் ஆகியவற்றால் பொருள் சேதமும் இறப்புகளும் ஏற்படலாம்.  அவை இயற்கைப் பேரிடர்கள். அப்போது ஒரு அரசாங்கம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, அவர்களின்  குடும்பங்களுக்கு, ஓரளவு நிதி நிவாரணம் அளிக்கலாம். அது புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் கள்ளச் சாராயம் குடித்து உயிர் இழந்த ஒருவரின் குடும்பத்துக்கு அரசாங்கம் பத்து லட்ச ரூபாய் நிவாரணம் கொடுத்தால், அது நல்லதல்ல என்றுதான் நியாய உணர்வு கொண்ட அனைவரும் நினைப்பார்கள்.

 

கள்ளச் சாராயம் காய்ச்சுவது, எடுத்துச் செல்வது, விற்பது, வாங்குவது, அருந்துவது அனைத்துமே சட்டத்தால் தடை செய்யப் பட்டவை. கள்ளச் சாராயம் குடித்துவிட்டு இப்போது அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து பிழைத்து, அரசிடம் ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணம் பெறுகிறார்களே, அவர்கள் மீதும் அரசு சட்டப்படி வழக்குப் பதிய வேண்டும், தண்டனை பெற்றுத் தர வேண்டும்.  பின் எப்படி ஒரு அரசு, 'கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர் குடும்பத்துக்கு பத்து லட்சம்' என்று நினைத்துப் பார்க்க முடிகிறது? இதற்கு நாமே விடையை ஊகிக்கலாம்.  

 

இப்போது கள்ளச் சாராயத்தால் உயிர் இழந்தவர்கள், சாதாரண ஏழை மக்கள். நல்ல  கல்வி பெறுவது, வசதி பெருக்குவது, செல்வம் சேர்ப்பது என்பதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம். அதற்கான வாய்ப்புகளை ஏழை எளியவர்களுக்கு ஒரு அரசு சிறப்பாக ஏற்படுத்தவில்லை என்பதால், அந்த மக்கள் தங்களின் வாழ்க்கை நிலைக்கு அரசின் மீது குறை காண மாட்டார்கள். "விதியே" என்று காலம் தள்ளுவார்கள். இருந்தாலும், எப்படியோ ஜீவித்து உயிர் வாழ்ந்து அவர்கள் வழியில் வாழ்க்கையை அனுபவிப்பது, அந்த சாதாரண மக்களுக்கும் முக்கியம் - எல்லா மனிதர்களையும் போல். ஆனால் அரசாங்கத்தின் அலட்சியத்தால், செயல் இன்மையால், அந்த மனிதர்களில் யாருக்கும் உயிர் இழப்பு ஏற்பட்டால் அவர்களின் சொந்தங்கள் மற்றும் பகுதி மக்கள் வீதிக்கு வருவார்கள், அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவார்கள். எதிர்க் கட்சிகள் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து அதைப் பெரிதாக்குவார்கள். அப்போது பொதுமக்கள் பலரும் அரசாங்கத்தை விரோதியாகப் பார்க்க ஆரம்பிப்பார்கள். ஆட்சி திணறும். அரசு நடத்தும் கட்சி அடுத்த தேர்தலில் ஓட்டுக்களை இழக்கும். இது ஒரு பக்கம்.

 

அடுத்த ஒரு பக்கம் இது. தமிழகத்தில் அரசாங்கம் டாஸ்மாக் கடைகளை நடத்தி மது விற்பனை செய்கிறது. அந்த மதுவில் உடனடியாக உயிர் பறிக்கும் விஷம் கலந்திருக்காது. ஆனால் கள்ளச் சாராயத்தில் அந்த உத்தரவாதம் இல்லை. கள்ளச் சாராயம் விற்பதும் வாங்குவதும் குடிப்பதும் குற்றம் என்று சட்டமே சொல்கிறது. விஷமான கள்ளச் சாராயத்தை சில மக்களே ரிஸ்க் எடுத்து வாங்கிக் குடித்து உயிர் இழந்தால், அதற்கு அரசாங்கம் எப்படிப் பொறுப்பாகும்? பாதிக்கப் பட்ட மக்களோ அவர்களின் குடும்பத்தவரோ இதில் அரசின் மீது என்ன பெரிய குற்றம் காண முடியும்? இப்படியான பேச்சு ஓரளவு வரை சரி.

 

கள்ளச் சாராயம் உட்கொண்டதால் இறந்தவர் குடும்பத்துக்கு அரசு உதவித்தொகை வழங்க விரும்பினால், அது ஒன்று அல்லது இரண்டு லட்சம் என்று சிறிதாக இருந்தால், அதைப் பொதுமக்கள் பச்சாதாபம் கொண்டு ஏற்கலாம். ஆனால் அதுவே பத்து லட்சம் என்றால் நிச்சயம் முகம் சுளிப்பார்கள்.   

 

பெருவாரியான மக்கள் இப்படித்தான் நினைப்பார்கள்:

 

‘ஒரு மனிதர் கள்ளச் சாராயம் குடித்து இறந்தார் என்றால், அவரது தீய பழக்கத்தால் அவர் இறந்தார் என்று அர்த்தம். இப்போது அரசாங்கம் அவர் குடும்பத்திற்குப் பத்து லட்ச ரூபாய் கொடுக்கிறது. நான் குடிப்பதில்லை. என் குடும்பத்திற்காக நான் உழைத்து சம்பாதித்து செலவு செய்கிறேன். எனக்கும் என் குடும்பத்திற்கும் பத்து லட்ச ரூபாய் இனாமாகக் கிடைத்தால், அந்தப் பெரிய தொகை என் குடும்பத்திற்கும் பயன்படும். என் வீட்டில் யாரும் இறக்கவில்லை, அவர் வீட்டில் ஒரு மனிதர் கள்ளச் சாராயம் குடித்துப் போய் விட்டார் என்பதெல்லாம் பத்து லட்சத்திற்கு ஒரு நியாயம் தராது. என் குடும்பத்திற்கும் அது போன்ற தொகை கிடைக்க வேண்டும் என்றால் நானும் கள்ளச் சாராயம் குடித்து மேலோகம் போக வேண்டுமா என்ன?’

 

கள்ளச் சாராயம் குடிக்காமல் டாஸ்மாக் மது மட்டும் குடிப்பவர்களின் எண்ணம் இப்படிப் போகும்: ‘என் மாதிரி டாஸ்மாக் சரக்கைக் குடிக்காமல், ஒருவன் கள்ளச் சாராயம் குடித்து இறந்தால் அதற்காக அந்த வீட்டுக்குப் பத்து லட்சமா?’

 

பொது மக்களின் இந்த மன நிலை திராவிட மாடல் அரசுக்குத் தெரிந்ததுதான்.  பின் எதற்காகப் பத்து லட்ச ரூபாயை அரசு இறந்தவர் குடும்பத்திற்கு அள்ளிக் கொடுக்கிறது?   விஷயம் இருக்கிறது.   

 

கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினர், தங்கள் கதியைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அது இப்படித்தானே இருக்கும்?

 

‘குடியைப் பெரிசா வளர்த்து விட்டது அரசாங்கம். அரசாங்கமே டாஸ்மாக் கடையும் நடத்துது. நிறையப் பேர் குடிச்சா அரசாங்கத்துக்கு வருமானம், அதுனால எல்லாரும் நல்லா குடிச்சுப் பழகட்டும், நல்லா பழகி நிறையா குடிக்கட்டும்னு அரசாங்கமே நினைக்குது.’  

 

‘ஒரு மனுஷனை குடிக்கு ஆசைப்பட வைச்ச அரசாங்கம், அவன் அரசாங்கக் கடைல மட்டும் தான் வாங்கிக் குடிக்கணும்னு நினைச்சா அது நடக்குமாய்யா?  குடி ஒரு போதை. அதுக்கு ஒருத்தன் பழகிட்டா, அந்த போதை எங்க சுளுவா கிடைக்குதோ, எந்நேரமும் எங்க கிடைக்குதோ, எந்த வியாபாரி சரக்குல கிக் அதிகம் கிடைக்குதோ, எங்க கம்மி ரேட்டுக்கு சரக்கு கிடைக்குதோ, அங்கதான போவான்?’

 

‘டாஸ்மாக்ல விலையும் ஜாஸ்தி. அப்படின்னா, போதைக்கு ஆசைப்பட்டு வர்றவன் என்ன நினைப்பான்?  ‘கள்ளச் சாராய விலைல வரி இல்லை. டாஸ்மாக் சரக்குல வரி இருக்கு. அதுனால நாம டாஸ்மாக் கடைக்கு போய் அதிக விலைல சரக்கு வாங்கி அரசாங்கத்துக்கு வரி குடுப்போம். அதுவும் போக, டாஸ்மாக் கடைல அரசு நிர்ணயிச்ச விலையை விட பாட்டிலுக்கு பத்து இருபது அதிகம் கேட்டாலும் சிரிச்சுக்கிட்டே குடுப்போம்’னு நினைப்பானா?’

 

‘ஒருத்தனுக்கு திருடக் கத்துக் குடுத்துட்டு, ‘நான் சொல்ற இடத்துல மட்டும்தான் நீ திருடணும்’னு சொன்னா, திருட்டை கத்துக்கிட்டவன் கேப்பானா?’

 

‘எங்களுக்கு போதையக் கத்துக் குடுத்து, அது எங்க உடம்புக்கு தினம் வேணும்னு அரசாங்கமே பண்ணி வச்சுருக்கு. அதுனால இப்ப என்ன நடக்குது?  அரசாங்கத்துக்குப் போட்டியா கள்ளச் சாராயம் விக்குது – அதுனால அரசாங்கத்துக்கு வரியும் கிடைக்கறதில்லை – கள்ளச் சாராயத்துல திடீர்னு விஷமும் கலந்து வருது – அது எங்க உயிரையும் எடுக்குது. அப்படின்னா, இவ்வளவு கேடு பண்ற கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்தாத நீ என்ன அரசாங்கம் நடத்தற, எதுக்கு நடத்தற?’

 

‘இப்ப சாவு நடந்த உடனே, கள்ளச் சாராயம் காய்ச்சறவன், விக்கறவன்னு, ஆயிரத்து ஐநூறு பேருக்கு மேல கைது பண்ணி வழக்கு பதிவு பண்ணிருக்கு அரசாங்கம். இத்தனை நாள் அவுங்களை எப்படி விட்டு வச்சீங்க? உங்க எல்லாருக்கும் என்னமோ நல்லா நடக்குதுல்ல? கள்ளச் சாராய வியாபாரிக்கு வருமானம், போலீசுக்கும் அதிகாரிங்களுக்கும் துட்டு, எங்களுக்கு சாவா? தூ!’

         

கள்ளச் சாராயத்தால் இறந்தவர்களின் குடும்பத்தினர் இப்படித்தான் நினைப்பார்கள், அதில் நடைமுறை நியாயமும் உண்டு. அதற்கு அரசாங்கம் சட்ட ரீதியான  பதிலை எளிதில் உதிர்த்துவிட்டுப் போக முடியாது. இது அரசாங்கம் நடத்துபவர்களுக்கே தெரியும். அதனால் ஆளும் கட்சியான திமுக, இப்படி நினைத்தால் ஆச்சரியம் இல்லை.

 

‘உயிரிழப்பால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு, ஒரு பெரிய தொகையை நிவாரணம் என்ற பேரில் அரசு வழங்குவதுதான், அவர்களின் நியாயமான குமுறலைப் பெரிதாக மூடி வைக்கும். பணம் பத்தும் செய்யும். ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்பதெல்லாம் போதாது. பெரிய தொகையாக ஒரு பத்து லட்சத்தை அரசே கொடுக்கட்டும். அதிகப் பணம் வாங்கினால், போக்கில்லாத அந்த ஏழைகள் நன்றி உணர்ச்சியில் வாய் மூடி இருப்பார்கள். அவர்களுக்கு அரசின் மேல் குற்றம் குறை இல்லை என்பது மாதிரி ஆகும்.  தப்பித்தோம்.’

 

இதுதானே பத்து லட்சத்தின் பின்னணியாக இருக்கும்? 

 

      நீங்கள் அப்பாவியாகக் கேட்கலாம்: “அரசாங்கம் பத்து லட்ச ரூபாய் அள்ளிக் குடுப்பது அநியாயம் என்று பொது மக்கள் நிறையப் பேர் நினைப்பது உண்மையானால், அவர்கள் அடுத்த தேர்தலில் இப்படி அநியாயம் செய்த கட்சிக்கு எதிராக ஓட்டுப் போடுவார்களே?”

 

இதையெல்லாம் எப்படி சமாளிப்பது என்று ஒரு திராவிடக் கட்சிக்கு, அதுவும் திராவிட மாடல் அரசு நடத்தும் கட்சிக்கு, தெரியாதா என்ன?

 

தமிழகத்தில் எல்லா சாதாரண மனிதர்களையும் பலவித பலன்களுக்காக அரசாங்கத்தைப் பார்த்து நிற்கும் பிச்சைக்காரர்களாக ஆக்கிவிட்டன திராவிடக் கட்சிகள். சில பிச்சைக்காரர்களுக்கு சில இடங்களில் அதிகம் கிடைத்தால், குறைவாகக் கிடைத்த மற்ற பிச்சைக்காரர்களுக்கு அந்த நேரத்தில் வருத்தமும் கோபமும் இருக்கும். ஆனால் பிச்சை போடும் அதே மனிதர், நமக்கு என்று அடுத்த முறை எதைக் குடுத்தாலும், அவர் மீதான நமது பழைய வருத்தங்கள் மறைந்து விடும். அதுவும் தேர்தல் நேரத்தில், எல்லாப் பிச்சைக்காரர்களுக்கும் வஞ்சனை இல்லாமல் சமமாகக் கிடைப்பதால், தர்மவான்கள் மீது பிச்சைக்காரர்கள் கொண்டிருந்த பழைய வருத்தம், கோபம் எல்லாம் மறந்து போகுமே? அதற்கு ஏற்ப தேர்தல் காலத்தில் கொடுப்பவர்களும் அள்ளிக் கொடுப்பார்களே?  

 

ஆக, கடைசியில் எல்லாம் சரியாகிவிடும் அல்லவா?

 

* * * * *

Author: R. Veera Raghavan