Saturday 8 May 2021

திமுக வெற்றி. அதிமுக கூட்டணி ஜெயித்திருக்குமா?

 ஆர்.வி.ஆர் 


சட்டசபைத் தேர்தலில் வென்று நேற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறது திமுக. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். சம்பிரதாயத்தை  முடித்துவிட்டு சாராம்சத்திற்கு வரலாம்.

 

தேர்தல் ஆட்டம் வினோதமானது. அதற்கான நடைமுறை விதிகளைத் தேர்தல் களம் நிர்ணயம் செய்கிறது. காலத்திற்கு ஏற்ப அந்தக் களம் மாறவும் செய்யும். அதைப் புரிந்து கொள்ளாதவர்கள், அதற்கேற்றவாறு ஆடாதவர்கள், தங்கள் வெற்றி வாய்ப்பைக் குறைத்துக் கொள்வார்கள். அந்தத் தவறை அதிமுக-வின் முதல் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி செய்துவிட்டார்.    

 

இ.பி.எஸ் தன்னிடம் உள்ள மக்கள் செல்வாக்கை, தனது சக்தியை, பெரிதாகக் கற்பனை செய்துகொண்டார். அதுவும் அதிமுக-வின் கூடுதல் வெற்றியை இந்தத் தேர்தலில் பாதித்தது.  இதை சரியாகப் புரிந்து கொள்ள, பொதுவாகத்  தலைவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு பழனிசாமியைக்  கவனிக்க வேண்டும்.    

 

ஒரு அரசியல் தலைவர் எத்தகைய  குணங்களால் மக்களிடம் செல்வாக்குப் பெற முடியும், அதன் மூலம் அதிக ஓட்டுக்கள் வாங்க முடியும்,  என்பதை ஒரு இலக்கணமாக விளக்க முடியாது. அரசாங்க கஜானாவிலிருந்து இலவசங்கள் விநியோகிப்பது, சிறுபான்மை மக்களைப் பாரபட்சமாக தாஜா செய்வது, எதிர்க்கட்சி ஆட்களுக்கு வலை வீசுவது என்ற சில்லறை டெக்னிக்குகள் வேறு.  அவற்றை ஒதுக்கி வைத்து, சில தலைவர்களின் மக்கள் செல்வாக்கு எதனால் வளர்ந்தது என்று மேலோட்டமாகப் பார்க்கலாம்.   

 

திமுக-வின் கலைஞர் கருணாநிதிக்குத் தலைமை அடையாளங்கள் நிறைய இருந்தன. மக்களிடமும் கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்களிடமும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். சிறந்த பேச்சாளர். நல்ல எழுத்தாளர். அயராத உழைப்பாளி. அரசியல் யுக்தியும் குயுக்தியும் அவருக்குக் கைவந்த கலைகள்.

 

ஸ்டாலின் ஒரு ரகமானவர். அவருக்குக் கிடைத்த தலைவர் பொறுப்பும் பதவியும் அப்பா கருணாநிதி பாசத்துடன் விட்டுச் சென்ற சொத்து. இந்தச் சொத்து எளிதில் கரையாத அளவிற்குப் பரந்து விரிந்தது.   

 

எம்.ஜி.ஆர் விசேஷமானவர். அநேக மக்கள் அவரை ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’யாகக் கருதினார்கள்.  அது ஒன்று போதும், அவர் மக்களிடையே அசைக்க முடியாத தலைவராக நிலைக்க. முதல் அமைச்சராகி அவர் என்ன செய்வார், அல்லது செய்தார், என்றெல்லாம் மக்களுக்குக் பெரிய கவலை இல்லை.

 

  எம்.ஜி.ஆரால் முன்நிறுத்தப் பட்டவர் ஜெயலலிதா. அதோடு, ஜெயலலிதாவிடம்    தலைமைக் குணங்கள் நிச்சயமாக இருந்தன. தைரியத்தை முகத்தில் தாங்கி இருந்தார். முடிவுகளைத் தீர்மானமாக எடுத்தார். சொடுக்குவதற்குக் கையில் அதிகாரச் சாட்டையை எப்போதும் வைத்திருந்தார்.

 

கருணாநிதி மற்றும் ஜெலலிதாவின் தனிமனித குணங்கள் வேறு பட்டாலும், அவர்கள் வலுவான (strong) தலைவர்களாக இருந்தார்கள். இருவருமே  வலுவை, பலத்தை எளிதில் சுவீகரிப்பவர்கள், பிரயோகிப்பவர்கள். இது அவர்களின் முக்கிய குணாதிசயம்.

 

இந்தியாவில் சாதாரண மக்கள் ஒரு வலுவான தலைவரை  நம்பி அவர் பின்னால் நிற்கிறார்கள்.  அவர் நல்லவரா, நேர்மையானவரா, கெட்டிக்காரரா என்பது மக்களுக்கு  இரண்டாம் பட்சம்தான் – அல்லது பொருட்டே இல்லை.  கருணாநிதியும் ஜெயலலிதாவும் பிரதானமாக அந்த வகையில் மக்களைத் தொடர்ந்து ஈர்த்தார்கள், ஓட்டு வாங்கினார்கள்.

 

காமராஜ், இந்திரா காந்தி, லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி ஆகியோரும் மக்களுக்கு வலுவான தலைவர்களாகத் தென்பட்டார்கள் அல்லது தெரிகிறார்கள். நரேந்திர மோடியும் அப்படியான தலைவர். இந்த மனிதர்களில்  சிலர் நேர்மையும் அர்ப்பணிப்பும் நிர்வாகத்  திறமையும் நிறைந்தவர்கள், மற்றவர்களிடம் அந்தப் பண்புகளைத் தேட வேண்டும்.    

 

வளர்ந்த ஜனநாயக நாடுகளில்தான் ஒரு வலுவான தலைவர் நேரானவராகவும் இருப்பதை மக்கள் விரும்புவார்கள். இந்தியாவில் அப்படி அல்ல.  வலுவான தலைவர்கள் நம்மைப் பிழைக்கவிட்டால் போதும் என்ற திருப்தியுடன் வாழ வேண்டியவர்கள் நமது பெருவாரியான மக்கள்.   

 

சரி, எடப்பாடி பழனிசாமி என்ன தப்புக் கணக்கு போட்டார், அது இந்தத் தேர்தலில் அதிமுக-வை எப்படி பாதித்தது?

 

பழனிசாமியைத் தனது வாரிசாக ஜெயலலிதா எப்போதும் சுட்டிக் காட்டியதில்லை. மக்களும் இ.பி.எஸ்-ஸை அப்படிப் பார்க்கவில்லை. ஆனால் சசிகலாவின் நிலை வேறு. ஜெயலலிதா அவரைத் தன் வீட்டில் ஒருவராக, தனக்கு மிக நெருக்கமாக வைத்திருந்தார். சசிகலாவைத் தனது ‘உடன் பிறவா சகோதரி’ என்றும் அழைத்தார். கட்சியின் மற்ற தலைவர்களுக்கு சசிகலா ‘சின்னம்மா’வாக இருந்தார். சசிகலாவுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில், பத்தில் ஒரு பங்கு கூட ஜெயலலிதா தனது கட்சித் தலைவர்கள்  யாருக்கும் தரவில்லை.  இது பகிரங்கம்.  

 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து வைத்திருந்தார் என்று ஜெயலலிதாவின் மீது வந்த வழக்கில் சசிகலாவும் ஒரு எதிரியாக – அக்யூஸ்டாக – இருந்தார்.  ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பிற்காக அவரோடு கூட்டு சதி செய்தார், அவருக்கு உடந்தையாக இருந்தார் என்பது சசிகலா மீதான வழக்கு. இதில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சொல்வதற்கு முன்பாக  ஜெயலலிதா மறைந்ததால், அவர் மீதான வழக்கு ஓய்ந்து போனது. சசிகலாவின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகி அவர் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, இந்தத் தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் முன்னர் விடுதலை ஆனார்.  

 

டிசம்பர் 2016-ல், முதல் அமைச்சராக இருந்தபோதே ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் இடத்தில் ஒரு புதிய முதல் அமைச்சரை அதிமுக தேர்வு செய்ய வேண்டி இருந்தது. அடுத்த இரண்டு மாதங்கள் சென்றபின் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வெளிவந்து சசிகலா குற்றவாளி என்று உறுதியானது. உடனே அதிமுக எம்.எல்.ஏக்கள் சசிகலாவின் சிபாரிசை ஏற்று, அவர் கைகாட்டிய எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வராக ஆதரவு அளித்தனர்.  இ.பி.எஸ். அப்படித்தான் அதிமுக ஆட்சியின் புதிய முதல்வராக வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகப் பதவி வகித்தார்.  

 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக தொண்டர்களும் ஆதரவாளர்களும் யாரைக் கட்சியில் பிரதானமாக நினைப்பார்கள்? சசிகலாவைத்தான் – அவர் சிறைத் தண்டனை பெற்றாலும். 


ஒன்றை எண்ணிப் பாருங்கள். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வந்த நாளில் ஜெயலலிதா உயிருடன் இருந்தால், அவரும் தண்டிக்கப்பட்டு சிறை சென்றிருப்பார். அப்படி நடந்து அவர் தண்டனைக் காலம் முடிந்து வெளி வந்தால், மற்ற அதிமுக நிர்வாகிகள் அவரைத் தள்ளிவைத்துக் கட்சி நடத்துவார்களா? அவரே தலைவராகத் தொடர்ந்தால், அவர்தான் சக-குற்றவாளி சசிகலாவை ஒதுக்கி வைத்திருப்பாரா? இரண்டும் நடந்திருக்காது. ஜெயலலிதா அம்மாவாக, சசிகலா சின்னம்மாவாக, தொடர்வார்கள்.

 

இதையும் நினைத்துப் பாருங்கள்.  திமுக தலைவர் ஸ்டாலின் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று வழக்கு வந்து, அவருக்குக் கோர்ட் தண்டனையும் கிடைத்துப் பின்னர் வெளி வந்தார், அதை ஒட்டி அவர் தேர்தலில் போட்டி இடுவதற்கான தடைக் காலமும் முடிந்துவிட்டது என்று கற்பனையான ஒரு காட்சியை எண்ணிப் பாருங்கள். அப்படி என்றால் கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் திமுக-வில் தலைவர் பதவிக்கு வந்திருக்க மாட்டாரா? இந்தத் தேர்தலிலில் அவர் திமுக-வின் முதல் அமைச்சர் வேட்பாளர் ஆகாமல் இருப்பாரா? திமுக ஆதரவாளர்கள் அந்தக் கட்சிக்கு அளிக்கும் ஆதரவைக் குறைத்துக் கொள்வார்களா? அப்படி ஒன்றுமே நடக்காது. இந்தத் தேர்தல் மூலமாக – இப்போது நிஜத்தில் நடந்திருப்பது போல் – அந்தக் கற்பனை சம்பவத்திற்குப் பின்னரும் ஸ்டாலினே தமிழகத்தின் முதல் அமைச்சர் ஆகி இருப்பார். உண்மையா இல்லையா? ஸ்டாலினுக்கு அது சாத்தியம் என்றால், சசிகலாவும் தனது பழைய செல்வாக்கை – அது எந்த அளவானாலும் – ஏன் கட்சியினரிடமும் மக்களிடமும் தக்க வைக்க முடியாது?  

 

அதிமுக-வின் இந்தப் பின்னணி, சென்ற மாத வாக்கெடுப்பின் போது தமிழக தேர்தல் களத்தின் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. அதோடு, எடப்படி பழனிசாமி வலுவானவரா, சசிகலா வலுவானவரா என்று பார்த்தால், சசிகலாதான் அதில் பெயர் வாங்குவார் என்பது வெளிப்படை. கட்சியில் செல்வாக்கு, மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளவர் சசிகலா.    

 

இந்தத் தேர்தலில் போட்டியிட சசிகலாவிற்கு சட்டத் தடை இருந்தாலும், அவர் அதிமுக-வின் புதிய முகமாக முன் நிறுத்தப்பட்டிருந்தால், அதிமுக-விற்கு சில நன்மைகள் கிடைத்திருக்கும். சசிகலா சிறை சென்ற பிறகு, அவரது அக்கா மகனும் ஆதரவாளருமான டி.டி.வி. தினகரன் துவங்கிய  அமமுக என்ற அரசியல் கட்சி அதிமுக-வோடு ஐக்கியம் ஆகி இருக்கும், அமமுக இந்தத் தேர்தலில் தனியாகப் போட்டி இட்டிருக்காது, அதிமுக கூட்டணியின் வெற்றியும் ஏறி இருக்கும். அமமுக என்ற போட்டிக் கட்சி தனித்து இயங்காமல் சசிகலாவும் அதிமுக-விற்குத் தலைமை ஏற்றால், அந்த அதிமுக-வின் கூட்டு-பலம் பெரிதாக இருக்கும். அத்தகைய அதிமுக, இப்போதைய அதிமுக மற்றும் அமமுக கட்சிகளின் சிதறிய தனிச் சக்திகளை விட இன்னும் வலுவாகச் செயல் பட்டிருக்கும்.   

 

நடந்த தேர்தலில் கூட, இருபது தொகுதிகளில் அமமுக பெற்ற வாக்குகள் மட்டுமே அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்விக்கு நேரடிக் காரணங்கள் (பார்க்க, தினமலர் 4.5.2021). சசிகலா தலைமை தாங்கிய அதிமுக களத்தில் இருந்தால், இந்த இருபது தொகுதிகள் அதிமுக கூட்டணிக்குக் கிடைத்து, ஒன்றுபட்ட பலத்தில்  இன்னும் சில தொகுதிகளிலும் அந்தக் கூட்டணி ஜெயித்திருக்க வாய்ப்புகள் நிச்சயமாக உண்டு.  இது நடக்காமல் போக முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி.

 

சசிகலாவைக் கட்சியில் இருந்து தள்ளி வைத்தால்,  தன் தலைமையில் அதிமுக கூட்டணி இந்தத் தேர்தலில் வெற்றியும் பெற்றால், சசிகலாவின் தயவு இல்லாமல் தானே அடுத்த ஐந்தாண்டுகளும் தொடர்ந்து முதல் அமைச்சராக இருக்கலாம் என்ற தனிப்பட்ட ஆசை பழனிசாமியின் கண்ணை மறைத்துவிட்டது. அதனால் சசிகலா சிறை சென்ற பிறகு அவரைக் கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்து, தனது கனவுக் கோட்டையைக் கட்ட ஆரம்பித்தார் இ.பி.எஸ்.  நாளைக்குக் கட்சியில் யாருக்கு என்ன கிடைக்கும் என்று தெரியாத கட்சித் தலைவர்கள் பலருக்கும், பழனிசாமிக்குத்  துணை போவது தற்போதைய உடனடி ஆதாயமாகத் தோன்றியது. துணை முதல் அமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வமும் அதில் ஒருவராக இருப்பார்.  பழனிசாமியுடன் சேர்ந்தால், தோதான சந்தர்ப்பத்தில் அவரைத் தள்ளிவிட்டுத் தான் சில காலமாவது மீண்டும் முதல்வர் ஆகலாம் என்ற நப்பாசை அவருக்கு இருந்தால் ஆச்சரியம் இல்லை.  

 

இ.பி.எஸ்-ஸும் ஒ.பி.எஸ்-ஸும் தேர்தலுக்கு முன் சசிகலாவின் அரசியல் சக்தியை அங்கீகரித்து, அவரை முன்நிலைப்படுத்தி, தங்கள் பதவி ஆசைகளை அடக்கி   வைத்திருந்தால் அதிமுக கூட்டணி அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி இருக்கும்.  

 

தமிழகத்தின் 234 சட்டசபைத் தொகுதிகளில்  இப்போது திமுக கூட்டணி வென்ற இடங்கள் 159. அதிமுக கூட்டணிக்குக் கிடைத்த எண்ணிக்கை 75. டி.டி.வி தினகரன் கட்சி போட்டியிட்டதால் பறிபோன 20 இடங்களைச் சேர்த்தால், சசிகலா தலைமை தாங்கும் அதிமுக கூட்டணிக்கு 95 இடங்கள் நிச்சயம் உண்டு. அதுவும் மெஜாரிட்டியை எட்டாது. சசிகலாவின் தலைமை, அதிமுக கூட்டணிக்கு இன்னும் அதிக ஓட்டுக்களை ஈர்த்தாலும், அந்தக் கூட்டணி சட்டசபையில் பெரும்பான்மை பெற்றிருக்குமா என்பது தெரியாது.  ஆனால் நல்லதை விரும்பி அதற்கு ஏற்றவாறு செயல்பட்டால்தான்  அது நடைந்தேற வாய்ப்பும் அமையும்.   

 

ஒரு கேள்வி வரும். ஜெயலலிதாவின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் சசிகலா. அப்படியானவர் தலைமையில் அதிமுக ஜெயித்து ஆட்சிக்கு வருவது நல்லதா? ஒரு பொறுப்புள்ள குடிமகன் அதை விரும்பலாமா?  நான் அமெரிக்கா  அல்லது இங்கிலாந்து வாக்காளராக இருந்துவிட்டால் அந்த நாட்டில் நிலவும்  அரசியல் நல்லொழுக்கத்தை மனதில் வைத்து, இது போன்ற கேள்விக்குச் சொல்லும் பதில் வேறாக இருக்கும்.   நான் இந்திய வாக்காளர், அதுவும் செந்தமிழ் நாட்டின் வாக்காளர். நான் இந்தப் பரிதாபமான நிலையில் இருந்துதான் பதில் சொல்ல முடியும்.  

 

ஜலதோஷம் பிடித்து சங்கடப்பட வேண்டும் அல்லது டைஃபாய்ட் காய்ச்சல் வந்து படுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் தமிழக வாக்காளர்களுக்கு விதிக்கப்பட்டால், நான்  ஜலதோஷத்தை ஆனந்தமாகத் தழுவுவது என்ன தவறு? டைஃபாய்ட் காய்ச்சலைத் தவிர்ப்பதுதானே எனது ஒரே குறியாக இருக்க முடியும்? அதுவும் டைஃபாய்டின் வீரியம் சமீப காலமாக எகிறும்போது? அது போக, ஜலதோஷத்தை சிறிதாவது மட்டுப்படுத்தும் ஒரு காவிக்கலர் மாத்திரையும் இப்போது  சேர்ந்து கிடைத்தால் இன்னும் நல்லதாயிற்றே?  

 

* * * * * 

Copyright © R. Veera Raghavan 2021

9 comments:

  1. Well balanced article, Sir. Agreeing with your insight. Former CM JJ should have set her successor ahead. People were willing to accept OPS at the beginning, (during the mouna viradham at amma samadhi) then EPS came in to power. Even the partymen were confused till the last day.. Every poster had both their photographs. Every occasion had both of them doing their honours.. If inauguration by EPS then closing by OPS or some other agenda. This time out and sitting in assembly as opposition party, they can bring about some constructive change or they can also choose destructive politics by not standing united. Time only can answer. Hope ADMK still survive in one piece for the next assembly election.

    ReplyDelete
  2. ஆர்.வி. யின் அரசியல் அலசல் சரியாகவே படுகிறது. சில நெருடல்கள் (ஆர்.வி. சொன்னதுபோல, இந்திய, குறிப்பாக தமிழ்நாடு சூழ்நிலையில்).
    - மக்கள் மத்தியில் சசிகலாவுக்கு, ஜெயலலிதாவைத் தப்பாக வழி நடத்தியவர்; ஜெயலலிதாவைக் கொன்றவர்; கட்சியை தன் குடும்பச் சொத்தாக மாற்றியவர் எங்கிற பல அவப்பெயர்கள் உண்டு. அந்த கோணத்தில் பார்த்தால், அவரை முன்னிறுத்தியிருந்தால் அவர் கட்சிக்கு பாரமாக இருந்திருப்பாரா அல்லது அதைத்தாண்டி அவர் மக்களை ஈர்த்திருப்பாரா? முதலாம் வாய்ப்பு தான் அதிகம் என்று கணக்கிட்டுத்தான் ஒபிஎஸ் இபிஎஸ் இரண்டு பேரும் அந்த ஆபத்தை தவிர்த்தார்கள் என்று கருதுகிறேன்.

    ReplyDelete
  3. In the analysis , you have not considered the contribution of other parties in the ADMK alliance impacting their decision to go for election without sasikala. I dont think EPS and OPS could have decided oon their own to dump sasikala even if they wanted to in their own interest . Because the huge wealth supposed to have been with Sasikala camp .Officially also they are entitled to keep the wealth after deposit of the penalty and tax applicable. Only Gurumurthy has written on the above lines before the election .

    ReplyDelete
  4. Excellent analysis sir..
    Best wishes

    ReplyDelete
  5. Good Imagination. Not able to digest the practicality. Some mandate has come. wait at least for six months.

    ReplyDelete
  6. After defeat, not avoidable the reasoning. If sasi leads sarath and dmdk may join allaince. Seeman indirectly supported to sasi also.

    But loosing seats around 40 to 50 seats

    ReplyDelete
  7. தராசு தட்டுகளில் வைத்து சீர் தூக்கிய கட்டுரை. ஒரு கட்டத்தில் நானும் சசிகலா ஏன் ஒத்துக்கப்பட்டார் என்று நினைத்ததுண்டு. அதிமுக தோல்வியில் தினாகரனுக்கு முக்கிய பங்கு உண்டு

    ReplyDelete
  8. இதை நான் மறுக்கிறேன். ஏனென்றால், சசிகலா என்றுமே நிழலுலக தாதா வாகவே தன்னை(தன் குடும்பத்தினரை) வளர்த்து வந்தார்.குடும்பமே இல்லாத ஜெயலலிதாவை வசியப்படுத்தி எல்லாவித ஊழல் மற்றும் பித்தலாட்டங்கள் செய்தவர்.. ஜெயலலிதா மர்ம மரணத்திற்கு உடந்தையாக இருந்ததால் சசிகலாவை வில்லியாகவே பொதுமக்கள் நினைத்து பார்க்கின்றனர்.

    ReplyDelete
  9. ஊழலை முன்னிறுத்தி வெற்றி பெறுவதைவிட தனியே போராடி தோல்வியை சந்தித்தாலும் கெளரமாக இருக்கும் என்று எடப்பாடியார் நினைத்திருக்க வாய்ப்பு அதிகம். அதிலும் கொங்கு வேளாளர்களுக்கே உரிய தன்னம்பிக்கை அவரிடம் இருந்தது.கெளரவமான தோல்விதான்.இப்போது தான்தான் எதிர்கட்சி தலைவராக வரவேண்டும் என்பதை சாதித்து விட்டார்.ஓபிஸ்சிடம் போராட்டகுணம் குறைவு.அம்மாவை பணிந்து பணிந்து அந்த குணம் வந்துவிட்டது.

    ReplyDelete