Wednesday, 19 May 2021

ஹிந்துக்களுக்கு, சத்குரு ஜக்கி வாசுதேவ். திமுக-விற்கு, பழனிவேல் தியாகராஜன்

          ஆர்.வி. ஆர்

 

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை போட்டோவில் பார்த்திருக்கிறீர்களா? நெற்றியில் விபூதி குங்குமத்துடன் இருப்பார். அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘எம்.ஐ.டி. ஸ்லோன்  ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்’டில் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர். இப்போது  திமுக-வின் தமிழக அமைச்சரவையில் நிதி மந்திரி.

 

விபூதி குங்குமம் அணிவதால் ஒருவருக்குப் பேச்சில் நிதானம் இருக்கும் என்பது அவசியமா? இல்லை. அமெரிக்காவின் சிறந்த நிர்வாகப் பள்ளியில் எம்.பி.ஏ படித்ததால் அவரது கருத்தில் நேர் சிந்தனை வெளிப்படுமா, அவர் இன்னொருவரை விமரிசனம் செய்யும் வார்த்தைகளில் பண்பு தெரியுமா? அதுவும் நிச்சயம் இல்லை. ‘ஹிந்து’ பத்திரிகைக்கு அளித்த ஒரு  பேட்டியின் மூலம் இதைப் பழனிவேல் தியாகராஜன் நிரூபிக்கிறார் (‘தி ஹிந்து’, 15.5.2021).  அந்தப் பேட்டியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பற்றியும் அவரது புது இயக்கத்தின் கோரிக்கை பற்றியும் தியாகராஜன் பொரிகிறார்.

 

‘தமிழகக் கோவில்களை விடுவியுங்கள்’ என்ற அறைகூவலுடன் ஒரு புது இயக்கத்திற்குத் தலைமை தாங்குபவர்  சத்குரு ஜக்கி வாசுதேவ். இதன் பின்னணியும் சாராம்சமும் இதுதான். தமிழகத்தில் பொதுக் கோவில்களைப் பொறுத்தவரை, அவற்றின் நிர்வாகமும் சொத்துக்கள்-பராமரிப்பும் பெருமளவு மாநில அரசின் கையில் இருக்கின்றன. இதில் கண்கூடாகத் தெரிவது அரசின் அலட்சியமும் ஆதிக்கமும். எளிதில் தெரியாதது என்னவெல்லாமோ. இதனால் கோவில்களுக்கும் ஹிந்துக்களுக்கும் லாபம் இல்லை, நஷ்டம்தான்.

 

பராமரிப்பு இல்லாமல் அவலத்தில் நிற்கும் புராதனக் கோவில்கள், நித்திய பூஜைகளுக்கான நிதிகூட இல்லாமல் திணறும் கோவில்கள் ஏராளம். அதனால் சத்குருவின் தலைமையில் வலுப்படுகின்ற கூக்குரல் என்னவென்றால், ‘தமிழக ஹிந்துக் கோவில்களின் சீரழிவைத் தடுக்க, அவற்றை அரசின் நிர்வாகப் பிடியிலிருந்து விடுவித்து ஹிந்துக்களே, ஹிந்து பக்தர்களே, நிர்வாகம் செய்து கொள்ளட்டும்.’  

 

சத்குரு வெளிப்படுத்தும் மனத்தாங்கலும் கோரிக்கையும் யாருக்குப் புரியும், யாருக்குப் புத்துணர்ச்சி தரும்? ஹிந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவர்கள், அரசின் நிர்வாகத்தால் கோவில்களுக்கும் அவற்றின் சொத்துக்களுக்கும் வருமானத்திற்கும் பாதுகாப்பில்லை, இழப்புதான் மிஞ்சும், என்று உணரும் ஹிந்துக்கள், இதற்கு விமோசனம் கிடைக்காதா என்று ஏங்கும் ஹிந்துக்கள். இந்த மனிதர்கள்தான் சத்குருவின் பின்னால் பெருமையுடன் நிற்பார்கள். ஹிந்துவாக இருப்பதால் மட்டும், தியாகராஜன் போன்றவர்களுக்கு இதில் ஆர்வமும் ஆதங்கமும் இருக்காது. அதுவும், ஹிந்துக்களை பகிரங்கமாக அலட்சியம் செய்யும் திமுக மந்திரி சபையில் இருக்கும் அவருக்கு நிச்சயம் இருக்காது. சரி, அவர் பிழைப்பை அவர் பார்க்கட்டும்.  

 

சத்குருவைப் பற்றி, அவர் எழுப்பிய அறைகூவல் பற்றி, பழனிவேல் தியாகராஜன் ‘ஹிந்து’ பேட்டியில் என்ன சொன்னார், அதில் என்ன நியாயம் இருக்கிறது? அவர் பேசியது: “அரசிடமிருந்து கோவில்களை விடுவிக்கக் கோருவது நான்சென்ஸ்! அந்தக் கோரிக்கையை முன்வைக்கும் ஜக்கி வாசுதேவ், விளம்பரம் தேடும் வேட்டை நாய். இன்னும் பணம் சேர்க்க புது வழியைத் தேடுகிறார் அவர். கடவுளின் மீது நாட்டம் கொண்ட சாமியாராக இருந்தால், சிவராத்திரி விழாவிற்காக ஐந்து லட்சம், ஐம்பதாயிரம், ஐந்தாயிரம் என்று டிக்கெட் போட்டு விற்பாரா அவர்? கடவுளையும் மதத்தையும் வைத்து நாடகமாடிப் பலன் தேடும் வியாபாரி அவர்.”    

 

பிறகு விஷயத்துக்கு வந்த அமைச்சர், கோவில்களை அரசிடமிருந்து விடுவிக்க முடியாது என்ற கருத்தில் கேட்ட எதிர்க் கேள்விகள் இவை: “கோவில்களைக் கட்டியது மன்னர்களும் பேரரசர்களும். இன்று அவைகள் யாருக்கு  சொந்தம்? அவைகளை இப்போது பக்தர்களிடம் கொடுக்கச் சொன்னால், சரியோ தப்போ அது ஒருபுறம் இருக்கட்டும். எந்த பக்தரிடம் கோவிலைக் கொடுப்பது? ஒரு கமிட்டியிடம் கொடுங்கள் என்றால், யார் அந்தக் கமிட்டியை அமைப்பது? அந்தக் கமிட்டி உறுப்பினர்களின் தகுதியை யார் நிர்ணயிப்பது? அந்த உறுப்பினர்கள் உள்ளூர்வாசிகளாக இருப்பார்களா  அல்லது வெளியூரிலும் இருக்கலாமா? அந்த பக்தர்களின் அமைப்பு பதிவு செய்யப்படுமா? அது ஒரு டிரஸ்டாக இருக்குமா, சொஸைட்டியாக செயல்படுமா? அதை யார் தணிக்கை செய்வார்கள்?”   

 

ஹிந்துக்களின் கோரிக்கையை ஏற்கக் கூடாது, அதுவும் ஒரு திமுக அரசானது கோவில் நிர்வாகம் பற்றிய ஹிந்துக்களின் வேட்கையைப் பூர்த்தி செய்வது முரண்பாடானது, என்ற உணர்வில் தியாகராஜன் பேசி இருக்கிறார். அமெரிக்காவின் முன்னணி நிர்வாகப் பள்ளியில் எம்.பி.ஏ படித்த ஒருவர், நல்லெண்ணமும் நேர் சிந்தனையும் கொண்டிருந்தால் வெட்டியாக இப்படிக் கேள்விகள் மட்டும் கேட்காமல் விடைகளையும் தேடுவார். இருபது வருடங்கள் அவர் கழித்த அமெரிக்காவில் பெரிய பெரிய ஹிந்துக் கோவில்கள் அரசாங்கத்தின் துணையில்லாமல் ஹிந்துக்களால் நிர்வாகம் செய்யப் படுகின்றன – அங்கிருந்தும்  அவர் பார்க்க ஆரம்பிக்கலாம்.   

 

ஒரு மக்களின் அபிலாஷைகள் என்ன, அவற்றின் முக்கியத்துவம் என்ன என்று புரியாமல், தியாகராஜன் முன்வைத்த கேள்விகளை மட்டும் கேட்டபடி தீர்வை யோசிக்காமல் இருந்தால், இன்னும் சிக்கலான விஷயங்களில் கூட மக்கள் பிரச்சனைகள் அப்படியே நிலைத்திருக்கும். இந்தியா உதவ, பங்களா தேஷ் பிறந்திருக்காது. கிழக்கு ஜெர்மெனியும் மேற்கு ஜெர்மெனியும் இணைந்து ஒரே நாடாக ஆகி இருக்காது.

 

தியாகராஜன் கேட்ட கேள்விகளை யோசிக்காமல், தொடர்புடைய அதிகமான விஷயங்களையும் கவனிக்காமல், ஹிந்துக் கோவில்களைத் தமிழக அரசின் நிர்வாகத்திலிருந்து விடுவித்து வீதியில் போட்டுவிட முடியாது – எந்தச் சட்டமும் அதைச் செய்யாது. ஆனால் ஹிந்து மக்களின் மத உணர்வுகளை அனுதாபத்துடன் அணுகினால், நல்லெண்ணத்துடன் ஆராய்ந்தால், இந்தப் பிரச்சனையைத் தீர்க்க மாற்று அமைப்புகளை உருவாக்க முடியும், அதற்கான சட்டத்தையும் இயற்ற முடியும்.

 

இந்திய மண்ணில் ஹிந்து மன்னர்கள் வைத்திருந்த ராஜ்ஜியங்கள் முகலாய அரசர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் மாறின. இப்போது மக்களாட்சிக்கு வந்துவிட்டன. அதுபோல, மன்னர்கள் கட்டிய கோவில்களில் அரசின் நேரடித் தலையீடில்லாமல் ஒரு மாற்று அமைப்பு நிர்வாகம் செய்ய வழி செய்யலாம். பழையதோ புதியதோ, எந்த அமைப்பிலும் ஒன்றிரண்டு குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதையும் தாண்டி ஒரு அமைப்பு பயனாளிகளுக்குப் பரவலாக உதவவேண்டும், திருப்தி அளிக்கவேண்டும். சத்குரு கேட்கும் மாற்று அமைப்பை அப்படி நிர்மாணிக்க முடியும்.

 

தமிழக ஹிந்துக் கோவில்களை அரசு நிர்வாகத்திலிருந்து மீட்டெடுப்பது சுலபமான காரியம் இல்லை. முதலில் இதற்கான கோரிக்கை பலமாக எழும்பி, அதற்கான மக்கள் ஆதரவு ஒருமுனைப்பட வேண்டும். இதை இயக்கமாக வழிநடத்தும் ஒரு ஆன்மீகத் தலைவர் தேவை. அவர் ஹிந்து மக்களால் மதிக்கப் படும் குருவாக இருப்பதும் அவசியம். அத்தகைய குரு, சத்குரு ஜக்கி வாசுதேவ்.  அவருக்கு ஆதரவும் கூடுகிறது.

 

தனது பணிகளுக்காக ஜக்கி வாசுதேவ் அடிக்கடி மக்களிடையே, மக்கள் முன்னிலையில் தோன்றவேண்டும், மக்களிடம் பேசவேண்டும். இதைச் செய்தால் அவரை ‘விளம்பரம் தேடும் வேட்டை நாய்’ என்று திட்டுகிறார் பழனிவேல் தியாகராஜன். தனது பணிகளுக்காக “ஒன்றிணைவோம் வா” என்ற கோஷத்துடன் ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்து சன் டி.வி-யில் அடிக்கடி தோன்றினாரே, திமுக தலைவர் ஸ்டாலின் – அவரையாவது தியாகராஜன் சரியாகப் புரிந்துகொண்டால் சரி!    

 

ஹிந்து மதம் சார்ந்த மற்றும் பரவலான தனது  பணிகளுக்காக சத்குரு நிதி திரட்ட வேண்டும். ஐந்து லட்சமோ, ஐம்பதாயிரமோ, ஐந்தாயிரமோ, ஏதோ ஒரு விழாவை முன்னிட்டுப் பெறுகிற நிதிக்கு முறையாக டிக்கட்டோ ரசீதோ கொடுக்கிறார். அவர் கட்டாய வசூலிலும் ஈடுபடவில்லை. ஒரு திமுக அமைச்சருக்கு இது ஆகவில்லை என்றால் எப்படிப் புரிந்துகொள்வது? மற்ற மத அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து ஒரு நபர் மூலமாகவே ஐந்து லட்சத்திற்கும் மேலான நன்கொடைகள் பெறுகின்றன.  பெருந்தன்மையுடன் அதை விட்டுவிட்டார் அமைச்சர்.  

 

இன்னொரு விஷயமும் முக்கியம். கிறிஸ்தவர்களின் சர்ச்சுகளும் இஸ்லாமியர்களின் மசூதிகளும், அவற்றின் சொத்துக்களும், அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் அந்த அந்த மதத்தினாரால் நம் நாட்டில் நிர்வாகிக்கப் படுகின்றன. சட்டப்படி மதசார்பற்று இயங்கவேண்டிய ஒரு அரசு, அந்த சுதந்திரத்தை அவர்களுக்குத் தந்துவிட்டு ஹிந்துக் கோவில்களை மட்டும்  நிர்வாகம் செய்வது – அதுவும் பல கோவில்களை மாட்டுக் கொட்டகை லட்சணத்தில் பராமரிப்பது, அவற்றின் வருமானத்தைப் பறக்க விடுவது – ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்தும். ஒரு திமுக அமைச்சருக்கு, அல்லது இன்றைய ‘ஹிந்து’ பத்திரிகைக்கு,  இதன் நியாய அநியாயம் புரியும் என்று எல்லா ஹிந்துக்களும்  எதிர்பார்க்க முடியாது.

 

பழனிவேல் தியாகராஜனின் ‘ஹிந்து’ பேட்டியில் அவர்  மதுரை மீனாட்சி அம்மனின் பக்தர் என்ற குறிப்பும் இருக்கிறது. அனைவருக்கும் நல்ல சிந்தனைகளை, நல்லெண்ணத்தை அன்னை மீனாட்சி அருளட்டும்!

 

* * * * * 

Copyright © R. Veera Raghavan 2021

13 comments:

  1. புவனா முரளிWednesday, May 19, 2021 3:11:00 pm

    நற்குடிப் பிறப்பும், உயர் கல்வியும், வெளிநாட்டில் பல்வகைக் கலாச்சரத்தைச் சேர்ந்த மனிதர்களுடன் பழகி மபணிபுரியக்கூடிய வாய்ப்பும் ஒருவரைப் (ஒருவனை என்று எழுதக் கை வரவில்லை)பண்படுத்த முடியாது என்பதற்கு நடமாடும் உதாரணம்...

    ReplyDelete
  2. அழகர் கோயில் பழமுதிர்ச்சோலை கண்டுபிடித்து நிறுவியவர் பழ.நெடுமாறனது தந்தை அறநெறி யண்ணல் கி.பழநியப்பனாரும் PTR அவர்கள் தாத்தா அவர்களுமே

    ReplyDelete
  3. There are lot of practical issues in freeing the temples from Govt. Without a proper frame work as to how the temples are going to be handed over to Bhakthas we cannot vouch for the proposal. Further alleged money laundering now present in other religious institutions is also likely to crop when handed over to Bhakthas. We may do one thing. With the present set up we may constitute a committee of Bhakthas to take charge of HR & CE monitored by the Govt. and see how it goes on. Then we can slowly hand over. But it needs a lot of ground work. Who is to decide who are real Bhakthas?

    ReplyDelete
  4. Ok. I am not an atheist. But I would like to put forth my following opinion. AIADMK which is supposed to be pro Hindu party was in power from 2011.What were you doing all those years? Were temples in safe hands? Why didn't you raise this issue when JJ was the CM? I am not able to understand the hidden agenda.
    If a DMK man wears a religious mask he is acting. If an ADMK man wears the same mask he is consideted holy. I think your concern is not temples. You people don't have an unbiased opinion. I am also a follower of Sadhguru. If a person throws mud on him I will not get provoked. So many people will have different opinions and they will have various types of expressions. A real spiritual person will neither get provoked not throw back filthy words. He will act in a way best suited for any situation sensibly.

    ReplyDelete
    Replies
    1. It was only recently that Sadhguru started the #SAVETNTEMPLES. Can you ask him why he didnt start it in AIADMK's regime?

      Delete
    2. Madam, in the recent past several atrocities came to light. Further the executives of HR and CE dept were mostly not very religious minded. This came up during a recent acquisition of temple land near Tinnelveli. So both the executives and Government are colluding against temples. This awareness came just before election time only. So the “ Save temples “ strategy was initiated by Swami Sadguru.

      Delete
  5. The present mis-management of temples and temple properties is so horrible based on government's own admission before the court that a change can only be for the better. Moreover when Christians and Muslims can manage their vast religious properties on their own what is the justification for temples to be administered by government? Let the highly educated minister answer.

    ReplyDelete
  6. ஆன்மீகத் தலைவர் தேவை. அவர் ஹிந்து மக்களால் மதிக்கப் படும் குருவாக இருப்பதும் அவசியம். அத்தகைய குரு, சத்குரு ஜக்கி வாசுதேவ் - Not sure how this statement will be aptly suited to him while there are great scholars who toiled to create humanity among the religion. Neverthless.. I am too off the opinion for one of above comments that "Author and his thinking are biased towards a specific party and their Dravidian principle" - I am neither a atheist as well as DMK follower.

    Seems like current ministry "Sekhar Babu" have asked his Govt team member to digitize the land holding and hope that gives clarity on how this progress. Have to wait and watch until the government take some actions..

    YOGGIYAAVAN ENDRU EVARUM ILLAI... ELLARUM AVANAVAN GNYAYAM PESAVAR...

    ReplyDelete
  7. அருமையான பதிவு.. 🙏💐

    ReplyDelete
  8. Something drastic has to be done to avoid mismanagement of Hindu temples.Will the govt dare to take over churches & mosques?

    ReplyDelete
  9. பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் திமுகவின் ஐ டி பிரிவின் செயலாளர். அவர் கீழேதான் கருப்பர் கூட்டத்து நிர்வாகிகள் இயங்கினர். அவர் தற்போது பிராமண வெறுப்பு என்ற அடித்தளத்தில் இயங்குகிறார். பிராமணவெறுப்பு என்பது இந்துமத வெறுப்பாகப் பரிணமிக்கிறது. அது அடுத்த நிலையில் இந்துமதத்தின் முன்னணி சாமியார்கள், குருமார்கள், அர்ச்சகர்கள் மீது பாய்கிறது. இவர்கள் எளிதான இலக்குகள், அடித்து வீழ்த்துவது எளிது. வித்தியாசமாக நவீனமயமாகிவிட்ட சத்குரு ஜக்கி வாசுதேவ் பதில் அளிக்கத் தயங்குவதில்லை!
    பழனிவேல் தியாகராஜன் தான் வெறும் சாதாரண அரசியல்வாதி இல்லை, தற்போது ஒரு அமைச்சர், அதுவும் முக்கியமான நிதித் துறையின் அமைச்சர் என்பதை உணரவில்லை. அவரிடம் முதிர்ச்சியும் பக்குவமும் நிதானமும் இல்லை. தான் மெத்தப்படித்தவர் என்றும் பன்னாட்டு நிதி நிறுவன அனுபவம் உடையவர் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். ஆணவம் தலைக்கும் மேல் தாண்டவம் ஆடுகிறது, அது சற்றே கீழிறங்கி நாக்கில் புரள்கிறது. யாகாவாராயினும் நாகாக்க என்ற திருவள்ளுவர் வாக்கை அவர் படிக்கவேண்டும். அடக்கம் அமரரும் உய்க்கும், நிலை உயரும்போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும் போன்ற சான்றோர் வாக்குகளை அவர் படிக்கவேண்டும். இவற்றை எல்லாம் ப்ஃப்ஃபல்லோ பல்கலைக் கழகத்தில் கற்றுத் தருவதில்லை என்பது தெரிகிறது!

    சத்குரு கோவிலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் முன்னெடுப்பை அஇஅதிமுக ஆட்சிக்காலத்தில்தான் எடுத்தார் என்பதை இங்கே கருத்திடும் சிலர் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். அதற்கும் முன்னரே இந்து ஆலய மீட்பு இயக்கம் என்ற பெயரில் டி.என்.ரமேஷ், உமா ஆனந்த் போன்றோரும், வக்கீல்கள் சாய், ஜெகன்னாதான், ராம் மெய்யப்பன் உள்ளிட்டோரும் செய்து வருகின்றனர், ஜக்கி அந்த முயற்சிக்கு உத்வேகம் கொடுத்தார்.

    ஜக்கியை விடவும் கோவில்களின் நிர்வாக அமைப்புக்குத் தலைமை தாங்கத் தகுதி வாய்ந்த மதப் பெரியவர்கள் தமிழகத்தில் உண்டு. ஆசாரியார்கள், ஆதீனங்கள் உள்ளடக்கிய தர்ம ஆசாரிய சபா உள்ளது. நல்வாய்ப்பின்மையாக சுவாமி தயானந்த சரஸ்வதி, சங்கராசாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, பெஜாவர் சுவாமி விஸ்வேஷ தீர்த்தர், சுவாமி ஓம்காரானந்தா போன்றோர் நம்மிடையே மானிடஉருவ‌த்தில் இல்லை. ஆயினும், அவர்கள் அடியொற்றிய எத்தனையோ ஆசாரியர்களும், குருமார்களும் உள்ளனர். இவர்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பை உருவாக்குவது கடினம் அல்ல.

    சட்டபூர்வமாக புதியதொரு சட்டம் இயற்றுதலோ, அல்லது இருக்கும் சட்டத்திலேயே மாற்றம் ஏற்படுத்துதலோ இயலாதது இல்லை. அடியேனிடம் கூட அதற்கான திட்டம் இருக்கிறது. தக்க சமயத்தில் தக்க பெரியோர்களிடம் அதனை சமர்ப்பிக்க‌த் தயார்.

    தமிழ் நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக "பார்ப்பான்" என்றும் அண்மைக்காலமாக "சங்கி" என்றும் அத‌ட்டிப் பேசி, மாற்றுக் கருத்தைச் சிலர் வைக்கவே முன்வராத படி அடக்கு முறையைக் கையாண்டு வந்தது வெள்ளிடை மலை. கடந்த் சில ஆண்டுகளாக சமூக ஊடகங்கள் வந்ததால் வெளிப்படையாகக் கருத்துக்களைப் பொதுவெளியில் அனைவரும் பயமின்றி வைத்து வருகின்றனர். அதை அடக்கும் முயற்சியாகத்தான் புதிய திமுக அரசின் நிதி அமைச்சரும், இந்து அறநிலையத்துறை அமைச்சரும் சத்குருவை மிரட்டி அடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதை வெறுமனே இரு நபர்களின் பேச்சாகப் பாராமல், திமுகவின் திட்டத்தை முன்னெடுக்க இது ஒரு முன்னோட்டம் என்றே பார்க்கிறேன்.

    ReplyDelete
  10. The minister is a bigot, well endowed with overseas education/ work experience but lack basic ethics/ courtesy. He is still in the Ivory tower of MD ....bank...sad for the party/ state

    ReplyDelete