Thursday, 27 May 2021

பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஒரு ஆசிரியர். வெளியே சில முதலைகள்?

ஆர்.வி. ஆர்

 

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) ஒரு பெயர் பெற்ற பள்ளிக்கூடம். அங்கு ஆசிரியராக வேலை பார்க்கும் ஒரு ஆண், அந்தப் பள்ளியில் படிக்கும் சில மாணவிகளிடம் பாலியல் ரீதியாகத் தவறாகப் பேசினார், நடந்துகொண்டார் என்ற புகார்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன. பள்ளிக்கு யாரிடமிருந்தும் நேரடியாக ஒரு புகாரும் வரவில்லை. இருந்தாலும், தனது நற்பெயரையும் மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, பள்ளி நிர்வாகம் தானாகவே அந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியாக ஆராய்கிறது.

 

கிரிமினல் சட்டப்படி தமிழக அரசும் அந்த ஆசிரியர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டால் அந்த ஆசிரியருக்குத் தக்க தண்டனை கிடைக்கவேண்டும். பள்ளி நிர்வாகமும் அரசும் இதில் மும்முரமாக செயல்படுவது அவசியம். அது நடக்கிறது என்பதும் தெரிகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

சரி, இப்போதைக்கு வேறென்ன? வேறு விஷயமும் இருக்கிறது. தமிழ் நாடாயிற்றே! 

 

மற்ற விஷயம் சற்று சிக்கலானது. தெளிவான விஷயங்களைக் கூடத் திசை திருப்பி அதில் தனிப்பட்ட  ஆதாயங்கள் தேடுகிறவர்கள் அரசியல்வாதிகள். ஏற்கனவே அவர்கள் சிக்கலாக்கி வைத்திருக்கும் ஒரு விஷயத்தை  பிஎஸ்பிபி  விவகாரத்தில் குயுக்தியாகக் கையாண்டால் ஆதாயம் கிடைக்கும் என்றால், அந்த ஆசை இருந்தால், அரசியல்வாதிகள் சும்மா இருப்பார்களா? அவர்கள் மாநில அரசாங்கத்தையும் நடத்துபவர்கள், அவர்கள் கட்டுபாட்டில் ஒரு டிவி செய்திச் சேனலும் இருக்கிறது என்றால் விடுவார்களா? அவர்கள் திமுக-வினர் என்றால் கேட்க வேண்டுமா?  

 

இந்த சிக்கலான விஷயத்தைப் பேசும்போது எச்சரிக்கை தேவை. எப்படி என்றால், பிஎஸ்பிபி  விவகாரத்தில் திமுக அரசு சம்பத்தப்பட்ட ஆசிரியர் மீதான சட்ட நடவடிக்கையை ஆரம்பித்தது நல்லதுதான். ஆனால் அந்த விவகாரத்தைப் பற்றி சில திமுக தலைவர்கள் பேசும் தொனியும் காண்பிக்கும் சமிக்ஞைகளும் அதை  சன் நியூஸ் தொலைக்காட்சி  அடிக்கடி ஒளிபரப்பும் விதமும் திமுக-வின் கெட்ட நோக்கத்தைக் காண்பிக்கின்றான. அது என்ன கெட்ட நோக்கம்?

 

பிஎஸ்பிபி கல்வி நிறுவனம் 60 வருடங்களுக்கு மேலாக இயங்குகிறது. சென்னையிலும் அதன் சுற்றத்திலும் உள்ள அதன் பள்ளிகளில் தற்போது சுமார் 8,000 மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். சென்னையின் முதன்மையான பள்ளிகள் அவை. வெளியூர்களிலும் அந்த நிறுவனத்தின் பள்ளிகள் உண்டு.

 

சென்னையில் பிஎஸ்பிபி-யை நிறுவியது ஒரு ஹிந்து, ஒரு பிராமணர். இன்றும் அவரது குடும்ப உறுப்பினர் அதன் நிர்வாகத்தைக் கவனிக்கிறார். சென்னையில் மற்றவர்கள், சிறுபான்மை மதத்தினர், நடத்தி வரும் சிறந்த பள்ளிகளும் உண்டு.    

 

திமுக-வின் பல புராணக் கதைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் ஒன்று: “இந்து என்றால் திருடன் என்ற அர்த்தம் உண்டு” என்று திமுக தலைவர் கருணாநிதி முன்னர் பேசியதாகவும் அவரைப் போலீஸ் விசாரணை செய்து வழக்குத் தொடர உத்தரவிட வேண்டும் என்று கேட்டும்   சென்னை ஹை கோர்ட்டில் ஒருவர் வழக்குப் போட்டார். அப்போது கருணாநிதி கோர்ட்டுக்கு என்ன பதில் சொன்னார் தெரியுமா? “உள்ளம் கவர்ந்த கள்வன்” என்ற அர்த்தத்தில்தான் பேசினேன்” என்று அவர் பதில் அளித்தார்.  சிரிப்பு வருகிறதா? அடக்கிக் கொள்ளுங்கள்.

 

சென்ற வருட மத்தியில் கந்த சஷ்டி கவசத்தை இழித்தும் பழித்தும் ‘கருப்பர் கூட்டம்’ என்ற அமைப்பினர் பொது வெளியில் ஆபாசமாகப் பேசினார்கள். அப்போது, திமுக-வின் “உள்ளம் கவர்ந்த கள்வர்களான” ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்திய கருப்பர் கூட்டத்தின் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க திமுக கேட்கவில்லை.  சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் வரும் என்ற நிலையில் அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “கந்த சஷ்டி விவகாரத்தில் முருகரைப் பழித்து பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று பேட்டி கொடுத்து சுருக்கமாக முடித்துக் கொண்டார். அந்த அநாகரிகத்தைக் கண்டிக்கவில்லை என்ற பெயர் திமுக-விற்கு வராமல் இருக்க, ஹிந்துக்களைப் புண்படுத்திய செயலை லேசாகத் தலையில் தட்டிவிட்டு மறைந்துவிட்டார் அதன் அமைப்புச் செயலாளர்.  கருப்பர் கூட்டத்தின் பெயரைக் குறிப்பிட்டுக்கூட அவர் கண்டிக்கவில்லை (பார்க்க: nakkheran.in, 18.7.2020).

 

சர்க்கஸில் பார்வையாளர்கள் முன்பாக ஒரு கோமாளி இன்னொரு கோமாளியின் கன்னத்தில் அறைவான். திரைக்குப் பின்னால் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து சினேகமாக இருப்பார்கள். இது இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.     

 

ஹிந்துக்கள் மீதான அலட்சியமும் அவமதிப்பான போக்கும், ஆனால் மற்ற மதத்தினர் மீதான போற்றுதலும் வணக்க சிந்தனையும், திமுக-விற்கு உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். மற்ற மதத்தினர் அப்படியான போக்கை திமுக-விடம் எதிரபார்க்கிறார்கள் என்பதில்லை. அப்படியான நிலையை, அப்படியான எண்ணத்தை சூசகமாகவும் அவ்வப்போது வெளிப்படையாகவும் காட்டினால், சிறுபான்மை மதத்தின் சில தலைவர்கள் அதை விரும்பலாம், அதன் மூலம் அவர்களைத் திருப்தி செய்து அந்த சமுதாய மக்களின் ஓட்டுக்களைக் கொத்தாக அள்ளலாம் என்பது திமுக-வின் எதிர்பார்ப்பாக இருக்கும். திமுக-வின் இந்தப் போக்கு ஹிந்துக்களை அவமானம் செய்வதாகும், அவர்கள் மனதைப் புண்படுத்துவதாகும். இது போக இன்னொரு விஷயமும் உண்டு.

 

ஹிந்துக்களின் ஒரு ஜாதியினராகிய பிராமணர்களிடம் திக மற்றும் திமுக தலைவர்களுக்குத் தனியான “அலட்சியம்” (பல அர்த்தங்களில்) உண்டு.  இது ஊர் உலகம் அறிந்தது.  ஆகையால், இப்போது பிஎஸ்பிபி விவகாரம் ஒரு தனிப்பட்ட ஆசிரியரின் தவறாக, குற்றமாக இருக்கலாம் என்று அதை சட்டப்படி விசாரித்து மேல் நடவடிக்கை எடுப்பதோடு  நிற்க வேண்டாம் என்று திமுக தலைவர்கள் சிலர் எண்ணுகிறார்கள்.  ஹிந்து மதத்தினர் நிறுவி, அதுவும் ஒரு பிராமணர் தோற்றுவித்து அவர் குடும்பத்தால் நடத்தப்படும், புகழ் பெற்ற ஒரு கல்வி ஸ்தாபனத்தை அவமானப்படுத்தி அதன் மூலம் ஒழுகும் பலவிதமான ஆதாயங்களை அடையலாம் என்பது அவர்களின் கணக்கு என்று ஹிந்துக்கள், அதுவும் பிராமணர்கள், நினைக்க இடம் இருக்கிறது. ஹிந்துக்களின், பிராமணர்களின், நிலை தமிழ்நாட்டில் அப்படி. முக்கிய திமுக தலைவர்களும் அப்படி.   ஹிந்துக்களின் இந்தக் கணிப்பு  சமூக வலைத்தளங்களில் விரிவாகப் பகிரப்படுகிறது.  

 

தங்கள் கவலையை, தங்கள் உணர்வை, இப்போது வெளிப்படுத்தும் ஹிந்துக்களும் பிராமணர்களும் ஒன்றைக் கவனத்தில் வைக்க வேண்டும். அதாவது, “மற்ற மதத்தினர் நடத்தும் கல்வி நிலையங்களில் இது போன்ற  குற்றச்சாட்டுகள் எழும் போது, சில கட்சிக்காரர்கள் அந்தக் குற்றவாளிகளைக் கண்டும் காணாமல் இருக்கிறார்களே, அதே போல் பிஎஸ்பிபி விவகாரத்திலும் அந்தக் கட்சிக்காரர்கள் பாராமுகமாக இருக்கலாமே” என்று ஹிந்துக்கள் ஆசைப்படுகிறார்களோ – என்று பிறருக்குத் தோன்றாமல் கவனமாகப் பேசவேண்டும். பொதுவாக ஹிந்துக்கள் அப்படியான கவனத்துடன்தான் இந்த விஷயம் பற்றி விவாதிக்கிறார்கள். இது அவர்களுக்கும் நல்லது, சமூகத்திற்கும் நல்லது. தங்களின் உழைப்பால், சிறப்பால், தங்கள் கல்வி நிறுவனத்திற்குப் பேர் வாங்கிய பிஎஸ்பிபி நிர்வாகமும், தங்கள் பள்ளிகளில் எங்காவது தவறு நடந்தால் அதை முறையாகக் களைந்தால்தான் தங்களது பேரைக் காப்பாற்றிக் கொள்ளலாம்  என்று  உணர்கிறது.

 

ஆனாலும் ஒன்று. ‘திமுக தலைவர்களோ வேறு கட்சித் தலைவர்களோ மற்ற மதத்தினரின் கல்வி நிலையங்கள் அல்லது வழிபாட்டு நிலையங்களில் நடக்கும் எந்த ஒரு பாலியல் குற்றச்சாட்டையும் வன்மையாகக் கண்டிக்காமல் இருப்பது பற்றி ஹிந்துக்கள் இப்போது பேசக் கூடாது. பிஎஸ்பிபி  பள்ளி ஆசிரியரை மட்டும்தான் இந்த நேரத்தில் கண்டிக்கவேண்டும்’ என்ற ஒரு குரலும் அங்கங்கே கேட்கிறது. இது சாதாரண மனித இயல்பைப் புரிந்து கொள்ளாத குரல். நான் செலுத்த வேண்டிய வீட்டு வரி நிலுவையில் இருக்கிறது என்பதால் அரசாங்கம் நோட்டீஸ் கொடுத்து என்னிடம் வசூலிப்பது சரிதான், நியாயம் தான். ஆனால் என் பக்கத்து வீட்டிற்கும் எதிர்த்த வீட்டிற்கும் அரசு வேண்டும் என்றே  வீட்டு வரி வசூல் செய்யாமல் இருந்தால், அந்த வீட்டுக்காரர்களிடம் ஏன் வீட்டு வரி வசூல் செய்யாமல் இருக்கிறீர்கள் என்று நான் அரசைக் கேட்பது தவறா?  இல்லையே?

    

பிஎஸ்பிபி விவகாரத்தில், ஒரு மதத்தினர் - அதில் ஒரு பிரிவினர் - வெற்றிகரமாக நடத்தும் கல்வி நிலையம் என்பதால் இதில் நுழைந்த அரசியல் நெடி தூக்கலாக இருக்கிறது. இருந்தாலும் அந்தப் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு எதுவும் வந்தால் அது முறையாக விசாரிக்கப்படவேண்டும். அது நடக்கட்டும். மற்றபடி தங்கள் மதம், தங்கள் மதத்தவர்கள் பற்றி ஹிந்துக்கள் தைரியம் கொள்ளலாம். முகலாய ராஜ்ஜியத்தைத் தாண்டி இந்தியாவில் ஹிந்து சமூகம் தழைத்திருக்கிறது. நமது அரசியல் சட்டத்தின் கீழ் இயங்கும் ஒரு மாநில அரசியல் கட்சியான திமுக-வையும் கடந்து ஹிந்து சமூகம் தமிழகத்தில் தொடரும், வளரும். இந்த விஷயத்தில் கருணாநிதியிடம் இருந்த வீரியம் ஸ்டாலினிடம் இல்லை. ஏதோ அப்பா மாதிரி காண்பித்துக் கொள்ளவேண்டும் என்று ஸ்டாலின் முனைகிறார். ஆனால் பாதிக்குப் பாதி வெத்து வேட்டாகத்தான் வெளிப்படுகிறார். உதயநிதி இன்னும் மென்மையாக இருப்பார். ஹிந்துக்கள் கல்வித் துறையிலும் பிற துறைகளிலும் தொடர்ந்து நேர்மையாக, அர்ப்பணிப்புடன் செய்யலாற்றிப் பேர் வாங்கலாம்.  போறுமே?  


* * * * * 

Copyright © R. Veera Raghavan 2021

 

 

Wednesday, 19 May 2021

ஹிந்துக்களுக்கு, சத்குரு ஜக்கி வாசுதேவ். திமுக-விற்கு, பழனிவேல் தியாகராஜன்

          ஆர்.வி. ஆர்

 

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை போட்டோவில் பார்த்திருக்கிறீர்களா? நெற்றியில் விபூதி குங்குமத்துடன் இருப்பார். அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘எம்.ஐ.டி. ஸ்லோன்  ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்’டில் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர். இப்போது  திமுக-வின் தமிழக அமைச்சரவையில் நிதி மந்திரி.

 

விபூதி குங்குமம் அணிவதால் ஒருவருக்குப் பேச்சில் நிதானம் இருக்கும் என்பது அவசியமா? இல்லை. அமெரிக்காவின் சிறந்த நிர்வாகப் பள்ளியில் எம்.பி.ஏ படித்ததால் அவரது கருத்தில் நேர் சிந்தனை வெளிப்படுமா, அவர் இன்னொருவரை விமரிசனம் செய்யும் வார்த்தைகளில் பண்பு தெரியுமா? அதுவும் நிச்சயம் இல்லை. ‘ஹிந்து’ பத்திரிகைக்கு அளித்த ஒரு  பேட்டியின் மூலம் இதைப் பழனிவேல் தியாகராஜன் நிரூபிக்கிறார் (‘தி ஹிந்து’, 15.5.2021).  அந்தப் பேட்டியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பற்றியும் அவரது புது இயக்கத்தின் கோரிக்கை பற்றியும் தியாகராஜன் பொரிகிறார்.

 

‘தமிழகக் கோவில்களை விடுவியுங்கள்’ என்ற அறைகூவலுடன் ஒரு புது இயக்கத்திற்குத் தலைமை தாங்குபவர்  சத்குரு ஜக்கி வாசுதேவ். இதன் பின்னணியும் சாராம்சமும் இதுதான். தமிழகத்தில் பொதுக் கோவில்களைப் பொறுத்தவரை, அவற்றின் நிர்வாகமும் சொத்துக்கள்-பராமரிப்பும் பெருமளவு மாநில அரசின் கையில் இருக்கின்றன. இதில் கண்கூடாகத் தெரிவது அரசின் அலட்சியமும் ஆதிக்கமும். எளிதில் தெரியாதது என்னவெல்லாமோ. இதனால் கோவில்களுக்கும் ஹிந்துக்களுக்கும் லாபம் இல்லை, நஷ்டம்தான்.

 

பராமரிப்பு இல்லாமல் அவலத்தில் நிற்கும் புராதனக் கோவில்கள், நித்திய பூஜைகளுக்கான நிதிகூட இல்லாமல் திணறும் கோவில்கள் ஏராளம். அதனால் சத்குருவின் தலைமையில் வலுப்படுகின்ற கூக்குரல் என்னவென்றால், ‘தமிழக ஹிந்துக் கோவில்களின் சீரழிவைத் தடுக்க, அவற்றை அரசின் நிர்வாகப் பிடியிலிருந்து விடுவித்து ஹிந்துக்களே, ஹிந்து பக்தர்களே, நிர்வாகம் செய்து கொள்ளட்டும்.’  

 

சத்குரு வெளிப்படுத்தும் மனத்தாங்கலும் கோரிக்கையும் யாருக்குப் புரியும், யாருக்குப் புத்துணர்ச்சி தரும்? ஹிந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவர்கள், அரசின் நிர்வாகத்தால் கோவில்களுக்கும் அவற்றின் சொத்துக்களுக்கும் வருமானத்திற்கும் பாதுகாப்பில்லை, இழப்புதான் மிஞ்சும், என்று உணரும் ஹிந்துக்கள், இதற்கு விமோசனம் கிடைக்காதா என்று ஏங்கும் ஹிந்துக்கள். இந்த மனிதர்கள்தான் சத்குருவின் பின்னால் பெருமையுடன் நிற்பார்கள். ஹிந்துவாக இருப்பதால் மட்டும், தியாகராஜன் போன்றவர்களுக்கு இதில் ஆர்வமும் ஆதங்கமும் இருக்காது. அதுவும், ஹிந்துக்களை பகிரங்கமாக அலட்சியம் செய்யும் திமுக மந்திரி சபையில் இருக்கும் அவருக்கு நிச்சயம் இருக்காது. சரி, அவர் பிழைப்பை அவர் பார்க்கட்டும்.  

 

சத்குருவைப் பற்றி, அவர் எழுப்பிய அறைகூவல் பற்றி, பழனிவேல் தியாகராஜன் ‘ஹிந்து’ பேட்டியில் என்ன சொன்னார், அதில் என்ன நியாயம் இருக்கிறது? அவர் பேசியது: “அரசிடமிருந்து கோவில்களை விடுவிக்கக் கோருவது நான்சென்ஸ்! அந்தக் கோரிக்கையை முன்வைக்கும் ஜக்கி வாசுதேவ், விளம்பரம் தேடும் வேட்டை நாய். இன்னும் பணம் சேர்க்க புது வழியைத் தேடுகிறார் அவர். கடவுளின் மீது நாட்டம் கொண்ட சாமியாராக இருந்தால், சிவராத்திரி விழாவிற்காக ஐந்து லட்சம், ஐம்பதாயிரம், ஐந்தாயிரம் என்று டிக்கெட் போட்டு விற்பாரா அவர்? கடவுளையும் மதத்தையும் வைத்து நாடகமாடிப் பலன் தேடும் வியாபாரி அவர்.”    

 

பிறகு விஷயத்துக்கு வந்த அமைச்சர், கோவில்களை அரசிடமிருந்து விடுவிக்க முடியாது என்ற கருத்தில் கேட்ட எதிர்க் கேள்விகள் இவை: “கோவில்களைக் கட்டியது மன்னர்களும் பேரரசர்களும். இன்று அவைகள் யாருக்கு  சொந்தம்? அவைகளை இப்போது பக்தர்களிடம் கொடுக்கச் சொன்னால், சரியோ தப்போ அது ஒருபுறம் இருக்கட்டும். எந்த பக்தரிடம் கோவிலைக் கொடுப்பது? ஒரு கமிட்டியிடம் கொடுங்கள் என்றால், யார் அந்தக் கமிட்டியை அமைப்பது? அந்தக் கமிட்டி உறுப்பினர்களின் தகுதியை யார் நிர்ணயிப்பது? அந்த உறுப்பினர்கள் உள்ளூர்வாசிகளாக இருப்பார்களா  அல்லது வெளியூரிலும் இருக்கலாமா? அந்த பக்தர்களின் அமைப்பு பதிவு செய்யப்படுமா? அது ஒரு டிரஸ்டாக இருக்குமா, சொஸைட்டியாக செயல்படுமா? அதை யார் தணிக்கை செய்வார்கள்?”   

 

ஹிந்துக்களின் கோரிக்கையை ஏற்கக் கூடாது, அதுவும் ஒரு திமுக அரசானது கோவில் நிர்வாகம் பற்றிய ஹிந்துக்களின் வேட்கையைப் பூர்த்தி செய்வது முரண்பாடானது, என்ற உணர்வில் தியாகராஜன் பேசி இருக்கிறார். அமெரிக்காவின் முன்னணி நிர்வாகப் பள்ளியில் எம்.பி.ஏ படித்த ஒருவர், நல்லெண்ணமும் நேர் சிந்தனையும் கொண்டிருந்தால் வெட்டியாக இப்படிக் கேள்விகள் மட்டும் கேட்காமல் விடைகளையும் தேடுவார். இருபது வருடங்கள் அவர் கழித்த அமெரிக்காவில் பெரிய பெரிய ஹிந்துக் கோவில்கள் அரசாங்கத்தின் துணையில்லாமல் ஹிந்துக்களால் நிர்வாகம் செய்யப் படுகின்றன – அங்கிருந்தும்  அவர் பார்க்க ஆரம்பிக்கலாம்.   

 

ஒரு மக்களின் அபிலாஷைகள் என்ன, அவற்றின் முக்கியத்துவம் என்ன என்று புரியாமல், தியாகராஜன் முன்வைத்த கேள்விகளை மட்டும் கேட்டபடி தீர்வை யோசிக்காமல் இருந்தால், இன்னும் சிக்கலான விஷயங்களில் கூட மக்கள் பிரச்சனைகள் அப்படியே நிலைத்திருக்கும். இந்தியா உதவ, பங்களா தேஷ் பிறந்திருக்காது. கிழக்கு ஜெர்மெனியும் மேற்கு ஜெர்மெனியும் இணைந்து ஒரே நாடாக ஆகி இருக்காது.

 

தியாகராஜன் கேட்ட கேள்விகளை யோசிக்காமல், தொடர்புடைய அதிகமான விஷயங்களையும் கவனிக்காமல், ஹிந்துக் கோவில்களைத் தமிழக அரசின் நிர்வாகத்திலிருந்து விடுவித்து வீதியில் போட்டுவிட முடியாது – எந்தச் சட்டமும் அதைச் செய்யாது. ஆனால் ஹிந்து மக்களின் மத உணர்வுகளை அனுதாபத்துடன் அணுகினால், நல்லெண்ணத்துடன் ஆராய்ந்தால், இந்தப் பிரச்சனையைத் தீர்க்க மாற்று அமைப்புகளை உருவாக்க முடியும், அதற்கான சட்டத்தையும் இயற்ற முடியும்.

 

இந்திய மண்ணில் ஹிந்து மன்னர்கள் வைத்திருந்த ராஜ்ஜியங்கள் முகலாய அரசர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் மாறின. இப்போது மக்களாட்சிக்கு வந்துவிட்டன. அதுபோல, மன்னர்கள் கட்டிய கோவில்களில் அரசின் நேரடித் தலையீடில்லாமல் ஒரு மாற்று அமைப்பு நிர்வாகம் செய்ய வழி செய்யலாம். பழையதோ புதியதோ, எந்த அமைப்பிலும் ஒன்றிரண்டு குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதையும் தாண்டி ஒரு அமைப்பு பயனாளிகளுக்குப் பரவலாக உதவவேண்டும், திருப்தி அளிக்கவேண்டும். சத்குரு கேட்கும் மாற்று அமைப்பை அப்படி நிர்மாணிக்க முடியும்.

 

தமிழக ஹிந்துக் கோவில்களை அரசு நிர்வாகத்திலிருந்து மீட்டெடுப்பது சுலபமான காரியம் இல்லை. முதலில் இதற்கான கோரிக்கை பலமாக எழும்பி, அதற்கான மக்கள் ஆதரவு ஒருமுனைப்பட வேண்டும். இதை இயக்கமாக வழிநடத்தும் ஒரு ஆன்மீகத் தலைவர் தேவை. அவர் ஹிந்து மக்களால் மதிக்கப் படும் குருவாக இருப்பதும் அவசியம். அத்தகைய குரு, சத்குரு ஜக்கி வாசுதேவ்.  அவருக்கு ஆதரவும் கூடுகிறது.

 

தனது பணிகளுக்காக ஜக்கி வாசுதேவ் அடிக்கடி மக்களிடையே, மக்கள் முன்னிலையில் தோன்றவேண்டும், மக்களிடம் பேசவேண்டும். இதைச் செய்தால் அவரை ‘விளம்பரம் தேடும் வேட்டை நாய்’ என்று திட்டுகிறார் பழனிவேல் தியாகராஜன். தனது பணிகளுக்காக “ஒன்றிணைவோம் வா” என்ற கோஷத்துடன் ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்து சன் டி.வி-யில் அடிக்கடி தோன்றினாரே, திமுக தலைவர் ஸ்டாலின் – அவரையாவது தியாகராஜன் சரியாகப் புரிந்துகொண்டால் சரி!    

 

ஹிந்து மதம் சார்ந்த மற்றும் பரவலான தனது  பணிகளுக்காக சத்குரு நிதி திரட்ட வேண்டும். ஐந்து லட்சமோ, ஐம்பதாயிரமோ, ஐந்தாயிரமோ, ஏதோ ஒரு விழாவை முன்னிட்டுப் பெறுகிற நிதிக்கு முறையாக டிக்கட்டோ ரசீதோ கொடுக்கிறார். அவர் கட்டாய வசூலிலும் ஈடுபடவில்லை. ஒரு திமுக அமைச்சருக்கு இது ஆகவில்லை என்றால் எப்படிப் புரிந்துகொள்வது? மற்ற மத அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து ஒரு நபர் மூலமாகவே ஐந்து லட்சத்திற்கும் மேலான நன்கொடைகள் பெறுகின்றன.  பெருந்தன்மையுடன் அதை விட்டுவிட்டார் அமைச்சர்.  

 

இன்னொரு விஷயமும் முக்கியம். கிறிஸ்தவர்களின் சர்ச்சுகளும் இஸ்லாமியர்களின் மசூதிகளும், அவற்றின் சொத்துக்களும், அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் அந்த அந்த மதத்தினாரால் நம் நாட்டில் நிர்வாகிக்கப் படுகின்றன. சட்டப்படி மதசார்பற்று இயங்கவேண்டிய ஒரு அரசு, அந்த சுதந்திரத்தை அவர்களுக்குத் தந்துவிட்டு ஹிந்துக் கோவில்களை மட்டும்  நிர்வாகம் செய்வது – அதுவும் பல கோவில்களை மாட்டுக் கொட்டகை லட்சணத்தில் பராமரிப்பது, அவற்றின் வருமானத்தைப் பறக்க விடுவது – ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்தும். ஒரு திமுக அமைச்சருக்கு, அல்லது இன்றைய ‘ஹிந்து’ பத்திரிகைக்கு,  இதன் நியாய அநியாயம் புரியும் என்று எல்லா ஹிந்துக்களும்  எதிர்பார்க்க முடியாது.

 

பழனிவேல் தியாகராஜனின் ‘ஹிந்து’ பேட்டியில் அவர்  மதுரை மீனாட்சி அம்மனின் பக்தர் என்ற குறிப்பும் இருக்கிறது. அனைவருக்கும் நல்ல சிந்தனைகளை, நல்லெண்ணத்தை அன்னை மீனாட்சி அருளட்டும்!

 

* * * * * 

Copyright © R. Veera Raghavan 2021

Saturday, 8 May 2021

திமுக வெற்றி. அதிமுக கூட்டணி ஜெயித்திருக்குமா?

 ஆர்.வி.ஆர் 


சட்டசபைத் தேர்தலில் வென்று நேற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறது திமுக. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். சம்பிரதாயத்தை  முடித்துவிட்டு சாராம்சத்திற்கு வரலாம்.

 

தேர்தல் ஆட்டம் வினோதமானது. அதற்கான நடைமுறை விதிகளைத் தேர்தல் களம் நிர்ணயம் செய்கிறது. காலத்திற்கு ஏற்ப அந்தக் களம் மாறவும் செய்யும். அதைப் புரிந்து கொள்ளாதவர்கள், அதற்கேற்றவாறு ஆடாதவர்கள், தங்கள் வெற்றி வாய்ப்பைக் குறைத்துக் கொள்வார்கள். அந்தத் தவறை அதிமுக-வின் முதல் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி செய்துவிட்டார்.    

 

இ.பி.எஸ் தன்னிடம் உள்ள மக்கள் செல்வாக்கை, தனது சக்தியை, பெரிதாகக் கற்பனை செய்துகொண்டார். அதுவும் அதிமுக-வின் கூடுதல் வெற்றியை இந்தத் தேர்தலில் பாதித்தது.  இதை சரியாகப் புரிந்து கொள்ள, பொதுவாகத்  தலைவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு பழனிசாமியைக்  கவனிக்க வேண்டும்.    

 

ஒரு அரசியல் தலைவர் எத்தகைய  குணங்களால் மக்களிடம் செல்வாக்குப் பெற முடியும், அதன் மூலம் அதிக ஓட்டுக்கள் வாங்க முடியும்,  என்பதை ஒரு இலக்கணமாக விளக்க முடியாது. அரசாங்க கஜானாவிலிருந்து இலவசங்கள் விநியோகிப்பது, சிறுபான்மை மக்களைப் பாரபட்சமாக தாஜா செய்வது, எதிர்க்கட்சி ஆட்களுக்கு வலை வீசுவது என்ற சில்லறை டெக்னிக்குகள் வேறு.  அவற்றை ஒதுக்கி வைத்து, சில தலைவர்களின் மக்கள் செல்வாக்கு எதனால் வளர்ந்தது என்று மேலோட்டமாகப் பார்க்கலாம்.   

 

திமுக-வின் கலைஞர் கருணாநிதிக்குத் தலைமை அடையாளங்கள் நிறைய இருந்தன. மக்களிடமும் கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்களிடமும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். சிறந்த பேச்சாளர். நல்ல எழுத்தாளர். அயராத உழைப்பாளி. அரசியல் யுக்தியும் குயுக்தியும் அவருக்குக் கைவந்த கலைகள்.

 

ஸ்டாலின் ஒரு ரகமானவர். அவருக்குக் கிடைத்த தலைவர் பொறுப்பும் பதவியும் அப்பா கருணாநிதி பாசத்துடன் விட்டுச் சென்ற சொத்து. இந்தச் சொத்து எளிதில் கரையாத அளவிற்குப் பரந்து விரிந்தது.   

 

எம்.ஜி.ஆர் விசேஷமானவர். அநேக மக்கள் அவரை ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’யாகக் கருதினார்கள்.  அது ஒன்று போதும், அவர் மக்களிடையே அசைக்க முடியாத தலைவராக நிலைக்க. முதல் அமைச்சராகி அவர் என்ன செய்வார், அல்லது செய்தார், என்றெல்லாம் மக்களுக்குக் பெரிய கவலை இல்லை.

 

  எம்.ஜி.ஆரால் முன்நிறுத்தப் பட்டவர் ஜெயலலிதா. அதோடு, ஜெயலலிதாவிடம்    தலைமைக் குணங்கள் நிச்சயமாக இருந்தன. தைரியத்தை முகத்தில் தாங்கி இருந்தார். முடிவுகளைத் தீர்மானமாக எடுத்தார். சொடுக்குவதற்குக் கையில் அதிகாரச் சாட்டையை எப்போதும் வைத்திருந்தார்.

 

கருணாநிதி மற்றும் ஜெலலிதாவின் தனிமனித குணங்கள் வேறு பட்டாலும், அவர்கள் வலுவான (strong) தலைவர்களாக இருந்தார்கள். இருவருமே  வலுவை, பலத்தை எளிதில் சுவீகரிப்பவர்கள், பிரயோகிப்பவர்கள். இது அவர்களின் முக்கிய குணாதிசயம்.

 

இந்தியாவில் சாதாரண மக்கள் ஒரு வலுவான தலைவரை  நம்பி அவர் பின்னால் நிற்கிறார்கள்.  அவர் நல்லவரா, நேர்மையானவரா, கெட்டிக்காரரா என்பது மக்களுக்கு  இரண்டாம் பட்சம்தான் – அல்லது பொருட்டே இல்லை.  கருணாநிதியும் ஜெயலலிதாவும் பிரதானமாக அந்த வகையில் மக்களைத் தொடர்ந்து ஈர்த்தார்கள், ஓட்டு வாங்கினார்கள்.

 

காமராஜ், இந்திரா காந்தி, லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி ஆகியோரும் மக்களுக்கு வலுவான தலைவர்களாகத் தென்பட்டார்கள் அல்லது தெரிகிறார்கள். நரேந்திர மோடியும் அப்படியான தலைவர். இந்த மனிதர்களில்  சிலர் நேர்மையும் அர்ப்பணிப்பும் நிர்வாகத்  திறமையும் நிறைந்தவர்கள், மற்றவர்களிடம் அந்தப் பண்புகளைத் தேட வேண்டும்.    

 

வளர்ந்த ஜனநாயக நாடுகளில்தான் ஒரு வலுவான தலைவர் நேரானவராகவும் இருப்பதை மக்கள் விரும்புவார்கள். இந்தியாவில் அப்படி அல்ல.  வலுவான தலைவர்கள் நம்மைப் பிழைக்கவிட்டால் போதும் என்ற திருப்தியுடன் வாழ வேண்டியவர்கள் நமது பெருவாரியான மக்கள்.   

 

சரி, எடப்பாடி பழனிசாமி என்ன தப்புக் கணக்கு போட்டார், அது இந்தத் தேர்தலில் அதிமுக-வை எப்படி பாதித்தது?

 

பழனிசாமியைத் தனது வாரிசாக ஜெயலலிதா எப்போதும் சுட்டிக் காட்டியதில்லை. மக்களும் இ.பி.எஸ்-ஸை அப்படிப் பார்க்கவில்லை. ஆனால் சசிகலாவின் நிலை வேறு. ஜெயலலிதா அவரைத் தன் வீட்டில் ஒருவராக, தனக்கு மிக நெருக்கமாக வைத்திருந்தார். சசிகலாவைத் தனது ‘உடன் பிறவா சகோதரி’ என்றும் அழைத்தார். கட்சியின் மற்ற தலைவர்களுக்கு சசிகலா ‘சின்னம்மா’வாக இருந்தார். சசிகலாவுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில், பத்தில் ஒரு பங்கு கூட ஜெயலலிதா தனது கட்சித் தலைவர்கள்  யாருக்கும் தரவில்லை.  இது பகிரங்கம்.  

 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து வைத்திருந்தார் என்று ஜெயலலிதாவின் மீது வந்த வழக்கில் சசிகலாவும் ஒரு எதிரியாக – அக்யூஸ்டாக – இருந்தார்.  ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பிற்காக அவரோடு கூட்டு சதி செய்தார், அவருக்கு உடந்தையாக இருந்தார் என்பது சசிகலா மீதான வழக்கு. இதில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சொல்வதற்கு முன்பாக  ஜெயலலிதா மறைந்ததால், அவர் மீதான வழக்கு ஓய்ந்து போனது. சசிகலாவின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகி அவர் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, இந்தத் தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் முன்னர் விடுதலை ஆனார்.  

 

டிசம்பர் 2016-ல், முதல் அமைச்சராக இருந்தபோதே ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் இடத்தில் ஒரு புதிய முதல் அமைச்சரை அதிமுக தேர்வு செய்ய வேண்டி இருந்தது. அடுத்த இரண்டு மாதங்கள் சென்றபின் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வெளிவந்து சசிகலா குற்றவாளி என்று உறுதியானது. உடனே அதிமுக எம்.எல்.ஏக்கள் சசிகலாவின் சிபாரிசை ஏற்று, அவர் கைகாட்டிய எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வராக ஆதரவு அளித்தனர்.  இ.பி.எஸ். அப்படித்தான் அதிமுக ஆட்சியின் புதிய முதல்வராக வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகப் பதவி வகித்தார்.  

 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக தொண்டர்களும் ஆதரவாளர்களும் யாரைக் கட்சியில் பிரதானமாக நினைப்பார்கள்? சசிகலாவைத்தான் – அவர் சிறைத் தண்டனை பெற்றாலும். 


ஒன்றை எண்ணிப் பாருங்கள். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வந்த நாளில் ஜெயலலிதா உயிருடன் இருந்தால், அவரும் தண்டிக்கப்பட்டு சிறை சென்றிருப்பார். அப்படி நடந்து அவர் தண்டனைக் காலம் முடிந்து வெளி வந்தால், மற்ற அதிமுக நிர்வாகிகள் அவரைத் தள்ளிவைத்துக் கட்சி நடத்துவார்களா? அவரே தலைவராகத் தொடர்ந்தால், அவர்தான் சக-குற்றவாளி சசிகலாவை ஒதுக்கி வைத்திருப்பாரா? இரண்டும் நடந்திருக்காது. ஜெயலலிதா அம்மாவாக, சசிகலா சின்னம்மாவாக, தொடர்வார்கள்.

 

இதையும் நினைத்துப் பாருங்கள்.  திமுக தலைவர் ஸ்டாலின் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று வழக்கு வந்து, அவருக்குக் கோர்ட் தண்டனையும் கிடைத்துப் பின்னர் வெளி வந்தார், அதை ஒட்டி அவர் தேர்தலில் போட்டி இடுவதற்கான தடைக் காலமும் முடிந்துவிட்டது என்று கற்பனையான ஒரு காட்சியை எண்ணிப் பாருங்கள். அப்படி என்றால் கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் திமுக-வில் தலைவர் பதவிக்கு வந்திருக்க மாட்டாரா? இந்தத் தேர்தலிலில் அவர் திமுக-வின் முதல் அமைச்சர் வேட்பாளர் ஆகாமல் இருப்பாரா? திமுக ஆதரவாளர்கள் அந்தக் கட்சிக்கு அளிக்கும் ஆதரவைக் குறைத்துக் கொள்வார்களா? அப்படி ஒன்றுமே நடக்காது. இந்தத் தேர்தல் மூலமாக – இப்போது நிஜத்தில் நடந்திருப்பது போல் – அந்தக் கற்பனை சம்பவத்திற்குப் பின்னரும் ஸ்டாலினே தமிழகத்தின் முதல் அமைச்சர் ஆகி இருப்பார். உண்மையா இல்லையா? ஸ்டாலினுக்கு அது சாத்தியம் என்றால், சசிகலாவும் தனது பழைய செல்வாக்கை – அது எந்த அளவானாலும் – ஏன் கட்சியினரிடமும் மக்களிடமும் தக்க வைக்க முடியாது?  

 

அதிமுக-வின் இந்தப் பின்னணி, சென்ற மாத வாக்கெடுப்பின் போது தமிழக தேர்தல் களத்தின் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. அதோடு, எடப்படி பழனிசாமி வலுவானவரா, சசிகலா வலுவானவரா என்று பார்த்தால், சசிகலாதான் அதில் பெயர் வாங்குவார் என்பது வெளிப்படை. கட்சியில் செல்வாக்கு, மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளவர் சசிகலா.    

 

இந்தத் தேர்தலில் போட்டியிட சசிகலாவிற்கு சட்டத் தடை இருந்தாலும், அவர் அதிமுக-வின் புதிய முகமாக முன் நிறுத்தப்பட்டிருந்தால், அதிமுக-விற்கு சில நன்மைகள் கிடைத்திருக்கும். சசிகலா சிறை சென்ற பிறகு, அவரது அக்கா மகனும் ஆதரவாளருமான டி.டி.வி. தினகரன் துவங்கிய  அமமுக என்ற அரசியல் கட்சி அதிமுக-வோடு ஐக்கியம் ஆகி இருக்கும், அமமுக இந்தத் தேர்தலில் தனியாகப் போட்டி இட்டிருக்காது, அதிமுக கூட்டணியின் வெற்றியும் ஏறி இருக்கும். அமமுக என்ற போட்டிக் கட்சி தனித்து இயங்காமல் சசிகலாவும் அதிமுக-விற்குத் தலைமை ஏற்றால், அந்த அதிமுக-வின் கூட்டு-பலம் பெரிதாக இருக்கும். அத்தகைய அதிமுக, இப்போதைய அதிமுக மற்றும் அமமுக கட்சிகளின் சிதறிய தனிச் சக்திகளை விட இன்னும் வலுவாகச் செயல் பட்டிருக்கும்.   

 

நடந்த தேர்தலில் கூட, இருபது தொகுதிகளில் அமமுக பெற்ற வாக்குகள் மட்டுமே அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்விக்கு நேரடிக் காரணங்கள் (பார்க்க, தினமலர் 4.5.2021). சசிகலா தலைமை தாங்கிய அதிமுக களத்தில் இருந்தால், இந்த இருபது தொகுதிகள் அதிமுக கூட்டணிக்குக் கிடைத்து, ஒன்றுபட்ட பலத்தில்  இன்னும் சில தொகுதிகளிலும் அந்தக் கூட்டணி ஜெயித்திருக்க வாய்ப்புகள் நிச்சயமாக உண்டு.  இது நடக்காமல் போக முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி.

 

சசிகலாவைக் கட்சியில் இருந்து தள்ளி வைத்தால்,  தன் தலைமையில் அதிமுக கூட்டணி இந்தத் தேர்தலில் வெற்றியும் பெற்றால், சசிகலாவின் தயவு இல்லாமல் தானே அடுத்த ஐந்தாண்டுகளும் தொடர்ந்து முதல் அமைச்சராக இருக்கலாம் என்ற தனிப்பட்ட ஆசை பழனிசாமியின் கண்ணை மறைத்துவிட்டது. அதனால் சசிகலா சிறை சென்ற பிறகு அவரைக் கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்து, தனது கனவுக் கோட்டையைக் கட்ட ஆரம்பித்தார் இ.பி.எஸ்.  நாளைக்குக் கட்சியில் யாருக்கு என்ன கிடைக்கும் என்று தெரியாத கட்சித் தலைவர்கள் பலருக்கும், பழனிசாமிக்குத்  துணை போவது தற்போதைய உடனடி ஆதாயமாகத் தோன்றியது. துணை முதல் அமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வமும் அதில் ஒருவராக இருப்பார்.  பழனிசாமியுடன் சேர்ந்தால், தோதான சந்தர்ப்பத்தில் அவரைத் தள்ளிவிட்டுத் தான் சில காலமாவது மீண்டும் முதல்வர் ஆகலாம் என்ற நப்பாசை அவருக்கு இருந்தால் ஆச்சரியம் இல்லை.  

 

இ.பி.எஸ்-ஸும் ஒ.பி.எஸ்-ஸும் தேர்தலுக்கு முன் சசிகலாவின் அரசியல் சக்தியை அங்கீகரித்து, அவரை முன்நிலைப்படுத்தி, தங்கள் பதவி ஆசைகளை அடக்கி   வைத்திருந்தால் அதிமுக கூட்டணி அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி இருக்கும்.  

 

தமிழகத்தின் 234 சட்டசபைத் தொகுதிகளில்  இப்போது திமுக கூட்டணி வென்ற இடங்கள் 159. அதிமுக கூட்டணிக்குக் கிடைத்த எண்ணிக்கை 75. டி.டி.வி தினகரன் கட்சி போட்டியிட்டதால் பறிபோன 20 இடங்களைச் சேர்த்தால், சசிகலா தலைமை தாங்கும் அதிமுக கூட்டணிக்கு 95 இடங்கள் நிச்சயம் உண்டு. அதுவும் மெஜாரிட்டியை எட்டாது. சசிகலாவின் தலைமை, அதிமுக கூட்டணிக்கு இன்னும் அதிக ஓட்டுக்களை ஈர்த்தாலும், அந்தக் கூட்டணி சட்டசபையில் பெரும்பான்மை பெற்றிருக்குமா என்பது தெரியாது.  ஆனால் நல்லதை விரும்பி அதற்கு ஏற்றவாறு செயல்பட்டால்தான்  அது நடைந்தேற வாய்ப்பும் அமையும்.   

 

ஒரு கேள்வி வரும். ஜெயலலிதாவின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் சசிகலா. அப்படியானவர் தலைமையில் அதிமுக ஜெயித்து ஆட்சிக்கு வருவது நல்லதா? ஒரு பொறுப்புள்ள குடிமகன் அதை விரும்பலாமா?  நான் அமெரிக்கா  அல்லது இங்கிலாந்து வாக்காளராக இருந்துவிட்டால் அந்த நாட்டில் நிலவும்  அரசியல் நல்லொழுக்கத்தை மனதில் வைத்து, இது போன்ற கேள்விக்குச் சொல்லும் பதில் வேறாக இருக்கும்.   நான் இந்திய வாக்காளர், அதுவும் செந்தமிழ் நாட்டின் வாக்காளர். நான் இந்தப் பரிதாபமான நிலையில் இருந்துதான் பதில் சொல்ல முடியும்.  

 

ஜலதோஷம் பிடித்து சங்கடப்பட வேண்டும் அல்லது டைஃபாய்ட் காய்ச்சல் வந்து படுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் தமிழக வாக்காளர்களுக்கு விதிக்கப்பட்டால், நான்  ஜலதோஷத்தை ஆனந்தமாகத் தழுவுவது என்ன தவறு? டைஃபாய்ட் காய்ச்சலைத் தவிர்ப்பதுதானே எனது ஒரே குறியாக இருக்க முடியும்? அதுவும் டைஃபாய்டின் வீரியம் சமீப காலமாக எகிறும்போது? அது போக, ஜலதோஷத்தை சிறிதாவது மட்டுப்படுத்தும் ஒரு காவிக்கலர் மாத்திரையும் இப்போது  சேர்ந்து கிடைத்தால் இன்னும் நல்லதாயிற்றே?  

 

* * * * * 

Copyright © R. Veera Raghavan 2021

Saturday, 1 May 2021

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: ஒரு குழந்தை, ஒரு ரயில் தண்டவாளம், ஒரு ஆபத் பாந்தவன்

        ஆர்.வி. ஆர்

 

டிவி, லேப்டாப், வாட்ஸ்-அப்னு நீங்களும் பாத்திருப்பேள். பத்து நாள் முன்னாடி மஹாராஷ்டிரால வாங்கனின்னு ஒரு ஊர்ல நடந்த சம்பவம். மெய் சிலிர்க்கற காட்சின்னா அதான்.   

 

ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார ஓரத்துல அம்மாவோட  நடக்கற 6 வயசுக் குழந்தை, தண்டவாளத்துல தவறி விழறது.  அம்மாக்காரிக்கு கண் சரியாத் தெரியாது.  ஆனா தன் கையைத் தொட்டுண்டு வந்த குழந்தை தண்டவாளத்துல விழுந்துடுத்துன்னு  தெரிஞ்சு பதர்றா. அதே தண்டவாளத்துல, அந்த ஸ்டேஷன்ல நிக்காத ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் வேகமா அப்ப வந்துண்டிருக்கு. குழந்தை அழுதுண்டே எழுந்து பிளாட்பார உயரத்தைப் பிடிச்சு ஏறப் பாக்கறது. அதுக்கான சக்திதான் இல்லை. அம்பு மாதிரி வர்ற ரயில் குழந்தையைத் தொடறதுக்கு சொற்ப வினாடிகள்தான் இருக்கும். அந்த க்ஷணத்துல, குழந்தைக்கு இந்தப் பக்கம் தண்டவாளத்துலேர்ந்து கொஞ்சம் விலகித்   தரைல  நின்ன தெய்வம், குழந்தையைப் பாத்தது.  

 

       அங்க யாரு தெய்வம்கறேளா? மனுஷ ரூபத்துல மயூர் ஷெல்கேன்னு பேரை வைச்சுண்டு அதே  ரயில்வே ஸ்டேஷன்ல சாதாரண வேலை பாக்கற இளைஞன்தான் அது.  ரயில்வேக்காரா  வெளியிட்ட சிசிடிவி காட்சில அந்தப் பையன் நமக்கு அறிமுகம் ஆகறது அவனோட பின்புற உருவத்துலதான். எப்படின்னா, தண்டவாளத்துல தடதடக்கற ரயிலுக்கு எதிரா குழந்தையை நோக்கித் தலை தெறிக்க அவன் ஓடறான். அவன் முடிச்ச கைங்கரியம் நமக்குத் தெரியறது அஞ்சு செகண்டுதான். அதுக்குள்ள தண்டவாளத்துக்கு நடுவுல மின்னலா முன்னேறி குழந்தையைத் தூக்கி பிளாட்பாரத்துல பாதுகாப்பாத் தள்ளிட்டுத் தானும் தாவி ஏறிடறான் மயூர் ஷெல்கே. அடுத்த ரண்டு செகண்டுல அந்த ராட்சஸ ரயில் குழந்தை விழுந்த இடத்தை சீறிக் கடக்கறது. “மயூர் ஷெல்கே தீர்க்காயுசா இருக்கட்டும்”னு எல்லா மனுஷாளும் நெஞ்சாற வாழத்துவா. என்னை மாதிரிப் பாட்டிமார்கள் ‘நன்னா இருடாப்பா’ன்னு இன்னும் உருகி ஆசிர்வதிப்பா.

 

 மயூர் ஷெல்கேயைப் பத்தி நினைச்சுப் பாருங்கோ. தான் உண்டு, எல்லாரும் செய்யற அளவுக்குத் தன் வேலை உண்டுன்னு நிக்கலை அந்தப் பையன். தன் சௌகரியம், தன் சௌக்கியம்னு பாக்காம, தன் உயிரைப் பத்திக் கூட யோசிக்காம, அல்லல் படற அம்மா-குழந்தை ஜீவன்களுக்காக ஓடினான் அவன். அதுனாலதான், மத்தவா நலனுக்குத் தன்னை அர்ப்பணிச்ச மயூர் ஷெல்கேயை எல்லாரும் பெரிசா நினைக்கறா, மானசாறப் பாராட்டறா. இது இயற்கையான மனுஷ சுபாவம்தான்.  ஆனா பாருங்கோ, இதுக்கு நேர் விரோதமான ஒரு காட்சியும் இந்தியாவுல நடக்கறது. என்னன்னு சொல்றேன்.

 

கஷ்டப்படற இந்திய ஜனங்களுக்காக உழைக்கற பிரதமர்னு நரேந்திர மோடி இருக்கார்.  மயூர் ஷெல்கே மாதிரி, அவரும் வேற பெரிய தளத்துல  தன்னலம் இல்லாம அசாத்திய துணிச்சலோட – பாகிஸ்தான்காரன்,   சைனாக்காரன், அப்பறம் நம்ம நாட்டுலயே சில கொடூர ஆசாமிகள்னு பல பேர்ட்ட உயிரையும் பணயம் வைச்சு – அப்பாவி ஜனங்களுக்காக ராப்பகலா வேலை பண்றார். கரை ஏற முடியாம, ஸ்டேஷன் தண்டவாள சூழ்நிலைல சிக்கித்  தவிக்கற கோடிக்கணக்கான மக்களைக் கைதூக்கிவிட ஓடி ஓடிக்  காரியம் பாக்கறார்.  ஆனா மீடியாவும் சரி, எதிர்க் கட்சித் தலைவர்களும் சரி, அவர் நாட்டுக்காக என்ன நல்லது பண்ணினாலும் குத்தம் சொல்றது, திட்டறதுன்னு இருக்காளே,  அது ஏன்?     

 

     மோடியைப் பத்தி, அவர் செய்யற நல்ல காரியத்தைப் பத்தி, தானாத் தெரியாத  மக்களுக்கு நிஜம் எதுன்னு புரியாதபடி அவா கண்ணை சில பேர் கட்ட முடியும். அது இந்தியால நடக்கறது. மயூர் ஷெல்கே விஷயத்துல அது சாத்தியமில்லை. அதுனால மயூர் ஷெல்கேயோட அர்ப்பணிப்பு, தியாகச் செயல், சாதனை எல்லாமே எல்லாருக்கும் சந்தேகம் இல்லாம வெட்ட வெளிச்சம் ஆயிடுத்து.    

 

      மயூர் ஷெல்கேயோட தீரச் செயல் வெளி மனுஷா  எல்லாருக்கும் எப்படிச் சரியா ஒரே மாதிரித் தெரிஞ்சது? வாங்கனி ரயில்வே ஸ்டேஷன்ல இருந்த சிசிடிவி கேமரா அவன் காரியத்தைத் துல்லியமா காமிச்சுடுத்து.  அவ்வளவுதான். ஆனா மோடி விஷயத்துல சிசிடிவி-யா செயல்பட்டு மக்களுக்கு உண்மையான செய்திகளை சரியான கோணத்துல காமிக்க வேண்டியது யாரு? செய்திப் பத்திரிகைகள், டெலிவிஷன் சானல்கள் மாதிரி  மீடியாதான?  ஆனா அவா நிறையப் பேர் ஒழுங்கா நேர்மையா செயல் படறாளா? இல்லையே?   

 

முந்தைய அரசாங்கங்கள் மாதிரி, மோடி அரசாங்கம் மீடியாவை தாஜா பண்ணலை, குளிப்பாட்டலைன்னு மீடியாவுல நிறையப் பேர் கடுப்புல  இருக்கா. அதுனால, உண்மையான சிசிடிவி-யா இருக்கவேண்டிய மீடியாக்கள் மோடிக்கு வில்லன் வேஷத்தை மாட்டிவிட்டு ஏதோ பொய்க்  காட்சிகளைக் காட்டறா.  மீடியாக்கு சலாம்  வைக்கற பொழுது போக்கிகள், அச்சுப்பிச்சுகள்,   பண வேட்டைக்காரர்கள் மாதிரியான அரசியல்வாதிகளை மக்களுக்குப் பாடுபடற சொக்கத் தங்க ஹீரோவா காட்டறா.  நிறைய இந்திய ஜனங்கள் பாக்கறது, வாங்கனி ரயில்வே ஸ்டேஷன் சிசிடிவி கேமரா மாதிரி இருக்கறதை அப்படியே காட்டற காட்சிகள் இல்லை. மீடியா காட்டற பொய் பித்தலாட்ட சசிடிவி கேமராக் காட்சிகள்தான் ஜனங்கள் முன்னால சுத்தறது. விதிவிலக்குகள் கொஞ்சம்தான்.  அதை எல்லாம் மீறி, மக்கள் கிட்ட நேரடித் தொடர்பு எங்க எப்படி வைச்சுக்க முடியுமோ, அதை மோடி பண்றார். அதுல வெற்றியும் அடைஞ்சிருக்கார். ஆனா மீடியா காமிக்கற ஃபிராடு  சிசிடிவி  கேமரா காட்சிகளும் ஜனங்ககிட்ட வேண்டாத பாதிப்பை ஏற்படுத்தறது.

 

ஒரு ஜனநாயக நாட்டுல மக்களுக்குத் தெரிய  வேண்டிய எல்லாச் செய்திகள், எல்லா தரப்பு கருத்துக்களை வெளியிடற பாரபட்சம் இல்லாத மீடியாங்கறது வேற.  நடுநிலை வேஷதாரியா திரிசமன் பண்ற மீடியா வேறன்னு சொல்றேன்.  என்ன பண்றது? ‘ராம் ராம்’னு நம்மளையே நொந்துக்க வேண்டியதுதான்!  

 

இன்னொண்ணும் இருக்கு. மோடி நாட்டுக்காக அசாத்திய வேலை பண்றார்னு புரிஞ்சுக்கற படிச்சவாளே,  “இந்தக் கட்சித் தலைவர் தமிழ் நன்னா பேசினார், எங்க மாமா, ஒண்ணு விட்ட சித்தப்பாலாம் இந்தக் கட்சியைத்தான் ஆதரிக்கறா,  என் குடும்பத்துல சில பேருக்கு இந்தக் கட்சி சிபாரிசுலதான்  அரசாங்க வேலையோ கான்டிராக்டோ கிடைச்சிருக்கு, நான் அப்பிடி இப்பிடி பிஸினஸ் பண்ணுவேன், ஆனா எனக்கு மோடி அரசாங்கம் குடைச்சல் தர்றது”ன்னு  நாட்டு நலனுக்கு சம்பந்தமில்லாத விஷயத்தை வைச்சு மோடியை எதிர்க்கறா, எதிர்க்கட்சிகளை ஆதரிக்கறா. இன்னும் சிலபேர் இருக்கா. அவா கொஞ்சம் கர்வம் பிடிச்ச புத்திசாலிகள். மோடியை எதிர்த்தாத்தான், அவாளுக்குத் தன்னோட புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தின சின்ன திருப்தி கிடைக்கும். அப்பறம் ஏதேதோ சுயநல குரூப் எதிர்ப்புகளும் மோடிக்கு உண்டு.  நல்ல மனுஷன், தைரியாசாலி, நாட்டை நேசிக்கறவர். இருந்தாலும் மோடி ஒருவகைல  பாவம்தான்.

 

மயூர் ஷெல்கேட்ட திரும்ப வரேன். அதாவது, பையன் கிட்ட ஒண்ணு சொல்லிக்கறேன். தன்னலமே இல்லாம படுவேகமா துணிச்சலா நீ பிறத்தியாருக்குப் பண்ணின உபகாரம் இருக்கே, அது அரசியலுக்கு வெளில இருந்ததால உனக்கு எல்லார் கிட்டயும் பாராட்டு கிடைச்சது, கண்டனங்கள் வரலை.  நேர்மையான சிசிடிவி-யும் உன்னை அப்படியே படம் பிடிச்சுக் காமிச்சது. அந்த வகைல  நீ குடுத்து வைச்சவன்!  நன்னா இருடாப்பா! 

 

* * * * * 

Copyright © R. Veera Raghavan 2021