-- ஆர். வி. ஆர்
“சாதிகள் இல்லையடி பாப்பா” என்று மகாகவி பாரதி பாடியதன் உள்ளர்த்தம்
என்ன? அதை அடுத்த வரியில் அவரே சொல்கிறார் – “குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்று. அதாவது,
நம்மிடையே பல ஜாதிகள் இருந்தாலும் அதன் பேரில்
நமக்குள் உயர்வு-தாழ்வு எண்ணங்கள் கூடாது என்ற மேலான சிந்தனையை பாரதி வெளிப்படுத்துகிறார்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பாகத் தமிழ்நாட்டில் பல ஹிந்து ஆண்கள்
– அதிலும் நாற்பத்தைந்து அல்லது ஐம்பது வயது
கடந்தவர்கள் – அவர்களின் ஜாதிப் பெயரோடு அறியப்பட்டார்கள். உதாரணம்: மஹாவித்வான் மீனாட்சி
சுந்தரம் பிள்ளை, உ. வே. சாமிநாத ஐயர், ஏ. ராமசாமி முதலியார், முத்துராமலிங்கத் தேவர், எஸ். எஸ். ராமசாமி படையாட்சி.
ஊரில் எங்கள் தற்போதைய வீட்டை அடுத்த இரண்டு வீடுகளைப் ‘பிள்ளை வீடு’,
‘தேவர் வீடு’ என்றுதான் மரியாதையோடு குறிப்பிட்டோம். மூன்று ஜாதிகளான எங்களுக்குள்
மிகுந்த இணக்கம் உண்டு. அங்கு நான் முன்னர்
வசித்த தெரு, தானப்ப முதலி தெரு. 1960-களில் பிராமணர்கள்
மிக அதிகமாக வாழ்ந்த தெரு அது. அதை ஒட்டியது கோபால கொத்தன் தெரு. யாருக்கும் ஒரு பிரச்சனையும்
இல்லை. பின்வந்த காலத்தில் தமிழ்நாட்டில் மெள்ள மெள்ள நிலமை மாறிவிட்டது. அதன் சமீபத்திய
அறிகுறி நமது மாநில பாடப் புத்தகங்களில் தோன்றுகிறது.
சில தமிழஞர்கள், சாதனையாளர்கள், அவர்களது சிறப்புப் பணி
பற்றிய குறிப்புகள் தமிழக பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம் பெறுகின்றன. வழக்கமாக அவர்கள்
பெயர்களின் பின்னால் வரும் ஜாதி அடையாள வார்த்தையைக் கத்தரித்து தமிழ்நாடு அரசு – பாடநூல்
கழகம் மூலமாக - புதிய பாடப் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. உ. வே. சாமிநாத ஐயர்
‘சாமிநாதனார்’ என்றும், மீனாட்சி சுந்தரம் பிள்ளை ‘மீனாட்சி சுந்தரனார்’ என்றும், நாமக்கல்
கவிஞர் ராமலிங்கம் பிள்ளை ‘ராமலிங்கனார்’ என்றும் அச்சில்
சுருங்குகிறார்கள்.
தெருப் பெயர்களில் ஜாதியைக் குறிக்கும் பகுதியை முன்பே அரசாங்கம்
நீக்கிவிட்டது. இப்போது பாடப் புத்தகங்களைக் கையில் எடுக்கிறது. மேலாகப் பார்த்தால்
இந்த நடவடிக்கைகள் சரியாகத் தோன்றலாம். ஆனால் இதற்கு உண்மையான காரணம், அரசாங்கமும்
முன்னணி அரசியல்வாதிகளும் காண்பிக்கும் போலியான சமூக அக்கறையும் அதன் அதிர்வலைகளும். ஏன், எப்படி?
ஒரு ஹிந்துவாகிய எவரும் இன்ன ஜாதியைச் சார்ந்தவர் என்பதை
சட்டம் அடையாளம் கொள்ளத் தயாராகவும் ஆர்வமாகவும் இருக்கிறது. பலரும் தங்கள் ஜாதியை
அரசாங்கத்திடம் நிரூபித்து அதற்கான ஜாதிச் சான்றிதழைப் பெற்று கல்விக்கூட சேர்க்கைகளிலும்
அரசாங்க வேலைகளிலும் அவர்களுக்கு சட்டம் தரும் சலுகைகளைப் பெறலாம். அதற்கான பட்டியலில்
அரசாங்கம் எவ்வளவு ஜாதிகளைச் சேர்க்க முடியுமோ, அவைகளைச் சேர்த்து வருகிறது. அவர்களுக்கு
எவ்வளவு அதிகச் சலுகைகள் தரமுடியுமோ, அதைப் போட்டி போட்டுச் செய்கிறது. இந்தப் பலன்களுக்காகவும்
பல ஜாதிகள் மேலும் தனிப்படுவதும் வலுப்படுவதும் இயற்கை. அப்படியானால் ஒருவரின் ஜாதிப்
பெயரைக் குறிக்கும் வார்த்தையைத் தெருப் பெயர்களில் இருந்தும் பாடப் புத்தகங்களில்
இருந்தும் அரசாங்கம் ஏன் நீக்க வேண்டும்? ஏன் இந்த முரண்பாடு?
ஜாதிப் பெயர்கள் கத்தரிப்பு பற்றி அரசாங்கம் நினைக்கக் கூடிய, சொல்ல முடிகிற காரணம் இதுதான்: “தெருப் பெயர்களில், பாடப் புத்தகங்களில் ஒருவரது ஜாதி அடையாளம் வெளிப்பட்டால் அது ஜாதிப் பாகுபாடுகளைக் களைய உதவாது. அதனால் அரசு குறிப்பிட்ட ஜாதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து மற்ற ஜாதிகளுக்கு முக்கியத்துவம் குறைப்பதாகத் தோன்றும். பல ஜாதி மக்களிடையே கசப்புணர்ச்சி ஏற்படும். மற்ற விபரீதங்களும் நடக்கலாம். இதையெல்லாம் தவிர்த்து சமூக நல்லிணக்கத்தை வளர்த்து சட்டம்-ஒழுங்கையும் பராமரிக்க அரசு இத்தகைய நடவடிக்கை எடுக்கிறது.“ இது போலியான காரணம், எதையோ மறைத்து நம்மை ஏமாற்றுகின்ற விளக்கம். இதைக் கேட்டால் உங்களுக்குப் பூ வாசம் வரலாம். எதிராளி உங்கள் காதில் வைத்த பூவின் மணம் உங்கள் மூக்கையும் எட்டுமே!
ஒரு அடிப்படை
விஷயத்தைத் தெளிவு படுத்திவிட்டு மேலே பார்க்கலாம். “ஜாதிகளே இருக்கக் கூடாது.
அவைகள் ஒழிய வேண்டும். அப்போதுதான் மக்களிடையே மேல்ஜாதி-கீழ்ஜாதி எண்ணங்கள், ஜாதிப்
பூசல்கள் மறையும்” என்று யாராவது பேசினால் அது ஆழமில்லாத சிந்தனை. ஜாதி ஒழிப்பு நடக்காது, அது தேவையும் இல்லாதது –
இது தனியான வேறு விஷயம்
ஜாதி வித்தியாசத்தை மனதில் வைத்து ஒருவர் மற்றவரைத் தாழ்வாகப்
பார்ப்பது, வெறுப்பது அல்லது பதிலுக்கு வெறுப்பது என்பது பெரு நகரங்களில் மிகக் குறைவு.
கிராமப் புறங்களில் இருக்கும். இதற்கு முக்கிய காரணம், கிராமங்களில் மனிதர்கள் தங்கள் ஜாதியினரோடு
அதிகம் ஒட்டுகிறார்கள், வேற்று ஜாதியினரோடு – குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களோடு – அதிகம்
கலந்து பழகுவதில்லை. நகரங்களில், அதுவும் பெரு நகரங்களில், ஒவ்வொரு ஜாதியினரும் பல
ஜாதி மக்களோடு பழகும் வாய்ப்பும் நிர்பந்தமும் உண்டாகிறது. அடுத்தவர் என்ன ஜாதிக்காரர்
என்பது பெரும்பாலும் ஒருவருக்குத் தெரிவதும் இல்லை. இதனால் நகரங்களில், முக்கியமாகப்
பெரு நகரங்களில், எல்லா ஜாதி மக்களிடையே ஒருவித
கட்டாய இணக்கம் ஏற்பட்டு அது வாழ்க்கை முறை ஆகிறது.
மற்ற ஒரு ஜாதி மக்களை சமமாக மதிக்காமல் கீழாக நினைப்பதும் அவர்களுக்குக் தீங்கு செய்ய எண்ணுவதும் முதலில் பண்புக் குறைவானது. அது அறியாமையின் விளைவு. இரு தரப்பினரும் நமது தேசத்து மக்கள் என்பதால், அரசியல் தலைவர்கள் இந்தப் பிரச்சனையை ஊதிப் பெரிதாக்காமல் அனுதாபத்துடனும் அக்கறையுடன் அணுக வேண்டும். ஆனால் அதற்கான தூய சிந்தனையும் மக்கள் மனம் தொடும் சக்தியும் இப்போதய அரசியல் தலைவர்களுக்கு இல்லை. ஓட்டு வாங்கும் திறமை வேறு, மக்கள் மனதை ஆகர்ஷிக்கும் சக்தி வேறு. ஓட்டு வாங்குவதிலேயே குறியாக இருக்கும் நமது அரசியல் தலைவர்கள், இந்தப் பிரச்சனையிலும் தங்களுக்கு என்ன அரசியல் பலன் கிடைக்குமோ அதை நாடுகிறார்கள்.
ஜாதி பேதங்களினால் அராஜகம் அல்லது பெரிய சட்ட மீறல்கள் ஏற்பட்டால் போலீஸ் நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். மற்றபடி முன்னணி அரசியல் தலைவர்கள் ஒவ்வொரு ஜாதி மக்களிடமும் “உங்கள் ஜாதி மனிதர்களின் உயர்வுக்கும் அவர்களுக்கு அதிக அரசாங்க சலுகைகள் கிடைக்கவும் எங்கள் கட்சி வழி செய்யும். ஆகையால் உங்கள் ஜாதி ஓட்டுக்களை எங்கள் கட்சிக்கே அளியுங்கள்” என்கிற ரீதியில் நடந்து கொள்ளக் கூடாது, அப்படி சமிஞைகள் தரக் கூடாது. ஆனால் நமது முன்னணி அரசியல் தலைவர்கள் அதைத்தான் செய்கிறார்கள். இவர்களா ஜாதிப் பாகுபாடுகளை நீக்க நிஜமாகவே முனைவார்கள்?
எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் இருப்பதால் மேல்
ஜாதி-கீழ் ஜாதி என்ற நினைப்பில் ஏற்படும் அநீதி அக்கிரமங்களை அந்தச் சட்டம் பார்த்துக்
கொள்ளும் என்று முன்னணி அரசியல்வாதிகள் வேறு ஒன்றும் செய்வதில்லை. ஊழல் தடுப்பு சட்டம்
தரும் கடுகளவு பலனைத்தான் இந்தச் சட்டமும் தருகிறது. இரண்டிலும் அதுவே போதும் என்று
முன்னணி அரசியல் தலைவர்கள் உள்ளூர எண்ணக் கூடும்.
‘தாழ்த்தப் பட்ட மக்களைப் பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம். நாங்கள்தான் அவர்களின் அரண்’ என்ற தோற்றம் தந்து அந்த மக்களின் நம்பிக்கையைப் பெற்று கமுக்கமாகக் கொழிக்கும் தலைவர்கள் உருவாகிவிட்டார்கள். சில குறிப்பிட்ட ஜாதிகள் நலனுக்காக என்று அப்பட்டமாகச் செயல்பட்டு கூட்டணி பேரங்களில் ஜெயித்து, பதவி அல்லது ஆட்சிக் கனவில் மிதக்கும் தலைவர்களும் உண்டு. அனைத்து ஜாதி மக்கள் ஓட்டுக்களையும் அதிகம் பெற அந்தந்த ஜாதியிலிருந்து குட்டித் தலைவர்களையும் பொடித் தலைவர்களையும் வளர்த்து தேர்தல் வேட்பாளர்களாக நியமித்துப் பல பாதைகளில் தனக்கு, தன்னைச் சார்ந்தவருக்கு, தன் குடும்பத்திற்கு வளம் பெருகச் செய்த பெரிய தலைவர்களும் உண்டு.
இப்படியான இரட்டை வேடத் தலைவர்களைத்தான் தமிழகம் பல பத்தாண்டுகளாகப்
பார்க்கிறது. இவர்களின் அரசியல் ஏற்றத்திற்கு ஜாதிப் பிரிவினைகள் ஒரு டானிக், அவ்வளவுதான்.
ஒரு மந்திரத்தால் திடீரென்று தமிழ்நாட்டில் அனைத்து ஜாதி மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டால்
இந்தத் தலைவர்களின் அரசியல் பிழைப்பு தடுமாறும். இருந்தாலும், ஏதோ ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக
ஜாதிகளைக் குறிக்கும் சொற்களை தெருப் பெயர்கள்
மற்றும் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கிவிட்டதாக இவர்கள் தோற்றம் தருவது போலித்தனமும்
ஏமாற்று வேலையும் அல்லவா?
கடைசியாக, நாம்
ஒரு குறிப்பிட்ட வருடத்தைக் கவனத்தில் கொள்ள சினிமாவின் பக்கம் சிறிது திரும்பலாம்.
சிவாஜி கணேசன் நடித்து 1966-ல் வெளிவந்த ஒரு வெற்றித் திரைப்படம் ‘மோட்டார் சுந்தரம்
பிள்ளை’. அது மாதிரி இன்றைய தயாரிப்பாளர்கள் ஒரு புதிய சினிமாவுக்குப் பெயர் வைக்க
மாட்டார்கள். ‘மோட்டார் சுந்தரம்’ என்பதோடு நிற்கும். அல்லது நவீனமாக, ‘மெர்சிடிஸ்
சுந்தா’. ஏனென்றால், 1966 வரை தமிழகம் கண்ட முன்னணி அரசியல் தலைவர்கள் வேறு, சமூகத்தில்
பொதுவாக அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் வேறு. 1967-ல் ஆட்சி மாற்றம் வந்து இன்றுவரை திராவிடக்
கட்சிகளின் தலைவர்கள் மாறி மாறித் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மக்கள்
மனதில் அவர்கள் ஏற்படுத்துகிற தாக்கமும் கவலையும் அதிர்வலைகளும் வேறு. இந்தத் தலைவர்கள்
பெயரளவிற்கு ஏதோ செய்வார்கள். அவ்வளவுதானே?
* * *
* *
Copyright © R. Veera
Raghavan 2021