Wednesday 30 January 2019

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: பிரியங்கா அரசியலுக்கு வந்தாச்சு!



          வந்துட்டயா, பிரியங்கா காந்தி?

அரசியலுக்கு நீ ஏன் வந்தேன்னு நான் கேக்க மாட்டேன். அது சமுத்திரம் மாதிரி. அது கிட்ட யார் வேணும்னாலும் வருவா. சில பேர் காலை மட்டும் நனைச்சுக்க வருவா. சில பேர் நீச்சல் அடிக்க வருவா. சில பேர் ஆழ் கடலுக்கும் போவா. ரொம்ப பேர் அதுல குப்பையை வீசுவா. சில பேர் மாசு பட்ட கடல் நீரை சுத்தம் பண்ண வருவா. இன்னும் சில பேர் வேற தினுசு - ஒருத்தர் என்ன பண்ணினார்னா, சமுத்திரத்துலேர்ந்து தள்ளி நின்னு மத்தவாளை பார்த்தார். அப்பறம் காலை மட்டும் நனைச்சுண்டார். அப்பறம் ஒரு பெரிய மனுஷர் தாஜா பண்ணி தள்ளிவிட்டதுனால உள்ள விழுந்தார். தள்ளிவிட்டவாளே தாங்கிப் பிடிச்சதால தண்ணீர்ல முழுகாம பத்து வருஷம் தப்பிச்சு "நானும் சமுத்திர நீச்சல் வீரன்"ன்னு திருப்தி பட்டுக்கறார். ஆமா, மன்மோகன் மாமாவைத்தான் சொல்றேன்! உங்கம்மாக்கு இது நன்னாத் தெரியும். சரி, உன் கதைக்கு வரேன்.

மன்மோகன் மாமா மாதிரி நீ யார் தள்ளிவிட்டும் அரசியல்ல குதிக்கலை. பலபேர் உன்னை அழைச்சாலும் எதிர்பார்த்தாலும், இத்தனை வருஷம் நீ பட்டும் படாமலும் தள்ளி நின்ன. இப்ப வந்திருக்க. அம்மாவும் அண்ணாவும் உன்னை அரசியலுக்கு இழுத்திருக்கலாம். ஆனா உன் பாட்டி இந்திரா காந்தியை நினைவு படுத்தற மூக்கும் முகமும் உனக்கு இருக்கு. அதுவே அரசியல்ல உனக்கு பி.எஸ்.எல்.வி ராக்கெட் கட்டி விட்ட மாதிரின்னு நீ நினைச்சா தப்பில்ல.

முக சாயல் போக, உனக்கும் உன் பாட்டிக்கும் என்னெல்லாம் வெறுபாடுன்னு நீ யோசிச்சு பாத்திருக்கையா? உன் பாட்டியோட அப்பா, அதான் உன் கொள்ளுத் தாத்தா நேருவைப் பத்தி தெரியுமில்லையா? காங்கிரஸ் கட்சிலயும் அரசியல் உலகத்துலயும் அவர் ஒரு ராஜாவா இருந்தார். அவர் மறைஞ்ச போது இந்திரா காந்திக்கு 47 வயசு பூர்த்தியாக இருந்தது. நேரு இருக்கற வரைக்கும் கட்சில இந்திரா காந்திட்ட யாரும் பெரிசா எதிர்பார்க்கலை. இந்திரா தன்னோட அப்பாக்கு ஏதோ உதவியாளரா இருந்து ஒத்தாசை பண்ணினார். ஒரு தடவை கட்சித் தலைவரா கூட இருந்தார். ஆனா அரசியல்ல நேருவை காப்பாத்தறதுக்கோ, அவருக்கு பலம் சேக்கறதுக்கோ இந்திராவோட உதவி தேவைப்படலை. நேருவை வைச்சுதான் முதல்ல இந்திரா காந்திக்கு பேர். பின்னால, நேரு போனதுக்கு அப்பறம், உன் பாட்டி  தனக்குன்னு ஒரு பெரிய பேரையும்  சக்தியையும் தானே வளர்த்துண்டார். உன்னைப் பொறுத்தவரை, நீ 47 வயசை கடந்தாச்சு. இப்ப காங்கிரஸ்ல உன்னை ஒரு பொதுச்செயலாளர்னு ஆக்கிருக்கா. இந்த கட்சிப் பதவியோட நீ அரசியல்ல தீர்மானமா நுழையும்போது, உன்னோட பின்னணி மெச்சிக்கறா மாதிரி இல்லையேம்மா! எப்படின்னு கேக்கறையா?

பத்து வருஷம் மன்மோகன் மாமாவை பிரதம மாதிரின்னு ஒரு கயத்துல கட்டி வச்சுண்டு ஆட்சி அதிகாரத்தை நடத்தினா உங்கம்மா சோனியா காந்தி. அந்த சமயத்துல, அநேக தப்பு காரியங்கள் பண்ணி, கூட இருந்தவாளும் தப்பு பண்ண அனுமதிச்சு, எல்லா கெட்ட பேரையும் சம்பாதிச்சா உங்கம்மா.  உங்க அண்ணா ராகுல் காந்தி இருக்கானே, அவன்தான உனக்கு பொதுச்செயலாளர் பதவி குடுத்தான்? அவன் சங்கதி ஊருக்கெல்லாம் பிரசித்தம். குழந்தைத்தனம், பித்துக்குளித்தனம் இது மட்டுமே இருந்தாலும், நேரு குடும்பத்து ரத்தம் உடம்புல ஓடினா அதுவே பிரதம மந்திரி ஆகறதுக்கு தகுதின்னு நம்பற அசட்டுப் பிள்ளையா இருக்கான் அவன். இதான் அரசியல்ல உனக்கு பொறந்த வீட்டு சீர். புகுந்த வீட்டை பார்த்தா, உன் ஆத்துக்காரர் வத்ராவோட பிரதாபத்தைக் கேட்டு முகம் சுளிக்கறா மாதிரித்தான் இருக்கு. 

     உங்க பாட்டி அரசியல்ல பலமா நுழைஞ்ச போது அவாளுக்கு உன் மாதிரி பொறந்தாத்து புக்காத்து பழி இல்லை - பொறந்தாத்து பெருமையும் மகிமையும் மட்டும் இருந்தது. இன்னொண்ணு, உங்க பாட்டி தீவிரமா அரசியலுக்கு வந்த சமயம், காங்கிரஸ் கட்சி இப்ப மாதிரி நோஞ்சானா இல்லை, உங்க பாட்டியும் தன் குடும்பத்துல யாரையும் தேத்தி விடறதுக்காக வரலை. நீயோ, தத்தி தடுமாறர உன் சகோதரனை காப்பாத்தறதுக்காக வந்திருக்க - இதுல ஒரு ரகசியமும் இல்லை. பாட்டி மூக்கை மட்டும் பிரதானமா வச்சுண்டு அரசியல்ல நீ எப்படிம்மா பொழைச்சு முன்னுக்கு வரப் போற, காங்கிரஸ் கட்சியை கைதூக்கி விடப் போற?

நீ காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தணும்னா உங்க பாட்டிக்கு இல்லாத ஒரு சவாலும் உனக்கு இருக்கு. அதான், மோடின்னு தேசம் முழுக்க பரவலா மக்கள் ஏத்துண்ட ஒரு பா.ஜ.க தலைவரோட நீ மோதணும். அவருக்கு இருக்கற மக்கள் செல்வாக்கையும் நீ குறைக்கணும். அவருக்கோ உங்கம்மா, உன் சகோதரன் மாதிரியானவா எதிர் நோக்கற ஊழல் புகாரோ கெட்ட பேரோ கிடையாது. ஒரு பிரதமரா அவர் பண்ணின சாதனைகளே அவருக்கு பெரிய அரசியல் சொத்து. அவர் பொதுக் கூட்டத்துல பேசி நீ கேட்டிருக்கையா? மனுஷன் மக்கள்கிட்ட என்னமா பேசறார்! மக்களும் என்ன உற்சாகமா அவர் பேச்சை கேக்கறா! உனக்கு மூக்குன்னா அவருக்கு நாக்கு.  

இப்படில்லாம் நான் உன்னைப் பத்தி யோசிச்சுப் பாக்கறபோது, நாம இருக்கறது இந்தியான்னு எனக்கு சட்டுனு உறைக்கறது. எமர்ஜென்சி கொடுமைகளை ஏற்படுத்தின உன் பாட்டி இந்திரா காந்தியையும் காங்கிரஸ் கட்சியையும் ஒரு தேர்தல்ல மிதிச்சு தள்ளினவா நம்ம நாட்டு மக்கள். உங்க பாட்டியே அந்த மாதிரி ஒரு உதையை எதிர்பாத்திருக்க மாட்டா. ஆனா மூணே வருஷம் கழிச்சு அடுத்த தேர்தல் வந்தபோது, தள்ளி வச்ச உங்க பாட்டியையும் காங்கிரஸ் கட்சியையும் திரும்பவும் மடில எடுத்து வச்சுண்டாவா அதே மக்கள்தான். இதை நினைச்சுப் பார்த்தா உனக்கு தெம்பு கிடைக்கலாம். தனக்கு வந்த கெட்ட பேர்லேருந்தே உன் பாட்டி உடனே தப்பிச்சு வந்தபோது, உங்க அம்மா, உங்க அண்ணா, உங்க ஆத்துக்காரர் பேர்ல வந்த பழியெல்லாம் உனக்கு ஒரு தடையே இல்லை, நம்ம தேசத்து மக்கள் 'ரொம்ப நல்லவா'ன்னு நீ நினைக்கறையோ என்னமோ! 

நம்ம தேசத்து அரசியல்ல, மக்களுக்கு நல்லது பண்ணின தலைவருக்கு பெரிய எதிர்காலம் உண்டுன்னு உத்தரவாதம் இல்லை, கெடுதல் பண்ணின தலைவருக்கு எதிர்காலம் கிடையாதுன்னும் நிச்சயம் இல்லை.  அரசியல்வாதிகளோட சொர்க்கபுரி இந்தியான்னு நன்னா புரிஞ்சுண்டவாள்ள நீயும் ஒருத்தி. இதைத்தானம்மா உன்னோட அரசியல் பிரவேசம் தண்டோரா போட்டு சொல்றது? ஆனா என்ன, தண்டோரா சத்தம்கூட காதுல விழாம 'ரொம்ப நல்லவாளா' இந்திய மக்கள் கோடி கோடியா இருக்கா. நல்லவாள எப்படியும் ஆண்டவன்  கைவிடமாட்டான்னு நினைச்சு சமாதானப் பட்டுக்கறேன். வேற வழி?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019



7 comments:

  1. பிரியங்காவின் நுழைவு-
    1. ராஹுலால் முடியாது என்பதை ஒப்புக்கொள்ளல்
    2. குடும்ப ஆட்சி -- ஒரு உறுப்பினர் தோற்றுவிட்டார் என்றால் குடும்பத்திற்குள் அடுத்தவருக்கு வாய்ப்பு
    3. ஆண் பிள்ளைக்கு முதன்மை. அவனால் முடியாது என்ற நிலை இருந்தால்தான் பெண்பிள்ளைக்கு வாய்ப்பு.
    4. அரசில் என்பது விருப்பப்படி சேருவதும், விலகுவதும் --- என்கின்ற விளையாட்டு

    ReplyDelete
  2. படித்தேன் ரசித்தேன்.but நம்ம மக்கள் மனநிலை கணிக்கிறது கடினம். Whom why when they accept is sometimes a mystery

    ReplyDelete
  3. படித்தேன் ரசித்தேன்.... PK natarajan srirangam

    ReplyDelete
  4. அம்புஜம் பாட்டி, இப்படி நன்னா தொவச்சு எடுத்துட்டேளே... பொம்மனாட்டினு கொஞ்சம் இரக்கம் காட்டப்படாதோ !!

    ReplyDelete
  5. PVG doesn't deserve this recognition. Best to ignore.

    ReplyDelete
  6. உற்சாகப்படுத்தப்போறீங்கன்னு பார்த்தா பிரியங்காவை அவர் கொள்ளூப்பாட்டி காலத்திலிருந்து அது இதுன்னு சொல்லி மிரள வைத்துவிட்டீர்கள். மூக்கு மூக்குன்னு முன்னூறு தரம் சொல்லி, பிரியங்காவிடம் சொல்லுகிறபடி ஒன்றும் விஷயமில்லை என்று தாழ்த்தி விட்டீர்கள். ஆள் தோற்றத்தை வைத்து மக்கள் ஏமாந்தால் மட்டும்தான் அவ்ருக்கு வாய்ப்பு என்றும் சுட்டிக்காட்டி விட்டீர்கள். கட்சியைக்காபாற்ற கங்கணம் கட்டி வந்தவரைக்காப்பாற்ற யார் வரப்போகிறார்களோ? பிரியங்கா, பொது விஷயங்களில் இதுவரை எதிலும் கருத்து கூறியதாக எனக்கு நினைவில்லை. இனிமேல் என்னதான் கருத்து உதிர்க்கப்போகிறார் என்று பார்க்கலாம். அதன் பிறகுதானே அது எவ்வளவு தெளிவானது, சரியானது என்பதெல்லாம் தெரியும். அரசியலில், சினிமா மாதிரி ஒரு நபரை (அவர் ஒரு குடும்பத்தின் உறுப்பினர் என்பதால்) திடீரென்று தலைமை பதவிக்கு அறிமுகம் செய்கிறார்கள். இதை அந்த கட்சியிலுள்ளவர்கள் மட்டும் அங்கீகரித்தால் போதாது. பொதுஜனமும் ஆமோதிக்க வேண்டும். நிராகரிப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்.

    ReplyDelete