Monday 21 January 2019

அரசியல் அதிகாரம்


  
சாரி திருவள்ளுவர் சார்! நீங்கள் விட்டதை இப்போது நிரப்பவேண்டி இருக்கிறது. 

இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில், ஒரு குறிப்பிட்ட துறையின் தன்மைகள் என்ன, அந்தத் துறையில் பிரகாசிப்பது எப்படி, என்பதற்கான வழிகாட்டுதல் இல்லாமல் பலபேர் அவதிப்படுகிறார்கள். அதுதான் அரசியல் துறை.

நீங்கள் ’இனியவை கூறல்’, ’கல்வி,’ ’கூடா நட்பு’, ’வாய்மை’, ’விருந்தோம்பல்’ என்று பலவாறாக 133 தலைப்புகளில் திருக்குறள்கள் எழுதி இருக்கிறீர்கள். இந்த ஒவ்வொரு தலைப்பும் ஒரு ‘அதிகாரம்’ எனப்படும்.  ஆனால், இதில் ‘அரசியல்’ அதிகாரம் இல்லையே! அரசியல் அதிகாரம் பற்றி அனைவரும் சந்தேகமில்லாமல் அறிந்துகொள்ளட்டும் என்ற நல்லெண்ணத்தில் இதோ, பத்து சிந்தனைகள் புதிதாக வெளியிடப் படுகின்றன. மன்னியுங்கள் வள்ளுவரே!



திருக்குறளின் பல ‘அதிகாரங்களி’லிருந்து
(பலரும் அறிந்தது)  
அரசியல் அதிகாரம்
(அனைவரும்
அறியவேண்டியது)


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

அரசில் முளைக்கும் ஊழலெல்லாம் ஆளும்
தலைவனுக்கே உறவு.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
யாகாவாராயினும் பிடிக்க காக்கா, பிடிக்காதார்
சோகமடைவர் புறம் தள்ளப்பட்டு.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
கற்க கசமுசா கப்ஸா கற்றபின்
கறக்க அதற்குத் தக.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்.

குழல் இனிது யாழ் இனிது என்பவர் தலைவர் பெறும்
வாழ்த்துச் சொல் கேளாதவர்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. 

கொடுப்பதை மறப்பது நன்றன்று பெறுவதை
வெடுக்கென மறப்பது நன்று.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.

ஊழல்கொண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
அழுதுகொண்டு பின் தங்குபவர்.

அன்பும் அறனும் உடைத்தாயின்
இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

பணமும் பதவியும் உடைத்தாயின்
பொது வாழ்க்கை பலமும் பயனும் அது.

இன்னா செய்தாரை ஒறுத்தல்
அவர் நாண
நன்னயம் செய்து விடல்.

இன்னா செய்தாரை
ஒடுக்குதல் அவர் நாண
பதவியளித்து அமைதி செய்து விடல்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.

எச்சொத்து யார் யார் வசம் கொடுப்பினும் அச்சொத்து
நீதிமன்றம் காணாது
வைப்பதறிவு.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
எல்லா சமாதியும் சமாதியல்ல தலைவர்க்கு
மெரினா சமாதியே சமாதி.



* * * * *


Copyright © R. Veera Raghavan 2019


4 comments:

  1. இன்றும் என்றும் பொருந்துவன

    ReplyDelete
  2. Excellent Sir! Never realised your scholarship in Tamil can be so innovative ! Keep up the good work.

    ReplyDelete
  3. கிண்டலும் கேலியும் உடைத்தாயின் இவ்வாழ்க்கை
    எஞ்ஞான்றும் சகிக்கப் பெறும் :)

    ReplyDelete