Tuesday, 5 February 2019

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: மேற்கு வங்க முதல்வர் குதிக்கிறார். தை தா! மம்தா!



மம்தா மாமிக்கு இவ்வளவு ஆகாத்தியம் வேண்டாம். ஒண்ணுமில்லாத்துக்கு இப்படியா குதிப்பா? அதுவும் ஒரு மாநில முதல் அமைச்சரா இருந்துண்டு?

கொல்கத்தால ராஜீவ் குமார்னு ஒரு போலீஸ் கமிஷனர் இருக்கார். இப்போதைக்கான விவாகாரம் அவரை சுத்திதான் ஆரம்பிச்சது. என்னன்னா, மேற்கு வங்காளத்துல சீட்டு நிதிநிறுவன மோசடிகள் பெரிய அளவுல நடந்து லட்சக்கணக்கான மக்கள் பணம் ஸ்வாகா ஆனது. அதையெல்லாம் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, மத்திய அரசாங்கத்து சி.பி.ஐ போலீஸ் விசாரணை பண்றா. இந்த கேஸை மேற்கு வங்க போலீஸ் நடுநிலையா விசாரிக்க மாட்டா, அவா இந்த கேஸுக்கு சரியில்லைன்னுதான் சுப்ரீம் கோர்ட்டே சிபி.ஐ விசாரிக்கணும்னு உத்தரவு போட்டிருக்கா.  ரண்டு நாளைக்கு முன்னால, சி.பி.ஐ போலீஸ்காரா இந்த கேஸுக்காக அந்த ராஜீவ் குமாரையும் விசாரணை பண்ணணும்னு கொல்கத்தா அவர் வீட்டுக்கு போயிருக்கா.  அப்ப உள்ளூர் போலீஸ்காரா சி.பி.ஐ போலீஸ்காராளை வீட்டுக்குள்ள வரவிடாம வாசல்லயே தடுத்து, வலுக்கட்டாயமா அப்புறப் படுத்திட்டா. இப்ப, மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி என்ட்ரி குடுத்து டிராமாவை ஆரம்பிக்கறா.

        மம்தா மாமி நேரா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கே போனா.   அவரும் உடனே  வெளில வந்து முதல் அமைச்சர் பக்கத்துல பாதுகாப்பா நின்னுண்டார். என்ன காரணமோ, அவா ரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் எப்பவுமே பாதுகாப்பா இருப்பான்னு தோண்றது. ”ராஜிவ் குமாரை விசாரிக்க சி.பி.ஐ போலீஸ் வந்திருக்கக் கூடாது. சி,பி,ஐ போலீஸை அனுப்பின மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கண்டிச்சு நான் தர்ணா பண்ணப் போறேன்” அப்படின்னு பேக்குத்தனமா மம்தா அறிக்கை விட்டார். ”ராஜீவ் குமார் மாதிரி ஒரு தங்கமான போலீஸ் அதிகாரியை பாக்க முடியாது” அப்படின்னும் அவருக்கு சர்டிபிகேட் குடுத்திருக்கா அந்த முதல் அமைச்சர்.

பக்கத்துலயே ரோட்டுல ஒரு பெரிய மேடை போடச் சொல்லி அதுல ஏறி உக்காந்துண்டா மம்தா. பத்திரிகைக்காராளும் டெலிவிஷன்காராளும் வந்துட்டா. மம்தா மாமி பேசிண்டே இருந்தார். ”தேசத்தை காப்பாத்துங்கோ! ஜனநாயகத்தை காப்பாத்துங்கோ! அரசியல் சட்டத்தை காப்பாத்துங்கோ! ஜனங்களை காப்பாத்துங்கோ! ஸாரே ஜஹான் ஸே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா!” அப்படின்னு அறைகூவல் விட்டா. இதையெல்லாம் கேட்ட போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார், ”என் ஒருத்தனுக்கு இத்தனை மகத்தான அம்சமா!”ன்னு மனசுக்குள்ள தன்னோட மகிமையை நினைச்சு பூரிச்சு போயிருப்பார்.   

       மம்தா மாமி தர்ணா பண்ணி பேசும்போது, ”நான் சாகறதுக்கும் தயார்!”னு மனசை உருக்கற ஒரு வார்த்தை பேசினாரே, கேட்டேளா? அது ஏன், என்ன, எதுக்குன்னு புரிஞ்சதா உங்களுக்கு? அது உங்களுக்கு புரியவே இல்லைன்னா, உங்க புத்தி பிசகாம இருக்குன்னு நீங்க திருப்தி பட்டுக்கலாம்.

லோக் சபா தேர்தல்ல மோடியை எதிர்க்கறதுக்கு தேசிய அளவுல ’மஹா கத்பந்தன்’னு எதிர்க்கட்சிகள் ஒரு பெரிய கூட்டணி அமைச்சிருக்காளே, அந்த கட்சி தலைவர்கள் பல பேர் மம்தாவோட தர்ணாவுக்கு ஆதரவுக் குரல் குடுத்தா. ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், கேஜ்ரிவால், ஸ்டாலின் இப்படி பல தலைவர்கள் அதுல உண்டு. 

     தர்ணா சமயத்துல, ”இது ஒரு சத்தியாகிரகம்!” அப்படின்னும் மம்தா மாமி முழங்கினா. மனசுலயும் சுபாவத்துலயும் துளிக்கூட பணிவு இல்லாதவா எப்படி சத்தியாகிரகத்தை அனுஷ்டிக்க முடியும்? தமாஷ் பண்றவா என்னவும் பேசலாம், அவ்வளவுதான். இந்த களேபரம்லாம் நடந்த மறுநாளுக்கு மறு நாள் – அதாவது இன்னைக்கு – விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு அவசரமா வந்தது.  

      மம்தா மாமியும் எதிர்க்கட்சி தலைவர்களும் சொன்ன ஆட்சேபணை எதுவும் சுப்ரீம் கோர்ட்ல செல்லுபடி ஆகல. இன்னிக்கு சுப்ரீம் கோர்ட் என்ன உத்தரவு போட்டிருக்குன்னா, “பாரு ராஜீவ் குமார், விசாரணைக்காக சி.பி.ஐ கொல்கத்தாவுக்கு வந்து நீ இருக்கையா இல்லையா, எப்ப அகப்படுவ, அப்படின்னு முன்ன மாதிரி தேட வேண்டாம். சி.பி.ஐ கொல்கத்தாவுக்கே வரவேண்டாம். மேகாலயா மாநிலத்து ஷில்லாங் நகரத்துக்கு சமத்தா நீயே போய், அங்க சி.பி.ஐ-க்கு முன்னால ஆஜர் ஆகி அவாளோட விசாரணைக்கு முழுசா ஒத்துழைக்கணும். இனிமே சி.பி.ஐ உன்னைத் தேடி வரதுக்கு பதிலா, நீ சி.பி.ஐ-யை நாடிப் போய் நிக்கணும்” அப்படின்னு தொனிக்கற மாதிரி, கௌரதையான சட்ட மொழில சொல்லிடுத்து சுப்ரீம் கோர்ட். இந்த விசாரணை நடக்கும்போது ராஜீவ் குமாரை சி.பி.ஐ கைது பண்ணக் கூடாது அப்படின்னும் சுப்ரீம் கோர்ட் சொல்லிருக்கு.

இப்ப என்ன ஆச்சு? இனிமே ராஜீவ் குமார் விசாரணைக்கு வராம ஒளிய முடியாது, தப்பிக்க முடியாது.  அப்படிப் பண்ணினா அது சுப்ரீம் கோர்ட் அவமதிப்புன்னு ஆகலாம். அவரை இப்போதைக்கு கைது பண்ணவேண்டாம்னு சுப்ரீம் கோர்ட் சொன்னது, அரை லிட்டர் வேப்பெண்ணைல ஒரு சிட்டிகை சக்கரை போட்டா மாதிரிதான்.  சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு கட்டுப்பட்டு இனிமே ராஜீவ் குமார் ஒழுங்கா விசாரணைக்கு வரணும், பதில் சொல்லணும். காலா காலத்துக்கும், அவசியமிருந்தா கூட அவரை சி.பி.ஐ கைது பண்றதுக்கு வழியே இல்லைன்னு அர்த்தமில்லை. 

சி.பி.ஐ விசாரணைல ராஜீவ் குமார் குற்றவாளிங்கற சந்தேகம் வரலைன்னா அவர் பேர்ல கேஸ் வராது. அதுக்கு மாறா, அவர் ஒரு குற்றவாளியா இருந்ததுக்கு ஆதாரம் கிடைச்சா அவர் மேலயும் கேஸ் வரும் – அவ்வளவுதான?  குஜராத்ல உள்துறை மந்திரியா இருந்த அமித் ஷாவைக்கூட, யூ.பி.ஏ அரசாங்கத்து சி.பி.ஐ கைது பண்ணி விசாரணை பண்ணினது. விசாரிக்க முகாந்திரம் இருந்தா, ஒரு போலீஸ் கமிஷனரையும் விசாரிச்சா என்ன தப்பு? அவரை சி.பி.ஐ விசாரிக்கறதே அரசியல் சட்டத்துக்கு முரண் அப்படின்னு கோஷம் போட்ட மம்தா பானர்ஜி, அவரை சி.பி.ஐ விசாரிக்கலாம்னு சுப்ரீம் கோர்ட் சொன்னதுக்கு அப்பறம் “இந்த உத்தரவும் எங்களுக்கு வெற்றி!” அப்படிங்கறார்.  தலை ’கிர்ர்ர்’ருங்கறது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட ஒரு புலன் விசாரணை விஷயத்துல விவஸ்தை இல்லாம நுழைஞ்சு, மம்தா மாமி எதுக்கு இப்படி அதகளம் பண்ணினா? அதுவும், மத்திய அரசு அதிகாரத்துக்கும் மாநில அரசு அதிகாரத்துக்கும் ஏதோ அரசியல் சட்ட அடிப்படையிலேயே மோதல் வந்த மாதிரி எதுக்கு பிகு பண்ணிண்டா? இந்த பித்துக்குளித்தனத்தை எதுக்கு எதிர்க் கட்சித் தலைவர்களும் ஆதரிச்சா?  ஏன்னா, இப்ப சி.பி.ஐ-யை எதிர்த்தா பிரதமர் மோடியையும் பெரிசா எதிர்க்கறா மாதிரி காட்டிக்கலாம்னு மம்தா பானர்ஜி கணக்கு போட்டா. தானே அதை முன்னால நின்னு பண்ணினா, ’மோடியை எதிர்க்கற எதிர்க்கட்சி தலைவர்கள்ளயே நம்மதான் ராணின்னு எல்லாருக்கும் தெரிய வரும், நாம ஆரம்பிச்ச இந்த தர்ணாவுல மத்த எதிர்க்கட்சி தலைவர்கள்ளாம் நமக்கு பின்னாலதான் நிக்கணும், இந்த மோடி எதிர்ப்புல எல்லா பெத்த பேரும் நமக்குதான் கிடைக்கும். வர லோக் சபா தேர்தல்ல, நம்ம மஹா கத்பந்தன் கூட்டணி மோடியை ஜெயிச்சு மத்தில ஆட்சி அமைக்கும்னா, ராகுல், மாயாவதி, அகிலேஷ், மத்த எல்லாரையும் பின்னுக்கு தள்ளிட்டு நான் பிரதம மந்திரியா ஆகறதுக்கு இந்த களேபரம் ஒரு தடாலடி ஆரம்பம்’ அப்படின்னு மம்தா மாமி அசட்டுக் கற்பனை பண்ணி ஏற்பாடு செஞ்ச கூத்துதான் இதெல்லாம்.  

தி,மு.க தலைவர் ஸ்டாலினைப் பொறுத்த வரை,  ’இந்தி எதிர்ப்பெல்லாம் தமிழ் நாட்டுல நடக்காம இருந்தா எவ்வளவு நன்னா இருக்கும்? நானும் இந்தி படிச்சு வடநாட்டு மேடைகள்ள இந்திலயே பேசி, மஹா கட்டபொம்மன்கற பேர் மாதிரி ஏதோ இந்தி பேர்ல ஒரு கூட்டணி இருக்கே, அதுல முக்கிய தலைவரா வந்து, அது ஜெயிக்கும்போது மத்திய அரசுல ’உதவி பிரதம மந்திரி’ன்னு பதவியாவது வாங்க தோதா இருக்கும்’னு நினைக்கலாம்.

ராஜீவ் குமார் என்ன பண்ணினாரோ, ஏது பண்ணினாரோ நமக்கு தெரியாது.  ஆனா அவருக்கு இப்படி மம்தா மாமி மாதிரி ஒரு அனுகூல சத்துரு வந்திருக்க வேண்டாம். இந்த சி.பி.ஐ போலீஸ் அதிகார எதிர்ப்பு விஷயத்துல, மம்தா மாமி இப்ப சிரிப்பா சிரிக்கறதால அவருக்கு ஒண்ணும் பாதகமில்லை. அவர் அடிக்கடி இப்படி தாறுமாறா நடந்துக்கறது வழக்கம். ஆனா அவரை சாய்ஞ்சு இருந்த போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் பேரு இப்ப ரிப்பேர்தான். ஒரு வேளை, பெரிய இடத்துல சேர்ந்துண்டு அவரும் தப்புத்தாண்டா பண்ணிருந்தா, மம்தா புண்ணியத்துல இன்னிக்கு சுப்ரீம் கோர்ட்டே புது உத்தரவு போட்டு விசாரணை வேகம் எடுத்திருக்கு - எல்லாம் நன்மைக்கேன்னு வச்சுக்கலாம். 
   
கடைசியா, டிராமா அரசியலைப் பத்தி பொதுவா ஒரு வார்த்தை. வெள்ளைக்காரன் இந்தியாவுல கொள்ளை அடிச்சான், ஆனா கூத்தடிக்கலை. சுதந்திர இந்தியாவை ஆள்றவா ரண்டையும் பண்றான்னு உங்களுக்கு தோண்றதா? என்ன சொல்றேள்?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019


4 comments:

  1. Stalin Mama went to Kolkata rally and performed a beautiful lungi dance. Pramadham
    Besh besh

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சார்..அப்படியே புட்டு புட்டு வச்சிருக்கேள். சூப்பர்

    ReplyDelete
  3. naalukku naal ungal comments merugerikondae pogiradhu... Very nice!!

    ReplyDelete
  4. “ஸீபிஐ விசாரணையினா மம்தாவுக்கு எதுவும் பாதகமில்லை, போலிஸ் அதிகாரிக்குத்தான்” என்ற கணிப்பில் நான் மாறுபடுகிறேன். ம்மதாவுக்குத்தான் சிபிஐ விசாரணையினால் இடைஞ்சல் அதிகம். மறைப்பதற்கான விஷயம் அவரிடம் நிச்சயம் இருக்கவேண்டும். இது அவர் நடத்திய வெற்று நாடகம் மட்டுமல்ல.
    சிபிஐ ஐத்தேடி போலிஸ் அதிகாரி போக வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு மமதாவுக்கு பலத்த அடி என்பது உங்கள் விளக்கத்தால்தான் புரிந்தது. அவர் சொன்னது போல இது மமதாவின் வெற்றி என்றே நான் நினைத்தேன். நீதிமன்றம் கைது செய்ய தடை ஆணை பிறப்பித்தது மட்டும் பிரபலப்படுத்தப்பட்டது.

    ஸ்ஸிடாலின்இந்தி படிக்காததால் ஏற்பட்ட இடைஞ்சல் பற்றி எனக்கு தோன்றவேயில்லை.

    மொத்தத்தில் பொருள் பொதிந்த கருத்துக்கள்.

    ReplyDelete