Tuesday, 17 November 2026

கேள்வி-பதில் (17.11.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: ஒரு அரசியல் கட்சியின் தலைவர் தேர்தலில் வென்று முதலமைச்சர் பதவியில் அமர்வதற்கு முன், அந்தப் பதவியில் அமர்ந்த பின், அடுத்த தேர்தலில் தோற்று அந்தப் பதவியை இழந்த பின் - இந்த மூன்று நிலைகளில் அவருக்கு எது உந்துசக்தி?

 

பதில்: பதவிக்கு வரும் முன், ஆசை; பதவிக்கு வந்த பின், சப்புக் கொட்டும் ஆசை; பதவியை இழந்த பின், காழ்ப்பு.

 

 

2. கேள்வி: திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது பாடல் பாடியவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் புதிய தலைவர் புஷ்பவனம் குப்புசாமி. அவரது பாடலில், "நம் தமிழக முதல்வர் போல வேலெடுத்து பகை முடித்த வேலவனின் தாழ் பணிந்து வேண்டும் வரம் கேளுங்களேன்; வெற்றி உண்டு பாருங்களேன்; நம் தமிழக முதல்வர்போல வேண்டும் வரம் கேளுங்களேன்" என்ற வரிகளும் இருந்தன. அதற்குக் கண்டனங்கள் வரவே, "முருகனை வேண்டினால், வேண்டிய வரம் கிடைக்கும் என்பதற்கு சாட்சியாக, முதல்வர் விஜய்யைக் குறிப்பிட்டேன்" என்று விளக்கம் சொல்லியிருக்கிறார் புஷ்பவனம் குப்புசாமி. அவர் விளக்கம் சரியா?

 

பதில்: "நான் தேடிப் போகாவிட்டாலும், இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவி எனக்குக் கிடைத்த மாதிரி, நீங்கள் திறமையை வளர்த்துக் கொண்டால் உரிய பதவியும் புகழும் உங்களுக்குக் கிடைக்க முருகன் அருள் புரிவான். அவை கிடைத்த பின்னர் உங்களுக்குப் பதவி கொடுத்தவருக்கு நீங்கள்  ஜால்ரா தட்ட வேண்டாம். முருகனைத் தொழுதால் போதும்" என்ற பொருளில் புஷ்பவனம் குப்புசாமி பாடியிருந்தால் நல்லது.

 

 

3. கேள்வி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விடாமல் பிரதமர் மோடியை 'நேருக்கு நேர்' பொது விவாதத்திற்கு அழைத்து வருகிறாரே, ஏன்?

 

பதில்: ராகுல் காந்தி என்ன முயன்றும் நரேந்திர மோடியை, பாஜக கூட்டணியை, மத்திய  அரசு அமைப்பதற்கான லோக் சபா தேர்தல்களில் ஜெயிக்க முடியாமல் இப்போது மோடியை அவர்  'ஒத்தைக்கு ஒத்தை' விவாதத்திற்கு அழைக்கிறார். மோடியை நோக்கி, 'வா வாத்யாரே மேடையாண்டே, நீ வராங்காட்டி நா உடமாட்டேன்' என்று மனோரமா ஸ்டைலில் ராகுல் பாடாத குறைதான்.

 

மோடியோடு உட்கார்ந்து விவாதம் என்ற பெயரில் ராகுல் என்ன பிதற்றினாலும், திருதிரு என்று எப்படி முழித்தாலும், ராகுல் மீதும் அதிக மீடியா வெளிச்சம் விழும். அதை அனுபவிக்க ராகுலுக்கு ஆசை. இதுதான் விஷயம்

 

ராகுல் காந்தி அவ்வப்போது அமெரிக்கா சென்று அங்கு பல ஊர்களில் மேடை ஏறி, பத்திரிகையாளர்களைச் சந்தித்து, பேட்டிகள் கொடுத்து, இந்தியாவை இளக்காரம் செய்து, மோடியைப் பழிக்கிறார். இன்னொரு நாட்டிற்குச் சென்று அங்கு மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் செய்யாமல் ராகுல் காந்தி தனது ஜனநாயகக் கடமையை ஆற்று ஆற்று என்று ஆற்றுகிறார். சொந்த நாட்டில் அதே போல் ஆற்ற முடியாதா?

 

 

4. கேள்வி: கோவையில் உள்ள 'பெரியார் அறிவுலக'த்தின் நூலகம், 'அகல் விளக்கு' பதிப்பகத்திடமிருந்து, ஏஐ வழியில் எழுதப்பட்ட சுமார் 1800 போலிப் புத்தகங்களைக் கொள்முதல் செய்துள்ளது. 'அகல் விளக்கு' எனும் பதிப்பகத்தின் வண்டவாளம் தெரியவில்லை, அது பதிப்பித்த குப்பைப் புத்தகங்கள் பற்றியும் தெரியவில்லை என்றால், அது என்ன அறிவுலகம்?

 

பதில்: பதிப்பகம் இப்படி நினைக்கலாம்: பெரியார் அகல் உலகம்.

 


5. கேள்வி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, Belonging - A Journey of Love என்று அவருடைய சுயசரிதைக்குப் பெயரிட்டிருக்கிறார். ராகுல் காந்தி தனது சுயசரிதையை எழுதினால் அதற்கு என்ன தலைப்பு கொடுப்பார்?

 

பதில்: Longing for PM's Chair. A Journey of Hate


பகுதி 156 // 17.11.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

 

Friday, 13 November 2026

கேள்வி-பதில் (13.11.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜாவுக்கு ஒரு தவெக எம்.எல்.ஏ தவறான வாட்ஸ்அப் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு பற்றிக் கருத்து தெரிவித்த விசிக அமைச்சர் வன்னியரசு, "கலெக்டர் பத்மஜா ஒரு நேர்மையான அதிகாரி.  ஆளும் கட்சிக்கோ எதிர்க் கட்சிகளுக்கோ இணங்காமல், அவர் சட்டத்தின்படி செயல்படுகிறவர். விசிக நிர்வாகிகள் அளித்த பரிந்துரைகளையும் அவர் ஏற்காமல், நிர்வாக முடிவுகள் விதிகளின் படி அமைய வேண்டும் என்று இருக்கிறவர். பொதுவாழ்வுக்குள் நுழைகின்ற, அரசுத் துறையில் வேலை செய்கின்ற, பெண்களைப் பாதுகாப்பது ஒரு கடமை" என்றெல்லாம் பேசியிருக்கிறாரே?

 

பதில்: விசிக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சிக்குத் தலைமை வகிப்பது தவெக. அந்த தவெக-வைச் சார்ந்த ஒரு எம்.எல்.ஏ பற்றி, கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு அந்த எம்.எல்.ஏ அனுப்பியதாகச் சொல்லப்படும் வாட்ஸ்அப் செய்தி பற்றி, அமைச்சர் வன்னியரசுவிடம் கேள்வி கேட்கப்பட்டால், 'அந்த தவெக எம்.எல்.ஏ, மக்கள் சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பொதுவாழ்க்கைக்கு வந்தவர். பண்பாளர். அத்தகைய மக்கள் பிரதிநிதி மீது, ஆதாரமில்லாத ஒரு குற்றச் சாட்டை யாரும் முன்வைக்க வேண்டாம்' என்ற வகையில் ஏன் வன்னியரசு பதில் சொல்லவில்லை?

 

கலெக்டரைப் பற்றி வன்னியரசு நல்லதனமாக வெளிப்படையாகப் பேசுகிறார். உள்விவகாரங்களை நம்பகமாக அறிந்தது போல் தொனிக்கும் வன்னியரசு, யாரையோ மறைமுகமாகக் குற்றம் சாட்டுகிறார்.

 

 

2. கேள்வி: கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு, ஒரு தவெக எம்.எல்.ஏ தவறான வாட்ஸ்அப் குறுஞ்செய்தியை அனுப்பினாரா என்பது பற்றி சமூக வலைத்தளங்களில், தொடர்ந்து பதிவுகள் வருகின்றன. டிவி மற்றும் பத்திரிகைகளிலும் விஷயம் தினமும் அடிபடுகிறது. அந்தக் கலெக்டர் பொதுவெளியில் ஒரு தகவலும் அளிக்கவில்லை. முதல்வர் விஜய்யும் ஏன் அதுபற்றி மக்களுக்கு ஒன்றுமே சொல்லவில்லை? ஒரு பெண் கலெக்டருக்கு உரித்தான பாதுகாப்பும் கௌரவமும் சம்பத்தப்பட்ட விஷயம் இது. ஒரு ஆளும் கட்சி எம்.எல்.ஏ-யின் நன்னடத்தை தொடர்பான விஷயமும் கூட. இருந்தும் ஏன் முதல்வர் விஜய் இதுபற்றி வாய் திறக்கவில்லை?

 

பதில்: இந்தக் குற்றச்சாட்டை மறுத்துப் பேசத்தான் முதல்வர் விஜய்க்கு விருப்பமாக இருக்கும். ஆனால் அவர் மறுப்பு அறிக்கை வெளியிட்ட பின், வலுவான ஆதாரங்கள் வெளிவந்து எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டை ஊர்ஜிதப் படுத்தினால் முதல்வரின் பேர் ரிப்பேர் ஆகுமே? அந்த ஆபத்தை உணர்ந்து விஜய் ஒன்றும் சொல்லாமல் இருக்கலாம்.

 

 

3. கேள்வி: காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவு தலைவரும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான சாம் பிட்ரோடா, "ராகுல் ஒரு இளம் தலைவர்; சர்வதேசத் தலைவரும் கூட" என்று கூறியிருக்கிறாரே?

 

பதில்: ராகுல் காந்தியின் வயது 56. அந்த வயது மத்திய அரசு ஊழியர், 4 வருடங்களில் ரிடையர் ஆவார். தாத்தா பிரமோஷனும் கிடைத்திருக்கலாம்.

 

சாம் பிட்ரோடா சொன்ன முதல் பாதியில் ('இளம் தலைவர்') அரை உண்மை இருக்கும். இரண்டாவது பாதியை ('சர்வதேசத் தலைவர்') சொல்பவர்களுக்குப் பளார் என்று ஒரு அறை கொடுத்து உண்மையை விளக்க வேண்டும்.

 

 

4. கேள்வி: "விஜய், காங்கிரஸை நம்புவது முட்டாள்தனம்" என்று பாஜக-வின் ராம் மாதவ் சொல்கிறாரே?

 

பதில்: அது இருக்கட்டும். காங்கிரஸ், ராகுல் காந்தியை நம்புவது என்ன என்று நாம் கேட்கலாம்.

 

விஜய் தன்னைக் காங்கிரசிடமிருந்து காத்துக் கொள்ள முடியும். ராகுலிடமிருந்து காங்கிரஸ் தன்னைக் காத்துக் கொள்ள முடியுமா?

 


5. கேள்வி: பிரதமர் மோடியை மறுபடியும் நேருக்கு நேர் பொது விவாதத்திற்கு அழைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, X தளத்தில் வெளியிட்ட புதிய வீடியோவில், "நான் கேரண்டியாகச் சொல்கிறேன். என்னுடன் விவாதம் நடத்திய பின், பிரதம மந்திரி அந்தப் பதவியில் நீடிக்க மாட்டார்" என்று பேசியிருக்கிறாரே?

 

பதில்: 'முத்தின கேஸ்' என்றால் யார் என்ன என்று புரியாதவர்கள், ஒரு பக்கா உதாரணத்தின் மூலம் இப்போது அறிவார்கள்.


பகுதி 155 // 13.11.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

 

Wednesday, 11 November 2026

கேள்வி-பதில் (11.11.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரிப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்" என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான விக்னேஷ் தெரிவிக்கிறாரே?

 

பதில்: வெட்கப்பட வேண்டிய காரியம் என்று தெரிந்தும் அதைத் தொடர்ந்து செய்தால், அமைச்சர் உணர்ந்த வெட்கம் ஒரு வெட்கமா? நிதானம் இல்லாத பேச்சு.

 

 

2. கேள்வி: "முதல்வர் விஜய்க்குப் பிடித்த வரிகள், 'காவியத் தமிழைக் கம்பன் தந்தான், கவிதைத் தமிழை இளங்கோ தந்தான், வாழ்வியல் தமிழை வள்ளுவன் தந்தான்' என்பது. வள்ளுவனின் குறளில் காணப்படும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதுதான் உன் வழிகாட்டி வாசகம் என்பதை என் வெற்றித் தலைவன் தான் எங்கள் எல்லோருக்கும் சொல்லித் தந்தார்" அன்று அண்மையில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியிருக்கிறாரே?

 

பதில்: வள்ளுவர் சொன்ன குறளிலிருந்து சில சொற்களை விஜய் சொன்னது, விஜய்க்குப் பெருமையா? விஜய் திருப்பிச் சொன்னதை பாலிமர் டிவி, தந்தி டிவி, புதிய தலைமுறை என்று நிறைய டிவி சேனல்கள் ஒளி பரப்பின, பத்திரிகைகளும் பிரசுரித்தன. அப்படியானால் மொத்த மீடியாவுக்கும் வள்ளுவரின் பெருமையில் பங்கு உண்டா? வள்ளுவர் பெருமையைப் பங்கு போட்ட ராஜ்மோகனுக்கும் ஒரு பங்கு இருக்குமா?

 

 

3. கேள்வி: நவ. 11ம் தேதி, மாமல்லபுரத்தில் தவெக எம்.எல்.ஏ-க்களுடனான சந்திப்பின் போது, "நீங்கள் அனைவரும் மக்கள் சேவையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். கவனத்துடனும் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்" என்று விஜய் தனது எம்.எல்.ஏ-க்களுக்கு எச்சரிக்கை விடுத்து அறிவுரை வழங்கியிருக்கிறாரே?

 

பதில்: சில தவெக எம்.எல்.ஏ-க்கள் கண்ணியம் குறைவாக நடந்துகொண்டனர் என்று நம்பத் தகுந்த புகார்கள் வந்தால் தவிர, முதல்வர் இந்த அறிவுரையை வழங்கியிருக்க மாட்டார். அறிவுரையை அவர் கொடுத்த வரை சரி. ஆனால் ஒரு விஷயம் கவனிக்கத் தக்கது.

 

விஜய் அரசியலுக்கு வந்ததற்கு பாதிக் காரணம், ஒரு திராவிடக் கட்சி அவரை அஞ்சி, அவருக்குத் தொல்லை கொடுத்து அவரைக் கடுப்படித்தது. ஆனால், சினிமாவில் நியாயத்திற்காகப் போராடும் பாத்திரத்தில் ஸ்கிரிப்ட் காட்டியபடி நடித்து சாதாரண மக்களின் அபிமானத்தையும் தேர்தலில் அவர்களுடைய வாக்குகளையும் பெறுவது வேறு; ஒழுங்கான, முறைகேடுகளில் நாட்டமில்லாத, கண்ணியம் மிக்க நபர்களை அதிகமாகத் தனது கட்சி எம்.எல்.ஏ-க்களாகப் பெற்று, ஆட்சியைத் திறமையாக நடத்துவது வேறு.

 

ஒரு முதல்வராக, விஜய் கண்ணியமாக நடந்துகொள்கிறார். இதுவரை லஞ்ச ஊழலில் அவர் ஈடுபடாதவராகத் தான் தெரிகிறது. ஆனால் அவருடைய கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலரது கைகள் சுத்தமாக (அதாவது: வாங்காத கைகள், அரசு சேவைகள் கேட்டு வந்த நபரை அடிக்காத கைகள், கண்ணியமற்ற வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பாத கைவிரல்கள் கொண்டவர்களாக) இருக்கவேண்டும் என்றால், மற்றபடி பேச்சிலும் செயலிலும் அவர்கள் கண்ணியமாகச் செயல்படவேண்டும் என்றால், அவர்களின் தலைவன் அந்த குணங்களுக்காகப் பேர் பெற்று, அதன் காரணமாக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்க வேண்டும். விஜய் அந்த வழியில் உருவான தலைவர் அல்ல. அவர் தனது சினிமா பிரபலத்தால் தலைவர் ஆனவர்.

 

திராவிடக் கட்சிகளின் நிர்வாக மட்டத்தில் உள்ள கூட்ட நெரிசலால் அங்கு இடம் பிடிக்க முடியாமல் போன திராவிட டைப் அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள்?  வெற்றிடம் அதிகம் உள்ள புதுக்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு அவர்கள் வந்து சேருவார்கள். ஆகையால் அவர்களிடம் அரசியல் ஒழுக்கம் மற்றும் கண்ணியத்தை யாரும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. விஜய்யும் ஓரளவுக்கு மேல் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. அமைச்சரவையில் உள்ளவர்களை மட்டும் விஜய் பெரிதாகக் கட்டுப்படுத்தலாம், அவ்வளவுதான்.

 

'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' எனும் கோட்பாட்டை இனி தவெக-வும் ஏற்கலாம். நடைமுறையில் அம்சமாகப் பொருந்தும்.

 

 

4. கேள்வி: "ஆளும் கட்சிக் கூட்டணியில் உள்ள இரு கட்சிகளின் தலைவர்களுக்கு சூரியன் உதித்தால் போதும், விஜய் ஆட்சியை அட்டாக் செய்யவில்லை என்றால் காலை உணவு இறங்காது" என்று மதிமுக தலைவர் வைகோ பேசி இருக்கிறாரே?

 

பதில்: ஒரு ஆளும் கட்சி அமைத்த கூட்டணியில் இருந்தால், ஆட்சியாளர்கள் செய்யும் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் பற்றி அறிந்தும் அந்தக் கூட்டணியை ஆதரித்து முழங்கிப் பேசி, அடுத்த தேர்தலில் அந்த ஆளும் கட்சி தோற்றபின் புதிதாக வந்த ஆளும் கட்சி அணிக்குத் தாவி, முந்தைய ஆளும் கட்சியின் ஊழல் பற்றிப் பேசுவது வைகோ பாணி.

 

ஒரு ஆளும் கட்சிக் கூட்டணியில் இருந்தவாறு அவ்வப்போது அந்த ஆட்சியை மெலிதாகக் குறை சொல்லி, என்ன காரணத்தினாலும் எப்போது ஆட்சி மாற்றம் வந்தாலும் பதவியேற்கும் புதிய ஆளும் அணிக்கு லாவகமாகத் தாவி ஆதாயம் பெறுவது கம்யூனிஸ்டுகள் மற்றும் திருமாவளவன் பாணி.

 

இரண்டு வித அரசியல் தலைவர்கள் செல்லும் வழி வேறு. 'ஆளும் கட்சியை ஆதரித்து ஆதாயம் பெறுதல்' என்ற அவர்களுடைய இலக்கு ஒன்றே. 

 


5. கேள்வி: பொது நூலகங்களுக்காக, போலியான தமிழ்ப் புத்தகங்கள் மட்டுமல்ல, போலியான ஆங்கிலப் புத்தகங்களையும் சென்ற திமுக அரசு கொள்முதல் செய்ததாகச் செய்தி வந்திருக்கிறதே?

 

பதில்: இருமொழிக் கொள்கை.


பகுதி 154 // 11.11.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com