Sunday 3 March 2024

திருச்சிப் பாட்டியும் திராவிட ஆட்சியும்

 

          -- ஆர். வி. ஆர்

  

போன வாரம் திருச்சி அழைத்ததால் சென்னையிலிருந்து ஒரு நாள் அங்கு போய் வந்தேன் – ஒரு உறவினரைப் பார்க்க.

 

சென்ற நூற்றாண்டு அறுபதுகளின் கடைசியில், எனது ஒன்பதாவது வகுப்பின் பெரிய லீவுக்காக அம்புஜம் பாட்டி வீட்டில் கொட்டமடிக்கத் திருச்சி போயிருந்தேன். அவர் எனது அம்மாவின் அம்மா.  அவர் வீட்டில் அப்போது சி. ஏ படிப்பு, காலேஜ், ஸ்கூல் என்று படித்துக் கொண்டிருந்த என் மூன்று சித்திகள் மற்றும் ஒரு மாமா, என்னுடன் தாயக்கட்டை ஆடிய என் பாட்டியின் மாமியார், அடுத்த சந்தில் வசித்த என் பாட்டியின் அக்கா, அவரின் பெண்களான எனது மற்ற சித்திகள், எல்லோரும் என் அன்பு விசிறிகள். பொறுப்பும் தலைமைக் குணங்களும் மிக்க என் பாட்டி, என்னிடம் கருணை கலந்த கறார் முகம் காட்டினார்.  

 

திருச்சி வடக்கு ஆண்டார் வீதியில் உள்ள பாண்டியன் பிள்ளை சந்தில் இருந்தது என் பாட்டி வீடு.  இன்னும் சில சந்துகள் அந்த வீதியில் உண்டு. வீதியின் ஒரு பக்கத்துச் சந்துகளுக்கு அநேகமாக உள்புறத்தில் இணைப்புச் சந்துகள் உண்டு. எல்லா ஊர்களிலும், அதுவும் மையப் பகுதிகளில், அப்படித்தானே இருக்கும்?  

 

நான் மதுரையில் படிக்காமல் டிமிக்கி கொடுக்கிறேன் என்று சில வருடங்களாகவே சரியாகக் கணித்திருந்தார் என் திருச்சிப் பாட்டி. லீவுக்கு வந்த என்னைப் பிடித்துவைத்து, அந்த ஊர்ப் பள்ளியில் பத்தாம் கிளாஸ், எஸ். எஸ். எல். சி, என்று இரண்டு வருடங்கள் தனது தினசரி மேற்பார்வையில் படிக்கவைத்தார் அவர். 


நான் திருச்சிப் பள்ளியில் சேர்ந்தபோது கணக்கில் புலி, கண்டிப்பில் சிம்மம், என்று அந்த ஸ்கூல் நிர்வாகத்தையும் அதில் வாத்தியார் பொறுப்பையும் பலகாலமாய் ஏற்றிருந்தவர் நடராஜ ஐயர்.  எளிமையான வெள்ளை உடை, பழமையான சைக்கிள், அவரது வெளி அடையாளம். பத்தாம் வகுப்பில் எனது முதல் பீரியட் தொடங்கும் முன்னரே அவர் என் வகுப்பறைக்குள் வந்து, அன்றைய கணிதப் பாடக் குறிகளைக் கரும்பலகையில் எழுதிக் காத்திருந்து மாணவர்கள் நுழைந்து அமர்ந்த உடனே பாடம் ஆரம்பித்தவர். அவரும் பிற ஜாம்பவான் ஆசிரியர்களும் உன்னதம் சேர்த்த ஈ. ஆர். ஹைஸ்கூல் அது. என்னையும் படிப்பில் தேற்றித் தன்னை நிரூபித்த ஸ்கூல் அது!


ஸ்கூல் படிப்பிற்குப் பின் பலமுறை திருச்சி போயிருக்கிறேன். போன வாரம் சென்றபோதுவடக்கு ஆண்டார் வீதியில் இன்னொரு சந்தில் வசிக்கும் என் ஸ்கூல் சினேகிதன், மற்ற இடங்களில் இருக்கும் சில ஸ்கூல் சினேகிதர்கள் என்று ஒவ்வொருவராகப் பார்த்துவர சில திருச்சிப் பகுதிகளில் அலைந்தேன்.   

 

வடக்கு ஆண்டார் வீதியில் நடந்தபோது சிறுவனானேன். அதில் முதலியார் சந்தின் பெயரை வலது சுவற்றில் பார்த்ததும் உள்ளே சுகித்தது. நேரே செல்லவேண்டிய நான், முதலியார் சந்தின் உள்ளே நுழைந்து போய் இடப்புறம் திரும்பிப் பின் வலப்புறம் சென்று மறுபடியும் இடப்புறம் திரும்பிப் பாட்டி வீட்டுப் பாண்டியன்  பிள்ளை சந்தில் கால் வைத்தேன். பாட்டியின் வீடு இப்போது வெளி நபருக்குக் கைமாறி இருந்தது. அந்த வீட்டின் முன் நின்றுவிட்டு, சிறிது ஒடித்து நேராகப் பாண்டியன் பிள்ளை சந்திலேயே  நகர்ந்து, திரும்பித் திரும்பி, பந்தடிமால் சந்து வழியாக மீண்டும் வடக்கு ஆண்டார் வீதியில் கலந்தேன். சில அடிகள் முன்னேறி புதுப்படிச் சந்தில் புகுந்து என் சினேகிதனைப் பார்த்தேன். போகிற வழியில் சில பழக்கமான சந்துகளில் வேண்டுமென்றே நான் சுற்றிய சுற்று, சிறு பிராயத்தில் ஜயண்ட் வீலில் சுற்றியது போல் சிலிர்த்தது.  

 

திருச்சியில் நான் தங்கி இருந்த தென்னூர்ப் பகுதியும் சரி, வடக்கு ஆண்டார் வீதியிலும் பிற இடங்களிலும் நான் நடந்த பகுதிகளும் சரி, என் பாட்டி காலத்திலிருந்து மாறாத சில காட்சிகள் கொண்டவை. அவை, சாலை ஓரங்களிலும் சில தெருக்களின் குறுக்கிலும் ஓடும் திறந்தநிலைச் சாக்கடைகள். வீடுகளின் சமையலறை, குளியலறையிலிருந்து வெளிவரும் கழிவு நீர், மற்ற கழிவு நீர் என்று அனைத்தையும் தாங்கி வரும் ஜீவ சாக்கடைகள்  அவை.  

 

ஐம்பத்து ஐந்து ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் தமிழகத்தை, அதன் நகராட்சிகளை, ஆளுகின்றன. ஆனாலும் முக்கிய நகரான திருச்சியின் பழைய பிரதான பகுதிகளில் கூடப் பாதாளச் சாக்கடைகளை அமைத்து, அவற்றோடு எல்லா வீடுகளுக்கும் இணைப்பைச் செய்து, அவற்றை முறையாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து, திறந்த சாக்கடைகளையும் அடையாளம் தெரியாமல் நிரந்தரமாக  மூடவில்லை என்றால் என்ன அர்த்தம்? திராவிடக் கட்சிகளின் ஆட்சி மாமூலாக நடக்கிறது என்று அர்த்தம்.

 

முப்பது வருடங்களுக்கு மேலாகத் திருச்சியில் பாதாள சாக்கடைத் திட்ட வேலைகள் நடக்கின்றன, நடக்காமலும் இருக்கின்றன. பாதி அல்லது முக்கால்வாசி இடங்களில் தெருவை வெட்டி ஆழத்தில் பாதாள சாக்கடைக் குழாய்கள்  அமைக்கப்பட்டு விட்டன.  அந்தக் குழிகளையும் மூடி ஆயிற்று.  ஆனால் நிறைய வீடுகளிலிருந்து பாதாள சாக்கடைக் குழாய்களுக்கு இன்னும் இணைப்பு ஆகாமல் குளியலறை மற்றும் சமையலறை, கழிவறை, இவற்றில் எதற்கும் இணைப்பு ஆகாமால் அல்லது கழிவறைக்கு மட்டும் இணைப்பு ஆகி – தெரு ஓரங்களில் உள்ள பழைய திறந்த சாக்கடைகள் இன்றும் உயிரோட்டமாக இருக்கின்றன.   

 

திருச்சியில் பாதாள சாக்கடையை அமைத்த அளவிலும் கூட, அதை முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் தலைமையும் நேர்மையும் பொறுப்பும்  திராவிடக் கட்சிகளிடம் இல்லை. அதுபோன்ற பண்புகள்  அந்த ஊர்ப் பாட்டி ஒருவரிடம் நிரம்பி இருந்தன.

 

திருச்சியில் நொண்டியடிக்கும் பாதாள சாக்கடைத் திட்டம், அரசியல்வாதிகளையும் மீறிக் காலம் எவர்க்கும் தானாகக் கொண்டு தரும் வளர்ச்சி.  அந்த அளவு வளர்ச்சி அந்த நகருக்கு வந்துவிட்டதால் – தமிழகத்தில் அதற்காகக் காத்திருக்கும் மற்ற ஊர்களும் அதுபோல் பயன் பெற்றுவிட்டால் – அதை ஒட்டி அதற்கு ஏற்ற செழிப்பையும் கொழிப்பையும் இடைப்பட்ட காலத்தில் எப்படியோ சம்பாதிப்பவர்கள் நிச்சயம் உண்டு. அவர்கள் யார், அவர்களின் பங்கு என்ன, என்பது திராவிட ஆட்சியாளர்களுக்குத் தெரியுமே! 

 

தமிழகத்தில் திறந்தபடி செயல்படவேண்டிய அரசு இயந்திரம், மர்மத்தில் மூடியபடி இயங்குகிறது. போதிய வெளிப்படைத் தன்மை இல்லை. மூடியபடி தரைக்கு அடியில்  ஓட வேண்டிய சில ஊர்களின் சாக்கடைகள் சாலையில் திறந்தநிலையில் ஓடுகின்றன. மாநிலத்தில் தேவையான ஆட்சி மாற்றம் வந்தால் தான், இரண்டிலும் நிலைமை தலைகீழாக மாறிச் சரியாகுமோ?

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 


6 comments:

  1. தங்களின் சுவாரஸ்யமான நடை கட்டுரையை முழுமையாகப் படிக்கத் தூண்டுகிறது.

    தமிழ்நாட்டின் முக்கியமான ஒரு சில ஊர்களுள் ஒன்றான திருச்சியின் மையப் பகுதியிலேயே திறந்த வெளிச் சாக்கடைகள் இருப்பது இன்னமும் எவ்வளவு தூரம் நாம் முன்னேற வேண்டியுள்ளது எனக் கோடி காட்டுகிறது.

    சித்தானந்தம்

    ReplyDelete
  2. உங்கள் திருச்சி நகர ஒருநாள் நடைப் பயணம் உங்கள் பால்ய வாழ்க்கையின் சிறு கீற்றை அழகாக விவரிக்கிறது. பள்ளிக்கல்வி வழங்கிய திருச்சி ஐம்பது ஆண்டு கழித்தும் முன்னேற வில்லை என்பதால் ஆட்சியாளர்கள் பால் ஏற்படும் உங்கள் கோபம் இயற்கையே. இன்னும் இது போன்ற கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  3. ஸ்வாரஸ்யமான நடை. திருச்சி திருச்சிதான்

    ReplyDelete
  4. அரசு மாறினால் நிலமை மாறும்

    ReplyDelete
  5. நாங்களும் திருச்சியை சொந்த ஊராக கொண்டவர்கள் தான்.என்னுடைய மாமனார் ER high school லில் ஆசிரியராக இருந்தார் என்பதை இங்கே பெருமையாக சொல்லிக்கொள்ள
    ஆசை படுகிறேன்.என்னுடைய
    அப்பாவும் இதே பள்ளியில் தான்
    பயின்றார்.தாங்கள் இங்கே பதிவிட்டது அனைத்தும் உண்மை தான்.மிக அழகான யோசிக்க வைக்கும் பதிவு.

    ReplyDelete