-- ஆர். வி. ஆர்
ஜாபர் சாதிக் என்பவன் திமுக-வின் முக்கிய ஆள். அவன் பெரிய அளவில் போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்குக் கடத்திய குற்றச்சாட்டில் இப்போது கைதாகி இருக்கிறான். அவனைக் கைது செய்தது, மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு.
ஜாபர் சாதிக், போதைப் பொருள், திமுக பற்றி எல்லாம் நன்கு புரிந்துகொள்ள, தமிழக அமைச்சர் உதயநிதியின் ‘சனாதன ஒழிப்பு’ப் பேச்சில் இருந்து ஆரம்பிப்பது நல்லது.
ஆறு மாதங்கள் முன்பு அமைச்சர் உதயநிதி பிதற்றிய வார்த்தைகள் நாடு முழுவதும் பிரசித்தம். "மலேரியா, டெங்கு, கொரோனா மாதிரி முற்றிலும் ஒழிக்கப் படவேண்டியது சனாதனம்" என்று எதையோ அரைகுறையாகப் புரிந்துகொண்டு தனது சொற்களின் விளைவும் தெரியாமல் அவர் மேடை ஏறிப் பேசினார்.
சனாதன தர்மம் என்பது என்ன? வாழ்வில் நாம் ஏற்கத் தக்க நல்லெண்ணங்களும் பின்பற்றத் தகுந்த நன்னெறிகளும் சனாதன தர்மம் என்ற பெயரோடு ஒரு வாழ்க்கை முறையாக ஹிந்து சமூகத்தில் பல நூற்றாண்டுகளாகக் கருதப்படுகின்றன. அவை எல்லாவற்றையும் இந்தக் காலத்தில் நாமும் நமது அரசாங்கமும் முழுதாகப் பின்பற்றுகிறோமா என்றால் இல்லை. மதிக்கத் தக்க அளவில் நாம் அவற்றை வைத்திருக்கிறோம் – அதுவும் அது பற்றிப் படித்து அறிந்திருக்கும் சிலர் அப்படி வைத்திருக்கிறார்கள். சில சில அனுசரிப்புகள் உண்டு. சட்டத்தில் அவை ஏதும் கட்டாயம் இல்லை.
இன்னொரு பக்கத்துக்கு வருவோம்: சட்டம் எதிர்க்கின்ற, அரசு தீவிரமாகக் கட்டுப்படுத்த வேண்டிய, இக்காலத்துப் பெரும் தீமை ஒன்று நம் சமூகத்தில் இருக்கிறது. அதாவது, நமது இளைஞர்கள் மத்தியில், போதைப் பொருள் நுகர்தல் பரவி இருக்கிறது, வளர்ந்து வருகிறது. இளைஞர்களின் சித்தத்தை, அவர்களின் எதிர்காலத்தை, நாசம் செய்யும் அந்தத் தீய பழக்கத்திற்குத் தீனி போட்டு அவர்களைப் பாழாக்குபவர்கள் போதைப் பொருள் உற்பத்தியாளர்கள், கடத்தல்காரர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள். அப்படியான ஒரு விஷமி, திமுக-வின் முக்கியஸ்தரான ஜாபர் சாதிக். கட்சியின் தலைமைக் குடும்பத்திடமும் அவன் நெருக்கம் காட்டியவன்.
சென்ற பிப்ரவரி மாத நடுவில் ஜாபர் சாதிக்கின் மூன்று தமிழகக் கையாட்கள், டெல்லியில் ஒரு குடோன் வைத்து செயல்பட்டு ரசாயன போதைப் பொருட்கள் வைத்திருந்தபோது அங்கு கைதானார்கள். அவர்களை விசாரித்ததில் ஜாபர் சாதிக்தான் அவர்களுக்கு முதலாளி, அவன் ஒரு சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரன் என்று வெளி உலகிற்குத் தெரிந்தது. அந்த சமயம் ஜாபர் சாதிக் திமுக-வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணைப் பொறுப்பாளராக இருந்தான். அவனது கையாட்கள் டெல்லியில் கைதானவுடன் அவன் தலை மறைவானான்.
சில நாட்கள்
கழித்து, பிப். 25-ம் தேதியன்று, திமுக-வின்
பொதுச் செயலர் துரைமுருகன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலும்
இருந்து ஜாபர் சாதிக் டிஸ்மிஸ் செய்யப்படுவதாக அறிக்கை கொடுத்தார். தற்போது மார்ச்
9-ம் தேதி ஜாபர் சாதிக் டெல்லியில் கைதாகி இருக்கிறான்.
ஜாபர் சாதிக்கைத் திமுக-விலிருந்து நிரந்தரமாக நீக்கி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இன்றுவரை அவனது படுபாதகச் செயலைக் கண்டித்து முதல்வர் மு. க. ஸ்டாலினோ அமைச்சர் உதயநிதி ஸ்டாலினோ ஒரு வார்த்தை பேசவில்லை. ஏன்? அப்படி அவர்கள் கண்டித்தால், திமுக-வின் முக்கியத் தலைவர்களைப் பற்றி ஜாபர் சாதிக் அதிகம் பேசிவிடுவான், அது நல்லதல்ல என்பதாலா?
ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் விவகாரம் அம்பலம் ஆகும் வரை, அவன் திமுக-வின் முக்கியப் புள்ளியாக இருந்தவன். உதயநிதியின் மனைவி கிருத்திகா இயக்கிய ‘மங்கை’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக். அப்படி என்றால், ஒண்ணும் ஒண்ணும் ரண்டு என்று நமக்குப் பல கணக்குகள் டக்கென்று புரியும்.
சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறை, குறிப்பாக ஒரு சொகுசு ஹோட்டல், என்று ஜாபர் சாதிக் நிறைய முதலீடுகள் செய்திருக்கிறான். அதற்கும் போதைப் பொருள் தொழிலில் அவன் சம்பாதித்த பணத்திற்குமான தொடர்பு ஆராயப் படும் என்று மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி, ஜாபரின் கைதுக்குப் பிறகு தெரிவிக்கிறார். மேலும் சில அதிர்ச்சி விவரங்கள் விசாரணையில் தெரிய வரலாம்.
கடந்த மூன்று வருட காலமாக
ஜாபர் சாதிக் மூலம் இதுவரை 45 முறை ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, மலேசியா என்று வெளிநாடுகளுக்கு
சுமார் 3,500 கிலோ எடையுள்ள போதைப் பொருள் ஏற்றுமதி ஆகி இருக்கிறது, அதன் மதிப்பு சுமார்
2,000 கோடி ரூபாய் என்று செய்திகள் வந்திருக்கின்றன. இதன் அடிப்படையில், ஜாபர் சாதிக்கின்
பெயரைக் குறிப்பிடாமல், போதைப் பொருளுக்கு மட்டும் எதிராக ‘மலேரியா டெங்கு மாதிரி போதைப் பொருட்கள் முற்றிலும்
ஒழிக்கப்பட வேண்டும்’ என்றாவது உதயநிதி பேசுவாரா? மாட்டார். அப்படிப் பேசினால் அது ஜாபர்
சாதிக்குக்கு எதிராகப் பேசுவதாக ஜாபர் சாதிக்கே நினைத்துவிட்டால்? அதன் எதிரொலியாக
ஜாபர் சாதிக் ஏதாவது பேசிவிட்டால்? திமுக-வில் செந்தில்
பாலாஜி, ஜாபர் சாதிக் போன்றவர்கள் ஓரளவு சமமாக நடத்தப் படவேண்டுமே? அதுதானே கட்சிக்குள் எல்லோருக்கும் நல்லது?
ஜாபர் சாதிக் இந்தியாவில், அதுவும் தமிழகத்தில், போதைப் பொருள் சப்ளை செய்தானா, எங்கு, எவ்வளவு என்ற விவரங்கள் இனிமேல்தான்
தெரியும். அவன் ஏற்றுமதிக் கடத்தல் மட்டும்தான் செய்தான் என்றாலும், அவன் இந்தியாவுக்கும் ஆபத்தானவன். எந்தப் பாம்பு, எங்கே யாரைக்
கொத்துமோ? நம் வீட்டுப் பையன் ஒருவன் அடிக்கடி அடுத்த வீடுகளுக்கு மட்டும் போய் திருடிக்
கொண்டிருந்தால் நாம் மெத்தனமாக இருக்க முடியாதே? நம் பேரை அடுத்த வீட்டிலும் கெடுக்கும்
அவனை இன்னும் ஒரு போடு போடுவோமே?
ஜாபர் சாதிக் போதைப் பொருள்
விற்பனையில் செய்ததற்கும், திமுக நெடுங்காலமாக
அரசியலில் செய்து வருவதற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. சத்துணவு மற்றும் தேங்காய்ப் பொடி
பொட்டலங்களை ஏற்றுமதி செய்யும் போர்வையில் அந்த உணவுப் பொருட்களில் ரசாயன போதைப் பொருளைக்
கலந்துவைத்து, உண்மையில் போதைப் பொருளைத்தான் அவன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தான் – அதனால் கோடிகள் சம்பாதித்தான்.
திமுக நெடுங்காலமாக என்ன செய்கிறது? தமிழ் என்ற அமிர்தத்தில்
சுயநல அரசியல் ஆதாயம் என்ற நச்சைக் கலந்து, “நாங்கள் அமிர்தம் வழங்குகிறோம்” என்று
அதிகளவில் தொண்டர்களையும் சாதாரண மக்களையும் நம்பவைத்து அவர்களின் இயற்கையான மொழிப்
பற்று என்பதை ஒரு போதை உணர்வாக மாற்றி அவர்களில் பலரைச் சித்தம் தடுமாற வைத்தது திமுக.
அதனால் திமுக தலைவர்கள் சிலர் ஓட்டுகளிலும்
மற்றதிலும் கோடி கோடி நன்மைகள் அடைந்தனர்.
ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் வியாபாரத் தொடர்புகள் இப்போது வெளிவந்து அவன் யார், எத்தகையவன், என்று ஊருக்குத் தெரிகிறது. அது கோர்ட்டிலும் நிரூபணம் ஆகவேண்டும். அதே போல், திமுக-வின் சுயநலத்தை மறைக்க உதவும் காரண காரியமான தமிழ்ப் பற்றும் அக்கட்சியின் ஏமாற்று வேலைகளும் அம்பலமாகித் தமிழகம் சித்தம் தெளியும் நாள் விரைவில் வரவேண்டும். அது தேர்தலிலும் நிரூபணம் ஆகவேண்டும். ஒரு நாட்டில் எல்லாவித போதை சமாச்சாரங்களும் முற்றிலும் ஒழிவது அந்த நாட்டுக்கு, அதன் இளைஞர்களுக்கு, அதன் எதிர்காலத்துக்கு, நல்லதுதானே?
*
* * * *
Author: R. Veera
Raghavan, Advocate, Chennai
Drug peddling is an international issue. India or Tamil Nadu is no exception to this smuggling.
ReplyDeleteVice president of India and TN Governor attend a pseudo religious function of Jaggi Vasudev under the guise of Shivarathri religious celebrations where yiu can actually see thousands under the influence of drugs and drinks.
Are they sincere to the nation?