Tuesday, 27 February 2024

வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே!


   -- ஆர். வி. ஆர்

 

அநேக அரசியல் கட்சித் தலைவர்கள் என்ன செய்கிறார்கள்? ஊரை ஏமாற்றுகிறார்கள், ஊழல் புரிகிறார்கள், செல்வம் சேர்க்கிறார்கள், பரம்பரை அரசியலில் சுகிக்கிறார்கள், நாட்டிற்குக் கேடு செய்கிறார்கள். வெட்கம் மானம் இல்லாத அவர்களைப் பற்றிய நையாண்டிப் பாடல் இது.

 

மகாகவி பாரதியை வணங்கி வந்த வரிகள் இவை.   


 

 

வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே!

 

எட்டுத் திக்கும் நல்லோர்கள் வெறுத்துநின்ற போதினும்

வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே!

 

திட்டமிட்டுத் தீதுசெய்து செல்வம் ஈட்டும் போதிலும்

வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே!

 

வட்ட மாவட்டத் தலைகள் அக்கிரமம் செய்தினும்

வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே!

 

வெட்டி மணலெடுத்த ஆறு பள்ளத்தாக்கு ஆகினும்

  வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே!

 

 பட்டம் தரும் பல்கலைகள் ஊழலால் பாழாகினும்

வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே!


சட்டம் அவர் கூட்டம்மீது கண்கள்வீசு போதினும்

  வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே!

 

அட்டைக்கத்தி சர்வாதிகா ரியாய்த் தலைவர் ஆகினும்

வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே!

 

கட்சிமானம் பாதாளத்தில் வீழுகின்ற போதினும்

வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே!


Author: R. Veera Raghavan, Advocate, Chennai 

 

Thursday, 22 February 2024

சண்டிகர் மேயர் தேர்தல்: பாஜக-விலும் மோசடி ஆசாமியா?

 

-- ஆர். வி. ஆர்

 

பாஜக-வை எதிர்ப்பவர்களுக்குக் கல்கண்டாக ஒரு செய்தி.


சென்ற மாத இறுதியில் சண்டிகர் மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் நடந்தது. அதில் பாஜக வேட்பாளர் வெற்றி என அறிவிக்கப்பட்ட பின், இப்போது சுப்ரீம் கோர்ட் தலையிட்டு அந்தத் தேர்தல் முடிவை ரத்து செய்திருக்கிறது. அவரிடம் தோற்றதாகக் கருதப்பட்ட ஆம் ஆத்மி–காங்கிரஸ் கட்சிகளின் பொது வேட்பாளர்தான் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற மேயர் என்றும் அறிவித்து விட்டது சுப்ரீம் கோர்ட்.

 

அந்த மேயர் தேர்தலில், அனில் மசிக் என்பவர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்டிருந்தார். பதிவான மொத்த  வாக்குகள் 36, அதில் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு விழுந்தவை 20, பாஜக வேட்பாளர் பெற்றது 16 என்பது உண்மை நிலவரம்.  இங்குதான் தேர்தல் அதிகாரி மோசடி வேலை செய்தார்.  அதாவது, ஆம் ஆத்மி வேட்பாளருக்கு முறையாக விழுந்த 8 வாக்குச் சீட்டுகளின் மேல் எக்ஸ் குறியிட்டு அவற்றைச் செல்லாது என்று எடுத்துக் கொண்டார் தேர்தல் அதிகாரி. இறுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பெற்றது 12 வாக்குகள் மட்டுமே, பாஜக பெற்றது 16, ஆகையால் பாஜக வேட்பாளரே மேயர் என்று தேர்தல் அதிகாரி வில்லத்தனமாக அறிவித்துவிட்டார். பிறகு விஷயம் சுப்ரீம் கோர்ட்டை அடைந்து, மேயர் தேர்தல் முடிவு சரியாக மாற்றப் பட்டது. இது சுப்ரீம் கோர்ட்டுக்குப் பெருமை.  

 

தேர்தல் அதிகாரியாக இருந்த அனில் மசிக் என்பவர் பாஜக-வில் சுமார் பத்தாண்டுகளாக இருக்கிறார். மேயர் தேர்தல் நடந்த சமயம், சண்டிகரில் அந்தக் கட்சியின்  சிறுபான்மைப் பிரிவுக்குத் தலைவராகவும் இருந்தார்.

 

இவ்வளவு ஒழுங்கீனமாக, மோசடியாகச் செயல்படும் ஒருவர் பாஜக-வில் இருக்கிறாரா என்று அக்கட்சியின் மீது மதிப்பு வைத்திருக்கும் பொதுமக்கள் நினைக்கலாம். இது பற்றிச் சிறிது விளக்க வேண்டும்.

 

நமது அரசியல் கட்சிகள் பலவற்றின் முக்கியத் தலைவர்கள் எப்படியானவர்கள்? அவர்கள் தேசத்தைப் பற்றி சிந்திக்காதவர்கள், தமது குடும்ப நலனை வளர்ப்பவர்கள், நேர்மையற்றவர்கள், தேர்தல் மற்றும் நிர்வாகத்தில் எந்த மோசடியும் நடக்க எதுவும் செய்பவர்கள், லஞ்ச ஊழலில் திளைப்பவர்கள், தான் இருக்கும்போது மற்ற கட்சிகளில் இருந்து வேறு யாரும் – அந்த மற்றவர் அப்பழுக்கற்ற திறமையான தலைவராக இருந்தாலும் – ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராகவோ தேசத்தின் பிரதமராகவோ  வரக்கூடாது என்ற அகந்தை கொண்டவர்கள். 

 

இந்த மாதிரித் தலைவர்களோ அவர்களது கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்களோ எந்த ஊழல் புகாரில் சிக்கினாலும், அவர்களுக்கு எதிராக விசாரணைக் கமிஷன் அறிக்கைகள் வந்தாலும், அவர்கள் மீது என்ன வழக்கு வந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்குப் போனாலும், அந்தக் கட்சிக்கும் அதன் பிரதானத்  தலைவர்களுக்கும் கூச்சம் இல்லை, வெட்கம் இல்லை. அவர்களைப் போன்றவர்கள் அந்தக் கட்சியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அங்கு போய்ச் சேருகிறார்கள். அப்படிச் சேருபவர்கள் என்ன முறைகேடுகள் செய்தாலும், அதனால் ஜெயிலுக்குப் போனாலும்,  கட்சிக்குள் அவர்களுக்கு இழுக்கு வராது. மதிப்புதான் கூடும். அதற்கு ஏற்ப, அவர்களும் கட்சியின் பிதாமகர்களை அவ்வப்போது நன்றாகக் கவனித்திருப்பார்கள்.  லாலு பிரசாத் யாதவ் தெரியுமல்லவா? சில திராவிடத் தலைவர்களையும் பார்க்கிறோம் அல்லவா?

 

பாஜக அப்படியான கட்சியல்ல. சண்டிகர் மாநகராட்சியில் தேர்தல் அதிகாரியாகச்  செயல்பட்ட அனில் மசிக் இப்படித் தில்லுமுல்லு செய்து, அதை அப்பட்டமாகவும் அசட்டுத்தனமாகவும் செய்து, பாஜக வேட்பாளரை எப்படியாவது மேயராக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் அனில் மசிக்கிடம் எதிர்பார்த்திருக்காது.

 

பாஜக-வின் தலைமை அப்படித் தவறாக எதிர்பார்க்கக் கூடியது என்றால், பத்து வருடங்களாக அந்தக் கட்சி மத்தியில் ஆட்சி செய்து வரும்போது, ஒரு 2ஜி ஊழல், ஒரு நிலக்கரி ஊழல், ஒரு காமன்வெல்த் போட்டிகள் ஊழல், ஹெலிகாப்டர்கள் ஊழல், டெல்லி சாராய விற்பனை ஊழல் மற்றும் தமிழகத்தில் தொடரும் விஞ்ஞான ஊழல்கள் மாதிரிப் பெரிய அளவில் டெல்லியில் செய்திருக்கலாம். சண்டிகர் மேயர் பதவி மூலமாகக் கட்சி மேலிடம் எதை அடைய முடியும்? ஒன்றுமில்லை.  

 

அப்படியென்றால் ஒரு மோசடி மனிதர் ஏன் பாஜக–விற்கு வரவேண்டும்? அல்லது, கட்சிக்குள்ளிருந்து ஏன் ஒருவர் இந்தக் காரியத்தைச் செய்யவேண்டும்? காரணம் இருக்கிறது.

 

பொய் பித்தலாட்டம், தில்லுமுல்லு, மோசடி, ஆகிய குணங்கள் சிலருக்கு இருக்கும். அதில் திறமையான பலர் அத்தகைய குணங்களை மறைத்துத் தங்களை நல்லவர்கள் போல் காட்டிக் கொள்வதுண்டு, அதற்கேற்ற பேச்சுத் திறமையும் அவர்களிடம் இருக்கலாம். அவர்களுக்குப் பல அரசியல் கட்சிகளின் வாசல் கதவுகள் தோதாகத் திறந்திருப்பது போல் தோன்றலாம். இருந்தாலும் அந்த மனிதர்களில் சிலர், ‘நாம் பாஜக–வுக்குச் சென்றால் அங்கு நமது வேலைகளுக்குப் பெரிய போட்டி இருக்காது, நடித்துக் கொண்டே நாம் முன்னேறலாம்’ என்று கூட கணக்குப் போடலாம். ஒருவரின் அடிப்படை குணமும் அவர் செயல்பாடுகளும் எப்போதுமே லாஜிகலாக சேர்ந்திருக்கும் என்று இல்லையே? இப்படியாக அனில் மசிக் பாஜக-விற்கு வந்திருக்கலாம்.  இல்லையென்றால், எப்படியாவது என்ன செய்தாவது தன் கட்சிக்காரர் ஒருவர் மேயர் ஆகட்டும் என்று தோன்றி, கட்சித் தலைமையின் கண்ணியத்தை முழுதும் உணராமல், அவருக்குத் தலைக்கிறுக்கு வேகமாக ஏறி இருக்கலாம். வேறு எது சாத்தியம் பாஜக-வின்  தலைமை நேராக இருக்கும்போது?

 

இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்தவுடன், தேசநலன், நேர்மை, நாணயத்தின் மறுஉருவமான மூன்று தலைவர்கள் சொன்னதைப் பாருங்கள்.

 

“ஜனநாயகத்தைக் கொலை செய்யும் சதியில், அனில் மசிக் ஒரு ஏவலாள். அவருக்குப் பின்னால் மோடியின் முகம் இருக்கிறது.” என்றார் காங்கிரஸின் ராகுல் காந்தி. டெல்லியில் குளிர் அதிகமானால் அதற்கும் மோடிதான் காரணம் என்று நினைப்பவர் அவர்.

 

“சண்டிகர் மேயர் தேர்தலில், இருக்கிற 36 ஓட்டுக்களில் பாஜக 8 ஓட்டுக்களைத் திருட முடிந்தால், 90 கோடி ஓட்டுக்கள் விழக் கூடிய அடுத்த லோக் சபா தேர்தலில் அந்தக் கட்சி என்னவெல்லாம் செய்யுமோ?” என்று கேட்டார் ஆம் ஆத்மியின் கேஜ்ரிவால். 2024 லோக் சபா தேர்தலில் கிடைக்கப் போகிற தோல்விக்கு இப்போதே குயுக்தியாக ஒரு காரணத்தைத் தட்டி விட்டிருக்கிறார் அவர்.

 

2006-ல் சென்னை மாநகராட்சி கவுன்சில் தேர்தலின் போது, திமுக அரசு மாநிலத்தில் இருந்தது. அந்தத் தேர்தலில் அனுமதிக்கப்பட்ட அராஜகம், வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல் மற்றும் பல தில்லுமுல்லுகளை இப்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் மறந்துவிட்டார். அந்த ஏகாந்த நிலையில், சண்டிகர் தேர்தல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை வரவேற்று, அது “பா.ஜ.க-வின் தகிடுதத்தங்களுக்கு எச்சரிக்கை” என்று அறிக்கை விட்டார்.

 

என்ன இருந்தாலும், மேயர் தேர்தல் அளவில் கூட தனது கட்சியினர் முறைகேடுகளை நினைக்காமல் இருக்க பாஜக ஆவன செய்யவேண்டும் - அனில் மசிக்கையும் கட்டுப்படுத்த வேண்டும். இது அவசியம் என்று அக்கட்சியே உணர்ந்திருக்கும். பிற கட்சிகள் மாதிரி எதையும் துடைத்துவிட்டுப் போகிற கட்சி இல்லையே பாஜக?  

 

பிற கட்சிகளிலிருந்து சிலர் பாஜக-விற்கு மாறி வருவது (அவர்கள் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் என்றும்  இருக்கலாம்) வேறு விஷயம். ஏன், இப்போது சண்டிகர் மாநகராட்சி கவுன்சில் உறுப்பினர்கள் சிலரும் அணி மாறலாம். தேர்தல் என்னும் போருக்கான படைகளை, தளவாடங்களைச் சேகரிப்பது எல்லாக் கட்சிகளுக்கும் ஒரு நடைமுறைத் தேவை என்றாகிவிட்டது. அதை லாவகமாக, கட்சியின்  தன்மைக்குப் பாதகமில்லாத அளவிற்குச் செய்வது பாஜக-விற்கும் அவசியம். அந்த வழி எல்லாக் கட்சிகளுக்கும் சட்டத்தால் அனுமதிக்கப் பட்டதும் கூட. பதிவான வாக்குச் சீட்டுக்களை சட்டத்திற்குப் புறம்பாக மாற்றுவதைப் போல் அல்ல அந்த விஷயம்.

 

இந்த விவகாரம் இரண்டு விஷயங்களைத் தொட்டுப் போகிறது. ஒன்று: காகித ஓட்டுச் சீட்டில் எப்படி ஒரு தேர்தல் பணியாளர் எளிதாகத் தில்லுமுல்லு செய்யலாம், ஆனால் நன்கு சோதிக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரமானது (EVM) வாக்கு எண்ணும் கில்லாடிகளை அடக்கி வைக்கும் என்று அழுத்தமாகத் தெரிகிறது. இரண்டு: சுப்ரீம் கோர்ட்டின் உடனடித் தலையீட்டால், எதிலும் அப்பட்டமான மோசடிகளைச் செய்ய நாடெங்கும் இனி ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் சற்றுத் தயங்குவார்கள். நடந்த விஷயம் அதுவரைக்கும் நல்லது செய்யட்டும், நமது ஜனநாயகம் மெள்ள மெள்ள முதிர்ச்சி அடையட்டும், என்று நாம் நினைத்துக் கொள்ளலாம். வேறு எப்படி நினைப்பது?


* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

Sunday, 18 February 2024

தேர்தல் பத்திரங்களை ஒழித்தது சுப்ரீம் கோர்ட். இனி எல்லாம் சுகமா?


-- ஆர். வி. ஆர்


   மத்திய  பாஜக அரசு 2018-ல் கொண்டுவந்த  தேர்தல் பத்திரங்கள் திட்டம், அது தொடர்பான சட்டம், இரண்டையும் ரத்து செய்திருக்கிறது சுப்ரீம் கோர்ட். அவை அரசியல் சட்டத்திற்கும் நிர்வாகச் சட்டத்திற்கும் முரண், ஆகையால் செல்லாதவை என்று தீர்ப்பளித்திருக்கிறது.

 

‘தேர்தல் பத்திரங்கள் திட்டம்’  என்னவென்றால்:

 

ஒரு நன்கொடையாளர் – தனி மனிதரோ கம்பெனியோ – ஒரு அரசியல் கட்சிக்கு நன்கொடையாகப் பணம் தர விரும்பினால், அவர் ஒரு விண்ணப்பத்தை நிரப்பி  பணத்தைத் தனது வங்கி வழியாக பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம். ஸ்டேட் வங்கி அதே மதிப்பிற்கான ‘தேர்தல் பத்திரங்களை’ அவரிடம் வழங்கும்.  

 

ஒருவர் ஸ்டேட் வங்கியில் நன்கொடைப் பணம் செலுத்திய தொகை மற்றும் தேதி, அவர் வாங்கும் தேர்தல் பத்திரத்தில் சொல்லப் பட்டிருக்கும். பத்திரம் வாங்குபவர் பெயரோ, நன்கொடை பெறப்போகும் கட்சியின் பெயரோ, அந்தப் பத்திரத்தில் இருக்காது. ஒரு வகையில் அது ஸ்டேட் வங்கி எழுதிக் கொடுத்த புரோநோட்டு மாதிரி. அதன் ஆயுட்காலம் பதினைந்து நாட்கள் மட்டும்.


நன்கொடையாளர், அவர் விரும்பும் ஒரு கட்சியிடம் அந்தப் பத்திரத்தைக்  கொடுக்கவேண்டும். அந்தக் கட்சி அதை ஸ்டேட் வங்கியிடம் கொடுத்து அதற்கான பணத்தைத் தனது வங்கிக் கணக்கில் போட்டுக் கொள்ளும். உச்சவரம்பு இல்லாமல் எவரும் இப்படி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் தரலாம். ஸ்டேட் வங்கி  விற்று வழங்கிய மற்றும் காசாக்கிய தேர்தல் பத்திரங்கள் பற்றி அந்த வங்கி ரகசியம் காக்க வேண்டும்.   

 

தேர்தல் பத்திரங்களை நன்கொடையாகப் பெற்ற ஒரு அரசியல் கட்சி, நன்கொடையாளர்களின் பெயர்களை, அவர்கள் ஒவ்வொருவரும் அளித்த தொகையை, விவரமாகப் பிரித்து அரசாங்கத்துக்கோ மற்றவருக்கோ தெரிவிக்க வேண்டாம். பத்திரங்களை நன்கொடையாகக் கொடுத்தவரும் எந்தக் கட்சிக்கு எவ்வளவு கொடுத்தார் என்று விவரமாகப் பிரித்து எவருக்கும் தெரிவிக்கக் கட்டாயம் இல்லை. இதுதான் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் முக்கிய சாராம்சம்.  உபரி நிபந்தனைகளும் உண்டு.

 

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு அரசியல் கட்சி பெறும் நன்கொடைகள் ரொக்கமாக இல்லாமல் கட்சியின் வங்கிக் கணக்கு மூலம் வருகின்றன. அந்த அளவுக்குக் கறுப்புப் பணம் தவிர்க்கப் படுகிறது.  இது  ஒரு பக்கம். இன்னொரு பக்கத்தில், ஒரு அரசியல் கட்சிக்கு யார் எவ்வளவு நன்கொடை அளித்தார் என்ற விவரம் பணம் கொடுத்தவருக்கும் அதை வாங்கிய அரசியல் கட்சிக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும். மற்ற எவருக்கும் தெரியாமல் இருக்கும். இது இந்தத் திட்டத்தின் பெரிய பிரச்சனை என்கிறது சுப்ரீம் கோர்ட்.

 

ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஒரு அரசியல் கட்சிக்குப் பத்து கோடி, நூறு கோடி, அதற்கு மேலும் நன்கொடைகள் தரலாம், மூன்றாம் மனிதர் அதை அறியமுடியாது, என்றாகிவிட்டால் – பணம் வங்கி வழியாகச் செல்கிறது என்றாலும் – ஒரு அரசியல் கட்சியும், அதுவும் பதவியில் இருக்கும் அரசியல் கட்சியும், அதன் நன்கொடையாளரும் என்ன செய்ய வாய்ப்பிருக்கிறது? இருவரும் தங்களுக்குள்  தவறான பிரதிபலன்களை (quid pro quo) ஏற்படுத்திக் கொள்ளலாம். இதனால் ஆட்சி நிர்வாகம் பாதிக்கப்படும். இந்த ஆபத்துக்கான வாய்ப்பை சுப்ரீம் கோர்ட் கருத்தில் வைத்தது.

 

இரண்டாவதாக ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டியது சுப்ரீம் கோர்ட். நமது தேர்தல்களில் வேட்பாளர்களை விட அரசியல் கட்சிகளின் பங்கு மிக முக்கியம். தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் கீழ் ஒரு அரசியல் கட்சி யார் யாரிடமிருந்து எவ்வளவு பணம் நன்கொடையாகப் பெறுகிறது என்ற முக்கியமான விவரத்தை நாட்டின் வாக்காளர்கள் அறியமுடியாது. அதனால் குடிமக்களின் அடிப்படை உரிமையான 'தகவல் அறியும் உரிமை' பறிபோகிறது, ஆகவே தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது, அது தொடர்பான சட்ட திருத்தங்களும் செல்லாது, என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது சுப்ரீம் கோர்ட். இது சரியான தீர்ப்பு.

 

      அரசியல் சட்டப்படி ஒரு திட்டம், அது தொடர்பான சட்டம், ஆகியவை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்திருக்கிறது, அவ்வளவுதான். மத்திய அரசும் அதை மதிப்பதாகச் சொல்லிவிட்டது. ஆனால் தீர்ப்பு வந்த உடன், எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் இந்தத் தீர்ப்பு ஏதோ பாஜக-விற்கு, அந்தக் கட்சியின் நன்நடத்தைக்கு, எதிரானது மாதிரியும், தாங்கள் நேரானவர்கள், சுத்தமானவர்கள் என்கிற தொனியிலும் இந்தத் தீர்ப்பை அமோகமாக வரவேற்று பாஜக-வை இடித்துப் பேசி இருக்கிறார்கள். இது போலித்தனம்.

 

      பாஜக-வைப் பழித்தபடி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைக் கொண்டாடும் எதிர்க் கட்சித் தலைவர்கள் எப்படியானவர்கள்? இதைக் கவனிப்பது முக்கியம்.


    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் கீழ், ஆறு ஆண்டுகளில் எல்லா அரசியல் கட்சிகளும் வங்கி மூலமாகப் பெற்ற நன்கொடைத் தொகை மொத்தம் சுமார் 16,500 கோடி ரூபாய்.  ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் UPA கூட்டணி முதன்முறை மத்தியில் ஆட்சி செய்தபோது ஒரே வருடத்தில், அதாவது 2008-ம் வருடம் நடந்த 2-ஜி லைசென்ஸ் ஊழலில், அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் 1.76 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என்பது சி.ஏ.ஜி-யின் குறிப்பு. சரியான தொகை எவ்வளவு என்று ஒரு திராவிட மாடல் அரசியல்வாதிக்குத் தெரியும்.

 

          இன்னொரு சாம்பிள். 2004 முதல் 2014 வரை UPA கூட்டணி மத்தியில் இரண்டு முறை ஆட்சி செய்தபோது அரங்கேறிய நிலக்கரி ஊழல்களில் அரசுக்கு நஷ்டம் 1.86 லட்சம் கோடி ரூபாய் என்றது சி.ஏ.ஜி அறிக்கை. தேர்தல் பத்திரங்கள் திட்டம் இல்லாமலே இது போன்ற சாதனைகளைச் செய்த அரசியல் கட்சிகள் இப்போது வந்திருக்கும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைக் காரண காரியமாக  வரவேற்கின்றன – மத்திய பாஜக அரசின் பத்தாண்டு ஆட்சியின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் சொல்ல முடியாமல், அதனால் தங்களுக்கு ஏற்பட்ட விரக்தியைத் தாங்க முடியாமல்.

 

 மறுபடியும் எதிர்க்கட்சிகள் எப்போதாவது மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகத் தேர்தல் பத்திரங்கள் திட்டம் இப்போதே ரத்தானது ஒருவிதத்தில் நல்லது. தேர்தல் பத்திரங்கள் இல்லாத போதும் அவற்றைத் தவிர்த்தும் நன்றாக விளையாட்டுக் காட்டும் எதிர்க்கட்சித் தலைவர்கள், அந்தத் திட்டத்தை முனைப்புடன் கையிலெடுத்தால் யாருடன் என்ன பேசி என்ன முடிப்பார்களோ? கண்டுபிடிக்கவும் முடியாதே!


    வாக்காளர் நலனுக்காக, ஜனநாயக வெற்றிக்காக என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்கும் எதிர்க் கட்சித் தலைவர்களில் பலர், சாதாரண வாக்காளர்களின் தலையில் நடப்பவர்கள். ஆட்சியில் அமர்ந்து கொள்ளை அடிப்பது, அதற்குத் துணை போவது, அரசு செலவில் இமாலய இலவசங்கள் விநியோகிப்பது, தாங்கள் குவித்த செல்வத்திலிருந்து ஓட்டுக்குப் பணம் தருவது, ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் சீராக முன்னேற ஒன்றும் செய்யாமல் இருப்பது, என்பதாக அப்பாவி வாக்காளர்களை வஞ்சிப்பவர்கள் அந்தத் தலைவர்கள்.

 

          விஞ்ஞான ரீதியாகப் பல்லாயிரம் கோடிகளில் பணம் சேர்த்துவிட்டு, அவற்றை வெளிநாடுகளில் மறைத்து வைக்கும் அரசியல் தலைவர்களை நாம் ஊகிக்கலாம். அவர்கள் வெறும் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உபயோகித்துச் சொத்து சேர்க்கவில்லை. ஆகையால் இந்தத் திட்டம் ரத்தானதற்காக இப்போது அவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்குக் கை தட்டுவார்கள். ஆனால் தங்கள் வழியில் ரகசிய சம்பாத்தியத்தைத் தொடர்வார்கள்.

 

    ஓட்டுப்  போடுகின்ற  மக்களின் தகவல் அறியும் உரிமை பறிபோனதால், வாக்காளர்களின் அந்த உரிமையை சுப்ரீம் கோர்ட் சட்ட அளவில் மட்டும் தனது தீர்ப்பினால் காப்பாற்றி இருக்கிறது – இதைத்தான் கோர்ட் செய்யமுடியும். ஆனால் நிஜத்தில் எண்ணற்ற அந்த அப்பாவி மக்களை நமது எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கசக்கிப் பிழிந்து ஏமாற்றிக் கொழிக்கிறார்கள் – இதில் கோர்ட் ஒன்றும் செய்வதற்கில்லை. 


     நமது மக்கள் நிஜத்தில் காப்பாற்றப்பட நாம் என்ன செய்யலாம்? பிரார்த்திக்கலாம். அதுபோக, மத்தியில் பாஜக-வின் நல்லாட்சி தொடர அதிகமானோர் அக்கட்சிக்கு வாக்களிக்கலாம். கோர்ட் உத்தரவுகளைத் தாண்டி, நடைமுறையில் அதுதானே அப்பாவி இந்தியர்களுக்கு நிஜப் பலன்கள் தரும்? 

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

Wednesday, 7 February 2024

கட்சி ஆரம்பிக்கிறார் விஜய். சொல்லும் காரணம் கப்ஸா


-- ஆர். வி. ஆர்

 

          நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி விட்டார், ‘தமிழக வெற்றி கழகம்’  என்ற பெயரோடு.  புதுக் கட்சிக்கான கப்ஸா  காரணங்களை முன்வைத்து, அவரது  எக்ஸ்  பக்கத்தில் ஒரு அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார்.  

 

        மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்களுக்குக் கேடானவை என்று சொல்லி, அவரைப் பொறுத்தவரை எந்த வகையில் அவையெல்லாம் தீயவை என்றும் விளக்கி, தனது அறிக்கையில் பேசுகிறார் விஜய். அவரது வார்த்தைகள் இதோ:

 

தற்போதைய அரசியல் சூழலில் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மலிந்த கலாச்சாரம் ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாச்சாரம் மறுபுறம். இவ்வாறு இருபுறமும் நமது ஒற்றுமை, முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.

 

     

     இன்னும் தெளிவாகப் புரியவேண்டுமா? விஜய் சொல்வது இதுதான்.  

 

‘இரண்டு விதமான அரசியல் கட்சிகள் நமது ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் கெடுதல் செய்கின்றன. ஊழல் செய்வது மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளுக்குக் காரணமாக இருப்பது, ஒரு வகைக் கட்சி. மக்களிடையே சாதி மத பேதங்கள் செய்து அவர்களைப் பிளவு படுத்துவது, இன்னொரு வகைக் கட்சி.

 

 

சரி, எந்தக் கட்சிகளை மனதில் வைத்து விஜய் இப்படிப் பேசியிருக்க முடியும்?


1967-ல் இருந்து இன்றுவரை மாறி மாறித் தமிழகத்தில் ஆட்சி செய்வது திமுக மற்றும் அதிமுக கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளைத்தான் தமிழகத்தில் நிலவும் ஊழலுக்கும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் பொறுப்பு என்று விஜய் நினைக்க முடியும். அதோடு, பத்து வருடங்கள் முன்பு மத்திய அரசாங்கத்தில் வியாபித்த ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளை நினைவு படுத்தும் காங்கிரஸ் கட்சியையும் மனதில் வைக்காமலா விஜய் பேசியிருப்பார்? ஆக, இந்த மூன்று பெரிய கட்சிகளை மறைமுகமாகத் தீயவை என்ற ஒரு வகைக்குள் சேர்க்கிறார் விஜய்.  

 

      சென்ற பத்து வருடங்களாக மத்தியில் செயல்படும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி, ஊழல் செய்தது அல்லது நிர்வாகச் சீர்கேடுகளுக்கு வித்திட்டது என்று யாரும் பேசமுடியாது. அது விஜய்க்கும் தெரியும்.  ஆனாலும் பாஜக மத்தியில் ஆட்சி செய்வதை, தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருவதை, விஜய் எதிர்க்கிறார். பாஜக-வை எப்படிக் குறிப்பிடுவது என்று யோசித்த அவர், ‘மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் அரசியல் கலாச்சாரம்’ என்ற  வார்த்தைகளால் பாஜக-வையும் தீதானது என்று திமுக பேசுவது போல் வர்ணித்து விட்டார் – அதுதான் விஜய் எதிர்க்கும் இன்னொரு வகைக் கட்சி என்பதாக.


     ‘மத்தியிலும் தமிழ்நாட்டிலும் பல சமீப ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் மக்களுக்குப் பெரும் தீங்கு செய்து கொண்டிருக்கிறார்கள். நான் கட்சி ஆரம்பித்து, தேர்தலில் ஓட்டு வாங்கி, மக்களுக்குக் கேடான அந்த எல்லாக் கட்சிகளையும் தோற்கடித்துப் பதவிக்கு வந்து – குறிப்பாகத் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி – மக்களை ஒற்றுமைப்படுத்தி முன்னேற்ற வேண்டும்’ என்று சொல்ல வருகிறார் விஜய். இது அவருடைய முழு அறிக்கையில் தெரிகிறது. இப்படி அரசியல் உலகில் ஆசை, அப்பாவித்தனம், அசட்டுத்தனம் ஆகியவற்றின் மொத்த உருவமாக விளங்குகிறார் விஜய்.

 

தன் சட்டை கசங்காமல், டிசைனாக முடிவெட்டிய தலை கலையாமல், சாதாரண மக்கள் மத்தியில் ஒரு மணி நேரம் விஜய் தெருவில் நடந்து அவர்களோடு இயல்பாகப் பேச முடியுமா? அது முடியாவிட்டால் தனது ரசிகர்களைத் தாண்டி விஜய் பெரிதாக ஓட்டுகள் வாங்க முடியாது – அதுவும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகள், அவற்றின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும் அவர் தேர்தலில் எதிர்த்து வெல்ல நினைத்தால். முதலில் அப்படி அவர் வீதியில் நடக்கட்டும். பிறகு அவர் மற்றதைக் கவனிக்கலாம். அந்த மற்றதில் ஒன்று: தன் கட்சிப் பெயரில், தன் அறிக்கை வாசகங்களில், தோன்றவேண்டிய க், ச், த் போன்ற மெய்யெழுத்துக்களை உதற வேண்டாம்.    

 

எம்.ஜி.ஆர் எப்படி அரசியலில் வென்றார் என்று கேட்டால், அவர் விஷயம் வேறு. ஒரு தனிமனிதராக, தான் நடித்த திரைப்படங்கள் மூலமாக, அவர் சாதாரண மக்களின் மனதை வென்றவர். அதை ஆதாரமாக வைத்தே அவர் தேர்தல்களில் எளிதாக ஓட்டுகள் வாங்கி ஜெயித்தார். அவரே அவரது அரசியல் வாரிசு மாதிரி முன்நிறுத்தியதால், பின்னர் ஜெயலலிதா அரசியலில் தலை எடுப்பது எளிதாயிற்று. விஜய் விஷயம் வேறு. அவர் தனது படங்கள் மூலம் இளைஞர்களின் உணர்ச்சிப் பெருக்கை ஈர்த்தவர், பலதரப்பட்ட மக்களின் மனதை வென்றவர் அல்ல. ஜெயலலிதா போன்ற இரும்பு மனிதரும் அல்ல விஜய். அதோடு, இன்றைய ஓட்டுக் கணக்குகள் மாறானவை. அவை விஜய் கையாளக் கூடியவை அல்ல.


இன்னொரு விஷயம். மேடைகளில் விஜய் பேசுவதை வீடியோவில் பார்த்தால், அவருக்கும் தலைமைப் பண்புகளுக்கும் வெகு தூரம், அவற்றுக்கான முதிர்ச்சியை அவர் 49 வயதிலும் எட்டவில்லை என்பது அவர் முகத்திலும் சொற்களிலும் தெரியும். அவரது உடல் மொழியும் சொல்லும்.    

 

விஜயகாந்திடம், ரஜினிகாந்திடம் காணப்பட்ட சராசரிக்கு மேலான தலைமைப் பண்புகள் விஜய்யிடம் இல்லை. அந்த மேலான பண்புகள் அபரிதமாக இருந்தால்தான், பல துறைகளிலும் வல்லுனர்களாக இருப்பவர்களை ஒரு தலைவர் தன்னருகே ஈர்க்க முடியும். வல்லுனர்களின் நம்பிக்கையும் துணையும் சேர்ந்தால்தான், ஒரு பிரதமரோ அல்லது முதல் அமைச்சரோ பெரும் சாதனைகள் செய்ய முடியும் – அதுவும் விஜய் மாதிரித் தமிழ்நாட்டின் அரசியல் களத்தைப் புரட்டிப் போடும் கனவில் இருக்கும் ஒரு கட்சித் தலைவரால். நரேந்திர மோடி அதைப் பெரிய அளவில் நாடெங்கும் நிரூபித்து வருகிறாரே?


ஒரு அரசியல் கட்சியின் ஸ்தாபகராக, தலைவராக, விஜய்யால் என்னதான் செய்ய முடியும்? பத்தோடு பதினொன்றாக அவரும் அவர் கட்சியும் வண்டி ஓட்டலாம். ஊழல் கட்சி என்று அவர் மறைமுகமாகத் கண்டனம் செய்த ஒரு கட்சியுடன் ‘மக்கள் நன்மைக்காக’ என்று சொல்லிக் கூட்டணி வைக்க ஆசைப்படலாம், கமல் ஹாசன் மாதிரி.

 

ஒன்றும் ஆகாவிட்டால்,  அரசியலுக்காக விஜய் விடப் போகிறேன் என்று சொன்ன திரையுலகம் அவருக்கு இருக்கும். ‘மக்கள் விரும்புகிறார்கள். மறுபடி நடிக்க வருகிறேன்’ என்று அப்போது அவர் அறிவித்தால் போயிற்று. சொன்ன வார்த்தைகளை ஒவ்வொன்றாகக் காற்றில் பறக்க விட்டால் என்ன? அதுவே ஒரு சராசரி அரசியல் தலைவருக்கு அழகு என்றாகுமே?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai