Sunday, 14 January 2024

அயோத்தி ராமன் காண்பிக்கும் அற்புதம்

 

          ஆர். வி. ஆர்

 

          உத்தரப் பிரதேசம் அயோத்தியில் எழும் ராமர் கோவில், அதற்கான அடிக்கல் நாட்டும் முன்னரே ஒரு அற்புதத்தைக் காண்பித்து விட்டது. இன்னொரு அற்புதத்தையும் அது காண்பிக்கலாம்.   

 

வருகிற ஜனவரி 22-ம் தேதி, புதிய அழகிய ராமர் கோவிலுக்கு அயோத்தியில் கும்பாபிஷேகம் நடக்கப் போகிறது. பிரதமர் மோடி அதில் முன்னிலை வகிப்பார்.  அவரை வைத்துத்தான் அந்த ராமர் கோவில் ஏற்கனவே ஒரு அற்புதத்தை வெளிக்காட்டியது.    

 

ராம ஜென்மபூமி ஹிந்துக்களின் கைகளுக்குத் திரும்ப வேண்டும், அங்கு புதிய ராமர் கோவில் கட்டப்பட வேண்டும், என்று கோரி ஒரு இயக்கம் பல வருடங்கள் நடந்தது. பல போராட்டங்கள் நடந்தன. ரத்தம் சிந்தியது. உயிரிழப்புக்கள் ஏற்பட்டன.   

 

ராம ஜென்மபூமி விஷயத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சில வழக்குகள் தொடர்ந்தனர். இறுதியாக ஐந்து நீதிபதிகள் கொண்ட ஒரு சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், நவம்பர் 2019-ல் ராம ஜென்மபூமி இயக்கத்தின் நோக்கத்திற்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது.  அதற்கு முன்னர் அதே வருடத்தில் நரேந்திர மோடி இரண்டாம் முறையாக இந்தியாவின் பிரதமரானார்.

 

சுப்ரீம் கோர்ட்டின் அந்தத் தீர்ப்பு வரும் சமயத்தில் மோடி பிரதமராக இல்லாவிட்டால், நீதிபதிகளே அப்படி ஒரு நியாயமான நல்ல தீர்ப்பை வழங்க முடிவது சந்தேகம் என்று பலரும் நினைப்பார்கள். அதற்குக் காரணங்கள் உண்டு.

 

ராம ஜென்மபூமி முழுமையாக ஹிந்துக்கள் வசம் வரவேண்டும், அந்த இடத்தில் புதிய ராமர் கோவில் வரட்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொன்னால், அதைச் சாக்காக வைத்து அரசியல் விஷமிகளும் சமூக விரோதிகளும் கைகோர்த்து நாட்டில் பெரிய மதக் கலவரத்தைத் தூண்டிவிடுவார்களா, அது நடந்தால் கலவரம் கட்டுக்கடங்காமல் பூதாகாரம் ஆகுமா என்ற கேள்விகள் யதார்த்தமானவை, ஆனால் அவற்றுக்கான பதிலை முன்கூட்டி ஊகிப்பது எளிதல்ல. அப்படி ஒரு மகா பாதகத்தை முயன்று பார்க்க நமது நாட்டில் சில அரசியல் சக்திகள், சில விஷம சக்திகள், தயங்காது.  சில வெளிநாட்டு சக்திகளும் சேரலாம்.  

 

அத்தகைய விபரீதம் திட்டமிட்டு நாட்டில் அங்கும் இங்குமாக நடத்தப்பட்டு மக்களும் பலவாறாகப் பாதிக்கப்பட்டால், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புதான் அதற்குக் காரணம் என்று நமது நீதித் துறையின் மீது பெரும் பழி சேர்கிற மாதிரி பேச்சுக்களும் சம்பவங்களும் அரங்கேறும்.

 

ராம ஜென்மபூமிக்குச் சாதகமான தீர்ப்பு வந்து அப்படியான கலவரம் நடந்தால், அதை உறுதியாக அடக்கி முறிக்கும் யோக்கியதையும் மன வலிமையும் கொண்ட ஒரு தலைவர் அப்போது பிரதமராக இருந்த மோடி மற்றும் அதிகாரத்தில் அவருக்குத் துணையாக இருந்த பலர் அதில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உண்டு. இது அனைவருக்கும் தெரியும்.  

 

அந்த சமயத்தில் மோடிக்குப் பதில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒருவர் (மன்மோகன் சிங்கோ, ராகுல் காந்தியோ, மல்லிகார்ஜுன கார்கேயோ) அல்லது காங்கிரஸ் கூட்டணிக் கட்சியிலிருந்து ஒருவர் (தேவ கவுடா மாதிரி) நாட்டின் பிரதமராக இருந்தார் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.  இல்லை, மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் என்று யாரோ ஒருவர் பிரதமராக இருந்தார் என்றும் கவலையோடு நினைத்துப் பாருங்கள். அப்போது யார் என்ன காரணத்திற்காக என்ன திட்டமிடுவார், என்ன அசம்பாவிதம் எங்கு நடக்கும், அதைக் கட்டுப்படுத்தும் தெம்பும் திராணியும் அத்தகைய பிரதமருக்கு இருக்குமா என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகள். இந்தச் சூழ்நிலையில், கோர்ட் சரியான நியாயத்தை வழங்கினாலும், பின்னர் வர வாய்ப்புள்ள கலவரத்தால் நீதித்துறைக்குப் பழியும் பொல்லாப்பும் வருமே என்ற கவலை நீதிபதிகளை வாட்டும். அந்தக் கவலை அவர்களின் தீர்ப்பில் எப்படி எதிரொலிக்கும் என்பதைக் கணிக்க முடியாது.

 

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரப் போகும் நாளில் மோடி பிரதமராக இருந்தார். ஆறு மாதங்கள் முன்பாக, அதற்கு ஐந்து வருடங்கள் முன்பாகவும், லோக் சபா தேர்தலில் நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தார். மக்கள் சக்தி, தேசப் பற்று, நேர்மைப் பண்பு, அசாத்தியத் தலைமை, நிர்வாகத் திறமை, சர்வதேச நற்பெயர், அனைத்தையும் கொண்டவர் அவர். தீர்ப்புக்கு மூன்று மாதம் முன்புதான், காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து கொடுத்த அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ஒரு தோட்டா சுடாமல், துளி ரத்தம் சொட்டாமல், சட்டரீதியாக  முடக்கிக் காட்டினார்.  அதை உலகம் பார்த்தது.

 

ராம ஜென்மபூமி வழக்குகளில் சரியான இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டால் நாட்டில் அப்போது அமைதி காக்கப்படும் என்ற சூழ்நிலையைத் தனது பல குணாதிசயங்கள் மூலம் பிரதமர் மோடி உருவாக்கி இருந்தார். அதனால் அந்தத் தீர்ப்பு எளிதாக வரமுடிந்தது. தீர்ப்பு நாளில் மோடி பிரதமராக இல்லை என்றால், ராம ஜென்மபூமிக்குச் சாதகமான சரியான தீர்ப்பு வருவது மிகச் சந்தேகம் என்று நாம் நினைத்தால் தவறில்லை – நிச்சயம் வந்திருக்காது என்று ஒருவர் நினைத்தாலும் புரிந்து கொள்ளலாம்.

 

ராம ஜென்மபூமிப் பிரச்சனை சுமூகமாக முடிந்ததற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒரு பக்கம் உதவியது.  மறு பக்கத்தில் அதற்கான நீண்ட இயக்கம் உதவியது. அந்த மறு பக்கத்தின் முக்கியக் கடைசி அத்தியாயத்தை – அதாவது தீர்ப்பு சமயத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்புக்கு மத்திய அரசு நிச்சய உத்தரவாதமாக இருந்ததை – மோடி அமைதியாக எழுதினார். அந்த வகையில் மோடி ஒரு அற்புதம். அயோத்தியின் புதிய ராமர் கோவில் அந்த அற்புதத்தைக் காண்பிக்கிறது அல்லவா?

  

இன்னோரு அற்புதத்தையும் அயோத்தி ராமர் நமக்குக் காண்பிக்க வல்லவர். அதற்கான அடித்தளத்தை அவர் இட்டுவிட்டார். அதன்மேல் உறுதியாக, ஒரு அற்புதமாக, நிலைத்திருப்பது ஹிந்துக்களின் பொறுப்பு. அந்த அற்புதம் என்பது, ஹிந்துக்களின் மதம் சார்ந்த நியாயமான பெருமிதம்.  

 

ராமரைப் போல அனைத்து மக்கள் மனதை வசீகரிக்கும் ஒருவர் இல்லை. பட்டாபிஷேகத்துக்கு அவர் தயாராகும் நேரத்தில் ‘காட்டுக்குப் போ’ என்று அப்பா அழுதவாறு சொன்னாலும், ‘சரி, போகிறேன்’ என்று சிரித்தவாறு கிளம்பியவர் ராமர். பெற்றவர் பேச்சை இப்படிக் கேட்கும் மகனான ராமரை, எல்லா அம்மா அப்பாக்களுக்கும் வெல்லமாகப் பிடிக்குமே? தனக்கு வந்த ராஜ்ஜியத்தைப் பதினாலு ஆண்டுகள் தம்பியிடம் கொடுத்த ராமரை இன்றைய தினம் எந்தச் சகோதரனுக்குப் பிடிக்காது? ஏக பத்தினி விரதனாக இருந்த ராமர் எல்லாப் பெண்களுக்கும் ஹீரோவாக இருப்பாரே? பாலம் அமைத்து இலங்கை சென்று ராவணனைப் போரிட்டு அழித்து சீதையை மீட்ட மாவீரன் ராமரின் பாராக்கிரமமும் எல்லாரையும் பரவசப்படுத்துமே?  

 

ஆண் பெண் என்று எல்லா ஹிந்துக்களையும் கவர்கிறவர் ராமர். அவருக்காக மீண்டும் அயோத்தியில் எழும்  பிரும்மாண்டமான கலைநயம் மிகுந்த கோவில், ஹிந்துக்கள் அனைவரையும் அயோத்திக்கு ஈர்க்கிறது. அதோடு, அவர்கள் அனேகரிடம் தற்போது இல்லாத ஒன்று வளரவும் உறுதிப்படவும் வழி வகுக்கிறது அப்படி ஹிந்துக்களிடம் வளர்ந்து உறுதிப்பட வேண்டியது, “இது என் மதம். இது எனக்குப் பெருமிதம்” என்கிற உணர்வு. அந்த உணர்வே ஹிந்துக்களை இணைத்துக் காக்கும் அற்புதம். ராமரின் உதவிக் கரத்தைப் பற்றி ஒன்றுபட்டு உயர்வது இனி ஹிந்துக்கள் கையில்.

* * * * *

 Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Friday, 12 January 2024

விஜய் சேதுபதி: ஹிந்தி பத்தி பேசமாட்டேன் போடா!

 

          ஆர். வி. ஆர்

 

விஜய் சேதுபதி சிறந்த தமிழ் நடிகர். ஹிந்திப் படங்களிலும் நடிக்கிறார். ஹிந்தி, தமிழ் இரண்டு மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட அவரது புதிய படம் இப்போது வந்திருக்கிறது. அது சம்பந்தமான செய்தியாளர் சந்திப்பில், அவர் ரசிக்காத ஒரு கேள்வி அவரை நோக்கி வந்தது.

 

“தமிழ்நாட்டுல 75 வருஷமா ஹிந்தி எதிர்ப்பு இருக்கு.  இங்க ஹிந்தி தெரியாது போடான்னு சொல்றாங்க. நம்ம மாநிலத்துல ஹிந்தி படிக்கணுமா வேண்டாமா” என்று ஒரு நிருபர் கேட்க, “இந்தக் கேள்வியை என்னை மாதிரி ஆள் கிட்ட கேட்டு உங்களுக்கு என்ன ஆகப்போகுது? இப்ப எதுக்கு இந்தக் கேள்வி? இது தேவை இல்லாத கேள்வி. நாம ஹிந்தி படிக்க வேணாம்னு சொல்லலை. திணிக்க வேணாம்னுதான் சொல்றோம்” என்று அந்த விஷயத்தை அவசரமாகத் தவிர்க்க நினைத்தார் விஜய் சேதுபதி.  அதற்குக் காரணம் இருக்கிறது.

 

பல ஆண்டுகள் முன்பு, ஹிந்தி எதிர்ப்பு என்பது திமுக-வின் அரசியல் பாதையில் ஒரு மைல்கல்லாக இருந்தது. அப்போது ஹிந்தி எதிர்ப்பாளர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக, 1967-ம் ஆண்டு பாராளுமன்றம் ஒரு சட்டதிருத்தம் செய்தது. அதன் பின்னர், “ஐயோ, ஹிந்தித் திணிப்பு பண்றாங்களே!” என்று ஹிந்தி பேசாத மாநிலத்தில் ஒருவர் பாசாங்கு செய்யவும் முடியாமல் போனது.

 

சுருக்கமாக, என்ன சொல்கிறது அந்த சட்ட திருத்தம்? ஹிந்தி பேசாத மாநிலங்கள் ஒன்று விடாமல், ஹிந்தி மட்டும் மத்திய அரசின் அலுவல் மொழியாக இருக்கட்டும் என்று ஏற்றுக் கொண்டால் ஒழிய, அதன் பின்னர் பாராளுமன்றமும் அதற்கு இசைந்தால் தவிர, ஆங்கிலமும் முன்பு போல மத்திய அரசின் அலுவல் மொழியாகத் தொடரும். இதுதான் அதன் உறுதியான சாராம்சம்.  இதற்குப் பிறகு ஹிந்தித் திணிப்பு என்ற பேச்சுக்கே இடம் நஹி. இந்நாளில் ஹிந்தித் திணிப்பு, ஹிந்தி எதிர்ப்பு என்பது செத்த பாம்பு – இன்றைக்கு வெள்ளையனே வெளியேறு கோஷம் மாதிரி.  

 

பல மொழிகள் பேசப்படும் இந்தியாவில், அதுவும் கல்வியறிவு குறைந்த நமது நாட்டில், அந்நிய மொழி ஆங்கிலம் எல்லா மக்களுக்கான தொடர்பு மொழியாக இருக்க முடியாது. நம் நாட்டில் அதிகப் பிராந்தியங்களில் பேசப்படும் ஹிந்தி அத்தகைய தொடர்பு மொழியாக அமைவது இயற்கை. அனைத்து மக்கள் தொடர்பு மொழியாக அதைக் கற்கும் அவசியத்தை, அதன் பொருளாதார அனுகூலத்தை, அதிகமான தமிழர்கள் இப்போது உணர்கிறார்கள். இந்தக் கால மாற்றமும் சேர்ந்து திமுக-வையும் அதன் அனுதாபிகளையும் மனதுக்குள் பின்வாங்க வைக்கிறது.


மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, கற்பனையான ஒரு பிசாசை உருவாக்கி அதனிடம் இருந்து மக்களைக் காப்பது தாங்கள்தான் என்று பேசித் தங்களை வளர்த்துக் கொள்பவர்கள் திமுக தலைவர்கள். அப்படித்தான் அவர்கள் சிருஷ்டித்த ஹிந்திப் பிசாசுக்கு அவர்களே இன்னும் செயற்கை சுவாசம் கொடுத்துப் பராமரிக்கிறார்கள். அந்தப் பிசாசு நம்மிடையே இல்லை என்று தெரிகிற மாதிரி யார் கேள்வி கேட்டாலும்  திமுக தலைவர்களுக்குப் பிடிக்காது. திமுக-வோடு ஒன்றியிருக்கும் பிரபலங்களுக்கும் அந்த மாதிரிக் கேள்விகள் தலைவலி. விஜய் சேதுபதிக்கு அப்படித்தான் இருந்திருக்கும்.

 

விஜய் சேதுபதி நடிக்கும் ஹிந்திப் படங்களில் அவருக்காக டப்பிங் கலைஞர்களின் குரல் ஒலிக்கிறது. அதனால் அவர் ஹிந்தி சினிமாவிலும் பிழைக்கிறார். ஆனால்  மற்ற பல துறைகளில் வேலை தெரிந்த தமிழ்நாட்டு இளைஞர்கள் ஹிந்தி படித்தால்தானே மற்ற மாநிலங்களில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியும்?  அவர்களுக்கு ஹிந்தி மொழியறிவும் ஒரு திறன் என்றாகிறதே?  அதை எளிதாக்கித் தருவது தமிழக அரசின் கடமை ஆகிறதே?

 

தாய் மொழியைக் கொஞ்சமாவது விட்டுத்தான் வேற்று மொழியான ஆங்கிலமோ ஹிந்தியோ படிக்க முடியும் என்பதில்லை.  ஆனால் திமுக-வானது தமிழை அழிக்கவந்த மொழி ஹிந்தி, அதைத் தமிழர்கள் முற்றிலும் விலக்கி வைப்பது தமிழைக் காக்கும், தமிழை வளர்க்கும் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கியது. படித்தவர்களும் அதில் சிக்கினார்கள், இப்போது வயதானபோது வருந்துகிறார்கள்.

 

ஒன்றைக் கவனியுங்கள். ‘ஹிந்தி அரக்கி’ நடமாடியபோது தனது தமிழைக் காத்துக் கொண்டவர், தாய் மொழியில் வல்லவராக விளங்கியவர், திமுக தலைவராக இருந்த கருணாநிதி. அவர் ‘போரிட்டு அந்த அரக்கியை அடக்கித் தமிழைக் காத்த பின்’ பிறந்தவர் அவர் பேரன் உதயநிதி.  ஆனாலும் உதயநிதி பேசும் தமிழ் சுமார் ரகம்தான். கடமை, கண்ணியம், கட்டுப்பாடும் அதில் கிடையாது. இன்று திமுக இளைஞர்கள் காட்டும் ஹிந்தி எதிர்ப்பு – அல்லது ‘ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு’ – அக் கட்சித் தலைவர்களுக்கு மட்டும்தான் லாபம் சேர்க்கும். அவர்கள் காட்டிக் கொள்ளும் தமிழ்ப் பற்றும் போலியானது.  

 

ஹிந்தி எதிர்ப்பை மகுடமாக அணிகிறது திமுக. ஆனால்  அந்தக் கட்சி சில மாதங்கள் முன்பு (16.9.2023) அதிகார பூர்வமாகத் தனது பெயரில்  ஹிந்தி மொழியில் ட்வீட் செய்தது.  “மகளிர்க்கு மாத உரிமைத் தொகை கிடைத்துவரும் போது, ஸ்டாலின்தான் இம் மண்ணை ஆள்வார்” என்ற அர்த்தத்தில் ஸ்டாலின் படம் போட்டு ஹிந்தியில் மார் தட்டியது திமுக. வடமாநில மக்களிடம் திமுக ஹிந்தியில் பேச விரும்புகிறது. ஆனால் தமிழக இளைஞர்கள் ஹிந்தி படிக்க வசதிகள் செய்து அவர்கள் மற்ற மாநிலங்களில் எளிதாக வேலை தேடிக் கொள்ள திமுக உதவாது. நம் இளைஞர்களை இங்கேயே வைத்து அவர்களின் ஓட்டுக்களை அள்ள வேண்டுமே?

 

திமுக-வின் முக்கியத் தலைவர்களுக்கு ஒன்று தெரியும். அவர்களது தொழில் பிரதானமாகத் தமிழகத்தில் நடக்கிறது. திமுக அகில இந்திய அளவில் வளர்ந்து அந்த சக்தியில் அவர்கள் யாரும் இந்தியாவின் பிரதம மந்திரி ஆக முடியாது. அதனால் ஹிந்தி படிக்காமல் இருப்பது, கட்சியினரைப் போடா-வாடா கோஷங்கள் போடவைப்பது, என்பது அவர்களுக்கு நஷ்டத்தைத் தராது. அவர்களின் லாபக் கணக்கு வேறு. கணிசமான தமிழ்நாட்டு எம்.பி-க்களை வைத்து மத்திய ஆட்சியில் பங்கு பெறவேண்டும்.  வேண்டிய பங்கு கிடைத்து விட்டால் போதும். யார் எக்கேடு கெட்டாலும் என்னடா!

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Friday, 5 January 2024

வியக்க வைக்கும் விஜயகாந்த்

 

-- ஆர். வி. ஆர்

 

மறைந்த நடிகர் விஜயகாந்த் ஒரு அரசியல்வாதியாகத் தமிழகத்தில் நிகழ்த்திய சாதனை பெரியது. சிலருக்கு அது  பிடிபடாமல் இருக்கலாம்.

 

சுயலாபம் தேடும் அரசியல் தலைவர்கள், ஊழல் மிகுந்த அரசு நிர்வாகம், இவை இரண்டும் இன்று இந்தியாவின் பல மாநிலங்களின் சாபக்கேடுகள். ஐம்பதாண்டுகள் மேலாக இவை தமிழகத்தின் தனி அடையாளம்.  இதற்கான பாதிக் காரணம், சாதாரண வாழ்க்கை நிலையில் வைக்கப் பட்டிருக்கும் பெருவாரியான நமது மக்கள்.

 

நமது நாட்டின் பாமர மக்கள், சாதாரண மக்கள், பொதுவாக நல்லவர்கள். ஆனால் குறைவான படிப்பறிவு, ஏழ்மை மற்றும் இயலாமை காரணமாக அவர்கள் அரசியலில் விவரம் அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நிலையில், அவர்களது அரசியல் அப்பாவித்தனத்தில், அவர்களைக் கட்டிவைத்து, அவர்களை ஏமாற்றித் தேர்தலில் மாறி மாறி ஜெயித்துக் கொழிக்கிறார்கள் அநேக அரசியல் தலைவர்கள்.

 

விஜயகாந்தைப் பொறுத்தவரை அவர் நேர்மையானவர், நியாயவாதி, பிறருக்கு உதவுபவர் என்று அவரது தனிமனிதப் பண்புகளுக்காக லட்சக் கணக்கான சாதாரணத் தமிழர்கள் மனதில் இடம் பிடித்தவர்.  அந்த மக்களின் அபிமானத்தையும் ஆதரவையும் ஒரு நல்ல அரசியல் சக்தியாக, தமிழகத்திற்குப் பயன்தரும் விதமாக, அவர் மாற்ற நினைத்துச் செயல்பட்டார்.

 

2005-ம் வருடம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை விஜயகாந்த் தொடங்கினார். திமுக தலைவர் கருணாநிதியும் அதிமுக தலைவர் ஜெயலலிதாவும் உச்சத்தில் இருந்த நேரம் அது. அந்த இரு தலைவர்கள் வழிநடத்தும் கட்சிகளையும் எதிர்க்கவேண்டும், அது நாட்டுக்கு நல்லது, என்ற நோக்கத்தில் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார். அதுவே நினைத்துப் பார்க்க முடியாத தைரியச் செயல்.

 

2006-ம் வருடம் – விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த எட்டு மாதங்களில் – தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வந்தது.  அப்போது திமுக, அதிமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளையும் எதிர்த்து, வேறு எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்காமல், தனியாகவே எல்லாத் தொகுதிகளிலும்  வேட்பாளர்களை நிறுத்தினார் விஜயகாந்த். முடிவில் அவர் ஒருவர் மட்டுமே தேமுதிக-வின் எம்.எல்.ஏ ஆனார்.  இருந்தாலும் அவர் கட்சி 8.4 சதவிகித ஓட்டுக்களைப் பெற்றது ஒரு சாதனை. பிறகு 2009-ம் வருடம் நடந்த லோக் சபா தேர்தலிலும் கூட்டணி இல்லாமல் தனியாகவே தமிழகத்தின் எல்லாத் தொகுதிகளிலும் நின்ற அவர் கட்சிக்கு 10.1 சதவிகித ஓட்டுக்கள் கிடைத்தன – ஒரு சீட்டும் கிடைக்காமால் போனாலும்.  இந்த அளவு ஓட்டு சதவிகிதங்கள், மற்ற சிறு கட்சிகள் எண்ணிப் பார்க்க முடியாத வெற்றி – அதுவும் கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில்.

 

மேலும் மேலும் விஜயகாந்த் அரசியலில் ஜெயிக்கமுடியாமல் போனதற்கான காரணங்கள் தனி.  மோசமாகி வந்த உடல்நிலையும் அவரை முடக்கியது.

 

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் “ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று சுருக்கமாக விளக்கினார் பெருந்தலைவர் காமராஜர். அதற்கான காரணங்கள் இன்றும் உண்டு. அந்த இரு கட்சிகளையும் ஆரம்பத்திலேயே எதிர்த்து நின்றது விஜயகாந்தின் அசாத்தியத் துணிவு மற்றும் தேசிய உணர்வுக்கான சான்று.

 

விஜயகாந்தின் கட்சிப் பெயரில் உள்ள “தேசிய” என்ற முதல் சொல்லே, அவர் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் எதிர்த்தார் என்று காட்டியது. ஹிந்தி எதிர்ப்பு என்ற பித்தலாட்டத்தை அவர் செய்யவில்லை. மும்பை தாரவில இருக்கற தமிழன் ஹிந்தி பேசுறான். தமிழ்நாட்டுல இருக்கற தமிழனும் ஹிந்தி படிக்கறது நல்லது” என்று பேசியவர் அவர். “அன்னைத் தமிழ்மொழி காப்போம். அனைத்து மொழியும் கற்போம்” என்பது அவர் கட்சியின் ஒரு குறிக்கோள்.

 

கருணாநிதி ஜெயலலிதா காலத்திலேயே திமுக மற்றும் அதிமுக-வை எதிர்த்து 8 சதவிகிதம் 10 சதவிகிதம் என்று விஜயகாந்த் வாக்குகள் பெற்றது ஒரு தெளிவான அறிகுறி. அதாவது,  அந்த நல்ல காரியம் தமிழகத்தில் மேலும் வலுப் பெறுவது சாத்தியம், அதற்கான சரியான தலைவர்களைத் தமிழகம் எதிர்நோக்கி இருக்கிறது என்பதை விஜயகாந்த் நிரூபித்தார்.  

 

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே தேசிய சிந்தனை இல்லாத சுயலாபக் கட்சிகள்.  ஒன்று  பெரிய மட்டை, மற்றது சிறிய மட்டை.  முதலில் சிறிய மட்டை உதவியுடன் பெரிய மட்டையை ஓரம் தள்ளித் தூக்கிப் போட முடிந்தால் அதை ஒருவர் செய்துபார்க்க வேண்டியதுதான். அவர் அளவில் அப்படியும் முயன்றவர் விஜயகாந்த். தமிழக அரசியலில் அவர் வெளிப்படுத்திய முனைப்பும் முயற்சியும், அடைந்த ஆரம்பகால வெற்றியும், போற்றத் தக்கவை.

 

சிவாஜி கணேசன் தனியாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்தும் அவர் ஈர்க்க முடியாத மக்கள் ஆதரவு விஜயகாந்துக்கு நிறையக் கிடைத்தது. சரத் குமார், பாக்கியராஜ், டி. ராஜேந்தர் ஆகிய திரைக் கலைஞர்கள் முயன்று கைவிட்ட அரசியல் களத்தில் நின்று, விஜயகாந்த் பெரிய அளவில் வாக்குகள் சேகரித்தார். அதுவும் நல்ல எண்ணத்தோடு. 

 

2014 மற்றும் 2019-ம் வருட லோக் சபா தேர்தல் சமயங்களில், நரேந்திர மோடி பிரதமராக வருவதை விஜயகாந்த் ஆதரித்தார். அது விஜயகாந்தின் தேசிய உணர்வை, நல்லாட்சிக்கான விருப்பத்தை, காண்பித்தது.   

 

தனிக் கட்சி ஆரம்பிப்பதாக நீண்ட காலம் சொல்லிக் கொண்டிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் கருணாநிதி  மற்றும் ஜெயலலிதா இல்லாத தமிழ்நாட்டிலும் அதைச் செய்யாமல், கொரோனா வைரஸைத் துணைக்கு அழைத்து அவர் நிரந்தரமாகப் பின்வாங்கினார்.  


கமல் ஹாசன் என்ன செய்தார்? ஜெயலலிதா காலத்திற்குப் பின்,  கருணாநிதியும் ஆரோக்கியம் குறைந்து செயல்படாமல் இருந்த போது, கமல் ஹாசன் தனிக் கட்சி ஆரம்பித்தார் – ஏதோ நடத்தி வருகிறார். ஒரு சில தேர்தல் தொகுதிகளுக்காக கமல் ஹாசன் இப்போது திமுக-வின் வாசலில் காத்திருக்கிறார். அதிமுக-வைப் பற்றியும் கமல் அதிகம் பேசுவதில்லை. திமுக கைவிட்டால் அவர் அதிமுக-விடம் அந்த சில தொகுதிகளைக் கேட்க வேண்டி இருக்குமோ என்னவோ?  

 

அரசியல் ஆசைகள் கொண்டிருந்த, இன்னும் வைத்திருக்கும், இத்தகைய திரைக் கலைஞர்கள் மத்தியில் விஜயகாந்தின் அரசியல் பணி மகத்தானது, தேசநலன் மிக்கது. தமிழ்நாட்டுக்கான அவரது நல்ல அரசியல் நோக்கம் இனி வேறொரு உத்வேகமான அரசியல் தலைவரால் பூர்த்தியாக வேண்டும். அது நிகழ்வதற்கான ஆரம்ப அறிகுறியும் ஒரு முன்னேற்றமும் ஏற்கனவே தரையில் தெரிகிறது. தமிழகம்  நம்பிக்கையோடு காத்திருக்கலாமோ?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai