Sunday 28 March 2021

ரஜினிகாந்திற்கு ஒரு கடிதம்: ஏன் இந்த மஹா மௌனம்?

-- ஆர்.வி.ஆர்

 

அன்புள்ள ரஜினிகாந்த்,

  

எம்.ஜி.ஆரை அடுத்து, ஒரு வேற்று மாநிலத்தவராக தமிழ்த் திரையுலகில் அபார வெற்றி கண்டவர் நீங்கள். ஒரு நடிகராக, லட்சக்கணக்கான தமிழர்களை ரசிகர்களாக  ஈரத்திருக்கிறீர்கள்.  இன்னும் பலரிடமும் உங்களுக்கு நற்பெயர் உண்டு.

 

தமிழகத்தில் நீங்கள் பெற்ற வளர்ச்சிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று, உங்கள் திறமையும் உழைப்பும், அதோடு வந்த அதிர்ஷ்ட அறிமுக வாய்ப்புகளும். எளிதில் புலப்படாத மற்றொன்று: தமிழ் மக்களின் பாரபட்சமில்லாத பரந்த உள்ளம் - உங்களுக்குத் தெரியாதா என்ன?

 

உங்களுக்கு நல்ல மனது, நேர்மையான சிந்தனை என்பதும் அனைவருக்கும் தெரியும். அவைதான் தமிழகத்தில் உங்களுக்குப் பெருமதிப்பைக் கொண்டுவந்தன.    

 

நீங்கள் அரசியலுக்கு வருவீர்கள், தனிக்கட்சி தொடங்குவீர்கள், தமிழகத்தின் அனைத்து சட்டசபைத் தொகுதிகளிலும் அந்தக் கட்சி போட்டியிடும் என்று 2017  டிசம்பரில் – உங்கள் 67-வது வயதில் – அறிவித்தீர்களே,  அதற்குக் காரணம் உங்கள் நல்ல மனதுதான். அதாவது, உங்களைக் கொண்டாடும் தமிழ் நாட்டைப் பல பத்தாண்டுகளாக வஞ்சித்து நசுக்கும் தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்து  மீட்க முனையலாம் என்று நினைத்தீர்கள். அதற்கான முயற்சி, தமிழர்களுக்கு நீங்கள் செய்யக் கூடிய பிரதி உபகாரம், ஒரு தார்மிகக் கடமை, என்று உங்கள் நல்ல மனது கண்டிப்பாகச் சொல்லி இருக்கும், அதனால்தான் நீங்கள் அரசியலுக்கு வருவேன் என்று பிரகடனம் செய்தீர்கள்.  அதற்குத் தோதான, எளிதான காலமும் அப்போது சேர்ந்து வந்தது - ஜெயலலிதா மறைந்துவிட்டார், கருணாநிதி வயோதிகத்தால் செயல் இழந்துவிட்டார், ஆனாலும் அவர்களது கட்சிகள் திடமாக இருந்தன.

 

ஒருவர் அரசியல் கட்சி தொடங்கிச் செயல்பட பல காரணங்கள் இருக்கும். டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், சீமான், சரத்குமார் என்ற பலருக்கும் பல காரணங்கள், பல பயன்கள் உண்டு. எம்.ஜி.ஆருக்கும் அப்படி உண்டு, கமல் ஹாசனும் அதில் சேர்த்தி. இவர்கள் எல்லாரையும் விட உங்கள் அரசியல் பிரவேச நோக்கம் உயர்ந்தது. ஆனாலும் நீங்கள் உங்கள் முயற்சியைத் தடபுடலாக ஆரம்பித்து கடைசியில் விட்டுவிட்டீர்கள்.  விட்டதற்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவான  உங்கள் உடல்நிலை மற்றும் பரவி வரும் கொரோனா வைரஸ் முக்கிய காரணங்கள் என்று 2020 டிசம்பரில் நீங்கள் அறிவித்தீர்கள். அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால்  அந்த அறிக்கைக்குப் பின்னர், பற்றி ஏறியும் தமிழக அரசியலைப் பற்றி வாயே திறக்காத உங்கள் மௌனத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

 

நடிகர் விஜயகாந்த் 2005-ல் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து, அதற்கடுத்த வருடம் அவர் சந்தித்த முதல் சட்டசபைத்  தேர்தலிலேயே திமுக, அஇஅதிமுக இரண்டு கட்சிகளையும் ஒரு சேர எதிர்த்தார் – பத்து சதவிகித வாக்குகளையும் பெற்றார். அது ஒரு பெரிய ஆரம்பம். பிறகு மெள்ள மெள்ள அவருக்குத் தாக்குப் பிடிக்கும் மனவலிமை குறைந்து அவரது  உடல்நிலையும் மோசம் அடைந்து அவர் அரசியலில் பலவீனம் ஆனார். கடைசியாக இப்போது வந்த கமல் ஹாசனோ, இரண்டில் எந்தக் கட்சியோடு அணி சேர்ந்து முன்னேறலாம் என்று பார்த்து, சரியான சவாரி அமையாமல் இரண்டையும் வரும் சட்டசபைத் தேர்தலில் எதிர்க்கிறார்.

 

உங்கள் விஷயம் என்னநீங்கள் குறிப்பாக அரசியலுக்கு வர ஏன் ஆசைப் பட்டீர்கள்? நீங்கள் வராவிட்டால் திருமாவளவனோ சீமானோ சரத்குமாரோ தங்கள் கட்சிகளைக் கிடுகிடுவென்று வளர்த்து பத்துப் பதினைந்து வருடத்தில் தமிழக ஆட்சியைப் பிடித்து விடுவார்கள், அதை முன்பாகவே தடுக்க வேண்டும் என்பதற்காகவா? அல்லது திமுக, அஇஅதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளின் பிடியில் ஏற்கனவே ஐம்பது ஆண்டுகளாக சிக்கி நஷ்டப்படும் தமிழகத்தை, 2021 தேர்தல் மூலமாக விடுவிப்பது நல்லது என்பதற்காகவாபின்னதுதான் காரணம் என்று உங்கள் பேரக் குழந்தையும் சொல்லும்.  

 

திமுக, ஹிந்து மதத்திற்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படுகிறது, அஇஅதிமுக ஹிந்து மதத்திற்கு விரோதம் காட்டும் கட்சி இல்லை, அது திமுக-வையும் எதிர்க்கிறது என்பது போக, இரண்டு கட்சிகளின் மற்ற வண்டவாளங்கள் ஒன்றுதான். இது தவிர, திமுக-வின் அடிதடி அராஜக ஆட்டங்கள், மைக் வசைமொழிகள் ஆகியவை பிரசித்தம்.  அதனால்தான் நீங்கள் அந்த இரண்டு பெரிய கட்சிகளையும் எதிர்க்க நினைத்தீர்கள்.

 

திமுக மற்றும் அஇஅதிமுக கட்சிகளை 2021 தேர்தல் மூலமாக தமிழக ஆட்சிக்கு வராமல் செய்வது, உங்கள் கட்சி அந்தத் தேர்தலில் வென்று மாநிலத்தில் நேர்மையான திறமையான ஆட்சி தருவது, இந்த இரண்டும்தான் நீங்கள் செய்ய விரும்பியது. நீங்கள் கட்சி ஆரம்பிக்க முடியாததால் இரண்டாவது காரியத்தை செய்ய முடியவில்லை என்றால் சரி. ஆனால் திமுக மற்றும் அஇஅதிமுக கட்சிகளுக்கு எதிராக நீங்கள் ஒரு வகையில் கூட நகர முடியாமல் போய்விட்டதா என்ன?

 

அநீதி அக்கிரமத்தை எதிர்த்துக் குரல் கொடுத்து வீதியில் வந்து போராடிய மஹாத்மா காந்தியும் ஜெயபிரகாஷ் நாராயணனும், பின்னால் வந்த மாற்று ஆட்சியில் பங்கெடுக்க வில்லை. யாரை எதற்கு அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டுமோ அதற்குக் குரல் கொடுத்து எதிரிகளின் பலத்தைக் குறைத்து, அரசியல் வில்லன்களுக்கு எதிராக மக்கள் சக்தியைத் திரட்டினார்கள், மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தினார்கள். அதுவே சுயாட்சிக்கு, நல்லாட்சிக்குப் பெரும் சேவையாக இருந்தது.  அது மாதிரி, நீங்கள் கட்சி ஆரம்பிக்காமல், உங்கள் கட்சியினர் பதவிக்கு வராமல், போனாலும் நீங்கள் தமிழக அரசியல் நலனுக்கு உங்களால் ஆனதை செய்யவேண்டாமா? இந்த டிஜிட்டல் யுகத்தில், உங்களின் ஒரு பேச்சு, ஒரு அறிக்கை, ஒரு வேண்டுகோள், மக்களிடையே மின்னலாகப் பரவி முடிந்த தாக்கத்தை உண்டாக்குமே?

 

தமிழக சட்டசபைத் தேர்தல் இன்னும் எட்டு நாட்கள் கழித்து, ஏப்ரல் 6-ம் தேதி நடக்கப் போகிறது. தமிழகத்தில் தப்பாட்சி செய்து மாநிலத்தை முடக்கி வைத்திருக்கும் இரண்டு பெரிய கட்சிகளும் ஆட்சிக்கு வரக்கூடாது, தமிழக வாக்காளர்கள் அதை நினைவில் கொள்ளவேண்டும் என்று நீங்கள் இதுவரை பொதுவெளியில் சொல்லக்கூட இல்லை. கட்சி தொடங்க முடியாவிட்டாலும், தமிழக ஆட்சிக்கு யார் வரக் கூடாது என்றாவது நீங்கள் பளிச்சென்று சொல்லி இருந்தால், அதுவே நல்ல பலன்களுக்கு வித்திடும். அத்தகைய உங்கள் கருத்தும் வேண்டுகோளும் முன்பே வெளிவந்திருந்தால், அதற்கு ஏற்ப முக்கிய அரசியல் கூட்டணியும் தமிழகத்தில் உருவாகி ஒரு நல்வழிக்குப் பாதையும் ஏற்பட்டிருக்கும். இதை நீங்கள் செய்யாததிற்கு, உங்கள் உடல் நிலையோ கொரோனாவோ   காரணம் ஆகாதே

 

அரசியலுக்கு நீங்கள் வராமல் இருப்பதற்கான காரணம் சொன்னீர்களே, அதை உங்கள் தமிழக ரசிகர்கள் ஏற்பார்கள் - பிறகு இப்போது நீங்கள் நடிக்கும் அடுத்த படத்தை எதிர்பார்ப்பார்கள். அதுவும் அவர்களின் அமைதியான பரந்த உள்ளத்திற்கு அடையாளம். ஆனால் உங்கள் நல்ல மனது உங்கள் மௌனப்  போக்கை ஏற்குமா?

 

உங்கள் மனது நலிந்து துணிவையும் இழந்திருந்தால் ஒழிய, உங்கள் மௌனத்தினால் அது சமாதானம் அடையாது. அது உங்களை நச்சரித்தால், வரும் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னர் கூட ஒரு அறிக்கை மூலம், இப்போது தேர்தலை சந்திக்கும் கூட்டணிகளில் எது வெல்லக் கூடாது, எது இருப்பதில் நல்லது என்று நீங்கள் மக்களுக்குச் சொல்லலாம். அது சரியான வேண்டுகோளாக இருக்கும் என்பது உங்கள் நோக்கத்தை அறிந்தவர்களின் எதிர்பார்ப்பு.

 

நீங்கள் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி. இப்போது நீங்கள் ஒன்றும் சொல்லாமல் இருந்தால், அது நூறு குற்றங்கள் செய்த மாதிரி. கேட்டுப்பாருங்கள், உங்கள் நல்ல மனது சொல்லும்.

 

அன்புடன்,


ஆர். வி. ஆர்.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2021


13 comments:

  1. Rationally analysed and well presented.

    ReplyDelete
  2. Having got a bad name as indecisive, even his own followers abusing him, I am not sure, he will ever open his mouth to support any party. I have a feeling he’ll keep quiet observe the election outcome now.
    Later once his health accommodates, and if he retires from acting, he may join BJP.
    This is my guess !

    ReplyDelete
  3. Again, you have given a logical analysis and clear arguments. You have given the correct example of Gandhi and JP. Even if it is uncomfortable and personality not beneficial, one has to say what one feels right, raise the voice and stand & be counted. This, one can do even from hospital be bed. Hope this blog reaches him and make him to speak his mind, whatever it is.

    ReplyDelete
  4. Rajini is not the type of person to stick his neck out on any issue and takes his own sweet time. Hence, his announcement in December 2020 to kick start his new party in early January 2021, made Shri. Gurumurthy shed his cautious & conservative approach to openly declare that DMK would have very little chance! He had to swallow his pride when Rajni suddenly touted his health as the reason to change his mind. He did that from a Hyderabad hospital - he was there in the city to shoot for a film (they say Maran’s film) - suffering from fluctuating BP. Who caused that BP and how? Your guess is as good as mine. And that cause is very much in place even today - so powerful a cause that he can’t even open his mouth on the political happenings! Most certainly that cause has unsettled him to the core of his being. The only thing Rajni cares most now is his noble cause / purpose of releasing TN of the Dravidian stranglehold of corruption, anti Hindu, anti Hindi - to give back something to TN people who showered him with unbounded love. If his lips are sealed now, the cause is so powerful... May be Thuglak has a clue. BJP kept its options open for Rajni & we’re forced to go back to AIADMK. The hours Gurumurthy spent with Rajni have come to nought.

    ReplyDelete
  5. Given his closeness to Mr Kalanidhi Marian who is producing his latest movie, he is not likely to say anything against DMK though he may personally prefer BJP/ADMK alliance. But it will be good if he speaks his mind.

    ReplyDelete
  6. His silence is disturbing and one is compelled to conclude that he is careful not to ruffle the feathers of his cine producers.

    ReplyDelete
  7. சார்,
    தங்கள் கடிதம்,முழுவதும் என் மனதில் பிரதிபலிப்பாகவே இருந்தது. ஏன் விடியலை நோக்கும் தமிழ் நெஞ்சங்களில் எண்ண ஓட்டங்களாகவே இருக்கும், இதில் எந்த மாற்றமும் இல்லை, இதில் வரிகள் மாறாமல் திரு ரஜினி அவர்களை சென்றடைய வேண்டும். வாட்ஸ் அப்பில் வைரலாக வேண்டும். அபரிமிதமான மாற்றம் வரவேண்டும். அதனால் இந்துக்கள், அவர்கள் வணங்கும் கோவில்கள் எழுச்சியடைய வேண்டும். இகழ்ச்சியடையாமலாகவாவது இருக்கவேண்டும்.திடீரென தங்களை இப்படி அற்புதமா எழுத வைத்து இருப்பது கூட ரஜினியின் அருணாசல படத்தில் வருவது போல், "ஆண்டவன் சொல்றான் அருணாசலம் கேக்கறான் "(வக்கீல் ராகவன் எழுதறார்). Yes u are right, rajini voice is badly required at this juncture....that too atonce. yours ,Gopaladesikan

    ReplyDelete
  8. ரஜினி அவர்கள் தான் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றார் ஆனால் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறவில்லை அதுவும் அவர் படங்கள் சன் நெட்வொர்க் சுற்றி தான் பெரும்பாலும் உள்ளது அதனால் அவர்களின் ஆதிக்கத்திற்கு ஆளாகவேண்டாம் என்ற எண்ணத்தில் தான் இதுவரை வாய்திறக்காமல் உள்ளார். தமிழ்நாட்டிற்கு பிழைக்கச் தானே வந்தார். அவரது வருவாயை தமிழ்நாட்டில் இழக்க விரும்பவில்லை. அவரது உண்மையான முகம் இது தான்.

    ReplyDelete
  9. ரஜனி அவர்கள்,மறை முகமாவது,தனது ஆதரவை, பா ஜ க கூட்டணிக்கு தெரிவிக்கலாம்.

    ReplyDelete
  10. ரஜனியின் மௌனம் நல்லது..

    ReplyDelete
  11. excellent analysis and well presented arguments- Mr Rajini’s silence is deafening!

    ReplyDelete
  12. Rajini’s silence or clarion call has no meaning hereafter. It is now known that all his announcements are advertisements for a release of his film, at that point of time. Nothing more value can be given. He is a coward hero and his religious announcements are also seen suspiciously nowadays by People of Tamil Nadu.

    ReplyDelete