Saturday 2 November 2019

சுஜித் மரணம் - கட்சிகள் ஏன் லட்சங்கள் தருகின்றன?

     
        -- ஆர். வி. ஆர்

இரண்டு வயது சுஜித் வில்சனின் சோக மரணம் தமிழகத் தலைவர்களின் பாசாங்கு அரசியலை பளிச்சென்று காட்டுகிறது.

திருச்சி, மனப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் சுஜித்தின் தந்தை   பிரிட்டோ ஆரோக்கியராஜ் ஒரு தோட்டத்தில் பயிர் செய்தார். அந்த நிலத்தில் ஒரு ஆழ்துளைக் கிணறு தோண்டி பின்னர் அதைக் கைவிட்டார். ஆனால் அவர் அதை சரியாக  மூடாமல் வைத்திருக்க, அந்த கிணற்றுக் குழியில் சுஜித் தவறி விழுந்து ஆழத்தில் சென்று விட்டான். வல்லுநர்கள் உதவியுடன் தமிழக அரசு எண்பது மணி நேரம் மீட்பு முயற்சிகள் செய்தும் பலன் இல்லாமல் குழந்தை உயிர் இழந்தது. 

திறந்த கிணறு வெட்டினால் கிணற்றைச் சுற்றி பாதுகாப்பாக மூன்று அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் கட்டுகிறோம். ஆழ்துளைக் கிணறு தோண்டிய பின் அதைக் கை விட்டால், அந்தக் குழியில் சிறு குழந்தைகள் விழுந்துவிடக் கூடாது என்று அதைத் திடமாக மூடி வைக்கவேண்டும். இது அவசியமான பாதுகாப்பு நடவடிக்கை. இதை சுஜித்தின் தந்தை செய்யவில்லை.

குழந்தையைப் பறிகொடுத்தது பெற்றோர்களுக்கே இழப்பு என்றாலும், ஒரு மனித உயிர் விபத்தில் மடிந்ததற்கு சுஜித் தந்தையின் அலட்சியமும் ஒரு முக்கிய காரணம் - சட்டப் படியும் சாதாரண பொது அறிவின் படியும். பொறுப்பான ஒரு அரசாங்கம் இதற்காக பிரிட்டோ ஆரோக்கியராஜ்  மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் தமிழகத்தின் பாசாங்கு அரசியல் அதற்கு இடம் தரவில்லை. சுஜித்தின் தந்தை ஏதோ ஒரு உயிரற்ற தங்க பொம்மையைத்தான் தொலைத்தவர் மாதிரி, அவருக்கு லட்ச லட்சமாக  இழப்பீட்டுப் பணம் தருகிறார்கள் அரசும் அரசியல் கட்சிகளும். தி.மு.க, அ.தி.மு.க, தமிழ்நாடு காங்கிரஸ், தமிழக அரசு ஆகியவை தலா ரூபாய் பத்து லட்சம், தே.மு.தி.க ரூபாய் ஒரு லட்சம் என்று சுஜித்தின் பெற்றோர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். 

ஒரு மனிதத்தன்மையான ஆறுதல் இழப்பீடு என்பதையும்  தாண்டி, கொடுக்கிறவர்கள் ஏதோ லாட்டரி மாதிரி வாரிக் கொடுத்திருக்கிறார்கள். லாட்டரியில் பரிசு கிடைத்தவனை மற்றவர்களுக்கு காட்டிஅவனுக்கு தண்டோரா போட்டு, லாட்டரி நடத்தும் ஆசாமி கமுக்கமாக தனது பெரிய லாபத்தில் கவனமாக இருப்பான் அல்லவா? அப்படித்தான் சுஜித்தின் பெற்றோர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்த தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் கணக்குப் போட்டு பரிசு விநியோகம் செய்திருக்கின்றன. “தமிழக அரசு சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஒரு கோடி ரூபாயும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தரவேண்டும்” என்றுகூட ஒரு பொடிக் கட்சித்  தலைவர் தனது  பம்பர் லாட்டரி  பிஸினசுக்கு அரசு செலவில் அஸ்திவாரம் போட முயல்கிறார். சுஜித்தின் பெற்றோர்களுக்கு குழந்தையின் நினைவும் இழப்பும் மங்கிப் போய் புதுக்கனவுகள் தோன்றலாம். இந்த விஷயத்தில் அரசியல் தலைவர்களிடம் பாசங்குத்தனம் மேலோங்கி நிற்பதற்கு காரணங்கள் உண்டு.

பொது மக்களின் துயர் துடைப்பவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு, அதன் மூலம் அப்பாவி வாக்காளர்களிடம் ஓட்டு வேட்டை ஆடுவது தமிழக அரசியல் கட்சிகளின் போக்கு. இதற்கு ரூட் போட்ட  பெருமை தி.மு.க-விற்கு உண்டு.

உண்மையாகவே மக்களின் சிரமங்களைப் போக்கவேண்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்றால் அதற்கு சரியாக சிந்திக்க வேண்டும், உழைக்க வேண்டும், பொருளாதார திட்டங்கள் வகுக்க வேண்டும், அவற்றை வேகமாக செயல்படுத்த வேண்டும் – முதலில், சொந்த வசதி வருமானத்தைப் பற்றி குறியாக இருக்கக் கூடாது. இதெல்லாம் தமிழகத்தின் பிரதான கட்சிகளின் ரத்தத்தில் இல்லாத விஷயங்கள். 'மக்கள் நலன் நடவடிக்கைகள்என்று ஏதோ சுலபத்தில் பாசாங்கு செய்துவிட்டு, பொது மக்களை அவற்றில் மயக்கி வைத்து அரசியல் செய்வதுதான் தமிழகத்தின் முக்கிய கட்சிகளுக்கும் அவர்களை அண்டி பிழைப்பு நடத்தும் சிறு கட்சிகளுக்கும் அமோக பயன் தரும் வழிகள். 

குழந்தை சுஜித்தின் மரணம் திடீரென ஏற்பட்டதில்லை. நான்கு நாட்கள் அவன் அவஸ்தைப்பட்டு பின்னர் உயிர் விட்டிருக்கிறான். பத்திரிகைகளிலும் டெலிவிஷனிலும் அவனது மீட்பு முயற்சிகள் பற்றி தொடர்ந்து செய்திகளும் காட்சிகளும் விவாதங்களும் வந்தன. பொதுமக்களுக்கு சுஜித் மீது நாளுக்கு நாள், மணிக்கு மணி அநுதாபம் அதிகமாகிக் கொண்டே வந்தது. கடைசியில் அவனது உயிர் இழப்பு அந்த அனுதாபத்தை பெரும் சோகமாக மாற்றியது. அதை அப்படியே தமக்கு மக்கள் ஆதரவாகவும் பின்னர்  ஓட்டுக்களாகவும் மாற்ற ஒரு குறுக்கு வழி, சுஜித் பெயரை சொல்லி அவன் பெற்றோர்களுக்கு பெரிய பண உதவி செய்வது என்று தமிழகத்தின் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இயல்பாக நினைத்தார்கள்.  ‘குழந்தை பிழைத்து மக்கள் நிம்மதி அடைந்தால் கூட இந்த வாய்ப்பு நமக்குக்  கிடைக்காது’ என்றும் நினைத்திருப்பார்களோ என்னவோ! இந்த ரீதியில் சுஜித்தின் அப்பாவிற்கு பணம் கொட்டியது. 

இன்னொரு பக்கம் பாருங்கள். நோயில் விழுந்து பிழைக்காத குழந்தைகள் உண்டு. டெங்கு காய்ச்சலும் குழந்தைகளை பலி வாங்குகிறது அரசாங்க ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும்  பலன் இல்லாமல் குழந்தைகள் இறப்பதுண்டு. சாலை விபத்திலோ தண்ணீரில் மூழ்கியோ சில குழந்தைகள் உயிர் விடுகிறார்கள். அவைகளின் பெற்றோர்களுக்கும், சுஜித்தின் பெற்றோர்களைப் போல குழந்தைகளின் அகால மரணம் பேரிழப்பு, பெரும் துக்கம். ஆனால் இது போன்ற அம்மா அப்பாக்களிடம் அரசும் அரசியல் கட்சிகளும் சுஜித் பெற்றோர்களிடம் வெளிப்படுத்திய கருணையில் அரைக்கால் பங்கு கூட காட்டுவதில்லையே, பெரும்பாலும் அவர்களுக்கு ஒன்றுமே தருவதில்லையேஅது ஏன்? ஏனென்றால், சுஜித் விஷயத்தில் பொதுமக்களின் அனுதாபம் மற்றும் சோகம் பெரிதாக எழுந்தது, மற்ற குழந்தைகளின் வேறு விதமான மரணங்களில் அது ஏற்படாது. அதற்கு ஏற்றபடிநமது அரசியல்வாதிகளும் எந்த சந்தர்ப்பத்தில் எந்த மாட்டிடம் கறக்க முடியுமோ அங்கேதான் கறக்கப் போவார்கள். அங்குதான், வேண்டிய புல்லையும் எடுத்துப் போடுவார்கள்.  மனிதாபிமானமும் இல்லைஒரு மண்ணும் இல்லை என்றால் சரிதானே?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019


6 comments:

  1. is the religion of the parents of Sujit wilson also into play in this competition of Dravidian parties and congress in handing over cheques for lacs of rupees ?

    ReplyDelete
  2. Unfortunately the people of Tamilnadu will not realise the fact as told by you. They will sympathise and see those parties as benevolent and saviors. Can we do anything on this! No..

    ReplyDelete
  3. Well analysed article. Truth is clear but never seen...

    ReplyDelete
  4. Very true
    What we people can do in preventing such wasteful expenditures by govt?

    ReplyDelete
  5. மனிதன் மாறி விட்டான் மதத்தில் மறைந்து விட்டான்

    ReplyDelete