-- ஆர். வி. ஆர்
அதிமுக-வின் சி. பொன்னையன்
சட்டம் படித்தவர். தமிழ்நாட்டின் சட்ட அமைச்சராகவும் இருந்தவர். இது பலருக்கும்
தெரியும். ஆனால் அன்னாரின் அபார சட்ட ஞானத்தைப் பற்றி நிறையப் பேருக்கு தெரியாது.
அந்தக் குறை இனி வேண்டாம் என்று அவரே தனது சட்டப் புலமையின் மகத்துவத்தை சொல்லிக் காட்டிவிட்டார். அதைக் காதால்
கேட்டவர்களுக்கு, நிச்சயம் புல்
பூண்டு வெங்காயம் எல்லாம் அரித்திருக்கும்!
சென்னையில் ஒரு
முன்னாள் அதிமுக கவுன்சிலர் இருக்கிறார். சமீபத்தில் அவர் தனது மகன்
திருமணத்திற்காக, விழா மண்டபத்தை ஒட்டிய
சாலை நடுவே முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் புன்னகைக்கும்
படங்கள் கொண்ட வரவேற்பு பேனர்களை வரிசையாக வைத்திருந்தார். அதில் ஒன்று சாதாரண
காற்று வேகத்தைக் கூட தாங்க முடியாமல் சற்றுப் பறந்து, சாலையில்
ஸ்கூட்டர் ஒட்டிச் சென்ற ஒரு இளம் பெண்ணின் முன் விழுந்து அவரை மறித்து கீழே சாய்த்தது.
அப்போது பின்னால் வந்த ஒரு தண்ணீர் லாரி அந்தப் பெண்ணின் மீது மோதி அவர் பரிதாபமாக
இறந்தார். அந்த லாரி டிரைவரும் முன்னாள் கவுன்சிலரும் கைதாகி வழக்கு
நடக்கப்போகிறது. இந்த சம்பவம் பற்றி பொன்னையன் ஒரு
பேட்டியில் அபாரமாகக் கருத்து சொல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில்
பரவுகிறது.
"பேனர் விழுந்ததுக்கு என்ன காரணம்? காத்துதான்! பேனர்
வச்சவரா அதைத் தள்ளி விட்டாரு? காத்துதான பேனரை தள்ளிச்சு? கேஸ் போடறதா இருந்தா காத்து மேலதான் போடணும்!" என்று வடிவேலுவே
அதிரும் நியாயத்தை முன்வைத்தார் பொன்னையன்.
பொன்னையன் அருளிய
விளக்கத்தின் பூரண ஜோதி, நம்மைப்
போன்ற சில மக்குகளுக்கு எளிதில் புலப்படாமல்தான்
இருக்கும். அதிமுக-வின் பெயரைக் கெடுக்க வந்த பொல்லாத காற்றை அவர் எப்படித்
தோலுரித்துக் காட்டுகிறார் என்பதை சிறிது மெனக்கெட்டுத்தான் அறிய வேண்டும். இப்படி
யோசித்துப் பாருங்கள், புரியும்.
பொன்னையன் பேச்சின்
உள்ளர்த்தம் என்ன? "விபத்து
நடந்த சாலையின் நடுவில் மின் விளக்குக் கம்பங்கள் ஒன்றை அடுத்து ஒன்றாக
நிற்கின்றன. காற்று அவை எதையும் சாய்க்கவில்லை. சாலையின் இரு புறத்திலும் பஸ்
நிறுத்தங்களில் பயணியர் நிழற்குடைகள் உள்ளன. காற்று
அவற்றில் ஒன்றையும் தள்ளவில்லை. அவைகளை எல்லாம் காற்று தவிர்த்துவிட்டு
அதிமுக-விற்கு சங்கடம் தரவேண்டும் என்ற வன்மத்தில்
அந்தக் கட்சியின் தலைவர்கள் படங்களைக் கொண்ட பேனர்களில் ஒன்றைத் தேர்வு
செய்தது. அடுத்ததாக, ஒரு இளம் பெண் ஸ்கூட்டர் ஓட்டியவாறு அந்த
பேனரின் அருகில் பயணிப்பதையும், அவர் பின்னால் சிறிய
இடைவெளியில் ஒரு தண்ணீர் லாரி வருவதையும் கவனித்தது காற்று. உடனே தனது குரூர
முகத்தைக் காட்டியது பாழும் காற்று. ஐயகோ! அரச மரத்து வேர்
போல் பூமியில் பல அடி ஆழம் கால் பதித்திருந்த அந்த பேனரைப் பிடுங்கி பறக்கச்
செய்து, சாலையில் நகரும் அந்த அப்பாவிப் பெண் முன் விழ
வைத்து அவர் பார்வையை மறைத்து அவரைக் கீழே தள்ளியது காற்று.
உடனே பின்னால் வந்த லாரியும் அவர் மீது ஏறும்படி வில்லத்தனம் செய்தது காற்று. இப்படி எனது கட்சிக்கு எதிராக காற்று சதி செய்ததால், நான் அதன் தீய செயலை பூடகமாகத்
தெரிவித்து, பேனரில் படமாகத் தோன்றிய கட்சியின் தலைவர்கள்,
பேனரை நிறுவிய முன்னாள் கவுன்சிலர்
ஆகியோரைப் பழி பாவத்தில் இருந்து காப்பாற்றுகிறேன். அதோடு, கொடிய காற்றின் முகத்தை சட்ட ரீதியாகக் கிழிக்கிறேன்" என்று சொல்லாமல் சொல்கிறார் பொன்னையன்.
என்ன ஒரு சட்டத்
தெளிவான சிந்தனை பொன்னையனுக்கு! இவர் மட்டும் சில வருடங்கள்
முன்னதாகப் பிறந்து அம்பேத்கருக்கு இணையாக தனது சட்டப் படிப்பை முடித்திருந்தால்,
அவருக்குப் பதிலாக இவரைத்தான் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பிரதமர்
நேரு நியமித்திருப்பார். அது நடந்திருந்தால், வெயிலோ
மழையோ காற்றோ தப்பு செய்தால் அதற்கும் சம்மன் அனுப்பி கோட்டுக்கு இழுத்து வந்து
அந்த இயற்கை சக்தியும் தண்டனை பெற பொன்னையன் திடமான வழி வகை செய்திருப்பார்!
சரி, இப்போது பொன்னையனை
சரியாகப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். சுபஸ்ரீ
என்ற ஒரு இளம் பெண்ணின் பரிதாபமான மரணத்திற்கு, அவரது
பெற்றோரின் ஆழ்ந்த சோகத்திற்கு, மூல காரணம் நடுத்தெருவில் அஜாக்கிரதையாக வைக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியின்
பேனர். இது புரிவதற்கான நேரத் தேவை ஒரு
வினாடிக்கும் குறைவு, கல்வித் தகுதி ஒண்ணாம் கிளாசுக்கும்
கீழ். இருந்தாலும் தனது சட்ட
அறிவு, பொது அறிவு இரண்டையும் மக்கள் சந்தேகித்து கேலி செய்வார்களே என்று கவலைப்படாமல் பொன்னையனால் எப்படிப் பேச முடிந்தது? இல்லாத எதைப் பற்றியும் கவலைப்படாத ஆத்மாவாக இருப்பார் அவர் – அதுதான் காரணமாக
இருக்கும். பொன்னையனைப் பற்றி வேறு எந்த கணிப்பும் சரியாகுமா என்ன?
* * * * *
Copyright © R. Veera Raghavan 2019
Ha ha this beats the thermocol too. It's our karma perhaps to suffer such rulers.
ReplyDelete