Friday 15 November 2019

ராம ஜென்ம பூமி: ஹிந்துக்களுக்கு வாழ்த்துக்கள். முஸ்லிம்களுக்கு நன்றி. சுப்ரீம் கோர்ட்டுக்கு சல்யூட்.


          -- ஆர். வி. ஆர்

ராம ஜென்ம பூமி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, நியாய எதிர்பார்ப்புகள்  வைத்திருக்கும் ஹிந்துக்களை திருப்தி செய்கிறது. முஸ்லிம்களும் நியாய  உணர்வு கொண்டிருப்பதால் அவர்களையும் சாந்தமாக வைத்திருக்கிறது. ஏன் எப்படி?

      முகலாய மன்னர் பாபர் இந்தியாவில் நாலே முக்கால் வருடங்கள் ஆட்சி செய்து மறைந்தார். அதற்குள், 1528-29 வருடங்களில் அவர் உத்தரவால் அயோத்தியில் ஒரு மசூதி கட்டப்பட்டது. அதுதான் பாபர் மசூதி.

‘அயோத்தி நகரில் ராமர் அவதாரமாகப் பிறந்த இடம் இது' என்று ஹிந்துக்கள் காலம் காலமாக நம்பி அந்த ஸ்தலத்திற்கு ‘ராம ஜென்ம பூமி‘ என்று பெயரிட்டு வணங்கி வரும் ஒரு நிலப்பகுதி உள்ளது. அது உத்திரப் பிரதேசத்தில் இருக்கிறது.  ‘அதே நிலத்தில், அதே இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப் பட்டது, அதை அப்புறப்படுத்தி அங்கு ஒரு ராமர் கோவில் கட்டவேண்டும்’ என்பது ஹிந்துக்களின் கோரிக்கையாக இருந்தது. பின்னர் 1980-களில் அதுவே ஒரு இயக்கமாக உருவெடுத்தது. இதில் தீவிரமாக இருந்தவர்கள் ஒன்று திரண்டு 1992-ம் வருடம் அந்த மசூதியை இடித்தார்கள். அதன் பிறகு, ராம ஜென்ம பூமி நில உரிமை, வழிபாட்டு உரிமைகளுக்காக ஏற்கனவே நடைபெற்று வரும் வழக்குகளில் அலகாபாத் ஹை கோர்ட் ஒரு தீர்ப்பு அளித்தது. அதை  எதிர்த்து அப்பீல்கள் சுப்ரீம்  கோர்ட்டுக்கு சென்றன.

சென்ற 9-ம் தேதி சுப்ரீம் கோர்ட் எல்லா அப்பீல் வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கி விட்டது. அதன்படி, பாபர் மசூதி இருந்த இடத்தில் புதிதாக ராமர் கோவில் கட்டலாம், அதற்குத் தடை இல்லை என்று தெளிவாகி விட்டது. அதாவது, சுமார்  ஐந்து நூற்றாண்டுகளாக மசூதியாக இருந்த கட்டிடம் இப்போது முற்றிலும் நீக்கப்படும், அதே நூற்றாண்டுகளாக ஹிந்துக்கள்  கனவு கண்ட  ராமர் கோவில் அதே நிலப்பரப்பில் எழப் போகிறது. அயோத்தியில் மொத்த ஹிந்துக்களுக்கும் நேர்ந்த ஒரு மாபெரும் சரித்திரத் தீங்கும் அவமானமும் நிவர்த்தியாகும். 

அயோத்தி நகரில், அதுவும் ராம ஜென்ம பூமி என்று ஹிந்துக்கள் பூஜை  செய்து கொண்டாடும் இடத்திலேயே, பாபர்  ஒரு மசூதி கட்ட ஆரம்பித்தபோது ஹிந்துக்கள்  என்ன மன வேதனையை அனுபவித்திருப்பார்கள்? - அதுவும் மத நம்பிக்கைகள் ஓங்கி இருந்த 16-ம் நூற்றாண்டு ஹிந்துக்கள்? இதில் இன்னொரு விஷயமும் உண்டு.

அலகாபாத்  ஹை கோர்ட் உத்தரவுப்படி, நிலுவைையில் இருந்த வழக்குகளுக்காக இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India) பாபர் மசூதி நிலத்தில் 2003-ம் வருடம் அகழ்வாராய்ச்சி செய்தது. வழக்குகளின் பார்ட்டிகள், அவர்களின் வக்கீல்கள் முன்னிலையில் போட்டோக்கள் வீடியோக்கள் சகிதம் ஒளிவு மறைவு இல்லாமல் அது நடந்தது. அந்த ஆராய்ச்சியில் கிடைத்த ஆதாரங்களும் ஹிந்துக்களின் கோரிக்கைக்கு வலு சேர்த்தன. என்னவென்றால், பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பரந்த வலுவான பொதுக் கட்டிடம்தான் பாபர் மசூதிக்கு உடனடி அடியில் கிடக்கிறது, அந்தப் பழைய கட்டுமானத்தின் மேல்தான் மசூதி எழுப்பப் பட்டது என்று தெரிய வந்தது. அந்த கீழ்க் கட்டுமானத்தில் காணப்பட்ட அடையாளங்களில் சில: 17 வரிசையில் தூண்கள், வரிசைக்கு ஐந்தாக 85 தூண்கள், அந்தத் தூண்களின் மேல் அனுமார்,  நரசிம்மர், பிள்ளையார், துர்க்கை போன்ற பல விக்கிரகங்கள், இன்னொரு இடத்தில் வட்டவடிவமாக ஒரு கருவறை,  அதிலிருந்து அபிஷேக தீர்த்தம் வெளியேற நீர் வழி, இன்னும்  மயில், கருடன், தாமரை போன்ற உருவங்கள்.

அகழ்வாராய்ச்சியில் கிடைத்த அனைத்தையும் கோர்ட்டுக்கு அறிக்கையாக சமர்ப்பித்த தொல்லியல் துறை, அது கண்டெடுத்த பல அடையாளங்கள் துல்லியமாக வடநாட்டுக் கோவில்களில் காணப்படும் அம்சங்கள் என்று முடிவாகச் சொன்னது.  இது எல்லாவற்றையும் குறிப்பிட்டு, இந்திய தொல்லியல் துறை எட்டிய கீழ்க்கண்ட முடிவுகள் தமக்கும் ஏற்புடையவை என்று சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் சொல்கிறது. 


(1) பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை. அதன்  அடியில், முன்பே எழுப்பி இருந்த கீழ்க் கட்டுமானம் இருக்கிறது என்று அகழ்வாராய்ச்சி காட்டுகிறது. அந்த கீழ்க் கட்டுமானம், மசூதியின்  பரப்பளவிற்கு நிகரான அல்லது அதிகமான விஸ்தீரணம் கொண்டது.  மசூதியின் அடித்தளமானது அந்த கீழ்க் கட்டுமானத்தின் மேலாக அமர்ந்திருக்கிறது.

(2)  அந்த கீழ்க் கட்டுமானம் இஸ்லாமியக் கட்டுமானம் அல்ல. 

(3)அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கைவினைப் பொருட்கள், சிதிலாமான தொல்பொருட்கள் அனைத்தும் கூட  இஸ்லாம்-அல்லாத வகையானவை என்று தெளிவாகத் தெரிகிறது.

         இறுதியாக  சுப்ரீம் கோர்ட் இப்படிச் சொல்கிறது:, “கீழ்க் கட்டுமானம் பன்னிரண்டாம் நூற்றாண்டு  காலத்திய கோவில் கட்டமைப்பு என்று இந்திய தொல்லியல் துறை எட்டிய  முடிவு ஆதாரங்கள் கொண்டது”. சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்ட இந்த சங்கதிகளுக்கெல்லாம்  என்ன அர்த்தம் என்று எவரும் நடைமுறையில் ஊகிக்கலாம்.

மசூதியின் கீழ்க்கட்டுமானம்  பற்றி அகழாய்வு கொண்டுவந்த தடயங்களும் ஆதாரங்களும், ஹிந்துக்களுக்கு ஐந்து நூற்றாண்டுகளாக தொடரும் காயத்தின் நிரூபணம். இப்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் கிடைத்திருக்கும் களிம்பு, ஹிந்துக்களுக்கு அவசியமானது என்றும் இந்த ஆதாரங்களே அறைகூவிச் சொல்கின்றன. இப்போது ரணம் குறைந்திருக்கிறது என்பதால் ஹிந்துக்கள் மகிழ்ச்சி அடைகிறார்களே தவிர, மசூதி முற்றிலுமாக நீக்கப்படும் என்பதால் அல்ல. எல்லா ஹிந்துக்களும் இதை சத்தமாகச் சொல்லாவிட்டாலும் இதுதான் உண்மை. இந்தியாவில் வசிக்கும் பெருவாரியான இஸ்லாமியர்கள் இந்த உண்மையை, ஹிந்துக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவர்த்தியைசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் உள் நியாயத்தை உணர்கிறார்கள். இஸ்லாமியர்கள் இதை உரக்கப் பேசாவிட்டாலும் இதுதான் உண்மை. அதனால்தான் அவர்கள் இந்தியா முழுவதும் தீர்ப்பைத் தொடர்ந்து அமைதி காக்கிறார்கள்.

தீர்ப்பின் நியாயத்தை ஏற்றதற்காக, இஸ்லாமியர்களின் சகோதர உணர்விற்காக    ஹிந்துக்கள் அவர்களைப் பாராட்ட வேண்டும். இரு தரப்பு மக்களின் இந்த அற்புதமான மனநிலையைக் கருத்தில் கொண்டுதான், பிரதமர் மோடியும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு "யாருக்கும் வெற்றியோ தோல்வியோ அல்ல" என்று பொறுப்புடன் பேசினார்.

பொதுவாகவே நீதி மன்றத் தீர்ப்புகளை மதிக்க வேண்டும் என்று எல்லா இந்திய மக்களும்  நினைக்கிறார்கள். அதற்கு ஏற்ப, பெருவாரியான  தீர்ப்புகளும் - விசேஷமாகசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் - சரியாகத்தான் நீதி வழங்குகின்றன. ராம ஜென்ம பூமி விவகாரத்திலும் நமது சுப்ரீம் கோர்ட்டு உயர்ந்த  நியாயத்தை நிலை நிறுத்தி இருக்கிறது. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் இந்தத் தீர்ப்பை  அமைதியாக, மௌனமாக ஏற்றதும் இதற்கு சாட்சி. இந்தத் தீர்ப்பின் நியாயத்தை வேறுவிதமாகவும் புரிந்து கொள்ளலாம்.

நடக்க முடியாத ஒரு விஷயத்தை இப்படி யோசித்துப் பாருங்கள். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு மசூதியை நீக்கிவிட்டு அந்த இடத்தில் ஒரு ஹிந்துக் கோவில் வரவேண்டும் என்று ஹிந்துக்கள் நினைத்தால் - அப்படி நினைக்க மாட்டார்கள் - அதை இஸ்லாமியர்கள் ஏற்பாற்களா? நிச்சயமாக மாட்டார்கள். ஆனால் அயோத்தியில் இருக்கும் ஐநூறு ஆண்டுகள் பழமையான ஒரு மசூதிக் கட்டிடம் நீக்கப்பட்டு அங்கு ராமர் கோவில் வரப் போகிறது, அதற்கு நீதி மன்றமும் வழி செய்கிறது என்றால், அதை நாடு முழுதும் உள்ள இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். காரணம்சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படை நியாயம் இந்திய முஸ்லிம்கள் மனதில் படிகிறது. 

ஐந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்தத் தீர்ப்பை அளித்தது, அதுவும் தங்களின் ஒருமித்த தீர்ப்பாக எழுதியது, அதுவும் ஒரு முஸ்லிம் நீதிபதியும் அவர்களில் ஒருவராக இருந்தது, அவர்களது தீர்ப்பின் நியாயத்திற்கு ஒளி கூட்டுகிறது.

இந்த மகோன்னதமான தீர்ப்பு கிடைக்க எத்தனை சந்தர்ப்பங்கள் அதிர்ஷ்டவசமாக ஒன்று கூட வேண்டும் பாருங்கள். முதலில் முக்கியமாக, இந்தத் தீர்ப்பைத் தூக்கி நிறுத்தும் இதிகாச வரலாற்று நியாயம் இருக்கவேண்டும். அது உண்டு. இரண்டாவது, சுப்ரீம் கோர்ட்டில் அந்த நியாயத்தை சட்டம் ஏற்கும் வகையில் சரியாக முன்வைக்கிற அனுபவம் வாய்ந்த வக்கீல்கள் வேண்டும். மூத்த வழக்கறிஞர் திரு. கே. பராசரன் முன்னணி வகிக்க அதற்கான நல்ல வக்கீல்கள் அமைந்தார்கள். மூன்றாவது, வக்கீல்களின் வாதங்கள் சிறப்பாக இருந்தாலும் நுண்ணிய பார்வை, துல்லிய நியாய உணர்வு கொண்ட நீதிபதிகள் ஐந்து பேர்களாக இந்த வழக்கை விசாரிக்க அமர வேண்டும். அதுவும் இங்கே அமைந்தது.

கடைசியாக ஒன்று. இந்தியாவை வணங்கி, ஹிந்து மதத்தை உதாசீனம் செய்யாமல்அனைத்துப் பிரிவு மக்களையும் சமமாகப் பாதுகாக்கும் நரேந்திர மோடி என்னும் ஒரு பெரிய அரசியல் தலைவரின் ஆட்சி மத்தியில் இப்போது நடை பெறுகிறதே, அதுவும் இங்கே சூட்சுமமாக இயங்குகிறது. அவரது தலைமை உள்ள ஆட்சியின் போதுதான் இந்தத் தீர்ப்பும் அழகாக அமைதியாக அமலாகும்.  இப்படி எல்லாம் கூடி வந்து கிடைத்த நல்ல தீர்ப்பு இது. ஹிந்துக்களுக்கு வாழ்த்துக்கள். முஸ்லிம்களுக்கு நன்றி. சுப்ரீம் கோர்ட்டுக்கு சல்யூட்.


* * * * *

Copyright © R. Veera Raghavan 2019

5 comments:

  1. The Essence of Supreme Court's Judgement Has Been Brought Out Clearly. Thank you!

    ReplyDelete
  2. Nice post well written..i totally agree with you sir..JAI SRIRAM

    ReplyDelete
  3. Your post captures the entire issue correctly and also the SC verdict. While it initially appeared that Muslims will accept the verdict, the latest developments convey a different message.Led by Owaisi a gang is regrouping and forming a challenge to the SC verdict. An attempt is being made to derail the judgement. One hopes better sense would prevail.

    ReplyDelete
  4. U have really highlighted d salient points of d issue in such simple terms! Satyameva Jayathe,👍

    ReplyDelete
  5. உண்மை ஒருபோதும் சாகாது

    ReplyDelete