Friday, 9 May 2025

பஹல்காம்: ஆபரேஷன் சிந்தூர் தரும் பலன் என்ன?

 

          -- ஆர். வி. ஆர்

 

சென்ற ஏப்ரல் 22ம் தேதி, பாகிஸ்தான் அரவணைக்கும் 4 பயங்கரவாதிகள் இந்தியாவின் பஹல்காமில் 25 சுற்றுலாப் பயணிகளைப் படுகொலை செய்தனர். அதற்குத் தற்போது இந்தியா பதிலடி கொடுக்கிறது – ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில்.

 

ஆபரேஷன் சிந்தூரின் முதற் கட்டமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 வெவ்வேறு இடங்களில் நிறுவப் பட்டிருந்த பயங்கரவாதக் கட்டமைப்புகளை ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி அழித்தது இந்தியா. அதில் ஒரு இடம் 82 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது, இன்னொன்று 15 ஏக்கர். அந்த அனைத்து இடங்களிலும் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப் பட்டனர்.

 

இந்தியாவால் கொல்லப் பட்ட பயங்கரவாதிகள் பலரின் உடல்களின் மீது பாகிஸ்தானின் கொடியைப் போர்த்தி, பாகிஸ்தானின் ராணுவ வீரர்களே அவற்றைச் சுமந்து அடக்கம் செய்ய உதவியது அந்த நாடு. "எங்கப்பன் பயங்கரவாத முகாமில் இல்லை" என்பது போல்.

 

பாகிஸ்தான் எதற்காகப் பயங்கரவாதக்  கட்டமைப்புகளையும் பயிற்சி முகாம்களையும் தனது நாட்டிற்குள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், அமைய அனுமதித்தது – அதாவது பாகிஸ்தான் நாடே அவற்றை அமைத்தது

 

பாகிஸ்தான் உருவாக்கும் அந்தப் பயங்கரவாதிகள் ஒரு எதிரி நாட்டில் அவ்வப்போது புகுந்து நாசவேலைகள் புரியட்டும், படுகொலைகள் செய்யட்டும், என்று பாகிஸ்தான் கெடுதலாக நினைப்பதுதான் அதற்கான காரணம். பாகிஸ்தான் கூறு கெட்டு பாவிக்கும் ஒரே எதிரி நாடு இந்தியா.  ஆகையால் இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றத் தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வளர்த்து வருகிறது.

 

பாகிஸ்தான் ராணுவ ரீதியாக இந்தியாவுடன் நேருக்கு நேர் பெரிய அளவில் மோதினால், பாகிஸ்தானை இட்லிப் பொடியாக அரைத்து விடும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு. அது அந்த நாட்டிற்கும் தெரியும். ஆகையால் பாகிஸ்தான் வேறு ஒன்றைச் செய்கிறது. அதாவது, பாகிஸ்தான் நிர்வகிக்கும் நிலத்தில் பயங்கரவாதிகளுக்கான முகாம்களை அமைத்து, அவற்றில் பயங்கரவாதிகளை உருவாக்கிப் பயிற்சி அளித்து, அவர்கள் மூலம் இந்திய ராணுவத்தினர் மற்றும் இந்தியப் பொதுமக்கள் மீது அவ்வப்போது கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருகிறது அந்த நாடு.

 

தற்போது மோடி பிரதமராகவும் அமித் ஷா உள்துறை அமைச்சராகவும் இருக்கும் இந்தியாவை பாகிஸ்தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா இப்போது என்ன செய்தது என்றால்: ஆபரேஷன் சிந்தூரை ஆரம்பித்து வைத்து, தனது பதிலடி நடவடிக்கையை சற்று நிறுத்திப் பாகிஸ்தானைக் கவனித்தது இந்தியா – 9 பயங்கரவாத முகாம்களைத் தகர்த்த பின் பாகிஸ்தான் வாலைச் சுருட்டி சும்மா இருக்குமா என்று தெரிந்து கொள்ள.

 

ஆபரேஷன் சிந்தூரின் முதற் கட்ட நடவடிக்கையில் நூற்றுக்கும் மேலான பயங்கரவாதிகள் மடிந்த பின், எஞ்சியுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தலைவர்கள் அந்த நாட்டு ராணுவத் தலைமையிடம் என்ன கேட்பார்கள்?

 

“இந்தியாவில் நாச வேலைகள் நடத்தவும் படுகொலைகள் செய்யவும் அந்த வேலைகளின் போது எங்களில் பலர் இந்திய ராணுவத்தால் சுடப்பட்டு மடியவும் தானே எங்களை வளர்த்து வைத்திருக்கிறீர்கள்? அப்படி மடிந்தால் அது புனிதம் என்றீர்கள், நாங்களும் அதை நம்பி இந்தியாவில் பயங்கரவாதம் செய்ய ரெடியாக இருக்கிறோம். ஆனால் பாகிஸ்தானில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், உள்ள எங்கள் முகாம்களை ஏவுகணைகள் அனுப்பித் தகர்த்து எங்களையும் நூற்றுக் கணக்கில் இந்தியா மேலோகம் அனுப்புவதை  நாங்கள் எப்படி ஏற்க முடியும்? இந்த மண்ணிலாவது எங்களைக் காக்க, நீங்கள் இந்தியாவின் மீது எதிர்த் தாக்குதல் நடத்துங்கள். இல்லாவிட்டால் நாங்கள் பயங்கரவாதிகளாக உங்கள் ராணுவத்திற்கு வேலை பார்ப்பதில் அர்த்தமில்லை.”

 

தனக்காகவும், தன் சேவகர்களின் நியாயமான எதிர்பார்ப்பை நிறைவேற்றவும், பாகிஸ்தான் ஒன்று செய்தது. அதாவது, ஆபரேஷன் சிந்தூரின் முதற்கட்ட நடவடிக்கைக்கு எதிராக, மறுநாள் இந்தியாவின் 15 எல்லைப் பகுதி ஊர்களின் மீது, இந்தியாவின் சில விமானத் தளங்களின் மீது,  ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அனுப்பித் தாக்குதல் நடத்த முனைந்தது பாகிஸ்தான். அவை அனைத்தையும் இந்தியா வெற்றிகரமாக வான்வெளியிலேயே தடுத்து வீழ்த்தியது. பாகிஸ்தானின் இந்த ஆரம்ப ராணுவத் தாக்குதல் முயற்சியில் அது ‘ஷேம் ஷேம்’ தோல்வி அடைந்தது.

 

இப்போது ஆபரேஷன் சிந்தூரின் அடுத்த கட்டத்திற்கு இந்தியா நகர வேண்டி இருந்தது. அதன்படி – வேறு வழி இல்லாமல் – பாகிஸ்தான் நாட்டு ராணுவத் தளங்களை இந்தியா ஏவுகணைகள் கொண்டு தாக்கியது. அந்த நாட்டில் பல இடங்களில் உள்ள வான்வழிப் பாதுகாப்புக் கட்டமைப்புகள் பலவற்றை – முக்கியமாக லாகூர் நகரின் வான்வழிப் பாதுகாப்புக் கவசத்தை –  ஏவுகணைகள் மூலம் நாசம் செய்தது இந்தியா.

 

பயங்கரவாத முகாம்களை ஒன்பது இடங்களில் அடித்து நொறுக்கிய மறு நாளில், பாகிஸ்தானின் ராணுவத் தளங்கள் சிலவற்றையும் அழித்திருக்கிறது இந்தியா.  பாகிஸ்தானிலோ, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலோ, இயங்கும் பயங்கரவாதிகள் முகாம்கள் நிஜத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் பினாமி முகாம்கள் தான். ஆகையால் இந்தியா அவற்றைத் துவம்சம் செய்தது, முகமூடி அணிந்த பாகிஸ்தானின் ராணுவ முகத்தில் குத்திய மாதிரி – இதில் முகமூடிக்குப் பின்னால் உள்ள அந்த ராணுவ முகத்திற்கு வலிக்கும்.  இதுபோக பாகிஸ்தான் நாட்டில் பல இடங்களின் வான்வழிக் கவசத்தை இந்தியா நொறுக்கியது,  முகமூடி இல்லாத பாகிஸ்தானின் ராணுவ முகத்தில் நேராகக் குத்து விட்ட மாதிரி.

 

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடையே ஒரு போர் ஏற்பட்டால், இந்தியாவின் கை ஓங்கி நிற்கும் என்பதை இந்தியா இப்போது பாகிஸ்தானுக்குத் தெளிவாக்கி இருக்கிறது, உலகத்திற்கும் புரிய வைத்திருக்கிறது. நாம் இதற்காக நமது ராணுவத்திற்கு ஒரு சல்யூட்டும் பிரதமர் மோடிக்கு ஒரு சல்யூட்டும் வைக்கலாம்.

 

இனி உலகம் இந்திய ராணுவ வலிமையின் மீது, அதன் போர்த் தந்திரங்களின் மீது, அறிந்து மரியாதை வைக்கும். அது நமது தேசத்தின் மீதான ஒட்டுமொத்த மதிப்பை, நமது வர்த்தக வலிமையை, உயர்த்தும். அதோடு இன்னும் ஒரு பலன் நமக்குக் கிடைக்கும்.

 

 இந்தியாவைப் பார்த்து உதார் விடுவது பயனில்லை,  இனி பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பினால் லாகூர், ராவல்பிண்டி மற்றும் கராச்சி வரை பாகிஸ்தானுக்கு சேதம் ஏற்படும், என்பதெல்லாம் இப்போது பாகிஸ்தானுக்கு உறைக்கும். அதுபோக, சமீபத்தில் இந்தியா அறிவித்தது போல்  இந்திய வழி நதிகளிலிருந்து பாகிஸ்தானுக்குத் தண்ணீர் செல்வதையும் இந்தியா நிறுத்தினால் – அதைச் செய்ய நாட்கள் பிடித்தாலும் – பாகிஸ்தானில் மக்களே அங்கு வீதிக்கு வந்து தண்ணீர் கேட்பார்கள். ராணுவம் மக்களை லத்தியால் அடித்தோ துப்பாக்கியால் சுட்டோ அவர்களின் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்ற கவலையும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வரும். இதனால் பாகிஸ்தானுக்கு இந்தியா மீது ஒரு அச்சம் கலந்த மரியாதை ஏற்பட வழி உண்டு. அது ஏற்பட்டால், பாகிஸ்தான் தனது பயங்கரவாதத்தை இந்தியாவில் பிரயோகிக்கத் தயங்கும்.   

 

பைத்தியக்காரன் பத்தும் செய்வான், அதன் விளைவையும் ஏற்பான். அதனால் எந்தக் காலத்திலும் – இப்போது சில நாட்களில் கூட – பாகிஸ்தானின்  ராணுவ அக்கிரமங்கள் அல்லது பினாமி பயங்கரவாதச் செயல்கள் இந்தியாவில் நிகழலாம். அவற்றை முதலில் எப்படி அளவோடு கையாள்வது, பிறகு பாகிஸ்தானை எப்படி அடிப்பது என்பதில்  நம் நாட்டிற்கு அனுபவமும் ராணுவத் திறனும் உண்டு. பாகிஸ்தானுக்கு இன்னொரு நாடு என்றும் ஆயுதங்கள் தரலாம். தண்ணீர்?

 

எல்லாவற்றுக்கும் மேலாக, பாகிஸ்தானை அண்டை நாடாகக் கொண்டிருக்கும் இந்தியா தனக்கு இதைச் சொல்லிக் கொள்ள வேண்டும்: அடி உதவுவது போல் அடுத்த நாடு உதவாது!

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

Wednesday, 7 May 2025

பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது சரியா?

  

          -- ஆர். வி. ஆர்

 

“பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது சரியா? நமது நாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் பெரிய உயிரிழப்புக்கு அது வழி வகுக்காதா?

 

இந்தக் கேள்விகளை நம்மில் சிலர் – சிலர் அப்பாவியான நல்லெண்ணத்திலும், சிலர் மறைமுக மோடி எதிர்ப்பாகவும் – எழுப்புகிறார்கள்.

 

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாம் பாகிஸ்தான் மீது துப்பாக்கி-குண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. ஏனென்றால்:

 

எப்படியான நாடு இந்தியா? இந்து சமவெளி நாகரிகம் வளர்ந்த நாடு. உலகில் மிக அதிக மக்கள் தொகை உடைய நாடு. நான்காவது பெரிய பொருளாதாரம், பிற நாடுகளைக் காட்டிலும் வேகமான வருடாந்திரப் பொருளாதார வளர்ச்சி, இவற்றோடு உலகம் போற்றும் தலைவரைப் பிரதமராகத் கொண்ட நாடு.

 

இப்படியான நமது நாட்டிற்குள் அடுத்த நாடு சில பயங்கரவாதிகளை அவ்வப்போது அனுப்பி நம் ராணுவ வீரர்களையும் அப்பாவி மக்களையும் கொன்று குவிக்கும், அதை நம் நாடு கண்டனம் செய்துவிட்டு ஐ. நா சபைக்குச் சென்று அழுவதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றால் நமது பெருமையை, நமது முக்கியத்துவத்தை, நமது மக்களுக்கான கடமையை, உணராத நாடு இந்தியா என்று அர்த்தமாகும்.

 

நம் மண்ணில் நம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் துணியாத நாடாக இருந்து நாம் வளர முடியாது, உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க முடியாது.  நாம் அப்படிச் செயலற்று இருந்தால், வளர்ந்த மற்ற நாடுகள் நம்மைக் கிள்ளுக் கீரையாக நினைக்கும், வியாபாரம் மற்றும் பொருளாதார விஷயங்களில் நம்மை அடிபணிய வைக்கும், நம்மை வஞ்சித்து உறிஞ்சும்.

 

பாகிஸ்தான் நம்மை எந்த வகையில் தாக்கி வருகிறது? நம் நாட்டிற்குள் தனது ராணுவத்தை அனுப்பாமல், நூற்றுக் கணக்கில் பயங்கரவாதிகளைத் தயார் செய்து நம் நாட்டிற்குள் அனுப்பிப்  படுகொலைகளையும் நாசவேலைகளையும் செய்கிறது. இவற்றுக்குப் பதிலடி என்பதாக, நாமும் இந்தியாவில் பயங்கரவாதிகளைத் தயார் செய்து அவ்வப்போது பாகிஸ்தானுக்குள் ரகசியமாக அனுப்பி அந்த நாட்டு எல்லைக்குள் நாசவேலைகளை அரங்கேற்ற முடியாது. பாகிஸ்தானுக்கு நாம் ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுத்துத் தான் புரியவைக்க முடியும். அதை இந்தியா இப்போது - இன்று 7.5.2025 அதிகாலை - மிகக் கவனமாகச் செய்திருக்கிறது.

 

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில், ஒன்பது இடங்களில் பாகிஸ்தானின் ஆசியுடன் அமைக்கப் பட்ட பயங்கரவாதக்  கட்டமைப்புகளை இன்று ஏவுகணைகள் வீசி அழித்திருக்கிறது இந்தியா. இது குறித்து இந்தியர்கள் மகிழ்வது இயற்கை, அதை அவர்கள் வெளிப்படுத்துவதும் இயல்பானது.

 

இன்று இந்தியா எடுத்த அளவான ராணுவ நடவடிக்கைக்கு எதிராக, சில நாட்களில் அல்லது பின்னாளில்  பாகிஸ்தான் கண்ணை மூடிக்கொண்டு கன்னா பின்னாவென்று நாம் நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்துமா, அதில் இந்தியாவின் பக்கம் கணிசமான உயிர்ச் சேதம் நிகழுமா, என்று நமக்குத் தெரியாது. அதை நினைத்து இந்தியா பாகிஸ்தான் மீது இன்றைய ராணுவ நடவடிக்கையை  எடுக்காமல் இருக்க முடியாது. பாகிஸ்தான் அப்படி ஒரு ராணுவத் தாக்குதல் செய்தால், செய்ய எத்தனித்தால், நமது மோடி அரசு அதைத் திறமையாகக்  கையாளும் என்று நாம் நம்பலாம்.

 

அதிக பட்சமாக எந்த அளவு ஒரு அரசு எல்லா பக்கங்களிலும் சிந்திக்க முடியுமோ, திட்டமிட முடியுமோ, அதைச் செய்து இந்தியா இன்றைய அளவான ராணுவ தாக்குதலில் வெற்றி கண்டது பற்றிப் பல இந்தியர்களுக்கு இப்படி ஒரு உணர்வு இருக்கும்.  "தானாக வந்து நம்மை அவ்வப்போது செவிட்டில் அறைந்து ஒடும் அடுத்த வீட்டுக்காரனை, நாம் ஒரு முறை அவன் வீட்டுக்குள் சென்று அவன் முதுகில் போட்டு ரண்டு எத்து எத்தினோமே!" என்ற திருப்தியும் தன்மான மகிழ்வும் இந்தியர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

 

மத்தியில் உள்ள மோடி அரசு பொறுப்பானது.  தேவையில்லாமல் பாகிஸ்தானுடன் பெரிய போரை ஆரம்பித்து, அல்லது வளர்த்து, நமது நாட்டு உயிர்களையும் பொருளாதார முன்னேற்றத்தையும் தானாகப் பலி தராது என்று நாம் நம்பலாம். இந்த நேரத்தில் மோடி போன்ற ஒரு தலைவர் நாட்டின் பிரதமராக இருப்பது இந்தியாவுக்கு யானை பலம்.

 

சரி, ராணுவ ரீதியாகப் பாகிஸ்தானை நன்றாகப் போட்டதில், இனி பாகிஸ்தான் நம் நாட்டுக்குள் பயங்கரவாதிகளை அனுப்பாது, நாசவேலைகள் செய்யாது என்பது நிச்சயமா? அது நிச்சயம் இல்லை.

 

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் தலைமையகம் எங்கிருக்கிறது? உண்மையில் அந்த இடம் அந்நாட்டு ராணுவத் தலைமையகம்.  பாகிஸ்தான் திருந்தாத, திருத்த முடியாத நாடு. அந்த நாட்டை எதிர்த்து இந்தியா என்னென்ன தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும், என்னென்ன நேரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது அவ்வப்போதைய பாதுகாப்பு நிலைமையைப் பொறுத்தது. 

 

மேற்கே ரவுடி ராணுவ பாகிஸ்தான், கிழக்கே நன்றியில்லாத பங்களா தேஷ், வடக்கே ராட்சஸ சீனா என்று இந்தியா காலம் தள்ள வேண்டியபோது, ஊழலுக்கும் சுயநலத்திற்கும் பெயர் வாங்கிய அரசியல்வாதிகளும் உள்நாட்டில் மத்திய அரசைக் கைப்பற்றினால், அதைவிடப் பெரிய நரகம் இந்தியாவுக்கு இல்லை.

 

தேசத்தை நேசிக்கும் பொதுமக்களக்கிய நாம் இதைத்தான் செய்யலாம். நாட்டு நலன் பற்றி அக்கறையுள்ள ஒரு பொறுப்பான திறமையான மத்திய அரசு டெல்லியில் எப்போதும் இருக்கட்டும் என்று நாம் பிரார்த்திக்கலாம். சரிதானே?

 

* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

Monday, 5 May 2025

பஹல்காம் படுகொலை. பாடம் கற்குமா பாரதம்?

            -- ஆர். வி. ஆர்

 

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு சுற்றுலாத் தலம்பஹல்காம்.

 

மூன்று வாரம் முன் நமது நாட்டின் ஹிந்து சுற்றுலாப் பயணிகள் பலர் பஹல்காமில் பரவி இருந்தனர். அது வெட்ட வெளி, பகல் நேரம். அப்போது நான்கு முஸ்லிம் பயங்கரவாதிகள் அந்த மக்களை அணுகி, அவர்களிடம் பேசி, அவர்கள் ஹிந்துக்கள் என்பதை ஊர்ஜிதம் செய்து அவர்களில் 24 ஆண்களை சுட்டுக் கொன்றனர். பலியானவர்கள் இந்தியாவின் 14 மாநிலங்களைச் சார்ந்தவர்கள். ஒரு நேபாளி ஹிந்து சுற்றுலாப் பயணியும் அவ்விதம் மாண்டார். அவர்களில் பலர் தம் மனைவி குழந்தைகள் முன்னிலையில் ரத்தம் சொட்ட உயிரிழந்தனர்.

 

அருகில் உள்ள அடர்ந்த வனப் பகுதிக்குள் தப்பி ஓடிய அந்தப் பயங்கரவாதிகளை இந்தியா வெறியுடன் தேடுகிறது.

 

இந்த பயங்கரவாதத்திற்குப் பின்னால் பாகிஸ்தான் இருக்கும் என்பது பத்தாம் கிளாஸ் பிள்ளைக்கும் தெரியும்.

 

நமது நாட்டில் பாதகம் செய்து தப்பித்தவர்களை உயிருடனோ உயிர் இல்லாமலோ பிடிக்க வேண்டும். அவர்களை அனுப்பி வைத்தவர்களைக் கனமாகக் கவனிக்க வேண்டும். தேசப் பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய வேண்டும்.  இதில் நமது ராணுவ வீரர்கள் மற்றும் இரு நாட்டு அப்பாவி மக்களின் அனாவசிய உயிரிழப்பைத் தவிர்க்க வேண்டும். இதற்காகப் பாகிஸ்தான் மீதான நடவடிக்கையில் சரியான முடிவுகள் எடுப்பது  இந்தியப் பிரதமருக்கு எளிதல்ல. அவரவர் நலன்களைப் பேணும் உலக நாடுகளையும் கூடியவரை நமது நடவடிக்கைகளை ஏற்கச் செய்யவேண்டும்.  இதுவே பெரிய காரியம்.  

 

நம்முள் முன்பு முனகிய சில கேள்விகள் இப்போது உரத்து எழுகின்றன.

 

பற்பல நூற்றாண்டுகளாக ஹிந்துக்களின் அதிமுக்கியப் பிரதேசமாக இருக்கும் பாரதத்தின் ஹிந்துக்களுடன், இந்திய முஸ்லிம்கள் உள்ளார்ந்த நன்றியுடன் இணக்கமாக இருக்க விரும்புகிறார்களா? எப்படி என்றால் இந்திய பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளது போல். வெளி தேசத்திலிருந்து பாரதத்திற்கு வந்து தலைமுறைகளாக இங்கு வாழும் பார்சிக்களைப் போல். எதற்காக அந்த நன்றி? வேறு தேசங்களில் அப்படி நடக்கிறதா?

 

இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று கல்லூரிகளில் படித்து நல்ல வேலையுடன் குடும்பங்களாக அந்த நாட்டில் வாழும் ஹிந்துக்கள் இருபத்தி ஐந்து லட்சத்துக்கு மேல். அமெரிக்காவில் அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பிற்காக மனதிற்குள் நன்றியுடன் அந்த நாட்டு மக்களுடன் இணக்கமாக இருக்கிறார்கள் ஹிந்துக்கள். அதனால் அமெரிக்கர்களால் பொதுவாக விரும்பப் படுகிறார்கள்.

 

ஹிந்துக்களின் எண்ணிக்கை மொரிஷியஸ் நாட்டில் 48 சதவிகிதம், பிஜியில் 28 சதவிகிதம், கயானாவில் 23 சதவிகிதம், சுரினாமில் 19 சதவிகிதம். மலேஷியாவில் ஐந்தரை, நியூஜிலாந்தில் இரண்டரை. இன்னும் சில தேசங்களில் ஹிந்துக்கள் சுமாரான, கணிசமான அளவில் சிறுபான்மையினர்.  சட்டம் சமத்துவம் பேசினாலும், அந்த நாடுகளில் பெரும்பான்மையினர் மனதளவில் தங்களை ஏற்றால்தான் அங்கு தாங்கள் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்ற சாதாரண உண்மையை உணர்ந்து, அதற்கு ஏற்ப அந்தப் பெரும்பான்மை மக்களிடம் சினேகமாக இணக்கமாக இருந்து வாழ்கிறார்கள் ஹிந்துக்கள்.

 

இந்தியாவில் கிட்டத்தட்ட 80 சதவிகிதப் பெரும்பான்மையாக இருக்கும் ஹிந்துக்களிடம், முஸ்லிம்கள் உள்ளார்ந்த நன்றியுடன் – அதாவது ஒரு மனிதப் பண்பு என்ற அளவிலான நன்றியுடன் –உளமார்ந்த நட்புணர்வுடனும் இணக்கமாகவும் இருக்கிறார்களா? இதற்கு ஆம் என்ற பதில் உடனடியாகக் கிடைக்காது. விதிவிலக்குகள் வேறு விஷயம். இன்னொரு புறம், இந்தியாவில் பெரும்பான்மை மதத்தினாரான ஹிந்துக்களில் பெரும்பாலோர் தமது நாட்டில் முஸ்லிம்களிடம் ஒருவிதத் தயக்கத்துடன் சற்று விலகி இருக்க நினைக்கிறார்கள். அதற்கான காரணம் சாதாரண முஸ்லிம் மக்களிடம் இல்லை. அது அந்த மக்களைக் கட்டுப் படுத்தும் முஸ்லிம் மதத் தலைவர்களிடமும் மதப் பெரியவர்களிடமும் இருக்கிறது.

 

சாதாரண முஸ்லிம் மக்கள் நல்லவர்கள்தான். ஆனால் முஸ்லிம் மதத் தலைவர்களின், மதப் பெரியவர்களின், போக்கு இப்படி இருக்கிறது. அதாவது,  சமூகத்தில் பிற மதத்தவரும் தமக்குச் சரி சமம் என்று முஸ்லிம் மக்கள் பிற மதத்தவரை உளமாற மதித்து ஏற்பதை அந்தத் தலைவர்களும் பெரியவர்களும்  விரும்புவதில்லை. காலத்துக்கு ஒவ்வாத ஏதோ காரணம் வைத்திருக்கிறார்கள்.

 

முஸ்லிம் மதத் தலைவர்களுக்கும் மதப் பெரியவர்களுக்கும் சாதாரண முஸ்லிம்களிடத்தில் பெரும் செல்வாக்கும் அவர்கள் மீது ஆதிக்கமும் உண்டு. அதனால் மத அடிப்படையில் ஒரு உரசல் என்று வந்தால், சாதாரண முஸ்லிம்கள் தங்கள் மதத் தலைவர்கள் மற்றும் மதப் பெரியவர்களின் உத்தரவுகளைத் தான் ஏற்று செயல்படுவார்கள்.

 

ஹிந்துக்களை அவ்வாறு ஹிந்து மதத் தலைவர்களும் ஹிந்து மதப் பெரியவர்களும் கட்டுப் படுத்துவதில்லை – அந்த வழக்கம் ஹிந்து மதத்தில் இல்லவும் இல்லை.  அதனால் ஹிந்துக்களின் இயற்கையான சாந்தமும் சகிப்புத் தன்மையும், பிற மதத்தவருடன் இணக்கமாக இருக்கும் குணமும் என்றும் மாறாது.  ஆனால் தம்மை முஸ்லிம்கள் பெரிதும் மதிப்பதில்லை, அவர்களின் மதத் தலைவர்களின் சொல் கேட்டு தம்மை அவர்கள் ஆள நினைக்கிறார்கள், என்ற உணர்வில் ஹிந்துக்கள் முஸ்லிம் மக்களிடம் பொதுவாகத் தயக்கம் காட்டித் தள்ளி நிற்கிறார்கள். வேறு வகையில் எதிர்ப்புக் காட்டத் தெரியாதவர்கள் ஹிந்துக்கள்.

 

தங்களின் மதத்  தலைவர்கள் மற்றும் மதப் பெரியவர்களின் ஆதிக்கம் மூலமாக ஒன்றுபட்டிருக்கும் முஸ்லிம்கள் போல், ஹிந்துக்கள் பெரிதாக மத அடிப்படையில் ஒன்றுபட்டு நிற்பதில்லை. அதனால், சொந்த நாடான இந்தியாவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், இங்கு சிறுபான்மையினாரான முஸ்லிம்களிடம் உள்ள கூட்டு பலம் ஹிந்துக்களிடம் இல்லை.

 

இப்போது மீண்டும் பஹல்காமுக்கு வருவோம்.

 

பஹல்காம்  நிகழ்வைத் தலைகீழாகக் கற்பனை செய்து பாருங்கள். ஒருவேளை பஹல்காமில்  நான்கு ஹிந்து பயங்கரவாதிகள் இருபத்தி ஐந்து அப்பாவி முஸ்லிம்களை அடையாளம் கண்டு சுட்டுக் கொன்றிருந்தால் இந்திய ஹிந்துக்களே அதிர்ச்சி அடைவார்கள், அதை ஏற்க மாட்டார்கள்.  அதோடு, இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம் மதத் தலைவர்களும் முஸ்லிம் அமைப்புகளும் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலையானதைக் கண்டனம் செய்து ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். பாகிஸ்தானும்  அந்தப் பாதகத்தைக் கண்டித்து நீதி கேட்கும். அப்படி எழும் கண்டனங்கள் சரிதான், நியாயம்தான்.

 

பஹல்காமில் முஸ்லிம்கள் கையால் அப்பாவி ஹிந்துக்களுக்கு உண்மையில் பாதகம் நேர்ந்தபோது, இந்திய முஸ்லிம்களிடமிருந்து பரவலான உரத்த கண்டனம் எழவில்லை. வந்தது சொற்பம். நடந்த பயங்கரவாதத் தாக்குதலைப் பாகிஸ்தான் கண்டித்ததா என்பதைத் தேடிப் பார்க்க வேண்டும். இதற்கெல்லாம் நேரடிக் காரணம் முஸ்லிம் மதத் தலைவர்கள் மற்றும் மதப் பெரியவர்களின் நீண்டகால அணுகுமுறைதான் – சாதாரண முஸ்லிம் மக்கள் அல்ல.

 

பஹல்காம் படுகொலையில் இந்தியா நடவடிக்கை எடுப்பதில் இத்தனை விஷயங்களையும் கவனத்தில் வைத்து நிதானமாகச் செயல்படவேண்டும். பாகிஸ்தானில் யார் யாரை எப்படிக் குறி வைத்தால், அந்த நாட்டில் என்ன திரைமறைவு வேலைகள் செய்ய முடிந்தால், பாகிஸ்தான் பலவீனப் படும், அடங்கும் என்று திட்டமிட்டு இந்தியா முயற்சிக்க வேண்டிய காரியங்கள் உண்டு. அதை மத்திய அரசு பார்த்துக் கொள்ளும்.  நாம் நன்றியுடன் பொறுமை காக்க வேண்டும்.

 

இந்தியாவுக்குப் பாகிஸ்தானுடனான பிரச்சனையின் முக்கியக் காரணம் பாகிஸ்தான் அரசோ அதன் ராணுவமோ அல்ல.  அந்தப் பிரச்சனையின் மிக முக்கியப் பகுதி நமது நாட்டு மக்களிடம் இருக்கிறது – அவர்களில் பெரும் பகுதியினரின் ஒற்றுமையின்மை ஒழிய வேண்டும்.  

 

யூதர்களின் பலத்த ஒற்றுமையால், இஸ்ரேல் நாட்டைச் சுற்றிப் பல எதிரி நாடுகள் இருந்தும் இஸ்ரேல் அவைகளைச் சமாளிக்கிறது, வெல்கிறது. ஆனால் இந்திய ஹிந்துக்களிடையே ஒற்றுமை இல்லாததால் அவர்கள் நலிவடைகிறார்கள். இனியாவது நமது ஹிந்துக்கள் தாமாக ஒற்றுமைப் பாடம் கற்பது நல்லது. பஹல்காம் சோகம் அதற்கான தொடக்கத்தைத் துரிதப் படுத்துமோ?

 

* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

 

 

 

 

Friday, 18 April 2025

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

 

-- ஆர். வி. ஆர்

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, போன வாரம் சென்னை வந்து அதிமுக  தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார். முடிவில், 2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக-பாஜக கட்சிகளிடையே கூட்டணி அமைந்தது என்று அறிவித்தார். அப்போது பழனிசாமியும் அருகில் அமர்ந்திருந்தார்.

 

பழனிசாமியின் ஒரு சமீபத்திய பேச்சால் அதிமுக-பாஜக கூட்டணியில், குறிப்பாக பாஜக பக்கம், அதிர்வலைகள் தென்படுகின்றன. இப்போது பல பாஜக ஆதரவாளர்கள் மனதில் எழக்கூடிய கேள்விகள் இவை. 2026 தேர்தல் வரை இந்தக் கூட்டணி நிலைக்குமா? அதிமுக-வை நம்பி பாஜக கூட்டணி அமைத்தது சரிதானா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

 

இதற்கான விடைகளை நாம் பல கோணங்களில் தேட வேண்டும்.

 

அதிமுக-வோ பாஜக-வோ 2026 தேர்தலில் திமுக கூட்டணியை வெல்ல முயற்சிக்க, அவைகளுக்கு ஒரு வலுவான கூட்டணி அவசியம். ஆகையால் அவை திமுக-வை எதிர்க்கப் போகும் ஒரு கூட்டணியைத் தங்களுக்குள் அமைத்திருக்கின்றன. இந்தக் கூட்டணியில் இன்னும் சில கட்சிகளைச் சேர்க்க வேண்டும்.  

 

பழனிசாமியின் தற்போதைய அறிவிப்பு, செய்தியாளர்களிடையே அவர் பேசியபோது வெளிவந்தது. அவர் சொன்னது: ‘அதிமுக-பாஜக கட்சிகள் 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் கூட்டணியாக வெற்றி பெற்றால்,  புதிய மாநில அரசில் பாஜக பங்கு பெறாது, அதிமுக மட்டும் தனித்து ஆட்சி அமைக்கும்’. அமித் ஷாவும் அப்படிப் புரிந்து கூட்டணியை அறிவித்தார் என்றும் பேசியிருக்கிறார் பழனிசாமி. ஆனால் பத்திரிகைச் செய்திகள் அந்த ரீதியில் இல்லை.

 

பழனிசாமியின் அறிவிப்பை பாஜக ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருக்க முடியாது. இது பற்றிய கேள்விக்குப் பதில் சொன்ன பாஜக-வின் புதிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “மாநில ஆட்சியில் அதிமுக-வோடு பாஜக-வும் பங்கு கொள்வது பற்றி அமித் ஷாவும் அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் உரிய நேரத்தில் கலந்து பேசி முடிவெடுப்பார்கள்” என்று பழனிசாமியின் கருத்தை ஏற்காமலும் மறுக்காமலும் நாசூக்காகப் பேசினார். 

 

அதிமுக தலைவர் பழனிசாமி, அவரது கட்சியினரால்  போற்றப் படுபவரல்ல. தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு உடையவர் அல்ல. தலைமைப் பண்புகள் கொண்டவரும் அல்ல. அதிமுக-வுக்காக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பிரபலப் படுத்திய இரட்டை இலை சின்னத்தைக் கொண்ட அந்தக் கட்சிக்கு, சந்தர்ப்ப வசத்தால் தலைவராகி இருப்பவர்.   

 

பாஜக என்ற கட்சியோ, அதன் தமிழகப் பிரிவோ, அதிமுக மாதிரியான கட்சி அல்ல. தமிழக பாஜக-வின் தலைவர்கள், பாட்டன் சொத்தில் சுகிக்கும் வம்சா வழிகள் அல்ல. அவர்கள் அனைவரும் தேசாபிமானத்துடன் துடிப்பாகச் செயல்பட்டுத் தமிழகத்தில் நேர்மையான ஆட்சியும்  திறமையான நிர்வாகமும் நிலவவேண்டும் என்று விரும்புகிறவர்கள்.

 

இத்தகைய தமிழக பாஜக, அதிமுக-வோடு கூட்டணி அமைத்து என்ன செய்யவேண்டும் என்று பழனிசாமி நினைக்கிறார்? அதிமுக-வை ஆட்சியில் அமர்த்திப் பழனிசாமி முதலமைச்சராகத் தேவையான சில எம்.எல்.ஏ-க்களைக் கூட்டணிக்கு நிரந்தரக் காணிக்கையாக்கி பாஜக ஓரமாக அமர்ந்திருக்க வேண்டுமா?  

 

அண்ணாமலை பாஜக-வின் மாநிலத் தலைவராகத் தொடராமல் இருப்பதற்கு பழனிசாமியின்  விருப்பமும் ஒரு காரணமாக இருக்கும் என்ற சந்தேகம் பாஜக அதரவாளர்களிடையே உண்டு – அமித் ஷா இதை லாவகமாகக் கையாளக்கிறார் என்பது வேறு விஷயம். இதுபோக, அதிமுக-பாஜக கூட்டணி 2026 சட்டசபைத் தேர்தலில் வென்றாலும், மாநில ஆட்சியில் பாஜக பங்கு கொள்ளாமல் வைக்கப் படும் என்றால், அது அண்ணாமலை அபிமானிகளுக்கு இரட்டை இடியாக வரும், அதை பாஜக ஏற்பதும் எளிதல்ல. இதைப் பழனிசாமி உணரவில்லையா? 


அதிமுக மட்டும் தனியாக மாநில ஆட்சியில் அமர்ந்து, யாரும் பார்க்காமல் என்ன செய்ய விரும்புகிறது? புரிகிறது, புரியாமலும் இருக்கிறது.

 

இன்னொன்று.  2026 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும் அதிமுக-வுக்குத் தனி மெஜாரிட்டி இல்லை, பாஜக எம்.எல்.ஏ-க்களும் ஆதரவு கொடுத்தால் தான் ஆட்சிக்கு மெஜாரிட்டி உண்டு என்றானால், அப்போதும் பாஜக-வை ஆட்சியில் சேர்க்க விரும்பாதா அதிமுக? இல்லை, பாஜக-வுக்கு அந்த அளவு எம்.எல்.ஏ-க்கள் எப்படியும் கிடைக்க முடியாத படி அந்தக் கட்சிக்கு மிகக் குறைந்த தொகுதிகளை ஒதுக்க அதிமுக எண்ணுகிறதா? பழனிசாமியின் அறிவிப்புக்குப் பின்னால் தெளிவான முதிர்ச்சியான சிந்தனை இல்லை.  

 

இதுதான் இப்போதைய நிலை. ஆனால் என்ன இருந்தாலும், பாஜக ஆதரவாளர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  தங்களுக்குள் அவர்கள் அதிமுக-வைப் பற்றியும், அதன் பேராசைகள் மற்றும் தந்திரங்கள் பற்றியும் வெளிப்படையாகப் பேசலாம்.  அவை அனைத்தும் பாஜக தலைவர்கள் நொடியில் அறிந்தது  தான். ஆனால் மோடி, அமித் ஷா போன்ற தலைவர்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசக் கூடாது, பேசவும் மாட்டார்கள்.

 

மோடியும் அமித் ஷாவும் தாங்கள் கொண்ட உயர்ந்த இலக்கு, ஆகவேண்டிய காரியம், அதில் தான் குறியாக இருப்பார்கள்.  அவர்கள் வெளியில் பேசுவது தேவையான அளவு மட்டும்தான் இருக்கும். ஆகையால் பாஜக ஆதரவாளர்கள் அவர்களின் மதியூகத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

 

எப்படியான மனிதர்களை சமாளித்தவர்கள், வென்றவர்கள், மோடியும் அமித் ஷாவும்? காங்கிரஸ் கட்சியின் சோனியா குடும்பம், ஷரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி, நிதிஷ் குமார், பரூக் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி, சந்திரபாபு நாயுடு மற்றும் கேஜ்ரிவால். மோடிக்கும் அமித் ஷாவுக்கும் பழனிசாமியை அரசியல் ரீதியாக எங்கு விட்டு எங்கு பிடிக்கவேண்டும் என்று பல கணக்குகள் இருக்கும்.  

 

திமுக-வை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும் என்பது பாஜக-வின் பிரதான இலக்கு. இதற்காக, முதலில் அதிமுக-வுடன் கூட்டணியைப் பேசி முடித்துவிட்டு பாஜக காத்திருக்கும்.  பின்னர் நாள் ஆக ஆகப் பழனிசாமி கூட்டணிக்கு ஒவ்வாத பேச்சுக்களைப் பேசி முரண்டு பிடித்தால் – யார் கண்டது, நடிகர் விஜய்யிடமிருந்து பழனிசாமிக்கு எப்போது என்ன ஒப்புதல் வருகிறதோ! – அதிமுக  கூட்டணியிலிருந்து வேறு வழி இல்லாமல் பாஜக அப்போது விலகலாம். ஆனால் பாஜக இப்போது அதிமுக-விடமிருந்து விலகி நின்று, தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதிமுக-வுடன் கூட்டணி பற்றிப் பேச ஆரம்பிக்க முடியாது. ஆகையால் அதிமுக-வுடன் முதலில் கூட்டணியை அமைத்து வைப்பது பாஜக-வுக்கு அவசியம் நன்றாகப் போனால் அதைத் தொடரலாம். 

 

இது போக, தேர்தலுக்கு முன்போ பின்போ அதிமுக-வில் அதிருப்தி கொண்ட அக் அக்கட்சியின் தலைவர்கள் அதிமுக-வைப் பிளக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரம் பழனிசாமியும் பாஜக-விடம் முரண்டு பிடித்து முறைத்துக் கொண்டிருந்தால், அதிமுக-வில் ஏற்படும் பிளவும் பாஜக-விற்கு அனுகூலம் என்றால், அப்போது பாஜக அந்தத் திசையிலும் பார்க்கலாம். இது போன்ற மாற்று வாய்ப்புகள் பாஜக பக்கத்திலிருந்து அதிமுக-வுக்குக் கிடைக்காது.

 

அதிமுக-வுடனான தேர்தல் கூட்டணியைப் பாஜக தொடர்ந்து நிர்வகிப்பது ஒரு செஸ் ஆட்டம் மாதிரி. நாம் வியக்கும் பாஜக செஸ் வீரர் அந்த விளையாட்டில் கில்லி என்றால், அவர் மீது நம்பிக்கை வைத்து நாம் அவரது ஆட்டத்தைக் கடைசி வரை அமைதியாகப் பார்க்க வேண்டும்.

 

நாம் போற்றும் செஸ் வீரர் இந்த ஆட்டத்தின் முடிவில் பெரிய வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, அவரிடம் சாம்பியனுக்கான ஆட்டத் திறமையும் துடிப்பும் யுக்தியும் இருக்கிறது. இன்றோ நாளையோ, ஒருநாள் அவர் எப்படியும் அபாரமாக வென்று வருவார். அவருக்குக் கை தட்டுவோம்!

 

* * * * *
Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

Wednesday, 16 April 2025

மு. க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்

 

-- ஆர். வி. ஆர்

 

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

 

மாநில சுயாட்சியின் முக்கியத்துவம் பற்றி சட்டசபையில் இப்போது மு. க ஸ்டாலின் பேசி இருக்கிறார். மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக இருந்தால்தான் அவை வளர்ச்சி அடையும்” என்பதும் அவர் வார்த்தைகள். இது தொடர்பாக அரசமைப்பு சட்டத்தின் விதிகளை ஆராய்ந்து மறு மதிப்பீடு செய்து அறிக்கை தர, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒரு குழுவைத் தமிழக அரசு அமைத்திருக்கிறது என்றார் ஸ்டாலின். 

 

சுயாட்சி என்றால் என்ன அர்த்தம்? 'நம்மை, நமது பிரதேசத்தை, நாமே ஆள்வது' என்பது அதன் நேரடி அர்த்தம். ‘மத்திய அரசின் தலையீடு இல்லாமல், தமிழ் நாடே அனைத்து விஷயங்களிலும் தன்னை ஆள வேண்டும் – ஒரு தனி நாடு மாதிரி' என்ற அர்த்தம் ‘மாநில சுயாட்சி’ என்ற வார்த்தையில் தெரிகிறது. தேவையானால் “ஆமாம், அதுதான் அர்த்தம்” என்று ஓங்கிப் பேசவும், வழக்கு வந்தால் “அதற்கு அர்த்தம் அதுவல்ல. தமிழர்களுக்கு சட்ட ரீதியாக அதிக அதிகாரம் பெறும் மந்திரச் சொல் அது” என்றும் நழுவிக் கொள்ளலாம்.

 

‘சில குறிப்பிட்ட அதிகாரங்கள் இப்போது  மத்திய அரசிடம் இருக்கின்றன. அவற்றை மத்திய அரசிடமிருந்து எடுத்து மாநிலங்களுக்கு மாற்றித் தரவேண்டும்’ என்பதுதான் நடைமுறையில் திமுக கேட்கும் மாநில சுயாட்சியாக இருக்க முடியும்.  இந்தப் புள்ளியிலிருந்து சில விஷயங்களைப் பார்க்கலாம்.

 

திமுக விரும்பும் மாநில சுயாட்சி முன்பே கையில் இருந்தால், திமுக தமிழகத்தை ஆண்ட நாட்களில் மக்கள் நலனுக்காக என்னென்ன சாதனைகள் செய்திருக்கும் என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா? முடியாவிட்டால் இப்போது மாநில சுயாட்சி தேவை என்று அவர் பேசுவது ஏமாற்று வேலை.

 

தெருவுக்கு வந்தும் ஒரு விஷயம் பேசலாம். எல்லா மாநிலங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.  மாநிலங்களில் புதிய புதிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அமைக்கிறது. எல்லா தேசிய நெடுஞ்சாலைகளையும் அந்த அமைப்பே பாராமரிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நல்ல தரம் என்ன, தமிழக அரசு மற்றும் உள்ளாட்சிகள் அமைத்துப் பராமரிக்கும் பல்லிளிக்கும் சாலைகளின் தரம் என்ன? தெரிந்ததுதான். மற்ற துறைகளில் அதிக அதிகாரங்கள் கிடைத்தால் மட்டும் அவற்றை வைத்து ஒரு திமுக ஆட்சி மாநிலத்தில் எதைச் சிறப்பாகச் செய்யும்?

 

மாநில அரசின் அதிகாரங்களை வைத்து, தமிழக அரசு பொதுமக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும். இதில் மத்திய அரசு ஒரு முட்டுக்கட்டையும் போட முடியாது. அதாவது, குடிநீர் வழங்கும் விஷயத்தில் மாநில அரசுகளுக்கு வானளாவிய சுயாட்சி உண்டு. நமது மாநில மக்கள் அனைவரும் குடிநீருக்காகக் காத்திருக்காமல், குடம் வாளி தூக்கி அலையாமல், அவர்களுக்குத் தேவையான குடிநீர் கிடைக்கச் செய்துவிட்டதா திமுக? பிறகு எதற்கு மாநில சுயாட்சி?

 

இப்போதைய திமுக ஆட்சியில், முன்பு இரண்டரை வருடங்கள் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. தற்போது அவர் வனத்துறை அமைச்சர். பொதுமேடையில் ஒரு மூன்றாம் தர ஆசாமியும் பேசத் தயங்கும் ஆபாசப் பேச்சை அவர் சமீபத்தில் மேடையேறிப் பேசினார். இத்தனைக்கும் அவர் மூன்று எம்.ஏ பட்டங்கள், பி.எட் பட்டம், பி.எல் பட்டம், அதோடு பி.எச்.டி பட்டமும் வாங்கியவர். எப்படித்தான் அவர் இத்தனை பட்டங்கள் வாங்கினாரோ - வாங்கியவருக்குத் தான் தெரியும்!

 

மாநில சுயாட்சி முன்பே கிடைத்திருந்தால் அதன் கீழ் திமுக என்ன செய்திருக்கும்? மாநில சுயாட்சி அதிகாரத்தைக் கண்ணும் கருத்துமாக உபயோகித்து, உண்மையிலேயே  கல்வியில் சிறந்த, கண்ணியத்திற்கும் உதாரணமான, ஒரு கனவானைத் திமுக உயர்கல்வித் துறை அமைச்சராக்கி இருக்குமா?

 

இப்போது பணச் சலவைக் குற்றங்களை (money laundering) விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு, மத்திய அரசின் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இருக்கிறது. மாநில சுயாட்சிக் கொள்கையின் படி, இத்தகைய விசாரணையை மாநில அரசே செய்ய வேண்டும் என்று திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆசைப் படுவார். அதன் அனுகூலங்கள் அவருக்குத் தெரியும். ஸ்டாலினும் அதையே விரும்புவாரே?

 

ஸ்டாலின் விரும்பும் மாநில சுயாட்சி அதிகாரங்களை விடக் கூடுதல் அதிகாரங்களை முன்பு கொண்ட ஒரு இந்திய மாநிலம், ஜம்மு காஷ்மீர். அதற்கென்று தனியாக ஒரு அரசமைப்புச் சட்டமே இருந்தது. தனிக் கொடியும் இருந்தது. முன்பு மத்திய ஊழல் தடுப்பு சட்டமும் அங்கு அமல் ஆகவில்லை.  

 

அரசியல் சட்டப் பிரிவு 370 மாற்றம் செய்யப் படுவதற்கு முன், மாநில மஹா சுயாட்சி கொண்டிருந்த ஜம்மு காஷ்மீர் அதை வைத்து என்ன முன்னேற்றத்தைக் கண்டது, மக்களின் பொருளாதார நல்வாழ்விற்கு என்ன செய்தது? ஒன்றுமில்லை. அந்த சட்டப் பிரிவு முடக்கப் பட்டபின், மத்திய அரசின் உதவியுடன் – ஜம்மு காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாக இருக்கும் நிலையில் – அந்தப் பிரதேசத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிதும் பரவியிருக்கின்றன. அந்த மக்களுக்கான கல்வி வசதிகள், மருத்துவ வசதிகள், வருமான வாய்ப்புகள் உயர்ந்திருக்கின்றன. அங்கு சட்டம் ஒழுங்கும் மேம்பட்டிருக்கிறது. இதற்கு என்ன பதில் சொல்வார் ஸ்டாலின்?

 

தனது அதிகாரங்களை வைத்து மத்திய அரசு ரயில் போக்குவரத்தை நன்றாக நிர்வகிக்கிறது, ரயில்வே நிலையங்களை சிறப்பாகப் பாராமரிக்கிறது. மாநில அதிகாரங்களின் கீழ் பேருந்து நிலையங்களைத் திமுக அரசு எப்படிப் பராமரித்து வருகிறது? லொட லொட அரசு பஸ்களே நமது மாநில அரசு செயல்படும் லட்சணத்தை சத்தம் போட்டுச் சொல்லுமே?

 

“மாநில அரசுக்கு ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அதிகாரம் இல்லை. மத்திய அரசைப் போல் அந்த அதிகாரம் எங்களுக்கும் இருந்தால் நிதிப் பிரச்சனை இல்லாமல் மாநிலத்தில் எல்லாப் பணிகளையும் செய்து முடிப்போம்” என்று எந்த அரசியல் தலைவரும் பேசமாட்டார் என்று நாம் பிரார்த்திக்க வேண்டும்.  அந்த அதிகாரம் தமிழகத்திற்கு இருந்தால், லாட்டரி சீட் மாதிரி ஒரே சீரியல் நம்பரில் எத்தனை ஐநூறு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப் படுமோ, யார் கண்டது!  

 

ஒரு மாநிலத்தை ஆளும் முதலமைச்சரின் சிந்தையில் நேர்மையும், செயலில் முனைப்பும், நெஞ்சில் மக்கள் நலனும் இருந்தால் தற்போதுள்ள மாநில அதிகாரங்களை உபயோகித்தே அவர் மாநிலத்திற்கு எல்லா நன்மைகளும் கிடைக்கச் செய்யலாம். திமுக தலைவர்களிடம் அந்த குணங்கள் இல்லை. அதுதான் அவர்களின் உள் கோளாறு – மாநில சுயாட்சி ஜுரம் அவற்றின் ஒரு வெளி அடையாளம். இதுதான் விஷயம்.

 

மாநில சுயாட்சி இல்லாமல் ஒரு மாநிலத்துக்கு அதன் முதல்வரால் சிறந்த ஆட்சி தர முடியாது என்று ஸ்டாலின் நிஜமாகவே நினைக்கிறாரா? அப்படியானால், மத்தியில் பத்தாண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தபோதும் நரேந்திர மோடியால் அதே நேரம் குஜராத்தில் எப்படி மிகச்  சிறந்த ஆட்சி தர முடிந்தது என்று ஸ்டாலின் தெளிவு படுத்தட்டும்.

 

மாநில சுயாட்சி ஜுரத்தில் பிதற்றாமல், ஒரு மாநில முதல்வர் பதவியில் இருந்த மோடி எப்படி நாட்டின் பிரதமர் ஆனார் என்பதையும் ஸ்டாலின் புரிந்து கொள்வது அவருக்கே நல்லது.  பிரதமர் கனவில் மிதக்கும் ஸ்டாலினுக்கு அவருடைய கனவு நிறைவேற ஒரு எளிய வழியும் கிடைத்து விடுமே!


* * * * *
Author: R. Veera Raghavan, Advocate, Chennai