Saturday, 2 August 2025

"இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது!" - ராகுல் காந்தி குதூகலம்.

  

          -- ஆர். வி. ஆர் 

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு உள்ள அதிகாரமும் முக்கியத்துவமும் அவரது வலிமையான நாடு அளித்தது. வாய்க் கொழுப்பு, அவரது அசட்டுத்தனம் கொடுத்தது – அவரது சமீபத்திய பேச்சு இதற்கு உதாரணம்.

 

டிரம்பிற்கு ரஷ்யா மீது ஒரு கோபம் உண்டு. காரணம், அவர் தலையிட்டுப் பார்த்தும் ரஷ்யா-உக்ரைன் போரில் அவர் விரும்பிய வழியில் ரஷ்யா போரை நிறுத்த முன்வரவில்லை.  அதனால் அமைதிக்கான நோபல் பரிசு வாய்ப்பும் டிரம்பை விட்டு நழுவியது என்ற மனக்குறை அவருக்கு இருக்கிறது. 

 

இந்தியா மீதும் அதிபர் டிரம்பிற்கு மனக்கசப்பு உண்டு.  அதற்குக் காரணம்: மோடியின் தலைமையிலான இந்தியாடிரம்பின்  மானத்தை சர்வதேச அளவில் சந்தி சிரிக்க வைத்தது – அதுவும் டிரம்ப் தனக்குத் தானே வாங்கிக் கட்டிக் கொண்டது. எப்படி என்றால், பாகிஸ்தான் வளர்த்த பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா, சென்ற மே மாதம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற தாக்குதல் மூலம்  பாகிஸ்தானில் உள்ள பல தீவிரவாத முகாம்களையும் ராணுவக் கட்டமைப்புப் பகுதிகளையும் ஏவுகணைகள் வீசி துவம்சம் செய்தது. பாகிஸ்தானும் சோப்ளாங்கியாக நம் மீது எதிர்த் தாக்குதல் செய்தது.

 

நான்கு நாட்கள் நடந்த அதிவேகப் போரில்  'முடியலை' என்றாகிவிட்ட பாகிஸ்தான் இந்தியாவிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்தியா போரை நிறுத்தியது. இந்த நேரத்தில் விஷமக்கார டிரம்ப் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டார்.

 

“இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுடனான உங்கள் வர்த்தகம் நின்றுபோகும்” என்று இரு நாடுகளையும் தனது அரசு எச்சரித்ததால் அவை போரை நிறுத்தின என்று டிரம்ப் கூசாமல் புளுகினார்.  "இரண்டு அணு ஆயுத நாடுகளிடையே போர் பெரிதாகாமல்  நான் தடுத்தேன்" என்றும் சவடாலாகப் பேசினார். அவரது நோபல் பரிசுக் கனவு மங்கவில்லை.

 

சக்தி மிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புளுகை அழுத்தமாக நேரடியாக மறுக்காமல்அதே சமயம் உலகம் நன்றாகப்  புரிந்துகொள்ளூம் வகையில், இந்தியா ஒன்றைத் தெளிவு படுத்தியது. அதாவது, பாகிஸ்தான் நேரடியாக இந்தியாவை அணுகிக்  கேட்டதாலும், ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் பெரிதும் நிறைவேறி விட்டதாலும்இந்தியா போரை நிறுத்தச் சம்மதித்தது. போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு அதுதான் காரணம், வேறு எந்த மூன்றாம் நாடும் அதற்குக் காரணம் அல்ல  என்பதை உலகம் நம்புமாறு இந்தியா எடுத்துச் சொன்னது. இருந்தாலும் டிரம்ப் புளுகியபடி இருந்தார்.

 

சென்ற ஜூன் மாத நடுவில், டிரம்புடன் போனில் பேசிய மோடி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த நான்கு-நாள் போர், அந்த இரு நாடுகளுக்குமான ராணுவத் தொடர்பு வழிகள் மூலமாக, பாகிஸ்தான் கேட்டுக் கொண்டபடி, நிறுத்தப் பட்டது. இதில் மற்ற மத்தியஸ்தம் ஏதும் நடக்கவில்லை என்றும் டிரம்பிடமே  தெரிவித்தார் – இதை  இந்தியாவின் வெளி விவகாரத்துறை செயலரும் ஒரு அறிக்கை மூலம் அப்போது தெரியப் படுத்தினார்.

 

தன் மூக்குடைந்தாலும் டிரம்ப் தான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார். இப்போது, 'என் மானத்தை வாங்கிய இந்தியாவே, உன்னை விட்டேனா பார்!' என்பதற்காகவும் சேர்த்து, இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும்  பொருட்களுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 25% வரி விதித்திருக்கிறார். அது போக, நாம் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால்  நமது நாட்டுப் பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதியானால் அதற்கு ஒரு அபராதமும் போட்டிருக்கிறார்.

 

புதிய வரி மற்றும் அபராதம் விதித்ததுடன் டிரம்ப் நிற்கவில்லை. அவற்றைத் தொடர்ந்து, "ரஷ்யப் பொருளாதாரமும் இந்தியப் பொருளாதாரமும் 'செத்த பொருளாதாரங்கள்' (dead economies). அவை எப்படியும் போகட்டும்" என்று தத்துப் பித்தென்று சென்ற ஜூலை 31-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டார்.

 

வாய்க் கொழுப்பில் டிரம்ப்பிற்குச்  சளைக்காத அரசியல் தலைவர், அவரையும் மிஞ்சக் கூடிய தலைவர், உலகில் ஒரு மனிதர்தான் உண்டு. ராகுல் காந்திதான் அவர். இந்தியாவை எதிர்த்து, அதுவும் மோடியை எப்படியாவது சங்கடப் படுத்தும், பேச்சை யார் பேசினாலும் அதை ராகுல் காந்தி வரவேற்பார். அதன்படி, டிரம்பின் 'செத்த பொருளாதார' அறிக்கை வந்த அதே நாள் ராகுல் காந்தி அதைக் கொண்டாடிப் பேசினார்.  

 

ராகுல் பேசிய வார்த்தைகள் இவை: "டிரம்ப் சொல்வது சரிதான். இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது என்பது, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் தெரியும்.  ஜனாதிபதி டிரம்ப் இந்த உண்மையைக் கூறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்." அடுத்து, தனது X தளத்திலும் "இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது. அதைக் கொன்றவர் மோடி" என்று ராகுல் காந்தி பதிவிட்டார்.

 

இந்தியா ஒரு செத்த பொருளாதாரம் என்பதை ராகுல் காந்தி நிஜமாகவே நம்புகிறாரா? இல்லை, “டிரம்பை ஒரு பொய்யர் என்று மோடி அறிவிக்கத் தயாரா?” என்று தான் சமீபத்தில் வெட்டிக் கேள்வி கேட்டோமே, அது ராகுல் காந்தியே டிரம்பை இடிப்பது போல் தொனிக்கிறதே, அது டிரம்பிற்கு வருத்தம் தருமே என்று ராகுல் இப்போது யோசிக்கிறாரா? அதனால் ‘டிரம்பை ஒருவிதத்தில் சமாதானம் செய்வோம்’ என்று எண்ணி டிரம்பின் 'செத்த பொருளாதாரக்' கருத்தை  வரவேற்று அது தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் வளைந்து பணிந்து பேசி இருக்கிறாரா ராகுல்? ராகுலின்  பித்துக்குளிப் பேச்சுக்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கும்.

 

தான் வெறுக்கும் மோடி நிர்வகிக்கும் நாட்டை டிரம்போ வேறு யாரோ மட்டம் தட்டி இழித்துப் பேசினால், ராகுல் காந்தியின் அற்ப சந்தோஷத்திற்கு அளவு கிடையாது. இதுவும் ராகுல் பேச்சுக்கு ஒரு காரணம்.

 

என்ன பேசுகிறார் ராகுல் காந்தி? நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோஹன் சிங் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் நம் பிரதமர்களாகப் பதவி வகித்த காலத்தில் இந்தியப் பொருளாதாரம் துடிப்புடன் ஜிகுஜிகுவென்று ஜொலித்ததா? பிறகு 2014-ம் வருடம் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரான நாள் முதற்கொண்டு தான் நமது பொருளாதாரம் சோகை அடைந்து செத்துவிட்டதா?

 

ஒரு நாட்டின் பொருளாதாரமே மடிந்து போவது அந்த நாட்டிற்கான பெரும் கேடு, பெரும் துயரம்.  மோடி பிரதமரான முதல் ஐந்து ஆண்டுகள் சென்றபின் நடந்த 2019 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் லோக் சபா தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தல் பிரசாரங்களின் போது, இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது, அதற்குக் காரணம் மோடி தலைமையிலான மத்திய ஆட்சி என்று ராகுல் காந்தி மக்களிடம் சொன்னாரா? இல்லை.  ஏனென்றால் ஒரு அமெரிக்க அதிபர் மதிகெட்டு அவ்வாறு முன்னதாக அறிவிக்கவில்லை. ராகுல் காந்திக்கும் அப்போது அந்த அளவு புத்தி கோளாறாக வேலை செய்யவில்லை.

 

இன்னொன்று. தொழிலதிபர் அதானியை எதிர்த்தும், பிரதமர் மோடி அந்தத் தொழிலதிபருக்குச் சாதகமாக முடிவுகள் எடுப்பதாகவும், ராகுல் காந்தி  அடிக்கடி சொல்லி வருகிறார். செத்துப்போன ஒரு பொருளாதாரத்தில் ஒரு தொழிலதிபர் ராகுல் காந்தியின் கவனம் பெறும் அளவிற்கு வளர்ந்து தொழில் செய்ய முடியுமானால் அவர் பெரிய தொழில் மேதையாக இருக்கவேண்டுமே? இதை ராகுல் காந்தி ஒப்புக் கொள்கிறாராபாவம் ராகுல் காந்தி. தன் பிதற்றல் தன்னை எப்படியெல்லாம் அம்பலப் படுத்தும் என்பதை அவர் உணரவில்லை.


டிரம்பிற்கும் ராகுல் காந்திக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இந்தியா இழிக்கப் பட்டாலும், இந்தியா எக்கேடு கெட்டாலும் – அப்படிக் கெட்டதாக ஒரு அபத்தப் புரளியை யார் கிளப்பினாலும்  – டிரம்பிற்குக் கவலை இல்லை. தன் சுயலாபம் மட்டுமே அவருக்குக் குறி. ராகுல் காந்தியும் அப்படித்தானே?


* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

 


2 comments:

  1. விஷயத்தை நன்கு அலசி எழுதப்பட்ட கட்டுரை. பாராட்டுகள்.

    சித்தானந்தம்

    ReplyDelete
  2. Good Article, now it gives a feeling that Mr.Rahul Gandhi has surrendered to America, trying to validate a lie of somebody who is not interested in India, even an ordinary citizen of India will not agree with Trump's Claims and dubious announcements. I wonder, why learned politicians of Congress party are silent and not giving any advice to Mr.RG. in this matter in the interest of Nation as well as in the interest of their own party.

    ReplyDelete